27. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(1)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 27

 

மாலை மங்கும் நேரம் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். ரூபன், தேவன், மகி முன்னால் வர யுகனும் ஜனனியும் வேடிக்கை பார்த்தவாறு பின்னால் வந்தனர். சற்று இடைவெளி விட்டு அவர்களோடு நடந்து வந்தான் சத்யா.

 

“உன் ஊரு சூப்பரா இருக்கு ஜானு. எனக்கு இங்கேயே இருக்கனும் போல தோணுது” என்று யுகன் சொல்ல, “இருக்கலாமே. உனக்கு தோணும் போது நாம இங்க வந்து விளையாடிட்டு, ஜாலியா இருந்துட்டு போகலாம் சரியா?” என அவனது பட்டுக் கன்னங்களை அழுத்தமாகப் பிடித்துக் கிள்ளினாள்.

 

“சரி” என்னவாறு சிரிப்புடன் தலையாட்டினான் சின்னவன்.

 

இவர்களது சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டு அமைதியாக வந்தான் சத்யா. ஏனோ அவனுக்கு ஜனனியைப் பார்க்கும் போது ஒரு மென்னுணர்வு தோன்றியது. ஆனால் கொஞ்ச நேரம் தான்.

 

“ஜனனி” எனும் அழைப்பில் மூவரும் திரும்ப, தம் எதிரில் நின்ற நந்திதாவைக் கண்டு புன்னகை மலர்ந்தது, தங்கையின் முகத்தில்.

 

அதைக் கண்ட சத்யாவுக்கு தனது திருமணத்தில் நடந்த குளறுபடிகள் நினைவுக்கு வந்தது. அவள் சம்மதித்ததையும், பின்னர் ஓடிப் போனதையும், அதனால் மகிஷா, ஜனனி என்று தனது வாழ்க்கை அந்தரத்தில் தொங்கியதையும் நினைக்க நினைக்க நந்திதாவின் மீது ஒருவித கோபம் எழுந்தது.

 

அப்படியானவளைக் கண்டு பல்லை இளிக்கும் ஜனனி மீது அக்கோபம் திரும்ப, அவளை அழுத்தமாகப் பார்த்தான்.

 

இது அறியாதவளோ நந்திதாவை இமைக்காமல் பார்த்திருந்தாள். கழுத்தில் தாலியோடு நெற்றியில் குங்குமமிட்டு புன்னகை சூடித் தோன்றியவளை ஒரு நொடி பார்த்தவாறே நின்றாள்.

 

சத்யா யுகியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டான். ஆனால் அவன் மனமோ திகுதிகுவென எரிந்தது.

 

“ஜானு…!!” என்று அவளது கைகளை பிடிக்க வந்தாள் நந்து.

 

அவ்வளவு தான், ஜனனிக்கு திருமண நாள் நினைவுகள் வந்து குவிந்தன. அது அவள் முகத்தில் இருந்த புன்னகையை ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்திட, அவளை அழுத்தமாக நோக்கினாள்.

 

“என்ன?” என்று ஒற்றை வினாவை முன்வைக்க, “என் மேல கோவமா இருக்கியா ஜானு? எனக்குத் தெரியும். அப்படித்தான் இருக்கும். ஏன்னா நான் செஞ்ச காரியம் அப்படி” என்றாள் கவலையோடு.

 

“நீ செஞ்ச காரியம் அப்படின்னு உனக்கு தெரியும்ல. நீ இதைத் தான் செய்யப் போறேன்னும் உனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது அவ்வளவு துணிச்சலா நீ இதை பண்ணி இருக்கல்ல நந்து? என் கிட்ட சொல்லி இருக்கலாம்ல?

 

நான் எவ்வளவு கேட்டேன். உன் மனசுல ஏதாவது இருக்கா? உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலையா? சொல்லு சொல்லுனு எத்தனை வாட்டி கெஞ்சினேன்? ஆனால் என் வார்த்தைக்கு மதிப்பளிச்சு நீ சொன்னியா? ஏன்? என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லல்ல. நான் என்னவாவது செஞ்சு உன்னை எழில் கூட சேர்த்து வெச்சிருப்பேன்.  

 

அப்பா சம்மதத்தோட கல்யாணத்தை நடத்தி வெச்சிருப்பேன். அது அவ்ளோ ஈசியும் இல்ல. போராடனும் தான். காதலிச்சா அது எல்லாருக்கும் உடனே கிடைக்கிறது இல்லல்ல. அவர் ஸ்ட்ராங்கா இருக்கும் போது நீ கண்டிப்பா போராடி இருக்கலாம். இல்லனா நீயே சொல்லி இருக்கலாம். இப்படி கல்யாண நேரத்துல இல்லாம போய் எங்கள தல குனிய வச்சுட்டியே” அவளால் அந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

“தப்புத்தான் டி. ஆனா எனக்கு அந்த நேரத்தில் எதுவுமே தெரியல. ஆனா உன்ன நினைச்சு எனக்கு இப்போ பயமா இருக்கு. சத்யாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லல்ல. அப்படி இருக்குறப்போ நீ கல்யாணம் பண்ணிப்பேன்னு நான் நினைச்சு கூட பார்க்கல”

 

“ஓ அப்படின்னா அப்பா தலை குனிஞ்சு நின்னு கல்யாணம் மொத்தமா நின்னு போயிருக்கனும்னு நெனச்சியா?” கடுமையாகக் கேட்டவளுக்கு தனது பேச்சு அவளைக் காயப்படுத்துவது தெரித்தும், பேசாமல் அமைதியாக இருக்க முடியவில்லை.

 

அன்று தன் தாயும் தந்தையும் பட்ட அவமானமும், ஜெயந்தி சிந்திய கண்ணீரும் அவளை இவ்வாறு பேச வைத்தன. பேசுவதால் ஒன்றும் மாறுவதில்லை, இருந்தும் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாள்.

 

“எனக்கு என்ன சொல்லுறதுன்னு விளங்கல ஜானு. ஆனா நீ இந்த கல்யாணத்தை பண்ணிப்பன்னு நான் நினைக்கல. அதான் எனக்கு இன்னும் யோசனையா இருக்கு” என்றவளுக்கு சகோதரியின் கோபம் பெருந்தாக்கத்தைக் கொடுத்தது.

 

“நான் பண்ணிக்கலைன்னா மகி போய் இருப்பா. அங்கே நடந்த விஷயம் எல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது? நீ பாட்டுக்கு கிளம்பிப் போயிட்ட. நான் மட்டும் இடையிடலனா இந்நேரம் மகிக்கு தான் கல்யாணம் நடந்திருக்கும். அவ எப்படி இதையெல்லாம் சமாளிப்பா?

 

அவளோட எதிர்காலம், படிக்கணும்னு ஆசைப்பட்டது எல்லாமே வீணாப் போயிருக்கும். இப்போ அவ ஆசைப்பட்ட மாதிரி படிக்கப் போறா. அவளுக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு வேண்டிக்க” என்றவள் திரும்பி வந்து,

 

“அப்பறம் நீ யோசிக்கிற மாதிரி என் வாழ்க்கைக்கு ஒன்னும் ஆகல. எல்லாரையும் விட எனக்கு பாசம் காட்ட யுகி இருக்கான். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்னைப் பற்றி யோசிக்காம நீ உன் வாழ்க்கையைப் பார்த்துக்க” எனக் கூறி விட்டுச் செல்லும் ஜனனியையே கண்ணீர் மல்க பார்த்தாள் நந்திதா.

 

உள்ளே வந்த ஜனனி வேகமாக தனது அறைக்குச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவளுக்கு முன்னர் அறைக்கு வந்திருந்த சத்யா அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தான்.

 

“ஏய்” என்று அவளை அழைக்க, அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் அத்தனை வருத்தம்.

 

“என்னாச்சு?” எனக் கேட்டவனுக்கு அவள் மீதிருந்த கோபம் மெல்ல மெல்லக் கரைவது போலிருந்தது.

 

அன்பு மல்க தன் அக்காளை நோக்கினாளே. இப்பொழுது ஏன் அழுகிறாள் என்று புரியவில்லை.

 

“நான் தப்பு பண்ணிட்ட மாதிரி தோணுது. ரொம்ப கில்ட்டியா இருக்கு” தரையைப் பார்த்துக் கொண்டு கூற, இவள் எதைச் சொல்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

 

‘என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதை சொல்லுறாளா? துணிஞ்சு மணமேடைக்கு வந்தவ இப்போ எதுக்கு கில்ட்டியா இருக்குனு சொல்லனும்?’ தலையைச் சொறிந்தான் காளை.

 

“தப்பு பண்ண முன்னாடி யோசிக்கனும். இல்ல, பண்ணது தப்புன்னு தெரிஞ்சா அதை சரி பண்ணிக்கனும். அதை விட்டுட்டு இப்படி புலம்பி எதுவும் ஆகப் போறதில்ல” என்றான் அவன்.

 

“யூ ஆர் ரைட்! நான் இனி அப்படி பண்ணக் கூடாது. அவளைப் பார்க்கவே கூடாது. பார்த்தா தானே பிரச்சினை. ஏதாவது சொல்லி மனசை நோகடிச்சிடுறேன்” முகத்தை மூடிக் கொண்டவளுக்கு நந்திதா தன்னால் அழுததைத் தாங்க இயலவில்லை.

 

“என்ன தான் பிரச்சினை உனக்கு? யாரைப் பார்க்கக் கூடாது?” என்று கேட்டவனுக்கு அவள் அழுவது வேறு எதற்காகவோ என்று புரிந்தது.

 

“நந்து இருக்காள்ல அவ பாவம். அமைதியான பொண்ணு தான். ஆனால் அவ யாரையும் மனசார கஷ்டப்படுத்த மாட்டா. அவளை குழந்தை மாதிரி பார்த்துக்கனும்னு நினைக்கிற நானே அவ மனசு கஷ்டப்படுற மாதிரி பேசிட்டேன். ரொம்ப கஷ்டமா இருக்கு” அவளது தற்போதைய எண்ணவோட்டமானது, அவள் சத்யாவிடம் அகம் திறந்து அனைத்தையும் சொல்வதை உணர்த்தவில்லை.

 

அவனுக்குப் புரிந்து போனது. நந்திதா பேச வந்த போது அவளிடம் கடுமையாகப் பேசி விட்டு வந்திருக்கிறாள். இப்போது அதை நினைத்து அவள் வருந்துகிறாள்.

 

இதற்கு அவளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி நின்றது அவனுள்ளம். ஆறுதல் சொல்லச் சொல்லி மனம் உந்தினாலும், அதை மனதார செய்ய முடியவில்லை.

 

“ஜானு!” என்றவாறு அறையினுள் வந்தான் யுகன்.

 

“ஆங்! வா யுகி” அவசரமாக கண்களைத் துடைத்துக் கொள்ள, “நீ அழுறது எனக்குத் தெரியும் ஜானு. நீ டாடி கிட்ட சொன்னதை நான் கேட்டேன். அப்படி கேட்டதுக்கு சாரி” காதைப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டான் அவன்.

 

“நீ வேணும்னு கேட்டிருக்க மாட்டல்ல யுகி. ஆனால் இப்படி சாரி கேட்கிற பார்த்தியா? யூ ஆர் குட் பாய்” தன்னிதழில் சிரிப்பை மலர வைத்தாள்.

 

“நந்து ஆன்ட்டியை நீ வேணும்னே திட்டி இருக்க மாட்டல்ல. வேணும்னே திட்டினா உனக்கு இவ்ளோ கஷ்டம் வந்திருக்காது. கஷ்டப்படுறதைப் பார்த்தாலே உனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்னு தெரியுது. சோ இனிமே ஃபீல் பண்ண வேண்டாம். அவங்க கஷ்டப்படுற மாதிரி பேசவும் வேண்டாம்” என்றுரைத்தான் யுகன்.

 

ஜனனியின் கண்களுக்கு தந்தை போல் தெரிந்தான் அவன். ஏனெனில் அப்படியொரு சக்தி அவன் வார்த்தைகளில் இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. அவளது கவலைகள் யாவும் இருந்த இடமின்றிப் பறந்து சென்ற உணர்வு.

 

சத்யாவும் யுகனைத் தான் பார்த்தான். அவன் சொல்ல நினைத்ததை மகன் அச்சுப் பிசகாமல் சொல்லி விட்டானே என நினைத்துப் பூரித்தான்.

 

“நீ ரொம்ப கியூட் யுகி! எவ்ளோ அழகா பேசுற. உன் முகத்தைப் பார்க்கும் போது, உன் கூட பேசும் போது என் மனசு லேசாகுது. உன் பேச்சுல என்னவோ மேஜிக் இருக்கு” அவனது தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டாள்.

 

“மேஜிக் என் டாடி கிட்டிருந்து வந்தது. யாராவது கஷ்டத்துல இருந்தாங்கனா அவங்க கிட்ட இப்படித் தான் பேசனும்னு சொல்லிக் கொடுத்திருக்கார். நான் சின்ன வயசுல இருக்கும் போதே எனக்கு நிறைய சொல்லித் தருவார். என் கூட ரொம்ப நேரம் பேசிட்டு இருப்பார்” யுகனின் பார்வை தகப்பனை வருடிக் கொடுத்தது.

 

ஜனனியின் விழிகள் அவன் மீது படிந்தன. யுகன் சொல்வது உண்மை தான். அவனது வளர்ப்பு சத்யாவுடையது அல்லவா? ஆனால் மென்மையே உருவாக மகனை வளர்த்தவன், ஏன் தன்னிடம் மட்டும் கடுமையாக நடந்து கொள்கிறான்? இது உண்மையில் அவனது சுயரூபம் தானா? இல்லையெனில் ஏதாவது காரணத்தினால் வேறு மாதிரி நடந்து கொள்கிறானா? என்று யோசிக்கத் துவங்கிற்று, அவள் மனம்.

 

“என்ன அப்படிப் பார்க்கிற?” என்பதாக புருவம் உயர்த்திப் பார்த்தான் அவன்.

 

“நத்திங். அத்தையைக் காணவும் இல்ல. போய் பேசிட்டு வர்றேன்” என்று அவள் சென்று விட, “டாடி!” என்றழைத்தான் யுகன்.

 

“சொல்லு கண்ணா” மகனை நோக்கி கவனத்தைத் திருப்பினான்.

 

“ஜானு குட் கேர்ள் டாடி. மகி, நந்து, ரூபி, சித்தா, பாட்டினு எல்லார் மேலயும் அன்பா இருக்கா. என் மேல ரொம்ப பாசமா இருக்கா. நீங்களும் அவ மேல பாசமா இருங்க” என்று சொல்ல, தலையாட்டி வைத்தான்.

 

“நான் ஜானு கிட்ட போறேன்” என்றவாறு அவன் ஓடி விட, “எல்லார் மேலயும் பாசம் இருக்கு. ஆனால் காதல் யார் மேல இருக்குனு தான் தெரியல. உனக்கு அதெல்லாம் தெரியாது யுகி” மகனுடன் மானசீகமாக உரையாடிப் பெருமூச்சு விட்டான்.

 

தரையை நோக்கிய அவன் விழிகள் தீப்பிளம்பாக உருமாற, ஜனனியை சுட்டுப் பொசுக்கும் கோபத்தோடு அவள் வருகைக்காகக் காத்திருக்கலானான் சத்ய ஜீவா.

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!