“அவ எதுவும் பண்ணிருக்க வாய்ப்பில்லை. அப்படியே பண்ணி இருந்தாலும் அதை நீ என்கிட்டச் சொல்லி இருக்கலாம். இப்படியா தாலி கட்டுறது?”
“உங்க பொண்ணுக்குத் தாலி கட்டணும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்லை. ஒரு செருப்ப விடக் கேவலமா என்னைப் பேசுனா. இப்ப அந்தக் கேவலமானவன் தாலி கட்டி இருக்கான், அவ்ளோதான்.”
“அவ தப்பே பண்ணி இருந்தாலும், நீ பண்ணது பெரிய தப்புன்னு தெரியலையா?”
“எனக்கு நடந்த துரோகத்துக்கு முன்னாடி தெரியல.”
“அப்படி என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?”
“உங்க பொண்ணு ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் நடத்துற பேர்ல அங்க படிக்கிறவங்க கிட்ட வேலை வாங்கித் தரன்னு காசு பிடுங்குறா. அதுல ஏமாந்த என் தம்பி என் அப்பாவை பிரைன் வாஷ் பண்ணி எனக்கே தெரியாம வீட்டுப் பத்தரத்தை அடமானம் வச்சு உங்க பொண்ணு கையில பத்து லட்ச ரூபா குடுத்து இருக்கான். காசு கொடுத்து ஆறு மாசம் ஆகுது. வேலை எப்பக் கிடைக்கும்னு கேட்டதுக்கு அவனை என்ன தெரியுமா பண்ணா…” என ரிதுவைப் பார்த்துப் பல்லைக் கடிக்க,
“ஸ்டாப் இட்!” உரக்கக் கத்தினாள்.
“இவன் சொல்றது உண்மையா?”
“என்னப்பா, நீங்களும்…”
“எனக்குத் தெரியும் ரிது. இருந்தாலும் அவன் தெரிஞ்சுக்கக் கேட்கிறேன்.”
“இவனையும், இவன் தம்பியையும் யாருன்னு கூட எனக்குத் தெரியாது. நம்மகிட்ட இல்லாத பணமாப்பா. நான் எதுக்கு இந்த மாதிரிக் கேவலமான ஒருத்தன்கிட்ட இருந்து காசு வாங்கப் போறேன்.”
“பொய் சொல்லாதடி!”
“டி போட்ட, செருப்பு பிஞ்சிடும்.”
“என் தம்பி கிட்ட இருந்து பத்து லட்ச ரூபா வாங்கல?”
“வாங்கல!”
“வேலை எப்ப வரும்னு கேட்டதுக்குப் படிக்க வராதன்னு துரத்தி விடல?”
“விடல!”
“உன்கிட்டக் கெஞ்ச வந்தவனைத் துரத்தி அடிக்கல?”
“அடிக்கல!”
“விஷயம் தெரிஞ்சு கேட்க வந்த என்னைப் பார்க்க விடாமல் துரத்தி அனுப்பல?”
“அனுப்பல!”
“ஆளுங்களை வச்சு என் தம்பிய…” என்றவன் சொல்ல முடியாமல் கண் கலங்கினான்.
“சும்மா அழுது டிராமா போடாத. நீ சொல்ற எதையுமே நான் பண்ணல. உன் தம்பி பேர் என்னன்னு கூட எனக்குத் தெரியாது. அதனாலதான், அன்னைக்கு நீ பேச வரும்போது பார்க்க முடியாதுன்னு விரட்டி விட்டேன்.” என்றதும் கலங்கிக் கொண்டிருந்த கண்கள் பாறையானது.
அங்கிருந்த அதிகாரிகள் அனைவரையும் துச்சமென எண்ணிப் பாய்ந்தவன், அவள் கழுத்தைப் பிடித்து அப்படியே தள்ளிக் கொண்டு சென்று கதவில் மோதி நிறுத்தினான். அவன் கொடுத்த அதிர்வில் இருந்து மீளாமல், விடுவிக்கப் போராடிக் கொண்டிருந்தவளைக் காப்பாற்றப் பொன்வண்ணன் ஓடினார்.
அவரால் அவன் திடத்திற்கு முன் ஒன்றும் செய்ய முடியவில்லை. அங்கிருந்த அனைவரும் சூழ்ந்து கொண்டு அந்த ராட்சத ராவணனைத் தடுக்கப் பார்க்க, “பேர் தெரியாமல் தான் கவர்மெண்ட் வேலை வாங்கித் தரன்னு காசு வாங்குனியா? உன்கிட்டப் பணத்தைக் கொடுத்ததுக்கான சாட்சி இருக்கு. ஒழுங்கா உண்மைய ஒத்துக்க… இல்லன்னா, உன்னக் கொன்ன கொலைகாரனா தான் ஜெயிலுக்குப் போவேன்.” எனக் கழுத்தை நெறித்தான்.
அத்தனைப் பேராலும் தடுக்க முடியாத ஒருவனை சத்யராஜ், “கருடா!” என்ற ஒரே வார்த்தையில் தடுத்தார்.
அவளை விட்ட கையோடு காவலர்கள் கையில் சிக்கிக் கொண்டவனை சரமாரியாக அடித்தார்கள். அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டவன் அசராமல் முறைத்துக் கொண்டு நிற்க, “உன்கிட்ட என்ன சாட்சி இருக்கு?” அழுத்தமாகக் கேட்டார் பொன்வண்ணன்.
“இவ கூடவே ஒரு பன்னாட மேனேஜர் சுத்துவானே, அவன்தான் என் தம்பி கைல இருந்து காசை வாங்கி இவ கையில கொடுத்து இருக்கான்.”
“இல்லவே இல்ல. இவன் சொல்ற மாதிரி என்கிட்ட ரவி எந்தப் பணத்தையும் கொடுக்கல. இவன் சொல்ற எதையும் நம்பாதீங்கப்பா.”
“ரவிக்கு போன் போட்டு இங்க வரச் சொல்லு!”
“அப்பா!” என்ற அதிர்வோடு அவள் பேச்சை நிறுத்த, “சொல்லு!” என்றார் அதிகாரமாக.
***
அரை மணி நேரமாக, அந்த அறை அமைதியில் கழிந்தது. அமைதியாக இருந்ததே தவிர கருடேந்திரன் கோபத்தில் சிறுகுறைவு இல்லை. அதேபோல் தான் அவன் முன்பாக நின்று கொண்டிருந்தவள் விழிகளிலும் ரௌத்திரம் அடங்கவில்லை. இருவரையும் கவனத்தில் கொண்டிருந்தார் பொன்வண்ணன். அவர் மனதில் கருடேந்திரன் பற்றிய ஞாபகங்கள். வியந்து பார்த்தவனை இப்படி ஒரு நிலையில் பார்ப்போம் என்பதைச் சிறிதும் அறியாது யோசனையில் இருந்தவரை ரவியின் குரல் கலைத்தது.
நடந்த அனைத்தையும் சுருக்கமாகக் கூறியவர், “இவன் சொல்ற மாதிரி இவன் தம்பிகிட்ட இருந்து காசை வாங்கி ரிது கிட்டக் கொடுத்தியா?” எனக் கேள்வி எழுப்ப, அவன் முதலாளியைப் பார்த்தான்.
“என்னை எதுக்காகப் பார்க்குறீங்க? அப்பா கேக்குறதுக்கு இல்லன்னு பதில் சொல்லுங்க.”
“நீ சும்மா இரு ரிது. எதுவா இருந்தாலும் நான் பேசுறேன்.”
“என்னப்பா நீங்க, அவன் சொல்ற மாதிரி என்னைக் குற்றவாளியாய் பார்க்கறீங்க.”
“அப்படி எதுவும் இல்ல ரிது. உன் மேல இவ்ளோ பெரிய குற்றச்சாட்டை வச்சிருக்கான். அதை இல்லன்னு ப்ரூப் பண்ணா தான், அவன் மேல கேஸ் கொடுத்து உள்ள தள்ள முடியும்.”
“என்னப்பா புதுக்கதை சொல்றீங்க? அவன் எவ்ளோ பெரிய பிராடு வேலையைப் பண்ணி இருக்கான், பொறுமையா விசாரிச்சுட்டு இருக்கீங்க. இந்த விஷயத்துல இருந்து நீங்க ஒதுங்கிக்கோங்க. என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணிக்கிறேன்.”
சற்றுக் குரலைக் கூட்டி, “உன் மேல தனிப்பட்ட முறையில குத்தம் சொன்னா பரவால்ல. அவன் சொல்றது நம்ம இன்ஸ்டிடியூட்ட. முப்பது வருஷமா கண்ணியமா நடத்திட்டு இருக்கேன். அது மேல ஒரு பழி வர நான் விடமாட்டேன். பல மாணவர்கள்கிட்ட சொல்லித் தரதுக்குக் காசு கூட வாங்காம அரசு உத்தியோகத்துல உட்கார வச்சிருக்கேன். அப்படிப்பட்ட இடத்து மேல வீண் பழி வரலாமா? உண்மைய நிரூபிக்கிற வரைக்கும் வாய மூடிட்டுச் சும்மா இரு.” என மகளைக் கண்டித்தவர் ரவியிடம் பார்வையைத் திருப்பினார்.
“அது… அது வந்து சார்…”
“எதுக்கும் பயப்படாம உண்மையை மட்டும் சொல்லு.”
“அந்தப் பணத்தை வாங்கி மேடம் கிட்டதான் சார் கொடுத்தேன்.” என்றதும் வானம் மொத்தமும் அவள் தலையில் விழுந்தது.
பெரும் அதிர்வுக்கு உள்ளான பொன்வண்ணன், “என் பொண்ணுகிட்ட தான் கொடுத்தியா?” என நம்பாமல் கேட்க,
“ஆமா சார். அந்தப் பணத்தை மேடம் கிட்டதான் கொடுத்தேன்.” என்றான் தெளிவாக.
“அடப்பாவி! எப்படா என்கிட்டக் காசு கொடுத்த? ஏன்டா இப்படிப் பொய் சொல்ற. இப்ப மட்டும் நீ உண்மையச் சொல்லல, சாவடிச்சிடுவேன்.”
தாவி அவன் சட்டைக் காலரைப் பிடித்தவள் பகிரங்கமாக மிரட்ட, “என்ன மேடம் நீங்க, இது நமக்குள்ள ரெகுலரா நடக்குறது தான. கேஸ் எதுவும் வராது. அப்படியே வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்னு நீங்க சொன்னதால தான மீடியேட்டரா இருந்து காசை வாங்கிக் கொடுத்தேன். இப்படி என்னைக் கழற்றி விட்டுட்டு மாட்டிவிடப் பார்க்குறீங்க.” என்றதும் ஆத்திரத்தில் புத்தியை இழந்தவள் கண்டமேனிக்கு அடிக்க ஆரம்பித்தாள்.
அங்கிருந்த அனைவரும் இப்பொழுது இவளைத் தடுக்க, “எப்படி நடிக்கிறா பாருங்க. இவ்ளோ நேரம் காசே வாங்கலன்னு சாதிச்சா… இப்போ உண்மை தெரிஞ்சதும், அவன் மேல பழியப் போட்டுத் தப்பிக்கப் பார்க்குறா…” என வார்த்தையால் கொந்தளித்தான்.
“நான் பணம் வாங்குனதை நீ பார்த்தியாடா. சும்மா உனக்குத்தான் வாய் இருக்குன்னு பேசாத. இவன் என்கிட்ட எந்தக் காசும் தரல. ஏன் இப்படிச் சொல்றான்னு சத்தியமா தெரியல.”
“என் பொண்ணு காசு வாங்கி இருக்க மாட்டான்னு நான் நம்புறேன். கடைசியா உனக்கு ஒரு சான்ஸ் தரேன், உண்மையைச் சொல்லிடு.”
“சத்தியமா மேடம் கிட்டதான் சார் கொடுத்தேன்.”
அடிக்கப் போகும் மகளைத் தடுத்து நிறுத்தியவர், “இவன்கிட்ட ஏதோ ஒரு பொய் இருக்கு. இத்தனைப் போலீஸ்காரங்க முன்னாடி இவ்ளோ தைரியமா சொல்றான்னா, இதுக்குப் பின்னாடி வேற யாரோ இருக்காங்க. இந்த விஷயத்தைப் பொறுமையா தான் ஹேண்டில் பண்ணனும்.” என்றிட,
“யார் இருந்தா எனக்கென்ன? நான் அடிக்கிற அடியில இவன் எப்படி உண்மையைச் சொல்றான்னு மட்டும் பாருங்க.” என்றாள்.
“சார், இவதான் பணம் வாங்கி எங்களை ஏமாத்திட்டான்னு கம்ப்ளைன்ட் கொடுத்தும் யாரும் எடுக்கல. உங்க முன்னாடியே இவகிட்ட தான் பணத்தைக் கொடுத்தேன்னு அந்த ஆள் சொல்றான். இப்பவாவது கம்ப்ளைன்டை எடுத்து இவ மேல கேஸ் ஃபைல் பண்ணுங்க. கூடவே என் தம்பியை அவ்ளோ சித்திரவதை பண்ணதுக்கும் சேர்த்துத் தண்டனை வாங்கிக் கொடுங்க.”
“கொஞ்சம் பொறுமையா இருப்பா… இந்த விஷயத்துல வேற யாரோ விளையாடி இருக்காங்க. அது யார் என்னன்னு கண்டுபிடிக்கலாம்.”
“சும்மா உங்க பொண்ணு மாதிரியே நடிக்காதீங்க சார். திரும்பவும் உங்களை நம்பி ஏமாற நான் ஒன்னும் என் தம்பி இல்ல. நீங்க எந்த உண்மையை வேணா கண்டுபிடிச்சு, என்ன வேணா பண்ணிக்கோங்க. ஆனா, இப்ப இவளை அரெஸ்ட் பண்ணியே ஆகணும்.”
“நீ சொல்லிட்டா என்னை அரெஸ்ட் பண்ணிடுவாங்களா? இவன் எப்படிப் பணம் கொடுத்தன்னு சொல்றானோ, அதே மாதிரி நான் பணம் வாங்கல. நீ என்ன கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் என்னால ஒத்துக்க முடியாது.”
இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவித்தார்கள் அதிகாரிகள். அதைவிடப் பெரும் தலைவலி பொன்வண்ணனுக்கு. ரவியிடம் பலமுறை பல கோணத்தில் விசாரித்தும், கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் அவசரத்தைக் காட்ட விரும்பாதவர்,
“கேஸ் எதுவும் வேண்டாம் சார். இந்த விஷயத்தை நாங்களே பேசி சால்வ் பண்ணிக்கிறோம். நீங்க அந்தப் பையனை அனுப்பிடுங்க.” என்றார்.
“என்ன சார் விளையாடுறீங்களா? என்னமோ உத்தமர் மாதிரிக் கூப்பிட்டு வச்சு விசாரிச்சுட்டு, இப்போ உங்க பொண்ணு தப்புப் பண்ணான்னு தெரிஞ்சதும் நழுவப் பார்க்குறீங்க. என் மேல எத்தனை கேஸ் வந்தாலும் பரவால்ல. உங்க பொண்ணு உள்ள போயே ஆகணும்.”
“சார், இவன் மேல கொடுத்த கம்ப்ளைன்டோட சேர்த்து இந்த ரவி மேலயும் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன். ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிங்களா இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு. என்னை மாதிரிப் பணக்காரங்களை டார்கெட் பண்ணிப் பணம் பறிக்குறதுக்கான வேலை இது. ரெண்டு பேரையும் சும்மா விடாதீங்க சார்.” என்ற மகளிடம் எவ்வளவோ பேசிப் பார்த்து விட்டார்.
இதில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று முழு முடக்குப் போட்டவள், அதிகாரத்தோடு அதிகாரிகளுக்குக் கட்டளையிட, கருடேந்திரனைச் சிறை வைத்தார்கள்.
****
எல்லாம் நடந்து முடிந்து நான்கு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. கருடன் அதிகாரிகள் பாதுகாப்பில் இருக்கிறான். இத்தனைக்கும் காரணமான ரவி மீது வழக்குப் பதியப்பட்டு இருக்கிறது. தந்தையோடு காரில் பயணித்துக் கொண்டிருந்தவளுக்கு, இன்னும் ஆத்திரம் குறையவில்லை. வீட்டில் இருந்தால் தான் இதே போல் இருக்கிறாள் என்று வெளியில் அழைத்து வந்தும் பலன் இல்லாமல் போனது.
“நீ கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தாதான் இதைப்பத்திப் பேச முடியும்.”
“என்னால முடியலப்பா. யாருன்னே தெரியாத ஒருத்தன் ஒரே ஒரு நாள்ல என் லைஃப மாத்திட்டானே.”
“அதே எண்ணம் அவனுக்கும் இருக்கலாம்ல.”
“நீங்க என்னப்பா அவனுக்கு சப்போர்ட் பண்றீங்க? நான் உங்க பொண்ணா இல்ல, அவன் உங்க பொண்ணா? என் கழுத்துல ஒருத்தன் தாலி கட்டிட்டான்னு சொன்னப்போ, எவ்ளோ கோவப்பட்டிங்க. இப்ப என்னடான்னா அவனுக்கு வக்காலத்து வாங்குறீங்க.”
“உன்கிட்ட நான் நிறையப் பேசணும் ரிது. அதையெல்லாம் கேட்க நீ நார்மலா இருக்கனும். ரிலாக்ஸ் ஆகிட்டுச் சொல்லு, பேசிக்கலாம்.”
பொன்வண்ணனின் செயல் இன்னும் எரிச்சலைக் கொடுத்தது அவளுக்கு. அவரிடம் பேச விரும்பாது மௌனமாகி விட்டாள். அதிகாரிகளிடம் பேசிப் பார்த்துத் தோல்வியோடு இல்லம் திரும்பினார் சத்யராஜ். திரும்பி வந்த கணவரைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த சரளா மகனைப் பற்றிக் கேட்க, நடந்த அனைத்தையும் தெரிவித்தார்.
“கருடாவா இப்படிப் பண்ணது!” என்ற பெரும் அதிர்வு அவரிடம்.
“என்னாலயும் கொஞ்சம் கூட நம்ப முடியல. என் பையன் இல்லன்னு சொல்லிடுவான்னு மலை மாதிரி நம்பிட்டு இருந்தேன். இப்ப எப்படி அவனை வெளிய எடுக்கப் போறன்னு தெரியல. ஒருத்தன் என்னடான்னா, நமக்குன்னு இருந்த இந்த வீட்ட அடமானம் வச்சு ஒன்னும் இல்லாம படுத்து இருக்கான். அவன் ஸ்டேஷன்ல உட்கார்ந்து இருக்கான். நல்லா இருந்த குடும்பத்துல யாரு கண்ணு பட்டுச்சோ.”
“என்ன பேசுனாலும் வேலைக்கு ஆகாது நதியா. அந்தப் பொண்ணு கிட்டதான் காசு கொடுத்தன்னு சொல்லியும் யாரும் காதுல வாங்கிக்கல. சொன்னவன் மேலயே கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க. பணம் இருக்குறவங்க பக்கம்தான் அதிகாரமும் இருக்கும்.”
“பணத்தையும் ஏமாத்திட்டு, என் புள்ளையை உள்ளயும் வச்சுட்டாளே. எந்தக் கடவுளுக்கும் கண்ணு இல்ல. என் குடும்பம் இப்படிச் சிதறிப் போயிருக்கு. அதைப் பார்த்தும் சும்மா இருக்கியே.”
தாய் தந்தையர் படும் அவஸ்தையைப் பார்க்க மட்டுமே முடிந்தது நதியாவால். கடைசியாக இவ்வீட்டில் பிறந்தவள், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். வசதிக்குக் குறைவு என்றாலும், வசந்தத்திற்குக் குறைவு இல்லாத வீடு. சொந்த வீட்டைப் பாலமாக வைத்துக்கொண்டு, மூன்று பிள்ளைகளையும் வளர்த்து விட்டார் சத்யராஜ். மூத்த மகன் கருடேந்திரன் கல்லூரி முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் சமயம், இதயப் பிரச்சினையால் பெரும் பண நெருக்கடிக்கு ஆளாகியது இந்த வீடு.
அன்னையின் உயிர் மட்டுமே முக்கியம் எனக் கருதியவன், பெருந்தொகையைக் கடன் வாங்கித் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தான். அவர் தேறி வீட்டுக்கு வருவதற்குள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாத நிலைக்கு வந்தார் சத்யராஜ். குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய முழுப் பொறுப்பு மூத்த மகன் தலையில் விழுந்தது.
ஒரு தனியார் துறையில், டெலிகாலிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வருமானம் குடும்பம் நடத்தவே போதுமானதாக இருக்க மற்றவைகளுக்குப் போதவில்லை. முக்கியமாக மருத்துவச் செலவிற்கு வாங்கிய கடன் கழுத்தை நெரித்தது. வேலைக்குச் சென்று வந்த பின் மீதமிருக்கும் நேரத்தில் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தான். அதில் வரும் வருமானம், வேலைக்குச் சென்று வாங்கும் வருமானத்தை விட அதிக அளவு இருப்பதால், வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இதில் ஈடுபட ஆரம்பித்தான்.
உழைப்பவனுக்கு உழைப்பு மட்டுமே மூலதனம். முன்புபோல் ஓரிடத்தில் நின்று கொண்டு, வரும் சவாரியைப் பேசும் சூழ்நிலை இன்றைய காலகட்டத்தில் இல்லை. நவீனத் தொழில் நுட்பத்தில் ஒரு கைப்பேசி போதும் சம்பாதிக்க. ஒன்றுக்கு மூன்று ஆப்களைத் தரவிறக்கம் செய்தவன், காலை ஐந்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், மதியம் மூன்று மணிக்கு வருவான். சாப்பிட்ட கையோடு கிளம்பியவன் இல்லம் திரும்ப நள்ளிரவு ஆகும்.
அப்படியெல்லாம் உழைத்துத்தான் இந்த வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். சின்னவன் மூர்த்தி அரசு பதவி மீது ஆசை கொள்ள, தம்பியாவது நல்ல இடத்தில் இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில் ரிதுசதிகாவின் பயிற்சியகத்தில் சேர்த்து விட்டான். அங்குக் காட்டிய ஆசை வார்த்தையில் மயங்கி, அண்ணனுக்குத் தெரியாமல் தந்தையைச் சமாளித்து வீட்டை அடமானம் வைத்தான்.
எப்படியும் அரசு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இதில் அவன் இறங்க, பணத்தை வாங்கிக் கொண்டு ஆறு மாதம் ஆகியும் இழுத்து அடித்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அடமானத்திற்கான வட்டியைக் கட்டப் பணம் புரட்ட முடியாமல் அண்ணனிடம் கூறிவிட்டான். உடன் பிறந்தவன் என்றும் பாராமல் அடித்து உதைத்து, வீட்டைக் கலவரம் செய்தவன் ரிதுவைத் தேடிச் சென்றான்.
ஒரு வாரம் அலைந்தும் இவளைப் பார்க்க முடியவில்லை. அதன்பின், காவல் நிலையத்திற்கும் அலைந்து விட்டான். அடிதடிச் சண்டை நடத்தி ஒருவழியாக அவளைப் பார்த்து விட்டான். சொல்ல வருவதைக் காதில் கூட வாங்காமல் விரட்டி அடித்தாள். எங்கும் கருடனுக்கான பதில் கிடைக்கவில்லை. இதற்கு நடுவில் மூர்த்திக்கு நடக்கக் கூடாத விபரீதம் ஒன்று நடந்து விட்டது. அந்த ஆத்திரத்தில் தான் இரண்டு நாள்களாகக் காத்திருந்து அவளுக்கு இப்படி ஒரு சதியைச் செய்து விட்டான்.
***
“வணக்கம்!”
“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?”
“உங்க கோபம் புரியுது சார். நடந்ததுக்கு என் பொண்ணு காரணம் இல்ல. அதைப் பத்தி விளக்கமா பேசத்தான் வந்திருக்கேன்.”
“யாருங்க இவரு?”
“என் பேரு பொன்வண்ணன். உங்க பையன் ஸ்டேஷன்ல இருக்கக் காரணமான பொண்ணோட அப்பா…” என்றதும் சரளா கோபம் கொள்ள, “கொஞ்சம் நேரம் கொடுத்தீங்கன்னா, உங்க பையனை வெளிய எடுக்குறதுக்கான வழியைச் சொல்லுவேன்.” என்றவரை நம்பி உள்ளே அழைத்தார்கள்.
வந்து அமர்ந்தவருக்கு நதியா நீரை எடுத்து வந்து கொடுக்க, அவளைக் கண்டு சிநேகமாகப் புன்னகைத்தவர், “என்னை வீட்டுக்குள்ளயே விட மாட்டீங்கன்னு நினைச்சேன். பரவால்ல தண்ணிலாம் கொடுக்குறீங்க.” என்றார்.
“அண்ணா வெளிய வரதுக்கான வழியச் சொல்றன்னு சொன்ன உங்களை, அப்படியே எப்படி சார் அனுப்ப முடியும்?”
“அண்ணன் மேல ரொம்பப் பாசமோ?”
“எங்களுக்கு அண்ணன் தான் எல்லாமே!”
“சுத்தி வளைச்சுப் பேச விரும்பல. உங்க சின்னப் பையன் காசைக் கொடுத்து ஏமாந்து இருக்கான். அதுக்கு எந்த வகையிலும் என் பொண்ணு காரணம் இல்லை. உங்களுக்கே தெரியும், நாங்க எவ்ளோ வசதியானவங்கன்னு. பத்து லட்ச ரூபா எங்களுக்குப் பெரிய விஷயம் இல்லை. அப்படி இருக்க என் பொண்ணு எப்படி வாங்கி இருப்பான்னு யோசிங்க. இதுல அந்த ரவி ஏதோ திருட்டுத்தனம் பண்ணி இருக்கான். அதுக்கு என் பொண்ணோட பேரை யூஸ் பண்ணிக்கிட்டான். அது தெரியாம, என் பொண்ணு மேல கோபப்பட்ட உங்க பையன் அவசரப்பட்டுத் தாலியக் கட்டிட்டான்.”
“என் பையன் பண்ண தப்புக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்குறேன் சார். இனிமே அவன் உங்க பக்கமே வரமாட்டான். எங்களுக்கு அந்தக் காசு கூட வேண்டாம். எங்க மகனை எங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க போதும்.”
“உங்க காசும் வரும், உங்க பையனும் வீட்டுக்கு வருவான்.” என்றவரைத் தம்பதிகள் ஆனந்தத்தோடு பார்க்க, “அதுக்கு நீங்க ஒரு சின்ன வேலை பார்க்கணுமே.” என இழுத்தார்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்க சார். எங்க பையனுக்காக நாங்க பண்றோம்.”
பொன்வண்ணன் வார்த்தையைக் கேட்ட அம்மூவருக்கும் வாயடைத்தது. உயிருக்குள் ஒளிந்து கொண்டிருந்த அவர்கள் உணர்வுகள், அப்படியே ஸ்தம்பித்து நின்றது போல் உணர்ந்தவர்கள் திகைப்போடு பார்த்துக் கொண்டிருக்க, “உங்க அதிர்ச்சி புரியுது. இருந்தாலும், எந்தத் தப்பும் பண்ணாத என் பொண்ணை ஊர் பார்க்கத் தாலி கட்டி அசிங்கப்படுத்திட்டான். இதுக்கு மேல என் பொண்ண யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. அதனால உங்க பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுங்க.” என்றார்.
“அது முடியாது சார். நீங்க என்ன சொன்னாலும், உங்க பொண்ணு தப்புப் பண்ணலன்னு எங்களால நம்ப முடியல. உண்மை எதுன்னு சட்டப்பூர்வமா நிரூபிங்க. அதை விட்டுட்டு…” என்ற சத்யராஜின் கைப்பிடித்தார் சரளா.
“அதை நிரூபிக்கிற வரைக்கும், உங்க பையனால வெளிய வர முடியாது. இந்தப் பிரச்சினை ரொம்பப் பெருசு. உண்மையைக் கண்டுபிடிக்க எத்தனை வருஷம் ஆகும்னு தெரியல. அதுவரைக்கும், என் பொண்ண அப்படியே வச்சிருக்க முடியாது. உங்க பையனும் ஜெயில்ல இருக்க முடியாது. இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு கல்யாணம் தான்… நல்லா யோசிச்சுப் பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும். அவசரப்படாம நிதானமா யோசிச்சுச் சொல்லுங்க.” என அவர் கிளம்ப,
“எங்களுக்குச் சம்மதம் சார்.” என்றார் சரளா.
சத்யராஜ் மனைவியின் வார்த்தையைக் கேட்டு மறுக்க, புன்னகையோடு அமர்ந்தார் பொன்வண்ணன். தன் கடைசி மகளை உள்ளே செல்ல உத்தரவிட்டவர், “ஒரு பொண்ணப் பெத்தவளா, இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறேன். ஆயிரம் காரணம் சொன்னாலும் என் பையன் பண்ணது தப்பு. எங்களால ஒரு பொண்ணோட வாழ்க்கை கெட்டுப்போகக் கூடாது. நீங்க சொன்ன மாதிரி, உங்க பொண்ணு காசு வாங்காம இருந்தா ரொம்ப சந்தோஷம். சீக்கிரம் உண்மையைக் கண்டுபிடிச்சு இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கொடுங்க.” என்றவர் வார்த்தையில் உருகினார்.
“இந்த ஒரு வார்த்தை போதும். இனி நடக்க வேண்டிய எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். ஈவினிங் உங்க பையன் வெளிய வந்துடுவான். நல்ல நாள் பார்த்து ரெண்டு பேத்துக்கும் கல்யாணத்தை முடிச்சிடலாம். அதுக்கப்புறம் இந்தக் காசுப் பிரச்சினையைப் பார்த்துக்கலாம்.” என்றவர் இரு கைகளை வணங்கி,
“என் பொண்ணு பண்ணலனாலும், அவளால உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு மனசார மன்னிப்புக் கேட்டுக்குறேன். அவ கோபக்காரி தான். ஆனா, ரொம்ப நல்லவள். இந்த வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் நீங்களே அவ மேல எந்தத் தப்பும் இல்லன்னு புரிஞ்சிப்பீங்க.” என்று விட்டு வெளியேறியவருக்குப் பெருத்த பயம் மகளை நினைத்து.
அவருக்கு நிச்சயம் தெரியும், ஒரு சதவீதம் கூட இதற்கு மகள் சம்மதிக்க மாட்டாள் என்று. என்றோ ஒரு காலத்தில், இவனைப்போல் மாப்பிள்ளை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மகளிடம் சொன்னவர், அதற்கான வாய்ப்புக் கிடைத்ததும் பயன்படுத்திக் கொள்கிறார். இதில் இருவரும் பாதிக்கப்படப் போவது தெரியாமல்.
சிறைக்குள் இருக்கும் கருடன் தாலி கட்டிச் சிறைப் பிடிப்பானா? தாலியைச் சிறையாக மாற்றி அவனை அடிமையாக்குவாளா? என்பதைத்தான் இனிவரும் காலங்களில் இவர் பார்க்கப் போகிறார்.