கிழக்கே பரந்த வானத்தின் ஓரத்தில், மெதுவாக பொன்னிறம் பரவி, இரவின் கருமையான போர்வையை அகற்றி ஒளியின் புது வண்ணங்கள் படரத் தொடங்கின.
பறவைகளின் இனிய கீச்சு அந்த அமைதியை நொறுக்காமல், அதற்கே உயிர் கொடுக்கும் மெலோடியாக கலந்து கொண்டது.
பனித்துளிகளால் நனைந்த பச்சை புல்லின் மேல் சூரியனின் முதல் ஒளிக்கதிர் விழுந்தபோது, அது வைரமாய் மினுக்கியது.
உலகமே ஒரு புதிய நம்பிக்கையோடு விழித்தெழுவது போலத் தோன்றியது.
ஆனால் மகிழ்மதி சுற்றுப்புறத்தில் நடக்கும் இயற்கை நடைமுறைகள் எதையும் அறியாமல், தான் சேமித்த புகைப்படங்களை மறுநாள் அதிகாலை அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தாள்.
அவளது கண்கள் சிவந்திருந்தன. இரவு முழுவதும் உறங்கவில்லை. ஒவ்வொரு புகைப்படமும் ஒரு புதிராக இருந்தது.
‘இந்தப் பெட்டிகளில் தான் அந்தப் பெண்களை மறைத்து வைத்திருக்கின்றார்களோ…! இதற்குப் பின்னால் இருக்கும் தலைவர் யாராயிருந்தாலும் அவனுக்கு என்கவுண்டர் தான்..” என்று மனதிற்குள் கருவிக்கொண்டாள்.
‘உடனே புறப்பட்டு அசிஸ்டன்ட் கமிஷனர் ரகுவரனிடம் சென்று இந்தப் புகைப்படங்கள் சம்பந்தமான முக்கிய விடயங்களை கூறி அதிரடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டும்..’ என்று எண்ணியவள்,
அடுத்த அரை மணி நேரத்திற்குள் அசிஸ்டன்ட் கமிஷனர் எஎஎெஎஒஎ முன்பு நின்றாள்.
ஆனால் அங்கு ரகுவரனைக் காணவில்லை. அவரின் கைப்பேசியும் அணைக்கப்பட்டிருந்தது.
‘இரவு தொலைபேசியில் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தையும் அவர் உடனே பார்த்திருக்கின்றார் ஆனால் அதனைப் பார்த்த பின்பு உடனே தனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு அல்லது ஒரு சிறு குறுஞ்செய்தியாவது அனுப்புவார்..’ என்று எண்ணியிருந்தவளுக்கு அந்த இடத்தில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
‘அவர் எங்கே போனார்?’ என்ற ஒரு அச்சம் அவளைத் துளைத்தது.
‘இப்போது என்ன செய்வது நேரம் செல்லச் செல்ல பெண்கள் கடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே இருக்கும் இன்னும் தாமதித்தால் பேராபத்தும், அவர்கள் மிகச் சுலபமாக தப்பித்தும் விடுவார்கள் இனி காத்திருக்க முடியாது நேரடியாக நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான்” என்ற முடிவை தீர்க்கமாக எடுத்தவள், அடுத்து போய் நின்றது அந்த தொழிற்சாலையின் முன்பு.
தொழிலாளிகளின் சீருடை போல் உடை அணிந்து, வி.எம். டிரேடர்ஸ் கட்டிடத்துக்குள் நுழைய முயன்றாள்.
ஆனால், அவள் நினைத்தது போல அது அவ்வளவு சுலபமான காரியமாக தெரியவில்லை.
கதவின் முன் அதிநவீன பாதுகாப்பு அமைப்பு இருந்தது. கழுத்தில் தொங்கும் அடையாள அட்டை இல்லாமல் உள்ளே செல்ல முடியாது.
அட்டையை இயந்திரத்தில் ஸ்கேன் செய்தால் மட்டுமே கதவு திறக்கும்.
“இவ்வளவு வலுவான பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது என்று நான் எதிர்பார்க்கவே இல்லை…” என்று அவள் உள்ளத்தில் சற்று நடுக்கம் பிறந்தது.
ஆனால் அதேசமயம், கண்களில் ஒரு தீ
‘எதுவாக இருந்தாலும், இன்றைக்கு இந்தச் சுவர்களை உடைத்து உள்ளே நுழைந்து என்ன நடக்கின்றது என்று கண்டுபிடித்தே ஆக வேண்டும் ஆனால் அந்த ID கார்டு இல்லாமல்… எப்படி?’ என்று தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினாள்.
அப்போது அவள் பார்வை அங்கு வரிசையாக நுழைந்து கொண்டிருந்த தொழிலாளிகளின் மீது நிலைத்து நின்றது.
ஒவ்வொருவரும் கழுத்தில் தொங்கியிருந்த அட்டையை இயந்திரத்தில் காட்டியதும், பீப் என்ற சத்தத்தோடு பச்சை விளக்கு ஒளி மின்னியது. கதவு மெதுவாகத் திறந்து, அவர்கள் உள்ளே சென்றனர்.
மகிழ்மதி மனதிற்குள் ஒரு திட்டம் தீட்டினாள்.
‘இங்கே யாரோ ஒருவரின் கார்டை நான் பெறவேண்டும் இல்லையெனில் உள்ளே செல்வது சாத்தியமில்லாததொன்று..’ என்று எண்ணியவள், அவள் சிறிது தொலைவில் நின்று அனைவரையும் கவனித்தாள்.
திடீரென ஒரு பெண் தொழிலாளி அட்டையைப் பையில் தேடிக்கொண்டே குழப்பமாக நின்றாள். அவள் அருகில் இருந்த ஒருவரிடம்,
“ஒரு நிமிஷம், எனது கார்டை காணல்ல..!” என்று பதட்டமாகக் கூறியதும் மகிழ்மதியின் காதில் அது நன்றாக விழுந்தது.
அந்த பெண் பையை அலசிக்கொண்டிருக்கும் போது, மகிழ்மதி தனது போலீஸ் பயிற்சியிலேயே கற்ற நுட்பத்தை பயன்படுத்த எண்ணினாள்.
யாருக்கும் தெரியாமல் கண்ணாடி போன்ற பிரதிபலிப்பில், அவளது அட்டையின் படம் தெளிவாகத் தெரிந்தது.
அந்த கணத்தில், தனது கைப்பேசியில் அந்த அட்டையின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டாள்.
அடுத்து, அருகில் உள்ள சிறிய பாதுகாப்பு அறையை கவனித்தாள். அங்கே அணுகல் சிஸ்டம் இணைக்கப்பட்டிருந்தது.
‘இதைக் குறைந்த நேரத்திற்காவது ஹாக் பண்ணினால், கார்டின் விவரங்களை நகலெடுக்கலாம்,” என்று மனதில் சில திட்டங்களை போட்டவள்,
அவளது ஜாக்கெட்டின் உள்ளே எப்போதும் வைத்திருக்கும் சிறிய மின்சார சாதனத்தை (மினி ஸ்கேனரை) எடுத்தாள்.
இரவுகளிலும் குற்றவாளிகளைப் பிடிக்க பயன்படுத்த உதவும் கருவி அது. சற்று வியர்வை வழிந்தாலும், அவள் அந்த கருவியை வாசலில் உள்ள இயந்திரத்தில் இணைத்தாள்.
சில வினாடிகளில், “அக்சஸ் கோட் கொப்பீட் சக்சஸ்ஃபுளி” என்று சாதனத்தில் ஒளிர்ந்தது.
மகிழ்மதிக்கோ பிடித்து வைத்திருந்த மூச்சு அப்போதுதான் நிதானமாக வெளி வந்தது போல இருந்தது. கார்டு போல உருவாக்கப்பட்ட அந்த சிப்-ஐ கழுத்தில் போட்டுக் கொண்டாள்.
பின் அவள் கதவின் முன் சென்று கார்டை ஸ்கேன் செய்தாள்.
பீப்! சத்தத்துடன் பச்சை விளக்கு எரிந்தது. கதவு மெதுவாகக் கிறுகிறுத்துத் திறந்தது.
கதவின் உள்ளே நுழையும் அந்த நொடியே மகிழ்மதியின் மார்பு துடிப்பு இரட்டிப்பு வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.
ஒரு குளிர்ந்த காற்று அவளது முகத்தைத் தழுவியது. வேகமாக அனைத்து ஊழியர்களும் இயங்கிக் கொண்டிருந்தனர்.
அதோடு அதற்கு ஏற்றார் போல் இயந்திரங்களும் இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருந்தன. இவை அனைத்தையும் பார்த்தவளது மனதில் ஒரே நேரத்தில் பயமும், விழிப்பும் அழையா விருந்தாளியாக ஒட்டிக்கொண்டன.
‘இனி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மரணத்துடனான சவால்..’ என்று அவள் மனதில் உறுதியாய் ஒலித்தது.
சிங்கத்தின் குகைக்குள் புகும் வீராங்கனையாய்த்தான் தன்னை எண்ணினாள். இந்த இடம் வெளியில் எவ்வளவு அமைதியாக இருந்தாலும், உள்ளே அது ஒரு உயிரை விழுங்க காத்திருக்கும் இருண்ட வலையோடு இருப்பது போல அவளுக்குத் தென்பட்டது.
ஒரு நொடிக்குக் கூட கவனம் சிதறினால், அவளை முழுவதுமாக விழுங்கிவிடும் மரணம் பக்கத்திலேயே காத்திருக்கிறது என்ற உணர்வு எலும்புக்குள் ஊறியது.
மிகுந்த பதட்டம் இருந்தாலும், அவளது உள்ளத்தின் குரல் மட்டும் தெளிவாகச் சொன்னது.
‘முன்னேறு மகிழ்மதி இங்கிருந்து பின் வாங்க முடியாது சவாலின் நடுவே நீயே சிங்கமாய் மாற வேண்டும் உயிரே போனாலும் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்..’ என்று கூறியபடி இதயத்தை இரும்பாக்கினாள்.
அருகில் இருந்த அடுத்த கதவுக்குள் நுழைந்தவுடன், அவள் கண்கள் அகன்றன.
உள்ளே ஒரு பெரிய உற்பத்தி ஹாலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சீருடை அணிந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இயந்திரங்களின் கொந்தளிக்கும் சத்தம், வியர்வையின் வாசம், மர்மமாய் அடைக்கப்பட்ட பெட்டிகள் இவை அனைத்தும் அவளது சந்தேகத்தை இன்னும் ஆழமாக்கின.
ஆனால், மகிழ்மதிக்கு தெரியாமல், மேல்தளத்தில் உள்ள CCTV கண்காணிப்பு அறையில், ஒரு குரல் சிரித்துக் கொண்டிருந்தது:
‘நான் வைத்த பொறியில் முயல் வசமா வந்து மாட்டிக்கிச்சு ஆனா பாவம் அந்த முயலுக்கு தெரியல இது தந்திரமான நரியோட குகையின்னு..’ என்று கூறி அந்தக் குரல் ஆரவாரத்துடன் சிரித்தது.
காயத்ரி சமையலறையில் தன்னுடைய அன்பைச் சுவையாக்கி கொண்டிருந்தாள்.
அடுப்பில் ஆவி எழுந்து நின்ற பாத்திரங்களில் நிவேதாவிற்கு பிடித்த கத்தரிக்காய் குழம்பின் மணமும், கார சுவையோடு மீன் வருவலின் நறுமணமும், நச்சுன்னு எரிந்து வரும் கோழி வத்தக் குழம்பின் மிளகு வாசனையும் கலந்துவிட்டு அந்தச் சிறிய சமையலறை முழுவதையும் உணவின் வாசனையால் நிரப்பி இருந்தது.
‘இவளுக்கு பிடித்த சாப்பாடு தான் செய்து வைத்திருக்கேன் பாப்போம் இம்முறை மகாராணி சாப்பிடும் போது முகத்தில் ஒரு சிறு புன்னகை மலர்ந்தாலே எனக்குப் போதும்,” என்று மனதிற்குள் நெகிழ்ந்து நினைத்துக் கொண்டவள், கரண்டியில் கத்தரிக்காய் குழம்பை எடுத்து சுவைக்க வாய்க்குள் கொண்டு சென்றாள்.
அந்த சுவையின் காரமும், புளிப்பும் நாக்கில் உரச,
“வாவ் காயத்ரி அப்படியே அறுசுவையும் நாக்கில் தாண்டவம் ஆடுது…” என்று மனம் விட்டு தன்னைத்தானே பாராட்டியவள், அடுத்த கறியை சுவைப்பதற்காக கரண்டியை எடுத்த அந்த நொடியே,
வாசலில் இருந்து ஒலித்தது.
“அம்மா… அம்மா…”
அந்த சத்தம் அவளது உடலிலிருக்கும் ஒவ்வொரு எலும்பையும் நடுங்கவைத்தது. அந்த குரலில் நிவேதாவின் உயிர் இருந்தது.
கரண்டி கையில் இருந்தபடியே தரையில் விழுந்தது. காயத்ரிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘நிவேதா ஏன் இப்படி கத்த வேண்டும்..? உங்களுக்கு ஏதாவது..’ என்று எண்ணியவர், அடுத்த கணம் “நிவேதா…” என்று உதடுகளில் வார்த்தை உதிர்ந்தவுடன், தன் வயதையும் உடல் நிலையையும் மறந்து, சமையலறையில் இருந்து ஓடிவந்தார்.
வாசலில் நின்ற காட்சியைப் பார்த்ததும் காயத்ரி அப்படியே அசைவற்றவராய் நின்றுவிட்டார்.
தலையில் பெரிய கட்டுடன், கண்களில் நீர்த்துளிகள் பட்டு மின்ன, “அம்மா!” என்று அழுதபடி ஓடி வந்து கட்டியணைத்தாள் நிவேதா.
காயத்ரியின் உள்ளம் இவ்வுலகமே நிறுத்தப்பட்டு விட்டது போல ஆனது. நிவேதாவின் உடல் வெப்பமும், அவளது அழுகையும், அந்த சத்தத்தின் துடிப்பும் எல்லாமே காயத்ரியின் இதயத்தை பிளந்தன.
‘நிவேதாவிற்கு என்ன நடந்தது தலையில் இந்தப் பெரிய காயத்துடனும், கட்டுடனும் எப்படி..? எங்கு…?’ என்று புரியாமல் அவளது மனம் வேதனையில் அலைபாய்ந்தது.
அந்த பெரிய கட்டு, காயம், அதிலிருந்து கசியும் வேதனை எல்லாம் வார்த்தையில்லாமல் தாய் மனதுக்கு ஆயிரம் துன்பங்களை வாரிக் கொடுத்தது.
காயத்ரி கண்ணீரை அடக்க முடியாமல், பற்களால் உதட்டை கடித்து தனது துன்பத்தை அடக்கி கொண்டு,
“என்னங்க… என்னங்க… சீக்கிரமா இங்க வாங்க… நம்ம நிவேதாவை பாருங்க… தலையில பெரிய கட்டோட வந்திருக்கா…” என்று குரல் குலுங்கக் கூவினார் காயத்ரி.
அப்போது எதெர்ச்சையாக காயத்ரியின் விழிகள் திடீரென வாசலின் பக்கம் மாறின. அங்கே ஒரு நிழல் அசைந்தது. அந்த நிழல் மெதுவாக உருவம் எடுத்து வீட்டின் உள்ளே நுழைந்தது.
அந்நேரம் காயத்ரி சொல்ல வந்த வார்த்தைகள் அந்த உருவத்தைக் கண்டதும் தொண்டையில் சிக்கிக் கொண்டன. அவளது உடல் முழுவதையும் அதிர்வலைகள் தாக்கியது போல் நின்றார்.
அந்த நொடியே காயத்ரியின் உள்ளத்தில் எழுந்த அனைத்து சத்தங்களும் அடங்கி ஒடுங்கிப் போயின. தன் இதயத்தின் துடிப்பின் முழக்கம், அனைத்தும் ஒரே கணத்தில் நிறுத்தப்பட்டதுபோல் ஆனது.
கண்ணீரோடு கலந்த சுவாசமாய் அவளது உணர்வுகள் மாறின. அவளது உதடுகள் திறந்தபடியே வார்த்தையில்லாமல் நின்றன.
கண்முன்னே நிற்கும் நம்ம உருவத்தைப் பார்த்ததும், அவளது உள்ளம் முழுவதும் அதிர்வலைகள் பாய்ந்து சென்றன.
நிவேதாவைத் தழுவிக் கொண்டிருந்த கைகளும் நடுங்கின. அந்த உருவத்தை நோக்கிப் பார்த்தவாறே உறைந்து போனார் காயத்ரி.