விஷ்வ மித்ரன்
💙 நட்பு 47
ஆபிஸில் இருந்து வீடு திரும்பிய மித்ரன் உள்ளே நுழையும் போது அவனை இடைநிறுத்தியது தந்தையின் இடை விடாத இருமல்.
உள்ளே ஓடியவன் நெஞ்சைத் தடவியவாறு இருமியவரைக் கண்டு நெஞ்சம் பதை பதைக்க, “அம்முலு! சீக்கிரம் வா” என மனைவியை சத்தமாக அழைத்தான்.
அவளின் சத்தமே இல்லாதிருக்க, அவசரமாக சமயலறைக்கு ஓடி தண்ணீர் கொண்டு வந்து புகட்டினான்.
“என்னாச்சு டாடி? உங்களுக்கு என்ன பண்ணுது?” கலங்கிய கண்களுடன் பதற்றமாகக் கேட்டான் மகன்.
“எ…துவும் இல்…இல்லை. பிபி மாத்திரை போடலை. அதைப் போ..ட்டா ஓகே ஆகிரும்” என நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வேக மூச்சுகளுக்கிடையே சொன்னார் ஹரிஷ்.
இன்று வழமைக்கு மாறாக நேரத்திற்கு செல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தத்தால் ஆபீஸ் செல்ல ஆயத்தமாகியவன், அக்ஷுவிடம் தந்தை தூங்கி எழுந்ததும், சாப்பிட்டு முடிந்த பிறகு மாத்திரையைக் கொடுக்குமாறு கூறி விட்டு ஆபிஸ் சென்றது நினைவுக்கு வந்தது. ஆக! அவள் மாத்திரை கொடுக்கவில்லை என்பது புரிந்தது.
ஹரிஷின் அறைக்குச் சென்று, மாத்திரையை எடுத்து வந்து கொடுத்தான். குடித்ததும் ஆசுவாசதமானவரின் கையைப் பிடித்துக் கொண்டான் மைந்தன்.
“பயந்துட்டியா மித்ரா?” மகனை விழிகளில் வாஞ்சையுடன் தழுவினார்.
“செத்துட்டேன் டாடி! ஏன் இப்படி பண்ணுறீங்க? மாத்திரை போட மறப்பீங்களா?” தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு உரைத்தான் அருள்.
“சாப்பிட்டு முடிச்சதும், காஃபி குடிச்சுட்டு குடிக்கலாம்னு இருந்தேன் டா. அதுக்குள்ள இப்படி ஆகிருச்சு. இன்னும் இல்லை கண்ணா” என்றார் ஹரிஷ்.
“அக்ஷு எங்கே? வெளியில் எங்காவது போனாளா?” சற்றே கடினமாக வினவினான் அவன்.
“நான் ரொம்ப நேரமா இங்கே இருக்கேன். போறதா இருந்தால் என்னைத் தாண்டித் தான் போயிருப்பா. போகலைனு நினைக்கிறேன்” என்ற பதிலில் தலையசைப்புடன் மாடிக்குச் சென்றான்.
படீரென்று கதவைத் திறந்த வேகத்தில் திடுக்கிட்டு சத்தம் வந்த திசையைப் பார்த்தாள் அக்ஷரா. அவள் ஃபோன் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டு சினம் தலைக்கேறியது கணவனுக்கு.
“நான் அத்தனை தடவை கூப்பிட்டது விளங்காம ஃபோன்ல மூழ்கிப் போய்ட்டியா? கூப்பிட்டா உனக்கு உடனே வரத் தெரியாதா?” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் அவன்.
“அருள்! என்னாச்சு? எதுக்கு கூப்பிட்ட?” பதற்றத்துடன் கேட்டாள் அக்ஷு.
“ச்சை! போதும்டி ஓவரா நடிக்காத. வார்த்தைக்கு வார்த்தை ஹரிப்பானு சொல்லுவியே? அது வெறும் வார்த்தை தானா? அந்த மனுஷன் மூச்செடுக்க சிரமப்பட்டுட்டு இருக்கார். நீ இங்கே ஜாலியா படுத்து ஃபோனை நோண்டிட்டு இருக்கியே” வார்த்தைகள் கனத்தது அவனிடம்.
அவனது வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்தாள் பெண்.
“ஹரிப்பாவுக்கு என்னாச்சு? சொல்லு டா” அவனது கோபத்தையும் பொருட்படுத்தாமல் திகைப்புடன் பார்த்தாள்.
“உன் ஹரிப்பாவுக்கு பிபி மெடிசீன் தர சொன்னேனே கொடுத்தியா?” ஆழமாக அவளைத் துளைத்தெடுத்தான் காளை.
“அது… இ…இல்லை” திக்கித் திணறினாள் அவள்.
“என்னிக்காச்சும் அவருக்கு பொறுப்புள்ள மருமகளா ஒரு காஃபி போட்டு கொடுத்திருக்கியா? நீ பண்ண வேண்டிய அத்தனை வேலைகளையும் அவர் தனியாளா பண்ணுறார். நான் ஆஃபீஸ்கு போறேன். எத்தனை நோய் அவருக்கு இருக்குனு எனக்கு மட்டும் தான் தெரியும். அதையும் வெச்சுட்டு சமைச்சு போடுறார்.
ஒரு பொம்பளை செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் அவர் பண்ணிட்டு இருக்கார். உன்னை என்னிக்காவது தண்ணி கொண்டு வந்து தானு கூட கேட்டிருக்காரா? இல்லையே?! ஹாஸ்பிடல் டியூட்டிக்கு போய் இரவு பகல் தெரியாம கஷ்டப்படுறார்.
உனக்கு கீழே இறங்கி வந்து ஒரு மாத்திரை கொடுத்துட்டு போக கஷ்டமா இருக்கா?” தலையை அழுத்தமாகக் கோதிக் கொண்டான் அருள்.
“அருள்! ஒரு நிமிஷம் நான் சொல்வதைக் கேளு” என சொல்ல வந்தவளைக் கையால் தடுத்தான்.
“வேணாம் ப்ளீஸ். உன் கிட்ட எந்த விளக்கத்தையும் கேட்க நான் தயாராக இல்லை. உன்னைப் பார்க்கும் போது டாடி நெஞ்சைப் பிடிச்சுட்டு இருந்தது தான் நினைவுக்கு வருது. நான் மட்டும் கரெக்ட் டைமுக்கு வரலைனா என்னவாகி இருக்கும்? எனக்குனு இருக்கும் ஒரே இரத்த உறவு! ஐ ஹேட் அக்ஷரா” அவள் முகத்தைக் கூடப் பார்க்க முடியாமல் திரும்பி நின்றான் அவன்.
அவன் செயல் அவளை முழுதாகக் காயப்படுத்திற்று. தன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லையா தன்னவனுக்கு? இடிந்து போனாள் பாவை.
இத்தனைக்கும் அமர்ந்திருந்த அக்ஷு மெதுவாக எழுந்து செல்ல, இப்பொழுது ஏற்பட்ட அவளது அசைவை உணர்ந்து ஏதோ ஒரு தவிப்புடன் தலை திருப்பிப் பார்த்தான்.
விழிகள் அவளில் நிலைக்குத்தி நிற்க பெரும் அதிர்ச்சியில் உறைந்தான் அருள் மித்ரன். அவளது வெள்ளைச் சுடிதாரில் முதுகுக் கீழ்ப்பகுதியில் சிவப்பாகி ஏதோ பட்டிருந்தது.
அவளுக்கு பீரியட்ஸ்! இதனால் தான் அவன் கூப்பிட்டும் எழுந்து வர முடியாமல் இருந்திருக்கின்றாள் என்பதை உணர்ந்தவனுக்கோ தான் கூறிய வார்த்தைகள் வரிசை கட்டி மனதினுள் ஒலித்தன.
சிறிது நேரம் கழித்து, பாத்ரூமில் இருந்து வெளிவந்தவளின் முகத்தில் ஒரு வித பரிதவிப்பு. அவள் முன் நீண்ட கையைப் பார்த்தவள் அதில் தனக்குத் தேவையானது இருக்க எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள்.
பக்கத்துக் கடைக்குச் சென்று அதனை வாங்கி வந்திருந்தான் மித்து. அறையிலிருந்து வெளியேறியவன் அவள் வரும் வரை காத்திருந்தான். எதிர்பார்த்தது போல் வந்தாள். அவனை ஒரு பார்வை கூட பார்க்காமல் ஹரிஷிடம் சென்று அமர்ந்தாள் அக்ஷரா.
“வாடா செல்லம். ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” என அன்பு கனிய வினவினார் ஹரிஷ்.
“சாரி ஹரிப்பா! உங்களுக்கு மெடிசீன் தர மறந்துட்டேன். என்னால உங்களுக்கு ரொம்ப சிரமம். அதற்காக என்னை மன்னிச்சிருங்க. உங்க மேல் பாசம் இல்லைனு மட்டும் நினைக்காதீங்க ப்ளீஸ்” வேதனையுடன் மொழிந்தாள் மாது.
“ஹேய் என்னடா பேசுற? உனக்கு என் மேல் பாசம் இல்லைனு சொன்னா யாரும் அதை நம்ப மாட்டாங்க. எனக்கும் எதுவும் இல்லை. நீ ஃபீல் பண்ணாத அக்ஷு” அவள் தலையை வருடினார் மாமனார்.
“என்ன இருந்தாலும் என் மேல தப்பு இருக்குல்ல. இதே என் டாட்கு இருந்தால் நான் இன்னும் கொஞ்சம் கேர் எடுத்து பார்த்திருப்பேனோ என்னவோ? அவருக்கு இப்படி ஒரு நிலை வர விட்டிருக்க மாட்டேனோனு தோணுது. தெரிந்தோ தெரியாமலோ நீங்க கஷ்டப்பட நான் காரணமாகிட்டேன். ஹரிப்பானு கூப்பிட்டாலும் அப்பாவாக நெனச்சு உங்களைப் பார்க்க முடியாமல் போச்சு”
இதைக் கேட்ட மித்ரனுக்கு ஒரு மாதிரியானது. “ஹரிப்பா! வெறும் வாய் வார்த்தையில் மட்டும் தானா?” என்று கேட்டதே இதற்குக் காரணம். அதனால் அவள் மனம் எந்தளவுக்கு வலித்திருக்கும் என்பதை உணர்ந்தவனுக்கு தன் மீதே கோபமாக வந்தது.
“நீ இப்படி தேவையில்லாததை எல்லாம் முடிச்சு போட்டு பேசினா நான் நிஜமாவே அப்பாவாகி உன்னை வெளுத்துக் கட்டிருவேன். என்னை கோபப்படுத்தாத. யார் என்ன சொன்னாலும் நீ இப்படி பேசுவியா? உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்” என்றவரால் மகன் அவளைத் திட்டியதால் தான் இப்படி பேசுகிறாள் என்பதை அறிய வெகு நேரம் செல்லவில்லை.
அவனை முறைத்துப் பார்த்தார். பதிலுக்கு தலையைக் குனித்துக் கொண்டு எழுந்து சென்றான் மித்ரன். அவள் சொல்ல வந்ததைக் கொஞ்சம் கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது. கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியுமா என்ன?
ஹரிஷுடன் கதையளந்து விட்டு அறையினுள் நுழைந்தாள் அக்ஷரா. தன்னைப் பார்ப்பதும் திரும்பிக் கொள்வதுமாக இருந்தவனைக் கண்டுகொள்ளவில்லை அவள்.
“அம்முலு!” என மெதுவாக அழைக்க, “அம்முலு அக்ஷரா ஆகிட்டாளே. முதல் தடவையா அந்த அழைப்பைக் கேட்டேன். அப்படியே கூப்பிட்டுக்கோங்க. எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. நீங்க ஒன்னும் கஷ்டப்பட்டு அம்முலுனு கூப்பிட தேவையில்லை” என்றாள் வேகமாக.
இந்த மரியாதையான அழைப்பில் வருத்தம் கொண்டவனுக்கு, தான் அவளை ஒட்டுதல் இன்றி பெயர் சொல்லி அழைத்தது நன்கு பாதித்து இருக்கின்றது என்பது கருத்தில் உறைத்தது.
“ஹேய் என்னைப் பேச விடு டி. என்ன நடந்ததுனு தெரியாமல் கோபத்தில் பேசிட்டேன். என்ன நடந்ததுன்னு நீ..” அதற்கு மேல் பேச முடியாமல் அவளை கவலையுடன் ஏறிட்டான்.
“அப்போ நான் சொல்ல வந்ததைக் கேட்கலை. இப்போ கேட்குற. ம்ம் சொல்லுறேன். நீ போனதில் இருந்தே வயிறு வலி தாங்க முடியலை. மாத்திரை கொடுக்க இன்னும் டைம் இருக்குனு பெட்டுல புரண்டுட்டு இருந்தேனா தூக்கம் போயிருச்சு. என்னையே அறியாமல் தூங்கிட்டேன். நீ கூப்பிடும் சத்தத்தில் முழிப்பு வந்து எழுந்தா ட்ரெஸ்ல கறை பட்டிருக்கு.
ஹரிப்பா முன்னாடி இதோட எப்படி வர்ரது? சங்கோஜமா இருந்ததால வர முடியாமல் உனக்கு கால் பண்ணத் தான் ஃபோனைக் கையில் எடுத்தேன். பட்! இந்தளவுக்கு அவருக்கு ஆகிருக்கும்னு யோசிச்சுக் கூட பார்க்கலை”
வயிற்று வலியையும் பொருட்படுத்தாமல் மருந்து கொடுத்திருக்கலாமே! என்று அவள் தவிப்பது புரிய, “அம்முலு! நீ எதுவும் யோசிக்காமல் ரெஸ்ட் எடு” என்று அவளருகில் வந்தான்.
“இல்லை. நான் போய் சமைக்கிறேன். அப்பறம் நான் உன்னை சமைக்க வெச்சுட்டு ரெஸ்ட் எடுத்ததையும் சொல்லிக் காட்டிருவியோனு பயமா இருக்கு” என அறையை விட்டு வெளியேறினாள்.
போகும் தன்னவளைப் பார்த்து மருகினான் மித்ரன்.
…………………
வெளியில் சென்று வந்த விஷ்வாவின் விழிகள் தன்னவளைத் தேடின. என்றும் தனக்காக தூங்காமல் விழித்திருப்பவளின் தரிசனம் கிடைக்காததால் சோர்ந்து தான் போனான் ஆடவன்.
அறையினுள் நுழைந்தவனின் கண்களில் பட்டாள் தூங்கிக் கொண்டிருந்த மனைவி.
“தூங்கிட்டாளா? எப்படி பச்சைப் பிள்ளை கணக்கா தூங்குறா பார் வாயாடி” என்றவன், முட்டி வரை சார்ட்சும், இலகுவான டிசர்ட்டும் அணிந்து அவளருகில் அமர்ந்தான்.
புன்னகை உறைந்திருக்கும் மதி வதனத்தை வருடிக் கொஞ்சத் தான் அவன் மனம் துடிதுடித்தது. “மை ஹனி” இதழுக்குள் குறு நகை பூத்தான்.
அவ்வேளை அவன் எதிர்பாராத விதமாக எழுந்து அவன் மடியில் தலை வைத்து தூக்கத்தைத் தொடர்ந்தாள் வைஷ்ணவி. கண்களைப் பார்க்க அதுவோ இமைகளின் சிறையில் சிக்கிக் கிடந்தன.
“குறும்பழகி” என அவள் மூக்கைக் கிள்ளிய மறு நொடி அழகாக இமை பிரித்து அவனைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினாள் விஷ்வாவின் குறும்பழகி.
“அடிப்பாவி! இவ்வளவு நேரமா தூங்குற மாதிரி நடிச்சியா?” போலிக் கோபத்தைத் தத்தெடுத்தன, அவன் நயனங்கள்.
“எஸ் டார்லிங். தூங்குற மாதிரி உன்னைக் கொஞ்சம் டெஸ்ட் பண்ணுனேன். ஆனால் எதிர்பார்த்த மாதிரி ஒரு கிஸ் கூட கொடுக்கலையே” எதிர்பார்ப்பு மின்னியது அவளில்.
“ஆசையைப் பாரு. மேடம் தூங்கனும். நாம காதல்ல உருகிப் போய் முத்தம் கொடுக்கனும். நான் நான்ஸ்டாப் கிஸ் பேகேஜ் போட்டு இருக்கேனா என்ன?” முறுக்கிக் கொண்டான் விஷு.
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி போட்டு இருந்தீங்க. இப்போ கொஞ்ச நாளா கனெக்ஷன் ப்ராப்ளம்னு நினைக்கிறேன். அதான் டேட்டா இல்லாமல் எதுவும் வரலை” என சோகப் பெருமூச்சு விட்டாள்.
“ரொம்பத் தான் கவலை போல. அந்த கனெக்ஷனை நான் வேணும்னே கட் பண்ணலை. அது மாறிப் போக நீயும் தானே காரணம்” என்றான் முறைப்புடன்.
“அதை எப்போவோ ஒத்துக்கிட்டேன். நீங்க தான் பிகு பண்ணிட்டு இருக்கீங்க. ஆனாலும் நான் அசர மாட்டேன். உங்களை டாச்சர் மேல டாச்சர் பண்ணிட்டே இருப்பேன்”
“ஏன்டி கொஞ்ச நேரம் இந்த வாய்க்கு ரெஸ்ட் கொடேன். அதுக்கு வேலை செஞ்சு செஞ்சு டயர்ட்டா இருக்கும்”
“அது ஒன்னும் என் ஹஸ்பண்டை மாதிரி டயர்ட் ஆகாது. டென்ஷன் பண்ணவும் மாட்டாது. வாய்க்கு ரெஸ்ட் கொடுக்கக் கூடாதுங்குறது நான் என் குரு விஷ்வா கிட்ட படிச்ச பாடம். கற்க மறந்தாலும் கற்றதை மறக்காதே’னு ஒரு வாசகம் சொல்லுவாங்க. சோ நான் படிச்ச பாடத்தை மறக்க முடியாது”
“உனக்குப் போய் ஏன் பேச கத்துக் கொடுத்தோம்னு உன் குரு நினைக்கிறேன். அந்தளவுக்கு பண்ணுறே நவி”
“ஏன் தலை வலிக்குதா? ஆபீஸ்ல எதுவும் ப்ராப்ளமா?” கரிசனையுடன் வினவினாள்.
“கொஞ்சம். இன்னும் டூ டேய்ஸ்ல இம்போர்டன்ட் மீட்டிங் இருக்கு. அதற்காக எல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு” மறைக்காமல் அவளிடம் சொன்னான் விஷ்வா.
“ஓகே கொஞ்சம் இருங்க” என சென்று காஃபி போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.
அவனுக்கு அது தேவைப்பட்டதால் வாங்கிப் பருகினான்.
கட்டிலில் அமர்ந்தவள், “வாங்க விஷு” என அழைத்தாள்.
“எங்கே வரனும்?” என்று கேட்க, “சுவிட்சர்லாந்த் போறேன் வரீங்களா? பின்ன என்னங்க கூப்பிட்டா வாங்க. என் மடியில் கொஞ்சம் சாஞ்சுக்கங்க” என்றவள் வார்த்தைகளில் கனிவு நிறைந்திருந்தது.
“என்னால முடியாது. நான் வர மாட்டேன்” என மறுத்தான் வேங்கை.
“வரீங்களா இல்லையானு கேட்கல. வாங்கனு கட்டளை போடுறேன்”
“எனக்கு கட்டளையிட நீ மகாராணியா?”
“நீங்க ராஜான்னா நான் மகாராணி தானே? இந்த விஷ்வஜித்தின் இதயத்தில் முடிசூடியிருக்கும் பட்டத்து ராணி” சிறு கர்வமும் துளிர்த்தது அந்த வார்த்தைகளில்.
“என்ன சொல்லி என்னைக் கரைக்க பார்த்தாலும் நான் வர மாட்டேன்” விடாப்பிடியாக நின்றவனைப் பார்த்து, “சரி வராதீங்க. நான் அத்தை கிட்ட போய் நீங்க டென்ஷனா இருக்கிறதால அவங்க மடியில் சாஞ்சுக்கனும்னு கூப்பிடறதா சொல்லிட்டு வரேன்” என மிரட்டலாக சொன்னாள்.
“மிரட்டுறியா? போடி” என கோபத்துடன் அவள் மடியில் சாய்ந்தான்.
“அப்படி வாங்க என் வழிக்கு” என குத்தாட்டம் போட்ட உள்ளத்தை அடக்கிக் கொண்டு அவன் தலையை வருடி விட்டாள்.
அந்த சுகமான ஸ்பரிசத்தில் மெதுவாகக் கண்ணயர்ந்தான் காதலன். அவனைப் பார்த்தவளுக்கு காதல் சுரக்க குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
“லவ் யூ என் செல்லக் கோபக்காரா! இந்தக் கோபமும் நல்லாத் தான் இருக்கு. இவ்வளவு வளர்ந்தாலும் என் கண்ணுக்கு குட்டிப் பையன் மாதிரி தெரியுறீங்க ஜித்து” அவனை அன்போடு நோக்கி, தலையணையை தலைக்குக் கொடுத்து படுக்க வைத்தவள் தானும் அவன் மேல் கை வைத்தபடி உறங்கிப் போனாள்.
மறுநாள் ஆபிஸ் செல்ல ஆயத்தமாகி வந்தவன் முன், “என்னைக் கோவிலில் இறக்கி விட்டுப் போங்க” என்று வந்து நின்றாள் நவி.
“ஓகே” என தலையசைக்க, “சாப்பிடாம எங்கே போற கண்ணா?” என்று கேட்டார் நீலவேணி.
“அதற்கெல்லாம் டைம் இல்லை மா. நிறைய வர்க் இருக்கு” என பதற்றத்துடன் வாட்சைக் கட்டியவன் ஷூவை எடுத்து வர, அதைப் பிடுங்கி எடுத்து அவனை அமர வைத்த வைஷு சப்பாத்து போட்டு விட்டாள்.
நீலவேணி அதற்குள் தட்டில் இட்லியைப் போட்டு வந்து ஊட்டி விட்டார்.
“பொண்டாட்டி ஷூ போட்டு விடுறா, அம்மா ஊட்டி விடுறா. அடடா கண்கொள்ளாக் காட்சி. நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்காமல் போச்சே” பொய்யான வருத்தத்துடன் வந்தார் சிவகுமார்.
“அதற்கு எல்லாம் ஒரு கொடுப்பனை வேணும் டாட்” என்று கிண்டலுடன் சொன்ன மகனைப் பார்த்து, “போடா இவனே” என செல்லமாக முறைத்தார் தந்தை.
“இவன் எக்ஸாம்கு போகும் போதும் இப்படித் தான். தலை கால் புரியாமல் தடுமாறிட்டு இருப்பான். நீலா ஊட்டி விடுவா, அக்ஷு சாக்ஸ்,ஷூ போட்டு விடுவா, மித்து டை கட்டி விடுவான். பெரிய கூத்தே போடுவான்” மருமகளிடம் புன்னகையுடன் கூறினார் சிவகுமார்.
“ஆமா மாமா. உங்க பையன் சரியான கூத்துக்காரன் மட்டுமில்லை சரியான கோவக்காரனா வேற இருக்கார். ஆனால் நான் இவருக்கு பயப்பட மாட்டேன். அவரைத் தான் எனக்கு பயப்பட வைப்பேன்” கெத்தாக விஷ்வாவைப் பார்த்தாள் பாவை.
“அப்படித் தான் மா இருக்கனும்” என்ற சிவகுமார் மனைவியைப் பார்த்தார். இருவருக்கும் இவளது துடுக்கான பேச்சு மகளை நினைவூட்டியது. அவளது பிரிவை ஏற்றுக் கொண்டாலும் அவள் இருந்த ஒவ்வொரு இடங்களைப் பார்க்கும் போது, அவளை நினைக்கும் போது தானாகவே ஒரு கவலை குடிகொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.
“மாம்! குட்டிப்பிசாசு இன்னிக்கு வீட்டுக்கு வரதா சொன்னாள்” அவர்களது முகமாற்றம் அறிந்து விஷு சொல்ல மகளைக் காணும் ஆவலில் பெற்றவரின் முகங்கள் பிரகாசித்தன.
“அவளைக் குட்டிப் பிசாசுன்னு கூப்பிடாதனு சொல்லி இருக்கேன்ல?” கண்டிப்புடன் சொன்னார் தாய்.
“போங்க மாம்! இப்போ அவள் கூட தான் உங்களுக்குப் பாசம். என்னை கண்டுக்குறது இல்லை” என மூக்கைச் சுருக்கிய மகனை நீலவேணி சமாதானம் செய்ய, அதைப் பார்த்து மற்ற இருவருக்கும் சிரிப்பு.
நட்பு தொடரும்…….!!
✒️ ஷம்லா பஸ்லி