வாடி ராசாத்தி – 29
செல்வராஜின் வீடு பரபரப்பாக இருந்தது. ஒரு பக்கம் சமையல், இன்னொரு பக்கம் நிச்சயத்திற்கான சாமான்களை எடுத்து வைப்பது என்று இருந்தனர் பாட்டியும், வாசுகியும். வாசுகியின் அண்ணன், அவர் மனைவியும் வந்து இருந்தனர். அவர் அம்முவிற்கு உதவி செய்து கொண்டு இருந்தார். வீட்டோடு என்பதால் சிம்பிள் மேக் அப் போட்டு அவளே அவளை தயார் செய்து கொண்டாள். லவெண்டர் கலர் புடவையில், இளம் பச்சையில் பார்டர் அமைந்த உப்படா சில்க் புடவையில் மிகவும் அழகாக இருந்தாள் அம்மு.
“வந்துட்டாங்க! வந்துட்டாங்க!” அம்முவின் மாமா பையன், சொல்லிக்கொண்டே வேகமாக வீட்டினுள் வந்தான்.
“வந்தவங்களை கூப்பிட வேண்டியது தானே டா, ஏன் இப்படி ஓடி வரே?” சொல்லிக்கொண்டே சம்பத் வெளியே விரைந்தான். அவனை தொடர்ந்து அனைவரும் சென்றனர்.
“டேய், உங்க குடும்பம் மட்டும் போங்கடா! அந்த நவக்கிரகத்தில என்னை சேர்க்காத டா… உள்ளே வேற பெரிய மாரியாத்தா இருக்கு, சின்ன பிள்ளை எனக்கு பயமா இருக்குல்ல….” என்னென்ன பிரச்சனை வருமோ இன்று என எஸ்கேப் ஆக பார்த்தான் சற்குணம்.
“நீ இல்லாம எப்படி டா? நீதான் மச்சான் ஸ்பெஷல், வா!”
“வாங்க வாங்க….” அனைவரும் அழைக்க, ஜெயந்தி, விஜியை தவிர மற்றவர்கள் சகஜமாக இருக்க முயன்றனர். விஜிக்கு, கெட்ட எண்ணம் இல்லை, ஏமாற்றம் தான். தான் மகள் இருக்க வேண்டிய இடம், நல்ல வாழ்க்கை, நல்ல மாப்பிள்ளை இந்த பொண்ணுக்கு என்ற பொறாமை.
விஜிக்கு அனைத்தும் நல்லவிதமாக தெரிந்தால், அம்முவிற்கும் அப்படியே வா இருக்கும்? ஜெயந்தியுடன் இருக்க போவது எவ்வளவு கடினமாக இருக்க போகிறதோ? அவள் எவ்வளவு சமாளிக்க வேண்டி இருக்குமோ….? கேபியே விரும்பி திருமணம் செய்தாலும் அவனை சமாளிப்பது எவ்வளவு கடினம்? அவரவர் வாழ்க்கை அவரவருக்கு! அது புரியும் போது விஜிக்கு இந்த பொறாமை போய் விடும்!
விஜி போல் அல்லாமல் ஜெயந்தியின் மனம் முழுவதும் எதிர்மறை எண்ணங்கள் தான்!
அவர் நினைத்தது நடக்கவில்லை என்ற ஆத்திரம்!
அம்முவால் தான் தன் பேத்தியை மருமகளாக அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற ஆவேசம்!
இவளுக்கு இப்படி ஒரு வாழ்வா? அப்படி என்ன விருப்பம் அவள் மேல? அவ்வளவு சிறப்பு என்ன அவளிடம் என்ற வெறுப்பு!
எப்படி வாழ்கிறாள் என்று பார்க்க தானே போறேன் என்ற வஞ்சம்!
தன் வீட்டில், தனக்கு கீழே தான் இருக்கே போகிறாள் என்ற அஹங்காரம்!
இத்தனை உணர்வுகளை மீறி ஜெயந்தியால் நடிப்புக்கு கூட புன்னகைக்க முடியவில்லை.
அனைவருக்கும் அவரின் பிடித்தமின்மை நன்றாக தெரிந்தது! தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் விட்டனர்! பெண் வீட்டினருக்கு இது எதிர்பார்த்தது தானே என்ற மனப்பான்மை, மாப்பிள்ளை வீட்டினருக்கு கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போய்டும் என்ற எண்ணம்!
@@@@@@
அறைக்குள் இருந்த பேத்தியிடம் வந்த அம்சா பாட்டி, “அம்மு உங்க அத்தை கல்யாணம் அப்போவும் அந்த கடங்காரி இப்படி தான் மூஞ்சியை தூக்கி வைச்சு இருந்தா! இப்போவும் அதே மாதிரி பண்றா…. ஆனா நீ உன் அத்தை மாதிரி எதையும் மனசில மட்டும் போட்டு வைச்சுக்காம, சின்ன விஷயம்னாலும் என் பேரன் கிட்ட சொல்லிடணும்? சரியா?” என்றார் தவிப்புடன்.
தன் வாழ்க்கை குறித்த கவலை அவர் குரலில் புரிய, “கவலைப்படாதீங்க பாட்டி, நான் அத்தை மாதிரி இருக்க மாட்டேன்! உங்க பேரனை ஒரு வழி பண்ணிடுறேன் எதாவது பிரச்சனைனா….” சிரித்தாள் அம்மு.
“பிரச்சனை இல்லைனாலும் என் தலையை தான் உருட்ட போறா! நீங்க என்னை பத்தி தான் கவலைப்படணும் பாட்டி!” அம்முவை பார்க்க வந்தான் கேபி. அவனை நிறுத்துபவர் யார் அங்கே?
ஹ்ம்ம்கூம்…. அவனை கண்டதும் வெட்கத்தை மறைக்க, நொடித்து கொண்டாள் அம்மு.
ஆனாலும் அது ஒரு நொடி என்றாலும் அந்த வெட்கத்தை கண்டு கொண்டான் கேபி. அம்சா செல்லம், கொஞ்சம் அந்த பக்கம் திரும்புங்களேன் என்றவன்,
அம்முவின் அருகில் நெருங்கி,
“அந்த வெட்கத்தை ஏண்டி மறைக்கிற, என்னை பார்த்து நீ படுற வெட்கம் சும்மா ஜிவ்வுன்னு இருக்குடி எனக்கு….” என்று அவன் நெற்றி முட்டி,முகத்தை தாங்கி, இரு கன்னத்திலும் முத்தம் வைத்தான்.
அவனின் கண்களை நேரே சந்தித்தவளுக்கு சுற்றுபுறம் மறந்து போனது! அவனின் பேச்சில், உலகமே மறந்து போனது…. அவன் கேட்டதும், அவள் மறைக்க முயன்ற வெட்கம், ஓடிவந்து அவன் முன்னே நின்றது! வேறு எதுவும் சொல்லாமல்,
“அத்தான்!” என்று மட்டும் சொன்னாள்.
அந்த ஒற்றை வார்த்தை போதுமே அவனுக்கு, அவளின் உணர்வு புரிய….
“கல்யாணம் வரை எப்படி உன்னை விட்டுட்டு இருப்பேன் நான்….” தவித்தான் அவன்.
“பேராண்டி, உன் பெரியம்மா வரா டா!” பாட்டி சொல்ல, இருவரும் தள்ளி நின்று கொண்டனர்.
“என்ன ராஜா? உன்னை காணும்னு தேடினேன் வா, சாமான் எல்லாம் சரி பார்க்கணும்!” என்று கேபியிடம் சொன்னவர்,
“கோச்சுக்காத மா, நான் அழைச்சுட்டு போறேன்னு, எங்க வீட்டு பிள்ளை தான் இன்னும்! எங்களுக்கு உரிமை இருக்கு!” என்றார். அவனிடம் பேசும் போது கொஞ்சிய குரல், இப்போது நக்கல் அடித்தது.
“உங்களுக்கு எப்போதும் உரிமை உண்டு பெரியம்மா” என்றான் கேபி, ஜெயந்தியின் சமாதானத்திற்கு.
“நீ சொல்லுவ ராஜா, கல்யாணத்துக்கு அப்பறம் நான் இப்படி சொல்ல முடியுமா?”
“அதானே, அத்தை சொல்றபடி பார்த்தா, கல்யாணம் வரை நீங்க அவங்களுக்கு! அப்பறம் எனக்கு, அப்போ அவங்க உங்ககிட்ட எந்த ரூல், ஆர்டர் போட மாட்டாங்க, மே பி உங்க கிட்ட பேச கூட என்கிட்ட பெர்மிஷன் கேட்கலாம்….” சிரித்தாள் அம்முவும் நக்கலாக.
“ஹலோ, நான் என்ன ப்ரோபெர்ட்டி யா?” நான் யாரோடதும் இல்லை! நான் எனக்கு மட்டும் தான்!” அவளின் வாயை அடைக்கும் நோக்கில் வேகமாக சொன்னான் கேபி.
“அட, இது கூட கரெக்ட் தான்! நீங்க என்ன அத்தை சொல்றீங்க? அவங்க அவங்க அவங்களுக்கு தான் சொந்தமாம், வேற யாருக்கும் இல்லைனு சொல்றார் உங்க பிள்ளை!”
“ம்ம்… நாம எல்லாம் பாசத்தில பேசுறோம் அவ்ளோதான்” வேண்டா வெறுப்பாய் பதில் சொன்னார் ஜெயந்தி. அவர் வேற என்ன பதில் சொன்னாலும், அவன் இவர்களுக்கு அடிமை என்றெல்லவா வரும்? அது மாதிரி பேச்சை யார் ரசிப்பார்கள்?
“பார்த்தியா, பெரியம்மா உன்னை மாதிரி பெர்மிஷன் எல்லாம் கேட்கணும்னு சொல்லமாட்டாங்க, கத்துக்கோ அம்மு!” அவளை பார்த்து கண்ணடித்தான் கேபி. அவனின் நோக்கம் பெரியம்மாவின் சமாதானம் மட்டுமே. பெண்களின் சூட்சுமம் அவ்வளவு எளிதில் ஆண்களுக்கு புரியாதே! அதனால் பெரியம்மா இன்னும் நல்லவர் தான் அவனுக்கு.
கேபியை அழைத்து கொண்டு ஜெயந்தி வெளியே செல்ல, “என் தங்கம், அவ வழியிலே போய் அவளை மடக்கிட்ட, ஆனா இதே மாதிரி அவளை ஈசியா நினைக்காத…. ஜாக்கிரதை, அதுவும் அவ வீட்டில, இன்னும் கவனமா இருக்கணும்!
“அது இனிமே அவங்க வீடு மட்டும் இல்லை பாட்டி! அவங்களை மாதிரி நானும் இப்போ ஒரு மருமக தான்! பார்த்துக்கலாம்! எங்க கல்யாணத்துக்கு தானே ஆசைப்பட்டீங்க, கவலையை விட்டுட்டு அதை சந்தோஷமா கண் குளிர பார்த்து ரசிங்க. நான் பார்த்துக்கிறேன் மத்தது எல்லாம்!” என்றாள்.
“என் பேரனும் உன்னை நல்லா பார்த்துப்பான், இன்னைக்கே தான் காட்டிட்டானே!”
“உன் பேரன் காட்டுற சாம்பிள் எல்லாம் வேற, அவனை எல்லாம் நான் நம்பலை, நீ கிளம்பு” என்று பாட்டியை வெளியே தள்ளினாள் மெதுவாக அம்மு!
“அது தான்டி வாழ்க்கையோட ஆரம்பம், அப்பறம் எல்லாம் தானா வரும்! உன்னை தங்கமா தாங்குவான் பார்!” சிரித்துகொண்டே போனார் பாட்டி.
அறைக்கு வெளியே அனைவரும் அமைதியாக இருக்க, அங்கிருக்கும் ஒரு இறுக்கமான சூழ்நிலையை உடைக்க எண்ணி, மெதுவாக பேச்சு ஆரம்பித்தார் முருகர். வாசுகியின் அண்ணனும் பேச, கொஞ்சம் கொஞ்சமாக செல்வராஜ், ஞானம் என அவர்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து பேசினர். சூமூகமாக இல்லையென்றாலும் பேச்சு ஓடியது ஆண்கள் மத்தியில்.
நல்ல நேரம் வர, இரு குடும்பத்தார்களும் சேர்ந்து, கார்த்திக்கேயே பாண்டியனுக்கும், அம்ரிதாவிற்கும் திருமணம் உறுதி செய்தனர். மூன்று மாதங்கள் கழித்து திருமணம்! செல்வராஜிற்கு கண்கள் கலங்கியது. அவரை மீறி அனைத்தும் நடக்கிறது, பிள்ளைகள் வாழ்வை பார்த்துக்கொள் என்று தங்கையை மனமார நினைத்தார். அம்ரிதவல்லியை அங்கே அப்போது நினைக்காதவர் யாருமில்லை, ஆனால் ஒருவரும் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை! தாத்தாவிற்கும், பாட்டிக்கும் தங்கள் காலத்திலேயே பேரனை மகனுடன் சேர்த்து வைத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.
“பேத்தியை அழைச்சிட்டு வா வாசுகி, அவங்க பொட்டு வைச்சு பூ வைக்கட்டும்!” என்றார் பாட்டி.
அம்மு வருவதற்கான இடைவெளியில், அக்காவை கண்ட கேபி, கண்களால் அவளுக்கு அவன் இருக்கிறான் எப்போதும் என்பது போல் சேதி சொல்ல, சிவகுமாரும் அவள் காதில், “விதியை யாராலும் மாற்ற முடியாது, மனசில எதையும் குழப்பிக்காம தம்பியை நினைச்சு சந்தோஷமா செய்” என்றார்.
அம்மு வந்தவுடன்,
அனைவரும் விஜியை அழைக்க, அவள் கணவன் பேசியதில் பயந்து போனவள், தன்னை மீறி, தான் மனதில் இருக்கும் வருத்தம் வெளிவந்துவிடுமோ என்ற அச்சத்தில்,
“இரண்டு வீட்டுக்கும் பொதுவானவங்க, பெரியவங்க பாட்டி, பர்ஸ்ட் அவங்க பொட்டு வைக்கட்டும்” என்று பட்டென்று சொல்லி விட்டாள்.
பெண் வீட்டினர் மகிழ்ந்து போயினர். ஜெயந்தியை தவிர மற்றவர்கள் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் ஜெயந்தியின் முகம் கடுமையாக மாறியது. தன் மகளே தன்னை முன்னிறுத்தவில்லை என்று கோபம் ஆனார் அவர்.
பாட்டி தொடங்கி வைக்க, பின் விஜி செய்தாள். ஜெயந்தியும் செய்து முடிக்க, இருவரும் அவளுக்கு, வளையல், மோதிரம் என போட்டனர். அடுத்த
நகையை வந்து போடு தம்பி என்றார் கேபியிடம் முருகர். அவன் வீட்டினரிடம் முன்பே சொல்லி இருந்தான், தான் தான் அம்முவிற்கு பெரிய நகை போட போறதாக. என்ன நகை என்று அவன் யாருக்கும் காட்டவில்லை.
ஞானம், மகனிடம் அந்த நகை பெட்டியை கொடுக்க,
ரூபியும், மரகதமும் மின்னிய அந்த பெரிய ஆரம் அவ்வளவு அழகாக இருந்தது. எப்படியும் பதினைந்து சவரனுக்கு குறையாது என்று நினைத்துக்கொண்டார் ஜெயந்தி. அவருக்குமே தெரியாது இது அமிர்தவல்லியின் நகை என்று.
அம்முவின் அருகில் வந்து, அவன் அதை அவளுக்கு அணிவிக்க, அவளுக்குள் ஏதோ ஏதோ உணர்வலைகள்! அது எல்லாம் கண்ணில் தெரிய அவனை பார்த்து புன்னகைத்தாள் அம்மு.
அதில் அவன் நெஞ்சம் நிறைந்து போனது!
பின் அனைவரும் அவர்களை ஆசீர்வாதம் செய்ய, ஞானம் ஆசிர்வாதம் செய்த பின், “உங்க அத்தை, அவ பிரியப்பட்ட மாதிரியே உன்னை அவளுக்கு மருமகளா கொண்டு வந்துட்டா! ரொம்ப சந்தோஷம் எனக்கு! என் பையனை பார்த்துக்கோ” என்றார்.
அவர் அப்படி பேசியதில் செல்வராஜ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு போனார்.
அனைவரும் உணவு உண்ண போக, அம்முவை பார்க்க சென்றான் கேபி.
அவளை தலை முதல் கால் வரை ரசித்தவன்,
“என்ன சில்மிஷம்! மாமா சம்மதத்தோட கல்யாணம் வரை வந்தாச்சு! எப்படி உன் அத்தான்?” சட்டையின் காலரை தூக்கி விட,
“அடேங்கப்பா, பெரிய ஆள் தான்! ஆனா எதுக்கு இந்த போராட்டடம்?” அவளை காதலிக்கிறேன் எனபது போல் எதாவது சொல்வானா என்று எதிர்பார்த்தாள் அம்மு.
“எப்போ என்னை பார்த்தாலும், உன் கண்ணில் ஒரு மின்னல் தெறிக்கும்! அதோட சேர்த்து வெட்டி வெட்டி பேசுவே, நல்லா இருக்கும் அதை பார்க்க! அதுக்கு தான்” என்றான் கிண்டலாக.
“ஓஹோ அப்படி…. உன்னை போய் கேட்டேன் பாரு…. நான் போய் “ஓஹோ அப்படி…. உன்னை போய் கேட்டேன் பாரு…. நான் போய் சாப்பிடுறேன்….” வெளியே செல்ல போனவளை கையை பிடித்து இழுத்து தடுத்தவன்,
என்னைக்கு உன் கண்ணில் அந்த உணர்வு இல்லாம போகுதோ, அன்னைக்கு நான் இந்த உலகத்தில இல்லைனு அர்த்தம்! அந்த உணர்வு, நீ என் மேல வைச்சு இருக்க அன்பு, பாசம் மட்டுமில்லை, நம்பிக்கையும் கூட! உன்னோட கண்ணில இருக்க இந்த உணர்வை தான் நான் காலத்துக்கும் பார்க்கணும்! என்றான் மிகுந்த காதலுடன்