வாடி ராசாத்தி – 28
சற்று நேரம் ஒன்றும் புரியாமல் இருந்த அவர்களின் குழப்பத்தை தீர்க்கும் விதமாக கிஷோரே மீண்டும் அழைத்தான்.
“டேய் டேய், அங்கிருந்து போய்டாதீங்க டா…. இந்த தாய் கிழவியை உயிரோட வைச்சு தான் நான் நினைக்கிறதை சாதிக்க முடியும்!
இருங்க டா, நான் கிளம்பி வரேன்… அதுவரைக்கும் கொஞ்சம் பார்த்துக்கோங்க, எதாவது சீரியஸ்னா எனக்கு உடனே கால் பண்ணுங்க” என்று வைத்தான்.
எப்படியும் மூன்று மணி நேரம் ஆகும் அவன் இங்கு வர என்று அனைவரும் கொஞ்சம் ஓய்வாக அமர்ந்தனர். ஊருக்கு அழைத்து, அனைவரின் பத்திரத்தையும் மறுபடி செக் செய்து கொண்டான் கேபி. அம்முவிடம் வாசுகியை மீட்டு விட்டார்கள் என்று தெரிவித்து, அவளுக்கோ, செல்வராஜிற்கோ அவனை தவிர யார் அழைத்தாலும், முக்கியமாக தெரியாத நம்பராக இருந்தால் எடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தான்.
இடையில் ஒரு முறை அழைத்த கிஷோருக்கு அவன் கூட்டாளிகள், ஜுரம் இருக்கு தான் ஆனா வாசுகி தூங்குவது போல இருக்கிறார், நீங்க சீக்கிரம் வாங்க, வரும் போது மாத்திரை வாங்கி வாருங்கள் என்று சொல்ல, அவனும் நம்பி அழைப்பை துண்டித்தான். பெருமூச்சு விட்டனர் அனைவரும், வாசுகியை வீடியோ காலில் காட்டு என்று அவன் கேட்டு இருந்தால், நிலைமை என்னவாகும்?
வாசுகியை, சற்குணம் மற்றும் இன்னும் இருவரின் பொறுப்பில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தான். அவர் நன்றாக இருந்தால் அங்கிருந்து அப்படியே ஊருக்கு செல்லுமாறு கூறினான்.
கேபி, அவனின் ஆட்கள், கொஞ்சம் போலீஸ் அவனுக்காக காத்திருப்பது தெரியாமல், நாளை அம்முவை தன்னிடம் வரவழைத்து எப்படியெல்லாம் சித்ரவதை செய்யலாம் என்ற சிந்தனையோடு வந்துகொண்டு இருந்தான்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவான் என்ற நிலையில், அவன் வேறு எங்கும் தப்பித்து சென்று விட கூடாது என்று, அவனை பின் தொடர இரண்டு வாகனங்களை ஏற்பாடு செய்து இருந்தார்கள். கிஷோர் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன், அந்த வாகனங்கள் அவனுக்கு தெரியாமல் அவனுக்கு முன்னும், பின்னும் வர ஆரம்பித்தது.
கிஷோர் அருகே நெருங்கி விட்டான் என்று தெரிந்ததும், அனைவரும் அவனை சுற்றி வளைக்க எதுவாக தயாராக இருந்தனர். அவன் வந்து காரை விட்டு இறங்கியதுமே, அவனுக்கு யோசிக்க எந்த அவகாசமும் கொடுக்காமல், அவனை துப்பாக்கி முனையில் நிறுத்தி, மண்டியுட சொன்னார் அந்த போலீஸ்.
இது எதையுமே எதிர்பார்க்காதவன், மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி, செயல்பட மறந்தவன் போல் அவர் சொன்னதை மட்டும் செய்தான் கிஷோர். அவன் எண்ணம் முழுவதும் வேறு எங்கோ இருந்ததில், தன்னை பிடிக்க வழியே இல்லை என்ற இறுமாப்பில் இருந்தவனுக்கு, இப்படி நிகழும் போது என்ன செய்வது என்றே தெரியவில்லை!
மற்றொரு போலீஸ், அவனை நெருங்கி கையில் விலங்கிட, “ஏண்டா நீ என்ன பெரிய ஆளுனு நினைப்பா உனக்கு? ஆள் வைச்சு கடத்தல் வேலை எல்லாம் பார்க்கிற? அதுவும் அஞ்சுக்கும் பத்துக்கும் ஜெயிலுக்கு போன ஆளுங்களை வைச்சு….!” என்று அவனை ஒரு அறை விட்டார் அந்த போலீஸ். நாராயணனை சற்று நேரம் கழித்து வெளியே வரலாம் என்று சொல்லி, உள்ளேயே இருக்குமாறு சொல்லி இருந்தான் கேபி. என்ன இருந்தாலும் தந்தை அல்லவா!
நீ ரவுடி, கிரிமினல்னு நினைச்சா, தைரியம் இருந்தா தைரியமா வெளிப்படையா செய்டா, ஆனா நீ யார் தெரியுமா? கேவலமான எண்ணம் இருக்க ரொம்ப ரொம்ப ரொம்ப கேவலமான, அல்பமான மனுஷன்…. அவ்ளோதான்! மிகுந்த ஆத்திரத்தில் அவனை எட்டி உதைத்தான் கேபி. மண்டியிட்டு இருந்தவன் அப்படியே பின்னால் சரிந்தான்.
கேபியை கண்டவுடன், சுரணை வந்தது கிஷோருக்கு. அவன் எட்டி உதைத்தவுடன் ஆத்திரமானான் அவன்.
“கையை அவிழ்த்து விட்டுட்டு அப்பறம் உதைடா பேடி” கத்தினான் கிஷோர்.
“நாங்க என்ன முட்டாளா உன்னை மாதிரி? உன் கையை கட்டி வைச்சு தான் அடிப்போம், என்னடா பண்ணுவே? உனக்கு அன்னைக்கே சொன்னேன்ல, எங்க குடும்பத்து பக்கமே வரக்கூடாதுனு?” சொல்லிக்கொண்டே அவனுக்கு இருந்த ஆத்திரத்தில், கடந்த மூணு நாட்களாக அவனால் ஏற்பட்ட டென்ஷன் அனைத்தையும் அவன் மேல் இறக்குவது போல் அவனை சரமாரியாக அடித்தான் கேபி. அவன் கை பட்ட இடம் எல்லாம் கன்னி போனது கிஷோருக்கு.
தரையில் அரைமயக்கத்தில் கிடந்தவனை ஓடி வந்து அணைத்து கொண்டார் நாராயணன். அவரை கண்டதும், அனைவரும் சற்று தள்ளி சென்றனர். கிஷோரால் எந்த உணர்வையும் காட்ட முடியவில்லை. கடைசியாக அனைவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். சாட்சிக்கு கிஷோர், அவன் கூட்டாளிகள் அனைவரையும் புகைப்படம் எடுத்தார்கள்.
கடைசியாக அங்கிருந்து கிளம்பும் போது,
“நீ அந்த சின்ன பிள்ளைகளை வம்பு பண்ணதுக்கே உன்னை துவைச்சு தொங்க விட்ருக்கணும், நான் அப்போ சூழ்நிலை சரியில்லைனு விட்டேன், இனிமே வாழக்கையில் யாருக்கும் எந்த பிரச்சனையும் கொடுக்க நினைக்கவே கூடாது! நினைச்சேன்னு தெரிஞ்சா கூட காலம் பூரா உன்னை கம்பி எண்ண வைச்சுடுவோம் நாங்க! இப்போ உன்னை இதோட விடுறதே உங்க அப்பா எங்களுக்கு செஞ்ச உதவிக்கும், அவருக்கு கொடுத்த வாக்குக்காகவும் தான்!”
“நான் பார்த்துக்கிறேன் சார்! இனிமே நீங்க கிஷோர்னு ஒருத்தனை மறந்துடுங்க….” என்றார் நாராயணன் கை கூப்பியபடி.
“சொல்லி வைங்க சார் உங்க பையன் கிட்ட, பல பொண்ணுகளை பலவிதமா நடத்துறவன் நல்ல ஆம்பிளை இல்லை, ஒரே பொண்ணை பல விதமா அன்பு செஞ்சு அவளை சந்தோஷமா வாழ வைக்கிறவன் தான் உண்மையான ஆண்!”
கண்ணீர் மல்க தலையசைத்தார் நாராயணன்.
கிஷோர் திருந்துவான் என்ற எந்த எண்ணமும் இல்லை கேபிக்கு, ஆனால் இனி அவனை எப்படி ஹான்டில் செய்ய வேண்டும் என்று தெரியும். அதே போல நாராயணன் இனி அவனில் முழு கவனம் வைப்பார், பார்த்துக்கொள்ளலாம் என்று அவனிற்கு ஒரு முழுக்கு போட்டான்.
@@@@@@@@@@@
இரண்டு வாரங்களுக்கு பிறகு,
அவனுக்கும், அம்முவிற்கும் நிச்சயார்த்தம் ஏற்பாடு செய்து இருந்தான் கேபி. ஒன்லி பேமிலி மெம்பெர்ஸ் என்று முடிவெடுத்து செய்கிறான். வீடு என்றால், தேவையில்லாத பிரச்சனை வரும் என்பதால் சின்ன பார்ட்டி ஹாலில் வைக்கலாம் என்று நினைத்தான். ஆனால் செல்வராஜ் ஒத்துக்கொள்ளவில்லை. தங்கள் வீட்டிற்கு வந்து தான் தன் பெண்ணை நிச்சயம் செய்ய வேண்டும் என்று உறுதியாக சொல்லி விட்டார். அவர் திருமணத்திற்கு சம்மதித்ததே பெரிய விஷயம், அதனால் இதை அவர் இஷ்டப்படியே நடத்தி விடுவோம் என்று அவர் சொன்னதுக்கு எல்லாம் தலையை ஆட்டினான் கேபி.
வாசுகியை நல்லபடியாக மீட்டு கொண்டு வந்தது அவன் தான் என்று, வாசுகி தன் மகளை அவனுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று செல்வராஜிடம் நேரிடையாக போராட்டம் செய்தார். வீட்டினர் அனைவரும் ஒரு பக்கம் நிற்க, அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. வாசுகி இல்லாத அந்த நான்கு நாட்கள், அவன் எவ்வாறு கஷ்டப்பட்டான், அவர்களை எப்படி பாதுகாத்தான் என அனைத்தையும் பார்த்தவர் தானே! அதற்கும் மேல் வாசுகி வீடு வந்த பின், பார்க்க வந்தவனை அருகில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் யோசிக்காமல் ஓடிச் சென்று அணைத்துக் கொண்ட மகள், அவன் நலனையும் நினைத்து அவள் எவ்வாறு பயந்து போனாள் என்று சொல்லியதை கேட்டார். அதனாலேயே திருமணத்திற்கு சம்மதம் சொன்னார்.
“உன் மாமா பொண்ணை கொடுக்கிறார் தான், ஆனா எல்லாத்துக்கும் அவர் சொல்றதை கேட்க முடியாது பா …. இது நிச்சயம் அதனால் ஒக்கே, கல்யாணம் எல்லாம் நம்ம முடிவு தான் பார்த்துக்க” என்றார் ஜெயந்தி.
“அதெல்லாம் செஞ்சுடலாம் பெரியம்மா….”
“எதை? உன் மாமா சொல்றதை தானே?” சிரித்துக்கொண்டே சற்குணம் அவன் காதில் முணுமுணுப்பது ஜெயந்திக்கு கேட்டது.
விஜியை சரிகட்டி, சிவகுமாரை சரிகட்டுவது போல் பாவ்லா செய்து, இத்தனை வருடம் பேசாத அவர்கள் வீட்டிற்கு எப்படி நான் வருவேன் என்று தயங்கிய ஞானத்தையும் பேசி பேசி கரைத்து தயார் செய்தான்!
அவன் பட்ட பாட்டை கண்டு,
“இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த கல்யாணம் தேவையானு ஒரு நிமிஷம் ஆவது தோணி இருக்கா மாமா? அட்லீஸ்ட் சலிப்பா இருக்கா?” அவன் மனநிலையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டாள் நந்து.
“எத்தனை வருஷமா நான் அம்முவை விரும்புறேன்னு எனக்கே தெரியாது! எனக்கு தெரிஞ்சது எல்லாம் எப்போதும், நான் எங்க இருந்தாலும், என்ன செஞ்சாலும் அவ நியாபகம் என்கூடவே இருக்குங்கிறது தான், அப்படிபட்ட ஒருத்தியை நினைவில் மட்டுமில்லாம நிஜத்திலும் என்கூடவே கூட்டிட்டு சுத்த போறேங்கிறது எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கும்?அதனால் நீ கேட்ட எதுவும் எனக்கு வர வாய்ப்பே இல்லை!” முகம் விசிக்க, மிகவும் சந்தோஷமாக சொன்னான் கேபி.
நந்துவுக்கு நன்றாக புரிந்தது அவனின் சந்தோஷம், மகிழ்ச்சி எல்லாம். அவனை இந்த அளவு உற்சாகமாக அவள் பார்த்ததே இல்லை. காதல் கை கூட போவது என்பது சாதாரணமா?
“சுப்பர் மாமா! அக்காவும் உங்களை இப்படி லவ் பண்றாங்களா?”
“தெரியலையே! நீ வேணா கேட்டு சொல்லு! ஆனா நான் சொன்னது எல்லாம் அவ கிட்ட சொல்லிடாத, அவகிட்ட நான் லவ்னு எல்லாம் பேசினதே இல்லை!”
“அப்படியா? அப்பறம் எப்படி கல்யாணம்?” முழித்தாள் நந்து.
“அது அப்படி தான்! எங்களை புரிஞ்சுக்க ட்ரை பண்ணாத, நாங்களே அதை செய்றது இல்லை! சொல்லிவிட்டு சிரித்தான் கேபி.
“இதுக்கு தான் லவ் பண்றவங்க கிட்ட பேசவே கூடாது, சரியான பைத்தியங்கள், கடவுளே, நான் கிளம்புறேன் பா….” ஓடிப்போனாள் நந்து.
நிச்சயத்திற்கு ஒரு நாள் முன்பு,
“சொல்லுடி சில்மிஷம், நாளைக்கு தான் நிச்சயம்! அதுக்குள்ள அவசரமா அத்தான் கூட நிச்சயம் பண்ணிக்க?” அம்முவின் அழைப்பை ஏற்றவன், அவள் “எங்கு இருக்கிறாய்?” என கேட்க, அவளை கிண்டல் அடித்தான்.
“ஹலோ, நீதான் என்னை கல்யாணம் பண்ணிக்க, என்னை கல்யாணம் பண்ணிக்கன்னு என்னை கேட்டே! நான் இல்லை….”
“ஓ!!! அப்படி வர நீ…. சரி ஒக்கே ஒன்னும் வேண்டாம், விடு பார்த்துக்கலாம்….”
“ஒக்கே, ஒன்னும் வேண்டாம், ஆனா நாளைக்கு வரும் போது அத்தையோட ரூபியும் மரகதமும் பதிச்ச மாங்கா மாலை கொண்டு வா! அதை தான் நீ எனக்கு போட்டு விடணும்!” என்றாள்.
“இதென்ன புது ரூல்ஸ் போடுற?”
“நிச்சயம்னு நீ பேசினதில இருந்து இது தான் தோணுது! செய்யேன்…. உனக்கென்ன கஷ்டம்?”
“எனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லை! கொண்டு வரேன் தாயே!” சிரித்து கொண்டே சொன்னாலும், அந்த கிணறு இருப்பது தோன்றியது போல் இதுவும் தோன்றுகிறதா இவளுக்கு என்று சிந்தனை வயப்பட்டான் கேபி.
சொன்ன அம்முவுக்கும், இதென்ன விசித்திர எண்ணம் எல்லாம் வருது எனக்கு? என்று கவலையாக இருந்தது. ஏனென்றால், இந்த எண்ணம் தோன்றி சில நாட்கள் ஆனது, ஆனால் இந்த நகை கொண்டு வா என்று எப்படி கேட்பது என்று தயங்கியே அமைதியாக இருந்தால் அம்மு. ஆனால், இதை நீ கேட்கவில்லையே கேட்கவில்லையே என்ற இன்னொரு எண்ணமும் அவளை பாடாய் படுத்துவது போல இருக்கவே தான் கேட்டு விட்டாள்!
@@@@@@@@
“அப்பா, அம்மாவோட நகை எல்லாம் எங்க இருக்கு?” அம்மு போனை வைத்த உடனேயே ஞானத்திற்கு அழைத்து கேட்டான் கேபி.
“ஒரு சிலது தவிர மத்தது எல்லாம் லாக்கரில் தான் இருக்கு! ஏன் பா?”
“அம்முவுக்கு, நாளைக்கு அம்மாவோட நகை ஒன்னும் போடலாம்னு யோசிச்சேன் பா….”
“சரி, லாக்கரில் போய் பார்த்து, பிடிச்சதை எடுத்துக்க”
“ரூபியும், மரகதமும் பதிச்ச மாங்காய் மாலை வீட்டில இருக்குமா? லாக்கர்ல இருக்குமா? சரியா நியாபகம் இருக்கா உங்களுக்கு?”
பதிலே இல்லை அவரிடம் இருந்து.
“அப்பா! அப்பா!”
“ஏன்… ஏன் குறிப்பா அதை கேட்கிற? அந்த நகையை பத்தி யார் சொன்னா?”
“ஏன் பா, அந்த நகைக்கு என்ன?”
“அந்த நகையை அம்மா போடவே இல்லை! அதை ஆசையா செய்ய கொடுத்த அம்மா, ஆசாரி ரெடி பண்ணி கொண்டு வந்தப்போ, உயிரோடவே இல்லை! ஆனா அதை செய்ய சொன்னப்போ, இதை தான் நான் என் மருமகளுக்கு கொடுத்துடுவேன்னு சொன்னா! அதான் உனக்கு எப்படி தெரிஞ்சுதுனு எனக்கு ஷாக் ஆயிடுச்சு. நீ அதை கேட்கிற வரை எனக்கு அது நியாபகமே வரலை!” என்றார்.
அதை கேட்ட கேபிக்கு மயிர்க்கூச்செறிந்தது. “உங்க மருமகளுக்கு கனவில், இப்படி ஒரு நகையை நான் அவளுக்கு போட்டு விடுற மாதிரி வந்துச்சாம், அவ தான் கேட்டா” என்றான். கொஞ்சம் மாற்றி சொன்னான். அனைவரும் அவளின் அந்த எண்ணங்களை எப்படி ஏற்று கொள்வார்கள் என்று தெரியாதே!
“அம்மா தான் கனவில அவளுக்கு வர செய்து இருக்கணும்!” நெகிழ்ந்து போனவராக சொன்னார் ஞானம். அதுவரை கொஞ்சமாக சங்கடப்பட்டுக் கொண்டு இருந்த அவரின் உள்ளம், இப்போது முழுமையாக மகனின் திருமணத்தை ஏற்றுக் கொண்டது.