💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 48
கோப்புகளைக் கொண்டு வந்து மேசை மீது கோபமாக வைத்த வினிதாவை முறைத்துப் பார்த்தான் தேவன்.
“வைக்க சொன்னேன். தூக்கிப் போட சொல்லல உனக்கு. ஒரு வேலை சொன்னா உருப்படியா பண்ணத் தெரியாதா?” அவன் எகிற, “எப்படியோ தந்தேன்ல. அதுவே பெரிய விஷயம்னு நெனச்சிக்கங்க” என்றாள் காட்டமாக.
“இன்னும் ஒன் வீக்ல கொடைக்கானல்ல இருக்கிற ரெசார்ட்ல பாக்ஸிங் காம்படிஷன் நடக்குது. பசங்க நேம் எழுதி இருக்கேன். இங்கே சைன் பண்ணிடு” என்று தாளைக் கொடுக்க, அவள் சைன் பண்ணப் போகும் போது அதனைப் பிடுங்கி எடுத்தான்.
“எந்த உலகத்தில் இருக்க நீ?” அவன் சீறிப் பாய, “நான் எந்த உலகத்தில் இருந்தா உனக்கென்ன? சைன் பண்ண விடு” பதிலுக்கு அவளும் சீறினாள்.
“நீ எந்த உலகத்தில் வேணா இரு. ஆனால் கண்ணை விரிச்சு எழுத்தைப் பார்த்து சைன் பண்ணு. நீ கை வெச்ச இடம் உனக்கானதே இல்ல. எந்த யோசனையில் இருக்கே?” என்று கேட்டதும் தான் அவளுக்கு தான் செய்யப் போன காரியம் புரிந்தது.
“சாரி” நலிந்த குரலில் சொன்னவள் உரிய இடத்தில் கையொப்பம் இட்டாள்.
“வினி!” எனும் மெல்லிய அழைப்பில் அவள் பார்வையால் தீண்ட, “ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டான்.
“பிரச்சினை இது தான்னு சொன்னா சரி பண்ணிடுவியா?” ஒற்றைப் புருவம் உயர்த்த, “சொல்லு” ஏதாவது பிரச்சினையில் இருக்கிறாளோ என்ற எண்ணத்தில் நிதானமாகப் பார்த்தான்.
“அதோ அவ தான் என் பிரச்சினை” விரல் நீட்டி, அங்குமிங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிராவைக் காண்பித்தாள்.
“நிரா கூட என்ன பிரச்சினை? அவ எதுவும் சொன்னாளா? அப்படி வம்புக்குப் போற ஆள் அவ இல்லயே” தாடியைத் தடவிக் கொண்டு யோசிக்க, “அவ எதுவும் சொல்லல. ஆனால் நீ அவ கூட பைக்ல வந்தது எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றதும் தான் அவனுக்கு அனைத்தும் புரிந்தது.
ஒரு நொடி புருவம் சுருக்கியவன், மறு நொடியே சிரிப்போடு “நான் யார் கூட வந்தா உனக்கு என்ன?” என்று கேட்க, “தெரியல. ஆனால் பிடிக்கல” வெடுக்கென சொன்னாள்.
“கொஞ்சம் லாஜிக்கா பேசும்மா. இதுல நீ கோபப்பட எதுவுமே இல்ல. ஏன்னா முதல் விஷயம், அப்படிப்பட்ட எந்த உறவும் நமக்கு நடுவில் இல்ல. ரெண்டாவது முக்கியமான விஷயம் என்ன தெரியுமா?
நீ பண்ணாத ஒரு விஷயத்தை நான் பண்ணுறதா இருந்தா ஓகே. ஆனால் நீ அஷோக் கூட தினமும் பைக்ல வந்துட்டு, நான் ஒரு நாள் என் அத்தை பொண்ண கூட்டிட்டு வந்ததுக்கு கோவிச்சுக்கிற பார்த்தியா? வேடிக்கையா இருக்கு” கை தட்டிச் சிரித்தான் தேவன்.
“தேவ்! ரெண்டும் ஒன்னில்ல. அப்படியே நான் பண்ணுறதா இருந்தாலும், அதை நீ பண்ணனும்னு இல்லையே”
“அதான் ஏன்னு கேட்கிறேன். நீ பண்ணுனா நல்லம், அதுவும் தினமும் பண்ணுனா. அதை நான் ஒரு நாள் பண்ணுனா நீ இவ்ளோ ரகளை பண்ணுற. நான் அறிஞ்சு, மறுபடி உன்னைப் பார்த்த பிறகு ஒரு நாள் கூட நீ அஷோக் இல்லாம வந்ததில்ல. ஆம் ஐ ரைட்?” அழுத்தமாக அவன் கேட்க, அமைதியாக நின்றாள்.
சிந்தனையில் ஆழ்ந்தவனைப் பார்த்து, “என்ன?” என்று அவளிடம் பிறந்த வினாவுக்கு, “இன்னிக்கே இப்படின்னா டெய்லி வந்தா எப்படி இருக்கும்னு யோசிக்கிறேன்” எனப் பதிலளித்தான் ஆடவன்.
“வேண்டாம் தேவ். தினமும் கூட்டிட்டு வர்ற வேலை வெச்சுக்காத”
“அதை சொல்ல நீ யாரு?” அவன் கேட்ட கேள்வியில் விரக்தியாகச் சிரித்தாள்.
“பதில் சொல்ல முடியலல்ல. முன்னெல்லாம் என் லவ்வர், உன் பொண்டாட்டிடா என்று உரிமையா சொல்லுவ. இப்போ அந்த வார்த்தை வரலன்னா அந்த உரிமையை நீ இழந்துட்டனு அர்த்தம். அந்த உறவைத் தொலைச்சுட்டேனு அர்த்தம். ஒரு சின்ன திருத்தம், தொலைக்கல அறுத்து எறிஞ்சிட்ட”
“போதும் தேவ்! எப்போ பாரு அறுத்துட்டேன், விட்டுட்டுப் போயிட்டேன்னு சொல்லாத. நீ எதுவும் பண்ணலனு சொல்லு. போயிடுனு விரட்டியது நீ தான்” சற்றே கோபமாகச் சொல்ல,
“போயிடுனு சொன்னா போயிடுவியா? அவ்ளோ தான் உன் காதலா?” என்று கேட்டவன், “ம்ப்ச்! பழசைப் பற்றி எதுக்கு பேசனும்? பேசினா எதுவும் சரியாகப் போறதில்ல. உன் வழியில் நான் குறுக்கிட மாட்டேன். அதே போல் நான் பண்ணுறதை நீயும் கேள்வி கேட்காத” அழுத்தமாகச் சொன்னான் தேவன்.
“மறுபடி அந்த பொண்ணு கூட பைக்ல போகாத” மறுபடியும் அவள் அதிலேயே வந்து நிற்க, “அப்போ என் கூட நீ வர்றியா?” எனக் கேட்டான்.
“என்னால முடியாது” அவசரமாக மறுத்தவளைப் பார்த்து, “இதே நீ தான் என் கூட ஒன்னா பைக்ல வந்தேங்கிறத மறக்காத. இப்போ உனக்கு என் கூட வரச் சொன்னா எரியுதுல்ல” வெறுப்பாகப் பார்த்தான் அவன்.
“இல்ல தேவ். அது வந்து.. அஷோக்” என்று ஆரம்பிக்க, “ஏய் நிறுத்து. அவன் பேச்சைக் கேட்க எனக்கு நேரமில்ல. சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு” விலகிச் சென்றவனை, இயலாமையோடு பார்த்து வைத்தாள் வினிதா.
………………
காலையில் இருந்து அலைபேசியோடு வலம் வருகிறாள். இன்னும் ரூபனிடம் இருந்து குறுந்தகவல் வரவில்லை.
“மகி! ஏய் மகி” ஜெயந்தியின் அதட்டலில், “என்னம்மா மெதுவா பேச மாட்டியா?” என்று கேட்டாள் மகிஷா.
“நான் சத்தமா கத்தினா கூட விளங்காத அளவு நீ எங்கே இருக்க? சாப்பாட்ட காக்க வெச்சிட்டு காக்கா ஓட்டுற மாதிரி எதுக்கு சுவரை வெறிச்சு வெறிச்சு பார்க்கிற” மேலிருந்து கீழாக மகளை ஆராய்ந்தது தாயின் பார்வை.
“ஈஈ சாரிமா. ஏதோ யோசனை” தலையில் தட்டிக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்க, “வர வர உன் போக்கே சரியில்லை டி” என்ற ஜெயந்தியை,
“அதெல்லாம் கண்டுக்காதம்மா. நான் போயிட்டு வர்றேன்” தாயின் கன்னத்தில் முத்தமிட்டு அறையினுட் செல்ல, அவளது அலைபேசித்திரை ஒளிர்ந்தது.
அழைப்பை ஏற்றவள் அமைதியாக இருக்க, “மகீஈஈ” என்றழைத்தான் ரூபன்.
அவளின் மௌனத்தைக் கண்டு, “மகி கேட்குதா?” சற்று சத்தமாகப் பேசினான்.
“நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். சாந்தமாகும் வரை காது கிழிய கத்தாமல் காத்திருக்க வேண்டுமென்று கடுப்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என்றாள் மகிஷா.
“தாழ்மையுடன் கேட்டுக் கொண்டீர்களேயானால் காத்திருப்பேன். கடுப்புடன் கேட்கும் போது எனக்கு இடுப்பு வலிக்கிறது”
“இடுப்பை முறிச்சு அடுப்புல வைக்க” கோபமாகச் சொன்னாள் அவள்.
“என்ன மகி நீ? கோபத்துல கூட கியூட்டா பேசுற. ரைமிங்ல பின்னுறியே”
“யோவ்! கிட்ட மட்டும் இருந்தீனா உன்னை அடி பின்னி எடுத்திருப்பேன். மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க?”
“சத்தியமா உன்னை இல்ல மகி”
“வெச்சிட்டுப் போ” அழைப்பைத் துண்டித்து விட்டாள் அவள்.
மீண்டும் அழைப்பு வரவே அழைப்பை ஏற்றவள், “என்ன வேணும் இப்போ?” என்று வினவ, “கோபப்படாத மகி. நைட்ல இருந்து தொடர்ந்து நிறைய எமெரெஜன்சி கேஸ். சோர்ந்து போயிட்டேன் டா” அவன் குரலில் அப்படியொரு களைப்பு.
அவளுக்கோ மனம் இறங்கி விட்டது. அவன் நிலை அறியாமல் சட்டென எரிந்து விழுந்ததில் முகம் வாட, “சாரி ரூபன்” என்றாள்.
“விடு விடு” அவன் குரலில் உற்சாகம் இல்லை.
“ரூபி! இனிமே கோபப்பட மாட்டேன். என் செல்லம்ல?” கெஞ்சத் துவங்கியவளின் அழகில் லயித்தவனோ, “வாவ் மகி! இது சூப்பரா இருக்கே. குழந்தை மாதிரி என்னைக் கொஞ்சுற. இதுக்காகவே உன் கூட கோபமா இருக்குற மாதிரி நடிக்கலாம் போல” என்று அவன் சொல்ல,
“ஹேய்! அதற்காக அப்படி செய்யாதீங்க. நானே எவ்ளோ கஷ்டப்பட்டு கொஞ்சுறேன்” என்றவளின் சிணுங்கல் அவனுக்கு சிரிப்பை ஊட்டுவதாய்.
“சரி. எதுக்கு இவ்ளோ கோவமா இருக்க நீ? நான் பேசலனா உனக்கு கோபம் வருதா?”என்று கேட்டான் ரூபன்.
“எனக்கு தெரியல. உங்க கூட பேசனும். பேசிட்டே இருக்கனும் போல தோணுது. கொஞ்ச நேரம் பேசலனா கூட ஒரு மாதிரி இருக்கு. காலையில் எழுந்த உடனே உங்க மெசேஜை எனக்கு பாக்கனும். இல்லன்னா சாப்பிட பிடிக்கல, எதுவுமே ஓடல. உலகம் புரியாம போய் யோசனைலயே இருக்கேன்”
அவள் சொன்னதை உள்வாங்கியவன் கேட்ட ஒரே கேள்வி, “இதற்குப் பெயர் நட்பு தானா?” என்பது தான்.
அவன் சொன்னதைக் கேட்டு, “ஏன் அப்படி கேக்குறீங்க?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் பெண்.
“இல்ல கேட்டேன் மகி. ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்குள்ள அவ்வளவு எதிர்பார்ப்பு, காத்திருப்பு எல்லாம் இருக்குமானு எனக்கு டவுட்டா இருந்துச்சு. அதான் கேட்டேன். நான் எதுவும் சொல்லல.
நிறைய சினிமா பார்த்து இருக்கேன். அத வச்சு சொல்றேன். லவ்வர்ஸ் தான் இவ்வளவு எதிர்பார்த்து தவிச்சிட்டு இருப்பாங்க. அதான் தெரிஞ்சுக்க விரும்பினேன். மற்றபடி எதுவும் இல்லை” என்றான் மனதில் உதித்ததை மறைக்காமல்.
அவளுக்கும் அதே கேள்வி தானே? ஆனால் அதை வெளியில் ஒப்புக்கொள்ள அவள் மனம் விடவில்லை.
“இப்படி கேட்கிறப்போ எனக்கு ஒரு மாதிரி இருக்கு ரூபன். இனிமே கேட்காதீங்க. நாம ஃப்ரெண்ட்ஸ் தான். அந்த லிமிட்டைத் தாண்டி என்னிக்கும் போக மாட்டேன். போறதா இருந்தா நான் விலகிடுவேன்” என்று சொல்ல, “மகி” என்று கோபமாக அழைத்தான் ரூபன்.
“என் கூட பேசாம உன்னால இருக்க முடியுமா?” என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.
“உன்னால முடியுமோ முடியாதோ எனக்குத் தெரியாது. ஆனால் உன் கூட பேசாம என்னால இருக்க முடியாது. பேசாம இருக்கேன்னா அதுக்கு காரணம் இருக்கும். மத்தபடி நான் ஃப்ரீயா இருந்தா உனக்கு கால் பண்ணனும்னு தான் மகி என் மனசு துடிக்கும்.
என்னோட நினைவுகளை உன்னோட பகிரனும், என் நேரங்களை உன்னோடு செலவிடனும்னு எனக்கு ஆசை. உன் கூட பேசாம, உன் குரல் கேட்காமல் என்னால் இருக்க முடியாது. எனக்கு தெரியல மகி இந்த உறவுக்கு பெயர் என்னன்னு.
ஆனா என் வாழ்க்கை முழுக்க உன் கூட பேசணும் அவ்வளவு தான். என்னை விலகிடுவேன்னு மட்டும் நீ சொல்லாத. அது உன்னால முடியாது, என்னாலயும் முடியாது. நம்ம சில கட்டளைகளைப் போட்டு, வரையறைகளை போட்டு வச்சிருப்போம். ஆனால் அதையும் வெல்லக் கூடிய சில உணர்வுகள் நமக்குள்ள தோணும்.
அப்போ நாம எவ்வளவு தான் கஷ்டப்பட்டு அதுக்கு தடை போட்டாலும் அது அந்த தடையை உடைத்து விடும். நம்ம மனசுக்கு அவ்வளவு வலிமை இருக்கு. மூளை வேணான்னு சொன்னாலும் மனசு அது வேணும்னு கேக்குறப்போ அதை நோக்கி தான் நம்ம அணுக்கள் எல்லாம் செல்லும். நம்ம எண்ணங்கள், நினைவுகள் எல்லாமே மனசோட பொருந்தி இருக்கு.
உன்னை லவ் பண்றேனான்னு எனக்கு டவுட்டா இருக்கு. ஆனா உன் கூட நான் காலம் முழுக்க இருக்கணும். தயவு செஞ்சு இனிமே இப்படி பேசாத. எனக்கு கஷ்டமா இருக்கு” அவன் குரல் கரகரத்தது.
அவன் சொல்வதைக் கேட்டவளுக்கும் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் சொல்லும் அனைத்தையும் அவளும் தானே உணர்கிறாள்? ஆனால் அவ்வுறவிற்கு காதல் என்று பெயர் வைக்க அவள் தயாராக இல்லை.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி