💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 38
பல்கோணியில் நின்றிருந்தான் சத்ய ஜீவா. அவன் உள்ளத்தில் ஒரு வித அலைப்புறுதல். நிச்சயம் இதற்குக் காரணம் அவள் ஒருத்தியே!
தேவன் வந்து பேசி விட்டுச் சென்ற பிறகும் கூட அவள் அறையினுள் வரவில்லை. சத்யா ஹாலுக்குச் சென்று பார்க்க, ஜனனி சமயலறையில் வேலையாக இருப்பது தெரிந்தது.
இருந்தும் அவளைத் தேடி அங்கு செல்ல நினைக்காமல் மீண்டும் அறையினுள் அடைந்து கொண்டான்.
அவனருகில் வந்த ஜனனி பால்கணி வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, தொண்டையைச் செருமினான் அவன்.
சுற்று முற்றும் திரும்பி நோக்கியவளை, அவன் என்ன என்பதாகப் பார்க்க “தண்ணி இருக்கானு பார்த்தேன். இருமல் வருதுல்ல” என்றாள் ஜனனி.
“ஹேய்” இம்முறை கோபத்துக்குப் பதில் சிரிப்பு வர இதழ் கடித்து அதை அடக்கிக் கொண்டு புருவத்தை நீவி விட்டான் சத்யா.
“என்ன சார்?” புருவம் உயர்த்திட, “நான் பண்ணுனதை எனக்கே பண்ணுறியா? உன்னைக் கூப்பிட தான் அப்படி பண்ணேன்” என்றவனை அடக்கப்பட்ட நகையோடு ஏறிட்டாள்.
“ஓஓ ரியல்லி? நான் கூட தொண்டை கரகரக்குதோனு நெனச்சிட்டேன். அப்பறம் ஜனனின்னு பெயர் வெச்சிருக்காரு எங்கப்பா. ஜானுனு சொல்லி நீங்க வெளியே கூப்பிட்டதா ஞாபகம். தனிமையில் மட்டும் தொண்டையை செருமுறீங்க. இது என்ன நியாயம்?” கையை அசைத்துக் கேட்க,
“சரி சரி. ரொம்ப பேசாத” அவன் முறைத்துப் பார்க்க, “வராத விஷயத்தை ட்ரை பண்ணாதீங்க. உங்களுக்கு கோபமே வரல. சும்மா முறைக்கப் பார்க்கிறீங்க” என்றவள் “எதுக்காக என்னைக் கூப்பிட்டீங்க?” என்று வினவினாள்.
“தாங்க் யூ சோ மச் ஜானு! தேவா என் கிட்ட வந்து பேசினதுல மனசுக்கு நிம்மதியா இருந்தது. ரொம்ப நாள் கழிச்சு அவன் என்னை ஹக் பண்ணான். அந்த மூமண்ட் என்னால மறக்கவே முடியாது.
அவனுக்கு என்ன தான் என் மேல கோபம் இருந்தாலும் வந்து சாரி கேட்டு இவ்ளோ தூரம் இறங்கி வந்தான்னா அதுக்கு காரணம் நீ தான். என் கிட்ட ரூபன் எல்லாமே சொன்னான். எல்லாத்தையும் விட அவனைத் தனியா கூப்பிட்டு சொன்னது தான் ஹார்ட் டச் பண்ண விஷயம்” என்று அவன் சொல்ல,
“உங்க ஹார்ட்டை டச் பண்ணது தான் என் ஹார்ட்டை ப்ரேக் பண்ணுன விஷயம். தெரியுமா? எங்கப்பாவுக்கு சட்டுனு கோபம் வரும். அப்போல்லாம் என்னைத் திட்டிடுவார். கிட்ட யார் இருந்தாலும் அவருக்கு கவலை இல்லை.
ஒரு தடவை கல்யாண வீட்டுக்கு போயிருந்தோம். ரிலேடிவ்ஸ், ஊர்க்காரங்க, டீச்சர்ஸ், தெரிஞ்ச ஆட்கள்னு நிறைய பேர் வந்திருந்தாங்க. என் கால் தவறி ஒரு கதிரை கீழே விழுந்துருச்சு. அதுக்கு கண்ணு தெரியலயா? இந்த மாதிரி சின்ன பிள்ளைத்தனமா நடந்துக்காதனு அத்தனை பேர் முன்னாடி முகத்தில் அடிச்ச மாதிரி பாய்ஞ்சு என்னென்னவோ சொல்லி திட்டிட்டார்.
அத்தனை பேர் பார்வையும் என் மேல விழுந்த மாதிரி இருந்துச்சு. என் ஃப்ரெண்ட்ஸ்லாம் அதை சொல்லியே பல நாள் ஸ்கூல்ல ரோட்டுல எல்லாம் கிண்டல் பண்ணாங்க. அந்த நாளை என்னால மறக்கவே முடியாது. மத்தவங்க முன்னால அழவும் முடியாம, அழுகையை கட்டுப்படுத்தவும் முடியாம நின்னேன்.
அன்னிக்கு முடிவு பண்ணேன் யாரையும் இந்த மாதிரி நடத்தக் கூடாதுன்னு. தப்பு பண்ணுனா திட்டலாம், திருத்தலாம். ஆனால் அதை மத்தவங்க முன்னாடி இல்லாம தனியா பண்ணனும்னு நான் நெனச்சுக்கிட்டேன். நான் உணர்ந்த வலியை இன்னொருத்தருக்கு கொடுக்க விரும்பவே மாட்டேன்” நிறைய பேசினாள். தன் மனதில் இருந்த பாரத்தை அவனிடம் பகிர்ந்து கொண்டாள்.
சத்யாவுக்கு அவளது மனநிலை புரியவே செய்தது. அவளது குடும்ப சூழல் ஒன்றும் தன்னைப் போல் சுமுகமாக இருந்ததில்லை என்பதை உணர்ந்தான்.
அவனது குடும்பம் அப்படியல்ல. அன்பு நிறைந்த தாய், நட்பாய் பழகும் தந்தை, குறும்புத்தனமான சகோதரர்கள் என அன்னியோன்யமான குடும்பம். மகேந்திரனின் இறப்பு மற்றும் இனியாவின் பிரிவுக்குப் பின்னரே அது தலை கீழாக மாறியது.
அதுவரை சந்தோஷத்திற்குக் குறைவேதும் இருந்ததில்லை. ஆனால் ஜனனியின் சிறுபராயம் அப்படியல்ல, தந்தையின் கண்டிப்புக்கு மத்தியில் வளர்ந்தவளுக்கு சின்ன ஆசைகள் கூட நிறைவேறாமல் போயிருக்கும் என்பதை அறிந்து கொண்டான் சத்யா.
எல்லோருக்கும் ஒரே மாதிரி குடும்பம், ஒரே குணமுள்ள குடும்பத்தினர், ஒரே மாதிரியான வாழ்க்கை அமைந்து விடுவதில்லையே. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாக இருக்கும். அனைத்திலும் மகிழ்வும் இருக்கும் மனக்கஷ்டமும் இருக்கும் என்பதுவே நிதர்சனம்.
“எது எப்படியோ உன்னால நான் இன்னிக்கு சந்தோஷமா இருக்கேன். நீ எனக்கு என்னென்னவோ பண்ணுற. உனக்கு நான் எதுவுமே பண்ணதில்ல” என்றவனுக்கு ராஜீவ் விடயம் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் அவளது குணநலன்களில் நலவைக் கண்டு கொண்டான்.
“எதுவுமே பண்ண வேண்டாம்னு நான் சொல்லல. பதிலுக்கு நான் கேட்டபடி ஒரு வேலை தேடிக் கொடுங்க” என்றதும் ஒரு கணம் யோசித்தவன், “பக்கத்து தெருவில் ஒரு நர்சரில எனக்கு தெரிஞ்ச டீச்சர் இருக்கா. அதற்கு இன்னொரு டீச்சர் வேணும்னு கேட்டிருந்தாங்க. உனக்கு விருப்பம் இருந்தா அங்கே போ” என்றதும் அவள் பூவாக மலர்ந்து போனாள்.
“வாவ்! எனக்குமே இந்த கம்பனி, அகௌண்ட்னு இருந்து போரடிச்சுது. சின்னப் பசங்களுக்கு படிச்சு கொடுக்கிறது மனசுக்கு நிம்மதியா சந்தோஷமா இருக்கும். நான் போறேன்” என்றவளின் முகத்தில் தெரிந்த மகிழ்வு சத்யாவுக்கும் ஆனந்தத்தைக் கொடுத்தது.
……………
தன் மாணவர்களுக்கு பாக்ஸிங் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான் தேவன்.
“உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க மாஸ்டர்” என்று ஒரு மாணவன் கூற, யார் என்ற யோசனையோடு சென்றவனுக்கு வாயிலில் நின்றிருந்த அஷோக்கைக் கண்டதும் இரத்த நாளங்கள் கொதித்தன.
“நீயா? உன் வால் எங்கே?” என்று கேட்க, “வால் இல்ல. ஃப்ரெண்டு” என்றவாறு வந்து நின்றாள் வினிதா.
“கேர்ள் ஃப்ரெண்டு” அதில் அடைமொழியைச் சேர்த்த தேவனை முறைத்துப் பார்த்த பெண்ணவள், “க்ளாஸ்ல ஜாயின் பண்ணனும்” என்று சொல்ல,
“இவனுக்கு எதுக்கு பாக்ஸிங் எல்லாம்? பார்க்க ஊதி வெச்ச பலூன் மாதிரி இருக்கான்” தேவன் அஷோக்கை முறைக்க, “நீங்க மட்டும் என்னவாம்? சேத்துல நட்டு வெச்ச சோளக்காட்டு பொம்மை மாதிரி இருக்கீங்க” அஷோக் பதிலுக்குச் சொல்ல,
“நிறுத்துங்க ரெண்டு பேரும். பாக்ஸிங் க்ளாஸ் வந்தது அஷு இல்லை நான்” வினிதா சொன்னதும், அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான்.
“ஈர்க்கு குச்சி மாதிரி இருக்கேனு சொல்லாதீங்க. குச்சியா இருந்தாலும் பாக்ஸிங்னு வந்துட்டா நான் பிச்சு உதறுவேன்” பெருமையாகப் பார்வையை வீசினாள் பாவை.
“அதெல்லாம் க்ளாஸ்ல சேர்த்துக்க முடியாது. கிளம்பு” அவன் கைகளைக் கட்டிக் கொண்டு விறைப்போடு நிற்க,
“மிஸ்டர் தேவன்! நான் ஒன்னும் உங்க கிட்ட கத்துக்கனும்னு வரல. கத்துக் கொடுக்க வந்திருக்கேன்” என்று வினிதா சொல்ல, “விளையாடாம இருக்கியா? யாரும் பார்க்க முன்னாடி இங்கே இருந்து போயிடு” யாராவது பார்த்து இவள் யார் என்று கேட்டு விடுவார்களோ என்ற பதற்றம் அவனுக்கு.
“ஹாய் வினிதா! வாட் அ சர்ப்ரைஸ்” எனக் கேட்டவாறு வந்தான் தேவனின் நண்பன் ஹரி.
“ஹரி! இது?” தேவன் புரியாமல் பார்க்க, “கேர்ள்ஸ்கு பாக்ஸிங் கத்துக் கொடுக்க லேடி கோச் வர்றாங்கனு சொன்னேன்ல. அது இவங்க தான். வினிதா! ஹீ இஸ் மை ஃப்ரெண்ட் தேவன். ஹீ இஸ் ஆல்சோ கோச்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான் ஹரி.
“நைஸ் டு மீட் யூ தேவன்” ஒன்றும் தெரியாத பிள்ளை போன்ற முகபாவத்தோடு கையை நீட்டினாள் வினி.
‘உலகமகா நடிப்பு டா சாமி’ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் இல்லாத புன்னகையை வரவழைத்து கை குலுக்கினான்.
அவள் கோச் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. மலேசியாவில் பாக்ஸிங் அகெடமியில் கற்றிருக்கிறாள் என்பதை அவளது தகவல்களைப் பார்த்து அறிந்து கொண்டவனுக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியாது போயிற்று.
அவளுக்கு பாக்ஸிங் என்றால் அவ்வளவு பிடிக்காது. முன்பு அவளோடு பேசும் போது ‘நான் பாக்ஸிங் அகெடமி ஸ்டார்ட் பண்ணுனா நீ வந்து கத்துப்பியா?’ என்று ஒரு தடவை கேட்டதற்கு,
‘நோ நோ! எனக்கு அதெல்லாம் செட்டாகாது. நீ மத்தவங்களுக்கு கத்துக் கொடு. நான் உட்கார்ந்து உன்னை சைட்டடிக்கிற வேலையை பக்காவா பண்ணுறேன்’ என்று சொன்னாள்.
எனினும் இன்று அவள் இப்படியொரு செயலைச் செய்திருப்பது யோசனையைக் கொடுத்தது. அவளிடமே கேட்டு விடலாமா என்று நினைக்கும் போது, அவளே அவன் முன் தோன்றினாள்.
“பாக்ஸிங் பிடிக்காதவ எப்படி அதையே தன்னோட கேரியரா மாத்திக்கிட்டானு குழப்பமா இருக்கா?” அவளின் கேள்விக்கு அவன் கொடுத்த முகபாவனையே ஆம் என்ற பதிலை அப்பட்டமாக எடுத்துரைத்தது.
“அஷு சொல்லித் தான் பண்ணுனேன். எனக்குள்ள அந்த திறமை இருக்குனு நானே எதிர்பார்க்கல. அவன் எனக்கு அதை புரிய வெச்சான்” வினிதாவின் பார்வை அஷோக் மீது அன்புற நிலைபெற்றது.
அஷோக்கின் பெயரிலும், அவளது அன்பான பார்வையிலும் தேவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
‘நான் கூட எனக்காக பண்ணி இருப்பாளோனு நெனச்சேன். ஆனா எங்கே? அவளுக்கு தான் அந்த அஷோக் பெருசா போயிட்டான்ல?’ தேவனின் மனம் குமுறியது.
“என்ன தேவன் இப்படி ஒரு ரியாக்ஷன்?” வினியின் குரலில் சிரிப்பு இருந்ததுவோ?!
“நான் எப்படி ரியாக்ட் பண்ணுனா உனக்கென்ன? நீ போய் அந்த அஷோக் கூட கொஞ்சிக்கிட்டு இரு” முறைப்போடு சொன்னான் அவன்.
“சூர்! அவன் கூட தானே போய் பேசனும். அவன் என்னை நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்கான் தெரியுமா? உன்னைப் போல இல்ல” என்றதும், “ஏய்ய்” சீறிப் பாய்ந்தான் தேவன்.
“இப்படி கத்துறதால எதுவும் மாறப் போறதில்ல தேவ்” என்று அவள் சொல்ல, “என்னடி எனக்கு அட்வைஸ் பண்ண வர்ற? என்னமோ பெரிய இவ மாதிரி. நான் தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா? சரியா புரிஞ்சுக்கிட்டதால தான் நீ என்னை விட்டுப் போனியா?” அவனிடத்தில் கோபப் பெருமூச்சுகள் புசு புசுவென வெளியேறின.
“நீ தானே போகச் சொன்ன?” என்று அவள் கேட்க, “நான் சொன்னா போயிடுவியா? கோபமா சொன்னேன்னு கூடவா விளங்கல? கோபத்தில் சொன்ன உடனே அதைப் பண்ணுற அளவுக்கு என்னை வெறுத்துட்டல்ல” அவன் கேட்ட போது பதிலின்றி அமைதியாக இருந்தாள்.
அவன் முகம் பார்க்க முடியவில்லை அவளால். இனியா அவளுக்கு உறவு தான். இருப்பினும் அந்த விடயத்தைத் தேவை இல்லாமல் தம் காதல் உறவுக்குள் புகுத்தியது தவறு என்பதை அவளும் சீக்கிரமே உணர்ந்து கொண்டாள்.
“உனக்கே நீ பண்ணுன காரியம் புரியுதுல்ல? எத்தனை கால் பண்ணி இருப்பேன் உனக்கு. என் நம்பரை ப்ளாக் பண்ணி வெச்ச. எத்தனை வாட்டி ட்ரை பண்ணுனாலும் அவாய்ட் பண்ணுன. அந்தளவுக்கு நான் என்ன பண்ணேன்?” ரௌத்திரம் ஓங்கக் கேட்டான் அவன்.
“எதுவும் இல்ல” கண்கள் கலங்க உரைத்தவளை ஏறிட்டு “என்னை இப்படி மாத்திட்டுப் போன உன்னை மன்னிக்க மாட்டேன் டி” ஆத்திரத்தோடு வெளியேற, அவனை வெறித்துப் பார்த்த வஞ்சியின் கண்களில் துளி கண்ணீர் உருண்டோடியது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி