🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
விழி 03
“என்னைக் கொல்லாதே
தள்ளிப் போகாதே
நெஞ்சைக் கிள்ளாதே கண்மணி” தனது காதருகே சத்தம் போட்டு பாடிய நிதினின் கையை அழுத்தமாகக் கிள்ளி வைத்தாள் ஆலியா.
“ஆவ்வ் ஏன்டி கிள்ளின?” கையை உதறிக் கொண்டு முகத்தைச் சுருக்கினான் அவன்.
“நீ தானே என்னமோ கிள்ளாதேனு பாட்டு பாடுன?”
“கிள்ளாதேனு தானே சொன்னேன். நீ கிள்ளி வெச்சிருக்க” பாவமாகப் பார்த்தான்.
“நீ சொல்லுற எல்லாம் நான் அடுத்த பக்கத்துக்கு தான் செய்வேன்” மாங்காய் சீவிக் கொண்டு சொன்னாள் அவள்.
“காதலிக்காதேனு சொல்லுறேன். அப்போ நீ அடுத்த பக்கத்துக்கு எடுத்துக்கிட்டு என்னைக் காதலிப்ப தானே?” ஏதோ சாதனை செய்த மிதப்பில் பார்த்தான்.
“அதுக்கு முன்னாடி நீ இதுக்கு முன்னாடி சொன்னத செஞ்சிருவேனே” தனது வேலையில் மும்முரமானாள்.
“எதை செஞ்சிருவ?” புரியாது பார்த்தான் அவன்.
“என்னைக் கொல்லாதேனு பாடினியே. அதை அடுத்த பக்கமா பார்த்தா உன்னை கொல்லனும். சோ…?” கையில் இருந்த கத்தியைப் பார்க்க,
“அடிப்பாவி! கொலைகாரி கொலைகாரி. என்னை விட்று டி” என அலறினான்.
“இவ்ளோ பயம்னா மூடிட்டு இருக்கனும். இனிமே காதல் மோதல்னு பேசினா உனக்கு சாதலைத் தவிர வேற வழி இல்ல டா” மாங்காயை சாப்பிட்டவளிடம்,
“நீ எதுக்கு என் லவ்வை ஏத்துக்க மாட்டேங்கிற? யாரையாவது லவ் பண்ணுறியா என்ன?” கிண்டலாகக் கேட்டான்.
“ஆமா நிதின். தயவு செஞ்சு திரும்ப என் கிட்ட லவ் பற்றி பேசாத” என எழுந்து நடந்தாள்.
அதிர்ந்து நின்றிருந்தான் நிதின். ஏதோ விளையாட்டாக அப்படிக் கேட்டவன் உண்மையில் இப்படி இருக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
எழுந்து அவள் பின்னால் சென்றவன், “இல்லை நான் நம்ப மாட்டேன். நீ என் மனச மாத்தனும்னு சொல்லுற” என்றான்.
“லூசா நிதின்? எனக்கு எந்த பொய்யும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதே மாதிரி உன்னை நம்ப வைக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. நம்புவதா இருந்தா நம்பு. இல்லனா உன் இஷ்டம்” நடையின் வேகத்தை அதிகரித்தாள் பெண்.
“சரி உன் ஆளு யாருனு சொல்லு. அப்போ நம்புறேன்” அவளை வழிமறித்து நின்றான்.
“அதை சொல்லி நம்ப வைக்கனும்னு எந்த தேவையும் இல்லை எனக்கு. வழியை விடு நிதின்” கோபம் எட்டிப் பார்த்தது அவளுக்கு.
“சொல்லியே தான் ஆகனும். இல்லனா நான் ருத்ரா கிட்ட சொல்லுறேன் நீ யாரையோ லவ் பண்ணுறனு. அவன் கேட்டா சொல்லுவ தானே” ருத்ரனுக்கு அழைப்பு விடுக்க எத்தனித்தான்.
“நிதின் வேண்டாம். மாமாவுக்கு கால் பண்ணாத” அலைபேசியைப் பிடுங்கினாள் அவள்.
ஒரு வேகத்தில் தான் ஒருவரைக் காதலிப்பதாகக் கூறி விட்டாள். அதைக் கேட்டு அமைதியாக சென்று விடுவான் இனி பின்னால் வர மாட்டான் என்று போட்ட கணக்கு தவறாகி விட்டதால் மண்டை வலித்தது.
“அப்போ சொல்லு ஆலியா. நீ யாரையும் லவ் பண்ணுறதா எனக்கு தெரியல அதான் கேட்கிறேன். அப்படி உண்மையா லவ் பண்ணுறதா இருந்தா நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”
அவளோ பதிலின்றி அமைதியாகவே இருந்தாள்.
“சொல்லு. அவன் எப்படி இருப்பான்? உன்னை லவ் பண்ணுறானா?” என்று கேட்க வெடுக்கென தலையுயர்த்திப் பார்த்தாள்.
இதற்கு என்னவென்று பதிலளிப்பாள்? ருத்ரனைக் காதலிக்கிறேன். என் காதல் சிதைந்து விட்டது என்பதா? ஒன்றும் புரியவில்லை.
“பார்த்தியா உன்னால பொய்யா கூட ஒருத்தர் பெயர் சொல்ல முடியல. ஏன்னா நீ யாரையும் காதலிக்கல. சும்மா என் கிட்ட இருந்து விடுதலை பெற இல்லாத பொய்க்காதலை எல்லாம் உருவாக்கிக் கொள்ளுற” அவள் பொய் கூறியதாக தினைத்து கலாய்த்தான்.
“வேண்டாம்! என் காதலை பொய்னு சொல்லாத” கோபமாக பேசினாள் அவள்.
“அப்போ உண்மைய சொல்லு பேபி” அவளைப் பார்த்து சிரித்தான்.
கோபம் இன்னும் அதிகரிக்க, “சொல்ல தான் போறேன். என் காதல் உண்மையானது தான். சின்ன வயசுல இருந்து லவ் பண்ணேன். ஐ லவ் ருத்ரா மாமா. இப்போ போதுமா உனக்கு” கண்களில் கண்ணீர் வழிய கத்தி விட்டு உள்ளே நுழைந்தாள் ஆலியா.
அவளது வார்த்தைகளைக் கேட்டு சிலையென சமைந்து நின்றான் நிதின். அவள் மனதில் ஒருவன் இருப்பான் அதுவும் ருத்ரா இருப்பான் என்று நினைக்கவும் இல்லை.
நினைப்பதெல்லாம் தான் இங்கு நடக்கிறதா என்ன? அவ்வாறு நடந்தால் உலகில் துன்பம் என்ற ஒன்றே இராது. இன்பத்திற்கும் மதிப்பும் அருமையும் இருக்காது.
நேற்று ருத்ரனின் வாயால் அவன் காதலைச் சொல்லக் கேட்ட ஆலியாவின் நிலை எவ்வாறு இருந்ததோ அச்சுப் பிசகாமல் அவ்வாறே தற்போது நிதினின் நிலையும் ஆயிற்று.
கண்ணீர் விட்டு உடைந்து அழவில்லை அவன். இறுகிய பாறையாய் இருந்தவனின் மனம் உருகித் தளர அதனை பறைசாற்றுவதாய் கண்களில் மெல்லிய விழிநீர்ப்படலம்.
♡♡♡♡♡
தனது அண்ணன் வீட்டவர் முன் ஒன்றும் பேச இயலாது நின்றிருந்தார் சித்ரா.
“கடைசியா என்ன சொல்ல வாற சித்ரா?” எனக் கேட்டார் அவரது அண்ணன் கோபால்.
“அது வந்து அவன் ஒரு பொண்ணை லவ் பண்ணுறான்னு சொல்லிட்டு இருக்கான்” கஷ்டப்பட்டு எப்படியோ சொல்லி முடித்தார்.
“இந்த பேச்சு இன்னும் முடியலயா? யார்னே தெரியாத ஒரு பொண்ணு. அவளை கண்டானாம் காதலாம் கத்திரிக்காயாம். ப்ராக்டிகலா யோசிக்க சொல்லு உன் பையனை” சற்றே கோபம் எட்டிப் பார்த்தது அவருக்கு.
“இங்கே பாருங்க அண்ணி! ஆலியா சின்ன வயசுல இருக்கும் போதே அவளை ருத்ராவுக்கு கட்டி வைக்க பேசினோம். நீங்களும் சம்மதிச்சீங்க. இது ஆலியாவுக்கோ ருத்ராவுக்கோ தெரியாது. ஆனா நமக்கு தெரியுமே. அதனால இப்போ வரைக்கும் அவனை தான் எங்க வீட்டு மருமகனா நெனச்சிட்டு இருக்கோம்.
அது போக இவளுக்கு சம்பந்தம் பேசி வரவங்க கிட்ட எல்லாம் என் பொண்ணுக்கு எப்போவோ மாப்பிள்ளை பார்த்தாச்சு. என் தங்கச்சி பையனை முடிவாக்கிட்டோம்னு மீசையை முறுக்கிட்டு சொல்லிட்டார். இனி இது இல்லைனா எங்க பொண்ணுக்கு யாரை கட்டி வைக்கிறது?” நிதானமாகப் பேசினார் ஆலியாவின் தாய் லீலா.
“ஏய்ய் என்னடி இல்லை அது இதுனு பேசுற? நான் முடிவு பண்ணது பண்ணுனது தான். ருத்ரா தான் ஆலியாவுக்கு தாலி கட்டனும்” விடாப்பிடியாக நின்றார் கோபால்.
சித்ராவோ மகனுக்காக பேசவும் முடியாமல் அண்ணனுக்கு பதிலளிக்கவும் முடியாமல் திணறித் தான் போனார்.
அத்தனை நேரம் அமைதியாக இருந்த செல்வன் வாய் திறந்து, “கண்டிப்பா ருத்ரா ஆலியாவுக்கு தாலி கட்டுவான். நாளன்னைக்கு அவன் ஊருக்கு வருவான். நீங்க வீட்டுக்கு வாங்க அவனை வெச்சே பேசிடலாம்” என தீர்மானமாக கூறினார்.
“எ..என்னங்க ருத்ரா” என்று திக்குத் திணறியது தாயுள்ளம்.
“என்ன ருத்ரா? கிடைக்காத பொய்யான ஒரு உலகத்தில் வாழ்ந்துட்டு இருக்கான் அவன். அதனால வாழ வேண்டிய நிஜத்தை உணராம காதலாம் காதல். வாக்கு கொடுத்துட்டேன் மீற முடியாது. பேச்சுவார்த்தை வரை போனா எதுவும் மறுப்பு சொல்ல மாட்டான். அவனுக்கு ஆலியாவைப் பிடிக்கும் தானே? எல்லாம் நல்லதே நடக்கும். நீ இடையில் புகுந்து கெடுத்து விட்றாத” என்று விட்டு எழுந்து சென்றார்.
“இப்போ என்ன பண்ணுறது இவர் வேற இப்படி சொல்லிட்டு போயிட்டார். ருத்ராவும் கொஞ்சமும் அசராம அம்மு பொம்முனு சுத்துறான். இவங்களுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு நான் படுற அவஸ்தை” தலையில் கை வைத்த சித்ராவுக்கு இரு படகுகளில் கால் வைத்துக் கொண்டு முழிக்கும் நிலை.
♡♡♡♡♡
“டீச்சர்! இதெல்லாம் நடக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் உங்களுக்காக ரெடியாகுறேன்” எனக் கூறினாள் அஞ்சனா.
“ப்ச் நல்ல காரியம் நடக்கும் போது அபசகுணமா பேசாதமா. உன்னை பொண்ணு பார்க்க வரவங்க எனக்கு நல்லா பழக்கமானவங்க. ரொம்ப நல்ல கௌரவமான குடும்பம். உன்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் வராங்க. எல்லாம் நல்லதே நடக்கும்” அவளது தலையில் பூவைச் சூட்டி விட்டார் அஞ்சனாவின் பாடசாலையில் கற்பிக்கும் தாமரை டீச்சர்.
தனது மகளின் வயதிலுள்ள அஞ்சனா மீது அளவற்ற பாசம் அவருக்கு. அவருக்குத் தெரிந்த ஒருவர் தனது மகனுக்கு பெண் தேட, அஞ்சனா பற்றி எடுத்துக்கூறி இங்கு வரச் சொல்லி விட்டார்.
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள். ஏதோ மனம் ஆனந்தக் கூப்பாடு போட்டது. கனவு கண்டிரா விட்டாலும் தனக்கென ஒருவன் கிடைப்பான் எனும் போது மனதில் சந்தோஷச் சாரலில் திளைப்பது இயற்கை தானோ? என நினைத்துக் கொண்டாள்.
கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க தாமரை சென்று அனைவரையும் வரவேற்றார். மணமகனும் அவனது தாய் தந்தை மற்றும் அண்ணியும் வந்திருந்தனர்.
அனைவரையும் வரவேற்று அமர வைத்தார் தாமரை. நலம் விசாரிப்புகள் முடிந்து, “பொண்ணை கூட்டிட்டு வரேன்” என அழைத்து வந்தார்.
சாரியில் ஒப்பனைகள் எதுவுமின்றி கழுத்தில் மெல்லிய செய்ன் அணிந்து இருந்தாலும் லட்சணமாக இருந்தவளை மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடித்து விட்டது.
தலையைக் குனித்துக் கொண்டு ஒன்றும் இருக்கவில்லை அவள். சாதாரணமாக நிமிர்ந்து மாப்பிள்ளையைப் பார்த்தாள். வாட்டசாட்டமாக இருந்தான். அவன் புன்னகைக்க இவளும் சினேகமாக புன்னகைத்தாள்.
“ரெண்டு பேரும் போய் பேசிட்டு வாங்க. போம்மா மருமகளே” மாப்பிள்ளையின் அம்மா சொல்ல, மருமகள் என்றே முடிவு செய்து விட்டாரோ என நினைத்துக் கொண்டு வெளிப்புறமாக இருந்த திண்ணைக்குச் சென்றாள் அஞ்சனா.
“ஹாய்” என அவன் பேச, “ஹாய்! என்ன கேட்கனுமோ தாராளமா கேட்கலாம்” என்றாள்.
“உங்களை பற்றி எல்லாம் எனக்கு தெரியும். என் டீடேல்ஸ் உங்களுக்கும் தெரியும். சோ ஸ்ரைட்டா கேட்குறேன். உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா” விடயத்தை நேரடியாகவே கேள்வியாக முன்வைத்தான் அவன்.
அவனை நேர்ப்பார்வை பார்த்தாள் பெண்ணவள். திரைப்படங்களில் இவ்வாறு பேச அனுப்பினால் பிண் நாணிக்கோணி தரையில் காலால் கோலம் போடுவதும், முந்தானை நுனியை சுருட்டுவதும், கைகளைப் பிசைவதும் தானே நடக்கும்.
தனக்கு ஏன் அவ்வாறு சிறிதளவு கூட வெட்கம் வரவில்லை? என்ற எண்ணம் உதிக்க சிரிப்பு வரும் போல் இருந்தது. கடினப்பட்டு அடக்கிக் கொண்டவளிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டான்.
“பிடிக்கலனு சொல்ல எனக்கு எந்த ரீசனும் இல்லை. எனக்கு யாரும் இல்லை. என்னை நல்லா வெச்சு பார்த்துப்பீங்கனு டீச்சர் சொன்னாங்க. நானும் விசாரிச்சு பார்த்த அளவில் எல்லாம் பாசிடிவ்வா தான் தெரிய வந்துச்சு” என்றவளுக்கு பிடித்திருக்கிறது என்று கூற வார்த்தை வரவில்லை.
“ம்ம் சொல்லு” அவள் வாயால் சம்மதம் கேட்கும் ஆவல் அவனிடம்.
சொல்லாமல் விட மாட்டான் என்பது புரிய, “எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சுஜித்” என்று நிதானித்து மொழிந்தவளைப் பார்த்து அவன் புன்னகைத்த அக்கணம், “எக்ஸ்கியூஸ் மீ” என அவள் வீட்டு வாசலில் நின்று அழைத்தான் ருத்ரன் அபய்.
“யாரு?” தாமரை எட்டிப் பார்க்க, “இந்த பாப்பா காரிற்கு மோதப் போனதால ரொம்ப பயந்து போயிருக்கான். கொஞ்சம் தண்ணி தரீங்களா?” ஒரு சிறுவனை ஆதரவாக அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான் அபய்.
“கண்டிப்பா. வந்து உட்காருங்க எடுத்து வரேன்” என தாமரை உள்ளே செல்ல, உள்ளே செல்லாமல் வாயிலிலே நின்றான் அவன்.
அந்த வீட்டைப் பார்க்கும் போது அவனுள் ஓர் உணர்வு. தனக்கு நெருக்கமான ஏதோ அருகில் இருப்பது போன்று தோன்றியது. இதயம் படபடத்தது.
“ஏன் ஏதோ போல இருக்கு?” நெஞ்சைத் தடவிக் கொள்ள தாமரை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
அதனை அச்சிறுவனது உயரத்திற்கு குனிந்து நீரைப் புகட்டி “ஒன்னும் இல்லடா குட்டி பையா. பத்திரமா உங்க வீட்டுக்கு போங்க” என அவனை இறக்கி விட்டான்.
தாமரைக்கு ஏனோ அவன் செய்கை அஞ்சனாவை நினைவூட்டியது. அவளும் இப்படித் தானே சிறுவர்களோடு அன்பாகப் பழகுவாள் என நினைத்தவர் இது என்ன தேவையற்ற சிந்தனை என தலையை உலுக்கிக் கொண்டார்.
“தாங்க் யூ ஆன்ட்டி” என அவன் திரும்பிச் செல்லும் போது, “யாரு டீச்சர்?” என கேட்டுக் கொண்டு வந்தாள் அஞ்சனா.
“மாடி வீட்டு பையன் ஆக்சிடன்ட் ஆகப் போறப்போ ஒரு தம்பி வந்து காப்பாற்றி தண்ணி வாங்கி கொடுத்துட்டு போறார்” என்றிட, செல்லும் அவனின் முதுகை நன்றியுணர்வோடு பார்த்தாள் அவள்.
அந்த சிறுவன் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். “கடவுளே! அவர் நல்லா இருக்கனும். அவர் ஆசைப்படறத எல்லாம் அவரை அடைய வெச்சிடு” தன்னையறியாமலே மனதார யாரென்று தெரியாத அவனுக்காக வேண்டிக் கொண்டு உள்நுழைந்தாள்.
சற்று தூரம் சென்ற ருத்ரனுக்கோ அந்த வீடு ஏதோ சொல்வது போல் இருக்க திரும்பிப் பார்த்தான். யாரும் இருக்கவில்லை. சோர்ந்து போன மனதுடன் நடந்தான்.
“பொண்ணு சம்மதிச்சுட்டா. இன்னும் ஐந்து நாள்ல இவன் பிசினஸ் விஷயமா பெங்களூர் போறான். அதுக்கு முன்னால நிச்சயதார்த்தத்தை நடாத்திடலாம். கோயில்லயே சிம்பிளா வெச்சுடலாம்” என்றார் மாப்பிள்ளையின் தந்தை.
பிசினஸ் பிசினஸ் என்று அலையும் மகனை இனியும் அப்படியே விட்டு வைக்கக் கூடாது. கல்யாணம் செய்து அவசரமாக நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்கள் அவசரமாக இருந்தனர்.
அஞ்சனாவுக்கோ அனைத்தும் வெகுசீக்கிரம் நடப்பது போன்ற பிரமை. சுஜித்தை பார்த்தாள். அவனோ அவளோடு பேசி விட்டு வந்ததில் இருந்து போனில் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தான்.
அவளது பார்வை உணர்ந்த அவனது அண்ணி, “ஏதோ முக்கியமான பிசினஸ் கால் டா. அதான் பேசிட்டு இருக்கான்” என்று சொல்ல சினேகமாகப் புன்னகைத்தாள்.
கல்யாணத்திற்குப் பிறகும் இப்படி பிசினஸ்ஸை கட்டி அழுது கொண்டிருந்தால் தன் நிலை என்னாகும் என்ற யோசனையில் அவள் ஆழ்ந்திருந்த நேரம்,
“உன் சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வெப்பேன் அம்மு! உன்னை என் கண்ணுக்குள்ள வெச்சி பார்த்துப்பேன். உனக்காக எதையூம் விட்டுத் தருவேன். உன் சந்தோஷத்தை தவிர வேறு எதுவும் எனக்கு தேவையில்லை. நீ தான் என் உலகமே” தன்னவளோடு மானசீகமாக உரையாடினான் ருத்ரன்.
“அம்மு மிஸ் யூ டி” தனது கைகளால் வரைந்த அம்முவின் புகைப்படத்தை இறுகி அணைத்த ஆடவனின் விழிகளும் சற்றே கலங்கின தன் காத்திருப்பு என்று தான் கைகூடும் எனும் தீராத ஏக்கத்தில்.
தொடரும்…….♡
ஷம்லா பஸ்லி