💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 29
சீட்டில் சாய்ந்தவளை அலட்சியமாய் நோக்கிய சத்யாவுக்கு அவள் தன் மடியில் மயங்கிச் சரிந்ததும் திக்கென்றது.
“ஹேய் என்னாச்சு?” அவளது கன்னம் தட்டி விட்டு, “தண்ணி இருந்தா கொடு ரூபன்” அவசரமாக தம்பியின் தோளைத் தட்டினான்.
அவளது நிலை கண்டு ரூபன் பதறிப் போய் “அண்ணி” என்க, “ஜானு! என்னாச்சு ஜானு உனக்கு?” அவளது கையைப் பிடித்து உலுக்கினான் யுகன்.
“ஹாஸ்பிடல் போகலாம் சத்யா” என்று மேகலை சொல்ல, “ம்மா! டாக்டர் நான் இருக்கும் போது ஹாஸ்பிடல் எதற்கு?” என்ற ரூபன் ஜனனியைப் பரிசோதித்தான்.
தண்ணீரை முகத்தில் அடித்ததும் அவள் விழித்துக் கொள்ள, “கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணுறதால மயக்கம் வந்திருக்கு. மத்தபடி எதுவும் இல்லை. நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்றான் ரூபன்.
“நெஜமாவே ஜானு நல்லா இருக்காங்கள்ல ரூபி?” கவலை ததும்பி வழிந்தது யுகனின் குரலில்.
“எஸ் டா. ஷீ இஸ் ஃபைன். யூ டோன்ட் வொர்ரி” என்றவனின் பார்வை ஜனனி மீதே இருந்தது.
“எனக்கு ஒன்னும் இல்ல யுகி. ஸ்மைல் பண்ணு” அவள் கன்னத்தைப் பிடித்த போது தான் அவன் மலர்ந்து போனான்.
“யுகனுக்கு ஜானுவைப் பிடிச்சுப் போச்சு பார்த்தியா?” என்று மேகலை சொல்ல, “ஆமாம்மா” மென் புன்னகை பூத்தான் தேவன்.
யன்னல் புறம் பார்வை திருப்பியிருந்த சத்யாவுக்கு ஜனனியைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அவளைப் பார்க்கும் போதெல்லாம் ராஜீவ் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை.
வீடு வந்ததும் அனைவரும் இறங்கிக் கொண்டனர். ஜனனி சோர்வாக உணர்ந்தாள்.
“வா ஜானு ரூம் போகலாம்” அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்றான் யுகன்.
“சத்யா…!!” என்ற மேகலையின் அழைப்பு அவனது நடைக்குத் தடை போட, தலை திருப்பி தாயை நோக்கினான்.
“ஜனனி உன் பொண்டாட்டி. அவளுக்கு ஒன்னுனா பதற வேண்டியது, அவளைப் பார்த்துக்க வேண்டியது நீ தான். அவ கழுத்தில் தாலி கட்டிட்ட. விரும்பியோ விரும்பாமலோ அவளுக்கான கடமைகளை நீ செஞ்சு தான் ஆகனும் சத்யா.
அட்வைஸ் பண்ணுறேன்னு நினைக்காத. நடக்கிறதைப் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல. கடந்த காலத்தோட கசப்புகளை மறக்காத வரை நிகழ்காலம் உனக்கு இனிக்கப் போறதில்ல. எல்லாத்துக்கும் காரணம் மனசு தான். அது மாறிட்டா எல்லாமே மாறும்” என்று விட்டுச் சென்றார் மேகலை.
‘நானும் அப்படித் தான் நெனச்சேன். கடந்த காலம் எவ்ளோ கசப்போ, அதை மறக்க விடாம நிகழ்காலமும் கசப்பாவே போயிடுச்சு. இதுல எங்கே இனிக்கிறது?’ வெறுப்போடு நினைவு கூர்ந்தான் அவன்.
அறையினுள் செல்லும் போது, ஜனனியைக் கட்டிலில் சாய வைத்து தலை கோதிக் கொண்டான் யுகன்.
“யுகி” என்றழைக்க, “கொஞ்சம் இருங்க டாடி. வர்றேன்” என்றான் அவன்.
“கூப்பிட்டா வரப் பழகு. என்னை கோபப்படுத்தாத” சற்றே கடுமையாக அழைக்க, எழுந்து அவனருகே வந்தான் மகன்.
“சொல்லுங்க” அவன் கண்கள் தந்தையை நோக்கின.
“நீ ஜானு கூட அளவா பழகு. ஓவரா ஜானு ஜானுனு இருக்கக் கூடாது”
“ஷீ இஸ் மை ஃப்ரெண்ட்”
“ஃப்ரெண்டா இருக்கலாம். பட் லிமிட்டோட இருக்கனும்னு சொல்லுறேன். எதுவும் நிரந்தரம் இல்ல யுகி. நாம ஓவரா ஆசைப்பட்டு நெருங்கிட்டா அப்பறம் கஷ்டமா இருக்கும்” என்றுரைத்தவனுக்கு இனியாவின் நினைவு.
“எனக்கு புரியல டாடி. நிரந்தரம் இல்லைனு ஏன் சொல்லுறீங்க? ஜானு நம்ம வீட்டுல இருக்க தானே வந்திருக்கா” அவன் யோசனைக்குச் செல்ல, “ஓகே. இட்ஸ் ஓகே. நான் சும்மா தான் சொன்னேன். நீ எதுவும் யோசிக்காத” அவனது தலையை வருடி விட,
“நான் ரூபி கூட பேசிட்டு வர்றேன்” என்றவாறு வெளியில் சென்று விட்டான்.
கண்களை மூடிப் படுத்திருந்த ஜனனி அவன் சொன்னதைக் கேட்டு வேதனையுற்றாள். அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால் பழக வேண்டாம். எதற்கு யுகனை விலக்கி வைக்கப் பார்க்க வேண்டும்?
கண்களைத் திறந்து அவனைப் பார்க்க, அவன் பார்வையும் அவள் மீது நிலை பெற்றிருந்தது.
“யுகி கிட்ட சொன்னதைக் கேட்டல்ல. சோ லிமிட்டா இருக்கனும்” என்றான் கடுமையாக.
“எது லிமிட்? என்ன சொல்ல வர்றீங்க நீங்க? உங்களுக்குப் பிடிக்கலனா ஒதுங்கி இருங்க. ஆனால் யுகியை எதுக்கு பேச வேண்டாம்னு சொல்லுறீங்க. எல்லாம் உங்க இஷ்டம் தானா? அவனுக்காக எதையும் யோசிக்க மாட்டீங்களா?” எழுந்து அமர்ந்து மூச்சு வாங்கக் கேட்டாள் அவள்.
“அவனுக்காக யோசிக்கிறதால தான் சொல்லுறேன். இருக்கிற வரைக்கும் அவன் நல்லா இருப்பான். ஆனா அது நிலைக்கும்னு சொல்ல முடியுமா? ஓவரா பழக விட்டுட்டு அப்பறம் என் பையன் கஷ்டப்படுறதை என்னால தாங்கிக்க முடியாது”
“அதென்ன பேச்சு? நிலைக்காது, நிரந்தரம் இல்லனு. நான் எங்கே போகப் போறேன்?” அவள் புருவங்கள் சுருங்கின.
“யாருக்கு தெரியும்? ஆனால் நீ இருப்பேனு எந்த நம்பிக்கையில் நெனக்கனும்?” பதிலுக்கு அவன் கேட்ட கேள்வி அவளை வெகுவாய் காயப்படுத்தியது.
“நீங்க என் மேல நம்பிக்கை வைக்கனும்னு எந்த அவசியமும் கிடையாது. எனக்குனு ஒரு மனசு இருக்கு. மனசாட்சி இருக்கு. அதுக்கு விரோதம் இல்லாம நான் நடந்துப்பேன். ஒருத்தனை கல்யாணம் பண்ணி ஓடிப் போற ஆள் நான் இல்லை. அப்படி போவேன்னா நான் கல்யாணமே பண்ணிக்கிட்டு இருக்க மாட்டேன்.
விட்டுப் போக மாட்டேன்னு உங்களுக்கு சத்தியம் பண்ண மாட்டேன். ஆனால் அக்னி சாட்சியா இந்த தாலியை ஏத்துக்கிட்டேன். கடவுளுக்கு செஞ்ச சத்தியம் எனக்கு உசுர விட மேலானது. அதை என்னிக்கும் மீறுவதா இல்லை” அத்தனை கோபம் அவள் கண்களில் தெறித்தது.
“எந்த நம்பிக்கையில்..” என்று அவன் கேட்க வரும் போது, இடைமறித்தவள் “உங்களோட எந்த நம்பிக்கையும் எனக்கு தேவையில்ல. நீங்க என்னை நம்பனும்னு இந்த கல்யாணத்தை பண்ணிக்கல. நீங்க நம்பலனு கவலையும் இல்லை.
ஒன்னு மட்டும் சொல்லுறேன் கேட்டுக்கங்க. உலகத்தில் எல்லாரும் ஒன்னு மாதிரி கிடையாது. யாரோ ஒருத்தரை வெச்சு என்னையும் அப்படினு முடிவு செய்றது தப்பு. மத்தவங்களை என்ன நெனச்சாலும் ஐ டோன்ட் கேர். பட் என்னை யாரோடவும் கம்பேர் பண்ணி பேச உங்களுக்கு உரிமை இல்லை. அப்படி பேசினா நான் எதிர்த்து பேசுவேன். உங்களை பேச விட்டு சும்மா இருக்க மாட்டேன்” விரல் நீட்டி எச்சரித்தாள் ஜனனி.
‘எனக்கு எதுவும் தெரியாதுங்குற எண்ணத்தில் ஓவரா சீன் போடுறா. உண்மை வெட்ட வெளிச்சமாகும் போது பார்த்துக்கலாம்’ சினத்தோடு சீறினான் சத்யா.
………….
தனது அறையில் இருந்த நந்திதா எழிலின் வருகைக்காக காத்திருந்தாள். பாடசாலையில் இரண்டு நாள் சுற்றுலா சென்றவன் இன்று தான் வருகிறான்.
அவன் இல்லாத பொழுதுகள் அவளுக்கு கடினமாக இருந்தன. அன்னம்மாளின் குத்தல் பேச்சும், நாத்தனார் மலரின் கோபப் பார்வையும் அவளுக்கு மலர்ப்படுக்கையில் முள் குத்துவது போல் வலித்தன.
அவற்றிலும் விட மேலாக ஜனனியின் கோபம் அவளை வதைத்தது. அவளிடம் இப்படியொரு கோபத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அது தனக்குத் தேவை தான் என நினைத்துக் கொண்டாள்.
யோசித்து யோசித்து இருந்தவள் சாப்பிடவும் மறந்து அமர்ந்திருக்க, வெளியே எழிலின் குரல் கேட்டது. அவளுக்கான ஒரே ஆறுதல் அவன் ஒருவனே.
அறையினுள் வந்தவன் “நந்து” என்று அழைக்க, ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
“எழில்! என்னால முடியல எழில்” அணைப்பை இறுக்கிக் கொண்டு அவள் கதற, “நந்து! இங்கே பாரு. ஹேய் அழாத நந்தும்மா” ஒற்றைக் கரத்தால் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
“என்னை விட்டு எங்கேயும் போயிடாதீங்க. எனக்கு கஷ்டமா இருக்கு. யாரும் இல்லாத மாதிரி. இந்த உலகத்தில் நான் மட்டும் தனிச்சு இருக்கிற மாதிரி தோணுச்சு” அழுகை வெடித்தது அவளுக்கு.
“நீ தனியா இல்லை நந்து! உன்னைத் தனியா விடவா காதலிச்சேன்? கல்யாணம் பண்ணிக்கிட்டேன்? நான் இருக்கும் வரை நீ தனியாள் இல்லை. இப்படி பேசாத” அவளைக் கட்டிலில் அமர வைத்தான்.
“ஜானு வந்தா தெரியுமா? அவ என்னை திட்டிட்டா. என்னை ரொம்பப் பிடிச்சது அவளுக்கு தான். ஆனால் அவளுக்கே இப்போ என்னைப் பிடிக்கல” கண்ணீர் நிற்காமல் வழிய உரைத்தாள் நந்திதா.
“ஜானு பற்றி எனக்கு தெரியும். அவளுக்கு உன் மேல தனிப்பட்ட கோபம் எதுவும் இருக்காது நந்து. அவ அவ்ளோ கேட்டும் சொல்லலைங்கிற ஆதங்கம், அப்பாம்மா தலை குனிஞ்சு நின்ன ஆத்திரம், அவ கிட்ட நீ காதலை மறைச்ச ஏமாற்றத்தில் அப்படி பேசி இருப்பா.
அவ அப்படி பேசினதுல எந்த தப்புமே இல்லை. ஒரு மனுஷியா அவளுக்கு வர வேண்டிய உணர்வு அது தான். அவ இடத்தில் நீ இருந்தாலும் அப்படி தான் பேசி இருப்ப. எல்லாம் நாம பண்ணுன கல்யாணத்தின் விளைவு” அவன் சொல்லச் சொல்ல தலையசைத்துக் கேட்டாள்.
அனைத்தும் உண்மை தானே? அவன் சொல்வதில் தவறேதும் இல்லை. தவறு அவள் செய்தது. எனவே இது அதற்கான தண்டனை என்பது புரிந்தது.
“எனக்கு தெரியும். கொஞ்சம் அவசரப்பட்டு இருக்க வேண்டாமோனு இப்போ தோணுது. ஆனால் காலம் கடந்து போச்சு. செஞ்ச தப்புக்கு தண்டனையா காலம் முழுக்க இந்த குற்றவுணர்ச்சியை, வேதனையை தாங்கிக்க வேணும்” வருத்தத்தோடு அவன் முகம் நோக்கினாள்.
“நந்து ப்ளீஸ்! மறுபடி மறுபடி அதையே பேசாத. முடிஞ்சு போனதைப் பேசுறதால எந்தப் பயனும் இல்லை. கஷ்டம் தான், வேதனை தான். ஆனால் எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு வாழ்ந்தே ஆகனும்.
உன் மேல உன் வீட்டு எல்லாருக்கும் கோபம் இருக்கலாம். ஆனால் நீ நல்லா வாழனும்னு இப்போ கூட ஆசைப்படுவாங்க. அதை நெனச்சு நெனச்சு கஷ்டப்படுக்கிட்டு இருக்கிறதை அவங்க விரும்ப மாட்டாங்க. அது தெரிஞ்சா இன்னும் ஃபீல் பண்ணுவாங்க” அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான் எழில்.
“இப்படி கஷ்டப்பட்டு உங்களையும் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நெனக்கிறேன். ஆனால் அதையே திரும்பத் திரும்ப பண்ணிடுறேன்” அவள் முகத்தில் சோக ரேகைகள்.
“நான் சொன்னத கேட்கவே மாட்டியா? அழாத அழாதன்னு சொல்லுறேன்ல. அழுதா எதுவும் மாறாது. நாம அடுத்து செய்யப் போறதுல தான் அது இருக்கு. எதுக்கெடுத்தாலும் கண்ணைக் கசக்குறத நிறுத்து” சற்றே கோபமாகச் சொன்னான்.
“சரி. நான் அழல” கண்களை அழுத்தமாக துடைத்துக் கொண்டாள்.
“என்னால முடிஞ்சளவு உன்னை சந்தோஷமா வெச்சு பார்த்துக்க ஆசைப்படுறேன் நந்து. இந்த கல்யாணத்தால நிறைய மனக் கஷ்டங்கள், சங்கடங்கள் வருது, வந்துட்டே தான் இருக்கும். அதைக் கண்டு அழுதுட்டே இருக்காம, எல்லாத்தையும் சரி செய்யுறது எப்படினு யோசிக்கனும்” அவன் சொன்னது பெரும் ஆறுதலாக இருந்தது அவளுக்கு.
“இரு சாப்பாடு எடுத்துட்டு வர்றேன்” என்று அவன் எழுந்து கொள்ள, “டைனிங் டேபிள் போயே சாப்பிடலாம். நீங்க கழுவிட்டு வாங்க” எனக் கூற,
“இது என் பொண்டாட்டிக்கு அழகு” அவள் கன்னத்தைக் கிள்ளி விட்டுச் சென்றான் எழிலழகன்.
அவனைப் பார்த்த மனைவியின் உள்ளம் கவலை துறந்து, மகிழ்வுச் சாயம் பூசிக் கொண்டது.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி