வாடி ராசாத்தி – 35
ஊருக்கு வந்தவளுக்கு சாமியாரின் வார்த்தையே மனதில் ஓடியது! மலையை புரட்ட வேண்டும் என்றால், நடக்காது என்ற செயலை செய்ய வேண்டும். அது என்ன? தன் வாழ்வில் ஜெயந்தியை தன் கணவன் எதிர்ப்பது தான்! அதை செய்ய வைக்க வேண்டும்! அவருக்கு நிச்சயம் இன்னொரு பக்கம் இருக்கிறது, முருகர் வாயில் இருந்தே வந்ததே, அதுவே சாட்சி தான்! நிச்சயம் அவருக்கு இன்னும் நிறைய தெரிந்து இருக்கும் என்று நம்பினாள் அம்மு. அதனால் ஜெயந்தியை தன் வாழ்வில் இருந்து அகற்ற, அந்த மலையை புரட்ட முடிவு செய்தாள் அம்மு.
அவள் என்னவோ அவளுக்காக தான் அந்த வேலையை செய்ய துணிந்தாள்! ஆனால் கிடைக்க போவது என்ன என்று அவளுக்கு அப்போது தெரியாது!
அதிகாலையில் கோயிலுக்கு செல்ல கிளம்பி கொண்டு இருந்த முருகருடன், தானும் கோயிலுக்கு வருவதாக சேர்ந்து கொண்டாள் அம்மு. அவரிடம் இருந்து எப்படியாவது சில விஷயமாவது வாங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தாள் அம்மு.
அவளின் எண்ணம் புரியாமல் இருக்குமா அவருக்கு? தரிசனம் முடித்து, பிரஹாரத்தில் அமர்ந்தார்கள்.
“நான் நேராவே கேட்கிறேன் மாமா…. அத்தை கொடுக்கிற மருந்தினால் என்னோட தாய்மை அடையுற நிலைமைக்கு ஏதும் பிரச்சனை வருமா மாமா?
கொஞ்சம் கூட அதிர்ச்சி இல்லாமல் அவர் பேச, எப்படி கேட்டால் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று தயார் பண்ணி கொண்டு வந்திருக்கார் என்று உணர்ந்துக் கொண்டாள் அம்மு.
“நான் உனக்கு சொன்னதை வைச்சுக்கிட்டு நீயா எதையும் தப்பா நினைக்காத மா…. என்னால உன் அத்தையிடம் பேச முடியாது, அவ இன்னும் நாட்டு மருந்து, பச்சிலை வைத்தியம்னு சுத்துற ஆள்…. அதனால் உனக்கு ஒரு எச்சரிக்கையா தான் சொன்னேன்! உன் உடம்பு அதை ஏத்துக்கலைனா என்ன செய்றதுங்கிற பயம் எனக்கு! வேற ஒண்ணுமில்லை மா….” மிகவும் ஜாக்கிரதையாக பேசினார் முருகர்.
“இப்போ என் மேல அக்கறையா சொன்ன நீங்க, ஏன் மாமா அம்ரிதவல்லி அத்தைக்கு இந்த அக்கறையை காட்டலை…. ஐந்து வருடம் அவங்களை குழந்தை இல்லாமல் கஷ்டப்பட விட்டுட்டீங்க?” அம்முவின் கேள்வி அவரை சாட்டையால் அடித்தது போல் இருக்க, பதிலே பேச முடியவில்லை அவரால். சற்று நேரத்தில் தன்னை மீட்டு கொண்டவர்,
“என்னமா இப்படி எல்லாம் யோசிக்கிற…. நீ கேட்கிற மாதிரி எதுவும் இல்லைமா…. இப்படி எல்லாம் யார் உனக்கு சொல்றா?”
“இப்போ நான் ஒரு கேள்வி கேட்பேன், அதுக்கு உண்மையான பதில் சொன்னா, நானும் சொல்றேன்….” என்றாள்.
“என்ன கேள்வி?”
தான் கேட்க போவதால் என்ன விளைவுகள் வந்தாலும் அதை சந்தித்து கொள்ளலாம் என்ற முடிவில் தான் அந்த கேள்வியை துணிந்து கேட்டாள் அம்மு.
“அத்தையம்மா மருந்து கொடுக்கிற நோக்கம் என்ன? குழந்தை நல்ல படியா பிறக்கணும்னா இல்லை குழந்தையே பிறக்க கூடாதுன்னா?”
அவளின் வெளிப்படையான பேச்சில், தன் அதிர்ச்சியை மறைக்க முடியாமல் அப்பட்டமாக காட்டினார் முருகர்.
“அம்மாடி, இதெல்லாம் தயவு செஞ்சு என்கிட்ட கேட்டதோட விட்ரு…. வேற யாருகிட்டயும் பேசி வைக்காத, இப்போ வா வீட்டுக்கு கிளம்பலாம்.” என்று பதட்டமாக பேசி கிளம்ப வைத்தார் அவளை. அவரின் பதட்டம், அம்முவிற்கு நிறைய சேதி சொன்னது! இவரிடம் விஷயம் இருக்கு! நிச்சயமாக இருக்கு! என்றது மனம்.
@@@@@@@@@@@
அன்று இரவு அறைக்குள் கேபி வந்து நுழைந்த அடுத்த நிமிடம்,
“இன்னைக்கு உன் பெரியம்மா ரொம்ப ஓவரா போய்ட்டாங்க, என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு….” என்று கத்த ஆரம்பித்தாள் அம்மு.
“ஏண்டி, கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் ஆக போகுது…. புருஷன் உள்ள வந்ததும் பாய்ஞ்சு வந்து, கட்டிபிடிச்சு கிஸ் கொடுக்காம, சண்டைக்கு ரெடியா நிக்கிற பஜாரி மாதிரி இருக்க…. என் ரொமான்ஸ் மூடே போகுது!” சலித்து கொண்டு கேலியாக சொன்னான்.
“நான் கெட்ட மூடில் இருக்கேன்…. என்னை ரொம்ப சீண்டாதே….” திரும்பவும் கத்தினாள் அம்மு.
“எனக்கெல்லாம் குட் மூட், பேட் மூட், ஏன் மூடே இல்லைனாலும் உன்கிட்ட தாண்டி வருவேன் சில்மிஷம்!”
“டேய் பண்டி…!”
“அடியே நான் ஜோக் பண்ணலைடி…. மூட் எல்லாம் நிலையில்லாதது, மாறிட்டே இருக்கும்! நீ தான் என்னோட நிரந்திரம்! அப்படி சொன்னேன்…. என்னடா பாண்டியா உனக்கு வந்த சோதனை!” அவன் பாவமாக சொல்ல,
சிரித்து விட்டாள் அம்மு.
“இப்படியே சிரிச்சுகிட்டே இப்போ என்ன விஷயம்னு சொல்லு” என்றான்.
“ஒன்னும் வேண்டாம், சொல்ற மூட் போய்டுச்சு எனக்கு!”
“ஹே ப்ளீஸ் டி, உங்க சண்டை எல்லாம் ஜாலியா இருக்குடி, சொல்லு ப்ளீஸ்….”
“அடப்பாவி!”
“ஹேய், அப்பாவிடி நான்!”
“ஆமாப்பா, ஆமா! நீ ரொம்ப அப்பாவி…. வீடு, தொழில்னு இருந்த பிள்ளையாம், நான் தான் சூனியக்காரி இந்த சொத்துக்கு ஆசைப்பட்டு உனக்கு பில்லி சூனியம் ஏவல் எல்லாம் செஞ்சு உன்னை கைக்குள்ள போட்டுக்கிட்டு கல்யாணம் வரை கொண்டு வந்துட்டேனாம்….உங்க பெரியம்மா இன்னைக்கு பெருமையா யார்கிட்டயோ போன்ல பேசிட்டு இருந்தாங்க….!”
“ஹாஹஹா, அவங்க ஏதோ சொல்லி இருப்பாங்க, நீ அதில இவ்ளோ எக்ஸ்ட்ரா பிட் போடுற…. கேடி…. ஆனா சொன்னே பாரு, சூனியக்காரினு அதை மாயக்காரினு மாத்திக்க, உன்னை விட்டு அப்படி இப்படி போக மாட்டேங்குதே என் நினைப்பு…. என் சில்மிஷம்!”
வேகமாக அறையை விட்டு வெளியே போக போனவளிடம், “இனிமே எங்க பெரியம்மா நம்ம கல்யாணம் பத்தி எதாவது பேசினா,
“இந்த கல்யாணத்திற்கான காரணம் உங்க யாராலையும் கண்டுபிடிக்க முடியாது…. ஏன்னா, இது விதிக்கப்பட்டது, எப்படி இருந்தாலும் நடந்து இருக்கும்னு சொல்லு! முக்கியமா இதை நான் சொன்னேன்னு சொல்லு!” என்றான் அழுத்தமாக.
அவனுக்கும் அம்முவிற்குமான உறவை பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை என்று தோன்றியது அவனுக்கு. இப்படி நினைப்பவனுக்கு, அம்முவை பற்றி ஜெயந்தி பேசக்கூடாது என்று ஏன் தோன்றவில்லை?
@@@@@@@@@@@@@@
அடுத்த நாள் காலை, அலுவலகம் கிளம்பி கொண்டு இருந்தவனிடம்,
“இரும்பு பெட்டகம் இருக்கா இல்லையா இந்த வீட்டில?” என்றாள் திடுமென்று. அந்த கிணறு விஷயத்தில் இருந்தே இது போன்ற அம்முவின் கேள்விகளுக்கு பழகி விட்டான் கேபி.
“அது எதுக்கு உனக்கு? அதை திறந்து மூடுறதே பெரிய வேலை….”
“எனக்கு அதை பார்க்கணும், ப்ளீஸ்….”
“அதை அப்போவே அம்மா தவிர யாரும் உபயோகப்படுத்தலையாம், அம்மாவுக்கு பிடிக்குமாம்…. அவங்க தான் அதை அடிக்கடி திறந்து மூடுவாங்களாம். இப்போ அதுவும், அம்மாவுக்கு பிடிச்ச பெரிய மர ஊஞ்சலும் வீட்டுக்கு பின்னாடி இருக்க பழைய வீட்டில இருக்கு” என்றான்.
“அதோட சாவி?”
“பெரியப்பா கிட்டே இருக்கு”
“இன்னைக்கு நான் போய் பார்க்கிறேன்….!”
“விஷயம் சொன்ன என்கிட்ட பெர்மிஷன் கேளுடி, பார்க்கிறேன் சொல்ல கூடாது, பார்க்கவானு கேட்கணும்! புரியுதா?” அவள் தலையில் லேசாக கொட்டி விட்டு கிளம்பி விட்டான்.
அவர்கள் வீட்டிற்கு பின்னால் நீண்ட இடம் உண்டு, மாமரம், பலா மரம், தென்னை மரம் என்று பெரிய மரங்களும் உண்டு. அங்கே சின்ன வீடு இருக்கும். கிணறு அதற்கு சற்று தள்ளி ஒரு மூலையில் இருக்கும். அந்த வீட்டில், ஒரு கூடம், ஒரு சமையல் செய்யும் அறை அவ்வளவு தான். அதன் அருகே வெளிப்பக்கம் ஒரு பாத்ரூம். பாதை உண்டு அந்த இடத்திற்கு ஆனால் எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் புல் மண்டி விடும், அதை தொடர்ந்து சுத்தம் செய்வதில்லை. எப்போவாவது தான் செய்வார்கள். ஜெயந்தியும் அன்று வெளியே கிளம்ப, வேலை செய்யும் பெண்மணியிடம் சொல்லி விட்டு அங்கே சென்றாள் அம்மு. ஒரே தூசியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இவள் செல்ல, நன்றாக இருந்தது வீடு. அப்போது தான் அந்த வீட்டிற்கு பின்புறம் ஆட்கள் தோட்ட வேலை செய்து கொண்டு இருந்தனர். அவர்கள் பகல் பொழுதில் பயன் படுத்துவார்கள் போல் என்று நினைத்துக் கொண்டாள். ஊஞ்சல் பரண் மேல் இருந்தது. பெட்டகம் அந்த கூடத்தின் மூலையில் இருந்தது. சாவியை முருகரிடம் இருந்து கேட்டு வாங்குவோம் என்று எண்ணி கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள் அம்மு. ஆனால் வீட்டை அடைந்தவுடன், அவளுக்கு மனம் மாறி விட்டது. அவர் வீட்டில் இல்லையென்றால், அவர் அறையில் முடிந்தவரை தேடி பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தாள்.
அவளிற்கு ஏற்றார் போல் அன்று பெரியவர்கள் மூவருமே வீட்டில் இல்லை. அறை எல்லாம் திறந்து இருந்தாலும் முக்கியமான கப்போர்ட் எல்லாம் பூட்டி தான் இருந்தது. முருகர் ரூமில, ஒரு மர பீரோ இருந்தது. அது பூட்ட படவில்லை. அதை திறந்தாள் அம்மு. திருநீறு வாசம் குப்பென்று மனதை நிறைத்தது. அவர் கோயிலுக்கு அணியும் துணிகள், துண்டு என இருந்தது. எதாவது இருக்குமா என்று துணிகளின் மடிப்பு கலையாதவாறு லேசாக தூக்கி தூக்கி பார்த்தாள் அம்மு. ஏதும் இல்லை அங்கே. பீரோவின் கடைசி வரிசையில் நிறைய மஞ்ச பைகள் இருக்க, அவற்றை எடுத்தாள். ஒரு பையில், அண்ணன், தம்பி இருவரின் திருமணப் பத்திரிக்கை இருந்தது. யதார்த்தமாக அதை திறந்து பார்த்தவளுக்கு, திகைப்பு. அவரின் திருமணப் பத்திரிக்கையில், அதுவே மிகப் பழைய பேப்பர், அதில் ஜெயந்தியின் பேரை பல முறை அடித்ததில், அந்த இடம் ஓட்டையாக இருந்தது. அதே போல ஞானவேலின் திருமணப் பத்திரிக்கையில் அவரின் பெயரும் பலமுறை அடிக்கப்பட்டு, அந்த இடம் கிழிந்து இருந்தது.
ஜெயந்தி பேசும் பேச்சிற்கு அவர் மேல் முருகருக்கு கோபம் வரலாம்! நியாயம். ஆனால் ஏன் அவர் தம்பி மேல்? சிந்தனை வயப்பட்டாள் அம்மு. இன்னும் சில மஞ்சள் பையில், ஜாதக நோட்டுகள், பத்திரங்கள் இருந்தது. அந்த தமிழே அவளுக்கு புரியவில்லை! கேபியின் தாத்தா காலத்து தமிழாக இருந்தது அது. இன்னொரு பையில் இரும்பு சாவியாக நிறைய இருந்தது. இதில் இருந்து பெட்டக சாவியை எடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று புரிந்து கொண்டாள். எதற்கு இருக்கிறான் அவளின் அத்தான், அவன் மூலமே கேட்டு வாங்கிடலாம் என்று நினைத்துக் கொண்டு அறையில் அனைத்தையும் இருந்தது போலவே வைத்து விட்டு நல்ல பிள்ளையாக கிளம்பிவிட்டாள்.
@@@@@@@@@@@@@
அன்று இரவு, உணவறையில், “பெரியப்பா அம்முவிற்கு பெட்டகத்தை திறந்து பார்க்கணுமாம், சாவி கொடுங்களேன்” என்றான் கேபி.
மருமகளின் நினைவலைகள் பற்றி அனைவருக்குமே ஓரளவிற்கு தெரிந்து விட்டதே, திருமணம் முடிந்தபின் அதனால் யாரும் அதிர்ச்சி அடையவில்லை. மறுப்பு மட்டும் வந்தது இருவரிடம் இருந்து.
“எதுக்கு எப்போ பாரு வேண்டாத வேலையே பார்க்கிற?” கடிந்து கொண்டார் ஜெயந்தி.
“ஒரு வேலை முடியுற வரை அது வேண்டாத வேலைனு எப்படி தெரியும் உங்களுக்கு?” அம்முவும் விடாமல் பேசினாள்.
“அதை திறக்கிறது எனக்கே மறந்து போச்சு மா இப்போ, நீ என்ன பண்ண போற அதில?” முருகர் கேட்க,
எனக்கு திறக்க தெரியுமே என்று தொண்டை வரை வந்து விட்ட வார்த்தைகளை கஷ்டபட்டு மென்று முழுங்கினாள் அம்மு. இல்லை, இதை இப்போது சொல்லக்கூடாது என்று தோன்றியது அவளுக்கு.
“அது எப்படி மறக்கும் உனக்கு? நாம சின்னவங்களா இருந்தப்போ நாம தானே திறப்போம்? சாவியை கொண்டா நான் திறக்கிறேன், எனக்கு நியாபகம் இருக்கு” என்றார் ஞானம்.
“அந்த சாவியை நான் தொலைச்சுட்டேன், ரொம்ப வருஷம் ஆச்சு, அதை நானே தேடிக்கிட்டு தான் இருக்கேன்!” மெதுவாக சொன்னார் முருகர்.
அதை கண்டுபிடி அம்மு! உள்ளே ஒரு குரல் அவளிடம் சொல்ல, தலையில் இருந்து கால் வரை மயிர்கூச்செறிந்தது அவளுக்கு.