💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 34
தன்யா தன் மனைவியைக் காண்பிக்குமாறு வேண்டியதும், “அவ எதுக்கு?” என்று கேட்டவன் அழைப்பைத் துண்டிக்க எண்ண, அதற்குள் அலைபேசியைப் பிடுங்கி எடுத்து “ஹாய் தனு! நான் தான் உன்னோட அண்ணி. மிஸ்ஸிஸ் சத்ய ஜீவா” என்றிருந்தாள் ஜனனி.
சத்யா அவளைக் கடுமையாக முறைக்க, “ஓஓ! சூப்பர் அண்ணி. அழகா இருக்கீங்க” என்றவளுக்கு ஏற்கனவே அனுப்பிய புகைப்படத்தில் இருந்த நந்திதாவை விட இவளைப் பிடித்து விட்டது.
“தாங்க் யூ டா! நல்லா இருக்கியா?” என்று கேட்க, “நல்லா இருக்கேன். கூடிய சீக்கிரமே உங்களைப் பார்க்க வருவேன்” என்று சொன்னாள் தன்யா.
“கண்டிப்பா. இங்கே வாடா! ஜாலியா பேசலாம்” என்றிட சம்மதமாகத் தலையசைத்தவள் ஜனனியோடு கதையளந்தாள்.
இறுதியாக வைக்கும் போது “அண்ணி செம கியூட் அண்ணா!” என்று சொல்லி விட்டே வைக்க, சத்யாவின் பார்வை ஜனனியை விட்டும் அகலவில்லை.
தன்யா!
இவள் ஒருத்தியால் தானே அவன் வாழ்வில் அத்தனை பிரச்சினை வந்தது. அவளுக்கும் தனக்கும் உள்ள உறவில் தான் சந்தேகம் பூத்தது. அப்படிப்பட்டவளை ஜனனிக்கு அறிமுகம் செய்து வைத்தால் அவளும் ஏதாவது நினைப்பாளோ என்று தான் அமைதியாக இருந்தான்.
ஆனால் அவ்வாறல்லாமல் அவளாகவே சகஜமாகப் பேசியது அவனுக்கு வியப்பாக இருந்தது. தன்னைப் பார்த்திருப்பவனைப் புருவம் உயர்த்தி நோக்க, ஒன்றும் இல்லை என்பதாகத் தலையசைத்தான்.
“உங்க தங்கச்சி உங்களை மாதிரி இல்ல. ரொம்ப ஸ்வீட்டா இருக்காங்க. அவங்க மட்டுமல்ல, ரூபன் தேவன் கூட. நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க?” அவன் முகத்தை ஏறிட்டாள் ஜனனி.
“எனக்கு மட்டும் இப்படி இருக்க ஆசையா என்ன? என் விதி இப்படி இருக்க வெச்சிருச்சு” என்று அவன் தலையைச் சிலுப்பிக் கொள்ள, “விதின்னா என்னங்க? எல்லாரும் கெட்ட விஷயம் நடந்ததுன்னா விதி விதினு சொல்லியே சமாளிக்கிறீங்க. விதினு ஒன்னு இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியல.
ஆனால் நம்ம இயல்பை எதுக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. விதி தலையில் பாரத்தைப் போட்டா அது எல்லாத்தையும் சரி செஞ்சிடாது. நம்மளாகவே அதிலிருந்து விடுபட்டு மீண்டு வரனும்” என்றாள் அவள்.
“ஹேய்! உன் கிட்ட விளக்கம் கேட்டேனா? வாயை மூடிட்டு இரு. பெரிய டீச்சர் மாதிரி உடனே பாடம் எடுக்க வந்துடுவா”
“யோவ்! பாடம் எடுக்கிறேனோ பார்சல் பண்ணுறேனோ நல்ல விஷயம் ஒன்னு சொன்னா அதை தலையில் போட்டுக்கப் பழகு. இந்த உலகமே இப்படித் தான். தப்பைப் பார்த்து வாயை மூடிட்டு இருக்கிறவன் நல்லவன், அதைத் தட்டிக் கேட்கப் போனா சட்டுனு அவனை வில்லனாக்க வேண்டியது. நல்லதுக்கு காலமில்லப்பா” பெரிதாக அலுத்துக் கொண்டாள்.
“நீ ரொம்பத் தான் பேசுற” அவன் முறைக்க, “பேசுறதுக்காக எல்லாம் உங்க கிட்ட பர்மிஷன் வாங்க முடியாது. எனக்கு தோணுனா நான் பேசுவேன். இந்த கதைகள்ல வர்ற ஹீரோயின் மாதிரி நீங்க குரலை உயர்த்தின உடனே நடுநடுங்கி கப்சிப்புனு இருக்க மாட்டேன். அதுக்குனு நீங்க ஆன்ட்டி ஹீரோவும் இல்ல” அவள் நீளமாகப் பேச,
“நான் ஆன்ட்டி ஹீரோனு உன் கிட்ட சொன்னேனா? அந்தளவுக்கு நான் போக மாட்டேன்” எனும் போது, “அப்போ அன்னிக்கு அடிக்க வந்தீங்க?” இடையிட்டுக் கேட்டாள் பெண்.
“ஏதோ கோபத்தில் அப்படி பண்ணிட்டேன். இருந்தாலும் அது ஓவர்னு எனக்கும் தோணுச்சு. இனி அப்படி நடக்காம பார்த்துக்க” என்றான் அவன்.
“என்னது பார்த்துக்கவா? நீங்க பார்த்துக்கங்க. கை நீட்டி அடிக்க வர்ற வேலை இனி வெச்சுக்காதீங்க”
“ஓகே! பட் நீயும் என்னை சீண்டிப் பார்க்காத. நீ நல்லா இருக்கும் வரையில் நான் நல்லவன். நீ லிமிட் மீறினா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது” என்றுரைத்தவனை மேலிருந்து கீழாகப் பார்த்து வைத்தாள்.
“அதென்ன லிமிட்? எனக்கு தெரியாது” என்றவள், “நான் அளந்து அளந்து பழக முடியாது. எனக்கு ஒன்னு தோணுனா பேசிடுவேன். அன்னிக்கு நான் பேசினது கூட பெரிசா தப்பா தோணல. இருந்தாலும் உங்களுக்கு பெயர் சொல்லி கூப்பிடறது விருப்பம் இல்லைனு தெரிஞ்சும் நான் கூப்பிட்டு இருக்கக் கூடாது. எனிவேஸ் அதை மறந்துடலாம்” என்றவளை ஒரு நொடி இமைக்காமல் பார்த்தான் சத்யா.
“ஆமா! நீங்க ஸ்டோரி ரீட் பண்ணுவீங்களா?” ஆவலுடன் அவள் கேட்க, “அவ்வளவா இல்ல. கொஞ்சமா வாசிச்சு இருக்கேன். பட் எப்போவும் கவிதை படிப்பேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகளை கொஞ்சமா மறந்து வேறு உலகத்துக்குக் கொண்டு போற சக்தி சில கவிதைகளுக்கு இருந்திருக்கு” கண்களை மூடிக் கொண்டவனின் குரலில் கவலையின் சாயல்.
அவன் ஒன்றை யோசிக்க மறந்தான். அவனது வலிகளை ஜனனியிடம் பகிர்ந்து கொண்டிருந்தான், தன்னை மறந்தவனாய்.
“சிலர் வாசிக்கிறதால வலிகளை இல்லாம போக வைப்பாங்க. சிலர் வலிகளையே வரிகளாக்கி கவிதையா வடிப்பாங்க. யார் கிட்டேயும் சொல்ல முடியாத உணர்வுகள் பேனா மையோடு அந்த தாள்கள்ல சங்கமிச்சிடும், கூடவே ஒரு சொட்டு கண்ணீரையும் கலந்து” என்று ஜனனி சொல்ல, அவள் வார்த்தையில் இருந்த விரக்தி அவனைச் சுட்டது.
“ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம் ஜானு! எல்லாருக்கும் வலி இருக்கும். வேதனை இருக்கும். பிரச்சினை இருக்கும். அந்த நேரத்தில் கஷ்டப்பட்டாவது அதைக் கடந்து வரத் தான் வேணும். கஷ்டம் அப்படியே இருந்திடாது. அதுக்கு பின்னால ஒரு நாள் சந்தோஷமும் வரக் காத்திருக்கும்” தன்னை மீறி மென் குரலில் சொன்னவனுக்கு, ஒரு அழைப்பு வந்தது.
அதில் சொல்லப்பட்ட தகவலைக் கேட்டவனின் கண்கள் இரத்தச் சிவப்பாக உருமாற, வெறி கொண்ட வேங்கை போல் அலைபேசியைத் தரையில் ஓங்கி அடித்தான் காளை.
…………
ஹாஸ்பிடல் வாசலில் நின்றிருந்தான் ரூபன். அவன் முன்னே பைக்கில் வந்து நின்ற தேவனைக் கண்டு “உன்னை வர சொல்லி எவ்வளவு நேரம் டா? ஆடிப்பாடி வர்ற” என்றிட,
“சொன்ன உடனே வர நான் உன் வேலைக்காரனும் இல்ல, இது ரெக்கை முளைச்ச ஃப்ளைட்டும் இல்ல” அவனை வெறியாகி முறைத்தான் தேவன்.
“ரூபி” என்ற குரலில், தேவனின் பின்னால் இருந்த யுகனை அப்போது தான் கவனித்தான் ரூபன்.
“டேய் சில்வண்டு கீச்சிடாத! என் நர்ஸ் யாராவது கேட்டா ரூபியோட மானமே போயிடும். வாயை மூடிட்டுக் கிளம்பு” என்றவன் பைக்கில் ஏறிக் கொள்ள,
“உனக்கு வில்லன் யாரும் இல்ல. நம்ம யுகி தான்” சத்தமாக சிரித்தான் தேவன்.
“சித்தா! ஃபுட்பால் மேட்ச் நடக்குதுல்ல. அந்த க்ரவுண்ட் போகலாமா?” என்று யுகன் வினவ, “டயர்டா இருக்கு யுகி. வீட்ட போகலாம்” பாவமாக சொன்னான் ரூபன்.
“ஓகே ரூபி” முகம் வாடினாலும் அதை மறைத்துக் கொண்டு சொன்னவனது கன்னங்களைப் பிடித்து, “பரவாயில்லை கண்ணா! நாம ஃபுட்பால் மேட்ச் கொஞ்சம் பார்த்துட்டு போகலாம்” என்று தலையசைக்க, சின்னவன் துள்ளிக் குதித்தான்.
க்ரவுண்டை நோக்கி பைக்கை செலுத்திய தேவனுக்கு முகம் ஒளியின்றி இருக்க, “என்னாச்சு டா?” என்று கேட்டான் ரூபன்.
“தெரியல. மனசு ஒரு மாதிரியே இருக்கு டா. கொஞ்ச நாளா அப்படித் தான்” என்று சொன்னதைக் கேட்டு, “அப்படினா ஏதோ நடக்கப் போகுது. ஒரு வேளை நீ வினிதாவை மீட் பண்ணப் போறியோ?” என்று கேட்டவனைத் தீயாக முறைத்தான்.
“உன் வாயில் நல்ல வார்த்தை வராதா மங்கி பயலே! யுகி இருக்கிறதால தப்பிச்ச நீ. இல்லனா நல்லா சொல்லி இருப்பேன்” வெளியில் சொல்லாமல் வாய்க்குள் அவனை அர்ச்சித்தான் தேவன்.
“அப்படி என்ன சித்தா சொல்லுவீங்க? டோன்ட் யூஸ் பேர்ட் வர்ட்ஸ். கோபம் வந்தா அப்படி சொல்லுறது சரி இல்லனு..” என சொல்ல வரும் போது, “உங்க டாடி சொல்லி இருக்கார். அப்படித் தானே? நான் சொல்லல போதுமா? உடனே உன் டாடி புராணத்தை ஆரம்பிச்சிடாத” என்றவன் செல்ல வேண்டிய இடம் வந்ததும் பைக்கை நிறுத்தினான்.
ரூபன் தேவனைப் பார்த்தபடி நிற்க, “என் மூஞ்சுல மேட்ச் ஓடல. யுகியைக் கூட்டிட்டு உள்ளே போ. பைக்கை ஓரம் கட்டிட்டு வர்றேன்” என்க, ரூபனும் யுகனோடு உள்ளே சென்றான்.
பைக்கை நிறுத்தி விட்டு வரும் போது அவன் கால்கள் சட்டென நடையை இடை நிறுத்தம் செய்தன. செவிகளில் கணீரென்ற சிரிப்பொலி.
இது…?? இது அவள் குரல் அல்லவா?
கண்களை மூடித் திறந்தவன் திரும்பியும் பாராமல் செல்ல எத்தனிக்க, அவன் மார்பில் மோதியவளைத் தன் கரம் கொண்டு தாங்கினான் தேவன்.
அவளே தான். அவனது இதயத்தில் இருப்பிடம் கொண்டவள். அங்கு தேவனைச் சற்றும் எதிர்பாராமல் மலங்க மலங்க விழித்தவளையே அவன் விழிகள் ஆழ்ந்து நோக்கின.
அவளின் ஸ்பரிசம் பட்டதும் என்றும் போல் சிலிர்த்தது தேகம். எனினும் அலையாய் மோதிய நினைவுகளில் மறு நொடியே அவனுடல் இறுகிப் போனது.
“ஹேய் பேபி” எனும் அழைப்போடு வந்த ஆடவனின் கண்கள் அவளை அன்போடு பார்க்க, அவளை உதறித் தள்ளினான் தேவன்.
அவன் விடுவான் என்று எதிர்பாராதவள் தொப்பென கீழே விழ, “என்னாச்சு பேபிமா? ஆர் யூ ஓகே” அவளுக்குக் கை கொடுத்து தூக்கி விட்டவனையும் மற்றவனையும் மாறி மாறிப் பார்த்தவாறு எழுந்து நின்றாள் அவள்.
தேவன் அங்கிருந்து நகர, “ஹலோ! எல்லாம் பண்ணிட்டு நைஸா எஸ்ஸாகப் போறியா?” என்று அந்த ஆடவன் கேட்க,
“பின்ன, கீழே விழுந்த உன் பேபிமாவுக்கு தைலம் தேய்ச்சு விடனுமா?” அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் அவன்.
“அவ என்ன பண்ணுனா உனக்கு? விழப் போனவள பிடிக்காம இருந்தா கூட ஓகே. ஆனா பிடிச்சிட்டு விடுறது தப்பு” என்றவனைக் கோபமாய் நோக்கி, “அவங்களைப் பொறுத்தவரை நடுவில் விடறது தப்பு இல்லை. பிடிச்சுட்டு இடையில் கை விடுறது உங்க பேபிமாவுக்கு ரொம்பவும் பிடிச்ச விஷயம். தெரியுமா?” என்றவனது பார்வை வினி மீது படிந்தது.
மற்றவனுக்குப் புரியா விட்டாலும் அவனது பேச்சின் அர்த்தம் பெண்ணவளுக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
“தே..” என்று அழைக்க வந்தவளைத் தடுக்கும் விதமாக, “இவன் என்ன பைத்தியமா பேபிமா? ஏதேதோ கண்டபடி உளறுறான். உன்னையே தப்பு சொல்லுறானே. உனக்கு இவனை ஆல்ரெடி தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினான் அவன்.
“இல்ல தெரியாது அஷு! நாம போகலாம்” என்று அவள் சொல்ல, அவளை அடிபட்ட பார்வை பார்த்தான் தேவன்.
“அப்படினா ஓகே. நாம போய் மேட்ச் பார்க்கலாம்” அவளது கையைப் பிடித்தவாறு உள்ளே அழைத்துச் சென்றான் அஷோக்.
அஷோக்கின் கரத்தினுள் சிக்கிய அவளது கையையே வெறித்துப் பார்த்திருந்த தேவன் ஆத்திரத்தோடு அவர்களைப் பின் தொடர்ந்தான்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி