விஷ்வ மித்ரன்
💙 நட்பு – 30
பழக்கதோஷத்தில் தான் வந்தால் தங்கிக் கொள்ளும் அறையினுள் நுழைந்த விஷ்வா “அம்மாஆஆ பேய்” எனும் அலறலைக் கேட்டு தலை திருப்பியவனோ,
“அய்யோ பிசாசு” என்று கத்தினான்.
“என்னது விஷ்வா வாய்ஸ் மாதிரி இருக்கு?” என ஒரு ஜீவன் நினைக்க, “ஒரு வேளை அது நவியோ?” என நினைத்து அவ்விடத்தை மீண்டும் நோக்கினான்.
அடர்ந்து கிடந்த கூந்தல் முகத்தை முழுமையாக மறைத்திருக்க அதை மெல்ல தன் கரத்தால் அகற்றியவன் முகத்தைப் பார்த்தான்.
கண்களை இறுக மூடி பயத்தில் உதடு துடிக்க நின்றிருந்தாள் அவனவள்.
“நவிமா!” என்று அழைக்க, முடியை முகத்தில் இருந்து அப்புறப்படுத்தி, “விஷ்வா நீங்களா?” என முழித்தாள் வைஷ்ணவி.
“இல்லை பேய். அப்படித் தானே என்னைச் சொன்ன” சுவரில் சாய்ந்து அவளைப் பார்த்தான் விஷ்வா.
“அய்யோ சாரி! கண்ணாடி பார்த்து கொஞ்சம் பேய் மாதிரி இருக்க ப்ராக்டிஸ் பண்ணேனா கண்ணாடில ஒரு உருவம் வந்த மாதிரி இருந்துச்சு. அப்புறம் சுவரைப் பார்க்கும் போது உங்க நிழல் தெரியவும் பேய்னு நினைச்சு கத்திட்டேன்” இழுவையாகக் கூறினாள் காரிகை.
“ஆஹ்ஹான். நீ பேய் மாதிரி இருக்க ப்ராக்டிஸ் பண்ணவே தேவையில்லை. நிஜமாவே நான் வரும் போது முடியை விரிச்சு போட்டு இருந்த கோலத்தைக் கண்டால் நிஜப் பேயே அலறி அடிச்சு ஓடியிருக்கும். அப்படி ஒரு போஸ்ல இருந்த” சிரிக்காமல் தான் அவள் காலை வாரினான் ஆடவன்.
“போங்க விஷ்வா! உங்களுக்கு எல்லாமே கிண்டல் தான்” இம்முறை கடுகடுக்காமல் சிணுங்கியவளின் சிறு விழியசைவு கூட அவனை சித்தம் தடுமாற வைத்தது.
“பேய் தான். என்னை மட்டுமே ஆட்டி வைக்கும் ஒரு பேய். ரொம்ப அன்பான அழகான கியூட்டான பேய்” அவளை ரசித்துப் பார்த்தான் விஷு.
“உங்களை ஆட்டி வைக்குறேனா? நீங்க தான் என்னை வாட்டி எடுக்கிறீங்க?” என்று சொன்னாலும், அவன் கூறிய வார்த்தைகள் அமுதமாய் அவள் நெஞ்சில் இனித்தன.
“ஆட்டி வைக்காமலா. என் தூக்கத்தை பறிச்சுக்கிட்ட. நினைவுகளை தொலைய வெச்சுட்ட. என் இதயத்தையே கவர்ந்து உன் பக்கம் இழுத்துக்கிட்ட. முழு நேரமும் உன் நினைவு தான். மனசு முழுக்க உன் முகம் தான்” மனதில் பட்டதை அப்படியே பகிர்ந்து கெண்டான்.
உள்ளதை உள்ளபடி மறைக்காமல் பேசும் அவன் குணம் அவளை மேலும் ஈர்த்திட புன்முறுவல் கோட்டினாள் வைஷு.
“நெஜமாத் தான் சொல்லுறீங்கள்ல? கிண்டலுக்கு எல்லாம் இல்லையே?” சந்தேகமாகக் கேட்டாள் அவள்.
“எவ்ளோ ஃபீலாகி நான் டயலாக் சொல்லுறேன். நீயும் அதில் மூழ்கி லயித்து நின்னுட்டு பொசுக்குனு இப்படிக் கேட்டா என் நெஞ்சம் தாங்குமா?” நெஞ்சைத் தடவிக் கொண்டான் காளை.
அமைதியாக அவனை பார்த்தவளிடம், “ஏதாவது பேசு” என்றான்.
“ஒரு நிமிஷம் கூட சைலன்டா இருக்க மாட்டீங்களா? எப்போவும் இப்படி பேசிட்டே இருப்பீங்களா?” வியந்த பார்வை அவளிடம்.
“எஸ்! ஜாலியா பேசிட்டு இருக்கனும்ல? எனக்கு மௌனமே வேதம்னு இருக்குறது பிடிக்காது. பேசிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கனும். ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணிக்கனும் மனசு நோகுற அளவுக்கு எல்லாம் இல்லை ஜஸ்ட் ஃபன்.
முன்னெல்லாம் மித்து பேசவே மாட்டான் தெரியுமா? ஒரு வார்த்தை பேசவே அவ்வளவு யோசனை. இப்போ பாரு எப்படி நான்ஸ்டாப் பேச்சு. அதே மாதிரி நீயும் இனிமேல் பேச பழகிக்கனும்” என்றவனைக் கண்டு கண்களை அகல விரித்தாள்.
“பேசனுமா? எனக்கு பேசவே வராது பா. உங்க கிட்ட நான்ஸ்டாப் டால்கிங் பெக்கேஜ் ஏதாவது இருந்தால் எனக்கும் போட்டு விடுங்க பேசுறேன்”
“அப்படிலாம் தேவையில்லை. நான் சும்மா சொன்னேன். உனக்கு எவ்வளவு பேசனுமோ பேசு. எனக்காக ஒன்னும் மாறத் தேவையில்லை. உனக்கும் சேர்த்து நானே பேசிக்குறேன்” கட்டிலில் அமர்ந்தான் விஷ்வா.
“வழக்கமா பொண்ணுங்க தான் ஓயாம பேசுவாங்க. நீங்க என்னனா மறுதலையா இருக்கீங்க?” அவனது பேச்சில் ஒளிந்திருந்த அன்பு அவளுள் புது உணர்வைத் தோற்றுவித்தது.
“அப்போ என்னைப் பொண்ணுனு சொல்லுறியா?” கோபம் போல் கேட்டான் அவன்.
“ஹேய் இல்லைங்க. பொண்ணுங்களுக்குத் தான் ஊர்கதைகள் எல்லாம் இருக்கும் வாய் மூடாமல் பேசுவதற்கு. அதான் கேட்டேன்”
“பொண்ணுங்களுக்கு மட்டும் தான் பேச்சு வருமா? எங்களுக்கும் வரும். அதுக்குனு அடுத்தவன் கதைகளை எல்லாம் பேசி கழுத்தறுக்க மாட்டேன்”
“ஓஓ சரி சரி”
“இன்னிக்கு முழுக்க உட்கார மாட்டேன்னு வேண்டுதல் வெச்சிருக்கியா வைஷு?”
“இல்லையே. ஏன் கேட்குறீங்க? வேண்டுதல் வைக்கனுமா?” அவனிடம் பாவமாகக் கேட்டவளைக் கண்டு தலையிலடித்துக் கொண்டான்.
“அட மக்குப் பொண்ணே! நீ நின்னுக்கிட்டே இருக்கியே. அதனால கேட்டேன்” என்று அவள் தலையில் தட்ட,
“தலையில் மட்டும் தட்டாதீங்க. இன்னும் வளராம போயிருவேன்” என்றவாறு அவனருகில் அமர்ந்தாள் பெண்.
“இல்லைனா மட்டும் நெடு நெடுனு வளர்ந்துருவ பாரு. பொம்மைக் குட்டி”
“நான் அவ்வளவுக்கு ஒன்னும் குள்ளம் இல்லை. ஓரளவுக்கு வளர்ந்து தான் இருக்கேன்” உதட்டைச் சுளித்தாள், செவ்வந்திப் பூவானவள்.
“இங்கே வா. பார்த்தியா இந்த தும்புத் தடி உன்னை விட உயரமா இருக்கு” அருகில் இருந்த தும்புத்தடியுடன் அவளை நிற்க வைத்துக் காட்டினான்.
“என்னை ரொம்ப சீண்டிப் பார்க்காதீங்க. நிஜமாவே நான் அவ்ளோ குட்டையாவா இருக்கேன்?” என குனிந்து பார்த்தவளோ,
“டேய் திருட்டுப் பயலே! என்ன தைரியம் இருந்தால் தும்புத்தடியை உயர்த்திப் பிடிச்சு அதோட கம்பேர் பண்ணி என்னை டேமேஜ் பண்ணுவ?” அவனை மூக்கு விடைக்க முறைத்தாள்.
“ஹிஹி கண்டுட்டியா மை குட்டி பேபி” கள்ளச் சிரிப்பை சிந்தினான் விஷ்வா.
“குட்டி குட்டினு சொல்லாதீங்க” அவன் கையிலிருந்த தும்புத்தடியை எடுத்து அதைக் கொண்டு காலிற்கு அடித்தாள்.
“ஏய் அடிக்காதடி! படாத இடத்தில் பட்டுட்டா உனக்குத் தான் கஷ்டம்” என்று கூறியவனின் பேச்சில் கோபம் கொண்டு,
அவனைக் கட்டிலில் தள்ளி விட்டு, “ச்சீ! என்ன பேச்சு பேசுறீங்க. கருமம் கருமம் ” என அவனை தலையணையால் போட்டுத் தாக்கினாள்.
“ஹேய் என்னடி பண்ணுற? என்னைப் போட்டு அடிக்கிறாளே யாராவது வாங்க” என்று அவன் அலற,
“கத்தாதீங்க. யாராவது வந்துர போறாங்க” அவனது வாயைத் தன் கரத்தால் பொத்தினாள்.
தன் வாயில் வைத்த அவளது மலர்க் கையை நாவால் வருடினான் அக்குறும்புக் கண்ணன்.
“எச்சி பண்ணாதீங்க” கையை வெடுக்கென எடுத்து அவன் டிசர்ட்டில் துடைக்க, அவள் கையைப் பிடித்து அழுத்தமாக முத்தம் கொடுத்தான் ஜித்து.
இந்த முத்தம் அவனுடனான முதல் சந்திப்பை நினைவூட்ட, ரோஜா இதழ் விரித்து சிரித்தாள் வைஷ்ணவி.
“சிரிக்காத சிரிக்காத சிரிப்பாலே மயக்காதே!” அவள் சிரிப்பினில் தலை சாய்த்துத் தானும் புன்னகையோடு பாடினான் அவன்.
……………..
வான மேடையில் ஆடிக் களைத்த கதிரவன் உச்சி வானில் இளைப்பாற, ருத்ர தாண்டவமாடத் தயாராய் தன் வீட்டு நடு கூடத்தில் நின்றிருந்தான் ரோஹன்.
கண்களில் சிவப்பு நரம்புகள் இரத்தமாய் இழையோட, கழுத்து நரம்புகள் புடைக்க நின்றிருந்தவனின் அளவில்லாத கோபத்தைப் பறை சாற்றுவதாக “அம்மா….” என்று கத்திய கத்தலில் வீடே அதிர்ந்தது.
சற்று முன் கடையில் தங்கை துர்காவைச் சந்தித்த வேளையில் அவள் தாயின் செயல் பற்றிக் கூற, அவளை அழைத்துக் கொண்டு விருட்டென வீட்டுக்கு வந்து நின்றான் அவன்.
“வாடா ரோஹி! என்ன சாப்பிடுறே?” அன்புடன் கேட்ட தாயை விழிகளால் கொளுத்தினான் மைந்தன்.
“நான் ஒன்னும் உட்கார்ந்து விருந்து சாப்பிட வரலை. சில முக்கியமான கேள்விகளைக் கேட்க வந்தேன்” படமெடுக்கும் நாகமாய் மாறித் தான் சீறினான் அவன்.
“எதுவா இருந்தாலும் அப்பறமா ஆற அமர பேசலாமே. முதல்ல வந்து உட்கார்” மகனின் கோபம் உணர்ந்தாலும் சாதாரணமாக அழைத்தார் காமாட்சி.
“ப்ச்! அமர்ந்து பேசல்லாம் எனக்கு அவசியமில்லை. என் பூவை ஏன் வார்த்தைகளால் சித்திரவதை பண்ணுனீங்க?” நேரடியாக விடயத்தினுள் தொபுக்கடீர் என்று குதித்தான்.
“பூவா? அது யாரு?” பூர்ணியை மறந்தவராக வினா எழுப்பினார்.
“என் பொண்டாட்டி! பூர்ணியை சொன்னேன். பதில் சொல்லுங்க” அழுத்தமாக வந்தது வார்த்தை.
“அவளையா சொன்ன? அவளை பத்தி இப்போ யேன்டா பேசுற?” முகம் சுளித்துக் கொண்டார்.
“நான் பேசுவேன். அதற்கான எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. நீங்க எந்த உரிமையில் அவளை வதைக்குவீங்க?”
“அவளை பத்தி உனக்குத் தெரியாதுடா. என்னமா பேசுனாள் தெரியுமா? தப்பு பண்ணிட்டோம்னு குற்ற உணர்ச்சி துளி கூட இல்லாம வனியையே கை நீட்டி அடிச்சிட்டாள்”
“யாருக்கு குற்ற உணர்ச்சி இருக்கனும்? தப்பு பண்ண நீங்களே அதைக் குற்றமா உணராமல் இப்போ நெஞ்சை நிமிர்த்தி அவளை சாடும் போது, எந்தத் தப்புமே பண்ணாத என் பூவுக்கு எதுக்கு குற்ற உணர்ச்சி வரனும்?” கோபம் கொப்பளித்தது ரோஹனுக்கு.
“ஆமா அம்மா என்ன தப்பு பண்ணாங்க? எல்லாம் உன் மேனா மினுக்கி பொண்டாட்டி தான் பண்ணது” என்றவாறு வந்து நின்றாள் வனிதா.
“நான் பேசுறது அவங்க கூட. நீ இதில் வீணா தலையிட்டு என் கிட்ட வாங்கி கட்டிக்காத வனிதா” தங்கையின் புறம் அனல் தெறிக்கும் விழிகளை நிலைநாட்டினான்.
“நா…நான் என்ன தப்பு பண்ணுனேன்?” மகனைப் புரியாமல் பார்த்தார் காமாட்சி.
“என்ன பண்ணலனு கேளுங்க. காரணமே இல்லாமல் அவளை மித்து கூட சேர்த்து வெச்சு பேசினீங்க. வார்த்தைளால் கொன்னுட்டீங்க. பொறுக்க முடியாமல் போயிட்டா. இப்போ என் கூட மனசு மாறி வாழ வந்திருக்கா. இப்போவும் ஏன் தேடிப் போய் அவளை டாச்சர் பண்ணுறீங்க?
நீங்களும் ஒரு பொண்ணு தானே? இப்படிலாம் தப்பா பேச வாய் கூசல? பூ இல்லைனா என்னால சந்தோஷமா இருக்க முடியாதுனு உங்களுக்கே தெரியும். அப்படி இருந்தும் எதுக்காக இந்தளவுக்கு போறீங்கனு புரியல. உங்க பையன் சந்தோஷமா வாழ்வது பிடிக்கலையா?” கடுமையாக அவரைத் தாக்கியது அவனது கேள்வி.
“ரோஹி.. நீ சந்தோஷமா வாழனும். ஆனால் அவள் சரியில்லை” மெதுவாக காமாட்சி இழுக்க,
“அதெப்படி சரியில்லைனு சொல்லலாம்? அவளை பார்த்து கட்டி வெச்சுது நீங்க. தலையில் வெச்சுத் தாங்கினது நீங்க. இப்போ மட்டும் ஏன் சரியில்லாமல் போனா? உங்க செலெக்ஷன் சரியில்லையா? என் பூர்ணியைப் பார்க்குற விதம் சரியில்லலையா? இல்லை கொஞ்ச காலமா நீங்களே சரியில்லலையா?” சாட்டையடியாய் வினாக்களை அதிவீச்சில் சுழற்றினான் ரோஹன்.
தாயின் மீது அப்படி ஒரு வெறுப்பு வந்திருந்தது அவனுக்கு. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எப்படி இன்னொரு ஆணுடன் இணைத்து நடத்தை கெட்டவளாக எப்படி இன்னொரு பெண்ணின் மனதைக் காயப்படுத்த முடிகிறது என்று…?
“நீ பொண்டாட்டி பக்கம் சாஞ்சுட்டு ஓவரா ஆடுற ரோஹன்” வனிதா ரோஹனை சாடினாள்.
“நான் யார் பக்கமும் சாயலை. நியாயத்தின் பக்கம் நிக்கிறேன். உன்னை யாராவது அப்படி சொன்னால் தாங்கிக்க முடியுமா யோசிச்சு பாரு டி”
“ச்சும்மா அவளை சுத்தப்படுத்த நினைக்காத. மித்து பேபி மித்து பேபினு கூப்பிட்டுக்கிட்டு அவனோட எப்படி ஒட்டிக்கிட்டு திரிந்தாள். இப்போ ப்ரெக்னன்டா வேற இருக்காளாமே. அது யாரோட குழந்தையோ..?” நாக்கில் நரம்பில்லாமல் பேசிய மறு நொடி கன்னத்தைப் பொத்திக் கொண்டு கீழே விழுந்தாள்.
இரத்த நாளங்கள் கொதிக்க அவள் கன்னத்தில் ஆக்ரோஷமாய் அறைந்திருந்தான் ரோஹன்.
“இனி ஒரு வார்த்தை பேசினே தொலைச்சிருவேன் டி. அவள் என் பொண்டாட்டி! அது என் குழந்தை! இதை உன்ன மாதிரி கேவலமான ஜென்மங்க கிட்ட நிரூபிக்கனும்னு அவசியம் இல்லை” என்று தாயின் பக்கம் திரும்பி,
“அவள் இவ்வளவு அருவறுப்பா பேசினதை நீங்க அமைதியா கேட்டுட்டு இருந்தீங்கள்ள. இது தான் ஒரு மூத்த பொம்பளைக்கு அழகா? இப்போ சொல்லுறேன் இனிமேல் நான் இந்த ஜென்மத்தில் இந்த வீட்டு வாசல்படியைக் கூட மிதிக்க மாட்டேன். துர்கா மட்டும் தான் எனக்குனு இருக்கும் உறவு. அவளைத் தவிர உங்க யார் முகத்திலும் முழிக்க மாட்டான் இந்த ரோஹன்”
சிங்கமாகக் கர்ஜித்து விட்டு புயல் வேகத்தில் அவ்விடத்தை விட்டும் சென்றான் பூர்ணியின் கணவன்.
…………….
“எங்கே போனானோ தெரியல இவன்? எங்கேயாவது கூட்டிட்டு போறேனு சொல்லிட்டு இவ்ளோ லேட் பண்ணுறான்?” தன்னவன் வருகைக்காக புலம்பலுடன் காத்திருந்தாள் பூர்ணி.
அவனது பைக் சத்தம் கேட்டும் எழும்பாமல் இருக்க அவளுக்கு எதிரே இருந்த சோபாவில் தொப்பென அமர்ந்தான் ரோஹி.
இன்னும் அவன் மனம் ஆறவில்லை. தாயின் கோபமும் வனிதாவின் வார்த்தைகளும் அவனை சினம் கொள்ள வைத்தது.
“ச்சே! இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை கூசாமல் பேசிட்டாளே?” உள்ளம் உலைக்கலமாகக் கொதிக்க கை முஷ்டி இறுகியது.
தான் வாழ்ந்த வீட்டிற்கே வர மாட்டேன் என்று கூறியது ஒரு புறம் வருத்தமாக இருந்தாலும், தான் செய்தது சரி என்றே மனம் அடித்துரைத்தது.
என்ன இருந்தாலும் காமாட்சி தாய் அல்லவா? அவரோடு இருந்த உறவை முறித்துக் கொண்டு வந்து விட்டான். ஆனால் அவருக்கு ஒரு கடமையுள்ள மகனாக மாதா மாதம் கொடுக்கும் பணத்தை தவறாமல் துர்காவின் மூலம் அனுப்பி விட முடிவு செய்தான்.
வெகுநேரமாகியும் தன்னைச் சமாதானம் செய்யாது ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பவன் மேல் கோபம் பொங்கியெழ, “ரோஹன்” என அழைத்தாள் அவள்.
“சொல்லு பூ” அவளைப் பக்கவாட்டாக ஏறிட்டவனின் முகம் ஒரு வித சோர்வில் இருந்தது. அவளோ அதைக் கவனிக்கும் மனநிலையில் இல்லை.
“என்னை வெளில கூட்டிட்டுப் போறனு சொல்லிட்டு போனல்ல. இப்போ என்ன ஒன்னும் சொல்லாம இருக்க?”
“மறந்துட்டேன் பூ! நாளைக்கு போகலாம் டா”
“என்ன விளையாடுறியா ரோஹி? நான் ரெடியாகி இருகேன். போகலாமே” வெளியில் போக வேண்டுமென்ற ஆவல் அவளுக்கு.
“சொன்னா கேளு. என்னால வர முடியாது. இன்னொரு நாள் போகலாம்” எரிச்சலுடன் அவன்.
“ஓஓ சாருக்கு கோபம் வருதோ? வெளில கூட்டிட்டு போறேனு சொன்னது நீ. அப்படி சொல்லி என் மனசுல ஆசையை வர வெச்சுட்டு நீ முடியாதுனு சொல்லுற?” பிடிவாதமாக நிற்கலானாள் பூரி.
“முடியாதுன்னு சொல்லிட்டேன்ல. போய் தூங்கு” இன்று வெளியே செல்ல இருந்தவனின் மனநிலை அடியோடு மாறி இருந்தது அல்லவா? இப்போது அழைத்துச் சென்றாலும் கூட அவளை முழு மனதோடு சந்தோஷப்படுத்த முடியாது என்பதால் மறுத்தான்.
“உன் பழக்கமே இது தானே ஆசைய காட்டி ஏமாத்தி நட்ட நடுவில் அம்போனு விடுறது? ச்சே” அன்று அவனது வீட்டார் சந்தேகம் கொண்டு பேசிய போது அவன் அமைதியாக நின்றதை சுட்டிக் காட்டினாள்.
“எ…என்ன சொன்ன?” கலங்கிய விழிகளுடன் அவன் நிமிர, அப்பொழுதே அவளுக்குத் தான் சொன்ன விடயம் உறைத்தது.
“கூட்டிட்டு போக முடியாதுனா சொல்லி இருக்கவே கூடாது. எனக்கு ஒன்னு சொல்லிட்டு அதை பண்ணலனா பிடிக்காது” ஏமாற்றமாய் உணர்ந்தாள் அவள்.
தாய் மடி தேடி அலைந்தது பெண்ணவள் மனம். இந்த வீட்டுக்கு வந்த பிறகு எங்கும் சந்தோஷமாக வெளியில் செல்லவில்லை. வீட்டில் தனியாக இருக்க பிடிக்கவுமில்லை.
“என்னை குத்திக் காட்டிட்டல்ல? ஆனாலும் பரவாயில்லை பூர்ணி. எல்லாம் என் தப்பு தானே? உன் மேல சந்தேகப்பட்ட என்னால எந்த நியாயமும் கேட்க முடியாது. உன் கிட்ட கோபப்படவும் முடியாது” அவன் கண்களில் சிவப்பேற,
அவளுக்கோ ஒரு மாதிரியாகியது. அவளது பேச்சு அவனை காயப்படுத்தி விட்டது புரிந்தது. ஆயினும் சமாதானம் சொல்ல நா எழவும் இல்லை. மனம் வலித்தது.
“நீ பேசு பூ! உன் மனசுல இருக்கிறதைக் கொட்டு. உன் கவலை, ஆதங்கத்தை எல்லாம் பூட்டி வைக்காமல் திறந்து விடு. அப்போவாவது உன் மனசுக்கு ஆறுதலா இருக்கும்” அவளைப் பார்த்தவனின் குரல் தளர்ந்திருந்தது.
தாயின் செயல், வனிதாவின் பேச்சுடன் இப்போது மனைவியின் பேச்சும் அவனை வதைத்தது.
“போடா போ. என் கிட்ட பேசாதே” இயலாமையுடன் எழுந்து அறைக்குள் நுழைந்து கட்டிலில் விழுந்தாள்.
தலையணையை அணைத்துக் கொண்டவளின் கண்களில் உவர்நீர் ஆறாய் பெருகியது.
நட்பு தொடரும்……!!
ஷம்லா பஸ்லி💙