4. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

5
(3)

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍

👀 விழி 04

பெயின்டிங் பிரஷ்ஷுடன் போராடி அழகாக தன் அம்முவை வரைந்து முடித்திருந்தான் ருத்ரன்.

அவனுக்கு வரைவது என்றால் மிகவும் பிடிக்கும். அம்முவைக் கண்டது முதல் இத்துடன் அவளை ஓவியமாக பலமுறை தத்ரூபமாக வரைந்து இருக்கிறான் அவன்.

வரைந்து முடித்த ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.

“என்ன தான் நான் வரைஞ்சாலும் என் அம்முவோட அழகுக்கு அது ஈடு இணையாகவே முடியாது. நேர்ல சும்மா தேவதை மாதிரி தான் இருப்பா என் செல்ல அம்மு குட்டி” அவளைக் கொஞ்சித் தீர்த்தான் அவன்.

மறுகணமே அவனுள் ஏக்கமும் தான் குடி கொள்ளலாயிற்று. எவ்வளவு காதல் இருக்குமோ அதே போல் கடலளவு ஏக்கமும் இக்காதலில் இருக்கும் அல்லவா? அதுவும் ஒரு தலைக் காதலுக்கு வலி அதிகம், அதே சமயம் வலிமையும் அதிகம் தான்.

“உன்னை நினைக்காத நாளில்ல அம்மு. உன் பெயரை சொல்லாத நேரம் இல்லை. ஒரு தடவை தான் கண்டேன் உண்மை தான். ஆனா ஓராயிரம் வருஷம் உன்னைக் கண்ட மாதிரி பீல். அவ்வளவு ஆழமா அச்சொட்டா நீ எனக்குள்ள பதிஞ்சி போயிட்ட. ப்ளீஸ் டி இதுக்கு மேல என்னை தவிக்க விடாத” அவளுஎன் உரையாடினான் காதலன்.

பிசினஸ் விஷயமாக தான் இங்கு வந்தது நினைவுக்கு வர, “அச்சோ வர்க் கொஞ்சம் பெண்டிங்ல இருக்கே” என தலையில் தட்டிக் கொண்டு லேப்பில் வேலையைச் செய்யத் துவங்கினான்.

வேலை விடயமாக ஒரு முக்கிய நபரைச் சந்திக்க வந்த ருத்ரனுக்கு இவ்வூரைக் கண்டதும் ஏனோ உடனே செல்ல தோன்றவில்லை. ஓரிரு நாட்கள் தங்கி விட்டுச் செல்லலாம் என்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினான்.

சிறிது நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டவன் காபி போட்டு எடுத்துக் கொண்டு பல்கோணிக்குச் சென்றான்.

எதேர்ச்சையாக அவன் விழிகள் எதிரில் வீற்றிருந்த வீட்டின் மீது பதிந்தன. நொடியில் புரிந்து போனது அது நேற்று தண்ணீர் எடுக்க சென்ற வீடு என்று.

பார்த்துக் கொண்டே இருந்தான் அவன். அவ்வீட்டுத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய மல்லிகைப் பூக்களையே நெடுநேரம் பார்த்தான்.

“இதை கோர்த்து அம்முவோட தலையில் வெச்சா எப்படி இருக்கும்?” நினைக்கும் போதே அக்காட்சி இனிமையாக இருந்தது.

கூடவே மனசாட்சியும் எட்டிப் பார்த்து “உனக்கு எதை கண்டாலும் அம்மு ஞாபகம் தான்” என்று எள்ளி நகையாடியது.

அதைக் கூட புகழ்மொழியாகக் கருதி வெட்கப் புன்னகை சிந்துகையில் மல்லிகைச் செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள். சொற்ப நேரத்தில் அவ்வுருவம் அவனுள் ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்திற்று.

“என்ன இது எனக்கு?” புத்தி இடித்துரைக்க உள்ளே சென்று விட்டான் ருத்ரன் அபய்.

வெளியில் சென்று சிறிது நேரம் சுற்றலாம் என நினைத்தான். உடைமாற்றி வந்தவன் அந்த வீட்டுப் பக்கமே திரும்பக் கூடாது என நினைத்து கேட்டைத் திறக்க அவன் முன்னால் சற்று தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாள் ஒருத்தி.

அவள் தான்!

எதிர்வீட்டில் வசிக்கும் அந்த வசியக்காரி தான் என நினைத்தவனின் மனம் அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிகைச் சரத்தை நோக்கியது.

“அங்கிள்!” என்ற குரலில் குனிந்தவன் அன்று அவனால் காப்பாற்றப்பட்ட சிறுவனைக் கண்டு, “அடே குட்டி பையா” என தூக்கிக் கொண்டான்.

“நீங்க எங்கிருந்து வந்திருக்கீங்க?” என்று வினவினான் சின்னவன்.

“மெட்ராஸ்ல இருந்து வந்தேன். வேலைக்காக வந்தது. நாளைக்கே போயிடுவேன்” என்றதும் அவன் முகம்

வாடியது.

“என்னதுடா?”

“இல்லை அங்கிள். எங்க அஞ்சு டீச்சருக்கு நிச்சயதார்த்தமாம். எனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கவே இல்ல அவரு என் கூட பேசவும் இல்ல” முகத்தை உப்பிக் கொண்டான் அவன்.

“உங்க டீச்சருக்கு பிடிச்சா சரி தானே? உன் கூட பேசலனு பிடிக்காதுனு சொல்லுவியா?” சிரிப்புடன் கேட்டான் ருத்ரன்.

“அப்படி தான். அவரு சிரிக்கவும் மாட்டேங்குறார். நீங்க எங்க டீச்சரை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?” அவனது பேச்சில் விழி விரித்தான் அவன்.

“இப்படி பேசாத பெரிய மனுஷா. உன்னோட பஞ்சு டீச்சர் இதலாம் யோசிக்காமலா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருப்பாங்க? இப்படி அவங்க கிட்டலாம் போய் சொல்லாத” அவனோடு அரட்டை அடித்தான் ருத்ரன்.

♡♡♡♡♡

பாடசாலை வளாகத்தில் மாணவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சனாவின் மனம் சுஜித்தை நினைத்துக் கொண்டது.

அவனது நம்பரை அனுப்பி வைத்திருந்தார் அவன் அண்ணி. அழைத்துப் பேசு எனவும் குறுந்தகவல் வந்திருந்தது.

பேசலாமா வேண்டாமா என யோசித்தவளுக்கு, இனி இவனோடு தான் பேச வேண்டும். இவனே உன் கணவனாக வரப் போகிறவன் என மனம் எடுத்துரைக்க பிறகு பேசலாம் என நினைத்துக் கொண்டாள்.

நாளை நிச்சயதார்த்தம். ஆனால் மனம் மகிழவில்லை. யோசித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மனம் விட்டுப் பேசவும் அவளுக்கு யாரும் இல்லை. தாமரை டீச்சருடன் பழகினாலும் அத்தனை நெருக்கமாக ஒன்றும் சொல்ல முடியவில்லை.

தனக்கென தோழி ஒருத்தி கூட இல்லையே என தற்போது எண்ணிக் கவலைப்பட்டாள்.

“டீச்சர் என்னாச்சு?” ஒரு சிறுமி வந்து கையைப் பிடிக்க, தனது முகவாட்டத்தைக் கண்டு அவள் விளையாட்டைக் கை விட்டு வந்ததை நொந்து கொண்டு சடுதியில் மகிழ்வு நிலைக்கு மாறி அவர்களோடு விளையாடத் துவங்கி விட்டாள்.

மாலை நேரம் அவனுக்கு அழைத்தாள்.

“ஹலோ” மறுமுனையில் பேசினான் சுஜித்.

“நான் யார் பேசுறேனு தெரியுமா?”

“எஸ் அஞ்சனா தானே?” பட்டென்று வந்தது பதில்.

‘தெரியாம இருக்குமா உன்னை? என் பியூச்சர் வைப்’ இப்படி சொல்ல வேண்டுமென எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் மிஞ்சியது.

“ஆமா. நாளைக்கு நிச்சயதார்த்தம். ரெடியா இருக்கீங்களா?” ஏதோ கேட்டு வைத்தாள்.

“என்ன கேள்வி இது அதெல்லாம் பக்காவா ரெடி ஆகிருவேன்? இம்போர்டன் மீட்டிங் ஒன்னு இருக்கு பத்து மணியாகும் முடிய. வந்து ரெடியாகிடுவேன். அஞ்சே அஞ்சு நிமிஷம் போதும் எனக்கு ரெடியாக. யூ டோன்ட் ஒர்ரி” என சிரித்தான் சுஜித்.

அவன் பதிலில் சிரிக்கத் தோன்றியது. ஆனால் சிரிப்பு வரவில்லை. வேறு எதையோ தன் மனம் நாடுவது போல் உணர்வு. அது என்னவென புரியவில்லை.

ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டு வந்தவளுக்கு கடனே என பேசுவது போல் தோன்றியது. அவளது பெற்றோர் காதலித்து திருமணம் செய்தவர்கள் அல்லவா? அவ்வளவு அழகாக அவர்கள் வாழ்ந்தது அவளுக்கு நினைவில் இருக்கிறது.

அது தவிர அவள் தந்தையும் மனைவியை இழந்த பிறகு அடிக்கடி மனைவியைப் பற்றி பேசுவார் அவர்களது காதல் பற்றி சொல்லி மகிழ்வார்.

அப்போதெல்லாம் கண்கள் மின்னும் அவளுக்கு.

“அப்பா எனக்கும் அப்படி ஒருத்தர் வருவாரா? நீங்க அம்மாவுக்கு கெடச்ச மாதிரி என்னை காதலிக்க யாராச்சும் வருவாங்களா?” ஏக்கமாக கேட்பாள் அஞ்சனா.

“கண்டிப்பா வருவான் தங்கம்! உன்னை காதல்ல குளிப்பாட்ட ஒருத்தன் வருவான். உன் அப்பாவைப் போல ஒருத்தன் உன்னை தன் கைக்குள்ள பொத்தி வெச்சு பார்த்துக்க வருவான்” என்று மகளிடம் கூறுவார் அவரும்.

இன்று அதை நினைத்தவளுக்கு சுஜித் அவ்வாறு இருப்பானா எனும் கேள்வி எழுந்தது.

“ப்ச்! இருப்பார் இருப்பார். இப்போ அப்படி தான் இருக்கும். கல்யாணத்துக்கு அப்பறம் மாறிடுவார் போல. எல்லாரும் ஒன்னு மாதிரியா இல்லையே” தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள் அஞ்சு.

தந்தையின் புகைப்படத்திற்கு முன்பாக சென்று நின்றாள். அவள் கண்கள் அவரையே பார்த்தபடி நிலைத்து நின்றன.

“அப்பா! நாளைக்கி எனக்கு நிச்சயதார்த்தம். ஆனா மனசு ஒரு மாதிரி இருக்கு. ஏன் இப்படினு தெரியல. இப்போ என் கூட நீங்க இருந்திருந்தா உங்க மடியில் படுத்து ஆறுதல் தேடிருப்பேன். ஆனா அது முடியல.

சுஜித் தான் எனக்கான மாப்பிள்ளைனு முடிவு பண்ணிட்டாங்க. இனி அது மாறாது இல்லையா? அப்படின்னா என் மனசு அவரை திருப்தியா ஏத்துக்கிற மாதிரி பண்ணிருங்கபா. இப்படியே இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியல.

என் மனசு எதையோ எதிர்பார்க்குது. எப்படி சொல்ல தெரியல. ஆனால் ஏதோ மாதிரி இருக்கு. எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு ஆசீர்வதிங்க” அவரிடம் பேசினாள் அஞ்சனா.

திடுமென அவள் மனதினுள் நேற்று தண்ணீர் கேட்டு வந்த ஆடவன் வந்து போனான். “ப்ச்! அவரை ஏன் நான் நினைக்கனும்?” அந்நினைப்பை புறந்தள்ளி விட்டு இரவு தோசைக்காக மாவை எடுத்து வைத்து வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

♡♡♡♡♡

கையைப் பிசைவதும் தன்னைப் பார்ப்பதுமாக நின்றிருந்த மனைவியின் கையைப் பிடித்து தனதருகே அமர வைத்தார் செல்வன்.

“இப்போ பேசு. என்ன சொல்ல வந்த?”

“அது வந்துங்க ருத்ரா கிட்ட இதை பற்றி ஒரு வார்த்தை…” எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டார் சித்ரா.

“எதுக்கு அவன் கிட்ட சொல்ல, அவன் வேண்டாம்னு மறுபடி அம்மு அம்முனு பழைய பல்லவியே பாட, நீ சப்போர்ட் பண்ண நான் வேணானு சொல்ல அவன் என்னை வில்லன் ரேஞ்சுக்கு பார்க்க இதானே உன் ஆசை?” சற்று கடினமாகத் தான் கேட்டார்.

“அப்படி இல்லைங்க! அவனுக்கு இஷ்டம் இல்லாதப்போ என்ன செய்றது? அவன் யாரையோ லவ் பண்ணுறானே”

“ஆமா! என் கிட்டயே அப்போ வந்து ஒரு பொண்ண லவ் பண்ணுறதா சொன்னான். அத கேட்கும் போது மச்சானுக்கு கொடுத்த வாக்கு என்னாகுறதுனு கஷ்டமா இருந்துச்சு. இருந்தாலும் சரி பரவாலனு அவன் ஆசைய நினைச்சி அமைதியா நின்னேன். அவங்க வீட்டுல சரினா சேர்த்து வைக்கலாம். என் பையன் சந்தோஷத்துக்காக இதை பண்ணலாம்னு இருந்தேன்.

அப்பறம் பார்த்தா அவ யாருனே தெரியாதாம். காத்திருப்பு காதல்னு சொன்னான். சரினு பொறுத்துக்கிட்டேன். ஆனா அந்த பொண்ணு தான் இவன் கண்ணுலயே படலயே. ருத்ரா அத புரிஞ்சிக்கிட்டு மனசு மாறுவான்னு நினைச்சேன்.

அவன் தன் பிடியில் இருந்து மாறுறதா இல்லை. அவன் பையன்னா நான் அப்பன் எனக்கு எவ்ளோ அழுத்தம் இருக்கும். இனி நானும் என் முடகவில் உறுதியா இருக்கேன். அவன் ஆலியாவ கட்டிக்கனும்” அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

“அவன் சந்தோஷமா இருப்பான்னு நினைக்கிறீங்களா? அம்முவ மறப்பான்னு உங்களால சொல்ல முடியுமா?” மெதுவாக வினவினார் சித்ரா.

“சந்தோஷம்?! முதல்ல அதிர்ச்சியா கஷ்டமா தான் இருக்கும். ஆனால் போக போக பழகிடும் சித்ரா. இந்த உலகத்தில் காதல் தோல்வியடைஞ்ச யாரும் கல்யாணமே பண்ணிக்கலயா? அவங்க சந்தோஷமா தான் இல்லையா?

அவன் கஷ்டப்படுவான்னு விட்டு வெச்சா கிடைக்காத ஒரு பொண்ண நெனச்சி இன்னும் கஷ்டத்தை தான் அனுபவிக்க போறான். இப்போ ஏமாற்றம் வரும். ஆனால் இதுவே இன்னும் பல வருஷம் காத்திருந்து அது பொய்யாகி போனத உணரும் போது வரும் ஏமாற்றம் இதை விட பல மடங்கு கஷ்டத்தை கொடுக்கும்.

அவன் நல்லா இருக்கனும்னு தான் எல்லாம் பண்ணுறேன் சித்ரா. உன்னால புரிஞ்சுக்க முடியலயா என்னை? என் வாக்கும் தன்மானமும் தான் பெரிசுன்னா இவன் அம்முவை லவ் பண்ணுறனு சொன்ன நிமிஷமே வேணானு சொல்லி அவனை கட்டாயப்படுத்தி ஆலியாவை கட்ட வெச்சிருக்க முடியும்” மிக நீளமாகப் பேசினார் செல்வன்.

அவர் பேச்சில் ஒரு தவறையும் கண்டுபிடிக்க முடியாது போனது மனைவிக்கு. அவர் கண்டிப்பானவர் தான். அதையும் தாண்டி மகன் மீது அத்தனை பாசம். ஆனால் எதையும் காட்டிக் கொள்ள மாட்டார்.

“கடவுளே! எங்க குடும்பத்தை நீ தான் பாதுகாக்கனும்” என்ற வேண்டுதலை மட்டுமே வைக்க முடிந்தது சித்ராவால்.

அந்நேரம் சரியாக அழைத்திருந்தான் மகன். அவர் வீடியோ காலை ஆன் பண்ணவும் ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து சென்றார் செல்வன்.

“மம்மி! உங்க ஹஸ்பண்ட்கு டெரர் லுக் செட்டே ஆகலனு சொல்லுங்க. இன்னும் கொஞ்சம் பெட்டரா ட்ரை பண்ண சொல்லு” என்று அவன் கத்தியது அவருக்கும் கேட்கத் தான் செய்தது.

“ஏன்டா ஏன்? சும்மா இருக்க மாட்டியா கொஞ்ச நேரம். உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நின்னுட்டு நான் முழிக்கிறேன். எல்லாம் என் நேரம்”

“ஓகே கூல் கூல். என்ன சொல்லுறார் மிஸ்டர் செல்வன்?”

“அவர் உன் அப்பா டா. இப்படியா பேசுவ?”

“மரியாதை கொடுத்து தான் பேசினேன். இல்லனா அதையும் கை விடவா?” என்று கேட்கும் போது அவர் வந்து அமரவும் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டான்.

“மீட்டிங் எல்லாம் முடிஞ்சுதா?” என்று கேட்ட தந்தையிடம்,

“முடிஞ்சுது பா. நாளை காலையில் வந்துடுவேன். சாப்பிட்டீங்களா?” பவ்வியமாக விடை பகர்ந்தான் மகன்.

“ஆமா ருத்ரா” என சிறிது நேரம் பேசி விட்டுச் செல்ல, “உன் ஆட்டம் எல்லாம் என் கிட்ட தான்ல? அவர் கிட்ட என்னமி பம்முற?” சிரிப்புடன் கேட்டார் தாய்.

“புலி பதுங்கிப் பாயும் அம்மா. நான் புலி” காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் அபய்.

“அது சரி” என புன்னகைத்த தாயை கொஞ்சிப் பேசினான் மைந்தன்.

அவர்களது குடும்பம் அப்படித் தான். ருத்ரனும் செல்வனும் அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். தேவைக்கு அவ்வளவு தான். பாசம் அனைத்தும் மனதில் தான். தனக்காக அவர் செய்யும் அனைத்திலும் அவரது மறைமுக அன்பையே உணர்வான் ருத்ரன்.

அவன் தன்னைப் பற்றி மனைவியிடம் கிண்டலாக பேசுவதை கேட்டுக் கொண்டு தான் இருப்பார் செல்வனும். பதிலடியாக அவனோடு சேர்ந்து அரட்டை அடிக்காமல் அதனை ரசிப்பது அவரது இயல்பு.

இருவரையும் இணைக்கும் பாலமாக இருப்பது சித்ரா தான். மகன் தாயை சாதுவாக்கி அப்பாவிடம் சொல்லி காரியம் சாதிப்பான். தந்தையோ தனது கட்டளைகளை மனைவி மூஒள் மகனிடம் தெரிவிப்பார். இருவருக்கும் தூது சித்ராவே.

அதனை நினைத்துக் கொண்டிருக்கையில், தானும் அதனையே நினைத்தவனாய் “தூதுப் புறா தூதுப் புறா எந்தன் அன்பு அம்மா சித்ரா” என அருகிலிருந்த மேசையில் தாளம் போட்டு பாடியவனை அவர் செல்லமாக முறைக்க அட்டகாசமாக சிரித்தான் ருத்ரன் அபய்.

தொடரும்……♡

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!