46. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.8
(6)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 46

 

காலேஜ் விட்டு வந்து கொண்டிருந்தாள் மகிஷா. அவளது மனதில் ரூபனின் எண்ணம் வலம் வந்தது‌.

 

‘இந்த ரூபி என்னை கட்டிப் போட்டு வெச்சிருக்கான்’ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவளுக்கு ஏனோ அவ்வுணர்வு இனிமையாக இருந்தது என்பதே உண்மை.

 

கேட்டைத் திறந்து உள்ளே செல்ல எத்தனித்த போது, அவள் பார்வை எதிர்வீட்டை நோக்கித் திரும்பியது.

 

அங்கு பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு நந்திதாவின் நினைவு சிறகடிக்கும். என்ன இருந்தாலும் உடன்பிறந்தவள் அல்லவா?

 

அவளைக் காணாமல் சோர்ந்து போனவளாய்த் திரும்ப, “மகி” எனும் அழைப்போடு வந்து நின்றாள், அவளது தேடலின் சொந்தக்காரி.

 

சமையலுக்குத் தேவையான பொருட்களைப் பையில் எடுத்துக் கொண்டு வந்தவளின் முகத்தில் அப்பட்டமான களைப்பு.

 

“எப்படி இருக்க மகி? அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்களா? ஜானு கூட பேசுனியா?” ஆர்வம் மேலிடக் கேட்டவளைக் காண்கையில் சின்னவளுக்கு மனம் கனிந்தது.

 

“எல்லாரும் நல்லா இருக்காங்க. அம்மா தான் உன் நினைவில் புலம்புறா. ஜானு அடிக்கடி கால் பண்ணுவா. நீ பேசலயா?” அங்குமிங்கும் கண்களை அலைய விட்டவாறு பதிலிறுத்தினாள்.

 

“அன்னிக்கு நான் பேசினப்போ கோவமா இருந்தா. எனக்கு அவ கிட்ட பேச ஒரு மாதிரி இருக்கு” கவலையுடன் கூற,

 

“கோவம் இல்லாம போகாதே. ஆனால் கோவம்னு அதை சொல்லவும் முடியாது. மத்தவங்க எப்படியோ தெரியல. குடும்ப கௌரவம், தகுதி தராதரம்னு எல்லாத்தையும் தாண்டி நீ சந்தோஷமா இருக்கனும்னு தான் நானும் ஜானுவும் நினைப்போம்.

 

எங்க கிட்டிருந்தும் எல்லாத்தையும் மறைச்சிட்டியேங்குற ஏமாற்றம் தான் எங்களுக்கு. ஜானுவுக்கு அது அதிகமாவே இருக்கு. வேற யாராவதா இருந்திருந்தா உன்னால வேண்டாத கல்யாணத்தைப் பண்ணிக்க வேண்டிப் போச்சேனு கோபப்படுவா. ஆனா ஜானு அப்படி கூட நினைக்கல.

 

எனக்காக பண்ணுனதா இருந்தாலுமே, அந்த கல்யாணத்தையும் சரி குடும்பத்தையும் சரி இயல்பா ஏத்துக்கிட்டா. அதை சுமையாவோ சிக்கலாவோ நெனக்கல. தன் வாழ்க்கை இது தான்னு வாழுறா. இருந்தாலும், நீ இப்படி குடும்பத்தை விட்டு ஒதுக்கப்பட்டு இருக்குறதுக்கு முழுக் காரணமும் நீ தான் என்கிற ஆதங்கத்தில் தான் அவ கோபப்படுறாளே தவிர, மத்தபடி தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை” என்றாள் தங்கை.

 

அவள் கூறியது அத்தனையும் வாய்மை. ஒன்றையும் மறுக்க முடியாதே. அவளது நிலைக்குக் காரணம் அவள்! அவள் எடுத்த முடிவு தானே?

 

“எனக்கு தெரியாதா ஜானுவைப் பற்றி? அவ சந்தோஷமா இருக்கனும்னு நானும் ஆசைப்படுறேன். நம்ம குடும்பம் பழையபடி மாறனும்” கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள் நந்து.

 

“கவலைப்படாத நந்து! நடந்தது நடந்து போச்சு. நீ இதை நெனச்சே அழுதுட்டு இருக்காம மாமா கூட ஹேப்பியா இரு. காலம் எல்லாத்துக்கும் மருந்தா அமையும்கா” சின்னவள் ஆறுதல் கூற, “சரிடி‌. என் கிட்ட நீ பேசியதே ஆறுதலா இருக்கு” எனும் போது,

 

“மகீஈஈஈ” எனும் கர்ஜனையில் இருவரும் நடுநடுங்கிப் போயினர்.

 

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கண்களில் சிவப்பேற நின்றிருந்தார் மாரிமுத்து.

 

“அ..அப்பா” மகி அச்சத்துடன் அழைக்க, “உனக்கு இங்கே என்னடி பேச்சு வேண்டிக் கிடக்கு? அதான் யாரும் வேணாம்னு உதறித் தள்ளிட்டு போனியே. மறுபடி ஒட்டி உறவாட ஆசைப்படாத” என்றார், நந்திதாவை நோக்கி.

 

“எனக்கு நீங்கள்லாம் வேணும்” மெல்லிய குரலில் அவள் சொல்ல, “வேணும்னு நெனச்சி இருந்தா அந்த மாதிரி பண்ணி இருக்க மாட்ட. மகி கிட்ட பேசி அவ மனசை மாத்தி உன்னைப் போல கேவலமான வேலைகளை பண்ண வைக்க நெனச்சன்னா தொலச்சிடுவேன்” என்றவர் இளைய மகளிடம் திரும்பி,

 

“இனிமே இவ கூட பேசுறதைப் பார்த்தா உன்னை காலேஜ் அனுப்பவும் யோசிக்க வேண்டி வரும் பார்த்துக்க. உள்ளே போ” என்க, அவளோ அதிர்ந்து போனாள்.

 

“நான் இனி மகி கிட்ட பேச மாட்டேன். அவளை எதுவும் பண்ணிடாதீங்க. அவ படிப்பு என்னால கெட்டுச்சுங்கிற பெயர் எனக்கு வேண்டாம். நான் ஒதுங்கியே இருக்கேன்” அழுது கொண்டு சென்ற நந்திதாவை இயலாமையோடு பார்த்தாள் உடன்பிறந்தவள்.

 

அழுது கொண்டு வந்த மருமகளைக் கண்ட அன்னம்மாள், “உன் அப்பனோட கோபம் தெரிஞ்சும் எதுக்கு போய் பேசி கண்ணீரைக் கொட்டிட்டு வர்ற? யோசிக்காம பண்ணுற சில காரியங்களுக்கு இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகனும்” என்று சொல்ல, அவளுக்கு இன்னும் அழுகை வந்தது.

 

“அழனும்னு சொல்லல. சூடு ஆறும் வரை பொறுத்திருக்கனும்னு சொல்லுறேன். அதோ உன் புருஷன் வர்றான். இப்படி உன்னைப் பார்த்தா நான் அழ வெச்சேன்னு எனக்கு பாடம் எடுப்பான். அதுக்கு முன்னால கண்ணைத் துடைச்சுக்க” என்றதும், கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

 

“ம்மா! கொஞ்சம் அன்பா சொன்னா என்னவாம்? அதட்டலோட தான் சொல்லனுமா?” தாயிடம் கேட்டவனோ, மனைவியின் தோளில் கை போட்டு அறையினுள் அழைத்துச் சென்றான்.

 

“என்னடா அழுறியா?” என்று எழில் கேட்க, “இது ஆனந்தக் கண்ணீர்ங்க. திட்டுறதுக்காக இருந்தாலும் அப்பா என் முகத்தைப் பார்த்தார். மகி நல்லா பேசினா. இதுவே எனக்கு சந்தோஷம் தான். அதனால அழ மாட்டேன்” கண்களைத் துடைத்தவாறு புன்னகைக்க,

 

“அடடே! என் பொண்டாட்டியா இது?” வியப்புடன் கேட்ட கணவனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள் நந்திதா.

 

…………….

இரவுணவு வேளை. சமையலை முடித்துக் கொண்ட ஜனனிக்கு மனம் முழுவதும் அகிலனின் நினைவு தான். அவளைத் தவிர எவரிடமும் அவன் செல்லவில்லை. 

 

மேகலை, ரூபன், தேவன் என்று எவர் அழைத்தாலும், சற்று மிரட்சியுடன் பார்ப்பானேயன்றி ஜனனியின் கையைப் பிடித்துக் கொண்டு தான் இருந்தான்.

 

சற்று முன்பு, அவனை அறையில் அமர வைக்கச் செல்ல, “இங்கே வராதீங்க” என்று விட்டான் யுகன்.

 

ஜனனி எதுவும் பேசவில்லை. அமைதியாக எதிரில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்று தனது அலைபேசியில் கார்ட்டூன் பார்க்கக் கொடுக்க,

 

“எனக்கு பயமா இருக்கு” அவளது துப்பட்டாவைப் பிடித்துக் கொள்ள, “பயப்படாத பாப்பா. உன்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. யுகி இருக்கான்ல, ரொம்ப சமத்து பையன். அவன் இங்கே வந்து உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டான். கார்ட்டூன் பார்த்துட்டு இரு. நான் வந்துடுறேன்” என்றவாறு வந்து விட்டாள்.

 

வேலைகளை அவசரமாக முடித்து விட்டு அவனை நோக்கி ஓட எத்தனித்தவளை யுகனின் நினைவு தடுத்து நிறுத்த, அறையினுள் எட்டிப் பார்த்தாள்.

 

யுகனோ சத்யாவின் மடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, மகனின் கதைகளைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தான் தந்தை.

 

“சாப்பிட வாங்க” என்று அழைத்தவளின் குரலில் அவளைத் திரும்பிப் பார்த்த இருவரின் கண்களும், முன்பு போலல்லாது வெற்றுப் பார்வை பார்த்தன.

 

“நான் போறேன் டாடி” வேகமாக எழுந்த யுகன் ஜனனியைத் தாண்டி வெளியேறினான்.

 

அவளுக்கோ முகம் வாடிப் போனது. எதிர்பார்த்தது தான் என்றாலும், இந்தப் பாராமுகம் அவளுக்கு வலியைக் கொடுத்தது.

 

“இதெல்லாம் நடக்கும்னு ஏற்கனவே தெரியும்ல?” சத்யா கேட்க, “அதுக்குனு அகியை அம்போனு விட முடியாதுல்ல. யுகி சின்னப் பையன். அவனோட குழந்தைத்தனமான சிந்தனையோட இப்படி பண்ணுறான். அதுக்குனு அவன் சொல்லுற எல்லாத்தையும் நாம செய்ய முடியாது.

 

யுகிக்காக தான் நீங்க அகியை ஆசிரமத்தில் விட்டீங்க. அதுக்காக அத்தை யுகியை கோவிச்சுக்கல. ஏன்னா அவன் அறியாத பையன். ஆனால் உங்களுக்கு சின்னப் பிள்ளை புத்தி இல்லல்ல? கொஞ்சம் உங்க வயசுக்கு ஏத்த மாதிரி யோசிங்க” எவ்வளவு முயன்றும் முடியாமல் சற்று கடினமாகவே சொன்னாள் ஜனனி.

 

அவள் சொல்வது உண்மை அல்லவா? எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றான்.

 

“எனக்கு உங்க கிட்ட பிடிச்ச ஒரு விஷயத்தைச் சொல்லவா?” அவள் கேட்டதும், சட்டென தலைதூக்கிய ஆர்வத்தோடு அவளை ஏறிட்டான்.

 

“உங்க தப்பை சொன்னா எனக்கு அட்வைஸ் பண்ண நீ யாருன்னு கேட்டு அலட்சியப்படுத்தாம, அதை மனசார உணர்ந்து தப்பு செஞ்ச குழந்தை மாதிரி அமைதியா தலை குனியுறீங்களே அதான். அதே மாதிரி, தப்புனு உணர்ந்ததை இனிமே பண்ணாம இருந்தா நான் சந்தோஷப்படுவேன்” மில்லி மீற்றரளவு புன்னகையைப் பரிசளித்து விட்டு நகர்ந்தாள் ஜனனி.

 

அவள் சொன்னதைக் கேட்ட சத்யாவுக்கு இனம் புரியாத உணர்வு. அவளைக் காயப்படுத்தினான் அவன். ஆனால் அதைப் பெரிதுபடுத்தாமல், சொல்லிக் காட்டாமல் தன்னைப் பற்றி நல்லது கூறும் இவளது குணம் அவனைக் கவர்ந்தது.

 

அகிலனை அழைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்தாள். தட்டில் உணவை வைத்தவள், மற்றவர்களுக்குப் பரிமாறி விட்டு அவனுக்கு ஊட்டி விடலாமா என்று நினைத்து அகியைப் பார்க்க, அவனோ தனது கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

 

“ஊட்டி விடட்டுமா அகி?” ஜனனி கேட்க, “நான் கையால தான் சாப்பிடுவேன். யாரும் எனக்கு ஊட்ட மாட்டாங்க” என்றவாறு சாப்பிட்டவனை அனைவரும் அன்போடு நோக்கினர், யுகியைத் தவிர.

 

அவனுக்கு சத்யா ஊட்டி விட்டான். சத்யாவின் மனமோ யுகன் மற்றும் அகிலன் உருவத்தில் ஒன்று போல் இருந்தாலும் அவர்களது குணங்கள், பழக்கவழக்கங்கள் அனைத்தும் வெவ்வேறுபட்டவை என்பதை உணர்ந்தான். இருவரும் வாழ்ந்த சூழல் ஒன்றல்லவே?!

 

“டேய் சில்வண்டு! இன்னிக்கு சவுண்டையே காணோம். மௌன விரதமா?” ரூபன் யுகனை வம்பிழுக்க, “நான் மௌன விரதம் இருந்தாலும் இந்த வீடு இனிமே ஜாலியா இருக்கும் ரூபி. அதான் உங்களுக்கு பிடிச்ச பையன் வந்துட்டான்ல?” யுகனின் பார்வை அகிலனை வட்டமிட்டது.

 

“ஆமாடா! ஏற்கனவே எங்களோட யுகி டார்லிங் இருந்தான். இப்போ அகியும் வந்தாச்சு. இனி வீடு ஜாலியா தான் இருக்கும்” ரூபன் மெல்லப் புன்னகைக்க,

 

“ஆனா நான் மட்டும் ஜாலியா இல்ல. என்னோட சந்தோஷம் இல்லாம போயிடுச்சு” என்றான் சின்னவன்.

 

“சில நேரம் நம்ம மனசுக்கு அப்படி தோணும் யுகி. ஆனால் உண்மை என்ன தெரியுமா? கொஞ்ச நாள்ல டபுள் மடங்கு சந்தோஷம் வந்து சேரும் போது, இதுக்காக தான் அப்படி இருந்துச்சுனு உண்மையை உணர்வோம். அப்பறம் எல்லாமே சரியாகிடும்” ஜனனியின் விழிகள் இரு சிறுவர்களையும் அன்புடன் வருடின.

 

“ஜானு சொல்லுறது சரி தான் யுகி. எல்லாமே சரியாகிடும். அந்த நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு” என்ற மேகலையின் திருப்தியான முகம் அனைவருக்கும் நிம்மதியைக் கொடுத்தது.

 

“ஹப்பாடா! நீங்க தெளிவாகினா எல்லாமே சரி தான்மா. இல்லனா நீங்க டென்ஷனாகி எங்களையும் டென்ஷனாவே வெச்சிட்டு இருப்பீங்க” ரூபன் சிரிப்போடு சொல்ல,

 

“நான் உனக்கு டென்ஷனா? போடா” முகத்தைத் திருப்பிக் கொண்டார் மேகலை.

 

“டேய்! சும்மா இரேன் டா” என்ற தேவன், “அவன் அப்படி தான்மா. வாயை வெச்சிட்டு இருக்காம எதையாச்சும் உளறுவான்” என்றிட,

 

“டேய் படவா! கெடச்ச சான்ஸ்ல என் ரூபியைத் திட்டுறியா?” மேகலை தேவனை முறைக்க, “பாட்டி! நீங்களும் ரூபி சொல்லிட்டீங்களா? ஹாஹா” யுகன் சத்தமாக சிரிக்க,

 

அப்போதே தாய் சொன்னதை உணர்ந்தவனாய் “அம்மாஆஆஆஆ” என்று ரூபன் சிணுங்க, அங்கே மெல்லிய சிரிப்பலை எழுந்து அடங்கியது.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!