வாடி ராசாத்தி – 33
“அம்மா!”
பெட்டில் இருந்து கீழே விழுந்தவளை தூக்க ஓடி வந்தான் கேபி.
“என்னை அறைவியா நீ? நான் இப்போவே எங்க அம்மா வீட்டுக்கு போறேன்!”
“ஹஹாஹ, பகல் கனவா? பலிக்காதுடி சில்மிஷம்! வாழ்நாள் எல்லாம் என்கூட தான்! உன்னை போய் நான் அறைவேணா? வாய்ப்பில்லை, வேணா அணைச்சுகிறேன்” என்றவன் அவளை அணைத்து கொண்டான்.
சே! கனவா? ஆனால் இதென்ன வினோதமான கனவு?
கனவின் தாக்கத்தில் இருந்து வெளி வராதவளை, பரவாயில்லை “கனவிலயாவது உன்னை அடிக்கிறேன்!” என்றான் கேபி சிரித்துக் கொண்டே.
“ஒ! உனக்கு என்னை அடிக்கணும்னு எல்லாம் ஆசை இருக்கா?”
“அடிக்கிற கை தான் அணைக்கும்! அப்போ அணைக்கிற கை அடிக்க கூடாதா?”
“இது எனக்கும் பொருந்தும்!” என்றாள் முறைப்புடன்.
“சரி, அடிக்கிறது பத்தி அப்பறம் பார்போம், இப்போ அணைச்சுக்கோ என்னை” என்றான்.
@@@@@@@
மறுநாள் காலை, அம்மு தோட்டத்தில் பூ பறித்து கொண்டு இருக்கும் போது, அவளிடம் வந்தார் முருகர்.
அக்கம் பக்கம் யாரும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு,
“அம்மாடி, நான் ஒன்னு சொல்லுவேன், ஏன் எதுக்குனு கேட்காம, சொல்றதை மட்டும் செய்டா மா…. ப்ளீஸ் எனக்காக”
“சொல்லுங்க மாமா”
“உங்க அத்தை, எதாவது கஷாயம் மாதிரி கொடுத்தா, குடிக்காத” என்றார்.
திடுக்கிட்டு போனாள் அம்மு! இதே தானே கனவில் வந்தது! இவர் ஏன் என்று கேட்க கூடாது சொல்றாரே….
அவளின் திடுக்கிட்ட முகத்தை பார்த்து, “குடிச்சிட்டியா?” என்றவர், மனதினில் நான் கவனமா தானே இருந்தேன் என்று நினைத்துக் கொண்டார்.
“இல்லை இல்லை மாமா. இன்னும் கொடுக்கலை. ஆனா நான் குடிக்கலைனா அத்தை எப்படி வேணா, எனக்கு தெரியாம எதிலயாவது கலந்து கூட எனக்கு கொடுக்க வாய்ப்பு இருக்கே….? என்றாள்.
“இல்லை இல்லை, அது வித்தியாசமா டேஸ்ட் தெரிஞ்சுடும்.” கவலைப்படாதே! என்றார்.
அதற்கு மேல் அவள் எந்த கேள்வியும் கேட்க கூடாது என்பது போல் ஓடிவிட்டார் முருகர்.
முன் மதிய பொழுது, அம்மு ஏதோ வேலையாக இருந்தாள், அவளை தேடி அவர்கள் அறைக்கே வந்தார் ஜெயந்தி. அவர் கண்கள் வேகமாக அறையில் அம்முவிற்கென ஏதும் மாற்றம் இருக்கிறதா என்று அலசியது.
“என்ன அத்தையம்மா, என்ன வேணும்?”
அவரிடம் தான் எந்த தயக்கமும் இருக்காதே! அதனால் நேரடியாக,
“உனக்கு எப்போ இந்த மாசம் தீட்டு வரும்?”
“ஏன் கேட்கிறீங்க?”
“நீ பாட்டுக்கு வீட்டுக்குள்ள உலா வந்தா, என் சுத்தம் என்ன ஆகிறது? அதுக்கு தான்!”
“அதெல்லாம் நான் ஜாக்கிரதையா இருப்பேன்!” பிடிவாதமாக தேதியை சொல்லாமல் இருந்தாள் அம்மு.
“தலைக்கு குளிச்சா, என்கிட்ட சொல்லணும் நீ! புரியுதா?”
“நான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிப்பேன்! கண்டிப்பா சொல்றேன்” என்றாள் அம்மு.
“சொல்லமாட்டியோ, டெய்லி தனியா நீ விளக்கேத்தி சாமி கும்பிடுவே தானே, நானே கண்டுபிடிக்கிறேன்….” என்றார்.
கடகடவென்று கீழே இறங்கி சென்றவள், அம்ரிதவல்லியின் இரண்டு குத்துவிளக்கு, அவளின் இஷ்ட தெய்வமான முருகன் படம் அவள் கொண்டு வந்தது, இரண்டையும் மட்டும் அறைக்குள் கொண்டு வந்து வைத்து கொண்டாள்.
“என்ன திமிர்? மரியாதையும் இல்லை….”
“இதில ஒன்னும் திமிர் இல்லை! இதெல்லாம் நீங்க வேற மாதிரி கேட்டு இருந்தா நான் சொல்லி இருப்பேன், உங்களுக்கு என்ன அவ்ளோ நக்கல் என் கிட்ட பேசும் போது, இந்த மாதிரி எல்லாம் பேசினா நான் பொறுமையா இருக்கணும்னு அவசியம் இல்லை! மரியாதை கொடுத்தா மரியாதை கிடைக்கும்!”
“உன் திமிரை அடக்கிறேன் பாரு” என்று சவால் விட்டபடி சென்றார் ஜெயந்தி.
அவர் முன்பு, கெத்தாக பேசினாலும், அவர் சென்றதும் மனம் மிகவும் அழைப்பாய்ந்தது அவளுக்கு. மனம் பாரமாகி கூட விட்டது! இதென்ன வாழ போற வீட்டில், நிம்மதி இல்லை என்றால் எப்படி?
கேபியிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை அம்மு. அவள் பொறுமையை மேலும் சோதித்தார் ஜெயந்தி.
மறுநாள் காலை இவள் கீழே இறங்கியதும் இவர்கள் அறையை சுத்தம் செய்ய ஆள் அனுப்பினார் ஜெயந்தி. ஏதோ நெருட அம்மு சில நிமிஷங்களில் அறைக்கு சென்றாள். அறையை கூட்டி சுத்தம் செய்ய வந்த பெண்மணி, பாத்ரூமினுள் செல்ல பார்க்க,
“அங்க என்ன வேலை உங்களுக்கு? அது வாரம் வாரம் வர தியாகு தானே சுத்தம் செய்வார்?” என்றாள். யதார்த்தமாக. அப்போது கூட அவளுக்கு ஜெயந்தி மீது சந்தேகம் வரவில்லை. ஆனால் அந்த பெண்மணி அம்முவை அங்கே எதிர்பார்க்காததால் திருட்டு முழி முழிக்க, ஏதோ சரியில்லை என்று,
“என் வீட்டுக்காரர் கிட்டே சொல்லணுமா?” என்றாள் அம்மு கடினமான குரலில்.
பயந்து போன அந்த பெண்மணி, “ஐயோ தம்பிக்கு இந்த விஷயம் மட்டும் தெரியவே கூடாதுனு பெரியம்மா சொல்லி தான் அனுப்பினாங்க மா! மன்னிச்சுடுங்க மா, பெரியம்மா கிட்ட கேட்காதீங்க மா, நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன்….” என்றவர்,
“உங்க ரூமில நீங்க வீட்டுக்கு தூரம்னா அந்த பஞ்சு பாக்கெட் வைச்சு இருப்பீங்கள்ள, அது எதுவும் குப்பை தொட்டியில் இருக்கா? இல்லை கவர் இருக்கா? அதை பிரிச்சு இருந்தா டெய்லி எண்ணி பாரு, குறைஞ்சா என்கிட்ட வந்து சொல்லுனு சொன்னாங்க மா…. எனக்கு இந்த வேலை வேணும் மா….” அம்முவின் காலில் விழுந்தார் அந்த பெண்மணி.
ஜெயந்தியின் கேவலமான செயலில் சீ என்றானது அம்முவிற்கு.
@@@@@@@@@@@
இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களால் மனம் ஒரு நிலையில் இல்லாததால் அம்மா வீட்டிற்கு செல்லலாம் என்று கிளம்பி விட்டாள். கிளம்பியவள், கேபிக்கு வெறும் மெசேஜ் மட்டும் தட்டி விட்டாள்.
வீட்டிற்கு வந்தவளின் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று கணித்தார் வாசுகி.
“என்னடா எதை போட்டு குழப்பிக்கிற?” வாசுகிக்கு முன்பாக பாட்டியே அம்முவை கேட்டார்.
பாட்டி கேட்டதும், உண்மை அனைத்தையும் சொன்னால் இருவரும் வருத்தப்படுவார்கள் என்பதால், இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம், தேவைப்பட்டால் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து,
“அந்த அம்மா ஜெயந்திக்கு என் பீரியட்ஸ் தேதி தெரியணுமாம்! அதை நல்லவிதமா கேட்டா கூட சொல்லி இருப்பேன்….ரொம்ப அதிகாரமா கேட்டாங்களா, நான் சொல்லவே இல்லை …. ”
“ஓ, தனியா இருக்க சொல்வா போல்….” இழுத்தார் பாட்டி.
“அப்படி எல்லாம் சொன்னா, நான் என் ரூமிலே இருந்துக்கிறேன் சொல்லிடுவேன் ….”
“நீ வேணா இங்க கிளம்பி வந்துடு….!” வாசுகி கூறினார்.
“எத்தனை நாளைக்கு? இல்லை வருஷத்துக்கு? போம்மா, நான் பார்த்துக்கிறேன் விடு….”
“ம்ம்ம்…. சிலர் காலத்துக்கு ஏத்த மாதிரி பழக்க வழக்கம் மாத்திகாம இருக்கிறது கஷ்டம் தான்!”
“ம்ம்…. இப்போவே இப்படினா, உங்க அத்தை எப்படி தான் அந்த அம்மாவை சமாளித்தாளோ?” வாசுகி மலைத்து போனவராக கூறினார்.
“இதே தான் மா, நானும் நினைச்சேன்….சொல்லுங்க பாட்டி, அத்தை உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க தானே?”
“உங்க அத்தை எதையும் சொல்ல மாட்டா, அதானே எங்களுக்கு பெரிய மனவருத்தம்! சொல்லி இருந்தா என் பிள்ளையை என்கூடவாவது வைச்சுக்கிட்டு இருந்து இருப்பேன்….இப்படி எமன் கிட்ட தூக்கி கொடுத்து இருக்க மாட்டேனே…. எங்களுக்கு ஆயுசு கொடுத்த கடவுள், என் பொண்ணுக்கு கொடுக்கலை….” புலம்பலாக சொன்னார் பாட்டி.
“அத்தான் பிறந்த அப்போ சந்தோஷமா இருந்திருக்கும்ல பாட்டி? அதுவும் அஞ்சு வருஷம் கழிச்சு பிறந்து இருக்கார் உங்க அருமை எருமை பேரன்….” பேச்சை மாற்றி எண்ணி கேட்டாள் அம்மு.
“என் அருமை பேரன் தாண்டி…. ஆமா, அவ்ளோ சந்தோஷம் பூரிப்பு தான்…. அதுவும் அவ வேண்டி தன்னையே வருந்திகிட்டு பிறந்தவன்ல….”
“ஓ, ரொம்ப கஷ்டப்படுவாங்களா அத்தை?”
“யார், என்ன கோயில் சொன்னாலும் போறது…. என்ன நாட்டு மருந்து சொன்னாலும் சாப்பிடுறதுனு இருப்பா, ஒரு தடவை ஆலமரத்து பிள்ளையார் கோவில் அது, பக்கத்திலே குளமும் இருந்துச்சு, அங்கே போய் இருந்தோம், அந்த குளத்தில இருந்து நூறு குடம் தண்ணி எடுத்து பிள்ளையாருக்கு அபிஷேகம் பண்ணிட்டு இருந்தா, அப்போ, சாமியார் மாதிரி ஒருத்தர் வந்து,
“இதெல்லாம் செஞ்சு என்ன பிரயோஜனம்? யார் எப்படினு தெரியலையே…. யார் என்ன மருந்து கொடுத்தாலும் சாப்பிடுவியா?” அப்படினு சொல்லிட்டு போய்ட்டார்.
தானாக நாட்டு மருந்து பற்றிய பேச்சு வர, அம்முவின் இதயத்துடிப்பு எகிறியது.
“அதுக்கு அப்பறம் ஒரு வருஷத்துல உன் புருஷன் பிறந்துட்டான்! உங்க அத்தை பிள்ளைக்கு கூட ஒரு நாட்டு மருந்தும் கொடுக்கலை அப்பறம்….” சிரித்தார் பாட்டி.
“இப்படி எல்லாம் நடக்குமா?” ஆச்சர்யமாக கேட்டாள் அம்மு.
நடந்துச்சே, அப்பறம் நாங்க அடிக்கடி அந்த கோயிலுக்கு போவோம், அந்த சாமியாரை பார்த்ததே இல்லை, உங்க அத்தை இறந்து போறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி போய் இருந்த அப்போ, மறுபடி அவரை பார்த்தோம்,
“இப்போ நல்லாத்தான் இருக்க….பார்ப்போம்னு சொல்லிட்டு போயிட்டார். அப்போ புரியலை எங்களுக்கு, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கவே இல்லை!”
முருகர் மற்றும் பாட்டி சொன்னதை வைத்து பார்த்தால், ஜெயந்தி அத்தைக்கு மருந்து கொடுத்துள்ளார், அதை அத்தை சாப்பிடாமல் விட்ட பின் தான் கருத்தரித்து உள்ளார்! யோசித்து பார்த்தவளுக்கு வந்த விடை நெஞ்சை பதற வைத்தது! இது மட்டும் உண்மை என்றால், ஐந்து வருடம் குழந்தை இல்லாமல் இருக்க வைத்திருக்கிறார்! ஏன்? அவ்ளோ மோசமானவரா ஜெயந்தி? அப்படி என்ன காரணம் இருக்க முடியும்? எனக்கும் இப்போது அதே செய்ய போகிறாரா? தன் பேத்தி இருக்க வேண்டிய இடத்தில் நான் இருப்பதால்?” நெஞ்சம் டம் டம் என்று வேகமாக துடித்ததில் அதிர்ந்தது. ஒரு மாதிரி பயமாக இருந்தது அவளுக்கு. இது எதையும் வெளியில் சொல்லி தன் வீட்டினரை பயமுறுத்த விரும்பவில்லை அவள். கேபியிடம் இதை சொல்ல வாய்ப்பே இல்லை!
அன்று வேலா இல்லத்திற்கு போகவே இல்லை அம்மு. அம்மா வீட்டிலேயே தங்கி விட்டாள்.
அலுவலகத்தில் இருந்து வந்தவன், அம்மு வீட்டில் இல்லை என்றதும் மிகுந்த கடுப்பாகி விட்டான். அவளை அழைத்தவன்,
“எப்போ வருவே வீட்டுக்கு?” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாமல்.
“நான் தான் மேசேஜ் போட்டேனே…. அம்மா வீட்டில் இருக்கேன்….”
“போறேன்னு தான் சொன்னே…. அங்கேயே தங்க போறேன் சொல்லலை….” இப்போது அவனையும் மீறி அவன் எரிச்சல் வெளிப்பட்டது.
“அப்போ சும்மா தான் வந்தேன், அப்பறம் தான் ஸ்டே பண்ற எண்ணம் வந்தது.”
“புருஷன் கிட்டே கேட்டுட்டு முடிவு பண்ணனும் இல்லை ஜஸ்ட் சொல்லிட்டு முடிவு பண்ணனும் அப்படி எல்லாம் தோணாதா?”
“நீதான் இப்போ என் புருஷன்! அதுக்கு என்ன இப்போ?”
அவள் அவ்வாறு கேட்ட பின், அவ்வளவு கோபத்திற்கு இடையிலும் சிரிப்பு வந்து விட்டது அவனுக்கு. சத்தமாக சிரித்தவன்,
“சில்மிஷம்….” என்றவாறு அழைப்பை துண்டித்தான்.
அவ்வளவு கோபத்தில் இருந்தவன் சட்டென்று சிரிக்கிறான் என்றால் அவள் மீது அவனுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை உணர தவறினாள் அம்மு அக்கணத்தில். சின்ன பிள்ளை தவறு செய்தால், திட்ட முயற்சிக்கும் தாயால் அதன் முகத்தை பார்த்து முழுவதும் திட்ட முடியாமல் சிரிப்பு வருமே அது போல் ஒரு தூய்மையான அன்பு கேபியுடையது அவனின் அம்மு மேல்!