விஷ்வ மித்ரன்
நட்பு 36
சிவ குமார் வீட்டின் முன் கிரீச்சிட்டு நின்றது மித்ரனின் கார். அக்ஷராவும் மித்துவும் வர, ஆரத்தி எடுத்தார் நீலவேணி.
“அம்மா….!” என அவரை அணைத்துக் கொண்ட அக்ஷரா, தந்தையையும் அணைக்க,
“எதுக்கு டி ஏதோ டூ இயர்ஸ் ஃபாரின்ல இருந்துட்டு வந்த மாதிரி பில்ட் அப் கொடுக்குற?” அவளிடம் கிண்டலாகக் கேட்டான் விஷ்வா.
“நீயும் வேற வீட்டுக்கு போய் இரு. அப்போ தெரியும் எங்க மனசு” அவனை முறைத்தாள் தங்கை.
“நானும் மித்து வீட்டுக்கு போக ஆசையா இருக்கேன். மாம் என்னைப் போக விடாம இருக்காங்க. அது சரி நீ அம்மாப்பாவை தான் மிஸ் பண்ணுனியா? என்னை மிஸ் பண்ணலையா?” என்று தங்கை முகம் நோக்கினான் அண்ணன்.
“இல்லை! நீ என் நெஞ்சுல குடியிருக்கே. அப்படி இருக்கும் போது எப்படி விஷு உன்னை மிஸ் பண்ணுவேன்” அவன் தோளில் சாய்ந்தவளை,
“என் செல்ல குட்டிம்மா” என அணைத்துக் கொண்டான் விஷு.
“கீரியும் பாம்பும் நகமும் சதையுமா மாறிட்டாங்க” என சிரிப்புடன் நீலவேணி சொன்னாலும் தன் பிள்ளைகள் இப்படியே வாழ்நாள் முழுவதும் அன்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென வேண்டவும் தான் செய்தார்.
“வைஷுமா! இது அத்தி பூத்த மாதிரி கிடைக்குற அரிய காட்சி. சோ வேணும்னா ஃபோட்டோ பிடிச்சு வெச்சுக்க” மருமகளிடம் மென் குரலில் சிவகுமார் சொல்ல, அவளும் கூட புன்னகையுடன் இருவரையும் பார்த்திருக்க, சிவகுமார் சொல்லும் முன்பே அதைத் தன் மொபைலில் படமாக சேமித்திருந்தான் மித்ரன்.
“ஏய் பவுடர் டப்பா! உன் மூஞ்சு இன்னிக்கு ஓவர் ப்ரைட்டா இருக்கு. புதுசா எதுவும் க்ரீம் யூஸ் பண்ணுறியா?” என விஷ்வா கேட்டதும்,
“பவுடர் கூட பூச விடாமல் உன் வீணாப் போன ப்ரெண்டு உன்னைப் பார்க்கனும்னு இழுத்துட்டு வந்தான். நீ க்ரீம் யூஸ் பண்ணுறேன்னு கலாய்க்குறியா? இப்படியே ஏதாச்சும் சொன்னனு வை பேட் வேர்ட்ஸ் எல்லாம் நான் யூஸ் பண்ண வேண்டியிருக்கும்” ஏகத்துக்கும் எகிறினாள் அக்ஷரா.
‘திரும்பவும் முட்டிக்கிச்சு’ என்பதாக அனைவரும் தலையில் கை வைக்க, “எவ்வளவு தைரியம் இருந்தா மித்துவை வீணாப் போனவன்னு சொல்லி இருப்ப?” அவள் தலையில் கொட்டினான் விஷ்வா.
“நான் அதுக்கு மேலேயும் சொல்லுவேன். நீ எகிறிட்டு வராத. அவன் என் மித்து”
“உன் புருஷன். என் மித்து போடி”
“போடா! அருள் நீயே சொல்லு நீ என் மித்துவா? அவன் மித்துவா?” என்று கேட்டு அவனைத் திணற வைத்தாள் மனைவி.
“அம்முலு! ரெண்டு பேருக்கும் மித்து தான். பட் ஃபர்ஸ்ட் அவனுக்கு மித்து! அவன் இல்லைனா உனக்கு மித்துவாகி இருப்பேனா?” புன்னகையுடன் அவளிடம் சொன்னான் அருள் மித்ரன்.
“டன்டனக்கா! அவன் எனக்கு மித்து! விலை மதிக்க முடியாத சொத்து” என விஷு பாட,
“உன் வாயைப் பொத்து. வீணா காட்டாத கெத்து” பதிலுக்குப் பாடினாள் அக்ஷரா.
“அய்யோ போதும் உங்க கூத்து” இருவரது காதையும் செல்லமாக திருகினார் நீலவேணி.
“அண்ணி! எப்படி இருக்கீங்க?” என்று அக்ஷு வைஷுவிடம் கேட்க, “இப்போ தான் அண்ணி ஞாபகம் வருதுல்ல?” பொய்க் கோபத்துடன் பார்த்தாள் அவள்.
“ச்சோரி வைஷு! எல்லாம் உன் மக்கு புருஷனால தான்” என அவள் சொல்ல, “அடிப்பாவி. என் கிட்டேயே அவனை மக்குனு சொல்லுறியா அப்படினு சண்டை போட மாட்டேன். மக்கு இல்லை என்ன வேணா சொல்லிக்க” என்று கண்ணடித்தவளை வாயில் கை வைத்துப் பார்த்தனர் அனைவரும்.
“இது தப்பு நவி! நான் பாவம் தானே?” என விஷ்வா பாவமாகப் பார்க்க, “இல்லை. நான் பாவம் பார்க்க மாட்டேன்” என சொன்னவளுக்கு ஆராவின் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அவன் ஃபோனை செக் பண்ணி விட்டு இதை நம்புவதா இல்லையா என முடிவு செய்யலாம் என்றிருந்தாள். அவளது பெயர் ஹனி என்று இருக்காது என மனம் உறுதியாக நம்பியது. அதனால் இப்போது சற்று சகஜமாகவே பழகினாள். அப்படியே கோபமும் சிறு விலகலும் உள்ளுக்குள் இருந்தாலும் அதை மற்றவர் முன்னிலையில் வெளிப்படுத்தவும் அவளுக்கு விருப்பம் இல்லை.
“ஹரி எங்கே மித்து?” மித்துவைக் கேள்வியாக நோக்கினார் சிவகுமார்.
“டாடி ஹாஸ்பிடல் போயிருக்கார். அர்ஜன்ட் ஆப்பரேஷனாம். முடிந்தால் வந்துருவேன்னு சொன்னார் சிவாப்பா”
அவர் தலையசைப்புடன் சென்று விட, நீலவேணி சமையலறைக்குள் நுழைய அக்ஷு, வைஷுவும் அவரோடு சென்றனர்.
ஆழ்ந்த யோசனையில் இருந்த விஷ்வாவை, “மாப்ள!” என அழைத்தான் மித்து.
“சொல்லு மாப்ள” சிந்தை கலைந்து அவனைப் பார்த்தான் விஷு.
“என்ன டா யோசனை பலமா இருக்கு?”
“உன் தங்கச்சி கிட்ட லவ்வை எப்படி சொல்லுறதுனு திங்க் பண்ணுறேன். எந்த ஐடியாவும் கிடைக்க மாட்டேங்குது” தலையைச் சொறிந்தான் அவன்.
“வாயால் தான் சொல்லனும். இல்லேனா உனக்கு மட்டும் கையாலேயும் பேச வருமா?” கேலிக் குரலில் சொன்னான் மற்றவன்.
“ஆமாடா கையால் நல்லா பேச வரும். பேசிக் காட்டட்டுமா?” மித்துவைக் குனிய வைத்து முதுகில் அடி கொடுத்தான்.
“அடேய் உன் வீட்டு மாப்பிள்ளைக்கு இப்படித் தான் மரியாதை தருவியா? என்னா அடி” முதுகைத் தடவிக் கொண்டான் ஆடவன்.
“என்ன மாப்பிள்ளை வேப்பிலை ஆனாலும் எனக்கு நீ எப்போவும் ப்ரெண்டு டா. சோ நான் அடிப்பேன் உதைப்பேன்” கையை முறுக்கிக் காட்டினான்.
“எனக்கு என்னவோ நீ இதுக்கு எல்லாம் சேர்த்து என் பாப்பா கிட்ட அடிக்கு மேல அடி வாங்குறனு தோணுது”
“எஸ் டா! உன் பாப்பா இல்லை அவள் ஊதிப் போன பீப்பா. ஒல்லிக் குச்சி கையை வெச்சுக்கிட்டு என்னமா அடிக்கிறாள். அடி இல்லை இடி” இப்போது அடி பட்டது போல் தோளைத் தடவிக் கொண்டவனைப் பார்த்து களுக்கென நகைத்தான் மித்(தி)ரன்.
“இந்த வாய் இடி இல்லை மின்னல் தாக்கினால் கூட குறையாது. அப்படி ஒரு ஓயாத பேச்சு. அதுக்கு அடிக்கலாம் தானே அண்ணா?” எனக் கேட்டவாறு அக்ஷுவுடன் வந்தாள் வைஷு.
“ஈஈஈ நவிமா எல்லாம் கேட்டுட்டியா?” இளித்து வைத்தவனைக் கண்டு,
“டேய் உனக்கு இப்படி கமுக்கமா இருக்கவும் தெரியுமா? என்னமா பம்முற பாரு” வாயைப் பிளந்தாள் தங்கையானவள்.
“பாம்புன்னா படையும் நடுங்கும்னு சொன்னதை பொண்டாட்டினா தொடையும் நடுங்கும்னு மாத்தி வைக்கனும். நான் சொல்லுறது சரி தானே விஷு?” நண்பனிடம் கேட்டான் அருள்.
“ஹண்ட்ரட் பர்சன்ட் கர்க்ட் மாப்ள! உலகமே வியக்க சாகசங்கள் செய்யும் எப்பேர்ப்பட்ட வீரனையும் நடுங்கி, ஒடுங்கி வீழ்த்தக் கூடிய மாபெரும் சக்தி பெண். வீரனுக்கே அந்த கதின்னா சாதாரண பசங்க நாங்க எம்மாத்திரம்?” அச்சம் நிறைந்தது போல் கூறினான் விஷ்வா.
“போதும் விஷு. விட்டா தமிழ் ஆசிரியரா மாறி எனக்கு சங்ககால செய்யுள்களை படிச்சு தந்துருவீங்க போலிருக்கே. எனக்கும் செய்யுளுக்கும் ரொம்ப தூரம். இரண்டு வரி படிக்கும் போதே தூங்கி விழுந்துருவேன்” கொட்டாவி விட்டாள் விஷுவின் மனைவி.
“உனக்கு அப்படியே நேர் எதிர் விஷ்வா. அவனுக்கு தமிழ் பாடம்னா அவ்வளவு உசுரு. எங்க டீச்சர் ஒருத்தங்க அவ்வளவு இனிமையா செய்யுள்களை வாசிப்பாங்க. அதைக் கேட்கும் போது மனசுக்கு அப்படி ஒரு இதம். படிக்கும் காலத்தில் அதை மனப்பாடம் செய்து எக்ஸாம்கு அப்படி அழகா எழுதி ஃபுல் மார்க்கையும் விஷு எடுப்பான்” பள்ளிக் கால நினைவுக்குச் சென்று வந்தான் மித்ரன்.
“ஆமா வைஷு. இவனுக்கு சின்ன வயசுல படிப்புன்னாலே கசப்பு. ஆனால் மித்து வந்ததுக்கு அப்புறம் அவன் மித்துவை முந்திக்கிட்டு ஃபர்ஸ்ட் ராங்க் எடுப்பான்” விஷுவின் முடியைப் பிடித்து இழுத்தாள் அக்ஷு.
“அடியே குரங்கு குட்டி! எதுக்கு என் முடியைப் பிடிச்சு தொங்குற? இங்கே வா” அவளை மெல்ல தள்ளி விட்டான் அவன்.
“இவர் ஃபர்ஸ்ட் ராங்க் எடுக்கும் போது உங்களுக்கு கொஞ்சம் கூட பொறாமை இல்லனா கவலை வந்தது இல்லையாண்ணா?” மனதினுள் எழுந்த கேள்வியை மித்ரனிடம் கேட்டாள் வைஷ்ணவி.
“கண்டிப்பா இல்லை. என்னை முந்திக்கிட்டு வந்துட்டேன்னு அவன் கவலைப்படுவான். அவன் ஃபர்ஸ்ட் ராங்க் எடுத்தா எனக்கு சந்தோஷமா பெருமையா இருக்கும். ராங்க் ஷீட்டை இட்ஸ் ஃபார் யூ அப்படினு என் கிட்ட தான் கொடுப்பான். அப்போ அப்படி ஒரு ஃபீல்.
அவன் சொல்லி சொல்லி எங்க டீச்சர் கூட ஃபர்ஸ்ட் ராங்க் விஷ்வ மித்ரன்னு சொல்லி தான் அவனைக் கூப்பிடுவாங்க. அவனை முந்திக்கிறதை விட அவன் எனக்கு முன்னால் இருக்குறது எனக்கு ஹேப்பி. அன்ட் இது ஒன்னும் நான் விட்டுக் கொடுக்குறதால வர்ரது இல்லையே! அவனோட உண்மையான டெலன்ட்கு கிடைக்கும் வெற்றி”
மித்ரனின் வார்த்தைகளில் நெகிழ்ந்து அவனைப் பார்த்து புன்னகைத்தான் நண்பன். கேள்வி கேட்ட வைஷ்ணவியோ இப்பதிலில் பூரித்துப் போய் நிற்கலானாள்.
“ஒவ்வொரு நாளும் உங்க நட்பை நான் புதுசா பார்க்குறேன். இப்படியும் கூட ப்ரெண்ட்ஸ் இருப்பாங்களானு தோணுது” ஆத்மார்த்தமாகக் கூறினாள் வைஷு.
“ஏற்கனவே இறக்கை கட்டி பறந்துட்டு இருக்குங்க ரெண்டும். நீ வேற இப்படி சொல்லி ஏத்தி விட்டா இறக்கை இல்லாமலே வானத்தைத் தாண்டி தேவலோகத்திற்கே போயிருவாங்க” நக்கலாக வைஷுவிடம் இருவருக்கும் கேட்குமாறு சொன்னாள் அக்ஷு.
“போடி குட்டி சாத்தான்” விஷ்வா அவளுக்கு அடிக்க, “நீ அடிச்சா நான் கடிப்பேன்” பல்லைக் கடித்தாள் தங்கை.
“தயவு செஞ்சு என் மாப்ளய விட்று அம்முலு” என மித்து கும்பிட, “ஏன் மாப்பு! என் தங்கச்சி கிட்ட அடி மட்டுமில்லை நிறைய கடி கூட வாங்கிருக்கல்ல” இம்முறை நண்பனைக் கலாய்த்தான் விஷ்வா.
“இவள் கடிக்கலைனா தான் ஆச்சரியம். எப்போ பாரு ரவுடி ரங்கம்மா மாதிரி திரிவாள்” மனைவியை கள்ளச் சிரிப்போடு பார்வையிட்டான் மித்ரன்.
“கல்யாணத்துக்கு முந்தைய நாள் நான்னு நெனச்சு உனக்கு அடிச்சுட்டாளாமே. நல்லா பட்டுச்சா?” என்றான் விஷு.
“நீ என்னடா எங்க வீட்டுக்கு வந்து பண்ணி வெச்ச? அங்கே என்ன நடந்தது?” என மித்து கேட்கவும் நடந்ததை ஒப்புவித்தான்.
“அந்த அங்கிள் ரொம்ப டீசன்டானவர். அவருக்குப் போய் சரக்கு பாட்டில் வாங்கி கொடுக்க பார்த்தியே”
“யாருக்கு தெரியும் அவர் அந்த தண்ணி கேட்டார்னு? பார்க்க சேவ் பண்ணாம தேவதாஸ் மாதிரி இருந்தாரா லவ் ஃபெய்லியர்ல குடிக்க போறார்னு நெனச்சுட்டேன்” தோளைக் குலுக்கினான் விஷ்வா.
“அதை விட்டாலும் பாட்டியைப் போய் ஹக் பண்ணிருக்கியே. இப்போ என்னைக் கண்டா பேயைக் கண்ட மாதிரி அந்த ஓட்டம் ஓடி போய் ஒளிஞ்சுக்குது” தலையிலடித்துக் கொண்டான் மித்து.
“டேய் அண்ணா! உன்னை ஆன்ட்டி ஹீரோனு நெனச்சேன். நீ பாட்டி ஹீரோ ஆகி இன்னும் ஒரு படி மேலே போயிட்ட” கலகலத்துச் சிரித்த அக்ஷராவோடு சேர்த்து தானும் சிரித்தாள் வைஷ்ணவி.
இப்படியே இவர்களது லூட்டி தொடர சாப்பிடும் போது கூட சேட்டைகள் தொடர்ந்தன.
……………..
சமையலறையில் தாயுடன் கதையளந்து கொண்டிருந்தாள் அக்ஷரா. அங்கு வந்த மித்துவிடம், “ஏதாவது வேணுமா அருள்?” என்று கேட்டாள் மனைவி.
“அ..அது ” அவனது தடுமாற்றம் உணர்ந்த நீலவேணி, “தண்ணி குடிக்க வந்திருப்பான் மா. நீ கொடு” என மெல்ல நகர்ந்து சென்று விட்டார்.
“இப்போ சொல்லட்டா என்ன வேணும்னு? நீ தான் வேணும்” என அவளை பின்னால் இருந்து கட்டிக் கொண்டான்.
“ஹேய் இது கிச்சன்” தடுமாற்றத்துடன் உரைத்தாள் அவள்.
“எஸ்! நான் பெட்ரூம்னா சொன்னேன்?” அவளது இடையில் விரல்களால் ஊர்வலம் நடாத்தினான் காளை.
“யாராவது வந்திட போறாங்க டா. விடு” விலக முயற்சித்தாள் மங்கை.
“எல்லாம் மாத்தி கேட்குது அம்முலு. விடு விடுனு சொல்லுறது விடாத விடாதன்னு தான் காதில் விழுது”
“சரி அப்போ விடாத” அவனது கையை விலக்க முயற்சிக்க, அதுவோ அவள் கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் இடையில் சில்மிசம் புரியத் துவங்கிற்று.
“இப்போ கரக்டா கேட்டுச்சு டி. நீயே சொல்லிட்டல்ல இனிமேல் நானே விட நினைச்சாலும் விட மாட்டேன்” அவன் மூச்சுக் காற்று அவளது குளிர்ந்த தேகத்துக்கு உஷ்ணம் சேர்த்தது.
“அருள்…!! யாராவது வந்துர போறாங்க டா”
“வந்தா என்ன? நான் புருஷன் தானே?”
“புருஷ் ஆனது தான் இங்கே ப்ராப்ளம். முன்னெல்லாம் சும்மா இருந்த. இப்போ ஓவர் ஆட்டம் போடுற” அவன் மார்பில் குத்தினாள் அக்ஷு.
“லைசன் கிடைச்சும் பக்கத்தில் வண்டியை வெச்சு யாராச்சும் பார்த்திட்டு இருப்பாங்களா? எடுத்துக்கிட்டு கெத்தா, ஸ்பீட்டா ஓட மாட்டாங்க?” பிறை நெற்றியை விரல்களால் அளவிட்டான் அவன்.
“ஓடுவாங்க, ஆர்வக்கோளாறில் எங்காவது போய் முட்டிக்காம இருந்தால் சரி. வேற எக்ஸாம்பிளே இல்லாம வண்டி, லைசன்னு சொல்லுற” முறைத்துப் பார்த்தாள் பெண்ணவள்.
“முறைக்காத முறைப்பழகி! என்னை மயக்குற டி” அவளைக் கைகளில் அலேக்காக ஏந்தினான் மித்ரன்.
“ப்ச் மன்மதனே!” என அழைத்து அவன் முகம் பார்த்தவளோ காதல் சொரியும் அவன் விழிகளில் சிறைக் கைதியானாள்.
இரு பார்வை அம்புகளும் அசுர வேகத்தில் தாக்கிக் கொள்ள, பெண்ணவள் பார்வை வீச்சில் ஆணவன் இதயம் பந்தயக் குதிரையாய் அடித்துக் கொண்டது.
“அடியே குள்ளச்சி” என தங்கையைத் தேடி வந்தவனின் முகத்தில் ஈயாடாமல் அப்படியே யூடர்ன் அடித்துத் திரும்பி நின்றான் விஷ்வா.
அங்கு வந்த வைஷு அவனைக் கண்டு, “எதுக்கு பேயறைஞ்சா மாதிரி இருக்கீங்க?” என்று கேட்க, “ஒன்னும் இல்லை மா” என்றான் இன்னும் பயந்த முகபாவனையில்.
“சரி நான் அண்ணியை பார்த்துட்டு வரேன்” என்று சமையலறை நோக்கி நடக்கப் போனவளை,
“வேணாம் போகாத நவி” என்று கையைப் பிடித்துத் தடுத்தான் விஷு.
“எதுக்கு? ஏன் போகக் கூடாது?”
“அதை என்னால சொல்ல முடியாது”
“நீங்க சொல்லாமல் உங்க ஆவியா வந்து சொல்லும்? கையை விடுங்க”
“அது.. உள்ளே அக்ஷு.. மித்து” என உளறிக் கொட்டினான் அவன்.
“அக்ஷு உள்ளே இருக்கா. அண்ணா ரூம்ல இருந்தாங்க” என்று உள்ளே சென்றவள், அக்ஷுவை மித்து தூக்கி இருப்பதைப் பார்த்து நெஞ்சில் கை வைத்து ஓடி வந்தவள் விஷ்வாவின் மேல் மோதிட அவளைத் தாங்கிப் பிடித்தான் கணவன்.
கண்களை மூடி இருப்பவளைப் பார்த்து “நான் கூட பேயறைஞ்சா மாதிரி தான் ஆனேன். நீ மயக்கம் போட்டே விழுந்துட்டியா நவி?” என அவள் கன்னம் தட்டினான்.
“நான் மயங்கலை. இதுக்கு தான் போக வேணானு சொன்னீங்களா?” பாவமாகக் கேட்டாள் காரிகை.
“ஆமா மடசாம்பிராணி! இதுக்குத் தான் போக வேணானு சொன்னேன்”
“எனக்கு எங்கே இப்படி ஒன்னு நடக்குதுன்னு தெரியும்? அச்சோ வாங்க அப்படியே போயிடலாம்” என்று சென்றவள் கால் தடுக்கி விழ,
“ஏய்ய் பார்த்து டி” என அவள் கையைப் பிடித்து இழுக்க, அவன் மார்பில் மோதி நின்றாள்.
தன்னவள் முகம் பார்த்து அவன் இதழ் விரிக்க, அப்புன்னகையில் தன்னிலை மறந்து அவனது தோளில் ஒற்றைக் கை வைத்து அவனையே பார்த்தாள்.
அவளது இந்த ஸ்பரிசம் கூட தன்னை சிலிர்க்க வைக்க, ‘ஹனி லவ் யூ டி. இதே வார்த்தையை உன் கிட்ட ரிசப்ஷன் முடிந்ததுமே சப்ரைஸா சொல்லுவேன்….!!’ என உள்ளுக்குள் முணு முணுத்தான் விஷ்வஜித்.
வெளியே வந்த அக்ஷராவும் மித்துவும் இருவரும் இருந்த நிலை கண்டு விழி விரித்து மறு புறம் திரும்பிக் கொள்ள, அதைக் கண்டு கொண்டவனாய் மனைவியை விடுவித்து, “திரும்புங்க காதல் சிட்டுக்களே! உங்களை அதை விட ஒரு போஸ்ல பார்த்துட்டோம்” என்றான் விஷ்வா.
“என்ன? பார்த்துட்டியா?” என அருள் திகைக்க, “இதுக்கு தான் உன் கிட்ட சொன்னேன். போடா எனக்கு வெட்கமா வருது” முகத்தை மறைத்துக் கொண்ட அக்ஷராவைக் கண்டு,
“மித்து! யாருடா இது புது வைஃப்? என் தங்கச்சி அக்ஷரா எங்கே போனா? அவளுக்குனா இப்படி வெட்கப்படவே தெரியாது” என அண்ணன் கிடைத்த சாக்கில் வைத்து செய்ய,
“போடா பன்னி” காளி அவதாரம் எடுத்து அவனை அக்ஷு மொத்தி எடுக்க, மெல்லிய சிரிப்பலை அவ்விடத்தை நிறைத்தது.
நட்பு தொடரும்….!
✒️ ஷம்லா பஸ்லி