30. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(1)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 30

 

அன்றைய நாள் கண் விழித்த சத்யா வழக்கம் போல் ஜனனியைத் தேட, அவளோ அங்கு இல்லாதது கண்டு திகைத்துப் போனான்.

 

“எங்க போனா இவ?” என்று யோசித்தவனுக்கு இருவித எண்ணங்கள்.

 

தான் சொன்னது போல் எங்காவது சென்று விட்டாளோ என்று ஒரு மனம் நினைக்க, அவ்வளவு உறுதியாக சொன்னவள் சென்றிருக்க மாட்டாள் என்று மறு மனம் வாதிட்டது.

 

பல்கோணியருகே உள்ள கதவு லேசாக திறந்திருப்பதைக் கண்டவனுக்கு மனம் உந்தியதில் அங்கு சென்று பார்க்க, சுவரோடு ஒட்டியவாறு உறங்கிக் கொண்டிருந்தாள் ஜனனி.

 

பனி மூட்டம் நிறைந்த அக்காலை வேளையில் குளிரோடு வீசிய காற்று அவளை நடுங்கச் செய்தது போலும், உடலைக் குறுக்கி அவள் இருந்த கோலம் அவன் மனதைப் பிசைவதாக.

 

சட்டென குனிந்தவன் “ஜனனி” என்று அழைக்க, அவளுக்கோ அது கேட்டதாகத் தெரியவில்லை.

 

முழங்கையைப் பிடித்து அசைத்தவனுக்கு ஒரு புறம் அச்சமாக இருந்தது, அன்று போல் பாய்ந்து கட்டிக் கொள்வாளோ என்று.

 

“எழுந்திரு. ஜான்சி ராணி” சற்று பலமாக உலுக்க, “ஹான்” எனும் சத்தத்தோடு எழுந்தமர்ந்து சோம்பல் முறித்தாள்.

 

பாதி திறந்த இமைகளின் செயலில் அவன் முகம் விழிகளுக்கு விருந்தாக, “போங்க இங்கிருந்து” கண்களை மூடிக் கொண்டாள் ஜனனி.

 

“எதுக்கு? மறுபடியும் பூனைக்குட்டி மாதிரி சுருண்டுக்கிட்டு தூங்கவா? எழுந்துக்க” அதட்டும் குரலில் சொல்ல,

 

“யோவ் ஹிட்லர்! பேச விட மாட்டேங்கிற. யுகி கூட பழக விட மாட்டேங்கிற. நிம்மதியா தூங்கவாவது விடலாம்ல? அதையும் கெடுத்து அப்படி என்ன சந்தோஷத்தை அனுபவிக்கப் போற?” முகத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள்.

 

“நீ ஒழுங்கா தூங்கினா நான் எதுக்கு வந்து எழுப்பப் போறேன்? இங்கே வந்து தூங்கி இருக்க?”

 

“அங்கே மட்டும் பஞ்சு மெத்தையா இருக்கு? அதுவும் தரை, இதுவும் தரை. எந்த தரையில் தூங்கினாலும் ஒன்னு தான். அப்பறம் எதுக்கு அக்கறை இருக்கிற மாதிரி நடிப்பு?” என்று கேட்டவள், “ஓஓ நடிக்கனும்ல சார்? இல்லனா அத்தை ஏதாவது சொல்லுவாங்க. எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்க கஷ்டப்படனும்னு தான் இங்கே இருக்க வேண்டாம்னு எழுப்புறீங்கள்ல?” படபட பட்டாசாய் வெடித்தாள்.

 

“ஏய்! நடிக்கிறது உன்னோட வேலை. நீ தான் நடிச்சு நடிச்சு ஆளை ஏமாத்துவ” என்றவன், “நீ கஷ்டப்பட்டா எனக்கென்ன? இருந்தாலும் மத்தவங்க கிட்ட பேச்சு வாங்கக் கூடாதுனு இதையெல்லாம் பண்ண வேண்டியதா இருக்கு. அதற்காக உன் மேல அக்கறை சக்கரைனு கனவு காணாத” முறைப்போடு சொன்னான் அவன்.

 

“உங்க அக்கறைக்காக இங்கே யாரும் தவம் கிடக்கல. உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க. அதை விட்டுட்டு என்னை நோண்டுற வேலை வெச்சுக்காதீங்க” 

 

“ஆமா! இவ வறுத்த மீனு, நாம நேசத்தோட நோண்டுறோமாம். மூஞ்சையும் முழியையும் பாரு” முகத்தைத் திருப்பிக் கொள்ள, “எங்களுக்கும் முறைக்க தெரியும். முகத்தைத் திருப்பிக்கவும் தெரியும். ஹூம்” பதிலுக்கு முகத்தைத் திருப்பிக் கொண்டவளை முடிந்த வரை முறைத்தான் சத்யா.

 

“இனிமே பல்கணி பக்கம் வந்து தூங்காத. உன்னை யாராச்சும் கடத்திட்டு போனா உங்கப்பாவில் ஆரம்பிச்சு யுகி வரைக்கும் நான் பதில் சொல்லனும். அதனால ஒழுங்கா இருந்துக்கோ” தலைக்கு மேலால் கும்பிடு போட,

 

“என்னை யாரும் கடத்தப் போறதில்ல. ஆனால் நீங்க தான் ஒரு நாள் என்னை ஆள் வெச்சு இந்த வீட்டை விட்டு தூக்கிடுவீங்களோனு டவுட்டா இருக்கு” நாடியைத் தடவிக் கொண்டு சொன்னாள்.

 

அவளது பேச்சைக் கேட்டவனுக்கு கோபம் வந்தது. வீட்டை விட்டு அவள் போக நினைக்கிறாள். இதில் தன் மீது பழி போடுவாளா? என நினைத்தான்.

 

“ஆள் வெச்சு தூக்குற அளவுக்கு நீ வர்த் இல்ல. அப்படியே உன்னைத் துரத்தனும்னா டேரக்டா சொல்லுவேனே தவிர, கடத்தல் சீனை கையில் எடுக்க மாட்டேன்” 

 

“அப்படினா என்னைக் கடத்துற ஐடியா இல்லை. ஆனால் துரத்துற ஐடியா இருக்கு. பார்த்தீங்களா மிஸ்டர்? உங்களுக்கு தான் நான் இங்கே இருக்கிறது பிடிக்கல. அதனால அனுப்ப நினைக்கிறீங்க.

 

நீங்க இப்படி ஒரு எண்ணத்தை வெச்சிட்டு, நான் வீட்டை விட்டு போவேன்னு சொல்லி சொல்லி இருக்காதீங்க. உங்களுக்கு தான் நான் இருக்கிறது பிடிக்கல” ஆத்திரத்தோடு மொழிந்தாள் மங்கை.

 

“ஆமா எனக்கு நீ இங்கே இருக்கிறது பிடிக்கல. ஏன்னா எனக்கு உன்னைப் பிடிக்கல. உன் குணம் பிடிக்கல. உன்னை பார்க்கவே பிடிக்கல” அவன் சொல்லும் போது கண்களை இறுக மூடித் திறந்தாள். 

 

அவள் ஒன்றும் ஆசைப்பட்டு அவனைத் திருமணம் செய்து வரவில்லை. இருந்தாலும் வலித்தது. என்ன தான் மனம் ஒன்றாத திருமணம் என்றாலும், இனி என்றென்றும் அவள் கணவன் அவன் தானே?

 

அந்தக் கணவனின் வாயால் பிடிக்கவில்லை என்ற வார்த்தையைக் கேட்பது மனதை குண்டூசியால் குத்துவது போல் வலிக்க வைத்தது.

 

“பிடிக்கலன்னா போய் சொல்லி இருக்கனும். என்னைக் கல்யாணம் பண்ணிக்காம இருந்திருக்கனும். அதை விட்டுட்டு தாலி கட்டின அப்புறம் பிடிக்கலைன்னு சொன்னா எதுவும் பண்ண முடியாது. விரும்பினாலும் விரும்பலனாலும் இனி என் கூட தான் இருக்கனும். என் முகத்தைத் தான் பார்க்கனும். ஏன்னா நான் உங்க பொண்டாட்டி” என்று சொல்லி விட்டுச் சென்றவளின் குரலில் இருந்த உணர்வை அவனால் அறிய முடியவில்லை.

 

‘பேச்சு மட்டும் பங்களாதேஷ் வரை நீளுது‌. அது வாயா வாய்க்காலா?’ தலையைக் கோதியபடி புலம்பினான்.

 

……………

பாக்ஸிங் சென்டர் சென்றிருந்த தேவனுக்கு இன்று சொல்லொணா உணர்வு. அவனால் வழக்கம் போல் பிள்ளைகளைப் பயிற்றுவிக்க முடியவில்லை.

 

“கொஞ்சம் தலை வலிக்குது. நான் நாளைக்கு வர்றேன். ஐ நீட் ரெஸ்ட்” என்று சக பயிற்றுவிப்பாளரிடம் சொல்லி விட்டு பைக்கில் ஏறினான் தேவன்.

 

இன்று என்னவென்று தெரியாத எண்ணம் மனதை அலைக்கழித்தது. வீட்டிற்குச் செல்ல நினைத்தவனுக்கு மனம் வேறு ஏதோ சொல்ல, அருகில் இருந்த கடற்கரையில் வண்டியை நிறுத்தினான்.

 

கரையில் அமர்ந்து கொண்ட தேவனின் மனதில் கலகலத்துச் சிரித்தாள் வினிதா. கண்களை மூடிக் கொண்டவனுக்கு அவளை முதலில் சந்தித்த தருணம் நெஞ்சில் உதித்தது.

 

மூன்று வருடங்களுக்கு முன்பு காலேஜில் ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருந்தான் தேவன். தேவன் மிகவும் கோபக்காரன். அவனிடம் ப்ரபோஸ் செய்யத் தயங்கும் பெண்கள் ஏராளம். அப்படி ப்ரபோஸ் செய்தவர்களைக் கூட நிராகரித்து விடுவான்.

 

“எனக்கு இந்த லவ் மேல இன்டரெஸ்ட் இல்ல டா. அதுக்காக லவ் பண்ண மாட்டேன்னு அர்த்தம் இல்லை. என் மனசுக்கு ஒருத்தியைப் பிடிச்சா கண்டிப்பா லவ் பண்ணுவேன். இதுவரை எனக்கு யாரையும் பிடிச்சதில்ல” என்று தன் நண்பர்களிடம் அடிக்கடி சொல்வான்.

 

அன்றும் அப்படி சொல்லி முடிக்க,  “இப்படி சொல்லுற ஆட்கள் தான் டக்குனு காதல் வலையில் விழுந்துடுவாங்க” எனும் பெண் குரல் கேட்டு, “எவடி அவ?” கோபமாகத் திரும்பினான் அவன்.

 

இமைகள் படபடக்க, கண்ணில் கருமணிகள் சுழல அழகோவியமாய் நின்றிருந்தாள் பெண்ணொருத்தி. அவளது முகத்தின் அப்பாவித்தனத்திற்கும் சற்று முன் சொன்ன வார்த்தைக்கும் எந்த ஒற்றுமையும் இருக்கவில்லை.

 

“காதல் வலையில் சீக்கிரம் விழுவீங்கனு சொன்னது நீ தானா?” என்று அவன் கேட்க, “ஆமா சீனியர். எங்கம்மா அடிக்கடி சொல்லுற டயலாக் இது. அதனால நீங்க சொன்னதைக் கேட்டதும் என்னை மறந்து அப்படியே சொல்லிட்டேன்” அச்சத்தோடு அவனை நோக்கினாள் அவள்.

 

“ஓஹ்! உன் பெயர் என்ன?” சற்றே கடுமையாக வினவ, “அய்ம் வினி! வினிதா” அவள் கண்களில் அச்சம் நீங்கவில்லை‌.

 

“எதுக்கு இப்படி பேயைப் பார்த்த மாதிரி நிற்கிற? பெயரைக் கேட்டா அழகா சிரிச்சிட்டு சொல்லு. குளிர் காய்ச்சல் வந்த கோழிக் குஞ்சு மாதிரி கடகடன்னு நடுங்காத” 

 

“இல்ல சீனியர். உங்களைப் பார்க்கும் போது கசாப்புக்காரன் கையில் இருக்கிற கத்தியைக் கண்ட ஆடு மாதிரி என் ஹார்ட் துடிக்குது. பயந்து வருது” பயத்தோடு சொன்னாள் வினி.

 

“இனிமே என்னைப் பார்த்தா தினமும் ஹாய் சொல்லனும். போகும் போது பாய் சொல்லனும். காலேஜ் வரலைனா கால் பண்ணி சொல்லனும். ஓகே?” என்று கேட்க, அவள் அனைத்திற்கும் “ஓகே சீனியர்” என தலையாட்டி வைத்தாள்.

 

‘இர்டரெஸ்டிங் கேர்ள்’ என நினைத்துக் கொண்டவனுக்கு அன்று பாடவேளை முழுவதும் அவள் ஞாபகமாகவே இருந்தது.

 

“எங்க போனா இவ?” காலேஜ் முடிந்ததும் அவளைத் தேடியவனை கிண்டல் செய்தே ஓய்ந்து போயினர் நண்பர்கள்.

 

சற்று நேரம் கழித்து தன்னை நோக்கி வந்தவள், “நான் போகனும். பை சீனியர்” கை காட்டி விட்டு ஓட எத்தனித்தவளை, “ஹேய் வெயிட்” என தடுத்தான் தேவன்.

 

“என்ன?”

 

“வா வீட்டுக்குப் போகலாம்” கட்டளை பிறப்பித்தவனைப் புரியாமல் பார்த்து, “உங்க வீட்டுக்கு வந்து எப்படி வர்றது?” எனக் கேட்டாள்.

 

“பைக்ல தான். நீ வர வேண்டாம். நானே கூட்டிட்டு போறேன். இனியா அண்ணி வர சொன்னாங்க” என்றதும், “ஓஓ தேவ்! இனி அக்கா சொன்ன ஆள் நீங்க தானா?” துள்ளிக் குதித்தவளின், தேவ் எனும் அழைப்பு அவனுள் தென்றல் வீசியது.

 

சற்று முன்னர் அவனுக்கு அழைத்த சத்யா, “தேவா! உன் அண்ணியோட சொந்தக்கார பொண்ணு ஒருத்தி மலேசியாவில் இருந்து வந்திருக்கா. அவ செட்டிலாகும் வரை ரெண்டு நாள் நம்ம வீட்டில் தங்குவாளாம். உனக்கு ஃபோட்டோ அனுப்புறேன் அவளைக் கூட்டிட்டு வா” என்று சொன்னான்.

 

“அந்த ‌ஜூனியர் பொண்ணு எங்கேனு தெரியல. இதுல வேற ஒரு பொண்ணா?” என்று தலையில் அடித்துக் கொண்டு போட்டோவைப் பார்த்தவனது கண்கள் அகல விரிந்தன.

 

புன்னகை ஏந்தி நின்றிருந்த வினிதாவைக் கண்டதும் பளபளக்கும் புன்னகை பூத்தது அவன் உதட்டில்.

 

அவள் தன் பின்னால் ஏறி அமர்ந்ததும் அவனுக்கு சொல்லொணா ஆனந்தம். இதுவரை எந்தப் பெண்ணையும் தன் பைக்கில் ஏற்றியதில்லை. தன் மனைவிக்கே அந்த இடம் என்று அவன் சொல்வான்.

 

அவ்விடத்தில் அவள் அமர்வதை ஏற்றவனுக்குப் புரிந்து போனது, வினிதா மீது தன்னுள் காதல் செடி முளைத்த விடயம். ஒரு நாளில் காதலா? பார்த்தவுடன் காதலா? என்று தான் தோன்றியது.

 

அந்நொடி முதல் அவளை உயிரில் சுமக்கத் துவங்கியவன் இதைப் பற்றி மேகலையிடம் பேச முடிவு செய்தான்.

 

தன் தோளில் பதிந்த அவள் கரம் அவனை மலரால் வருடுவது போல் இருந்தது. இதயத்தில் இனிய கீதங்கள் இசைத்தன. அவளுடனான முதல் பயணத்தை ரசித்துக் கொண்டு வந்த தேவனுக்கு வீட்டில் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!