🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 05
‘சுவர்ணமஹால்’ புகழ் பெற்ற திருமண மண்டபம் பிரம்மாண்டமாய் வீற்றிருந்தது. நாளை திருமணம் என்பதால் இன்று மாலையே மண்டபத்தின் இரண்டாம் தளத்தில் இருந்த அறைகளை வாடகைக்கு எடுத்து சொந்த பந்தங்களை தங்க வைத்தனர் இரு வீட்டாரும்.
மாலை மங்கிய நேரம் மீராவுடன் கதையளந்தவாறு இரண்டாம் தளத்தின் வலது பக்கத்தில் இருந்த ஸ்விம்மிங்பூலை வந்தடைந்தாள் தேன் நிலா.
“நாளைக்கு கல்யாணம் மச்சி. எதுக்கு மூஞ்சை மூனு அங்குலத்துக்கு தொங்க வெச்சிட்டு இருக்க?” ஆராய்ச்சிப் பார்வை பார்த்தாள் மீரா.
“உனக்கு தெரியாதா மச்சி? எனக்கு அந்த ரஷ்ய ரோஸ் மில்கைப் பிடிக்கவேயில்லை”
“இந்த டயலாக் கேட்டு சலிச்சு போச்சு. வேற ஏதாச்சும் ட்ரை பண்ணு. நீயும் அப்போலிருந்து பிடிக்கல பிடிக்கலனு சொல்லுறியே தவிர, உருப்படியா எதுவும் பண்ணுனியா என்ன? இப்போ பாரு கல்யாண மண்டபம் வரை வந்துட்ட” சலிப்போடு வானத்தைப் பார்த்தாள் அவள்.
“எங்க வீட்டாட்களும் இந்த கல்யாணத்தில் சந்தோஷமா இருக்காங்க மீரு. நான் எப்படி வேணானு சொல்ல முடியும்? அதுவும் மண்டபம் வரை வந்த பிறகு வேணானு சொன்னா அப்பா வெளுத்து வாங்கிடுவார்” படபடப்போடு சொன்னாள் தேனு.
“இதோ பார் மச்சி. உனக்கு ரெண்டே ரெண்டு சாய்ஸ் தான் இருக்கு. ஒன்னு, கல்யாணம் வேண்டாம்னா மனசைக் கல்லாக்கிக்கிட்டு போய் மாமா கிட்ட வேணானு சொல்லிடு. அப்படி சொல்ல முடியாதுன்னா இது தான் உன் வாழ்க்கைன்னு நெனச்சிட்டு ராகவ் அண்ணாவை மனசார கல்யாணம் பண்ணிக்கனும்” என்று மீரா சொல்ல, அவள் கூற்றில் இருந்த நியாயம் மற்றவளுக்குப் புரியவே செய்தது.
இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. தந்தை முகம் பார்த்து கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும் தைரியம் அவளுக்கில்லை.
எனினும், அதற்காக ராகவ்வை மனதார ஏற்பதை நினைக்கவும் முடியவில்லை. அவன் தனது எண்ணங்களுக்கு ஏற்றவன் அல்ல என்பதை அவளாக உருப்போட்டு மனதினுள் நிலை நிறுத்திக் கொண்டதை அழிக்கவும் முடியவில்லை.
“யோசிச்சு முடிவெடு மச்சி. இதைப் பற்றி நல்லா யோசி. நான் வர்றேன்” அவளது தோளைத் தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றாள் மீரா.
கண்களை மூடித் திறக்க, அவளை நோக்கி ஓடி வந்தாள் ப்ரீத்தி.
“தேனு” என்றவாறு அவள் வர, “வா வா ப்ரீ குட்டி” அவளைத் தன் மடியில் இருத்திக் கொண்டாள்.
“இங்கே என்ன பண்ணுற தேனு? நான் உன்னை எங்கெல்லாமோ தேடினேன். மாமா தான் இங்கே இருக்கிறதா சொன்னார்” என்று அவள் கூற,
“உங்க மாமா என்னைப் பற்றி என்ன சொல்லுவார் ப்ரீ?” அவளுக்கு ஏனோ அவ்வாறு கேட்க வேண்டும் போல் தோன்றியது.
“மாமா என் கிட்ட எதுவும் சொல்ல மாட்டார். நான் அவர் கிட்ட உன்னைப் பற்றி நிறைய சொல்லுவேன். ஃப்ளவர்ஸ் தர்றதை சொல்லி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னா சிரிச்சுட்டே கேட்டுக் கொண்டிருப்பார்”
“அவர் உங்க கூட நல்லா பேசுவாரா?” அவள் இன்னும் வினாத் தொடுக்க, “ஆமா. வீட்டுல பேசுவார். என் கிட்ட அதை விட பேசுவார். உன் கிட்ட பேச மாட்டாரா?” என்று விசாரிக்கும் தொனியில் கேட்டாள் சின்னவள்.
“பேசுவாரே. டாக்டர் சார் நல்லா பேசுவார்” என முறுவலித்தவளுக்கு அவன் தன்னோடு அவ்வளவு பேசுவதில்லை என்று சொல்லத் தோன்றவில்லை.
அதேநேரம் ராகவ் ஒரு பெண்ணுடன் கதைத்துக் கொண்டு வந்தான்.
அவன் நன்கு பேசுவதைக் கண்டு இவளுக்கு உள்ளுக்குள் பற்றியெரிந்தது.
அவளை நெருங்கிய ராகவ், “ஷீ இஸ் மை ஃபியான்சி தேன் நிலா!” என அவளிடம் சொன்னவன்,
“நிலா! இது என் கூட ரஷ்யாவில் ஒன்னா படிச்ச ப்ரெண்ட். டாக்டர் ஷோபா” என அறிமுகம் செய்து வைத்தான்.
அவளுக்கு வணக்கம் தெரிவித்து பேசியவள், “கடைசியில் தனுஜாவோட தொல்லையில் இருந்து விடுபட்டு தேனுவைப் பிடிச்சுட்ட போல. கங்க்ராட்ஸ் டா” என விடைபெற்றுச் சென்றாள் ஷோபா.
நிலாவுக்கு எதுவும் மண்டைக்கு ஏறவில்லை. ‘தனுஜா’ எனும் பெயரே அவளைச் சுற்றி வர, “யாரந்த தனுஜா?” எனக் கேட்டாள் தேன் நிலா.
“என்னை ஒன் சைடா லவ் பண்ணுனா. நாளைக்கு கல்யாணத்துக்கு வருவா காட்டுறேன்” என்றவாறு அவன் செல்ல,
“அந்த ஷோபா கூட பக்கம் பக்கமா பேசிட்டு இருந்தீங்கள்ல. இப்போ மட்டும் எங்கே ஓடுறீங்க. இருங்க” என தேன் நிலா கோபப்பட,
“ஓகே பேசு” கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தான் ராகவேந்திரன்.
“அவ கூட பேசுனீங்க. நான் பேச சொன்னா எனக்கு பேச சொல்லுறீங்க” என்று படபடத்தவளுக்கு அவன் ஷோபாவோடு சிரித்துப் பேசியது பிடிக்கவில்லை.
“அவ பேசினா. நானும் பேசினேன். நீ பேசினா நானும் பேசுவேன். நீ பேசாம ஆர்கியூ பண்ணுனா என்னால அதுக்கு சும்மா பேசிட்டு இருக்க முடியாது. பேசுனா பதில் தருவேன்” என்றவாறு பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டான் அவன்.
“வேண்டாம் சாமி! நீங்க என் கிட்ட எதுவுமே பேச வேண்டாம். போய் ஷோபா கூடவே நின்னு சிரிச்சு பேசி ஷோ காட்டுங்க” கோபப்பட்டவள்,
“அப்படினா மேடமுக்கு பாசசிவ்வா?” அவளைத் துளைக்கும் பார்வை பார்க்க, “பாசசிவ் பச்சரிசி ஒன்னும் இல்ல. ஏதோ கேட்டேன். அதுக்குனு அவ்ளோ சீன் போட வேண்டாம்” என்று கடுகடுத்தாள் அவள்.
“ஹனி மூன்” என அவன் இழுக்க, “சொல்லுங்க” அவன் தன்னை அழைக்கிறான் என எண்ணி முகம் பார்க்க,
“இந்த முறை அந்த ஹனிமூனை தான் சொல்லுறேன். எங்கே போகலாம்னு லொகேஷன் அனுப்பறேன். சிலெக்ட் பண்ணி வை” மென் புன்னகையுடன் நகர்ந்தான்.
“ஹனிமூனா? என்ன இவ்ளோ கூலா சொல்லிட்டு போறான். கல்யாணமே முழுமனசோட இல்ல, இதுல ஹனிமூன் எப்படி?” அவள் சத்தமாகப் புலம்ப,
“அரை மனசோடயோ முக்கால் மனசோடயோ போய் தான் ஆகனும். சோ தயாராகுங்க ஹனி மூன்” என அவன் செல்ல,
“அய்யய்யோ எல்லாம் கேட்டுட்டானா? போடா போ, கல்யாணம் நடந்தாலும் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. ஹனிமூனாமே. இருடா வெச்சுக்கிறேன்” காலைத் தரையில் உதைத்தாள் அவள்.
மறுபக்கம் மீராவிடம் கோபித்துக் கொண்டு துருவன் நிற்க, “துரு! எதுக்குடா கோபமா இருக்கே?” அவள் அவன் முன்னால் சென்று நிற்க,
“நீ எதுக்கு அந்த நிருபன் கூட பேசிட்டு இருக்கே?” கோபமாகக் கேட்டான் காதலன்.
“நிருபன் என் ப்ரெண்டு. அவன் கூட பேசுறதுக்காக கோபப்படாதனு சொல்லி இருக்கேன்ல” பதிலுக்கு கோபம் கொண்டாள் மீரா.
“அப்படினா அவனுக்காக என் கூட கோவிச்சுக்கிற தானே? நான் சொல்லுறத கேட்க மாட்ட” அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “ஆரம்பத்தில் இருந்தே உனக்கு நிருன்னா ஆகாது. ஆனால் அவன் எனக்கு ப்ரெண்டு டா. புரிஞ்சுக்கோ துரு. ப்ளீஸ்”
நிருபன் மீராவின் உற்ற நண்பன். அவளோடு நன்கு பழகுபவனை சிறு வயது முதல் அறிவாள்.
நீண்ட மூச்செடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான் துருவன்.
“சாரிடி. என்னால நீ அவன் கூட பேசுறதை பார்க்க முடியல. எந்த தப்பான நோக்கமும் இல்ல. ஆனால் நான் மட்டுமே உன் கூட பேசனும்கிற ஒரு எண்ணம்” அவள் கன்னத்தில் கை வைக்க,
“இட்ஸ் ஓகே டா. உன் மனசு எனக்கு புரியுது. ஆனால் அவன் எனக்கு சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட் இல்லையா? அவனை அப்படி அம்போனு விட முடியாது. அவன் ப்ரெண்ட்ஷிப் என்னிக்கும் வேண்டும்” என்று விளக்கம் கொடுத்தாள் மீரா.
“எனக்கு தெரியும் நிருவை உனக்கு எவ்ளோ பிடிக்கும்னு. அவன் ப்ரெண்ட்ஷிப் உனக்கு எவ்ளோ இம்போர்டன்ட் என்றும் தெரியும். அதை நான் என்னிக்கும் கெடுக்க மாட்டேன். இனி இப்படி கோபிக்கவும் மாட்டேன்” அவளது கைகளைப் பற்றிக் கொள்ள,
“தாங்க் யூ துருவ். என்னைப் புரிஞ்சுக்கிட்டியே. அது போதும்” அவன் தோளில் சாய்ந்தாள் மீரா.
மறுநாளும் இனிதென விடிந்தது. அன்றைய விடியலில் திருமணத்திற்காத சுவர்ணமஹால் கலகலப்போடு திகழ, மணமகள் அறையில் இருந்த தேன் நிலாவுக்கு முகம் விடியாமல் இருந்தது.
“ஃபைனலி எனக்கு கல்யாணம். இனி எதுவும் பண்ண முடியாதுனு தெரிஞ்சு போச்சு. கல்யாணம் தான் பண்ணிக்கனும். ஆனால் என்னால அவனை ஏத்துக்க கண்டிப்பா முடியாது” என்று நினைத்தவள், இறுதி முயற்சியாக அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.
“என்ன சொல்லு” எடுத்ததும் அவன் பட்டென்று கேட்க, “கல்யாணத்தை நிறுத்த..” என அவள் கூற வரும் போது,
“ஜஸ்ட் ஷட் அப்! நிலமை தெரியாம டென்ஷன் பண்ணுற. கால் கட் பண்ணு” கோபத்தோடு அவன் கத்த,
அதிர்ந்து போனவளோ அவசரமாக அழைப்பைத் துண்டித்தாள். இப்படியொரு கோபத்தை இச்சமயம் அவள் எதிர்பார்க்கவில்லை.
இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம்? முகூர்த்தம் நெருங்கிய சமயத்தில் கல்யாணத்தை நிறுத்த சொல்வதால் கோபப்படுகிறானா? ஆனால் அதற்கு ஏன் இவ்வளவு கத்த வேண்டும்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இவனுக்கு மூக்கு மேல கோவம் வரும் போல. இந்த தடவை மட்டும் பேசிட்டு, நிறுத்த முடியலனா மனசைத் தேத்திக்கிட்டு இவனையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு நெனச்சேன். ஆனால் திடீர்னு முகத்தில் பாயுறான். இந்த மாதிரி கோபக்காரன் கூட எப்படி வாழ முடியும்?
இவனைப் போய் நல்லவன் வல்லவன்னு எங்க வீட்டுல எல்லாரும் ஏன் தலையில் தூக்கி வெச்சுட்டு ஆடுறாங்களோ தெரியல. ஒரு தடவை எங்க பக்கத்து வீட்டு பையனை முகத்தில் குத்தி ரத்தம் வர வெச்சான். அந்த ரவுடிசத்தைப் பார்த்தும் எங்கப்பா அவனைக் குறை சொல்லாம புகழ்ந்தாரு. இவன் நல்லவன் வேஷம் போடுறானா இல்லையா ஒன்னுமே விளங்க மாட்டேங்குது” சத்தமாகவே புலம்பித் தீர்த்தாள் அவள்.
ஆனால் அவளால் என்ன செய்திட இயலும்? ஒன்றும் பேசாமல் கல்யாணப் பிடவையை அணிந்தவளுக்கு சடசடெவன அலங்காரங்கள் நடைபெற்றன.
முகூர்த்த நேரம் நெருங்கும் போது “ஏன்டி என்னை இன்னும் கூட்டிட்டு போகாம இருக்கீங்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவசரப்படுத்திட்டு இப்போ லேட் பண்ணுனா என்ன அர்த்தம்?” அதீத கடுப்போடு மீராவிடம் கேட்க,
“அங்கே ஒரே பரபரப்பா இருக்கு. அதான் உன்னை இன்னும் கூப்பிடல மச்சி” பதற்றம் இழையோடும் குரலில் மீரா பதிலிறுத்தினாள்.
“ஏன் என்னாச்சு?” ஒன்றும் புரியாத தோரணையில் அவள்.
“மாப்பிள்ளையைக் காணோமாம்” என அவள் சொன்னது தான் தாமதம், ஒன்றும் யோசியாமல் “ஹய்யா…!! அப்போ கல்யாணம் நின்னுடுமா?” என துள்ளிக் குதித்த, மறு கணம் சந்தோஷம் காணாமல் போக, யோசனையில் புருவங்கள் முடிச்சிட நின்றாள் பெண்ணவள்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி
2024-11-10