💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 41
சமையல் க்ளாஸ் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் நந்திதா. இளஞ்சிவப்பு வர்ண சாரியில் அமைதியான அழகுடன் விளங்கிய மனைவியை விழிகளால் அளந்தான் எழில்.
“என்ன பார்க்கிறீங்க?” அவள் குரலில் நாணம் தொற்றிக் கொள்ள, “என் மனைவியை நான் பார்க்கிறேன். உனக்கென்ன வந்துச்சு?” அவளை நெருங்கி வந்தான் எழில்.
“எ..எழில்” தனது கைகளால் அவனது சர்ட்டை இறுகப் பற்றிக் கொண்டாள் நந்து.
“என்னைப் பார் நந்து” அவளைப் பார்வையால் வருடியபடி சொல்ல, “ஹூம்” கணவனின் திடீர் நெருக்கம் அவளுள் படபடப்பை ஏற்படுத்தியது.
“ப்ச் நந்தும்மா…!!” செல்லச் சிணுங்கலும் உருகும் அழைப்புமாக அவன் அழைக்க, அவள் நயனங்கள் தன்னவனை ஏறிட்டன.
“கட்டின பொண்டாட்டியை கிட்ட வெச்சு எத்தனை நாளைக்குத் தான் பார்த்துட்டு இருக்க முடியும்?” ரகசியக் குரலில் கேட்டவனை அவள் வெட்கத்தோடு நோக்கும் போது, மாமியார் அழைக்கும் சத்தம் கேட்டது.
“அத்தை கூப்பிடுறாங்க” கிடைத்த சாக்கில் தப்பித்து ஓடியவள் அவர் முன் நிற்க, “புருஷனுக்கு காஃபி போட்டுக் கொடுக்கவாவது உன்னால முடியாதா? சமையல் க்ளாஸ் போகப் போறேனா மகாராணி சமையல் கட்டு பக்கம் தலை காட்ட மாட்டீங்களோ?” கடுமையாகக் கேட்டார் அன்னம்மாள்.
“இ..இல்ல அத்தை! நான் போட்டுக் கொடுக்கிறேன்” அமைதியாக சமயலறைக்குள் நுழைந்து காஃபி போடத் துவங்கினாள்.
எதிர்த்துப் பேசி இருந்தால் சண்டைகள் பெரிதாகி இருக்கலாம். எனினும் அவள் அமைதியாக இருந்தது அதனைத் தவிர்த்து விட்டது. அறையில் இருந்த எழில் இதைக் கேட்கத் தான் செய்தான்.
தாயினருகே வந்து அமர்ந்தவனை அன்போடு நோக்கியது அவரது பார்வை.
“அம்மா!” என்றழைக்க, “சொல்லுப்பா” என்றவருக்கு மனைவிக்காக தன்னோடு சண்டையிட வந்திருக்கிறானோ என்ற எண்ணம்.
“தங்கச்சிக்கு கல்யாணம் பேசலாம்னு இருக்கேன். என்ன சொல்லுறீங்க?”
“நான் சொல்ல எதுவும் இல்ல. அவளைப் பார்த்து வளர்த்த உனக்கு, அவளுக்காக எதை எப்போ பண்ணனும்னு தெரியாதா?” மகனை ஆதூரமாகப் பார்த்தார்.
“ஒரு வீடு கட்டனும்னு ஆசைப்பட்டேன். இருந்தாலும் அது நடக்கல. இதுக்கு மேல தாமதப்படுத்த வேண்டாம்னு இருக்கேன். நமக்கு ஏற்றதா ஒருத்தரைப் பார்க்கலாம். அவ கிட்ட கேட்டேன். மனசுல யாரும் இருக்காங்களானு. இல்லனு சொல்லிட்டா. அதனால் மேற்கோண்டு காரியங்களைப் பார்க்கப் போறேன்” தனது எண்ணங்களை வெளிப்படுத்தினான்.
“அவ தான் யாரையும் காதலிக்கலயே. அப்பறம் எதுக்கு கேட்கனும்?” நந்திதாவுக்குக் கேட்குமாறு சத்தமாகக் கேட்டார்.
“அப்படி சொல்ல முடியாதும்மா. நந்து கிட்ட அவங்க வீட்டில் இதே கேள்வியை கேட்டு இருந்தா அவ இப்படி ஒரு நிலைமையில் இருந்திருக்க மாட்டா. ஊரெல்லாம் கொண்டாட நம்ம வீட்டுக்கு வந்திருப்பா. அந்த நிலமை உங்க பொண்ணுக்கு வரனுமா? அப்பறம் அவ மாமியார் வீட்டுல அவளையும் யாரும் மதிக்க மாட்டாங்க” என்றவனின் பேச்சு அவர் மனதைக் தாக்கியது.
மகள் என்றதும் அவருக்கு மனம் பதறியது. எந்த ஒரு தாயும் தனது மகள் புகுந்த வீட்டில் மகிழ்வோடு வாழ வேண்டும் என்று தானே ஆசைப்படுவாள்? மகளை அப்படி நினைக்கும் மனம், மருமகளுக்கு மட்டும் ஏன் மாறு செய்கிறது?
கோபமாகப் பேசினால் கூட கொடுக்க முடியாதளவு தாக்கத்தை, நிதானமான பேச்சினால் கொடுத்தான் எழில்.
“சரிம்மா. நான் ரூம் போறேன். ரெடியாகிட்டு ஸ்கூல் கிளம்பனும்” அறையினுள் சென்றவன் மனையாளின் வருகைக்காகக் காத்திருந்தான்.
அவள் கொடுத்த காஃபியை அருந்தியவன் அவளது முகத்தை ஊடுறுவிப் பார்க்க, “என்னங்க?” தனது சோகம் மறைத்து புன்னகை பூசிக் கொண்டாள்.
“நீ யாருக்காக இந்த வீட்டுக்கு வந்த?” என்று கேட்டவனை, “உங்களுக்காக தான்” எனக் கூறி, இதென்ன கேள்வி என்பது போல் பார்த்து வைத்தாள்.
“அப்படினா நீ என்னைத் தானே முக்கியமா நெனக்கனும்? நான் சொல்லுறதைத் தானே கேட்கனும்? என் பேச்சுக்கு தானே ரியாக்ட் பண்ணனும்?” என்றவனின் கேள்வி, தாய் சொன்னதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமலிரு என்பதை மறைமுகமாக உணர்த்தியது.
“சரிங்க” சுரத்தையற்ற குரலில் சொன்னவளை முறைத்து, “செத்த பாம்பு மாதிரி சொல்லாம கொஞ்சம் ஜம்முனு சொல்லு” கண்டிப்போடு கேட்டான்.
“நீங்க உங்க ஸ்டுடன்ட்ஸ் கிட்ட இந்த அதட்டலை வெச்சுக்கோங்க. என் கிட்ட வேண்டாம். நான் அழுதுடுவேன்” குழந்தை போல் சிணுங்கியவளை, சிரிப்போடு பார்த்தாள் பாவை.
“நீ ஏன்டி இவ்ளோ சாஃப்டா இருக்கே. அதான் எனக்கு உன்னை இன்னும் இன்னும் பிடிக்க வைக்குது. சோ கியூட்” அவளது கன்னங்களைப் பிடித்து ஆட்டினான்.
“எனக்கு வெட்கமா வருதுங்க” அவனது நெஞ்சில் தலை சாய்க்க, “ஆஹா அடடா! என் பொண்டாட்டிக்கு இதுவல்லவா அழகு? இனிமே அழுகாச்சி சீன் கட். மறுபடி அழுதா இதை விட வெட்கப்பட வெச்சிடுவேன். அப்பறம் நீ தாங்க மாட்ட” என்றவனின் பேச்சு ஒரு மார்க்கமாகத் தானிருந்தது.
“வேண்டாங்க. இதையே என்னால தாங்க முடியல”
“அப்போ கஷ்டம் தான். சரி நந்து. நான் போகனும். நீயும் வந்தா அப்படியே இறக்கி விட்டு போயிடுறேன்” என்றதும் அவள் தலையசைத்தாள்.
“கொஞ்சம் சிரிக்கலாம்” என்றவனைப் பார்த்து, அவளுக்கு உண்மையில் சிரிப்பு எழுந்தது.
“இது பர்பெக்ட்! இனி இப்படித் தான் இருக்கனும் மிஸ்ஸிஸ்..” என அவன் ஆரம்பிக்க, “நந்திதா எழிலழகன்” வெட்கச் சிவப்போடு முடித்து வைத்த மனைவியைக் காதலோடு நோக்கினான் ஆடவன்.
………………….
“அண்ணி! நர்சரி போகப் போறீங்களாமே. ஸ்கூல் பேக் ஷூ எல்லாம் ரெடியா?” சிரிப்போடு கேட்டான் ரூபன்.
“ஜானு படிச்சு கொடுக்கப் போறா. படிக்க இல்ல. உனக்கு வேணும்னா ஷூ போட்டு பாட்டிலை கழுத்துல மாட்டிட்டு போகலாம்” என்றவாறு வந்த யுகன் வர,
“நீ ரொம்ப மோசம் டா. வர வர என்னை டேமேஜ் பண்ணுறதையே முழுநேர வேலையா வெச்சுட்டு சுத்துற” முறைத்துப் பார்த்தான்.
“அதுக்கான ரூட்டைப் போட்டுக் கொடுக்கிறது நீ தானே” தேவன் சொல்லவும், சத்யா முகத்தில் சிறு புன்னகையோடு வந்தான்.
“என்னம்மா உங்க மூத்த மகன் முகம் மினு மினுக்குது?” ரூபன் மேகலையிடம் கேட்க, “சும்மா இரேன்டா. அவன் சந்தோஷமா இருந்தா உனக்கு பொறுக்காதா?” அவனது தோளில் மெல்ல அடித்தார்.
“அம்மாவும் பையனும் என்ன ரகசியம் பேசுறீங்க?” யுகனும் ஜனனியும் ஒரே சமயத்தில் கேட்டு விட, “இந்த அம்மாவும் பையனும் கூட ஒரே மாதிரி பேசுறாங்க” என்றான் தேவன்.
“சித்தாஆஆ” சற்றே கடுமையாக அழைத்த யுகன், “வீ ஆர் ஃப்ரெண்ட்ஸ்! ஒன்லி பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். வேற எதுவும் இல்லை. அப்படித் தானே ஜானு?” ஜனனியின் முகத்தைப் பார்க்க,
“ஆ..ஆமா யுகி” ஆமோதிப்பாக தலையசைத்தவளது உள்ளமோ, அவன் தன்னைத் தாயாக ஏற்க மாட்டானா என்ற தவிப்பில் சோர்ந்தது.
ஒரு தாயாக, அவளது ஏக்கம் மேகலைக்குப் புரிந்தது. “எல்லாம் சரியாகனும்! ஜனனியை சந்தோஷமா வெச்சு பார்த்துக்கனும்” மனதார வேண்டிக் கொண்டார் அவர்.
“அப்பறம் உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நான் டாடி கிட்ட ஒரு விஷயம் கேட்டேன். எப்போவும் சிரிப்பை மூட்டை கட்டி வெச்சுட்டு கடுகடுனு இருக்காரே. இன்னிக்கு முழு நாளும் சிரிச்சு சந்தோஷமா இருக்கனும்னு கேட்டுக்கிட்டேன். சோ இன்னிக்கு எனக்காக அவர் சிரிக்கப் போறார்” என்றான் யுகன்.
“ஓஹ்! மாற்றத்திற்குக் காரணம் மகன் தானா?” ரூபன் வியக்க, “அப்படியே வாழ்க்கை முழுக்க சிரிக்க சொல்லி வரம் கேளு. இல்லனா இந்த ஜென்மத்தில் சிரிக்க மாட்டார்” கிண்டலாக உரைத்தான் தேவன்.
சத்யா அவனை முறைக்க, “சும்மா இருங்க தேவா! வாங்க நாம சாப்பிட எடுத்து வைப்போம்” தேவனை அழைத்து வேலை கொடுத்தாள் ஜனனி.
அந்த சாக்கில் “அவரு இன்னிக்கு சிரிச்சுட்டு இருக்கட்டும். சண்டை போட வெச்சுடாதீங்க தெய்வமே” என்று கும்பிடு போட, “ஓகே அண்ணியாரே! உங்களுக்கு அண்ணன் மேல சம்திங் சம்திங் ஓஓ?” புருவம் உயர்த்திக் கேட்டான்.
“அப்படிலாம் திங்க் பண்ணாதீங்க. யுகிக்காக சொன்னேன். வேற எதுவும் இல்ல” என்றவளுக்கு உண்மையில் சத்யா மீது எந்த அபிப்பிராயமும் வந்ததில்லை.
“நாங்க எடுத்த போட்டோஸ் காட்டனும். ஃபோன் தாங்க டாடி” என்று யுகன் கேட்க, “ஓகே டா” புன்னகையோடு அலைபேசியை நீட்டினான்.
“ரூபி, பாட்டி இதைப் பாருங்க” ஜனனியோடு எடுத்த புகைப்படங்களைக் காட்ட, “அண்ணி! கோமாளி கூத்தெல்லாம் காட்டி இருக்கீங்களே” ரூபன் அவள் கொடுத்த போஸ்களைப் பார்த்து சிரிக்க,
“போட்டோனா அப்படி தான். எப்போவும் பல்லை மட்டும் காட்டிட்டு பொம்மை மாதிரி போஸ் கொடுக்கவா சொல்லுறீங்க?” கண் சிமிட்டியவளை சத்யாவின் பார்வையும் தாக்கியது.
மேகலையின் கண்கள் மூத்தவன் மீது நேசம் மீதூறப் படிந்தன. அவன் சிரித்துப் பார்த்து எத்தனை வருடங்களாகி விட்டன? இப்போது கூட சிரிக்கிறான், ஆயினும் அது உள்ளத்தினால் அல்ல. அவன் உளமாற உவகை பூக்கும் நாள் எப்போது வருமோ எனப் பரிதவித்தது தாயுள்ளம்.
“இந்த போட்டோஸ் எல்லாத்தையும் எடுத்தது டாடி தான். நாங்க நிறைய எடுத்தோம். இதெல்லாம் பாருங்க” ஒவ்வொன்றாக அவன் காண்பிக்க, அவர்களும் ஆவலுடன் பார்த்தனர்.
“வாங்க சாப்பிடலாம்” ஜனனி அழைக்க, அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.
“நீயும் உட்கார் ஜனனி” மேகலை சொல்லவே, அவளும் அமர்ந்து சாப்பிட்டாள்.
“டாடி ஆஆ” வாய் திறந்த மகனுக்கு முதலில் ஊட்டினான் சத்யா.
“நீயும் சாப்பிடு சத்யா” மேகலை சொல்ல, “யுகிக்கு ஊட்டி விட்ட அப்பறம் சாப்பிடுறேன்மா” தாயை அன்போடு நோக்கியது அவன் பார்வை.
அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்குக் காரணம், தான் இன்று புன்னகைப்பது என்பதை உணர்ந்தவனுக்கோ, இனி இவர்களுக்காக சிரிக்கலாமே என்று தோன்றியது.
உள்ளுக்குள் வலியை மறைத்து, மற்றவருக்காகச் சிரிப்பது அத்தனை எளிதல்ல. இருப்பினும் நம் மீது அன்பு கொண்டவர்களுக்காக அதைச் செய்வதில் தவறில்லையே?!
“ட்ரீம் வேர்ல்ட்கு போகாம ஊட்டுங்க டாடி பசிக்குது” வயிற்றைப் பிடித்த யுகனிடம், “சாரி கண்ணா” என கெஞ்சலுடன் மன்னிப்புக் கேட்டு விட்டு ஊட்டி முடித்தான்.
சத்யா சாப்பிட ஆரம்பிக்கையில் அவனது அலைபேசி அலறியது.
“எப்போ பாரு ஆபிஸ்ல இருந்து யாராவது கால் எடுத்து என் பிள்ளையை சாப்பிட விடாம பண்ண வேண்டியது. நீ சாப்பிட்ட அப்பறம் பேசு சத்யா” என்றார் மேகலை.
அவனது பார்வையோ அலைபேசித் திரையில் மின்னிய பெயர் மீது நிலைத்திருந்தது.
இனியா!
அவனது முன்னாள் மனைவி.
எடுத்துப் பேசிய சத்யா கதிரையைச் சடாரென தள்ளி விட்டு எழுந்து நின்றான். மேசையில் இருந்த கார் சாவியை எடுத்துக் கொண்டவன் கண்களில் அத்தனை சீற்றம்.
“சத்யா என்னாச்சு?” மேகலை பதற, “யாரு ஃபோன்ல?” தேவன் கேட்க, “எங்க போகப் போற?” என்று ரூபன் கேட்க, இறுதிக் கேள்விக்கு மட்டுமே பதில் கிடைத்தது.
“கோர்ட்டுக்கு” ஒற்றை வார்த்தையோடு கத்தரித்துக் கொண்டவனின் கை யுகனைப் பற்றிக் கொண்டது.
“வேற யாரும் என் பின்னால வரக் கூடாது” மகனை அழைத்துக் கொண்டு புயலெனக் கிளம்பினான் சத்ய ஜீவா.
ஏன் கோர்ட்டிற்குச் செல்கிறான்? அதுவும் யுகனோடு? இனியா புதிதாக ஏதாவது பிரச்சினையை கொண்டு வரப் போகிறாளா? யுகனை அவள் உரிமை கோரினால்…??
பற்பல வினாக்களைச் சுமந்து அதிர்வுடன் நின்றனர் அனைவரும்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி