கரம் விரித்தாய் என் வரமே – 27
ஷிவாவின் வீட்டில் இருந்து பிள்ளைகளை பிரிய மனமே இல்லாமல் கிளம்பினான் ராஜேஷ். அதுவும் இரண்டு மாத குழந்தை சரண் அவனை மிகவும் உருக வைத்தான். அவனின் திட்டப்படி மூன்று வருடங்களில் திரும்ப வந்து இருந்தால் தங்களுக்கும் இந்நேரம் இப்படி ஒரு சின்ன குழந்தை கையில் இருந்திருக்குமே என்று வருந்தினான். ஆனால் இப்போது அஸ்வினியே தனக்கு சொந்தமில்லை, அதுவும் தன்னுடைய தவறால் என்று உள்ளுக்குள் மிகவும் உடைந்து போனான் ராஜேஷ்.
மறுநாள் காலை, அவன் வீட்டிற்கு கிளம்பினான். சுகுணாவிற்கு அழைத்து அவன் பெற்றோர் வீட்டில் இருக்கிறார்களா என்று உறுதி படுத்தி கொண்டான். சுகுணாவின் மாமியார் வீடு பக்கத்து ஏரியா தான். இவர்களை காணும் முன் அவளை சென்று பார்ப்பது தான் பிளான் அவனுக்கு.
வாங்க வாங்க என்று யாரையோ தடபுடலாக மாமியார் வரவேற்பது தெரிந்து அவள் அறையை விட்டு வெளியே வந்தாள் சுகுணா. தன் அண்ணனை கொஞ்சமும் அங்கே எதிர்பார்க்காதவள், சிலை போல் நின்றாள். ஆனால் அந்த சிலையின் கண்ணில் மட்டும் நீர் நிற்காமல் வழிந்தது. தங்கையின் அருகே வந்து அவள் தோளை தொடவும் அவனை கட்டி கொண்டு கதறினாள் சுகுணா. இவ்வளவு நல்ல வாழ்க்கை அவள் வாழ காரணம் அவள் அண்ணன் தானே….? வேலையும் வாழ்க்கையும் அவளுக்கு சிறப்பாக அமைத்து கொடுத்தது அவள் அண்ணனின் உழைப்பும் அன்பும் தானே….?
அவள் மாமியார், கணவன் என அனைவரும் அவளை சமாதானம் செய்து ராஜேஷிடம் இருந்து பிரித்து விட்டனர்.
இனிமே ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவையாச்சும் வர பாருங்க மச்சான் என்றான் சுகுணாவின் கணவன். அவள் புகுந்த வீட்டினர் அவன் மேல் மிகுந்த மரியாதை வைத்து இருந்தனர். அவனும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி பழகி இருந்தான்.
மதிய உணவு அங்கே தான் என்று சொல்லி விட மறுக்க முடியாமல் இருந்தான் ராஜேஷ். அண்ணனும் தங்கையும் பேசி கொண்டு இருக்க அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி சென்றனர் அனைவரும்.
“அப்பா, அம்மாவை பார்க்க போகும் போது நீயும் என்கூட வா!” என்றான் ராஜேஷ்.
“ம்ம்…. ஆனா நீ இப்படி ஹோட்டல்ல தங்கி இருக்கிறது எல்லாம் தேவையா அண்ணா….? நம்ம சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா நல்லாவா இருக்கும்!”
“நான் இனிமே யாரை பத்தியும் யோசிக்கிற மாதிரி இல்லை சுகுணா….”
அண்ணன் முகம் கடுமையாக மாற, சட்டென்று வேறு பேச்சிற்கு தாவினாள் சுகுணா. “நம்ம வீட்டுக்கு வந்து இருந்தாங்களே அஸ்வினி…. அவங்க கூட இன்னும் டச்ல இருக்கியா அண்ணா….?”
இல்லை எனபது போல் தலையசைத்தான் ராஜேஷ்.
“உனக்கு ஒரு சர்ப்ரைஸ் காட்டுறேன்…. உலகம் எவ்ளோ சின்னது பார் அண்ணா….” என்றவள் அவள் போனில் இருந்து ஒரு ஸ்கிரீன்ஷாட் காண்பித்தாள். அதில் அழகாக பட்டு உடுத்தி, பூ வைத்து அலங்காரம் செய்த ஒரு மணப்பெண்ணை ரசித்து பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள் அஸ்வினி. மணப்பெண் தான் மெயின், அஸ்வினி ஓரமாக தான் இருந்தாள். ஆனால் இவர்களுக்கு அவள் தானே மெயின்!
பல வருடம் கழித்து அவளை பார்க்கிறான் ராஜேஷ்…. பழைய போட்டோ தவிர அவனிடம் இப்போதைய அவள் புகைப்படம் எதுவும் இல்லையே…. நான்கு வருடங்களில் கொஞ்சமாக சதை போட்டு ஆளை அசரடித்தாள் அஸ்வினி. முயன்று அவளிடம் இருந்து தன் கவனத்தை திருப்பியவன்,
“இது எங்கே இருந்து உனக்கு கிடைச்சுது….? எனக்கு அனுப்பி வை….!” என்றான்.
“நான் இன்ஸ்டால ஒரு பியூட்டிசியன் பாலோ பண்றேன்…. அவங்க போட்ட ஒரு கல்யாண பொண்ணு மேக் அப் போஸ்ட் இது. அவங்க போட்ட உடனே அவங்களுக்கு மேசேஜ் பண்ணி இவங்களை பத்தி கேட்டேன். டிடெய்லஸ் கொடுக்க முடியாது, தஞ்சாவூரில் பெரிய ஹாஸ்பிடல் வைச்சு இருக்கவங்க வீட்டு கல்யாணம்னு சொல்லி அந்த டாக்டர் பேர் மட்டும் சொன்னாங்க! என்றாள்.
“ம்ம்ம்….” என்றவன் அந்த டாக்டர் பெயரை குறித்து கொண்டான் மனதினில். சுகுணா மேலும் அஸ்வினியை பற்றி கேட்க, பேச்சை மாற்றி விட்டான் ராஜேஷ்.
அதன் பின் அங்கே உணவருந்தி விட்டு அவர்களிடம் விடைபெற்று தங்கையுடன் பெற்றோரை பார்க்க கிளம்பினான்.
அந்த வீட்டு வாசலில் சென்று இறங்கிய போது, தான் சம்பாதித்து கட்டிய வீடு என்ற பெருமிதமோ சந்தோஷமோ எதுவும் ஏற்படவில்லை ராஜேஷிற்கு. உணர்ச்சியே இல்லாமல் அதை பார்த்தான் ராஜேஷ். நல்ல வேளை, கட்டி கொடுத்துட்டோம் பா…. என்ற ஆசுவாசம் மட்டுமே வந்தது.
யார் வந்திருப்பது என்று பார்க்க வந்த மீனா, முதலில் சுகுணாவை தான் பார்த்தார். அவள் அடிக்கடி வருவாள் என்பதால்,
“யாரோட வந்தே….மாப்பிள்ளை விட்டுட்டு போயிட்டாரா….?” என்றார்.
அண்ணனை பார்க்கலையா மா நீ….? என்று சுகுணா ஆர்பரிக்க,
“எங்கேடி….?” வேகமாக காரின் அருகே கண்களை சுழற்றினார் மீனா.
யாரோ போல் நின்றிருந்த மகனை நேரில் கண்டதும், இத்தனை வருடம் வராமல் இருந்த போது கொஞ்சமாக உணர்ந்த வருத்தம் இன்று பலமடங்காக அவரை தாக்கியது! அப்படியே வாயை பொத்தி கொண்டு அழுதார் மீனா.
“நான் இப்படியே திரும்பி போய்டவா சுகுணா….? புதுசா இந்த எமோஷனல் எல்லாம் எனக்கு வேணாம்….” என்றான் ராஜேஷ். அவர் கோபத்தை, இளகாரத்தை கூட தாங்கி கொண்டான் இந்த அழுகையை அவனால் ஏற்று கொள்ளவே முடியவில்லை. முன்பு எங்கு போய் இருந்தது இந்த பாசம் என்ற கோபம் ஒரு புறம், தன்னால் அவர் அழ வேண்டாம் என்ற சங்கடம் மறுபுறம்.
அவன் சொன்னதை கேட்டு கண்களை துடைத்து கொண்டு அமைதியாக உள்ளே சென்றார் மீனா.
“அண்ணனை கூப்பிடு மா!” என்றாள் சுகுணா.
“உன்னை தான் வேற வீட்டில கட்டி இருக்கு! இது அவன் வீடு, அவனை நான் என்ன கூப்பிடுறது….? எங்களை வெளியே போக சொன்னா கூட போயிடுறோம்…. இனி எங்களுக்கு என்ன….? என்றபடி போனார் மீனா.
“அதானே….அவங்களுக்கு எப்போதும் உன்னை பத்தி மட்டும் தான் கவலை…. உன்னை கல்யாணம் பண்ணியாச்சு…. இனிமே என்ன….? பெத்தவங்களை துரத்தி விட்டான் ராஜேஷ்னு எல்லாரும் சொன்னாலும் அவங்களுக்கு ஒன்னுமில்லை…. எப்போதும் நான்ன்னா இளக்காரம் தானே….!” படப்படவென்று பொரிந்து தள்ளி விட்டான் ராஜேஷ்.
வாயடைத்து போய் விட்டார் மீனா. அவன் மனதில் இவ்வளவு வருத்தம், விலகலா….? என்று அதிர்ச்சி ஆனவர் அதன் பின் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனை பார்த்த செந்தில் கட்டி அணைத்து கண்ணீர் விட்டார். அவரிடம் சற்று நேரம் பேசி இருந்து விட்டு அவன் கிளம்புறேன் என்றதும் அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள்.
“என்ன அண்ணா….? இங்க இருக்காம….ம்ப்ச்….ஏன் இப்படி பண்றே….?”
“ஏன் பா….? நம்ம வீடு இருக்கும் போது நீ எங்கே போறே….?” செந்திலும் கேட்டார்.
“இது உங்க வீடு மட்டும் தான் பா…. எனக்கு இங்க இருந்தா, எனக்கு கிடைச்ச உதாசீனமும் அவமானமும் தான் பா நியாயபகம் வருது…. என்னை விட்ருங்க….” என்றான்.
ஓ! என்ற செந்தில் கண் கலங்க நின்ற மீனாவை முறைத்தார். பின் ராஜேஷிடம்,
“நீ தனியா எல்லாம் இருந்தா சரியா வராது பா, உனக்கு பொண்ணு பார்க்கணும், கல்யாணம் பண்ணனும்….”
அவரின் பேச்சை பாதியில் இடைவெட்டியவன்,
“நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்லை…. இந்தியாவிலும் இருக்க போறதில்லை…. அதனால் இனிமே நீங்க என்னை பத்தி நினைக்கிறதை, கவலைப்படுறதை விட்ருங்க! ஆனா உங்களை உங்க ஆயுசுக்கும் நான் சௌகரியமாக வைச்சு பாய்த்துக்குவேன்….” என்று சொல்லிவிட்டு அவர்கள் யாரின் பதிலுக்கும் காத்திருக்காமல் வேகமாக வெளியேறினான்.
மகன் கூட இல்லாமல் சௌகரியம் மட்டும் இருந்தால் போதுமா என்று இப்போது மீனாவின் மனம் கேள்வி எழுப்பியது!
*****************
மறுநாள் காலை தஞ்சாவூர் வந்து இறங்கியவன், நேராக ஆஸ்பத்திரிக்கு தான் சென்றான். அஸ்வினியின் புகைப்படத்தை காட்டி, இவங்களை பார்க்கணும், சென்னையில் இருந்து வரேன் என்றான். அவளை தெரியாதவர் யாருமில்லையே அங்கே.
“மேடம் காலையிலே எட்டு மணிக்கு தான் வருவாங்க….” என்றது ரிசப்ஷன் பெண்.
“நான் அவங்க பிரண்ட் தான், நீங்க வேணா போன் பண்ணி சொல்லுங்களேன்…. நான் கொஞ்ச நாள் வெளிநாட்டில் இருந்ததால் கான்டேக்ட் மிஸ் ஆய்டுச்சு….” என்று அந்த பெண்ணை வருப்புறுத்துவது போல் பேசினான் ராஜேஷ்.
“அய்யோ சார், நான் போன் எல்லாம் பண்ணி சொல்ல முடியாது சார். வீட்டு அட்ரஸ் தரேன், நீங்க போய் பாருங்க….தயவு செய்து நான் தான் அட்ரஸ் கொடுத்தேன்னு சொல்லிடாதீங்க சார்!” என்று கெஞ்சி கேட்டு கொண்டாள் அவள்.
ஓக்கே, தேங்கயூ வெரி மச்! என்றபடி கிளம்பினான் ராஜேஷ். அவள் இன்னொருவருடன் இருக்கையில், நீ போகிறாயே என்று மனமெங்கும் அவன் செய்வது சரியா தவறா என்ற கேள்வி இருந்தாலும் அவளை பார்க்க வேண்டும் என்ற பிடிவாதம் ஜெயிக்க அவளை பார்க்க வந்து விட்டான். அவள் திட்டினால் கூட பரவாயில்லை என்று தோன்றியது அவனுக்கு.
வீட்டை அடைந்தான் ராஜேஷ். வாசலில் ஒரு செக்யூரிட்டி இருக்க, அவரிடம் அஸ்வினி மேடம் பார்க்கணும் என்றான். அவரும்,
“உள்ளே போங்க சார். காலிங் பெல் அடிங்க, சரவணன்னு ஒரு சார் வருவாங்க, அவர்கிட்ட சொல்லுங்க….” என்றார். ராஜேஷும் அதே மாதிரி செய்ய, இவன் வயதை ஒத்த ஒருவன் வந்தான். அவன் தான் சரவணனாக இருக்க கூடும் என்று உணர்ந்து,
“அஸ்வினியை பார்க்கணும்….” என்றான். அவனிடம் மேடம் என்று சொல்ல இஷ்டப்படாமல் நானும் அஸ்வினியும் நெருக்கம் என்பது போல் காட்டிக்கொள்ள வெறும் பெயர் மட்டும் சொன்னான்.
“நீங்க யார் சார்….? என்ன விஷயம்….?” சரவணன் மரியாதையாகவே பேசினான்.
“நான் ராஜேஷ், அஸ்வினி பிரண்ட், சென்னையில் இருந்து வரேன்…. என் பேர் சொன்னாலே அவளுக்கு தெரியும்!” இதற்கு மேல் என்னிடம் ஒன்றும் கேட்காதே என்பது போல் சொல்லி முடித்தான் ராஜேஷ்.
“ஓக்கே இருங்க சார், நான் போய் சொல்றேன்….”என்றபடி அவன் உள்ளே செல்ல, அதுவரை கொஞ்சமாக இருந்த படபடப்பு அதிகமானது. இருதயம் தொண்டைக்கு வந்து விட்டது போல் துடித்ததில் தொண்டை, நாக்கு எல்லாம் வறண்டு போனது ராஜேஷிற்கு.
அவன் காத்திருக்கும் போதே, உள்ளிருந்து டமால் என்ற சத்தம்! அதை தொடர்ந்து அஸ்வினி என்ற இரு பதட்டமான குரல் கேட்க, வராண்டாவில் அமர்ந்து இருந்த ராஜேஷ் எழுந்து வீட்டிற்குள் ஓடினான்.
ஹாலில் இருந்த மாடிபடியின் கடைசிபடியில் தடுமாறியதில் கீழே அமர்ந்து இருந்தாள் அஸ்வினி. அவள் அருகில் சற்று முன் பார்த்த சரவணனும், வயதான ஒரு அம்மாவும் இருந்தனர்.
“அஸ்வினி…. என்ன ஆச்சு அஸ்வினி….?” ராஜேஷின் பதட்டமான குரலில் அவன் உள்ளே வந்தது புரிய, அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“ராஜேஷ்….!” என்றாள் அஸ்வினி கண் கலங்க. அவளின் கண்ணீர் வலியினாலா அல்லது தன்னை பார்த்ததினாலா என்று புரியாவிட்டாலும்,
“பார்த்து வந்து இருக்கலாம்ல….” என்று அவள் அருகில் சென்றான்.
அதற்குள் அவளை அவர்கள் இருவரும் சேர்ந்து தூக்கி இருக்க, அவளை நெருங்க போன ராஜேஷ், அந்த வயதான அம்மாவின் பேச்சில் சட்டென்று தன் நிலை உணர்ந்து நின்றான்.
“இப்போ மட்டும் ஆதிஷ் இருந்திருக்கணும்…. நீ விழுந்ததுக்கு ஒரே கலவரமா ஆகி இருக்கும்….” என்றார் அவர்.
கூட இருந்த சரவணனும், “நல்ல வேளை சார் இல்லை, இல்லைனா அவர் பண்ற கலாட்டால நமக்கு யாரை பார்க்கிறதுனு புரியாம போய் இருக்கும்….” என்றான் சிரிப்புடன்.
அவர்கள் இருவருமே ஆதிஷ் அஸ்வினி லேசாக எங்காவது இடித்து கொண்டால் கூட அம்மாவை விட்டு நகராமல் அவள் முகம் பார்ப்பான், அந்த குணத்தை கிண்டல் செய்தனர் ஆனால் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் அவர்கள் பேசிய விஷயம் எல்லாம் ஆதிஷ் என்பவன் அஸ்வினியின் மேல் மிகுந்த காதல் கொண்டு உள்ளான் என்ற அர்த்தம் தந்தது ராஜேஷிற்கு. அதில் முகம் வாடி போனான் ராஜேஷ்.
அவனையே பார்த்திருந்த அஸ்வினிக்கு அவன் முகத்தை பார்த்து சிரிப்பு பொத்து கொண்டு வந்தது. இப்படியா விஷயம், இரு இரு உன்னை இதை வைச்சே வெறுப்பேத்துறேன் என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்.