🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 05
தனது பைக்கில் அமர்ந்திருந்தான் நிதின். ருத்ரனின் வீட்டிற்குச் செல்ல நினைத்தவனுக்கு மனம் ஒத்துழைக்கவில்லை. பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு யோசனை செய்து கொண்டிருந்தான்.
“ஆலியா இருக்காளோ போயிட்டாளோ தெரியலயே? இப்போ என்ன பண்ணுறது? அங்கே போனா அவளை பார்க்கனும்னு மனசு சொல்லும். இந்த காதல் வந்ததுல இருந்து என்னத்த செய்றதுனு எனக்கே தெரியல” ஹெல்மட்டை கழற்றியவாறு தனக்குள் பேசினான்.
என்ன தான் ஆலியா ருத்ரனைக் காதலிப்பதாகக் கூறினாலும் அவன் மனதில் அவள் மீதான காதலில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதே உண்மை. ஆயினும் ஒருவகை ஏமாற்றம். அவளைப் பார்க்க தயக்கத்தை உண்டுபண்ணியது.
அதனைத் துடைத்தெறியவே தரிசனம் கொடுத்தாள் நிதினின் நேசத்திற்கு சொந்தக்காரி. பிரமையோ என கண்களை மூடி விட்டு திறக்க நின்றிருந்தது அவளே தான்.
“ஆலியா” என்று அழைக்கவும் தான் செய்தான் அவன்.
அவளோ கைகளைக் கிள்ளி “எதுக்கு கிள்ளுனேன்னா உனக்கு இப்போ குழப்பம்ல நான் நிஜமா வந்திருக்கேனா இல்லையானு. அந்த டவுட் க்ளியர் ஆயிடுச்சா இல்லை மறுபடி கிள்ளவா?” என்று கேட்டாள் அவள்.
“ஆளை விடும்மா தாயே. நானே ஏதோ முள்ளு கோழி மாதிரி இருக்கேன். இருக்கிற சதையையும் நீயே பிச்சு எடுத்துருவ போல ராட்சசி” பாவமாகப் பார்த்தான் நிதின்.
“அவ்ளோ பயமா என் மேல?” தலை சாய்த்தவளைப் பார்த்து, “என்னடி ஒரு மார்க்கமா பேசுற? கட்டில்ல இருந்து கீழே விழுந்து மண்டை கிண்டை பட்டுச்சா?” ஆராய்ச்சியாக கேட்டான்.
“ச்சே ச்சே! கட்டில் இல்லை கட்டிடத்தில் இருந்து விழுந்தாலும் இந்த ஆலியாவுக்கு ஒன்னும் ஆகாது. நம்ம மண்டை அவ்ளோ ஸ்ட்ராங்க. உன்னோடது மாதிரி தக்காளினு நெனச்சியா நசுங்கி போறதுக்கு”
“அடிங்ங் கொய்யாலே! வாய் கூடிப் போச்சு” அவள் தலையில் கொட்டு வைத்தான்.
“நீ எதுக்கு அத்தை வீட்டு பக்கமே வரல? அத்தை உன்னை தேடிட்டே இருந்தாங்க” வக்கீல் தோரணையில் கேட்டாள் ஆலியா.
“நெஜமாவே சித்து பேபி தேடினாங்களா?”
“பின்ன நானா தேடினேன்?”
“ஆமா! அப்படியே தேடி கிழிச்சிட்டாலும்” நொடித்துக் கொண்டவன், “நான் இப்போவே பெய் பார்த்துட்டு வரேன்” என்று ஹெல்மட்டை அணிந்தான்.
“சரி சீக்கிரம் வண்டியை எடு” அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
“எங்க ஏறுற?” தலையைத் திருப்பி கேட்டான்.
“வேணா உன் தலையில் ஏறி உட்காரவா? பேசாம முன்னாடி பார்த்து போ”
அவளது இந்த பேச்சு சற்றே வித்தியாசமாகத் தான் இருந்தது. அவனுக்கு மட்டுமல்ல அவளுக்குமே தான் தன்னை நினைக்கையில் ஆச்சரியமாக இருந்தது.
நேற்று ஒரு நாள் நிதின் வராதது அத்தனை கவலையாக இருந்தது. அவனைத் தான் நினைத்தது அவள் மனம்.
“நான் எதுக்கு அவனை பற்றி நெனக்கிறேன்? என்னாச்சு எனக்கு? நான் ருத்ரா மாமாவை லவ் பண்ணுறேனு சொல்லிட்டு வந்துட்டேன். அன்னிக்கு ருத் மாமா வேற பொண்ணை காதலிக்கிறேனு சொன்னப்போ எனக்கு எவ்ளோ வலிச்சுதோ நித்திக்கும் அப்படக தானே வலிச்சிருக்கும்?
ஆனா என்ன பண்ணுறது? என் மனசுல அவன் இல்லையே. இனி இந்த லவ் எல்லாம் இல்லாம ப்ரெண்ட்லியா வழமை போல பழக முடியுமா அவன் கூட? வேணாம் என் போக்கில் இருந்துடலாம். அவனாக வந்து பேசட்டும்” என்று நினைத்துக் கொண்டாள்.
இன்று கடைக்கு சென்றவளோ நிதினைக் கண்டு கொண்டாள். அவனைக் கண்டவுடன் அனைத்தும் மறந்து ஓடி வந்து விட்டாள்.
பலமுறை அவளோடு சென்றிருக்கிறான் தான். ஆனால் காதலை உணர்ந்த பிறகு இதுவே முதல் பைக் பயணம். மனம் இறக்கை கட்டிப் பறந்தது நிதினுக்கு.
ஆனால் எதுவும் பேச வரவில்லை. அவளோடு என்ன பேசுவது என்று யோசனை. ஏதாவது பேசினால் மறுபடி ருத்ரனைக் காதலிப்பதாக கூறி விடுவாளோ என்று. மீண்டும் அவளிடம் அதே வார்த்தையைக் கேட்கும் தைரியம் இல்லை.
ஆலியாவுக்கும் தற்போது என்ன செய்வது என்று புரியவில்லை. அவனோடு முன்பெல்லாம் பைக்கில் பலமுறை சென்றுள்ளாள். அதற்கெல்லாம் மாற்றமாக இருந்தது இன்றைய நிலை.
நண்பர்களாக இருக்கும் போது உள்ள நெருக்கம் காதல் என்பது ஊடுறுவும் போது மாற்றங்களுக்கு உட்படும் என்பது உறுதி. முன்பு மனம் விட்டுப் பேசிய தன்மை மனதினுள்ளேயே பலதையும் பேசும் தன்மையாக மாறுகிறது.
ருத்ரனின் வீடு வந்ததும் இறங்கிக் கொண்டவள் அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள். அவனது அமைதி அவளை ஏதோ செய்தது.
“ஒன்னும் பேச மாட்டியா நிதின்?” அவள் குரலில் ஏக்கம் தொனித்தது.
“எப்படி பேசுறதுனு தெரியல எனக்கு. ஆனா உன் மேல எந்த கோபமோ வருத்தமோ இல்லை” மனதில் பட்டதை அவ்வாறே சொன்னான்.
“இது போதும் நிதின். எனக்கு உன்னை ஹர்ட் பண்ணிட்டேனோனு தோணுச்சு. உன் நிலை எனக்கு நீ சொல்லாமலே புரியும். ஏன்னா அந்த வலியை நான் அனுபவிச்சு கொஞ்ச நாள் கூட ஆகல. அன்னிக்கு மாமா வாயால அவரு அம்முவை லவ் பண்ணுறதா சொல்லும் போது அவ்ளோ ஏமாற்றமா இருந்தது ஹ்ம்ம்” பெருமூச்சு விட்டாள் அவள்.
“அது உனக்கானது இல்லைனு நெனச்சி மறந்துடு. நான் அதைப் பற்றி நினைக்கவும் இல்லை. நீ மனச போட்டு குழப்பிக்காம போ” என்றவன் பைக்கை நிறுத்தி விட்டு அவள் பின்னால் சென்றான்.
அவளோ சற்று தூரம் சென்று திரும்பிப் பார்க்க, “பட் ஸ்டில் லவ் யூ ஆலியா” என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தபடியே!
♡♡♡♡♡
தனக்கு கேள்விப்பட்ட செய்தியில் கொதித்தெழுந்து “வாட்?” என அலறினான் ருத்ரன் அபய்.
“எஸ் மாமா! வீட்டுல எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் பேசுறாங்க. டுமோரோ நீங்க வரும் போது எங்க வீட்டு எல்லாரும் உங்க வீட்டுக்கு வருவாங்க நம்மளுக்கு கல்யாணம் பேசுறதுக்கு” படபடப்புடன் கூறினாள் ஆலியா.
“என் கிட்ட கேட்காம இவங்க எப்படி முடிவெடுக்கலாம்? நான் அம்முவ லவ் பண்ணுறேன். இப்படி பண்ணுனா பாதிக்கப்படப் போறது நான் மட்டுமல்ல. வாழ வேண்டிய நீயும் தான்” பிடரியை அழுந்த கோதிக் கொண்டான்.
“சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் மாமா. இனி நீங்க பார்த்துக்கங்க” அதற்கு மேல் முடியாமல் வைத்து விட்டாள்.
ருத்ரனின் வீட்டிலிருந்து இன்று இரவு தனது வீட்டிற்குச் சென்ற ஆலியாவுக்கு தனது தந்தை பரபரப்பாக, சந்தோஷமாக இருப்பதாக தோன்றியது.
பெற்றோரிடம் விசாரித்தும் எதுவும் கூறவில்லை. அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க அவர்கள் காத்திருக்க, சமையல்காரியின் மூலம் விடயம் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் காரிகை.
“கடவுளே! ருத்ரா மாமாவும் என்னை லவ் பண்ணாருன்னா இந்த செய்தி எனக்கு சப்ரைஸா இருந்திருக்கும். ஆனா இப்போ என் காதலே ஏமாற்றத்தில் முடிஞ்சிருச்சு. இதைக் கேட்டு என்னால சந்தோஷப்பட முடியல. விருப்பம் இல்லாத வாழ்க்கையை வாழ முடியாது.
அப்பா கிட்ட நேரடியா போய் சொல்லவும் தைரியம் இல்லை. மாமா கிட்ட சொல்லுவோம். அவர் பார்த்துக்கட்டும்” என நினைத்தவளுக்கு அவனிடம் தெரிவித்து விட்டதில் மனம் ஆசுவாசமடைந்தது.
மறுபுறம் ருத்ரனின் உள்ளமோ உலைக்களமாகக் கொதித்தது. அவர்களது பக்கமும் நியாயமே என்பதை புரியாதவனல்ல அவன். தன் பெற்றோரின் மனதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்தது.
ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் துளியும் இல்லை அவனுக்கு. காலப்போக்கில் அழித்து விடலாம் என்றால் இந்தக் காதலை என்றோ மறந்திருப்பேனே! கல் மேல் எழுத்தாய் பதிந்ததால் அல்லவா கானலாய்க் காட்சி காட்டினாலும் திடமாய் காத்திருக்கிறேன் என்று மனம் புழுங்கினான்.
தொலைபேசியில் பேசி முடிக்கும் விடயமல்ல இது. நேரில் சென்று நிதானமாகக் கையாள வேண்டுமென நினைத்தவன் பொறுமையுடன் நேரத்தைக் கடத்தினான்.
மனமோ அவனைப் பித்துப் பிடிக்க வைக்கும் அந்த வித்தைக்காரியை நினைத்துக் கொண்டது.
“அம்மு எங்கமா இருக்க? உன்னைத் தவிர வேறு யாருமே வேணாம் எனக்கு. நீ தான் வேணும். அப்பாம்மா சொல்லுறாங்கனு அவங்களுக்காக கூட என்னால உன் மேல வெச்ச காதலை விட்டுக் கொடுக்க முடியாது. அந்தக் காதல் உனக்கு மட்டும் தான். என் மனசு உனக்காக மட்டும் தான்.
இதுக்கு மேலயும் நீ என்னை தவிக்க விடனுமா? என் முன்னால வந்தா உன்னை ஏத்துக்க மாட்டேன்னு நெனக்கிறியா? இல்லவே இல்லை. நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை ஏத்துப்பேன். உன்னை என்னால முடிஞ்சளவு நல்லா பார்த்துப்பேன். என் கிட்ட வந்துரு அது போதும் எனக்கு” வலிமையான அந்த ஆடவனின் உள்ளமும் ஆட்டம் கண்டது அவள் மீது கொண்ட அளவற்ற காதலின் முன்னே.
இந்தக் காதல் அப்படித் தான். வன்மையானவனையும் மென்மையாய் தோற்கடித்து விடுகிறது. அவ்வாறே தொழிலில் பூகம்பமே வந்தாலும் கலங்காதவனும் அவனுள் பூவாகப் பூத்தவளின் காதல் சாரலிற்கே கலங்குபவனாய்த் தான் மாறினான்.
♡♡♡♡♡
அழகாக விடிந்ததிருந்தது அக்காலைப் பொழுது. வழக்கத்தை விட ஏதோ உற்சாகமாய் சிகறடித்தது பாவையின் மனம்.
பச்சை வர்ண சாரி கச்சிதமாய் அவளுடலைப் பொருந்தியிருக்க தாமரை டீச்சரின் கைவண்ணத்தில் தனது அழகு கூடியது போல் தோன்றியது அஞ்சனாவுக்கு.
தனக்கென ஒருவன். தனக்கு யாரும் இல்லையே என ஏங்கியவளுக்கு பாசம் காட்ட உறவுகள் என நினைக்கும் போது இதயம் இனிய கானம் இசைத்தது.
இன்று நிச்சயதார்த்தம். பிசினஸ் விஷயமாக சென்ற சுஜித் வந்திருப்பானா என நினைத்தாள். அன்று பேசியதற்குப் பிறகு பேசிக் கொள்ளவே இல்லை. இவளாக அழைக்கவும் இல்லை. அவனிடமிருந்து அழைப்பு வரவும் இல்லை.
அவனது குடும்பத்தினரோ அழைத்து நன்றாக பேசி அன்பைப் பரிமாறினர். இந்த அன்புக்காக அவனை ஏற்கலாம் என நினைத்தாளே தவிர அவன் மீது அப்படி ஒரு ஈடுபாடோ, தனிப்பட்ட பிரியமோ வரவேயில்லை என்பதுவே நிதர்சனம்.
“போகலாமா அஞ்சு?” என்று தாமரை கேட்க, திரும்பிப் பார்த்தவளின் முகத்தை கணநேரம் உற்றுக் கவனித்தார் அவர்.
“இன்னிக்கு புதுசா தெரியுற டா. நிச்சயதார்த்தப் பொண்ணு மாதிரி இல்ல கல்யாணப் பொண்ணு மாதிரி இருக்க நீ. என்னிக்கும் சந்தோஷமா இருக்கனும் அஞ்சு” அவள் நெற்றி வழித்து முத்தமிட்டார்.
அவரை அணைத்துக் கொண்டாள் அஞ்சனா. டீச்சர் என்பதையும் தாண்டி அவர் மீது ஒருவித அன்பு அவளுக்கு. காரணமேயின்றி நம் மீது அன்பும் அக்கறையும் செலுத்துவதால் நாமும் உவந்து அன்பு செலுத்தும் சிலர் நம் வாழ்க்கைப் பாதையில் அடிக்கடி வந்து போவார்கள் அல்லவா? அப்படியே இந்த தாமரை டீச்சரும்.
இருவரும் வெளியில் செல்ல வாயிலில் நின்ற அஞ்சனா ஒருகணம் தரித்தாள். திரும்பி தந்தையின் புகைப்படத்தை நோக்கினாள்.
“அப்பா! அன்னிக்கு சொன்ன மாதிரி இப்போ என் மனசு ஒரு மாதிரி கவலையா உணரவே இல்லை. ஏதோ இதுநாள் வரை உணர்ந்தில்லாத சந்தோஷம் தோணுது. இனி மனசை போட்டு குழப்பிக்க மாட்டேன். இன்னிக்கு எனக்கு ஒரு நல்லது நடக்க போகுது. அது உங்க ஆசீர்வாதத்தோட நடக்கப் போறதா நம்புறேன். அதனால இன்னிக்கு நடக்கிறது எதுவா இருந்தாலும் அதை நான் மனசார ஏத்துப்பேன்” மனதினுள் அவரோடு பேசி விட்டு நடந்தாள் பெண்ணவள்.
♡♡♡♡♡
ருத்ரனின் வீட்டில் அமர்ந்திருந்தனர் ருத்ரனின் பெற்றோரும் ஆலியாவின் பெற்றோரும். பெற்றோருக்கு நடுவே ஆலியாவும் அமர்ந்திருந்தாள்.
இன்னும் அவளிடம் விடயம் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவளுக்குத் தெரியுமே! ருத்ரன் பார்த்துக் கொள்வான் என்ற தைரியத்தில் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள்.
“கமான் பேபி லெட்ஸ் கோ ஒன் த புல்லட்டு..” பாடலை வெட்கப்படும் இமோஜி ஒன்றோடு சேர்த்து ஸ்டேட்டஸ் வைத்திருந்தான் நிதின்.
நேற்று தன்னோடு பைக்கில் சென்றதற்காகத் தான் போட்டிருக்கிறான் என்பது புரிய அவளையறியாமலே உள்ளுக்குள் ஒருவித நாணம் வந்து ஒட்டிக் கொண்டது.
“ருத்ரா ஒன்னும் சொல்ல மாட்டான்ல?” யோசனையுடன் கேட்டார் கோபால்.
“பயப்படாதீங்க மச்சான்! அவனை ஒத்துக்க வைக்கிறது என் பொறுப்பு” என உறுதியாகக் கூறினார் செல்வன்.
சித்ராவுக்கோ மனதில் சில நினைவுகள் வந்து போயின. அந்நினைவின் தாக்கத்தில் கண்களும் கலங்க யாரும் அறியாமல் அதனைத் துடைத்துக் கொண்டார்.
“ருத்ரான்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும் மாப்ள. சின்ன வயசுல இருந்து அவனைப் பார்க்கிறேன். அவனைத் தவிர வேறு யாரும் எனக்கு பொருத்தமான மருமகனா வருவான்னு தோணல” என்று கூறினார் கோபால்.
உண்மை தான்! கோபாலுக்கு தன் மகள் ஆலியாவை விட ருத்ரன் என்றால் உயிர். அவனை வேறு யாருக்கும் திருமணம் செய்து வைத்தால் பிரிந்து சென்று விடுவான். அவ்வாறன்றி தமது குடும்பத்திலேயே திருமணம் செய்வதால் அவர்களுடனே இருப்பான் என்ற பேராசையும் அவருக்கு அதிகம் உண்டு.
“எல்லாம் சரிண்ணா! ஆனா ருத்ரா இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டான். அவன் கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியாது. அவன் வந்ததும் வெடி வெடிக்கும் பாருங்க” சித்ரா சொன்னவருக்கு தெரியவில்லை அவனோ அணுகுண்டையே வைக்கப் போகிறான் என்று.
“இதை நீங்க இன்னும் யோசிக்க கூடாதா? உடனே இப்படி முடிவு எடுக்க போறீங்க. என்னவா இருந்தாலும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசாதீங்க. அவன் கிட்ட நிதானமா பேசுங்க” இத்தனை நேரம் அமைதியாக இருந்த லீலாவும் வாயைத் திறந்தாள்.
ஆலியாவுக்குத் தெரியாமல் தாம் மறைமுகமாகப் பேசுவதாக அவர்கள் நினைத்துக் கொண்டனர். ஆனால் சகலமும் அறிந்தவளுக்கோ நெருப்பின் மீது நிற்பது போல் இருந்தது.
சற்று நாட்களுக்கு முன்பு என்றால் தன் காதல் கைகூடும் என்று மகிழ்ந்திருப்பாள். ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக மாறி விட்டதன்றோ?! அவனது வாயால் இன்னொருத்தியைக் காதலிப்பதை அறிந்து தனது காதலை மறந்து விடலாம் நினைத்தவள் அவன் தன்னை தங்கையாக எண்ணியதினால் அதனை அடியோடு மறக்க உறுதி கொண்டாள்.
இப்போது அவனோடு கல்யாணம் என்பதை ஏற்க முடியவில்லை. அடியோடு கசந்தது அந்நினைவு.
அச்சமயம் வீட்டு வாயிலின் முன் கிரீச்சிட்டு வந்து நின்றது ருத்ரனின் கார். சற்று நேரத்தில் புயலென நுழைந்தான் ருத்ரன்.
“வாடா ருத்ரா” அருகில் வந்து அழைத்த தாயைக் கண்டு புன்னகைக்க முயன்று தோற்றுப் போனான்.
‘என் மனசு புரிஞ்சும் நீங்களுமா அப்பாவோட விருப்பத்தை ஏத்துக்கிட்டு எனக்கு ஆலியாவை கட்டி வைக்க பார்க்குறீங்க’ எனும் கேள்வியோடு தாயை வருத்தமாக நோக்கினான் மகன்.
அவன் பார்வை ஏதோ செய்தாலும் அதன் அர்த்தத்தை அத்தாயால் உணர முடியவில்லை. செல்வன் ஒரு பார்வை பார்த்தார்.
“வாங்க மாப்பிள்ளை உட்காருங்க” இன்முகத்தோடு அழைத்தார் கோபால்.
“என்ன மாமா புதுசா மாப்பிள்ளைனு கூப்பிடுறீங்க? எப்போவும் ருத்ரான்னு தானே கூப்பிடுவீங்க?” சற்றே கடினமாகக் கேட்டான் அவன்.
“நீ எனக்கு மாப்பிள்ளை தானே? அதான் கூப்பிட்டேன். இதுக்கு எல்லாமா விளக்கம் கேட்ப” என்று அவர் சமாளித்து வைக்க ஆலியாவோ ருத்ரன் என்ன செய்யப் போகிறான் என்றே எதிர்பார்த்திருந்தாள்.
“சித்ரா அண்ணிக்கு எதுவோ கிப்ட் கொண்டு வருவேன்னு போகும் போது சொல்லிட்டு போனியாம். எங்க கிட்ட சொல்லிட்டே இருந்தா ருத்ரா இப்படி சொன்னான்னு” சற்று முன் சித்ரா தன்னிடம் பேசியதை நினைவு கூர்ந்தார் லீலா.
“கொண்டு வந்திருக்கேனே சப்ரைஸ் கிப்ட்” என்று கூறிய ருத்ரன் வெளியே சென்றான்.
மற்றவர்களும் வாயிலின் அருகே சென்று என்னவென்று பார்க்க, கார் கதவைத் திறந்தான் ருத்ரன்.
அதிலிருந்து இறங்கினாள் ஒரு பெண். அனைவரின் விழிகளும் முழுவீச்சில் விரிந்தன. கோபால் அதிகப்படியாக அதிர்ந்தார்.
“இது யாரு மாமா?” சந்தேகமாகக் கேட்டாள் ஆலியா.
“ஷீ இஸ் மை அம்மு” என்று மகிழ்வோடு மொழிந்தான் காளை.
அவனை விட்டும் ஈரடி தள்ளி நின்று, குனிந்திருந்த தலையை மெல்ல உயர்த்தி தனதருகே இருப்பவனை ஏறிட்டாள் பெண். இப்போது மற்றவர் முன் முழுதாகக் காட்சி தந்தாள் அவள்.
“இவ என் பொண்டாட்டி! மிஸ்ஸிஸ் ருத்ரன் அபய்” நிதானமாக ஒவ்வொரு வார்த்தைகளையும் உதிர்த்தான்.
இன்னும் ஒருபடி மேலாகச் சென்று அதிர்ந்து அவளை உற்று நோக்கினர்.
கழுத்தில் ஈரம் காயாத தாலி சரசரக்க இளஞ்சிவப்பு நிற சாரியில் ரோஜா மலராய் தோற்றமளித்தாள் அவள்.
இதயம் தாறுமாறாக துடிதுடிக்கச் செய்தாலும் அந்த படபடப்பை முகத்தில் காட்டாமல் விழிகள் தைரியத்தில் பளபளக்க நிமிர்வுடன் அவர்களை நேர்ப்பார்வை பார்த்தாள் அஞ்சனா!
ருத்ரனின் மனையாள்!
ருத்ரன் அபய்யின் ஆருயிர்க் காதலி அம்மு!
தொடரும்……..♡
ஷம்லா பஸ்லி