அவளுடைய மனதில் ஒரு திட்டவட்டமான தீர்மானம் உருவாகிக் கொண்டிருந்தது.
கதிரை மெல்ல மெல்ல தன் வசப்படுத்த வேண்டும் என்பது அவளுடைய எண்ணம்.
கதிரை தன் வசப்படுத்துவது சிரமமாக இருக்காது என்றே அவளுக்குத் தோன்றியது.
அவனும் சாதாரணமான ஆண்மகன்தானே… பெண்ணைப் பார்த்தால் சபல புத்தி தோன்றத்தானே செய்யும் என எண்ணி தனக்குள் சிரித்துக் கொண்டாள் மதுரா.
அதே நேரம் அவளுடன் சாட் செய்து கொண்டிருந்த அர்ஜுனோ அவளுடைய பதில் வராததால் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பினான்.
“ஹேய் மது… தூங்கிட்டியா..?” என்று கேட்டான்.
“சே சே இல்லடா… தூங்கப் போறேன்… நீயும் தூங்கு… நாம ரெண்டு பேரும் நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணலாம்…” என டைப் செய்து பதில் அனுப்பினாள் மதுரா.
“எனக்கு அஞ்சு நிமிஷம் டைம் கொடு… நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…” என்றான் அவன்.
“முக்கியமான விஷயமா..? என்ன விஷயம் டா..? நான் கால் பண்ணவா..?” எனக் கேட்டாள் அவள்.
“கால்ல பேச கொஞ்சம் தயக்கமா இருக்கு டி… அதனாலதான் சாட் பண்றேன்…” என்றான் அவன்.
அவளோ புருவத்தை உயர்த்தும் ஸ்மைலி ஒன்றை அனுப்பி வைத்தாள்.
சில நொடிகள் அவனிடமிருந்து பதில் வரவில்லை.
‘இவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு..?’ என நினைத்தவள் தூங்கலாம் என முடிவு செய்த நேரம் அவனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
“ஐ லவ் யூ மது… எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு… நீ அப்படியே என் டைப்… நாம ரெண்டு பேரும் லைஃப்ல ஒன்னு சேர்ந்தா ரொம்ப நல்லா இருக்கும்…” என்ற அவனுடைய குறுஞ்செய்தியை பொறுமையாக படித்து முடித்தவளுக்கு “அய்யோடா…” என்றிருந்தது.
“டேய்… என்ன ப்ராங்க் பண்றியா..? உதை வாங்குவ ராஸ்கல்…” என பதில் அனுப்பினாள் மதுரா.
“ஏய் மென்டல்… இந்த டைம்ல எவனாவது ப்ராங்க் பண்ணுவானா..? நிஜமாவே நான் உன்னை லவ் பண்றேன்டி… இத எப்பவோ உன் கிட்ட சொல்லணும்னு நினைச்சேன்… ஆனா இப்ப கொஞ்ச நாளா நீ முன்ன மாதிரி இல்ல… அதனாலதான் என்னால உன்கிட்ட இதை பேச முடியல… நேத்து கூட உன்னோட ரூமை திறந்து எல்லாத்தையும் கலைச்சு போட சொன்னல்ல… ஏன் எதுக்குன்னு கேட்காம நீ சொல்ற எல்லாத்தையும் நான் எதுக்கு பண்றேன்னு நினைக்கிற..? ஏன்னா நான் உன்ன ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்…” என்றான் அவன்.
அதிர்ந்து விட்டாள் மதுரா.
“சாரி அர்ஜுன்… நாட் இன்ட்ரஸ்ட்…” என்ற பதிலோடு ஃபோனை அணைத்து விட்டாள்.
‘இந்த அர்ஜுனுக்கு என்ன பைத்தியம் பிடிச்சு விட்டதா..?’ என எண்ணியவள் விழிகளை மூடி தூங்க முயன்றாள்.
காலை விடிந்தது.
அஞ்சலி முதலில் எழுந்து குளித்து தயாராகி கீழே இறங்கி வந்தாள்.
கதிர் ஏற்கனவே ஹாலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய முகத்தில் ஒரு விதமான குழப்பம் தெரிந்தது.
“மாமா… நீங்க எப்போ எழுந்தீங்க..?” என்று அஞ்சலி கேட்க,
அவனுடைய குரலில் ஒரு தயக்கம் இருப்பதை அஞ்சலி உணர்ந்தாள்.
“என்ன மாமா… ஏதாவது பிரச்சனையா..?” எனக் கேட்க அவனோ உடனே “ஒன்னும் இல்ல அம்மு… கொஞ்சம் ஆபீஸ் டென்ஷன்…” எனச் சமாளித்தான்.
“நீ எப்படி இருக்க..? இன்னைக்கும் உன்னோட முகம் ரொம்ப டல்லா தெரியுதே… உனக்கு ஏதாவது பிரச்சனையா அம்மு..?” என அவளை கூர்ந்து பார்த்தவாறு கேட்டான் கதிர்.
அவனுடைய கேள்வியில் அஞ்சலிக்கு தூக்கி வாரிப் போட்டது.
“எனக்கு என்ன பிரச்சனை..? ஒரு பிரச்சனையும் இல்ல மாமா…” என சமாளித்தாள் அவள்.
அதே நேரம் மதுரா கீழே இறங்கி வந்தாள்.
மதுராவைக் கண்டதும் அவர்களுடைய பேச்சு தடைப்பட்டது.
இன்று அவள் அணிந்திருந்த ஆடை முந்தைய நாளை விடவும் கவர்ச்சியாக இருந்தது.
இறுக்கமான குட்டை உடை ஒரு பக்கம் அவளுடைய தோளை வெளிப்படுத்தியவாறு அவளை இன்னும் ஒய்யாரமாகக் காட்டியது.
“குட் மார்னிங் கதிர்… குட் மார்னிங் அஞ்சு…” எனச் சிரித்தவாறு கூறியவள் கதிருக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.
கதிரின் பார்வை ஒரு நொடி அவள் மீது பதிந்து உடனே விலகியது.
“காபி குடிக்கிறியா மதுரா..?” என்று கேட்டான் அவன்.
“ஷோர்…” என அவள் கூறியதும் அஞ்சலிக்கும் மதுராவுக்கும் சேர்த்து காபியை வரவழைத்தான்.
சற்று நேரத்தில் கதிர் மீண்டும் தயாராவதற்காக மேலே சென்று விட மதுராவும் காலேஜ் புறப்பட வேண்டும் எனக் கூறி தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவள் கீழே வந்தபோது அஞ்சலியின் விழிகள் வியப்பில் விரிந்தன.
தன்னைப் போலவே சிம்பிளான காட்டன் சுடிதார் அணிந்து துப்பட்டாவை மடித்து பின் குத்தியவாறு பின்னல் போட்டு படிகளில் இறங்கி வந்த மதுராவைப் பார்த்து அதிர்ந்து விட்டாள் அவள்.
இப்போது இவர்கள் இருவரை பார்க்கும் யாராலும் யார் மதுரா யார் அஞ்சலி என்று கண்டுபிடிக்கவே முடியாது.
அந்த அளவிற்கு தன்னுடைய நடை உடை அனைத்தையும் மாற்றியவளாக வந்து நின்ற மதுராவை புழுவைப் போல பார்த்து வைத்தாள் அஞ்சலி.
அவளுக்கு கதிரின் மீது முழு நம்பிக்கை இருந்தது.
மதுரா என்னதான் முயன்றாலும் தன் கணவன் தடுமாறி தடம் மாற மாட்டான் என்ற நம்பிக்கையில் அவளை முறைத்து விட்டு காலை உணவை எடுத்து வைப்பதற்காக சமையல் அறைக்குள் சென்று விட்டாள் அவள்.
சற்று நேரத்தில் கீழே வந்தான் கதிர்வேலன்.
தன்னுடைய மனைவியைப் போலவே சுடிதாரில் நின்ற மதுராவை அஞ்சலி என்றே நினைத்தவன் ஹாலில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மெல்ல அவளைப் பின்னால் இருந்து இறுக அணைத்துக் கொண்டான்.
“புருஷனை தனியா தவிக்க விட்டுட்டு இந்த பிளவர் வாஸை வச்சு நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?” எனக் கேட்டவனுக்கு அவளுடைய பர்ஃப்யூம் வாசனை இது அஞ்சலி இல்லை என்பதை உறுதிப்படுத்த பதறி அவளை விட்டு விலகினான்.
அவளோ தான் அஞ்சலி இல்லை என்ற உண்மையை கூறாமல் அவனுடைய அணைப்புக்குள் பாந்தமாக அடங்கி அமைதியாக நின்றவள் அவன் விலகியதும் அவனைப் பார்த்து சிரித்தாள்.
“எப்படி தெரியும்… நான் அஞ்சலி இல்லைன்னு கண்டுபிடிச்சிட்டீங்க போல…” எனக் கேட்டாள் அவள்.
அப்போதுதான் அங்கே இருந்த மேசையில் அவளுடைய புத்தகங்கள் இருப்பதைக் கண்டவனுக்கு சட்டென முகம் மாறிப்போனது.
“சாரி மதுரா… நீ இப்படி டிரஸ் பண்ண மாட்டியே… இந்த டிரஸ்ல உன்னப் பார்த்ததும் அஞ்சலின்னு நினைச்சுட்டேன்…” எனக் கூறினான் அவன்.
“அது சரி… அப்புறம் நான் அஞ்சலி இல்லைன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க..?” எனக் கேட்டாள் அவள்.
“அம்மு எந்த பர்ஃப்யூமும் யூஸ் பண்ண மாட்டா…” என்று கூறினான் அவன்.
“எனிவே சாரி… நீ அஞ்சலின்னு நினைச்சுத்தான் நான் அப்படி பேசிட்டேன்…” என மீண்டும் சங்கடத்துடன் அவன் கூற,
“இட்ஸ் ஓகே கதிர்… எப்படி இருந்தாலும் ஒரு காலத்துல நானும் உங்களுக்கு பொண்டாட்டியா இருந்தவ தானே… சோ நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் எனக்கும் சூட்டாகும்…” என அவள் அழுத்தமாகக் கூற அவனுடைய பார்வை அவள் மீது பதிந்தது.
“அதுதான் நீயே சொல்லிட்டியே… ஒரு காலத்துல பொண்டாட்டியா இருந்தவன்னு… அது அப்போ… இப்போ என்னோட பொண்டாட்டி அஞ்சலி மட்டும்தான்… நீ இல்ல…” என சிரித்தவாறு அவளுக்கு பதிலடி கொடுத்தவன் அவளை விட்டு விலகி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.
அதன் பின்னர் அஞ்சலி அங்கே வந்ததும் அவனுடைய பேச்சும் பார்வையும் முழுவதும் அஞ்சலியைச் சுற்றியே இருந்தது.
“இன்னைக்கு நீ ரெஸ்ட் எடு அம்மு… நீ தனியா கஷ்டப்பட்டு சமைக்காத… இன்னைக்கு சமையல் எல்லாத்தையும் சமையல்காரங்க பாத்துக்கட்டும்… ஓகேவா..?” என்றவன் மெல்ல அவளை அணைத்து விடுவித்தான்.
அவனுடைய அணைப்பில் அஞ்சலியின் முகம் சிவந்து போனது.
“சரி மாமா…” என மகிழ்ச்சிப் புன்னகையுடன் கூறினாள் அவள்.
“ஓகேடி… பத்திரமா இரு… ஏதாவதுன்னா எனக்கு கால் பண்ணு… வேலை முடிஞ்சதும் சீக்கிரமா வரேன்…” என்றவன் அவளுடைய தலையை அன்பாக வருடி விட்டு காரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
இருவருடைய நெருக்கமான உணர்வுகளை வெறித்துப் பார்த்தபடி நின்ற மதுராவோ கதிரைப் பின்தொடர்ந்து தானும் அந்தக் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அடுத்த சில நொடிகளில் காரை வேகமாக கிளப்பினான் கதிர்.
“இந்த பிக்கப் ட்ராப் எல்லாம் உனக்கு சிரமமா இல்லையா கதிர்..?” எனக் கேட்டாள் மதுரா.
Ivalai viratti vidudaa