💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 42
“யாரும் வேணாம்னு தானே அவனை விட்டுப் போனாங்க. தாயில்லா பிள்ளையா அவனைத் தவிக்க விட்டாங்க. இப்போ எதுக்கு யுகியைக் கேட்டு பிரச்சினையைக் கிளப்பனும்?” ரூபன் கவலை தொனிக்கக் கேட்க,
“அதான் டா! அண்ணனோட உசுரே யுகி தான். அவனையும் இழந்துட்டா என்னாகுமோ? அவங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?” ஆத்திரத்துடன் கர்ஜித்தான் தேவன்.
“மனசாட்சி இருந்தா இப்படி பண்ணி இருக்குமா? நமக்கு அதெல்லாம் முக்கியம் இல்ல. ஆனால் யுகியைக் கேட்டுட்டா என்னவாகும்? சத்யாவை எதுக்கு கோர்ட்டுக்கு கூப்பிட்டா?” தொய்ந்து போய் அமர்ந்தார் மேகலை.
ஜனனியின் நிலையோ படுமோசமாக இருந்தது. பழகியது சில நாட்கள் தான் எனினும், அவளது உயிராகி விட்டான் யுகன். அவனது சிந்தனைகள் அவளை ஒத்ததாக இருப்பது போன்ற எண்ணம் அவனை இன்னமும் நேசிக்க வைத்தது.
அவனைப் பிரிந்து விட்டால் அவள் நிலை என்னாவது? மற்றவர் நன்கு பழகினாலும் அவர்களை விட அதிக நெருக்கமும் நட்பும் யுகனுடன் அல்லவா உருவானது? அவன் இல்லாத வீட்டில் எப்படி இருப்பது என்ற நினைவு அவள் இதயத்தைக் கூறு போட்டது.
அறைக்குச் சென்று கைப்பையைத் தோளில் போட்டுக் கொண்டவளை மற்றவர்கள் புரியாமல் பார்த்தனர்.
“எங்கே போறீங்க அண்ணி?” ரூபன் பதற்றமாகக் கேட்க, “யுகி.. யுகியைப் பார்க்கனும்” அவள் குரலில் அப்பட்டமான தவிப்பு.
“நீங்க போகாதீங்கண்ணி! யுகி நம்மளை விட்டுப் போக மாட்டான். அண்ணா அதுக்கெல்லாம் விடவே மாட்டார். பயப்படாதீங்க” ஆறுதல் கூறினான் அவன்.
“ஆமா ஜனனி. சத்யா வர வேண்டாம்னு சொல்லிட்டான். என்ன ஏதுனு கூட சொல்ல முடியாதளவு அவசரத்தில் போயிட்டான். நீ போனா இருக்கிற கோவத்தை உன் மேல காட்டிடுவான்” மேகலை கவலையோடு கூற,
“என்னவானாலும் நான் பார்த்துக்கிறேன் அத்தை. ஆனால் எனக்கு யுகியைப் பார்க்கனும். அவனைப் பார்த்தால் தான் என் மனசு சரியாகும்” அவளின் பரிதவிப்பைப் பார்க்க, கஷ்டமாக இருந்தது அனைவருக்கும்.
இவளுக்குத் தான் யுகன் மீது எத்தனை அன்பு? பெறா விடினும் இவள் அல்லவோ தாய் என்று தான் நினைத்தனர்.
“விட்டுக் கொடுக்கிற அளவுக்கு சத்யாவுக்கும் யுகிக்குமான உறவு லேசிப்பட்டது இல்ல. அவன் யுகியை என்னிக்கும் கொடுக்க மாட்டான். நீங்க டென்ஷன் ஆகாம இருங்க” தேவன் எடுத்துக் கூறியும் அவள் கேட்கவில்லை.
“என்னை யாரும் தடுக்காதீங்க ப்ளீஸ்” ஆட்டோ பிடித்துக் கிளம்பியவளை இயலாமையோடு பார்க்க மட்டுமே முடிந்தது அவர்களால்.
“இன்னிக்கு தான் அவன் முகத்தில் சிரிப்பைப் பார்த்தேன். இந்த கடவுளுக்கு அது கூட பொறுக்கலயா? என் பையன் வாழ்க்கை எப்போ தான் சரியாகுமோ” கண்ணீர் விட்டார் மேகலை.
“ம்மா! அழாதீங்க. எல்லாமே சரியாகும்மா. இப்படி கஷ்டங்கள் வர்றப்போ நாம உடைஞ்சு போனாலும் தைரியத்தை இழக்கக் கூடாது. சில கஷ்டங்கள் வர்றதே, அதுக்குப் பின்னால பெரிய சந்தோஷங்களை தருவதற்காக இருக்கலாம்” அவரைத் தோளோடு அணைத்து ஆறுதல் மொழியுரைத்தான் தேவன்.
“இப்படி சொல்லி சொல்லித் தான் நானும் இருந்தேன். ஜனனியை கல்யாணம் பண்ணிக் கொடுத்த அப்புறம் எல்லாம் சரியாகிடும்னு நம்பிக்கை வெச்சேன். ஆனால் இருந்ததும் இல்லாம போற மாதிரி ஏதோ நடக்குது. நான் என்னடா செய்வேன்?” துக்கம் தாளவில்லை அவருக்கு.
“நீங்க இவ்ளோ ஃபீல் பண்ணுற அளவுக்கு எதுவும் நடக்காது. அண்ணியும் போயிருக்காங்கள்ல. ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு நல்ல முடிவை எடுப்பாங்க” ரூபனும் தன்னால் இயன்றளவு தாயைத் தேற்றினான்.
அவருக்காக அப்படிக் கூறினாலும், அவர்களது மனதில் கூட மறையாத படபடப்பொன்று இருக்கவே செய்தது. யுகி அவர்களது உயிர். அந்த வீட்டின் உயிர் நாடி அவன். அவனன்றி அவ்வீட்டின் சந்தோஷம் முழுமையடையா என்பது யாவரும் அறிந்ததே.
……………
கோர்ட் வாயிலில் நின்ற ஜனனியை உள்ளே செல்ல விடாமல் ஏதோவொன்று தடுத்தது. சத்யா வேண்டாம் என்றதையும் மீறி வந்திருக்க வேண்டாமோ என்று நினைத்து அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.
“ஏய்!” எனும் குரல் அவளைத் தடுத்து நிறுத்த, சடாரென திரும்பியவள் அங்கு சத்யாவைக் கண்டு அமைதியாக நின்றாள்.
“வர வேண்டாம்னு சொன்னேன்ல? அப்பறம் எதுக்கு நீ வந்த?” அக்கேள்வியை எதிர்பார்த்தது தானே?
“எனக்கு யுகியைப் பார்க்கனும். என் கிட்ட எதுவும் கேட்காதீங்க. அவனைப் பார்க்க விடுங்க” அவள் நெஞ்சம் யுகனைக் காண துடியாய்த் துடித்தது.
“நிறுத்து டி. நானும் பார்க்கிறேன் யுகி யுகினு ஓவரா சீன் போடுற? எல்லாமே உன்னால தான். நீ வந்த நேரம் என் குடும்பத்தில் இதுவரை நடக்காத குழப்பமெல்லாம் நடக்குது. எல்லாத்துக்கும் நீ தான் காரணம்” விரல் நீட்டி வெறுப்போடு அவன் மொழிந்த போது, சுக்கு நூறாக சிதறிப் போனாள் ஜனனி.
சாதாரணமாக இருந்திருந்தால் அவளுக்கு அவ்வார்த்தைகள் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காதோ? இன்று யுகனுக்காக ஏங்கிப் போய் பாதி உயிர் சென்ற நிலையில் இருந்தவளை சத்யாவின் வார்த்தைகள் அடியோடு சீர்குலைத்தன.
“நா..நான் எதுவும் பண்ணல. இப்படி அபாண்டமா பழி சுமத்தாதீங்க. நான் அப்படிப்பட்டவ இல்ல” இன்று ஏனோ அழுகை வந்து தொலைந்தது அவளுக்கு.
“நீ எப்படிப்பட்டவனு என்னைத் தவிர யாருக்கும் தெரியாது. அந்த ராஜீவை லவ் பண்ணி கொஞ்சிக் குலாவி இருந்துட்டு அவனை கழற்றி விட்டு கூச்சமே இல்லாம என் கையால தாலி வாங்கிக்கிட்ட ஆளு தானே நீ” அமிலமாக வார்த்தைகளை அள்ளி வீசினான் சத்யா.
அதிர்ச்சியில் உறைந்து போனவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. என்ன சொல்லி விட்டான்? ராஜீவைக் காதலித்த விடயம் இவனுக்குத் தெரியுமா? தெரிந்தால் அதைச் சொல்லி இருக்கலாம் தானே? அதைப் பற்றி கேட்டிருக்கலாமே. ஆனால் அதை இவ்வளவு கீழ்த்தரமான முறையில் சொல்லி விட்டானே?
அப்படியெனில் அன்றெல்லாம் தன்னைப் பற்றி தெரியும் தெரியும் என்று சொன்னது இதனைத் தானா? அவனுக்குத் தன் மீதுள்ள தப்பான கண்ணோட்டத்தை அறிந்து அருவறுத்துப் போனாள் ஜனனி.
“எல்லாம் தெரிஞ்சதும் வாயடைச்சுப் போய் நிற்கிற? இப்போ பேசலாமே” அவன் கேட்க, “இப்படி நடந்துதானு கேட்கிற ஆளுங்களுக்குத் தான் பதில் சொல்ல முடியும். இப்படித் தான் நடந்துச்சுனு அவங்களா ஒன்னை உறுதிப்படுத்தி சொல்லுறவங்களுக்கு விளக்கம் சொன்னா நாம பைத்தியமாகிடுவோம்” அங்கிருந்து நகர்ந்தவளை புருவம் சுருக்கிப் பார்த்து நின்றான் கணவன்.
…………..
இரவாகி விட்டது. காலையில் சென்ற மூவரும் இன்னும் வீடு வந்து சேரவில்லை. சத்யாவுக்கு அழைத்தும் அவன் அழைப்பை ஏற்கவில்லை. ஜனனி வீட்டிலேயே ஃபோனை வைத்து விட்டுச் சென்றிருந்தாள்.
“டேய்! என்னாச்சு? இவங்க எங்கே இருக்காங்கன்னு எந்த தகவலும் இல்லை. டென்ஷன் ஆகுது” தேவன் சொல்ல,
“எனக்கும் தான்டா. அம்மா வேற சாப்பிடாம யோசனையில் இருக்காங்க. கோர்ட்ல என்ன நடந்திருக்குமோ?” தேவனின் தோளில் கை வைத்தவாறு வாயிலைப் பார்த்திருந்தான் ரூபன்.
அவ்வேளையில் உள்ளே வந்த சத்யாவைப் பார்த்த இருவரது புருவங்களும் இடுங்கின. அவன் மட்டும் அல்லவா வந்தான்?
மகனைக் கண்ட மேகலை ஓடி வந்து “சத்யா! யுகி.. யுகி எங்கே டா?” என்று கேட்க, அவரைப் பார்க்க இயலாமல் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான் அவன்.
“சொல்லு சத்யா. நம்ம யுகி எங்கே? அண்ணி உன்னைப் பார்க்க வந்தாங்க. உன்னை மீட் பண்ணாங்க தானே?” ரூபன் அவசரமாகக் கேட்க,
“ஹான்! வந்தா. பயப்படாதீங்க. யுகி எங்கேயும் போகல. ஜனனி கூட தான் இருக்கா. பக்கத்தில் ஐஸ்கிரீம் ஷாப் போயிட்டு வர்றோம்னு சொன்னாங்க. எனக்கு டயர்டா இருக்குனு வந்துட்டேன்” என்றவனது விழிகள் எவர் முகத்தையும் பார்க்கவில்லை.
“சத்யா! இங்கே பார். அம்மா முகத்தைப் பார்த்து பேசு” மேகலைக்கு அவன் பொய் சொல்கிறானோ என்று தோன்றியது.
தன்னை நேருக்கு நேர் பார்க்க ஏன் தயங்குகிறான்? என்ன நடந்திருக்குமோ என்று அவருள்ளம் தவித்தது.
“என்னம்மா?” அவரைப் பார்க்க அவனுள் ஒருவகை தயக்கம்.
“நீ என் கிட்ட எதையாச்சும் மறைக்கிறியா? எதுக்கு முகத்தைப் பார்க்காம எங்கேயோ பார்த்து பேசுற? எதுவானாலும் சொல்லு. இனியா கூப்பிட்டு போனதா சொன்ன. அவ நம்ம யுகியை கேட்கல தானே?” என்று கேட்டதும், அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.
“அவளைப் பற்றி பேசாதீங்கம்மா. ச்சீ! அவளெல்லாம் ஒரு பொண்ணா. பாசமே இல்லாத கல்நெஞ்சக்காரி. சந்தோஷத்தைத் தான் இல்லாம பண்ணிட்டுப் போனா. ஆனால் இன்னிக்கு என் மொத்த நிம்மதியையும் பறிச்சுட்டா” கண்கள் சிவக்க சீறினான் சத்யா.
“நிம்மதியை பறிச்சுட்டாளா? அப்படின்னா என்னாச்சு? அவ என்ன பண்ணுனா? எதுக்காக கோர்ட்டுக்கு போன? சொல்லு சத்யா. எனக்கு நெஞ்செல்லாம் பதறுது” கேள்விகளை அடுக்கிய மேகலைக்கு வேகமாக மூச்சு வாங்கியது.
“ம்மா! நீங்க ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க. ரிலாக்ஸ் ரிலாக்ஸ்” தண்ணீர் கொண்டு வந்து குடிக்க வைத்தான் தேவன்.
“எதுவும் பெருசா நடக்கல மா. நீங்க ஆப்செட் ஆகாதீங்க. எனக்கு பயமா இருக்கும்மா. என்னால நீங்க கஷ்டப்படாதீங்க” சத்யா அவரது கைகளை இறுகப் பற்றிக் கொள்ள,
“உன் வாழ்க்கையில் என்னென்னமோ நடக்கும் போது என்னால எப்படி சும்மா இருக்க முடியும்? பெத்த மனசு கிடந்து தவிக்குது. உன் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க எத்தனை காலம் காத்திருக்கனுமோ?” அவனது கன்னத்தில் கை வைத்துக் கூற,
‘என் வாழ்க்கையில் இனி சந்தோஷம் கேள்விக்குறி தான் மா. இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போயிடுச்சு. இன்னிக்கு நான் பண்ணுன காரியத்திற்கு காலம் முழுக்க குற்றவுணர்ச்சியில் சாகப் போறேன்’ அனலில் விழுந்த புழுவாகத் துடித்தது அவனுள்ளம்.
வைத்தியனான ரூபனுக்கோ சத்யா எதையோ மனதில் வைத்து புழுங்கிக் கொண்டிருக்கிறான் என்பது ஐயமற புரிந்து விட்டது. இருந்தும் அதை வெளிப்படையாக தாயின் முன் கேட்க முடியாத நிலையில் இருந்தான்.
“யுகியைப் பார்க்கும் வரை எனக்கு நிம்மதி இருக்காது. அவன் வரட்டும்” என்று மேகலை சொல்லும் போது, “பாட்டீஈஈ” என்றவாறு ஓடி வந்தான் யுகன்.
“யுகி! என் செல்லமே” அவனை அணைத்து உச்சி முகர்ந்தார் மேகலை.
ரூபன், தேவன் என்று அனைவரும் அவனை அணைத்து முத்தமிட்டுக் கொண்டாடி மகிழ, அவனோடு வந்த ஜனனியை ஒருவரும் கவனிக்க மறந்தனர், சத்யாவைத் தவிர.
சத்யாவைக் குற்றஞ்சாட்டும் பார்வையால் துளைத்தெடுத்தாள் தாரகையவள். வேறு புறம் முகத்தைத் திருப்பியவனை விட்டும் யுகனிடம் பார்வையைத் நகர்த்தினாள்.
யுகனின் பார்வையும் அவள் மீது படிந்தது. அவன் கண்களில் ஏக்கமும், ஏமாற்றமும் போட்டி போட்டன.
அடுத்து அவள் செய்யப் போகும் காரியத்தில் அந்த ஏக்கமும் துடைத்தெறியப்படுமே, அப்போது அவனை எப்படி எதிர்கொள்வது எனும் வேதனையோடு அவ் அன்புச் சிறுவனை நோக்கினாள் ஜனனி.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி