💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 45
“சோ, உங்களுக்கு இந்த யுகி முக்கியம் இல்லல்ல?” ஓங்கி ஒலித்த குரலில் அனைவருக்கும் அதிர்வு, ஜனனியைத் தவிர.
ஜனனியின் பின்னிருந்து வெளிப்பட்டான் யுகன். அவனது பார்வை ஜனனியை ஏமாற்றத்தோடு தீண்டியது.
இவனல்லவா அவர்களது அன்புச் சிறுவன்? அப்படியெனில் ஜனனியின் கையைப் பிடித்து மருண்டு விழிக்கும் இவன் யார்?
“அ..அகி…??” ரூபன் கேள்வியாக அண்ணியைப் பார்க்க, “எஸ் ரூபன். அகியே தான்” என்றவளை அண்ணாந்து நோக்கினான் புதிதாக வந்தவன்.
அந்த வீட்டின் வாரிசு. சத்யாவின் இரட்டைப் புதல்வர்களுள் ஒருவன். யுகனின் உடன் பிறந்த சகோதரன்.
அவன் அகிலன்!
“இவன் இனியா கூடத் தானே இருந்தான்? இப்போ எப்படி இங்கே? என்ன தான் நடக்குது இங்கே? சொல்லு சத்யா. கோர்ட்ல என்ன நடந்துச்சு? இனியா என்ன பண்ணுனா?” கேள்விகளை அம்புகளாக்கி எய்தினார் மேகலை.
அவனும் மறைக்காமல் சொல்லத் துவங்கினான். சில நாட்களுக்கு முன்பு அவனுக்கு புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.
அவனது ஹலோவிற்குப் பதிலாக, “ஹலோ சத்யா” எனும் பரிச்சயமான அழைப்புக் கேட்டது.
“யாரு?” தனக்கு அழைத்திருக்கும் பெண் யாராக இருக்கும் என்று யோசனையில் ஆழ்ந்திட, “நா..நான் இனியா பேசுறேன்” என்றதும் அவனுள் கடுமை குடி கொண்டது.
அவள் பிரிவை எண்ணி ஏங்கிய காலமும், அழுகையோடு தூங்கிய காலமும் உண்டு. ஆனால் என்று அவள் இன்னொரு திருமணம் செய்தாளோ அன்றே மொத்தமாக வெறுத்துப் போய் விட்டது.
நினைத்து நிலைகுலையும் அளவு அவளுக்குத் தன் வாழ்வில் இருந்த இடத்தை அழித்து விட்டவனோ முழுமையாக அவள் நினைவுகளைத் தொலைத்து வாழ்ந்தான்.
இப்போது ஏன் திடீரென தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டுமென நினைத்தவன் அதைக் கேட்டு விட, கிடைத்த பதில் சற்றும் எதிர்பாராதது.
“என் ஹஸ்பண்ட் கூட கொஞ்சம் ப்ராப்ளம் ஆகிடுச்சு சத்யா. என்னால அகியை இங்கே வெச்சுட்டு இருக்க முடியல. அவன் உன் கூட இருந்தா நல்லா இருப்பான்னு தோணுது”
அவனுக்கோ பதில் கூறவும் முடியாத நிலை. அகிலன் அவனது உயிரில் உதித்தவன். ஆனால் இனியா எடுத்துச் சென்றதாலோ என்னவோ அவனோடு அப்படியொரு உறவோ நெருக்கமோ உருவானதில்லை.
அவள் வேறு திருமணம் செய்ததை அறிந்த போது ‘அகியை அவ ஹஸ்பண்ட் ஏத்துக்குவாரா?’ எனும் கேள்வி அவனுள் எழுந்தது.
அவனை ஏற்றுக் கொண்டதாகவும், அவள் நன்கு வாழ்கிறாள் என்பதையும் அறிந்தவன் அமைதியாக இருந்து விட்டான். ஆனால் இப்போது அகியைத் தருவதாகக் கூறவும் யுகியின் நினைவு வந்தது.
“எனக்கு யோசிக்க டைம் வேணும்” என்றவாறு வைத்தவனுக்கு தெரியும், யுகனுக்கு இனியா மற்றும் அகியை பிடிக்காது என்று.
“அகி என்னடா பண்ணான்?” யூ.எஸ்சில் இருக்கும் போது கூட சத்யா கேட்பான்.
“எனக்கு தெரியல டாடி. ஆனால் இனியாவும் வேண்டாம், அகியும் வேண்டாம்” என்று விடுவான்.
அவனுக்கு சத்யாவை எவருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணம். அந்த விடயத்தில் மட்டும் சத்யா சொல்வதையும் அவன் கேட்க மாட்டான்.
சத்யாவுக்கு ஜனனி அன்றொரு நாள் கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.
“உங்களுக்கு இன்னொரு பையன் இருக்கானாமே. அவனையும் ஒரு வேளை உங்க கிட்ட அனுப்பிட்டா என்ன பண்ணுவீங்க? அந்த நேரத்தில் என் அக்கா வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் வராம பார்த்துக்கிற பொறுப்பு உங்களோடது” என்று அவள் கேட்டதற்குத் தான் அவன் கோபமாக எதிர்வினையாற்றினான்.
உண்மையாகி விட்டதே. இனி என்ன செய்வது என்று நாளுக்கு நாள் தவித்துக் கொண்டிருக்கும் போதே, இனியாவிடமிருந்து அழைப்பு வந்தது, அவள் கோர்ட்டில் இருப்பதாகவும் யுகியை அழைத்துத் கொண்டு வருமாறும்.
அங்கு சென்றவனுக்குக் கிடைத்தது அழுது கொண்டிருந்த அகிலனின் தரிசனம். அகியை விலகாவிட்டால் தனது வாழ்க்கை பறி போய் விடுமென்றும், அவனை அழைத்துச் செல்லுமாறும் கதறினாள் இனியா.
சத்யாவுக்கு வெறுத்துப் போனது. இவள் எல்லாம் ஒரு தாயா? ஒரு குழந்தையைத் தான் பிரிந்தாள்? ஆனால் அவளையே உலகமெனக் கருதிய இந்தப் பிஞ்சையும் வேண்டாம் என்கிறாளே என்றிருந்தது.
குழந்தை இல்லாமல் எத்தனை பெண்கள் கண்ணீரோடு கலங்கிப் போயிருக்கிறார்கள்? ஆனால் இவளைப் போன்ற பெண்கள் பெற்ற குழந்தையை துச்சமாக ஒதுக்கி விடுகிறார்களே.
இந்த நேரத்தில் ஜனனி வரவும், இருந்த கோபத்தை அவள் மீது கொட்டித் தீர்த்து விட்டான் சத்யா. அவள் சென்று அருகில் இருந்த பூங்காவில் காத்திருந்தாள்.
இங்கோ சத்யாவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவன் மறுத்தால் பிரச்சினை பெரிதாகும் என்பதால் அவனே அகிலனைப் பொறுப்பேற்பதாகக் கூறினான்.
“ரொம்ப நன்றி சத்யா! அகியை என்ன பண்ணுறதுன்னு யோசிச்சுட்டே இருந்தேன்” என்று சொன்ன இனியாவை வெறுப்போடு நோக்கி, “உனக்கும் எனக்குமான பேச்சு முடிஞ்சுது. போயி உன் புருஷன் கூட வாழுற வழியைப் பார். உனக்கு பிரிவுகள் எல்லாம் ஈசியா போயிடுச்சுல்ல. ச்சே! உன்னைப் பார்க்கவே அசிங்கமா இருக்கு” என்க, இனியா அங்கிருந்து சென்று விட்டாள்.
சத்யாவின் பார்வை அகிலன் மீது படிந்தது. அச்சொட்டாக யுகனின் சாயலில் இருந்தான். இவனது பின் கழுத்தில் சற்று பெரிதாக ஒரு மச்சம் இருந்தது. அது தான் இருவருக்குமான வேறுபாடு என்றுணர்ந்தான்.
அகிலனோ மிரண்ட பார்வையோடு நிற்க, சத்யாவுக்கு சட்டென யுகனின் நினைவு வந்தது. அவன் காரின் அருகில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்.
“யுகி கண்ணா…!!” எனும் அழைப்போடு தோள் தொட, “என் கிட்ட வராதீங்க டாடி”சட்டென பின்னகர்ந்தவனின் விலகல் சத்யாவை முற்றிலும் சிதைத்தது.
யுகன் என்றால் அவனுக்கு உயிர் அல்லவா? அவனது சிறு பார்வை கூட அவனைக் கோடாரி கொண்டு தாக்குவது போல் வலித்தது.
“நான் சொல்லுறதைக் கேளு டா. அகி..” என ஆரம்பிக்கும் போது, “அந்தப் பெயரை சொல்லாதீங்க. எனக்கு அகி வேண்டாம். அவனை வீட்டுக்கு கூட்டி வராதீங்க. அப்படி வந்தா நான் உங்க கூட பேச மாட்டேன். உங்க கிட்ட வரவும் மாட்டேன்” அழுகையும் கோபமுமாகச் சொன்னான் யுகன்.
“அப்படி சொல்லக் கூடாது யுகி” எனும் குரலில் இருவரும் திரும்ப, அங்கு நின்றிருந்தது ஜனனியே.
ஆம்! பார்க்கில் இருந்து சத்யாவைக் கண்டு கொண்டவள் அருகில் வரும் போது அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டாள். அகிலனைக் கண்டதும் நடந்தது அனைத்தையும் யூகித்துக் கொண்டாள்.
“நீ பேசாத ஜானு! நான் அவர் கிட்ட பேசுறேன்” என்றவன், “நீங்க சொல்லுங்க டாடி! உங்களுக்கு நான் வேணுமா? அகிலன் வேணுமா?” மகன் கேட்ட கேள்வியில் திகைத்துப் போனான் தகப்பன்.
என்னவென்று பதிலளிப்பான்? நிச்சயம் அவனது தெரிவு யுகன் தான். அதில் மாற்றமில்லை. ஆனால் தான் பொறுப்பேற்ற மகனை என்ன செய்வது?
“எதுவும் தப்பா யோசிக்காதீங்க. நாம வீட்டுக்குப் போய் எல்லாம் பேசிக்கலாம்” என்று ஜனனி அவசரப்படுத்த, “அகிலன் வந்தா நான் வர மாட்டேன். டாடிக்கு நான் வேணும்னா, உனக்கு நான் வேணும்னா இவன் வரக் கூடாது” அகிலன் மீது கோபத்துடன் நிலைத்தது, அவன் பார்வை.
தாயைப் பிரிந்த சில பிள்ளைகள் தாயன்புக்காக ஏங்கியிருப்பர். சிலரோ அவ்வன்பில் வெறுப்புக் கொண்டு விலகிடுவர். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம் அல்லவா? அதில் யுகன் இரண்டாவது ரகம். அம்மா என்ற உறவில் ஆரம்பம் முதற்கொண்டு வெறுப்பை விதைத்தவனுக்கு, அவளிடம் வளர்ந்த அகிலன் மீதும் அவ்வுணர்வு தான்.
அத்தோடு சத்யாவின் முழு மொத்த அன்புக்கும் சொந்தக்காரனாக இருந்தவனுக்கு, அவ்வன்பு தனக்கே தனக்காகக் கிடைக்க வேண்டுமென்ற சுயநலமும் கூட. அனைத்தும் சேர்ந்து கொள்ள, இப்படிப் பேசினான்.
“நான் அகியைக் கூட்டிட்டு போறேன்” என்றவாறு சத்யா, ஒரு அநாதை ஆசிரமத்துக்கு அழைக்க, அவன் செய்யப் போகும் காரியம் புரிந்து போனது மனைவிக்கு.
“ஏங்க! அது தப்பு. யாரோ ஒருத்தவங்க பண்ணுன காரியத்துக்கு இந்த சின்னக் குழந்தையை பலியாக்காதீங்க”
“எனக்கு யுகி வேணும். அகியைக் கூட்டிட்டு போனா நான் அவனை இழந்துடுவேன். கொஞ்ச நாள் போகட்டும். பார்த்துக்கலாம்” என்றவனுக்கு அவன் செய்யும் செயலில் உடன்பாடு இல்லை தான்.
இருப்பினும், குற்றவுணர்வில் குறுகுறுக்கும் மனதை அடக்கிக் கொண்டு அதை செய்யத் துணிந்தான். அகிலனை ஆசிரமத்தில் தனக்குத் தெரிந்த ஒருவரிடம் சொல்லி சேர்த்தவனோ வீடு திரும்பினான்.
அவனால் மேகலையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. தன் பிள்ளைகள் அனைவரையும் சமனாக எண்ணி அன்பைப் பொழியும் அந்தத் தாய்க்கு மகனாகப் பிறந்தும், தான் இரண்டு மகன்களுக்கும் வேறுபாடு பார்த்து இப்படியொரு முடிவை எடுத்து விட்டோமே என்று நாளுக்கு நாள் புழுங்கித் தவித்தான்.
ஜனனி நிச்சயம் அகியை வீட்டிற்கு அழைத்து வருவாள் என்ற எண்ணத்தில் தான் யுகன் அவளிடமிருந்து விலக எத்தனித்தான். அகியை அழைத்து வந்தால் யுகன் பேச மாட்டான் என்பது தெரிந்து விட்டது. என்றாலும் அவளால் அதைச் செய்யாமல் இருக்க முடியவில்லை.
எனவே, இன்று யுகனுடன் சென்று அகிலனை அழைத்து வந்தாள். அவனது கண்கள் ஜனனியை அன்றி வேறெங்கும் திரும்பவில்லை.
“அத்தை! உங்க கிட்ட கேட்காம நான் செஞ்ச காரியம் இது தான். இது தப்பா?” அத்தையை நோக்க,
“இல்லம்மா! நீ சரியா பண்ணி இருக்க. எங்க குடும்ப வாரிசு அநாதை ஆசிரமத்தில் யாரும் இல்லாத மாதிரி இருக்கான்னு, அதுவும் விட்டு வந்தது பெத்த அப்பன்னு தெரிஞ்சா எல்லாரும் காரித் துப்புவாங்க.
மத்தவன் பேச்சை விட்டாலும், இந்த சின்னப் பையன் யாரும் இல்லாம எப்படி இருந்திருப்பான்?” மேகலை அகிலனைத் தவிப்போடு நோக்கினார்.
“நான் போய் பார்க்கலாம்னு தான்மா. அப்படியே விட நெனக்கல” என்று சத்யா சொல்ல வர, “பேசாத டா! விட்டுட்டு போனது அவ தானே தவிர இந்த குழந்தை இல்ல. ஜனனி கூட்டிட்டு வரலேனா இவன் அநாதையா அந்த ஆசிரமத்தில் தவிச்சு போயிருப்பான்ல?” முகத்தைத் திருப்பிக் கொண்டார் அவர்.
“டாடியை எதுவும் சொல்லாதீங்க பாட்டி” யுகன் தந்தைக்கு சார்பாகப் பேச, “இதுக்கு தான் நீ ஜானு கூட ஒழுங்கா பேசலையா? இப்படி இருக்குறது நல்லதுக்கு இல்ல யுகி” என்றான் தேவன்.
“எனக்கு தெரியல சித்தா! நான் ஜானு கூட பேச மாட்டேன். எனக்கு டாடி மட்டும் போதும். அவ என் ஃப்ரெண்ட் கூட கிடையாது. இனிமே நான் அவ கிட்ட போக மாட்டேன்” என்றவாறு சத்யாவைக் கட்டிக் கொண்டான் யுகன்.
அவனை ஏக்கத்தோடு பார்த்தாள் ஜனனி. அவளது விரலைக் கெட்டியாகப் பற்றிய அகியைப் பார்த்த சத்யாவின் பார்வையிலும் ஏக்கம் இருந்ததுவோ?
இனி அங்கு பாசம் போராட்டம் நடைபெறவிருப்பதை அப்பார்வைகளின் வீச்சு எடுத்துரைத்தது. உறவுகள் பலப்பட கண்ணீரும் ஏக்கமும் இன்னும் விதைக்கப்பட வேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டியது விதி. இனி அவ்வீட்டில் பாசத்திற்கான போராட்டங்கள்…
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி