4. வாடி ராசாத்தி

5
(2)

4. வாடி ராசாத்தி

அம்ரிதா….

அம்மு…. இருபத்தி நான்கு வயது துடிப்பான பெண். அழகு, அறிவு மற்றும் அன்பு என பழகும் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்வாள். இவள் இல்லையென்றால் அவர்கள் வீட்டில் சிரிப்பு சத்தமே கேட்காது. அவர்கள் வீடு மட்டுமின்றி அந்த வீட்டின் மூத்த தலைமுறை நால்வரும் உயிர்ப்புடன் நடமாட காரணமே இவள் தான்.

அடுப்படியில் முறுக்கு சுற்றி கொண்டிருந்த வாசுகிக்கு, மாமனார் மாமியாரிடம் சத்தம் போடும் கணவன் குரல் கேட்க, வேலையை நிறுத்தி விட்டு வேகமாக அவர்களிடம் விரைந்தார்.

“எங்களால் உனக்கு பணக்கஷ்டம் வந்திருச்சு, மன்னிச்சுருப்பா….!” மெல்லிய குரலில் அம்சவல்லி சொல்ல,

“அம்மா, நான் என்ன சொல்றேன்…. நீங்க என்ன பேசறீங்க….? அம்ரிதா பிறக்கும் போதே நம்ம வல்லி நம்மளை விட்டு போய் இருந்தா…. அதுக்கு அப்புறம் எதுக்கு அப்பா என்கிட்ட கூட சொல்லாம இவங்க ரெண்டு பேர் மேல் சேர்த்து இடம் வாங்கினார்? இப்போ அது எனக்கு தேவையில்லாத தலைவலியா இருக்கு….!”

“என்னங்க…. விடுங்க….இனிமே அதை பத்தி பேசி என்ன ஆக போகுது….?”

“என்னடி விடுங்க….? இனிமே இது தான் பெரிய பிரச்சனை. இவங்க மனசுக்குள்ள என்ன ஆசை இருக்கோ அதே ஆசை அவனுக்கும் இருக்கிற மாதிரி இருக்கு…. ஒரு நாளும் அதை நான் ஒத்துக்க மாட்டேன்…. ” வாசுகியிடம் சத்தம் போட்டார் செல்வராஜ்.

“அதுவரை அமைதியாக இருந்த சொக்கலிங்கம், என்ன டா ரொம்ப குதிக்கிறே…? என் பேரனுக்கு என்ன குறைச்சல்….? நாங்க ஆசைப்படுறது நடந்தா ஒன்னும் தப்பில்லை…. ஆயிரம் இருந்தாலும் நம்ம வல்லியோட ரத்தம் இல்லையா? யாரோ மாதிரி பேசுறியே டா…?” கோபமாக ஆரம்பித்து தழுதழுத்து பேசினார் சொக்கலிங்கம். அவர் சொல்வதை கேட்டு அனைவருக்குமே மனம் பாரமாகி விட்டது.

வேகமாக வீட்டில் இருந்து வெளியே கிளம்பி விட்டார் செல்வராஜ். அவருக்கு என்ன தங்கை மகன் மீது வெறுப்பா? இல்லையே….? தன் தங்கையை அவர்கள் வீட்டில் திருமணம் செய்ததே அவருக்கு இஷ்டமில்லை, அவளும் இப்போது இல்லை…. மீண்டும் அவர்களுடன் எந்த சம்பந்தமும் வேண்டாம் என்பதே அவரின் எண்ணம். உறுதியான முடிவும் கூட.

***********

ஹலோ, எங்கடி இருக்கே….?

“சொல்லிட்டு தானே மா வந்தேன்…. சீக்கிரம் சொல்லு மா…. அந்த பாப்பா அழ ஆரம்பிக்கிறதுகுள்ள நான் போட்டோ எடுத்து முடிக்கணும்….”

“அந்த பாப்பா அழுமோனு கவலைப்படுற…. இங்க நம்ம வீட்டில எல்லாரும் அழுமூஞ்சியா இருக்காங்க…. சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்து எல்லாரையும் சமாதானம் செய்.”

“என்னமா என்ன ஆச்சு….?” வேகமாக கேட்டவளிடம் கடகடவென விஷயத்தை கொட்டி தீர்த்தார் வாசுகி.

“அந்த பண்டி பயலை….” பல்லை கடித்தவள், சரி வை, வரேன் என்று தன் மிச்ச வேலையை பார்க்க துவங்கினாள். அம்ரிதா ஒரு புகைப்பட கலைஞர். படித்தது என்னவோ கம்ப்யூட்டர் டிகிரி…. ஆனால் அவள் விருப்பம் இதில் தான். யார் வீட்டில் விசேஷம் என்றாலும் இவள் போனை தூக்கி விடுவாள் புகைப்படம் எடுக்க. மிகவும் அழகாகவும் எடுப்பாள். தேடி தேடி படித்து, கோணங்கள், லைட்டிங் என நிறைய தெரிந்து கொண்டாள். சில பயிற்சி வகுப்புகள் கூட கலந்து கொண்டு கற்று கொண்டாள். அவளின் ஆர்வம் கண்டு சம்பத் அவளுக்கு நல்ல காமிரா வாங்கி கொடுக்க, தெரிந்தவர் அறிந்தவர் என அனைவருக்கும் புகைப்படம் எடுத்து கொடுக்கிறாள் இப்போது. பெண்கள் சம்பந்தப்பட்ட விழா என்றால் நிச்சயம் அம்ரிதா தான் புகைப்படக் கலைஞர். அந்த புது பெற்றோரின் மனம் சந்தோஷப்படும் படி வேகமாக வேலையை முடித்து அங்கிருந்து கிளம்பியவள் கேபியை காண தன் ஸ்கூட்டியை விரட்டினாள்.

************

நிலைப்பத்திர வேலை எல்லாம் முடிந்து கொண்டு கேபியும் சற்குணமும் கிளம்ப,

“வாடா உன்னை ஆபிசில் விட்டுட்டு நான் கிளம்புறேன்….” என்றான் கேபி.

“ஏன் சார் போற இந்த இடத்துக்கு மட்டும் நான் தேவையில்லையா?” பொருமினான் சற்குணம்.

“அது ஏன்னு உனக்கே தெரியும்! பேசாம ஏறு வண்டியில….” என்றபடி காரை எடுத்தான் கேபி.

அவர்கள் பாதி தூரம் சென்று கொண்டு இருக்கையில் அவர்கள் காரை விரட்டி கொண்டு அம்ரிதா வருவது தெரிந்தது கேபிக்கு. வண்டியின் வேகத்தை மெதுவாக அவன் குறைக்க, அவர்களை சமீபித்தாள் அம்ரிதா.

லெப்ட்டில் அவர்களை நெருங்கி அவன் வண்டியோடு சேர்த்து ஓட்ட, வண்டியை நிறுத்தினான் கேபி. அதற்குள் சற்குணமும் அம்ரிதாவை பார்த்து இருந்தான். கேபியின் கார் நிற்க, அவளும் வண்டியை நிறுத்தி காலூன்றி நின்றாள். வண்டியில் இருந்து இறங்கியவன் வேகமாக அவள் அருகில் விரைந்து,

“அறிவில்லை உனக்கு? லெப்ட்டில் ஓவர்டேக் பண்ணக்கூடாதுங்கிற பேசிக் சென்ஸ் கூட இல்லாம நீயெல்லாம் எதுக்கு வண்டி ஓட்டுறே….? எங்கேயாவது இடிச்சு மூஞ்சு முகரை எல்லாம் பேந்து போகணுமா….?” என்று எரிந்து விழுந்தான்.

அவனை முறைத்து பார்த்தவள், “எல்லாம் தெரிஞ்சு தான் வந்தேன்…. எனக்கு என்னனாலும் நான் பார்த்துக்குவேன்…. நீ ரொம்ப துள்ளத் தேவையில்லை….”

“அதெப்படி உன் உடைஞ்சு போன மூஞ்சியை என் தலையில் தானே கட்டுவாங்க….? ஏதோ சுமார் மூஞ்சி குமாரா இருக்கியேனு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கவே இருக்கேன் நான்…. அதுவும் இல்லைனா….”

“ஹே…. நிறுத்து நிறுத்து…. இங்க யார் ரெடியா இருக்க உன்னை கட்டிக்க…. தலையில் கட்டுவாங்க சொல்றே…. உங்க அக்கா மக ஒருத்தி இருக்காளே… நாலரை அடியில், அவளை கட்டிக்கிட்டு இடுப்பில் தூக்கி வைச்சுக்க…. எனக்கெல்லாம் வேற நல்ல மாப்பிள்ளை வரும்!” என்றாள் அவனுக்கும் மேல் குரலை உயர்த்தி.

காருக்குள் இருந்தபடி கண்ணாடியை மட்டும் இறக்கி அவர்களை சுவாரசியமாக வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சற்குணத்திற்கு கேபியின் பரிதவிப்பு புரிந்தது. ஆனால் புரிய வேண்டியவளுக்கு அது புரியாமல் வழக்கமான அவனின் கோபம் என்றே நினைத்தாள். அவள் முகத்தில் கோபம் தெரிய, அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சற்குணம்,

“ஏண்டா, பச்ச பிள்ளை கையில எல்லாம் வண்டியை கொடுத்தா இப்படி தான் ஆகும்…? இதை போய் விசாரணை பண்ணிட்டு வம்பு வளர்த்துகிட்டு இருக்கே….?” என்றான் நக்கல் சிரிப்புடன்.

அவளை அம்மு என்று அனைவரும் அழைப்பதால் இவன் பாப்பா, குழந்தை என்று வம்புஇழுப்பான். அவளும் அவனிடம் அதிகபிரசங்கியாக தான் நடந்து கொள்வாள். இருவருக்கும் இருவரையும் பிடிக்கும். வித்தியாசமான நட்பு இது!

“என்ன சறுக்கு மரம்….! பார்த்து பல்லு சுளிக்கிக்க போகுது…. கொஞ்சமா சிரி….” என்றாள் பதிலுக்கு படு நக்கலாக.

“இவளுக்கு கொஞ்சமாச்சும் மரியாதை தெரியுதாடா….?”

“நீ வேணா சொல்லிக் கொடுக்க முயற்சி பண்ணு…. ஆனால் கொஞ்சம் கஷ்டம் தான்” என்றான் கேபி சிரிப்புடன்.

“ஏண்டா, எனக்கு சப்போர்ட் பண்ணி நியாயம் கேளுனா நீ என்னைய கோர்த்து விட பார்க்கிறே வேண்டாங்கிற…. உன்னை எல்லாம் ஊருக்குள்ள பெரிய மனுஷன் ரேஞ்சுக்கு பேசுறாங்க…”

“ஹலோ, இங்க யாரும் தேவையில்லாம என்னை பத்தி பேச வேண்டாம். அதே மாதிரி அடுத்தவங்களுக்கு உதவி பண்றேன்னு உபத்திரவம் பண்ணாம அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்திட்டு இருந்தா சரி….” கேபிக்கு குட்டு வைக்க எண்ணி பேசினாள் அம்ரிதா.

“என்னைக்கு அவன் உன்னை கண்டிச்சு இருக்கான்…. நீ ஆடு உன் இஷ்டத்துக்கு பேசு….” சற்குணம் கிண்டலாக சொன்னான். அவன் சொல்வது உண்மை தான், இவர்களுக்குள் என்ன சண்டை வந்தாலும், அம்ரிதா என்ன பேசினாலும் கேபி அவளை கண்டிக்கவோ அதட்டவோ மாட்டான். மற்றவரிடம் அவள் பேசுவது அவள் உரிமை என்பது போல் இருப்பான். அவனுக்கும் அவளுக்குமான வார்த்தையாடலில் தான் அவளை கிண்டல் செய்வான், திட்டுவான்.

சற்குணம் சொல்வதை கேட்டவள், “லூசாப்பா நீ….? இவ்ளோ நேரம் நான் என்ன சொன்னேன்…. அவர் யார் என்னை கண்டிக்க….? முதல்ல எங்க வீட்டு பிரச்சனையை நாங்க இவர் கிட்ட வந்து சொன்னோமா….? இவரை யாரு தலையீட சொன்னது….? என்று அவனிடம் ஆரம்பித்தவள் பின் நேரிடையாக கேபியை கண்டு,

“அனாவசியமான வேலை நீங்க நிறைய பார்க்கிறீங்க…. இனிமே பண்ணாதீங்க…. எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்குவோம்….எங்க அப்பாவை வருத்தப்பட வைச்சீங்க…. நல்லா இருக்காது…. புரியுதா….?” என்றாள்.

“உங்க பிரச்சனையா….? ம்ம்…. அந்த அளவுக்கு வளர்ந்துட்டியா சில்மிஷம் நீ….?” என்றவன் மேலிருந்து கீழே அவளை பார்வையாலே பதற வைத்தான்.

மனதின் அதிர்வை மறைத்து கொண்டு, “ஊருக்குள்ள யார் வீட்டில பிரச்சனைனாலும் சொம்பு தூக்கிட்டு போய்டுவீங்களா….?” கிண்டலாக பேச முயன்றாள் அம்ரிதா.

“உன்னோட, உன் பேர்ல இருக்க இடத்தோட நானும் சம்பந்தப்பட்டு இருக்கேன்…. உங்க விஷயம்னு எப்படி சொல்லுவே சில்மிஷம்….? என் விஷயமும் தானே….ம்ம்….?” அவனின் ஆண்மையான குரலில் தலையை லேசாக ஆட்டி ஆட்டி அவன் பேச, அவனில் மூழ்கி விடுபவள் போல் அவள் கவனம் அழுத்தமாக அவன் மேல் பதிந்தது.

அம்சவல்லி பேரன் அம்சமா தான் இருக்கான்…. ஆனா அசமஞ்சமா இருந்திருக்கலாம் இப்படி அடாவடி பண்றானே…. மனதில் அவனை திட்டுகிறாளா, மெச்சுகிறாளா என்று அவளுக்கே தெரியாத நிலை தான் எப்போதும். அதுவும் அவன் பேசினால் அந்த குரலில் வசியம் இருக்கிறதா என்ற சந்தேகம் நிச்சயம் அவளுக்கு வரும் அந்த அளவிற்கு அவனில் கட்டுண்டு விடுவாள். மிகவும் கஷ்டப்பட்டு தான் அவனில் இருந்து மீள்வாள். அவனை பேச விடாதே அது உனக்கு ஆபத்து என்று அவள் உள் மனம் எப்போதும் அலறும்.

“உங்க விஷயமா….? அவ்ளோ பெரிய இடத்தில இருக்க ஒரு சின்ன பங்குக்கு இவ்ளோ அலைப்பறையா….? உங்க கிட்ட வந்து நாங்க எதுவும் உதவி கேட்டோமா….? இல்லை எங்க பிரச்சனையை உங்க தலையில் கட்டி விட்டோமா….?”

“பிரச்சனையை கட்ட வேண்டாம், உன்னை என் தலையில் கட்டினா போதும்….” சிரிக்காமல் சொன்னான் கேபி.

அவன் அப்படி சொன்னதும், அவன் பார்வையில் இருந்த தீவிரமும் சட்டென்று அம்ரிதாவின் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க செய்தது. இவனுக்கு என் மேல் ஆசையா…? என்னை திருமணம் செய்ய விரும்புகிறானா….? அந்த எண்ணம் அவளை கொஞ்சம் தடுமாற செய்தது. அதை மறைத்து கொண்டு,

“என்னை யார் தலையில் கட்டுற நிலைமையும் எனக்கு இல்லை…. எங்க அப்பா எனக்கு சூப்பர் மாப்பிள்ளை பார்ப்பார்….ராஜா மாதிரி வருவான் அவன்…. என்றாள் அவர்களிடம்.

“மாப்பிள்ளை வர்றார் மாப்பிள்ளை வர்றார் மாட்டு வண்டியிலே….” என்று பாடி சிரித்தான் சற்குணம்.

“டேய் சறுக்கு மரம் உன்னை பொளந்தா எல்லாம் சரி ஆய்டும் டா….” பல்லை கடித்தாள் அம்ரிதா.

“ஹாஹா….” சத்தமாக சிரித்த கேபி, உன்னை சமாளிச்சா வேற எல்லாத்தையும் ஈஸியா ஊதி தள்ளிடலாம்…. அவ்ளோ பெரிய பிரச்சனை நீ…. அதை தான் என் மச்சான் சொல்றான் சில்மிஷம்” என்றான்.

“கரெக்ட் மச்சான்…. உனக்கு தான் இவ பண்ற வேலையெல்லாம், நீதான் இவளுக்கு சரியான ஆளு….” என்று சிரித்தான் சற்குணமும்.

“ஒரு நாள் உங்களுக்கு பாலிடால் கொடுக்கிறேன் டா….பண்டி மச்சான், எங்க அப்பாவை ஏதாவது வம்பு இழுத்தே…. உன் மேல் பஞ்சாயத்து வைப்பேன்….பார்த்துக்க…. வணிகர் சங்க தலைவர் ஆயிடுவியாமே சீக்கிரம்…. தேவையா அந்த பஞ்சாயத்து எல்லாம்…. கொஞ்சம் யோசிச்சுக்க…. அப்புறம் மரியாதை ஷுவிக்….தான்….” காற்றில் பறந்து விடும் என்பது போல் செய்து காட்டினாள் அம்ரிதா.

அவள் அவ்வளவு சீரியசாக பேச, அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்,
“போற வழியில ஜூஸ் குடிச்சிட்டு போ…. வெயிலுக்கு நல்லது….” என்றான் அசராமல்.

அவள் விஷயத்தில் அவனுக்கு இருக்கும் தெளிவு அவளுக்கு புரியாததால், அவள் வெறுமனே அவன் இவளை வெறுப்பேத்துகிறான் என்று தான் நினைத்தாள் அம்ரிதா. அந்த கடுப்பில்,

“போதும் உன் பிரசங்கம்…. நிறுத்து…. அதை கேட்க இங்க யாரும் ரெடி இல்லை….”

“சொல்றியே தவிர நின்னு பேசிட்டே இருக்கியே…. அத்தான் மேல அவ்ளோ ஆசையா….? உங்க அப்பா கிட்ட போய் சொல்லு….!” அவளை வைத்து செய்தான் கேபி.

இந்த ஜென்மத்தில் உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்….

“பல ஜென்மமா நீ என்னை தான் கல்யாணம் பண்ணி இருக்கே…. எனக்கும் உனக்கும் வேற ஆப்ஷன் இல்லை…. உனனை கல்யாணம் பண்ணி உன் கொட்டத்தை அடக்கிறது தான் நம்ம பிறப்போட ரகசியம்!”

“இப்படி ஒரு சாப கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பண்ணிக்காமலே இருக்கலாம்” அவனை காயப்படுத்தி விடும் நோக்கில் பேசினாள் அம்ரிதா.

“இது சாபமா இல்லை வரமானு அப்புறம் தான் தெரியும்!”

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!