தேன் 37
விக்ரமின் கண்கள் இன்னும் சிவந்து கொண்டிருந்தன. அவனது உள்ளத்தில் எரியும் கோபமும், இதயத்தில் ஊர்ந்த வலியும் ஒன்றாக சேர்ந்து, கண்ணீரோடு வெளிப்பட்டன.
அவன் கைகளை இறுக்கிப் பிடித்ததால், நரம்புகள் புடைத்து எழுந்து நின்றன. அந்தக் காட்சி, அவன் மனதில் கொதிக்கும் துயரத்தையும், சினத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தியது.
அந்த வேளையில் மகிழ்மதி அவனை நோக்கி,
“பாத்தியா விக்ரம்… உங்க அப்பா அவர் ஒருபோதும் நல்ல மகனாகவும் இல்லை… நல்ல அப்பாவாகவும் இல்லை அவரோட வாழ்வு முழுவதும் கபடம், வஞ்சகம், கொடூரம் தான்.” என்று கடினத்தன்மையுடன் கூறினாள்.
இந்த வார்த்தைகள் விக்ரமின் உள்ளத்தில் ஒரு மின்னல் அடித்தது போல இருந்தது. அவன் உதடுகள் நடுங்கின.
“அம்மா… எனக்கே புரியல மண்ட வெடிக்குது என்னோட வாழ்க்கை முழுக்க பொய் மாதிரி இருக்கு,” என்று சொன்னவனின் குரல் துடித்தது.
அந்தக் கணமே சிங்காரம் சீற்றத்தோடு முன்னே வந்தான். அவனது கண்களில் கொடூரம் பிளந்து எரிந்தது.
“ஓய் மகிழ்மதி! என்ன டிராமா பண்றியா என் புள்ளைய எனக்கு எதிரா திருப்பி விட பாக்குறியா முதல் இந்த வெத்துப் பேப்பர்ல நீ உடனே சைன் வை! இல்லன்னா…” என்று சிங்காரத்தின் குரல் முழக்கத்தில் கரைந்தது.
சிங்காரம் கையில் இருந்த காகிதத்தை மேசை மேல் அடித்து வைக்க, அந்த சத்தம் அறை முழுக்க ஒலித்தது.
“இல்லன்னா உனக்கு என்ன ஆகும்னு உனக்கே தெரியும். வை சீக்கிரம்!” என்று பற்கள் கடித்து உருமினான் சிங்காரம்.
மகிழ்மதி அவனை நேராக எரிக்கும் பார்வை பார்த்தாள். அவளது மனதில் அச்சம் இருந்தாலும், அதைவிட பெரிதாக இருந்தது நீதிக்கான பிடிவாதம்.
“சிங்காரம்… நீ எவ்வளவு கத்தினாலும், என்னை அச்சுறுத்தினாலும், நான் பொய்யா சைன் வைக்க மாட்டேன் உன் பாவத்துக்கு நான் துணை நிற்க மாட்டேன்,” என்று உறுதியோடு கூறினாள்.
அறையில் சில நொடிகள் அமைதி நிலவியது. புயலுக்கு முன் வரும் அமைதி போல அந்த அமைதியின் பின்பு வந்த சம்பவம் யாருமே எதிர்பாராதது.
சிங்காரம் முகத்தில் ஒரு கொடூரமான சிரிப்பை வரவழைத்தான்.
“சரி மகிழ்மதி… நீ சைன் வைக்க மறுக்கிறாய் சரி இப்போ நீ சைன் வைக்காமல் எப்படி தப்பிக்கிறேன்னு பார்க்கிறேன்…” என்று சொல்லி அவன் திடீரென பக்கத்தில் நின்ற சேகரை நோக்கி கண் அசைத்தான்.
அந்த சைகையில் மின்னல் போலச் செயல்பட்டான் சேகர். அடுத்த கணமே எதிரில் இருந்த அறையின் பழைய மர ஜன்னல்கள் சடசடப்புடன் திறந்து கொண்டன.
மகிழ்மதியின் இதயம் திடீரென நின்றது போலிருந்தது. அவள் பார்வை அந்த ஜன்னலுக்குள் விழுந்ததும், இரத்தமே உறைந்தது.
மின் விளக்கின் கடுமையான ஒளியில் தெரிந்த காட்சி அவளுக்கு கனவா நனவா என்று புரியவில்லை.
அங்கு கருணாகரன், காயத்ரி, நிவேதா மூவரும் கயிற்றால் நாற்காலியில் கட்டப்பட்டிருந்தனர்.
அவர்களது வாயில் துணி அடைத்துவிட்டதால், எந்தக் கூக்குரலும் வெளிவரவில்லை. அவர்கள் கண்களில் மட்டுமே அச்சமும், பரிதவிப்பும் பெரிதாகத் தெரிந்தது.
காயத்ரியின் முகம் கண்ணீரால் நனைந்திருந்தது. அனைத்து விடயங்களையும் அவர்கள் எதிரில் இருக்கும் அறையில் இருந்து கேட்டுக்கொண்டு தான் இருந்தனர்.
அதன் மூலம் மூத்த மகள் தான் மகிழ்மதி என்று அறிந்ததும் பெற்றோர்கள் இருவரின் கண்களிலும் பிரிவால் ஏற்பட்ட துயர் நன்கு விளங்கியது.
நிவேதாவிற்கும் அதிர்ச்சியும், பயமும் சேர்ந்து புதுவித உணர்வுகள் உடலினுள் பாய்ந்தன. தன் மகளை பார்த்ததும் காயத்ரியும், கருணாகரனும் துடிக்கத் தொடங்கினார்கள். ஆனால் கயிறுகள் அவர்களை அப்போதும் பிரித்து வைத்திருந்தது.
கருணாகரனின் பார்வையில் வெறுப்பு, கோபம், தன்னால் எதையும் செய்ய முடியாத நிலை அவரை மேலும் வருத்தியது.
நிவேதா பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தாள், அவளது தலைமீது கட்டப்பட்ட கட்டில் இருந்து இன்னும் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
அவர்களுக்குப் பின் மூன்று ரவுடிகள் நின்றிருந்தனர். கையில் இருந்த துப்பாக்கிகளை நேராக மூவரது தலையில் குறி வைத்து பிடித்திருந்தனர்.
சின்ன அசைவோ சின்ன சைகையோ வந்தாலும், துப்பாக்கி வெடிக்கத் தயாராக இருந்தது.
அந்தக் காட்சி மகிழ்மதியின் உள்ளத்தைக் கிழித்தது.
“அப்பா.. அம்மா… நிவேதா…!” என்று அவள் குரல் நின்றுவிட்டது.
சிங்காரம் அந்த வேதனையை ரசித்தவனாகச் சிரித்தான்.
“இப்போ புரியுதா மகிழ்மதி? நான் ரொம்ப ரொம்ப கெட்டவன் உன் கண்ணுக்கு முன்பே உன் அன்பு உறவுகள் சாவை காட்டிட்டேன் பாத்தியா..? நீ செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம் இந்த பேப்பர்ல சைன் பண்றது மட்டும்தான் இல்லன்னா…” என்று அவன் சைகை செய்தான்.
ரவுடிகளில் ஒருவன் உடனே துப்பாக்கியின் பாதுகாப்பு அமைப்பை தள்ளி, கருணாகரனின் கன்னத்தில் துப்பாக்கி மூக்கை நெருங்கவைத்தான்.
அதனைப் பார்த்ததும் மகிழ்மதியின் இதயம் சிதறியது. உடனே
“வேணாம் வேணாம் அவங்களை விட்டு உனக்கு என்ன இப்போ சைன் தானே வைக்கணும் இதோ..” என்று அவள் கையில் வைக்கப்பட்டிருந்த பேப்பரான வெற்று காகிதத்தை உற்றுப் பார்த்தாள். ஆனால் அந்த வெற்று காகிதம் ஒரு உயிருக்கு சமம், ஒரு குடும்பத்தின் எதிர்காலம்.
மகிழ்மதியின் கைகள் நடுங்கின. அவள் கண்ணீரால் விழிகளை மூடிக் கொண்டாள்.
மகிழ்மதியின் நெஞ்சில் பதட்டம் புயலாய் வீசியது. ரவுடிகளின் துப்பாக்கி முனை காயத்ரி, கருணாகரன், நிவேதாவை குறித்திருந்தன. அந்தக் காட்சி அவளது மனதை உலுக்கியது.
‘இல்லை… இந்த அற்ப சொத்துக்காக என்னால் அவர்களை இழக்க முடியாது…’ என்று நினைத்தவள், நடுங்கும் விரல்களால் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த பேனாவை எடுத்தாள்.
அவளது கை அதிர்ந்து கொண்டிருந்தாலும், சிங்காரம் அந்தச் சலனத்தைப் பார்த்து வெற்றியின் சிரிப்பை முகத்தில் பூசிக் கொண்டான்.
“அப்படித்தான் மகிழ்மதி… அப்படி தான் சைன் வை! உனக்கு வேற வழியே இல்லை…” என்று மென்மையான குரலில் கூறினான்.
மகிழ்மதி பேனாவை வெற்று பேப்பருக்கு அருகில் கொண்டு சென்றாள்.
ஒரு நொடிக்கு அவள் கண்கள் காகிதத்தில் நிலைத்தன. அடுத்த நொடியே அவள் பார்வை சிங்காரத்தின் முகத்தை திமிராக பார்த்தது.
அவள் கண்கள் திடீரென தீ போல எரிந்தன. யாருமே எதிர்பாராத வகையில், அவளது உதடுகளில் சிரிப்பு பரவியது.
பெரும் சிரிப்புடன் அவள் திடீரென விசில் அடித்தாள்.அந்த சத்தம் அறை முழுக்க ஒலித்தது.
சிங்காரம் அதிர்ச்சி அடைந்தான்.
“சைன் பண்ண சொன்னா என்னடி பண்ற..?!” என்று சீற்றத்தோடு முன் நகர்ந்து அவள் அருகே பாய்ந்தான்.
அந்தக் கணமே ரகுவரன் தன்னுடைய கரத்தை நீட்டி அவனைத் தடுத்து நிறுத்தி,
“நில் சிங்காரம்! அவள் யாருக்கோ சிக்னல் கொடுத்திருக்கிறாள்!” என்று ரகுவரனின் குரல் முழக்கத்துடன் வெளிப்பட்டது
அவனது வார்த்தை முடிவதற்குள், திடீரென சுற்றிலும் தோட்டா சத்தங்கள் முழங்கின.
ஜன்னல்கள், கதவுகள், கூரை எங்கிருந்தோ பாய்ந்த குண்டுகள் அந்த இடத்தில் அலைமோதின. ஒலி மட்டும் அல்ல, புகை வாசனையும் திடீரென அறை முழுக்க பரவியது.
ரவுடிகள் அச்சத்தில் பின்சென்று, மறைந்து கொண்டனர். துப்பாக்கிச் சூட்டில் அனைத்து ரவுடிகளின் துப்பாக்கிகளும் தரையில் விழுந்தன.
கட்டப்பட்டிருந்த கருணாகரன், காயத்ரி, நிவேதாவின் கண்களில் திடீரென நம்பிக்கை ஒளிர்ந்தது.
மகிழ்மதி சிரித்தவாறே, “சிங்காரம்… உன் விளையாட்டு இங்கேயே முடியப் போகுது..,” என்று உவகையுடன் கூச்சலிட்டாள்.
சிங்காரத்தின் முகம் சாம்பல் நிறம் பிடித்தது. அவனது கண்களில் கோபமும், பயமும் போட்டி போட்டுக் கொண்டு அச்சுறுத்தியது.
ஆனால் வெளியில் இருந்து ஒலிக்கும் சத்தங்கள், யாரோ இந்த இடத்தை சூழ்ந்துவிட்டதை வெளிப்படுத்தின.
அறை முழுவதும் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.
ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு நொடியும், உயிரும் மரணமும் நடுவில் நிற்கும் அளவுக்கு பயத்தை கண்முன் காட்டியது.
துப்பாக்கி சத்தங்கள் அறையை அதிர வைத்துக்கொண்டிருந்த அந்த உச்சநேரத்தில் ஜன்னல் வழியே புகுந்த சிவப்பு நீல விளக்குகள் அறை முழுக்க ஒளிவீசியது.
சிங்காரமும் அவனது ரவுடிகளும் அதிர்ச்சியுடன் கதவுப் பக்கம் திரும்பிப் பார்த்தனர்.
அந்த நேரமே மின்னல் போலக் குரல் எழுந்தது.
வாசலில் இருந்து உள்ளே நுழைந்த உருவத்தைப் பார்த்தவுடன், அங்கிருந்த அனைவரின் இதயமும் ஒரே நொடியில் தடுக்கிப் போனது.
அவனது கண்கள் நெருப்பு போல எரிந்தன.
அவனது தோள்களில் பெருமையாகத் திகழ்ந்தது காக்கி சட்டை. அவன் தான் கார்த்திகேயன்!
அவனை அந்த வேடத்தில் பார்த்ததும், மகிழ்மதி உறைந்து போனாள்.
“கார்த்திகேயன்…” என்று அவளது உதடுகள் தன்னியல்பாகச் சொல்லின.
ஆனால் சிங்காரமும் அவனது கூட்டமும் கண்களில் மின்னல் போன்ற அதிர்ச்சியுடன் பின்சென்றனர்.
“இவன்… இவன்… போலீசா?!” என்று சிங்காரம் திகைத்தான்.
கார்த்திகேயனின் இருக்கையிலும் உள்ள கன் ஒருவரையும் விடாமல் பதம் பார்த்தது.
ஒரு கையால் துப்பாக்கியை உயர்த்தியவன், மற்ற கையால் சைகை செய்தவுடன் போலீசார் பல திசைகளில் இருந்து பாய்ந்து வந்தனர்.
நொடிப்பொழுதில் சிங்காரமும் அவனது ரவுடிகளும் துப்பாக்கி முனைகளின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
“கைகளை மேலே தூக்குங்க!” என்று கார்த்திகேயனின் குரல் இடிமுழக்கம் போல ஒலித்தது.
அந்த குரலில் இருந்த கட்டுப்பாடும் அதிகாரமும், அங்கிருந்த ஒவ்வொருவரின் நெஞ்சையும் பிளந்தது.
ரவுடிகள் பதற்றத்தில் கைகள் நடுங்கியவாறே மேலே தூக்கினர்.
சிங்காரம் மட்டும் அவன் கண்களில் கோபத்தையும், பயத்தையும் கலந்த வெளிச்சத்தோடு கார்த்திகேயனைப் பார்த்தான்.
அந்த நொடியே அறை முழுவதும் அமைதி சூழ்ந்தது.
சற்று முன்பு உயிருக்கும், மரணத்திற்கும் நடுவில் நின்றிருந்தவர்களான கருணாகரன், காயத்ரி, நிவேதா இப்போது நம்பிக்கையின் ஒளியில் மூழ்கினர்.
மகிழ்மதிக்கு அப்போதுதான் சீரான சுவாசமே வெளிவந்தது.
அவளது கண்களில் நீர்த்துளிகள் வழிந்தன. கார்த்திகேயன் நொடியில் அனைவரின் உயிரையும் பாதுகாத்து விட்டான்.
கார்த்திகேயனின் குரல் இடிமுழக்கம் போல ஒலித்தது.
“இவங்க எல்லாரையும் உடனே ஜீப்புக்கு கூட்டிப் போங்க!”
அவரின் ஆணையின்படி ரவுடிகளை அடக்கி, கயிறுகளால் கட்டியபடி இழுத்துச் செல்லத் தொடங்கினர்.
அந்த கணத்தில் தான் அனைவரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது.
விக்ரமின் கண்களில் நெருப்பு பளபளத்தது. அவனது நெஞ்சுக்குள் பல ஆண்டுகளாகக் கொதித்துக் கொண்டிருந்த சினமும், துயரமும் ஒரே புயலாய் எழுந்தது.
திடீரென அவன் முன்னே நின்றிருந்த காவலரின் கையிலிருந்த துப்பாக்கியை பறித்தான்.
அதனை மகிழ்மதி பார்த்ததும்,
“விக்ரம்! இல்ல!” என்று கூச்சலிட, அடுத்த நொடியே துப்பாக்கிச் சத்தம் அறையை அதிர வைத்தது.
ஒவ்வொருவரின் இதயமும் அந்த ஒலியோடு வெளியே வந்து விழுந்தது போல இருந்தது.
சிங்காரத்தின் நெஞ்சைத் துளைத்த அந்த தோட்டா அவனை ஒரு நொடியில் தரையில் உருண்டு விழச் செய்தது.
அவனது கண்கள் நிமிடங்கள் முன் காட்டிய கொடூரம் இப்போது மரணத்தின் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன.
விக்ரம், துப்பாக்கியை இன்னும் பிடித்தபடி, மெதுவாக முன்னே வந்தான்.
அவனது முகம் சிவந்து, கண்கள் நீர்த்துளிகளால் பளபளத்தன.
சிங்காரத்தின் உயிரற்ற உடலை நோக்கி, நடுங்கிய குரலில் கத்தினான்.
“எங்க அம்மாவ இரக்கமே இல்லாம கொன்னதுக்கான பதில் இதுதான்…”
அந்த ஒரு சொல், அனைவரின் உள்ளத்தையும் வதைத்தது.
விக்ரமின் மனக்குமுறலும் அவனது துயரமும் அந்தத் பலி வெறியால் அழிக்கப்பட்டது.
துப்பாக்கியை மெதுவாக தரையில் போட்டவன், இரு கைகளையும் உயர்த்தினான்.
அவன் முகத்தில் காணப்பட்டது குற்றவுணர்ச்சியல்ல ஒரு விடுதலை, அன்னையின் சாவிற்காக நீதி பெற்ற நிம்மதி.
“இப்போ என்னை அரெஸ்ட் பண்ணுங்க, கார்த்திகேயன்…” என்று அமைதியாகக் கூறினான்.
“ஒரு வேளை விக்ரம் தாயின் அன்பில் வளர்ந்திருந்தால் இப்படி பெண்கள் மீது தீய பார்வை செலுத்தி இருக்க மாட்டானோ..” என்று மகிழ்மதிக்கு தோன்றியது.
அந்தத் தருணத்தில் அறை முழுவதும் கணம் நிறைந்த காற்று வீசியது போல இருந்தது.
அனைவரது இதயங்களும் ஒரே சுவாசத்தில் நிறுத்தப்பட்டபடி இருந்தன.
அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து அனைவரையும் வெளியேற்றி கமிஷனர் ஆபீஸில் அனைவரும் நின்றிருந்தனர்.
ஒவ்வொருவரிடமும் அங்கு நடந்தவை பற்றி வாக்குமூலம் வாங்கிய பின்பு வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
கமிஷனர் முன் நின்ற மகிமதியை பார்த்து,
“வெல்டன் மகிழ்மதி நீங்க இல்லன்னா இது சாத்தியமே இல்ல ஆனா உங்களுக்கு தெரியாம நான் தான் கார்த்திகேயன அண்டர் கவர் ஆஃபீஸரா இந்த கேஸ் சம்பந்தமா நான் வைத்திருந்தேன் எனக்கு தெரியும் எங்க டிபார்ட்மெண்டிலேயே ஒரு கருப்பு ஆடு இருக்குன்னு அதை கண்டுபிடிக்க தான் முக்கியமா கார்த்திகேயன் நியமித்தேன் இந்த கேஸ்ல உங்க உயிரையே நீங்க விட துணிஞ்சி இருக்கீங்க உங்கட கடமை உள்ளத்தை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்..” என்று கூற சிறு தலை அசைப்புடன் அதனை ஏற்றுக்கொண்டாள்.