5. வாடி ராசாத்தி
அன்று இரவு அம்ரிதாவின் வீட்டில், அனைவரையும் அழைத்தார் செல்வராஜ். சம்பத், சென்னையில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பைனான்ஸ் பிரிவில் வேலை செய்கிறான். அதனால் அவன் மட்டும் இல்லை. இவர்களிடம் சொல்ல போகும் விஷயத்தை அவனிடம் தொலைபேசியில் சொல்லி இருந்தார் செல்வராஜ்.
“நான் இந்த வீட்டை விற்கலாம்னு இருக்கேன்….” செல்வராஜ் அறிவித்ததை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர். ஒரு சேர அனைவரும் அவர்கள் அதிர்ச்சியை காட்ட,
“எனக்கு மட்டும் ஆசையா என்ன? என் நிலைமை அப்படி…. நிலத்தை வாங்க யாரும் வர மாட்டேங்கிறாங்க…. என்னால ரொம்ப நாள் கடனுக்கு வட்டி கட்டிக்கிட்டு இருக்க முடியாது.” என்றார் வருத்தமாக.
“சம்பத் கிட்ட சொல்லி லோன் எதுவும் வாங்க சொல்லலாமா….? வேற வழி எதுவும் யோசிச்சு பாருங்களேன்….” மெதுவாக வாசுகி சொல்ல,
“என் கடனுக்கு அவனை பொறுப்பாளி ஆக்க சொல்றியா….? அம்ரிதா கல்யாணத்துக்கு அவன் சேர்த்துகிட்டு இருக்கான்…. இல்லைனா அவனே சொல்வான்…. எனக்கு என் பிள்ளையை சிரமப்படுத்தறது கஷ்டமா இருக்கு…. மாப்பிள்ளை நிறைய வருது…. நாம கல்யாணம் பண்ற நிலைமையில் இல்லாம, பொண்ணை வீட்டோட வைச்சுக்கிட்டு இருக்கோமேனு….” பாதியில் பேச்சை அவர் நிறுத்தி விட, பலதை எண்ணி கலங்குகிறார் என்பது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. பெரியவர்கள் இருவரும் எதுவுமே பேசவில்லை.
“அப்பா, இந்த வீட்டை வித்தா உங்களுக்கு நிம்மதியா இருக்கும்னா வித்துடலாம் பா…. நாம எல்லாரும் ஒன்னா இருந்தா எந்த இடம்னாலும் சந்தோஷம் அங்க வந்துரும் பா…. என் கல்யாணத்தை பத்தி கவலைப்படாதீங்க பா…. உங்க பொண்ணுக்கு நீங்க சுப்பர் மாப்பிள்ளை கொண்டு வர தான் போறீங்க….” சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள் அம்ரிதா.
“அந்த மகராசன் கிட்ட உன் வாயை மட்டும் கொஞ்ச நாள் திறந்திடாதே…. அம்மாடி சரியான வாயாடினு பயந்திருவான்….”
“நான் இப்படி தான் தெரிஞ்சு என்னை கல்யாணம் பண்ணிக்கட்டும்…. நான் ஏன் எதையும் மறைக்கணும்….?” அம்மாவிடம் பொரிய தொடங்கியவளின் மனதில் தானாக கேபியின் நினைவும், சற்குணம் சொன்ன வார்த்தைகளும் நியாபகம் வந்தது. அவளை அவளாக ஏற்று கொள்வார்கள் அந்த இருவரும், அதே போல் குடும்பத்தார்கள் தவிர்த்து அந்த இருவரிடம் மட்டும் அம்ரிதாவும் எதையும் யோசிக்காமல் அவளாக இருப்பாள், பேசுவாள்.
“எல்லாரும் இப்படி நிறைய பேசுற பொண்ணை நல்ல விதமா எடுத்துக்க மாட்டாங்க….”
“எடுத்துக்குறவங்க எடுத்துக்கட்டும்…. என் பொண்ணை குறை சொல்றதை விடு….” என்றார் செல்வராஜ்.
“நான் ஒன்னும் குறை சொல்லலை, உங்களை மாதிரி அவளை தாங்குற மாப்பிள்ளை மட்டும் கொண்டு வந்திருங்க….” என்றபடி எழுந்து போனார் வாசுகி.
அம்மாவும் அப்பாவும் பேசும் போது தன் வாழ்க்கை எப்படி அமையும் என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள் அம்ரிதா. அவளுக்கு கேபியை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லை, சிறுவயதில் இருந்து அவள் தந்தை அவனை ஒதுக்குவது கண்டு அவளுக்கு அவனை பிடித்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் அவனை வம்பு இழுத்து கொண்டே இருப்பாள். ஒரு வயது வந்த பின் அவன், அவர்கள் திருமணம் என எதை பற்றியும் யோசிக்கவே இல்லை….அதை தவிர்த்தே வந்தாள். நந்தனாவை எங்காவது கண்டால் அவள் மனம் லேசாக சுருங்க தான் செய்யும்…. அவளை கேபி திருமணம் செய்ய வாய்ப்பு அதிகம் என்பதால்.
“யார்கிட்டயாவது சொல்லி வைச்சு இருக்கியா….? வீடு விற்கிறோம்னு….” மெதுவாக மகனிடம் கேட்டார் சொக்கலிங்கம்.
“இன்னைக்கு தான் நான் இந்த முடிவே எடுத்தேன்…. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வீட்டு புரோக்கர் அவர்கிட்ட சொல்லலாம் இருக்கேன்.”
“நான் வேணா பேரன் கிட்ட பிரச்சனை பண்ணாம இருக்க சொல்லவா….?” அம்சவல்லி கேட்க,
“அவனோட தயவு எனக்கு வேண்டாம்…. உறவும் வேண்டாம்…. அதுக்கு அவன் ஒத்துகிட்டா சரி தான். சொல்லி பாருங்க….” என்றார் செல்வராஜ். அம்சவல்லியும் சொக்கலிங்கமும் பேரனுடன் இப்போது தொடர்பில் தான் இருக்கிறார்கள். அவன் வளரும் வரையில் சிறுவர்கள் பேசி கொண்டதை போல் அவனுடன் பேச முடிந்ததில்லை அவர்களால். ஆனால் அவன் கல்லூரி சென்ற பின் அவனாக வந்து பேச, அதன் பின் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார்கள், சந்திப்பார்கள். அவன் இவர்களுக்கு கார் அனுப்பி தன் தோட்ட வீட்டிற்கு வரவழைத்து கவனித்து அனுப்புவான்.
****************
தோட்ட வீட்டில்,
“நாங்க ஏதோ ஆசைப்பட்டோம்…. ஆனா அது எதுவும் நடக்காது போல்…. நீ விட்ரு ராஜா….” பேரனின் கன்னம் தடவி பேசினார் அம்சவல்லி.
“நான் மாமாவுக்கு உதவி பண்றேன்னு தானே பாட்டி சொல்றேன்…. அவருக்கு ஏன் என்னை பிடிக்கலை…. அப்படி என்ன வெறுப்பு என் மேல….?”
“சே….சே….அப்படி சொல்லாத ராஜா, உங்க அம்மா அவனுக்கு வெறும் தங்கச்சி இல்லை…. எல்லாமும் அவள் தான்…. அவ அப்படி எங்க கிட்ட கூட சொல்லாம வாழ்க்கையை முடிச்சுக்கிட்டது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி…. அவனுக்கு பித்து பிடிச்ச நிலை…. தான், தன் குடும்பம்னு இருந்துட்டோமோ…. அதனால தான் தங்கச்சி மனசு திறந்து தன் கிட்ட பேசலையோனு குற்றஉணர்வில் தவிச்சு போனான். அதில இருந்து நாங்க வெளில வரதுக்குள்ள உங்க பெரியம்மா உன்னை முழுசா அரவணைச்சுகிட்டா…. எங்களால் நெருங்க முடியலை…. போன வருஷம் வரை உன்னை பத்தி பெருமையா தான் பேசுவான்….இப்போ தான்….” என்று இழுத்தார் சொக்கலிங்கம்.
“இப்போ மட்டும் ஏன் தாத்தா….? அம்முவை கல்யாணம் பண்ணிக்க எனக்கு உரிமை இல்லையா….? தகுதி இல்லையா….?”
“எங்களை விடு, உங்க அப்பாவே இதுக்கு என்ன சொல்வார்னு எனக்கு யோசனையா இருக்கு….? என் பையனையே என்னால சமாதானம் செய்யமுடியலை…. உங்க அப்பா மறுத்தா…. அதனால் இதை விட்ருவோமே…. நாங்க உன் மனசில ஆசையை வளர்த்து இருந்தா எங்களை மன்னிச்சிரு ராஜா….”
“தாத்தா…. நீங்க யாரும் என் மனசில ஆசையை வளர்க்கலை, ஆனால் இப்போ இது எனக்கு பெரிய தகுதி பிரச்சனை, அம்முவை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்…. யார் எதிர்த்தாலும் நிச்சயம் எங்க கல்யாணம் நடக்கும்…. இனிமே நான் மாமாக்கு எந்த இடைஞ்சலும் செய்யமாட்டேன்…. இனிமே எங்க கல்யாணம் தான் எனக்கு முக்கியம், அதுக்கு உண்டான வேலையை நான் பார்க்கிறேன்.”
“ராஜா, இது தான் எல்லாத்தையும் விட கஷ்டம்…. அம்மு அவங்க அப்பா விருப்பத்தை மீறி நடக்க மாட்டாளே….”
“அது தான் எனக்கு நல்லா தெரியுமே பாட்டி, அதனால் தான் அதுக்குண்டான வேலையை பார்க்கிறேன்னு சொல்றேன்…. உங்க பேத்தியை என் வழிக்கு கொண்டு வர்றது தான் இனி என் முக்கியமான வேலை. அவளே என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா மாமாவால ஒன்னும் பண்ண முடியாதுல….” முகத்தில் அவன் மனதில் இருக்கும் திட்டத்தின் தீவிரம் தெரிந்தது.
இரு பெரியவர்களும் பெருமூச்சு விட்டனர். இந்த கல்யாணம் எந்த பிரச்சனையும் இன்றி நடக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்தனர்.
**************
அன்று ஒரு திருமண விழா, மணப்பெண் அம்ரிதாவின் தோழி. தோழிகள் அனைவரும் வருவார்கள் என்பதால் உற்சாகமாக கிளம்பினாள் திருமணத்திற்கு. ஆரஞ்சும் இல்லாமல் சிவப்பும் என்று சொல்ல முடியாத கலரில் மெல்லிய தங்க ஜரிகையுடன் பார்டர் என அந்த பட்டு புடவையில் கண்களை கவர்ந்தாள் அம்மு. சூரியன் மறையும் நேரம் ஆகாயம் எவ்வளவு அழகாக இருக்குமோ அப்படி அசரடித்தாள் அம்மு.
அதே திருமணத்திற்கு தொழில் தொடர்பு மூலம் கேபிக்கும் அழைப்பு வந்திருந்தது. அவனும் சற்குணமும் வந்திருந்தார்கள். மணப்பெண் அம்முவின் தோழி என்பது கேபி அறிவான். அதனால் அவனை வரவேற்று பேசியவர்களிடம் மரியாதை நிமித்தம் இரண்டு நிமிடம் பேசி விட்டு அவர்கள் அகன்றதும் இவன் பார்வையை சுழற்றினான்.
தோழிகளுடன் மண மேடையின் ஓரத்தில் நின்று கலகலத்து கொண்டு இருந்தவளிடம் ஓடி சென்றது மனம். செவ்வானமாக ஜொலித்து கொண்டு இருந்தவளின் கதிர் வீச்சில் கட்டுண்டு போனான் கேபி. அவளின் அழகும் சிரிப்பும் அவனை கொள்ளாமல் கொன்றது.
“மச்சான், ரொம்ப பார்க்காதே….உன்னை நிறைய பேர் கவனிப்பாங்க….” என்றான் சற்குணம் அவன் காதில் அவனை கவனித்தவனாக.
“அவகிட்ட பேசணும் டா…. அவளை வெளிய வரசொல்லு….” என்றபடி வேகமாக வெளியே கிளம்பி சென்றான் கேபி.
அவன் எழுந்து வெளியே சொல்வது அத்தனை நேரம் அவனை பாராமல் பார்த்த அம்முவிற்கு தெரிந்தது. ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஒரு கரும்பச்சை நிற சட்டையில் அவன் ஆகிருதிக்கு அம்சமாக இருந்தான் கேபி. அவன் இவளை பார்ப்பதை தோழிகள் கிண்டல் அடித்து கொண்டு இருந்தார்கள்.
“ஏண்டி, நாங்க இத்தனை பேர் இருக்கோம், அதெப்படி உங்க அத்தான் உன்னை மட்டும் பார்க்கிறார் கரெக்ட்டா….? அவ்ளோ வேவ்ஸ் உங்க ரெண்டு பேருக்கும்…ம்ம்…?” ஒரு தோழி கேட்க,
“நீ வேற, அவன் என்னடா சொல்லி என்னை மட்டம் தட்டுறதுனு இருப்பான்….குறை சொல்ல பாயிண்ட் தேடி இருப்பான்….” என்றாள். அவள் சொல்லி முடிக்கவும் சற்குணம் வந்து அவளை அழைக்கவும், அனைவரும், “போ…. போ….” என்று சிரித்தனர்.
“எதுக்கு இப்போ என்னை தனியா கூப்பிட்டே….?” அவனை நெருங்கும் முன்பே சத்தமாக பேசி கொண்டே வந்தவளிடம் “ஷ்ஷ்….” பேசாதே என்பது போல் சைகை செய்தான் கேபி.
அருகே வந்தவளிடம், “மணமேடையில் நிற்காம, போய் ஒழுங்கா ரூமில் உட்கார்….” என்றான்.
“எதுக்கு நான் என் பிரண்ட்ஸ் கூட பேசுறது உனக்கு பொறுக்காதே….முடியாது நீ என்ன சொல்றது எனக்கு….” சொல்லி விட்டு நடக்க போனவளின் கையை பிடித்து நிறுத்தினான் கேபி.
“ஹேய்….” வெறும் காத்து தான் வந்தது அம்முவுக்கு. அவர்களுக்குள் நடக்கும் முதல் தொடுகை…. அவனுக்குள்ளும் பல இனிய கலவரம்…. தன் பிடியில் இருந்த அவள் கையை பார்த்து கொண்டே,
“இந்த கல்யாணம் ஒழுங்கா நடக்கணுமா வேண்டாமா….?” என்றான் அவளை பார்வையால் தழுவியபடி,
என்ன பேச்சு இது….? கோபமாக கேட்க எண்ணினாலும் வார்த்தை எதுவும் வெளியே வராமல் குழப்பமாக அவள் அவனை நோக்க,
“வானத்தில் இருக்க தேவதை எதுவும் இறங்கி வந்துடுச்சோனு யாரும் குழம்பி இந்த அழகான பொண்ணை கல்யாண மேடையில் உட்கார வைச்சுட்டா…. என் கதி என்னவாகிறது? என் அம்முவை நான் தானே பத்திரமா பார்த்துக்கணும்….? ம்ம்….”
அவன் பேசுவதை விட, அவன் பார்வையும் தொடுகையும் அவளை ஏதேதோ செய்தது. முகம் சிவந்து, கொஞ்சமாக பதட்டத்துடன் அவனை ஏறிட்டாள் அம்மு.
“என்ன புதுசா இப்படியெல்லாம் என்னை வைச்சு காமெடி பண்றியா….?” கேட்பதற்குள் உணர்ச்சி வேகத்தில் கன்னமும் உதடும் துடித்து ஒரு பக்கமாக இழுப்பது போல் ஆகி விட்டது அவளுக்கு….
“ஏன் நீ அழகான பொண்ணு இல்லையா….?” அதிசயமாக கேட்பது போல் கேட்டான் கேபி.
“உனக்கு என்ன வேணும்….?” விட்டால் போதும் ஓடிவிடுவோம் என்றிருந்தது அவளுக்கு. அவர்கள் நிற்குமிடம் தனிமையாக இருப்பது வேறு அவளின் படப்படப்பை அதிகரிக்க செய்தது.
“தெரியாதா உனக்கு….?” அவள் கையை விட மனமில்லாமல் அவளை இன்னும் நெருக்கினான் கேபி.
அவன் நெருங்க, இவள் விலக எண்ண…. முடியவில்லை அவளால், அந்த கோபத்தில்,
தெரியுமே, இதுவரை வேற ஏதோ பிரச்சனை கொடுத்துட்டு இருந்தே எங்க வீட்டுக்கு, இப்போ என் பேரை கெடுக்க ஏதோ பிளான் பண்ற போல் என்றாள் பட்டென்று.
அதுவரை அங்கே அவன் மனதில் இருந்த இதம் மறைய, அவள் கையை வேகமாக விட்டவன், ஆமா உன் பேரை கெடுத்து உன்னை என்னை தவிர யாரும் கல்யாணம் பண்ணிக்க முடியாத மாதிரி பண்ண போறேன்…. என்றவன் அவள் சுதாரிக்கும் முன் அவளை கட்டி அணைத்து கன்னத்தில் அழுத்தமான முத்தம் வைத்து விலகி சென்றான்.