தேன் 32
மகிழ்மதி நிழலின் பின்னால் சுருண்டு நின்றவாறே தன் கைப்பேசியை மெதுவாக உயர்த்தியபடி ஒவ்வொரு நொடியும் அவள் கைகள் சற்று நடுங்கினாலும், அவளது கண்கள் இரும்புபோல கூர்மையுடன் அங்குள்ள ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்துக் கொண்டிருந்தது.
அவள் முன் விரிந்திருந்த காட்சி மனிதர்களின் வேலை அல்ல, இயந்திரங்களின் பேரரங்கம் போலவே இருந்தது.
சீருடையணிந்த ஆண்கள், பெண்கள் அதிக எண்ணிக்கைக்கு மேல் இருந்தாலும், அவர்கள் மனிதர்கள் என்பதை மறக்கச் செய்யும் விதத்தில் இயங்கிக் கொண்டிருந்தனர்.
ஒருவரின் கையில் பெட்டி, இன்னொருவரின் கையில் கருவி, அடுத்தவனின் கண்களில் வேகம் என்றவாறு எல்லோரும் ஒரே தாளத்தில் அடித்துக் கொண்டிருக்கும் தப்பாட்டம் போல அசைந்து கொண்டிருந்தனர்.
சிறு சிரிப்பு, நட்பு உரையாடல், சலிப்பு எதுவும் அவர்களின் வதனத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அவர்கள் முகங்கள் கல்லாக உறைந்தது போல, ஒரே மாதிரி இருந்தனர்.
‘இவர்கள் மனிதர்களா… இல்லையேல் நன்றாக வடிவமைக்கப்பட்ட ரோபோக்களா?’ என்று அவளது மனம் புலம்பியது.
இயந்திரங்களின் கர்ஜனைச் சத்தம் இடம் முழுவதையும் குலுக்க, மின்விளக்குகள் சுவரில் நடனமாட, அந்த இடம் ஒரு உயிரில்லாத தொழிற்சாலையைவிட, உயிருள்ள ஒரு மிருகத்தைப் போலத் தோன்றியது.
அதில் ஒவ்வொரு சக்கரமும் சுழன்றவாறு, ஒவ்வொரு பட்டன் ஒளிர்ந்தவாறு, இடைவிடாமல் மூச்சுவிடும் ஒரு பெரும் இரைச்சல் கொண்ட நரகம்.
அதன் நடுவே நான்கு பெரிய அறைகள் மற்றும் 5 மேல் தளங்கள் சற்றே இருண்டும், சற்றே மர்மமாகவும். ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு வடிவில் சீராக அடுக்கப்பட்டிருந்த பெட்டிகள்.
அந்த பெட்டிகள் வெறும் பொருளா? இல்லையேல் புலனாய்வு செய்ய வேண்டிய முக்கியமான சான்றுகளா? என அதைக் கண்டறிய அவளது உள்ளம் பரபரத்தது.
ஆனால், அவள் எவ்வாறு அந்த அறைக்குள் புகுந்து அறிய முடியும்? யாரை அணுக வேண்டும்? எங்கு தொடங்க வேண்டும்? அந்தக் கேள்விகளின் சுழல் அவளை விழுங்கப்போகும் போது திடீரென முழு இடமும் ஒரு கணத்தில் இருள் சூழ்ந்தது.
காதை பிளந்து சத்தமிட்டுக் கொண்டிருந்த இயந்திரங்கள் அனைத்தும் ஒற்றுமையாக உயிர் இழந்தது போல சத்தமின்றி நின்றன.
அமைதி.
மூச்சுக் காற்றே சத்தமாகக் கேட்கும் அளவுக்கு கொடூரமான அமைதி.
அந்த அமைதியைக் கண்டவுடன் மகிழ்மதியின் இதயம் தடம் மாறிப் துடித்தது. கைப்பேசி கூட நடுங்குவது போல அவள் உணர்ந்தாள்.
அந்த நேரத்தில் அவளது தோளில் யாரோ மெதுவாகத் தொட்டதும், பின்புறம் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு முன்பே, அவளது உடம்பே பனி பூசியது போல உறைந்தது.
அவளது மூச்சு நின்றது.கண்ணுக்குள் இருட்டு பரவி,
‘அச்சோ மாட்டிக்கிட்டேனா…?’ அவளது தோளில் பட்ட தொடுதல் அவளை நடுங்க வைத்தது. இருந்தும் தற்காப்புக்காக ஸ்கேர்ட் பாக்கெட்டுகுள் கன்னை அழுத்திப் பிடித்தபடி மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கு நின்றிருந்தது ஒரு வயதான பெண்மணி.
சாம்பல் நிறத்துக்கு மாறிய தலைமுடியைச் சீராகச் சுற்றி முடித்திருந்தாள். முகத்தில் எளிமை இருந்தாலும், கண்களில் அடங்கியிருந்தது சொல்ல முடியாத ஒரு சோர்வும், கவலையும் அவளது வதனத்தில் கண்ணாடி போன்று தெரிந்தது.
மகிழ்மதி அந்த கணத்தில் தன்னுடைய அதிர்ச்சியை மறைத்து, மெதுவாக சிரித்துக் கொண்டவள்,
“ஆ… நான் புதுசா வேலைக்கு வந்தவங்க… கொஞ்சம் குழப்பமா இருக்கு யாரையும் சரியாகத் தெரியல நீங்க இங்கேயே வேலை பார்த்துட்டு இருக்கீங்க?”
அந்த வயதான பெண் மகிழ்மதியின் பேச்சைக் கேட்டு சிறிது தடுமாறியவள் போல இருந்தாலும், தலையசைத்தாள்.
“ஆமா… என் பேரு ராதா. பல வருடமா இங்கே தான் வேலை பார்க்கிறேன்..”
அவளது குரலில் ஒரு களைப்பு கலந்தது. “பல வருடம்” என்ற அந்த வார்த்தை, மகிழ்மதிக்கு ஒரு சாவி போலத் தோன்றியது.
“ஆஹா, அது வந்து அப்படின்னா எல்லாமே உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும் இந்த இயந்திரங்கள், அந்த அறைகள்… எல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கே நான் பார்த்தவுடனே கொஞ்சம் பயந்துட்டேன் இதெல்லாம் என்ன தயாரிப்பு..?”
அவளது கேள்விகளைக் கேட்டவுடனேயே ராதா மகிழ்மதியின் கண்களைத் தவிர்த்தாள்.
சில நொடிகள் அமைதியாக நின்றாள்.
அவளது விரல்கள் தன்னிச்சையாக பிசைந்து கொண்டன, அது அவளது உள்ளத்தில் பதுங்கியிருக்கும் அச்சத்தை வெளிப்படுத்தியது.
“அது… அது… இங்க வருபவர்கள் யாருமே… அதிகம் கேக்க மாட்டாங்க… எல்லாரும் வேலை மட்டும் பண்ணிக்கிட்டுப் போயிடுவாங்க…”
மகிழ்மதி மெல்லிய குரலில், ராதாவை நெருங்கி,
“ஆனா… நீங்க பல வருடமா இங்கே இருக்கீங்கன்னு சொன்னீங்க உங்களுக்கு தெரியும்… இல்லையா? சொல்லுங்க ராதா அம்மா, இங்க என்ன நடக்குது..?”
அவளது வார்த்தைகள் ராதாவின் இதயத்தை நேராகத் தொட்டன.
ராதா அச்சத்தோடு சுற்றிலும் பார்த்தாள்.
சுவர் கூட காதைக் கொடுத்து கேட்கிறதோ என்று நினைத்தாற்போல் அவள் கண்களில் பயம்.
ராதா சற்றே நடுங்கும் குரலில்
“நான்.. எதுவும் சொல்லக் கூடாது… சொல்லக்கூடாது… கேள்வி கேட்கக் கூடாது… அதுதான் இங்க உள்ள சட்டம்…”
அந்த சொல்லின் நடுக்கத்திலேயே மகிழ்மதி நன்கு உணர்ந்தாள். ராதா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று,
ராதாவுக்கு தெரியும், ஆனால் அவள் சொல்வது உயிருக்கு ஆபத்து என்ற பயத்தில் திணறுகிறாள்.
மகிழ்மதி அவளை சமாதானப்படுத்த எண்ணம் கொண்டு,
“சரி, சரி… நான் யாரிடமும் சொல்லமாட்டேன் உங்க மனசுக்குள் சுமையா இருக்குறதை கொஞ்சமாவது சொல்லுங்க உங்களுக்கு ஓரளவு மனசு லேசாக இருக்கும்…”
ராதா அவளை ஒருமுறை பார்த்தாள். அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன.
‘நான் பேசினால், நீயும் ஆபத்தில் விழுவாய்…’ என்று அவளது கண்கள் மௌனமாகக் கூவியது.
ராதா முகத்தில் எதையோ சொல்வது போல அசைவு தோன்றியது.
அவள் உதடுகள் திறந்தும், மூடியும் சரியான முடிவு எடுக்க முடியாமல் வார்த்தைகள் வெளியே வரவில்லை.
கண் முன்னால் நிற்கும் மகிழ்மதியைப் பார்த்தவுடன், மூஞ்சில் அடித்தது போல ஒருவித வலி, போராட்டம், திணறல் எல்லாம் ஒரே நேரத்தில் பளிச்சென அவளது முகத்தில் தெரிந்தது.
ராதா நடுங்கிய குரலில்,
“நான்… பேசக்கூடாது… பேசக் கூடாது… உன்னால என்னோட நிலைமையை புரிஞ்சுக்க முடியாது பிள்ளை… இதெல்லாம்… உனக்கு ஆபத்து… வேணாம் தயவு செய்து என்னை விட்டிரு..”
அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ரகசியத்தின் சாவியை வைத்திருந்தாலும், அவை கதவைத் திறக்க முடியாமல் பூட்டின் மேல் அடிபட்ட சாவி போலத் திணறின.
மகிழ்மதி அந்தக் கணத்தில் ராதாவின் கண்களை நேராகப் பார்த்தாள்.
மகிழ்மதியின் மனம் மிகவும் சோர்ந்து போனது. அவளுக்கு கிடைத்த இந்த ஒரு துருப்புச் சீட்டும் பயனில்லை என்ற எண்ணம் மனதளவில் அவளை மிகவும் பாதித்தது.
அதனால் மகிழ்மதியின் கண்கள் சற்றே ஈரமாகவும், சற்றே கண்ணீர் வழியப்போவது போலவும் மிளிர்ந்தது.
அந்த சின்னக் கலக்கம் கூட ராதாவுக்குப் பொறுக்க முடியாமல் போனது.
ராதா மனக்குழப்பத்தோடு,
“பாரம்மா… நான் சொல்வது உனக்கு ஆபத்துதான்… நான் இங்கு நடக்கும் ஆபத்தான விஷயங்கள் பற்றி பேசினால்… உன் உயிரே ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் புரிந்து கொள்ளு…”
அந்த வார்த்தைகள் கேட்டு மகிழ்மதி ஒரு முடிவை எடுத்து விட்டாள்.
இவ்வளவு நேரம் முகத்திரை பின்னால் மறைத்திருந்த தனது உண்மையை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.
அவள் ராதாவின் கையை மெதுவாகப் பிடித்தாள்.
உண்மையால் நிரம்பிய குரலில், திடமாக,
“ராதா அம்மா… நான் சாதாரணவள் இல்ல நான் போலீஸ் அதிகாரி இங்க நடக்கும் குற்றங்களை கண்டுபிடிக்க வந்திருக்கேன் நீங்க எதையும் சொல்ல பயப்பட வேண்டாம் உங்க உயிருக்கும், உங்க குடும்பத்துக்கும் எந்த ஆபத்தும் நான் வர விட மாட்டேன் என்னை நம்புங்க…
இங்கு நடக்கிற கொடூரங்களையும், அநியாயங்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும்னா நீங்க வாய் திறந்தா மட்டும் தான் முடியும் இனி உங்களுடைய முடிவு… உங்க கையில தான் இந்த குற்றங்களின் முடிவு இருக்கு.”
அந்த வார்த்தைகள் ராதாவின் இதயத்தில் ஒரு சிறு நம்பிக்கை தீப்பொறியை எரியச் செய்தது.
ஆனால் அதே நேரத்தில்,
“டட்-டட்-டட்!” என்று
இயந்திரங்கள் மீண்டும் உயிர் பெற்று, ஒரே நேரத்தில் சத்தம் எழுப்பின.
மின்சாரம் பாய்ந்தது போல, இடம் முழுவதும் கூவல் சத்தம் நிறைந்தது.
சக்கரங்கள் சுழன்றன. விளக்குகள் ஒளிர்ந்தன. அந்த திடீர் சத்தம் இருவரையும் உறைய வைத்தது.
ராதா பதறி மகிழ்மதியின் கையைத் திடீரென இழுத்து விட்டாள்.
அவளது முகம் ‘இப்போ பேசுவதற்கான தருணம் இதுவல்ல..’ என்று சொல்லிக் கொண்டிருந்தது.
ஒரு கணம் கூட அங்கு நிற்காமல், கூட்டத்தோடு கலந்துச் செல்லும் தொழிலாளியைப் போல வேகமாக மறைந்து போனாள்.
மகிழ்மதி அங்கே நிற்க, அந்த சத்தத்துக்குள் ராதாவின் நிழல் மட்டும் கரைந்துச் சென்றது.
அவளது மனதில் ஒரு கேள்வி மட்டும் எதிரொலித்தது.
‘ராதா என்ன சொல்ல வர்றாங்க? அந்த ரகசியம் என்ன?’