💙 விஷ்வ மித்ரன் 💙
அத்தியாயம் 03
பல்கோணியில் நின்று இரவு வானினை ஒளியிழந்த கண்களால் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.. இந்த வானைப் போலத் தானே அருள் எனும் ஒளியை இழந்து தனது வாழ்வும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது என்பதை நினைக்க நினைக்க கண்ணீரைச் சுரக்கலாயின அவள் விழிகள்.
அவன் எங்கே இருக்கின்றான்? அவனுக்கு தன்னை சிறிதாவது ஞாபகம் இருக்குமா? ஏன் இவ்வாறு செய்தான்? என்று பற்பல வினாக்கள் பதிலறிய முடியாத குழப்பத்தையும் கூடவே வலியையும் தான் கொடுத்தன.
அக்ஷரா “நீ எங்க இருக்கே? எனக்கு கிடைப்பியா அருள்? என்னால முடியலடா. நீ மட்டும் எனக்கு கிடைக்கலனா நான் செத்தே போயிடுவேன். மனசுல எங்கோ ஒரு மூளைல நீ என் வாழ்க்கைல வருவேங்குற நம்பிக்கை இருக்கு. என் நம்பிக்கைய கெடுத்துடாத டா. நீ எனக்கு வேணும் அருள் ” என்று அழுகையூடே சொன்னவளின் குரல் தழுதழுத்தது..
கேட் திறக்கும் சத்தம் கேட்டு அங்கு பார்வையை நகர்த்திய அக்ஷு அதிர்ந்து தான் போனாள். பட்டன்களை திறந்து விட்டு கசங்கிய சர்ட், கலைந்த முடியுடன் குடி போதையில் தள்ளாடியவாறு நடந்து வந்தான் அவளின் உயிர் அண்ணன் விஷ்வஜித்.
அவனை இந்த நிலையில் பார்த்தவளுக்கு மனம் வலித்தது. இதைத் தன் பெற்றோர் பார்த்தால் அவர்களால் நிச்சயம் தாங்க முடியாது என்று உணர்ந்தவள் பின் படிக்கட்டின் வழியாக வேகமாக கீழிறங்கினாள்.
“விஷு” என்றவாறு அருகினில் செல்ல, “கித்த (கிட்ட) வராத செம்ம காண்டுல இருக்கேன் போயிடு” குழறலாக வெளிவந்தது வார்த்தை.
அவன் வாயிலிருந்து குப்பென்று வீசிய மது வாடையில் முகம் சுளித்தவள், பின் சுதாகரித்துக் கொண்டு “ப்ளீஸ் உள்ள வா” என்று கையைப் பிடிக்க, அவள் கையைப் பிடிக்க வருவதை உணர்ந்த விஷ்வா “வேணாம் இங்கிருந்து போ” என கத்திக் கொண்டு தடுமாறி விழப் போக, “ஹேய் அண்ணா” என்று பதறிப் போய் அவனைத் தாங்கிப் பிடித்தாள் தங்கை.
அவன் கையை எடுத்து தன் தோளை சுற்றிப் போட்டுப் பிடித்து மறு கையால் இடையைப் பற்றித் தாங்கி மெது மெதுவாக படிகளில் ஏறினாள். லேசாகத் திறந்திருந்த அவன் அறைக்கதவை காலால் உதைத்துத் திறந்து உள்ளே அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தாள் அக்ஷரா.
பல மாதங்களுக்குப் பின் தன் அண்ணனின் அறையினுள் நுழைந்து இருக்கின்றாள். முன்பெல்லாம் மித்துவுடன் உருண்டு பிரண்டு விளையாடி அறையை மறுபுறம் புரட்டி வைத்து விட்டு அதை சுத்தம் செய்யச் சொல்லி அவளைப் பாடாய்ப் படுத்துவான்.
இப்போதெல்லாம் அறையினுள் என்ன? அவனருகில் கூட செல்ல விடாது ஒன்றைப் பார்வையால் தூர நிறுத்திவிடுகிறான். அவனின் அறை மித்ரனின் ஃபோட்டோ ஒன்று கூட இன்றி வெறுமையாய் இருந்தது.
அவன் ஏதேதோ புலம்ப, வாயருகில் காது வைத்துக் கேட்டாள்.
“நீ யேன்டா என்ன விட்டு போன மாப்ள? உன் கிட்ட ஹார்ஷா நடந்துக்கிட்டேன்ல. கஷ்டமா இருக்கு டா” என்றது தெள்ளத் தெளிவாக காதில் விழ, அஷுவோ விழி விரித்து நின்றாள்.
அப்படியானால் அருள் இங்கு தான் இருக்கின்றானா…? அவனை இன்று விஷ்வா சந்தித்து இருக்கின்றான்.. கோபத்தில் திட்டி இருக்கின்றான்.. தன் தமையனின் இந்த நிலைக்குக் காரணம் மித்ரன்! எனும் போதே இதயத்தில் சுருக்கென வலித்தது.
விஷ்வாவோ தன் புலம்பலை நிறுத்தவில்லை.
“மித்து சாரி” “சாரிடா மாப்ள” என்று வாய் ஓயாது தன்னையே அறியாது உளறிக் கொண்டிருந்தான்.
அவனருகில் சென்று “அண்ணா” என்று மெதுவாக அழைத்தாள் அக்ஷரா. அவ்வழைப்பு அவன் உயிர் வரை சென்று தீண்ட “அஷு” என்றவாறே தலை தூக்கியவன், “நான் உன் மடியில கொஞ்சம் படுத்துக்கட்டா” என்று சிறுபிள்ளையாகத் தான் வினவினான்.
பல நாள் கழித்து அவனின் அக்ஷு எனும் அழைப்பில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்தவள் “இதெல்லாம் கேட்கனுமா விஷு?” என்றவள் கட்டிலில் அமர்ந்து கொள்ள, அவள் மடியில் தலை வைத்து கண்களை மூடினான் காளை.
“நான் கெட்டவன்ல அக்ஷு மா?” பாவமாகக் கேட்டவனின் தலையை வருடியவளோ “இல்லண்ணா நீ ரொம்ப ரொம்ப நல்லவன். இனிமே இப்படிலாம் பேசாத” என்றாள்.
கண்களைத் திறந்து அவள் முகத்தை அண்ணாந்து பார்த்த விஷ்வா “இல்லடி நான் கெட்டவன் தான். என் மித்துவ கஷ்டப்படுத்திட்டேன். அவனுக்கு துரோகினு சொல்லிட்டேன்” என்றவன் சுயநினைவின்றி பேசினாலும் அவன் குரலில் இருந்த வலியை அவளால் உணர முடிந்தது.
நண்பனாகப் பழகி “மாப்ள!” என்று உயிரையே வைத்திருந்தவனின் வாயில் எவ்வாறு துரோகி எனும் வார்த்தை தோன்றியது!? அன்று விளையாட்டாக கேட்டது இன்று உண்மையாக நடந்து விட்டதே.
அதைச் சொன்ன அண்ணனும் வருத்தப்படுகின்றான் எனின் அதைக் கேட்ட தனது உயிரானவன் எவ்வளவு துடித்துப் போய் இருப்பான் என்று தானும் துடிதுடித்துத் தான் போனாள் மாது.
விஷ்வா மித்ரனைக் காயப்படுத்தி விட்டு அதற்காக வருந்தி இவ்வாறு குடித்து தன்னைத் தானே கெடுத்துக் கொள்கின்றானே என்று பெரும் கவலை அவளுள் சூழவாரம்பித்தது.
இதற்கெல்லாம் முடிவு மித்ரனின் கையில் தான்! ஆனாலும் அவனுக்கு விஷ்வா குடித்தது எதுவும் தெரியாது. ஆக! தானே இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தவள் மித்ரனைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டாள்.
ஆனால் அவ்வுறுதி அவனைக் காண்கையில் தவிடு பொடியாகப் போவதையோ அந்நொடி பெரும் ஏமாற்றத்தையும் உயிர் பிரியும் வலியையும் தான் சுமந்திடப் போவதையோ அவள் அறியவில்லை.
………………..
எவ்விடத்தில் நண்பன் “துரோகி” என்று வெறுப்பைக் கக்கி விட்டுச் சென்றானோ அவ்விடத்திலேயே கால்களுக்கிடையில் தலையைப் புதைத்தவாறு அமர்ந்தருந்தான் மித்ரன். அவன் காதுகளிலோ விஷ்வா கூறிய ஒற்றை வார்த்தையே ஒலித்துக் கொண்டிருக்க கண்களை இறுகத் தான் மூடிக் கொண்டான்.
அன்றெல்லாம் தன்னோடு தோள் சாய்ந்து குறும்பும் சிரிப்பும் மின்ன வலம் வந்தவன் இன்றோ எட்டாத தூரத்தில் கடுமையே உருவாய் நின்றது சொல்லொணா துயரைத் தான் கொடுத்தது. இதற்குக் காரணம் யார்? தான் ஒருவன் அவனுக்குக் கொடுத்த வலி, வேதனை, காயம், ஏமாற்றம் அத்தனையும் மாத்திரமே எனும் போது உள்ளுக்குள் செத்துப் போனான்.
விஷ்வாவின் மாற்றத்திற்குத் தானே முழுமொத்தக் காரணம் என்பதில் தன் மேலேயே கோபம் கோபமாக வர கையை மணலில் ஓங்கியடித்தான். கடற்கரை மணலில் இருந்த உடைந்த கண்ணாடித் துண்டு கையில் குத்த சிலீரென கையைக் கிழித்து சீறிப் பாய்ந்தது இரத்தம்.
“ஸ்ஆஆ” என கையை உதறியபடி இரத்தம் வழிவதைக் கூட உணராதவனாய் எழுந்து நோக்கலானான் மித்ரன். பைக்கில் ஏறி சென்றவன் ஏதோ உந்துதலில் தலை திருப்ப “bபார்” என்று கொட்டை எழுத்தில் போடப்பட்டிருந்ததைக் கண்டு சட்டென பைக்கை நிறுத்தினான்.
இருக்கும் மனவேதனையைக் குறைக்க குடித்தால் தான் என்ன!? என்று தோன்றிய எண்ணம் தடைப்பட்டும் தான் நிற்கலானது அவன் சிந்தையில் உதித்த அந்த நாள் சம்பவத்தில்!
முன்னொரு நாள் மிகுந்த வேதனையை மறக்கும் வழியற்று குடியை நாடிச் சென்றிருந்தான் மித்ரன். அதை க்ளாஸில் ஊற்றி வாயருகே கொண்டு செல்ல அந்த க்ளாஸை ஒரு கரம் தட்டி விட முழுவதும் கீழே சிதறியது.
“யாரு” என்று கோபமாக தலை தூக்கிப் பார்த்தவன் கண்கள் சிவக்க நின்றிருந்த நண்பனைக் கண்டு அதிர்ந்தும் தான் போனான்.
“வி…விஷு! நீ இங்க என்ன பண்ணுற” என தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கேட்க, “அது நான் கேட்க வேண்டிய கேள்வி மித்து. உனக்கு இந்த பார்ல என்ன வேலை?” புருவம் உயர்த்தியவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெறித்தது. அவனின் கோபத்தின் அளவைப் புரிந்து கொண்ட மித்ரனுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.
“அது…அ..அது” என்றவனுக்கு மேற்கொண்டு பேச வார்த்தை வரவில்லை. சமயத்திற்கு அவனிடம் பொய் சொல்லக் கூட நா எழவில்லை.
விஷ்வா “என்னடா ஆச்சு உனக்கு..? அப்படி என்ன தலை போற பிரச்சனைனு கேக்குறேன். லைப்னா அதுல சந்தோஷம் கவலைனு மாறி மாறி வரத்தான் செய்யும். அதுக்காக கவலை வந்துச்சுனா பார்கு வந்து குடிச்சு குடிச்சு குடிகாரனாயிடுவியா? நீ குடிச்சா எல்லா ப்ராப்ளமும் சால்வ் ஆயிடுமா? உன் லைப் இதனால ஸ்பாய்ல் ஆகிடும் டா. பின்னாடி எவ்ளோ ப்ராப்ளம்ஸ் வரும்னு யோசிச்சு பார்க்க மாட்டியா?
உனக்கு கவலைனா, கஷ்டம் வந்துச்சுனா என் தோள்ள வந்து சாஞ்சிக்கனும்னு தோணவே இல்லையா? எப்படி தோணும்? நீ தான் என்ன மறந்துட்டியே மாப்ள ” கோபத்தில் ஆரம்பித்து வருத்தத்தில் முடித்தான்.
“மாப்ள! ப்ளீஸ் டா அப்படி சொல்லாத. நான் என்னயே மறந்தாலும் உன்ன மறக்க மாட்டேன். எனக்கு என்ன பண்ணுறதுனே புரியல டா ஏதோ வேகத்துல இங்க வந்துட்டேன். பார்த்தியா நீ வந்து தட்டி கேட்டு என்ன தடம் மாறாம பார்த்துக்குற? நீ எனக்கு ப்ரெண்டு மட்டும் இல்லை என் உயிருக்கும் மேல” என்று உணர்ச்சிகளின் குவியலாய்த் தான் நின்றான் மித்து.
அவன் கூறியதில் மனம் நெகிழ்ந்தாலும் கோபப் பூச்சை பொய்யாகப் பூசிக் கொண்டு முறைப்புடன் தான் திரும்பிக் கொள்ளலானான் விஷ்வா.
மித்ரன் “சாரி விஷு. நான் இனிமே இத தொடக் கூட மாட்டேன். இந்த ஒரு தடவை மன்னிச்சிரு டா” தவறு செய்து விட்டு தந்தை முகம் பார்த்து மன்றாடும் சிறு பிள்ளையாகத் தானும் மாறியிருந்தான்.
“ஏதோ போனா போகுதுனு விடுறேன். பட் இனிமேல் எக்காரணம் கொண்டும் நீ இதத் தொடக் கூடாது. எந்த கஷ்டம் வந்தாலும் உனக்கு தோள் கொடுக்க உன் விஷ்வா இருப்பான். அதையும் மீறி குடிக்கனும்னு போனா நான் செத்துட்டேன்னு நெனச்சிக்க” என்று சொன்ன விஷ்வாவின் வாயைத் தன் கரம் கொண்டு மூடினான் தோழன்.
“டேய் என்ன வார்த்தைடா பேசுற? செத்துட்டன் அது இதுன்னு பேசாத மாப்ள. கஷ்டமா இருக்கு. இனி எப்போவுமே இந்த கருமத்த குடிக்கிறத நெனச்சும் பார்க்க மாட்டேன் ஓகேயா” என தலை சாய்த்துக் கேட்க, புன்னகையுடன் அவனைக் கட்டிக் கொண்டான் விஷ்வஜித்.
இதை நினைத்துப் பார்த்தவன் மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்து வீடு நோக்கிச் சென்றான். எந்த விஷ்வாவுக்காக குடிக்கும் எண்ணத்தைக் கை விட்டானோ அதே விஷ்வா தன்னால் குடி போதையில் இருப்பதை அறிந்தால் மித்துவின் நிலை…??
வீட்டினுள் நுழைந்தவனைக் கண்டு “மித்து” என்று பதறிக் கொண்டு வந்தார் ஹரிஷ். அவரைப் புரியாமல் பார்த்த மகனோ “என்னாச்சு டாடி? எதுக்கு இப்படி ஓடி வரீங்க” மெதுவாக வினவினான், தன் சோகம் மறைத்து.
“என் கிட்ட என்னாச்சுன்னு கேட்குறே. நீயே பாரு உன் கைய” என்று காட்ட அப்போதே கையில் இரத்தம் கசிந்திருப்பதைப் பார்த்தவன் “அத விடுங்க சின்ன காயம் தான்” என்று செல்லப் போனான்.
அவனது மறு கையைப் பிடித்து சோபாவில் அமர வைத்து உள்ளே சென்று பர்ஸ்ட்அய்ட் பாக்சை எடுத்து வந்து “உன் கையில ப்ளட் வந்தது கூட தெரியாம என்ன யோசனை பா? பார்த்து இருக்க கூடாதா” என்று கடிந்து கொண்டவாறே காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டார் ஹரிஷ்.
அவர் கன்னத்தைக் கிள்ளி விட்டு “நான் பத்திரமா இருப்பேன். நீங்க எத பத்தியும் யோசிக்காம தூங்குங்க டாடி” என செல்லம்கொஞ்சியவாறு தனதறைக்குள் புகுந்தான் மித்ரன்.
தன்னையே உலகமாக நினைத்து வாழும் தந்தைக்காக இவ்வளவு நேரம் மகிழ்வாய் இருப்பது போல் நடித்தவனுக்கோ இப்போது மீண்டும் நண்பனின் நினைவுகள் மனதில் வலம் வரத்துவங்கின. கப்போர்டைத் திறந்து அதில் இருந்த ப்ளேக் கலர் டீசர்ட்டை எடுத்துப் பார்த்தான்.
அது விஷ்வாவின் டீசர்ட் தான்! அதைக் கைகளில் எடுத்து நோக்கியபடி கட்டிலில் சாய்ந்தவன் அதை அணைத்துக் கொண்டே உறங்கியும் போனான்.
…………..
கதிரவன் பூமிக்கு ஒளியை வழங்க வந்திட அதன் கதிர்கள் யன்னலினூடாக விஷ்வாவின் முகத்தில் பட்டுத் தெறிக்க கண்களைக் கசக்கிக் கொண்டே உறக்கம் கலையலானான் அவன். நேற்று இரவு குடித்ததினால் தலை விண் விண் என்று வலிக்க கைகளால் தலையைத் தாங்கிவன் நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
மித்ரனைக் கண்டதில் இத்தனை நாள் மனதில் மறைந்திருந்த ஏமாற்றம் கோபமாக மாறிட குடியை நாடிச் சென்றான் அவன்.
உயர்ரக மதுவை வாங்கி க்ளாஸில் ஊற்றி குடிக்க முற்பட அதன் வாடையில் குமட்டிக் கொண்டு வந்தது. இதுவே அவனுக்கு முதல் தடவை. இப்போதைக்கு இதை விட்டால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று நினைத்து அலைபாயும் மனதை அடக்க ஒரே மிடரில் குடித்து முடித்தான். அவ்வளவு தான், தலை கிறுகிறுக்க கண்களும் சொருக எல்லாமே இரட்டை உருவங்களாக மங்கலாய்த் தோன்றலாயின
மேலும் குடி என நச்சரித்த மனதை அடக்கிக் கொண்டு எழுந்து நடந்தான். அவ்வளவு தான் ஞாபகம் இருந்தது. எவ்வளவு யோசித்தும் அதன் பின் நடந்தவை ஞாபகத்திற்கு வரவில்லை.
ட்ரைவர் அவனை அழைத்து வந்ததையோ, அக்ஷரா அறையினுள் அழைத்துச் சென்று மடி சாய்த்து தலை கோதியதையோ அவன் அறியாது தான் போனான்.
தான் ட்ரிங்க்ஸ் பண்ணியதை நினைத்து தன் மேலே கோபம் கொண்ட விஷ்வா “ஓஹ் காட்! நான் என்ன பண்ணேன்? எந்த ப்ராப்ளம் வந்தாலும் அத எதிர்த்து நின்னு ஜெயிக்கனும்னு நினைக்கிறவன் நான். அடியோட வெறுக்குற இந்த வொயின எப்படி குடிச்சேன் ச்சே” என தலையை அழுந்தக் கோதிக் கொண்டு பாத்ரூமினுள் புகுந்து கொண்டான்.
நீண்ட நேரம் ஷவருக்கு அடியில் நின்று மனக் கொதிப்பு தீர குளித்து விட்டு வந்தவனின் மனம் சற்றே அமைதியடைந்திருந்தது.
இயற்கையை ரசித்தவாறே பல்கோணியில் நின்ற விஷ்வாவை கார்டனில் பெஞ்சில் அமர்ந்திருந்நபடி நோக்கினாள் அக்ஷரா. வழக்கமாக தோன்றும் இறுக்கம் மறைந்து புதுப்பொலிவுடன் மின்னியது அவன் முகம். அதைக் கண்டு மகிழ்ந்தும் தான் போகலானாள் பெண்.
அவள் தன்னைப் பார்ப்பதை உணராத விஷ்வாவின் அமைதியைக் கலைத்தது அவனது செல்போன் அழைப்பு. போனை எடுத்துப் பார்க்க அவன் பீ.ஏ விமல் அழைத்திருந்தான்.
போஃனை காதுக்குக் கொடுத்தவன் “சொல்லு விமல். எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ண?” என்று கம்பீரமாய் வினவ, “டுடே லாவ்ஸ் ஹோட்டல்ல பிசினஸ் மீடிங் இருக்கு. அத ஞாபகப்படுத்த தான் கூப்பிட்டேன் சார்” அடக்கமாகப் பதில் கொடுத்தான் விமல்.
பெருவிரலால் நெற்றியைத் தேய்த்துக் கொண்ட விஷ்வா “யாஹ்! குட் ஜாப் விமல். மறந்தே போயிருந்தேன் நல்ல வேலை ஞாபகமப்படுத்தின தாங்க்யூ. அன்ட் பைல்ஸ் எல்லாம் ரெடியா வெச்சிரு” என்று உத்தரவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
காபி குடித்துக் கொண்டிருந்த அக்ஷு கார் கதவை திறக்கும் சத்தத்தில் நிமிர தற்போது கோர்ட் சூட் சகிதம் அக்மார்க் பிசினஸ் மேனாக வந்தான் விஷ்வஜித். இப்போது அவன் முகத்தில் எவ்வித உணர்வுகளையும் படிக்க முடியவில்லை. அந்தளவுக்கு முகம் கடுமையாகத் தோற்றமளித்தாலும் இது அவன் தன்னை மறைக்க உபயோகிக்கும் முகமூடியே என்பதை உணர்ந்தவள் அவனைக் கடைக்கண்ணால் பார்த்து புன்னகைத்தாள்.
………….
லாவ்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற மீடிங்கில் பிரசித்தி பெற்ற சகல கம்பனிகளதும் எம்.டிக்கள் வருகை தந்திருந்தனர். தன் திறமையால் தொழிலில் வெற்றியீட்டிய விஷ்வா பேச்சுத்திறமையால் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டு வெளியே வந்தவன் எதிரில் நின்றவனைக் கண்டு அதிர்ச்சியடைந்தான்.
காலேஜ் காலம் முதல் இப்போது தொழிலிலும் கூட விஷ்வாவை பரம எதிரியாக நினைத்து பழி வாங்கத் துடிக்கும் தர்ஷன் கேலிப் புன்னகையுடன் அவனை நோக்கி வந்து நின்றான். அவனின் கேலிப் பார்வையைக் கண்டு திமிருடன் அவனைப் பார்த்து இதழ் விரித்தான் காளை.
தர்ஷன் “வாட் அ சப்ரைஸ் மை டியர் எனிமி. பார்த்து எவ்ளோ நாளாச்சு? ரொம்ப மாறிட்ட” என்று இகழ்ச்சியுடன் கூற, “பொம்பளை பொறுக்கி எல்லாம் பிசினஸ் மேனா மாறும் போது என்னோட மாற்றம் தூசுக்கு சமன் இல்லையா” கைகட்டிக் கொண்டு எகத்தாளமாக பதிலடி கொடுத்தான் விஷ்வா.
“யாரப் பார்த்துடா பொம்பளை பொறுக்கினு சொல்லுறே? முன்னெல்லாம் நீ பேசவே மாட்டல்ல. எந்த வம்புக்கும் போகாம அமைதியே உருவா இருப்ப. இப்போ எங்கிருந்து பேச கத்துக்கிட்ட” முறைப்புடன் பார்த்தான் அவன்.
“நான் பேசினா நீ தாங்க மாட்ட தர்ஷன். என் வழில குறுக்கிடாத வரைக்கும் உனக்கு நல்லது” என்றான் ஆடவன்.
அதில் கோபமாகிய தர்ஷனுக்கு ஏதோ தோன்ற “ஓஹ் மை டியர் இப்போ தானே தெரியுது நீ ஏன் பார்க்கவே எவ்ளோ மாறிட்டன்னு? முன்னெல்லாம் நண்பன்னு சொல்லிட்டு உன் கூடவே ஒட்டிட்டு இருந்தான்ல ஒருத்தன் அவன் உனக்கு துரோகம் பண்ணிட்டு போய்ட்டான்ல? அந்த துரோகியால நீ ரொம்பவே உடைஞ்சு போயிருப்பல்ல பாவம் விஷ்வா நீ சுச்சு” என்று உச்சுக் கொட்டியவன் சேர்ட் காலரைக் கொத்தாகப் பற்றினான் விஷ்வா.
மித்ரனைத் துரோகி என்றதில் கோபத்தில் கண்கள் சிவக்க கழுத்து நரம்புகளும் புடைத்தது அவனுக்கு.
“என்னடா சொன்ன? யாரப் பார்த்துடா துரோகினு சொன்ன? துரோகம்னு ஒரு வார்த்தைய கூட சொல்ல உனக்கு அருகதை இல்லை. ரெண்டு பொண்ணுங்கள காதலிச்சு ஏமாற்றி கற்பழிச்சவன் தானே நீ? என் மாப்ளய பத்தி உனக்கென்ன தெரியும்? என் மித்துவ பத்தி தப்பா பேசின தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை” பற்களுக்கிடையில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன் அவன் சேர்ட்டிலிருந்து கையை எடுத்தான்.
தர்ஷன் “ஏய்ய்” என்று அவமானத்தில் கத்த, “உஷ்ஷ் கத்தாத. உன்னோட சவுண்டு எல்லாம் என் கிட்ட செல்லாது கண்ணா! இனி ஒரு தடவை என் கிட்ட மித்துவ தப்பா ஒரு வார்த்தை பேசினா கொலைகாரனா மாறிடுவேன்” என்று சிங்கமாகத் தான் கர்ஜித்தான் விஷ்வா.
“வ்விட மாட்டேன். உன்னயும் அந்த மித்ரனையும் விடவே மாட்டேன் டா” தர்ஷன் வன்மமமாகக் கூறினான்.
“உன்னால ஒன்னும் பண்ண முடியாது. என் மித்துவ நெருங்க நினைச்சா என்னைய மீறி தான் அவன தொட முடியும். முடிஞ்சா கை வெச்சி தான் பாரேன்” என்று விரல் நீட்டி எச்சரிப்புடன் சவால் விட்டு திரும்பி நடந்தான் அவன்.
தர்ஷனைத் துச்சமென நினைத்துச் சென்ற விஷ்வாவைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தது விதி! தர்ஷன் எனும் அரக்கனால் உன் உயிர்த் தோழன் உன் மடியினில் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடப் போகிறான், நீ என்ன செய்வாய் என்று?!
நட்பு தொடரும்………!!
✒️ Shamla Fazly💞