💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 49
இரவு நேரம். மற்றவர்கள் உறங்கி விட்டனர். ஜனனியை அழைத்த மேகலை, “எதிர் அறையில் ரெண்டு கட்டில் இருக்கே மா. அதில் பசங்களை தூங்க வை” என்று சொல்லி விட்டுத் தான் சென்றார்.
யுகனோடு இருந்த சத்யாவிடம் சென்றவள் அவனைக் கண்களால் அழைக்க, “என்ன?” எனக் கேட்டவாறு வந்தான்.
மேகலை சொன்னதைக் கேட்ட சத்யாவோ புருவம் சுருக்கி மகனைப் பார்த்தான்.
“யுகி கேட்பான்னு எனக்கு தோணல. அவன் அகி விஷயத்தில் ரொம்பவே பிடிவாதமா இருக்கான்” என்று சொல்ல,
“அது எனக்கும் தெரியும். அதற்காக அப்படியே விட முடியாதுங்க. குழந்தைங்க தப்பு பண்ணா அதைத் திருத்த வேண்டியது நம்ம கடமை” என்றவளின் பேச்சில் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
“நீ எப்படி ஜானு இதையெல்லாம் கேஷுவலா எடுத்துக்கிற?” மனதில் பட்டதை வெளிப்படையாகக் கேட்டான் சத்யா.
“எதையும் தலையில் போட்டுக்காம இருப்பேன் அவ்வளவு தான். அதுக்காக நான் எல்லாத்தையும் அப்படியே எடுத்துக்குவேன்னு நெனக்காதீங்க. நானும் சாதாரண மனுஷி தான்” என்று அழுத்திச் சொல்ல,
“நான் இல்லேனு சொன்னேனா? சண்டைக்கே வர்ற நீ” என்றவனுக்கு ஜனனி மீது தப்பான அபிப்பிராயம் எள்ளளவும் இல்லை.
அதை அவளிடம் கொட்டித் தீர்த்தாலோ என்னவோ, அவளுடன் சற்றே இயல்பாகப் பழக முடிந்தது.
யுகனின் அருகில் சென்று “யுகி கண்ணா! அகி பாப்பா மட்டும் அந்த ரூம்ல தனியா தூங்கனும்ல. நீயும் போய் அவன் கூட தூங்கு” என்று சொன்ன தந்தையை ஏறிட்டு,
“நான் உங்க கூட இருக்க வேண்டாம்னு சொல்லுறீங்களா? உங்களுக்கு கூட நான் முக்கியம் இல்லாம போயிட்டேனா?” என்றவனின் பார்வை ஜனனியைத் தழுவியது.
“என் கூட இருக்க வேண்டாம்னு சொல்லல யுகி. நீ எப்போ வேணா என் கிட்ட வரலாம். பட், நான் சொல்லுறத புரிஞ்சுக்க”
“முடியாது டாடி” தனது முடிவை உறுதியாக மொழிந்தான் யுகன்.
“முடியுமா முடியாதானு கேள்வி கேட்கல. நீ போகனும்னு உறுதியா சொல்லுறேன். சொன்னத கேட்க பழகிக்க” சற்றே கடினமாகச் சொல்லவே முகம் சுருங்கிப் போனது சின்னவனுக்கு.
அவனருகில் முட்டி போட்டுக் குனிந்து “நீ குட் பாய் தானே யுகி? என் கண்ணா நல்ல பையன்னு நானே சொல்லுற அளவுக்கு நான் உன்னை வளர்த்திருக்கேன். ஆனால் நான் சொல்லுவதையே நீ கேட்காம இருந்தா டாடியோட வளர்ப்பு தப்பா போயிடும்ல டா?” சோகமாகக் கேட்க,
“நோ டாடி! நீங்க சொன்னா நான் கேட்பேன்.எனக்கு அகி கூட இருக்க பிடிக்கல தான். ஆனால் உங்களுக்காக போறேன்” தனது தலையைணையை எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்குச் சென்றான்.
யுகனைக் கண்ட அகிலன் ஒரு மாதிரி பார்க்க, “நான் உன்னை கடிச்சு சாப்பிட மாட்டேன். அப்படி பார்த்தா உன் ஜனனி அம்மா என் கிட்ட தான் கோவிச்சுக்குவாங்க” கடுகடுப்பாக சொன்னான் அவன்.
அங்கு வந்த ஜனனியோ அவன் சொன்னதைக் கேட்டு, “யுகி கண்ணா! நான் ஏன்டா உன் கிட்ட கோவிச்சுக்க போறேன். அப்படிலாம் சொல்லக் கூடாது தங்கம்” என்றவள், “பாட்டி உங்கப்பா கூட பாசமா தானே இருக்கிறார்?” என்று கேட்க,
“ம்ம்” தலையசைத்து ஆமென்றான் யுகன்.
“பாட்டிக்கு தேவன், ரூபன்னு ரெண்டு பிள்ளைங்க பிறந்தாங்க. அப்போவும் அவங்களோட முதல் குழந்தையான டாடி மேல அதேயளவு பாசமா தானே இருக்காங்க. அப்படித் தான் இதுவும்.
அகி வந்தாலும் உன் மேலுள்ள பாசம் எனக்கு குறையாது. முன்ன இருந்த மாதிரி உன் கூட நான் இரக்கமா இருப்பேன். அதை விட கூடினாலும் கூடுமே தவிர, கொஞ்சம் கூட பாசம் குறையாது. நியாயமான காரணத்துக்காக அல்லாமல் நான் வேற எதற்காகவும் உன் மேல கோபப்பட மாட்டேன்” அவனது தலையைத் தடவிக் கொடுக்க அமைதியாக உறங்கச் சென்றான்.
அகிலன் சாய்ந்த மாத்திரத்தில் தூங்கி இருந்தான். அவனது தலை வருடி முத்தமிட்டவள், யுகனைப் பார்க்க அவனோ மறு புறம் திரும்பிக் கொண்டான்.
சோகமே உருவாக அறையினுள் வந்த ஜனனியைப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.
“யுகி ரொம்ப கோபப்படுறானா?” என்று கேட்க, “அதெல்லாம் போகப் போக சரியாகிடும்” என்றவளுக்கு இன்று அசதியாக இருக்க, தரையில் போர்வையை விரித்து சாய்ந்தவுடன் உறங்கி விட்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த சத்யாவுக்கு உறக்கம் வர மறுத்தது. எழுந்து எதிர் அறைக்குச் செல்ல, அவனது இரு புதல்வர்களும் துயிலில் ஆழ்ந்திருந்தனர்.
அகிலனின் அருகில் சென்றவனுக்கு அவனைப் பார்க்கையில் குற்றவுணர்ச்சி பெருகியது.
“சாரி டா செல்லம். என் குழந்தையை நானே ஆசிரமத்தில் விட்டு பெரிய தப்பு பண்ணிட்டேன். நீ என்னைப் பார்க்கிற பயந்த பார்வை என்னை என்னவோ செய்யுது. அதை எனக்கான தண்டனையா ஏத்துக்கிறேன். இருந்தும் வலிக்குது அகி. நீ இழந்த அன்பையெல்லாம் உனக்கு தருவேன்” அவனது நெற்றியில் முத்தமிட்டவனுக்கு தான் இழந்த பொக்கிஷமொன்றை அடைந்தது போன்ற உணர்வு.
கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு யுகனின் அருகில் சென்று அவனது முடியைச் செல்லமாகக் கலைத்து முத்தம் கொடுத்து விட்டு அறைக்குச் சென்று உறங்கினான்.
விடியலில் துயில் கலைந்த சத்யா, தனது உடம்பை அழுத்திய சுமை எதுவென்று அறிய கண்களை வேகமாகத் திறந்தான்.
அவனை இறுக்கி அணைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் யுகன். தனதருகில் மகனைக் கண்டவனோ புருவம் சுருக்கி கீழே பார்க்க, அங்கு ஜனனியைக் காணவில்லை.
யுகி எப்பொழுது எங்கு வந்தான் என்ற யோசனையோடு மகனை விலக்கி தூங்க வைத்தவனது கால்கள் எதிர் அறையை நோக்கி நடை போட்டன.
அங்கு ஜனனியின் மீது கால்களைப் போட்டு அகி உறங்க, அவனை வாகாக அணைத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. இருவரும் துயில் கொள்ளும் அக்காட்சி அவன் மனதை நெகிழச் செய்வதாய்.
ஜனனியை எழுப்பலாமா வேண்டாமா என்று யோசித்தவன், அவளாகவே எழட்டும் என தனது அறைக்குச் சென்று விட்டான்.
லேப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன், ஜனனியின் வருகையில் தலையுயர்த்திப் பார்க்க, “ஏதாவது கேட்கனுமா என்ன?” புருவம் உயர்த்தினாள் அவள்.
“நான் என்ன கேட்க வர்றேன்னு உனக்கு தெரியும்ல? அப்பறம் எதுக்கு இந்தக் கேள்வி?” அவனும் பதிலுக்கு ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
“நைட் ஏதோ சத்தம் கேட்டுச்சுனு ரூம் போனா அகி எழுந்து அழுதுட்டு இருக்கான். அவனை சமாதானம் செஞ்சு தூங்க வைக்கப் போனேன். யுகி என்னன்னா டாடி டாடினு முனகிட்டே அரைத்தூக்கத்தில் அங்குமிங்கும் அசையுறான்.
இவ்ளோ நான் உங்க கூடவே இருந்துட்டு இல்லாம போனது அவனுக்கு ஒரு மாதிரி இருக்கும் போல. அதான் நான் தூக்கி வந்து உங்க கிட்ட படுக்க வெச்சேன். உங்களை கட்டிக்கிட்டு தூங்கிட்டான்.
அகி கிட்ட நான் சாஞ்சுக்கிட்டு இருந்தேன். அவன் தூங்கினதும் நானும் அப்படியே படுத்துட்டேன்” அவனது வினாவுக்கான விடையை சொன்னபடி குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் சாதாரணமாகப் பேசினாள். ஆனால் சத்யாவால் அதை அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவளே இவர்களைப் பெற்றது போல இயல்பாக நடந்து கொள்கிறாளே. அது அவளால் எப்படி முடிகிறது என்ற ஆச்சர்யம் அவனுக்கு.
அவர்களுள் இருந்த முறுகல் கூட இப்போது தகர்ந்து விட்டது போல் இருந்தது. குழந்தைகள் பற்றிய பேச்சு அவர்களது உறவை சுமுகமாக மாற்றியது போன்ற உணர்வு.
நர்சரி செல்வதற்கு ரெடியாகி வந்தாள் ஜனனி. கண்ணாடி முன் நின்று தலை துவட்டிக் கொண்டிருக்க, யுகி கண் விழித்தான்.
“டாடி! உங்க கிட்ட எப்போ வந்தேன்?” தந்தையின் தரிசனத்தில் சூரியனைக் கண்ட தாமரை போல் மலர்ந்து விகசித்தது அவன் முகம்.
“ஒருத்தங்க உன்னைத் தூக்கிட்டு வந்தாங்க” என்று அவன் சொல்ல, “என்னைத் தூக்கிட்டு வந்தவங்க ஏஞ்சல் தான். ஸ்டோரில யாராவது ஆசைப்பட்டா அதை நடத்தி வைக்க ஏஞ்சல்ஸ் வருவாங்க. அந்த மாதிரி இருக்குல்ல டாடி” கண்கள் பளிச்சிடக் கூறினான் சின்னவன்.
அவனின் ஏஞ்சல் என்ற அழைப்பில் ஜனனியின் முகம் மகிழ்வில் மின்ன, அதைக் கண்ட சத்யாவுக்கு ஏக திருப்தி. தன் குடும்பத்திற்காக அனைத்தும் செய்யும் அவளுக்கு சிறு சந்தோஷங்களையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசை கொண்டது அவன் மனம்.
“அப்படினா அந்த ஏஞ்சல்..” என்று அவளைப் பற்றி சத்யா சொல்ல வர, ஜனனி மறுப்பாகத் தலையசைத்ததும் அமைதியாகி விட்டான்.
யுகன் பாத்ரூம் செல்ல, அகிலனை எழுப்பினாள் அவள்.
“அகி பாப்பா! எந்திரிங்க” அவனை எழுப்பி காலைக் கடன்களை நிறைவேற்ற உதவியவள், உடை மாற்றி விட்டாள்.
“நான் இன்னிக்கு நர்சரி போகப் போறேன் அகி. நீ பாட்டி கூட இருப்பியா?” அவள் கேட்டதும் அவனுக்கு முகம் வாடியது.
“அச்சோ! அப்படினா நான் என்ன பண்ணுறது?” அவனைத் தனியே விட்டு விட்டு எப்படிச் செல்வது என்று அவள் சிந்திக்க, “நான் பாட்டி கூட இருக்கேன்” சட்டென சொல்லி விட்டான்.
“நெஜமாவா?” அவள் மீண்டும் கேட்க, “ஆமா. நான் சமத்தா இருப்பேன். என்னைப் பற்றி யோசிக்காதீங்க” என்றவனை அணைத்துக் கொண்டாள் பெண்ணவள்.
அவனுக்கு ஜனனி இன்றி இருக்க ஏதோ போல் இருந்தாலும், அவளுக்காக இருப்பேன் என்பவனின் பக்குவமான அன்பில் அவள் மனம் கனிந்தது.
அவனை கீழே அழைத்துச் செல்ல, ஜனனியுடன் வரும் அகிலன் மீது நிலைத்திருந்தது யுகனின் பார்வை. ஜனனியோடு அவன் இருந்தது தான் நினைவு வந்தது அவனுக்கு. அவன் கண்களில் ஏக்கம் படர்ந்தது.
“பாட்டி கிட்ட போ அகி” என்று அவள் சொல்ல, மெதுவாக அவரது அருகில் சென்றான்.
“பாட்டி கிட்ட வர எதுக்கு தயக்கம்? வா அகி” அவன் கையைப் பிடித்து தனது மடியில் இருத்திக் கொண்டார் மேகலை.
“உங்களுக்கு என்னைப் பிடிக்குமா பாட்டி?” அவரிடம் அவன் கேட்க, “நீ என் பேரன் அகி. யுகி எப்படியோ நீயும் அப்படித் தான்” அவனது கன்னத்தில் முத்தமிட, புன்னகை பூத்தான் சிறுவன்.
“அவங்களுக்கு மட்டுமில்ல, உன்னை எங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இனிமே இப்படி கேட்கக் கூடாது” என்று தேவன் சொல்ல, அகி யுகியைப் பார்த்தான்.
அவனோ கடுகடுப்பாக நிற்க, “உன்னைத் தான் பார்க்கிறான். அவனைப் பிடிக்கும்னு சொல்லேன் டா” என ரூபன் கூற, “பொய் சொல்ல முடியாது ரூபி. நெஜமாவே பிடிச்சா தான் சொல்லுவேன்” என்ற யுகன் அகிலனையே வெறித்துப் பார்த்தவாறு நின்றான்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி