தொல்லை – 31
தன்னுடைய அறைக்குள் தனிமையில் இருந்த அஞ்சலியின் மனம் தவித்துக் கொண்டே இருந்தது.
மதியம் அவள் உணவைக் கூட உண்ணவில்லை.
அந்த அக்கா கூறிய வார்த்தைகள் அவளுடைய காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்து அவளைத் தவிக்கச் செய்தன.
என்னதான் கணவன் தெரியாமல் செய்திருப்பான் என்றாலும் அவளுடைய மென்மையான மனதால் அதை ஏற்க முடியவில்லை.
மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவள் அப்போதுதான் வெகு நேரமாக அறையின் மின் விளக்கைக் கூட ஒளிரச் செய்யாமல் தான் இப்படியே இருளில் அமர்ந்திருக்கிறோம் என்பது புரிந்து மெல்ல எழுந்தாள்.
வெகு நேரம் தரையில் அமர்ந்திருந்ததால் அவளுடைய கால்கள் விறைத்து விட்டன.
மெல்ல கால்களை உதறி பெருவிரலை நிலத்தில் தேய்த்து கொஞ்சம் கொஞ்சமாக அசைத்து கால்களின் விறைப்புத் தன்மையை நீக்க முயன்றவள் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டு அந்த அறையின் மின் விளக்குகளை ஒளிரச் செய்தாள்.
இருள் பாய்ந்த அந்த அறை முழுவதும் வெளிச்சம் பரவியது.
நேரமோ இரவு எட்டு மணியைக் காட்ட அப்போதுதான் கதிர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்பதே அவளுக்கு நினைவுக்கு வந்தது.
“என்ன ஆச்சுன்னு தெரியலையே… ஏன் இவ்வளவு லேட்..? அக்காவும் வரலையா..?” எனப் பதறியவள் வெளியே சென்று மதுராவின் அறையை எட்டிப் பார்த்தாள்.
அந்த அறையும் பூட்டிய நிலையில் இருளில் மூழ்கி இருந்தது.
உள்ளே சென்று அந்த அறைக்குள் மின் விளக்கை ஒளிரச் செய்தவளுக்கு தலை வலித்தது.
முகத்தைக் கழுவித் துடைத்துவிட்டு பூஜை அறையை நோக்கி நேராகச் சென்றாள் அஞ்சலி.
எப்போதும் மாலை நேரத்தில் விளக்கு வைத்து இறைவனை வழிபடுவது அவளுக்கு வழக்கம்.
இன்றைய நாள் அதைக் கூட மறந்துவிட்டோமே என தன்னை நொந்து கொண்டவள் இறைவனை மனதாரப் பிரார்த்தித்துவிட்டு அங்கிருந்த சிறிய விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றி வைத்தாள்.
“கடவுளே… எதுக்காக என்னோட வாழ்க்கைல இவ்வளவு பிரச்சனைன்னு எனக்கு இப்போ வரைக்கும் புரியல… ஆனா நான் உன்ன முழுசா நம்புறேன்… எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நீ என் கூடவே இருந்து என்ன கைவிட மாட்டேன்னு எனக்குத் தெரியும்… சீக்கிரமா மது அக்காவுக்கு புரிய வை… அவ மனசுல இருக்க இந்த கெட்ட எண்ணம் எல்லாம் அழிஞ்சு போயிரணும்… எல்லாருமே சந்தோஷமா இருக்கணும்…” என அவள் இறைவனை மனதாரப் பிரார்த்தித்துவிட்டு விழிகளைத் திறக்க அவள் ஏற்றி வைத்த தீபமோ நொடியில் அணைந்திருந்தது.
பதறிவிட்டாள் அவள்.
அவளுடைய கரங்கள் நடுங்கத் தொடங்கி விட்டன.
வேகமாக மீண்டும் அந்த விளக்கை ஏற்றி வைத்தவளுக்கு ஏதோ அபச குணமாக நடக்கப் போகின்றதோ என்ற பதற்றம் வந்துவிட்டிருந்தது.
பூஜை அறையை விட்டு வெளியே வந்தவள் தன்னுடைய அலைபேசியை எடுத்து கணவனின் எண்ணுக்கு அழைத்தாள்.
ரிங் போகவே இல்லை.
மீண்டும் முயன்று பார்த்தாள் அஞ்சலி.
“அவரோட போன் ஸ்விட்ச் ஆஃப்னு வருதே… என்ன ஆச்சுன்னு தெரியலையே…” எனப் பதறியவளுக்கு மீண்டும் விழிகளில் கண்ணீர் நிறையத் தொடங்கியிருந்தது.
மதுராவுக்கு எதுவும் தெரிந்திருக்குமோ என எண்ணியவள் அவளுடைய அலைபேசிக்கு அழைத்தாள்.
சற்று நேரத்தில் அந்த அழைப்பை ஏற்று “சொல்லு அஞ்சு…” என்றாள் மதுரா.
“அக்கா… நீ ஏன்க்கா இன்னும் வீட்டுக்கு வரல..? காலேஜ் எப்பவோ முடிஞ்சிருக்குமே… மாமாவும் இன்னும் வீட்டுக்கு வரலக்கா… கால் பண்ணா போன் ஆஃப்னு வருது… எனக்கு பயமா இருக்கு… உனக்கு மாமா பத்தி எதுவும் தெரியுமா..? அவர் காலேஜுக்கு வந்தாரா..?” என அஞ்சலி பதறினாள்.
“எதுக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகுற..? உன் புருஷன் என்கூடதான் இருக்காரு… வீட்டுக்குத்தான் வந்துகிட்டு இருக்கோம்…” என அலட்சியமாக பதில் கூறினாள் மதுரா.
அந்தப் பதிலில் அவளுடைய பதறித் துடித்த மனமோ சற்று நிம்மதி அடைந்தது.
ஆனால் அடுத்த நொடியே அந்த நிம்மதி தொலைந்து போக “உன் கூட இருக்காரா..? ஏன்..?” எனக் கேட்டாள் அஞ்சலி.
மதுராவுக்கு சிரிப்பு வந்தது.
இவளை சீண்டிப் பார்க்கலாமா என எண்ணியவள் “எனக்கும் அவருக்கும் இடைல ஆயிரம் இருக்கும்… உனக்கு என்ன..?” எனக் கேட்க சட்டென அவளுடைய ஃபோனை வேகமாகப் பறித்து எடுத்தான் கதிர்.
“அம்மு…” என்றான்.
“மா… மாமா…” எனத் தழுதழுத்தாள் அவள்.
அவளுடைய தழுதழுத்தக் குரலே அவள் அழுதிருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தி இருந்தது.
“கண்ணம்மா… இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுற..? எனக்கு சின்ன மீட்டிங் இருந்துச்சு… இப்பதான் முடிஞ்சுது… வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கேன்… இன்னும் அஞ்சு மினிட்ஸ்ல உன் முன்னாடி இருப்பேன்… சாரிடி… என் போன்ல சார்ஜ் இல்ல… அதனால தான் இன்ஃபார்ம் பண்ண முடியல… சாரி…” என்றான் அவன்.
“இல்ல மாமா… பரவாயில்ல…” என்றவளுக்கு தொண்டை அடைத்தது.
அதற்கு மேல் தன்னால் பேச முடியாது என்பதை உணர்ந்தவள் அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு சோபாவில் தொப்பென அமர்ந்தாள்.
ஏனோ மனம் பதறிக் கொண்டே இருந்தது.
அனைத்தும் அவளுடைய கட்டுப்பாட்டை மீறி நடப்பது போலவே தோன்றியது.
கதிரோ அஞ்சலி அழைப்பைத் துண்டித்து விட்டாள் என்பதை உணர்ந்து மதுராவின் கரத்தில் அந்த ஃபோனை வைத்தவன்,
“அஞ்சலி கூட சீண்டிப் பார்க்கிற வேலை வச்சுக்காத மதுரா… அதுக்கப்புறம் நீதான் கவலைப்படுவ…” என கோபமாக எச்சரித்தான்.
“சும்மா விளையாடவும் கூடாதா..? இப்ப எதுக்கு இவ்வளவு கோபப்படுற கதிர்..?” எனக் கேட்டாள் அவள்.
“எனக்கு அவளோட சந்தோஷம் முக்கியம்… பார்த்து நடந்துக்கோ…” என்றவன் சற்று நேரத்தில் தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.
வீட்டில் அஞ்சலி அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
கதிரும் மதுராவும் உள்ளே நுழைந்ததும் அவளுடைய மனம் அமைதி அடைய மறுத்தது.
கதிரின் முகத்தில் இருந்த தயக்கத்தையும் மதுராவின் முகத்தில் இருந்த திருப்தியையும் பார்த்தவள் உள்ளுக்குள் உடைந்து போனாள்.
அவளுடைய உள்ளுணர்வு எதுவோ சரியில்லை என்பதை உணர்த்தியது.
“மாமா… இவ்வளவு லேட் ஆயிடுச்சே… மீட்டிங் முடிய லேட் ஆயிருச்சா..?” எனக் கேட்டாள் அவள்.
“ம்ம்…” என்றான் கதிர்.
“நீ ஏன்க்கா லேட்..?” என மதுராவிடம் கேட்டாள் அஞ்சலி.
“காலேஜ்லதான் மீட்டிங் நடந்துச்சு அஞ்சலி… நானும் மாமா கூடதான் இருந்தேன்… மீட்டிங் முடிஞ்சதும் காபி ஷாப் போயிட்டு வந்தோம்… அதான் லேட்டாயிடுச்சு…” என்றாள் அவள்.
“காபி ஷாப் போனீங்களா..? என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல..?” என வெள்ளந்தியாக கேட்டவளைப் பார்த்து மதுராவுக்கே ஒரு மாதிரியாகிப் போனது.
‘என்ன சொன்னாலும் அப்படியே நம்புறாளே முட்டாள்..’ என அவளை மனதிற்குள் திட்டினாள் மதுரா.
“காபி ஷாப்தானே நாளைக்கு உன்னை கூட்டிட்டுப் போறேன்..” என்றான் கதிர்.
“ஓஹ்… சரி சரி… மாமா… நீங்க ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க… அக்கா நீயும் வா… நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…” என்றவளை அவனால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை.
“சரி அம்மு…” என்றான் கதிர்.
வந்ததிலிருந்து தன்னவன் தன் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை என்பதை உணர்ந்த அஞ்சலியின் இதயம் கனத்தது.
கதிரின் தடுமாற்றமும் மதுராவின் தைரியமும் அவளை மேலும் பயமுறுத்தின.
அன்றைய இரவு உணவை மதுரா தன்னுடைய அறைக்கே வரவழைத்து அங்கேயே தனிமையில் உண்டு முடித்தாள்.
ஏனோ கீழே சென்று அவர்களுடன் ஒன்றாக உணவருந்த அவளுக்குப் பிடிக்கவில்லை.
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க அவளுக்கு ஆயிரம் விடயங்கள் இருந்தன.
மதுரா வராததால் அஞ்சலியும் கதிரும் மட்டுமே உணவு மேசையில் அமர்ந்திருந்தனர்.
கதிருக்கு உணவைப் பரிமாறிவிட்டு அவளோ உணவை உண்ண முடியாமல் பாதியிலேயே கைகளைக் கழுவிவிட்டு எழுந்துவிட அவளை அழைத்து தன்னருகே அமர்த்தியவன்,
“சாப்பிடு அம்மு…” என்றான்.
“வேணாம் மாமா… பசிக்கல…” என்றாள்.
“அது அப்படி பசிக்காம போகும்..? லஞ்ச் எப்ப சாப்பிட்ட..?” எனக் கேட்டான் அவன்.
“லஞ்ச் சாப்பிடல மாமா…” என்றாள் அவள் மெல்லிய குரலில்.
“ஏய்… என்னடி ஆச்சு உனக்கு..? மதியமும் சாப்பிடல… இப்பவும் ஒழுங்கா சாப்பிடல… என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..?”
“இ.. இல்ல மாமா… பசிக்கல…” என்றாள் உணர்வற்ற குரலில்.
அவனோ அவளை அழுத்தமாகப் பார்த்துவிட்டு தன் தட்டில் இருந்த உணவைப் பிசைந்து அவளுக்கு ஊட்டத் தொடங்க மறுக்காமல் அவன் கொடுத்த உணவை உண்டாள் அஞ்சலி.
அதன் பின்னர் பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு மீண்டும் அஞ்சலி அறைக்குள் நுழைந்தபோது அவளுக்காகக் காத்திருந்தான் கதிர்.
“இங்க வா அம்மு…” என அவன் கைகளை விரிக்க மெல்ல அவனை நெருங்கிச் சென்றவளுக்கு விழிகள் கலங்கி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
“என்னடி..?” எனப் பதறிப்போய் கேட்டான் அவன்.
“இன்னைக்கு காலைல நீங்க அக்காவை ஹக் பண்ணீங்களா மாமா..?” என அவள் தன் மனதிற்குள் உறுத்திய கேள்வியை அவனிடம் கேட்டுவிட ஒரு கணம் அதிர்ந்தவன் பின் “ஆம்…” என்றான்.
“நான் ரூம்ல இருந்து கீழ வந்தப்போ அங்க நின்னது நீன்னு நினைச்சேன் அம்மு… சத்தியமா அது நீன்னு நெனச்சுத்தான் அவளை ஹக் பண்ணிட்டேன்… தப்பா எடுத்துக்காத… அவ உன்ன மாதிரி சுடிதார் போட்டதால கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்டி… சாரி…” என்றான் அவன்.
“ஓஹ்..?” என்றாள் அவள்.
“என்னடி என் மேல நம்பிக்கை இல்லையா..?” எனக் கேட்டான் அவன்.
மெல்ல அவனுடைய மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் அவள்.
“இந்தக் குட்டி… மண்டைக்குள்ள இப்போ என்ன ஓடிக்கிட்டு இருக்கு..?” என அவளுடைய தலையைத் தொட்டு வருடியவாறு கேட்க மறுப்பாக தலையசைத்தவள்,
“இன்னைக்கு பூஜை ரூம்ல விளக்கு வச்சு கும்பிடும் போது திடீர்னு விளக்கு அணைஞ்சிருச்சு மாமா… எனக்கு என்னமோ சரியா படல… பயமா இருக்கு… நம்ம வாழ்க்கைல ஏதாவது பிரச்சனை வந்துருமா மாமா..?” என அவள் விழிகளில் கண்ணீரோடு அவனைப் பார்த்துக் கேட்க,
அவளுடைய கன்னங்களைக் காதலோடு தாங்கிக் கொண்டவன் “ஏய் பைத்தியம்… காத்து ஓவரா வீசி இருக்கும்… அதனால விளக்கு அணைஞ்சிருக்கும்… இதுக்கெல்லாம் பயப்படுவியா..? நமக்கு இடைல அப்படி என்ன பிரச்சனை வந்துடப் போகுது..? நீ எதை நினைச்சும் பயப்படாத… நான் இருக்கேன்… எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன் அம்மு…” என்றவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
சிறு விம்மலோடு அவனுடைய மார்புக் கூட்டினுள் இன்னும் புதைந்தாள் அவள்.
அவளுடைய உச்சியில் தன் தடித்த உதடுகளைப் புதைத்தான் கதிர் வேலன்.
அவனுடைய இறுக்கமான அணைப்பிலும் முத்தத்திலும் அவளுடைய மனச் சஞ்சலங்கள் கரைந்தன.
“என்னோட உலகமே நீங்கதான் மாமா.. நீங்க எப்பவும் என்கூடவே இருக்கணும்..” என்றவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டவன் அவளை படுக்கையில் கிடத்தி அவள் மீது படர்ந்தான்.
“லவ் யூ டி அம்மு..” என்றவன் அதன் பின்னர் அவளைப் பேசவிடவில்லை.
💜💜
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்