46. விஷ்வ மித்ரன்

0
(0)

விஷ்வ மித்ரன் 

 

💙 நட்பு 46

 

தன்னை அழுத்தமாகப் பார்த்திருக்கும் மனைவியைப் புரியாது நோக்கினான் ரோஹன்.

 

“கேள்வியா பார்ப்பியே தவிர என்னனு வாய் திறந்து கேட்க மாட்டே. அது தானே உன்னோட பழக்கம். எல்லாம் தெரிஞ்சும் மறைச்சுட்டு கல்லு விழுங்கினவன் மாதிரி இருப்ப. உனக்கு பெரிய தியாகின்னு நினைப்போ?” படபடவென பொரிந்து தள்ளினாள் பூர்ணி.

 

“எதுக்கு டி புதிர் போடுற?”

 

“நானு? நான் புதிர் போடுறேனா? என்னைச் சுற்றி ஒரு புதிர் இருந்துச்சுனே தெரியாத முட்டாளா என்னை ஆக்கிட்டு என்னைச் சொல்லுறியா?” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கத்தினாள் அவள்.

 

“பூ! விஷயத்தை சொல்லிட்டு திட்டுடி. இப்போ என்னனு சொல்லு” பாவமாகப் பார்த்தான் ரோஹி.

 

“அன்னிக்கு மித்து கூட என்னை சேர்த்து வெச்சு தப்பா பழி போடும் போது நீ யேன் அமைதியாக இருந்த?” கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டி அவனை ஆராய்ந்தாள்.

 

“எதுக்கு திடீர்னு கேட்குற? அதான் உனக்கு தெரியுமே” என்றான் வேகமாக.

 

“தெரியாதே. சொல்லு தெரிஞ்சுக்குறேன்”

 

“அ…அது எல்லாரும் அப்படி பேசும் போது எனக்கும் கொஞ்சம் சந்..தேகம்” என இழுவையாக சொல்ல,

 

“ஸ்டாப் இட் ரோஹன். வாய் கூசாமல் பொய் பேசுறியே உனக்கு வெட்கமா இல்லை?” என சினத்தில் தெறித்தன வார்த்தைகள்.

 

“நான் எதுக்கு பொய் சொல்லனும்?” திடுக்கிடலுடன் கேட்டான்.

 

“உண்மையை மறைக்கலாம் ரோஹி! ஆனால் அதை அழிச்சுட முடியாது. என்னிக்கோ ஒரு நாளைக்கு வெளியே வரும். அப்போ மறுக்கவோ மறைக்க பார்க்கவோ முடியாது” என்று ஆழமாக அவனை நோக்கினாள்.

 

“அச்சோ எனக்கு சுத்தமா எதுவும் புரியல. நீ உள்ளுக்குள் எதையோ வெச்சுக்கிட்டு பூடகமா பேசுற. அப்போ நான் பொய் சொல்லுறேன்னா நீ உண்மையை சொல்லு”

 

அவனை வெற்றியுடன் பார்த்து, “அன்னிக்கு நீ அமைதியாக இருக்கக் காரணம் சந்தேகம் இல்லை. உன் கையில் அன்னிக்கு கிடைச்ச ப்ளட் கேன்சர் ரிப்போட் பாசிடிவ்னு வந்தது தான் உன் மௌனத்திற்கு முழுக் காரணமும். நான் சொல்லுவது சரியா மிஸ்டர் ரோஹன்?” ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாக உச்சரித்தாள் பூ.

 

அவள் சொன்னதைக் கேட்டு பெரும் அதிர்ச்சி அவனைத் தாக்கிற்று. தான் இத்தனை நாட்களாக மறைத்த இந்த உண்மை எப்படி இவளுக்குத் தெரிந்தது?

 

“எனக்கு எல்லாம் தெரியும் ரோஹி. உனக்கு வேற ஒரு ரோஹனோட ரிப்போர்ட் மாறி வந்துச்சே, அதைத் தெரியாமல் மாற்றிக் கொடுத்த நர்ஸ் என் கிட்ட சொன்னாங்க” என்று கூறியவளுக்கு அவள் வீட்டை விட்டுச் சென்ற அந்தக் கொடிய நாள் நினைவுக்கு வந்தது.

 

அந்த அழகிய கூடலுக்குப் பின் ரோஹன், பூர்ணியின் மணவாழ்க்கை காதலும், சிறு ஊடலும், செல்ல சண்டைகளும், அழகான சமாதானங்களுமாக சென்றன.

 

சந்தோஷமாக வாழ்ந்த இவர்களது தெளிந்த நீரோடையெனும் வாழ்வைக் குழப்பி விட வந்து சேர்ந்தாள் ரோஹனின் முதல் தங்கை வனிதா. அவள் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் கழிந்திருந்த நிலையில் கணவனின் வீட்டில் இருந்து இங்கு வந்திருந்தாள்.

 

அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பூர்ணி மீது ஒரு வித பகை உணர்வு. அதிலும் தாய் மருமகள் மீது பொழியும் பாசத்தைக் கண்டு பொறாமை வேறு.

 

வந்ததில் இருந்தே பூர்ணியுடன் முகத்தைச் சுளித்துக் கொண்டிர்ந்தாள். காமாட்சியிடம் பூர்ணியைப் பற்றி தவறாக ஒவ்வொன்றும் காதில் ஊத அவளைத் திட்டி விட்டு தன்பாட்டில் இருப்பார் அவர்.

 

ஒரு நாள் ரோஹனுடன் செல்லக் கோபத்தில் இருந்தாள் பூர்ணி. அவன் வேலைக்குச் சென்றிருக்க மாலையில் கார்டனில் இருந்து மித்துவுடன் கால் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

 

மனைவியை சமாதானப்படுத்த ரோஹன் காமாட்சிக்கு அழைத்து அவளுக்கு ஃபோனைக் கொடுக்க சொன்னான். அவர் மருமகளைத் தேடி வந்து கொடுக்க,

 

“வேண்டாம் அத்தை. நான் அவனோட கோபமாக இருக்கேன். என்னால பேச முடியாது” என்றவள், “நீ சொல்லு பேபி” என மித்ரனுடன் பேசத் துவங்கினாள்.

 

அலைபேசியில், “என்ன பண்ணுற பூரி! ரோஹி கூட பேசு” என்ற மித்ரனைக் கண்டு காமாட்சிக்கு ஒரு வித கோபம்.

 

“அவன் கிடக்குறான் லூசு. நீ என் கூட பேசு மித்து” என்று அவனோடு சிரிக்க, “மறுபடியும் சண்டையா? முடியல” என மித்து தலையிலடித்துக் கொண்டு சிரித்தான்.

 

இதைப் பார்த்த காமாட்சி “ரோஹனுடன் பேச முடியாது, ஆனால் இவனோட சிரித்து சிரித்து பேசுறாளே” என நினைக்க, அப்போது விழுந்தது அவர் மனதில் பூர்ணி மீதான கறுப்புப் புள்ளி.

 

இதைக் கண்டு கொண்ட வனிதா பேசிப் பேசியே அவர் மனதைக் கரைத்துக் கொண்டு வந்தாள்.

 

ஒரு நாள் மித்து பூர்ணியைச் சந்திக்க வந்தான். அண்ணன் போன்ற மித்ரனைக் கண்ட பூர்ணி அவனோடு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

 

இது அப்படி இருக்க அதே நாள் ஹாஸ்பிடலில் படபடப்புடன் நின்று கொண்டிருந்தான் ரோஹன்.

சில நாட்களாக குடலைப் பிரட்டும் வயிற்று வலியும், வாந்தியும் வதைத்துக் கொண்டிருந்தது. அதிலும் ஒரு நாள் வாந்தியில் சற்று இரத்தம் வரவே பயந்து போனவன் டாக்டரிடம் சொன்றான். அவர் டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட்டைக் கொண்டு வரச் சொன்னார்.

 

இன்று ரிசல்ட் வரும் வரை காத்திருந்தவனின் கையில் ரிப்போர்ட் கிடைக்க அதைப் பார்த்தவனுக்கு இதயமே நின்று விடும் போலிருந்தது. ஆம்! அவனுக்கு ப்ளட் கேன்சர் இருப்பதாக அதில் வந்திருந்தது.

 

அவனது தந்தையும் இந்த வியாதியால் இளம் வயதில் இறந்ததும் நினைவில் உதிக்க, என்ன செய்வது என்று புரியவில்லை.

 

பூர்ணியின் முகம் மனதில் தோன்ற, அவளுக்கு இதைத் தெரியப்படுத்தி சிரமம் கொடுக்காமல் அவளைப் பிரிந்து சென்றிட முடிவெடுத்து வீட்டினுள் காலடி எடுத்து வைக்க அங்கோ பூகம்பமொன்று வெடித்துக் கொண்டிருந்தது.

 

சற்று முன் மித்ரனுடன் பேசி விட்டு அவனுக்கு காஃபி போட சமயலறைக்குச் சென்றாள்.

 

“ரோஹன் எங்கே போனான் பூர்ணி? காலையில் இருந்து ஆளைக் காணோம்?” என்று கேட்டார் காமாட்சி.

 

“தெரியலை அத்தை. அவன் எல்லாம் என் கிட்ட சொல்லிட்டா போறான்? உங்க பையன் வந்தா அவன் கிட்டயே கேட்டுக்கங்க. நான் மித்துக்கு காஃபி கொடுக்கனும்” என காஃபி போட்டு எடுத்துச் சென்றாள்.

 

“பார்த்தியாமா ரோஹியைப் பத்தி பேசுனா எரிந்து விழுறா. மித்து மித்துனு எப்போவும் அவன் கூட கும்மாளம் போடுறா. இது நல்லதுக்கில்லைம்மா” என எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாள் வனிதா.

 

“நீ சும்மா இரு டி” என முந்தானையை உதறிக் கொண்டவருக்கு அவள் சொன்னது சரியாகவே பட்டது. அதே நேரம் காமாட்சியின் நண்பிகள் இருவரும் வந்து விட மித்துவோடு பூர்ணி அருகருகே இருந்து பேசுவதை காமாட்சியிடம் சுட்டிக் காட்டி முகம் சுளித்தனர்.

 

“அங்கே என்ன பார்வை?” என மித்து கேட்க, “இந்த கிழவிங்க பார்வை சரியில்லை. ஏதோ தப்பு நடக்குற மாதிரி லேசர் பார்வை பார்க்குது” பல்லைக் கடித்தாள் பூர்ணி.

 

“ஏய் சும்மா இரு. அவங்க அப்படிலாம் பார்க்கலை” என்றவன் தான் கொண்டு வந்த சாக்லேட்டை உயர்த்திக் காட்ட, “அய்ய் சாக்லேட்” என அதைப் பிடிக்க முயற்சித்தாள்.

 

“பிடிக்க முடியாதே” என அவன் சிரிக்க, அவன் கையைக் கிள்ளி எப்படியோ எடுத்தாள்.

 

“நான் அன்னிக்கு வாங்கிக் கேட்டது. தாங்க் யூ மித்து. லவ் யூ செல்லம்” அவன் கன்னத்தைக் கிள்ளினாள் பூர்ணி.

 

“இதென்னடி கூத்தா இருக்கு? இது வீடா இல்லை பார்க்கா?” என கத்திக் கொண்டு வந்தாள் வனிதா.

 

“என்னாச்சு? எதுக்கு கத்துற?” அலட்சியமாகக் கேட்டாள் பூர்ணி.

 

“அன்னிக்கு ரோஹி சாக்லேட் வாங்கிட்டு வரவானு கேட்கும் போது வேணாம் சாக்லேட் பிடிக்காதுன்னு சொன்ன. இவன் தந்ததும் மொத்த பல்லையும் காட்டி இளிக்கிறே. என்ன நடக்குது இங்கே? அப்படினா உனக்கு அண்ணாவைப் பிடிக்காமல் போச்சு, இல்லை இல்லை அலுத்துப் போச்சு. இவன் மேல கண்ணு வெச்சுட்டியா?” உடல் கூசும்படி வினவினாள் அவள்.

 

“இனாஃப் வனிதா. இதுக்கு மேல பேசாத. அது தான் உனக்கு நல்லது” என அருவறுத்துப் போனாள் பூர்ணி.

 

“ஹல்லோ வனிதா! எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. அதை மீறிப் போனா மரியாதை கெட்றும். இப்போ என்ன நடந்ததுன்னு இந்த குதி குதிக்கிறீங்க?” அடக்கப்பட்ட பொறுமையுடன் வினவினான் மித்ரன்.

 

“இன்னும் என்னடா நடக்கனும்? கல்யாணம் ஆனவனு தெரிஞ்சும் கூட இவ கூட கொஞ்சிட்டு இருக்கியே உனக்கு வெட்கமா இல்லை? லவ் யூவாம் லவ் யூ” இதழ் வளைத்தாள் வனிதா.

 

“நிறுத்துடி. என் மித்துவைப் பற்றி பேச நீ யாரு? அந்த தகுதியே உனக்கு இல்லை டி?” விரல் நீட்டி எச்சரித்த பூர்ணி, “மித்து நீ வீட்டுக்கு போ” என அவனை அனுப்ப முயன்றாள்.

 

“பூரி உன்னை இந்த நிலையில் விட்டுட்டு எப்படி போக முடியும்?” வலியும் கோபமும் ஒருங்கே சேர்ந்திருந்தது அக்குரலில்.

 

“ப்ளீஸ் அண்ணா! என் மேல உனக்கு பாசம் இருந்தால் போ. எனக்காக போ” என்று கெஞ்சினாள்.

 

இத்தனைக்கும் முதல் தடவை அவளது அண்ணா எனும் அழைப்பைக் கேட்கிறான். என்ன தான் இருந்தாலும் மனதளவில் இருவரும் அண்ணன் தங்கை தானே.

 

அவளுக்கோ அவனை இன்னும் இங்கே நிற்க வைத்து அவமானப்படுவதை ஏற்க முடியவில்லை. அவனுக்கோ தன் உடன் பிறவாத தங்கையானவளை தனியே இக்கட்டில் விட்டுச் செல்ல மனமில்லை.

 

ஆனாலும் தான் இங்கே நிற்பது பூர்ணியை இன்னும் காயப்படுத்தும் என்பதை உணர்ந்து மனமே இன்றிச் சென்றான்.

 

எதுவும் பேசாமல் அறைக்குள் விறுவிறுவென்று சென்று ரோஹன் வரும் வரைக்கும் காத்திருந்தாள். வெளியில் சென்றிருந்த துர்கா வந்து அவளை அழைக்கவும் சென்று, “சொல்லு துரு” என அவளைப் பார்த்தாள்.

 

“என்னை அப்படிப் பேசாதீங்க. என் அண்ணனை ஏமாத்திட்டீங்கள்ல? ஏன் இப்படி பண்ணுனீங்க? அவனுக்கு நீங்கனா உயிருல்ல. ஆனால் யேன் இப்படி?” வெறுப்புடன் பார்த்தாள் துர்கா.

 

“நா..நான் என்ன பண்ணுனேன். நீ தெரியாமல் பேசிட்டு இருக்கே” அதிர்வுடன் பார்த்தாள் பூர்ணி.

 

“மித்துவோட ஓவரா தான் உருகுறீங்க. அதை நானும் பார்த்துட்டு தான் இருந்தேன். இன்னிக்கு ஐ லவ் யூ சொல்லி இருக்கீங்கனா என்ன அர்த்தம்?” கோபத்துடன் பார்த்தாள்.

 

“ஐ லவ் யூ சொன்னா காதலிக்கிறதா அர்த்தமா? அம்மா தன் குழந்தைக்கு சொல்லுறா அதுக்கு காரணம் அன்பு. நானும் மித்துவை என் அண்ணாவா பார்க்குறேன்” அவளுக்குப் புரிய வைக்க முயற்சித்தாள் பூர்ணி.

 

இதையே வனிதா கேட்டு இருந்தால் ‘உனக்கு எதுக்கு நான் விளக்கம் தரனும்? போடி’ என்றிருப்பாள். ஆனால் துர்கா மீது அவ்வளவு பாசம் வைத்தவளால் இதைக் கூறாமல் இருக்க முடியவில்லை.

 

காமாட்சி ஒரு புறம் அழுது கொண்டிருக்க, வனிதா அவருக்கு ஆறுதல் சொல்கிறேன் எனும் பெயரில் ஏதேதோ சொல்லி இன்னும் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தாள்.

 

அதற்குள் வீட்டிற்கு வந்த ரோஹன், “என்னாச்சு?” என கேட்டவனின் விழிகளோ மனைவி மீது படிந்தது. ‘எனக்கு ப்ளட் கேன்சர் இருக்கு டி பூ. உன் கூட ரொம்ப நாளைக்கு என்னால் வாழ முடியாது.’ என உள்ளுக்குள் கதறினான்.

 

“உன்னை இவ ஏமாத்திட்டா ரோஹி. அந்த மித்துவைக் கூட்டிட்டு வந்து நடு வீட்டில் கூத்தடிக்கிறா” என வனிதா ஒன்றைப் பத்தாக்கிச் சொல்ல அவனுக்கோ அவளை அறைந்து தீர்க்கும் ஆத்திரம் வந்தது.

 

“என் பூவையே கலங்கப்படுத்துறியா?” என்று பொங்கி வந்த சீற்றத்தை ப்ளட் கேன்சரை நினைத்து அடக்கிக் கெண்டான். இந்த சமயத்தைப் பயன்படுத்தி அவளைத் தன்னை விட்டும் அனுப்பி விட திட்டமிட்டான்.

 

“ஆமாப்பா. வனி சொன்னதை நான் நம்பல. ஆனால் இவ நடவடிக்கையே சரியில்லை. எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு. அண்ணா அண்ணானு சொல்லிட்டு அவனை..” என தொடர்ந்து பேச முடியாமல் நிறுத்தினார் காமாட்சி.

 

“யாரும் என்னை நம்ப மாட்றாங்க. எனக்கு அவங்களைப் பற்றிக் கவலை இல்லை. நீ என்னை நம்புறியா ரோஹி?” உயிர் பிரியும் வலியுடன் கேட்டாள் காரிகை.

 

‘நான் உன்னை மட்டும் தான்டி நம்புவேன். என்னை விட நான் உன்னை நம்புறேன் பூ’, மனதினுள் மட்டுமே பேசினான் அவன். வெளியில் கல்லாக உறைந்து நின்றான்.

 

அவன் சர்ட் காலரைப் பிடித்து, “பேசு ரோஹி. வாயைத் திறந்து ஒரு வார்த்தை என்னை நம்புறேன்னு சொல்லு. அந்த ஒரு வார்த்தை எனக்குப் போதும்” என அழுதாள்.

 

ஆனால் அமைதியாகி அவளை மௌனத்தால் கொன்று புதைத்தான் அவளது ரோஹி. அவ்வளவு தான், அவனை விட்டும் விலகி அறைக்குச் சென்றவள் தனது உடைமைகளை பையில் போட்டு எடுத்து வந்தாள்.

 

“என்னை நம்பாத எந்த உறவும் எனக்கு வேண்டாம். இவங்க சொல்லுற மாதிரி உன் நம்பிக்கையை பொய்யாக்கியது நான் இல்லை. உன் கூட வாழ வந்த என் நம்பிக்கையை நீ தான் மொத்தமா உடைச்சுட்ட. எனக்கும் மித்துக்கும் நடுவில் இருந்த புனிதமான உறவை கொச்சைப்படுத்திட்டல்ல. நீ எனக்கு வேண்டாம். இனிமேல் நீ யாரோ நான் யாரோ” அவன் முகத்துக்கு நேராக நின்று கூறியவள் நடைப்பிணமாக நடந்தாள்.

 

தானும் உயிரோடு மரித்துப் போனான் ரோஹன். “உன் மேல எனக்கு மலை போல நம்பிக்கை இருக்கு. உனக்கு நான் வேண்டாம். ஆனால் என் உயிர் மூச்சு நிற்கும் வரை எனக்கு நீ ஒருத்தியே போதும். ரியல்லி சாரி பூ. ஐ லவ் யூ” ஒரு சொட்டுக் கண்ணீர் அவன் கன்னத்தைத் தொட்டது.

 

அடுத்த நாள் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு டாக்டரிடம் செல்ல, “பை மிஸ்டேக் ரோஹன். உங்களுக்கு கிடைச்சது உங்க ரிப்போர்ட் இல்லை. அது இன்னொரு பேஷன்டோடது. அவர் பெயரும் ரோஹன் தான். உங்க ரிப்போர்ட்டை நான் பார்த்தேன் யூ ஆர் ஆல்ரைட்” என்றார் டாக்டர்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைவதா ஆனந்தப்படுவதா என்று அவனுக்குப் புரியவில்லை. பூர்ணியை அவசரப்பட்டு காயப்படுத்திய உணர்வு.

 

ஆனாலும் இப்போது அவள் முன் செல்ல முடியாது அல்லவா? இதைச் சொன்னால் நம்புவாளா என்றே தெரயவில்லை. ஏனெனில் அவளது நம்பிக்கையைத் தான் அவன் சிதறடித்து விட்டானே.

 

வீட்டாருடன் தேவைக்கு அதிகமாக பேசுவதை நிறுத்திக் கொண்டான் அவன்.

 

நினைவின் தாக்கத்தில் இருந்து மீண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் இருவரும்.

 

இன்று மார்கெட்டுக்குச் சென்ற போது அவளைச் சந்தித்த நர்ஸ் இவள் ரோஹனின் மனைவி என்பதை அவளது மொபைல் வால்பேப்பரில் கண்டு கொண்டு சொன்னார்.

 

இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, முதலில் சிந்தை கலைந்த பூர்ணி அவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.

 

“சாரி ரோஹி. என்னை மன்னிச்சிரு. உன் நிலைமை தெரியாமல் நான் ரொம்ப பேசிட்டேன். சாரி டா சாரி” கேவிக் கேவி அழுதாள் பூர்ணி.

 

அவன் தன்னை சந்தேகிக்கவில்லை என்பது அவளுக்கு அளப்பரிய மகிழ்வைக் கொடுத்தது.

 

“நானும் சாரி. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். என்ன இருந்தாலும் அன்னிக்கு என் அமைதி உன்னை சுட்டிருக்கு இல்லையா? எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு. சோ நீ அழாத. உன் மேல எந்தத் தப்பும் இல்லை” அவள் தலையை வருடினான் கணவன்.

 

“நீ ஃபீல் பண்ணாத ரோஹி. கஷ்டமாத் தான் இருக்கும். ஆனாலும் நாம எல்லாமே மறந்துரலாம். இனிமேல் எந்த கவலையும் இல்லாமல் நான், நீ, நம்ம பாப்பா மூனு பேரும் சந்தோஷமா இருக்கலாம்”

 

“மூனு பேர் இல்லை, நாலு பேர்” என்று அவன் சொல்ல, “நாலாவது ஆள் யாரு?” என வினவினாள் பெண்.

 

“நாலாவது ஆள் இப்போ இல்லை. ஆனால் கூடிய சீக்கிரமே ரெடியாகும்” என கண்ணடித்தான்.

 

“அடேய் உடனே ரொமான்ஸ் மூடுக்கு மாறிட்டியா?” என வாயில் கை வைத்தாள் பூர்ணி.

 

“மாறாமல் என்ன பண்ணனும்? இத்தனை நாளா பக்கத்தில் வர விடாமல் கண்ணாலே பொசுக்கிட்டு இருந்தியே. இனிமேல் உன்னை எங்கும் விடுவதா இல்லை” அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான் காளை.

 

“யார் விடச் சொன்னது? நீயே விலகிப் போனாலும் நான் உன்னை விட்டும் நகர மாட்டேன், ஒரு இன்ச் கூட” நாணத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

 

“ரொம்ப நாள் கழிச்சு இந்த அழகான பொண்ணோட அழகான வெட்கம் என்னை அழகா மயக்குது” அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

 

“என்னையும் தான். ரொம்ப நாள் கழிச்சு என் அன்பு புருஷன் கிட்டிருந்து இந்த அன்பான முத்தம் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் முழு மனசோட மொத்த அன்பையும் தேக்கி என்னை மயக்குது” என்று அவன் கன்னத்தில் இச்சொன்று வைத்தாள்.

 

ரோஹன் அவளைப் பார்க்க, அவளும் இவனை நோக்க பல மாதங்களுக்குப் பின் இருவரது விழிகளும் இதயத்தில் மலர்ந்த புன்னகையை வாடகைக்கு எடுத்துக் கொள்ள, புன்னகையை விழிகளுக்குக் கடத்திய இதழ்கள் மெலிதாய் விரிந்து தம் இணையின் இதழ் தேடிச் சென்று மனநிறைவோடு தஞ்சமடைந்து இளைப்பாறின.

 

நட்பு தொடரும்…….!!

 

✒️ ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!