5. விஷ்வ மித்ரன்

4.6
(5)

💙 விஷ்வ மித்ரன் 💙

 

அத்தியாயம் 05

 

தனது துப்பட்டாவைப் பிடிக்கப் போன ரௌடி அலறலுடன் தூரச் சென்று விழவும் மிரண்ட விழிகளுடன் திரும்பினாள் வைஷ்ணவி. சர்ட் கைகளை மேலேற்றியவாறு கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய்த் தான் நின்றிருந்தான் ஒருவன். அவன் அருள் மித்ரன்!

 

சகா விழுந்ததைப் பார்த்து உள்ளுக்குள் பயந்தவாறு மற்றவன் நிற்க, விழுந்தவனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “டேய் யாருடா நீ? என்னைய எதுக்கு அடிச்ச?பெரிய ஹீரோனு நெனப்பா” என்று எகிற,

 

“ஏய்ய் அடங்குடா பொறுக்கி நாயே. அது என்னடா ஒருத்தர் இப்படி காப்பாற்ற வந்தா ஹீரோவானு கேக்குற? ஒரு பெண்ணுக்கு ரோட்டுல தனியா போக விடாம வம்பு பண்ணுற நீ ஹீரோனு நெனச்சிட்டு இருக்கியா? இந்த கை தானே அந்தப் பொண்ண தொட்டது?” என்று கேட்டவாறே அவன் கையைப் பிடித்து தன் முறுக்கேறிய கரத்தினால் முறுக்கினான்.

 

மற்றையவன் முறைத்துக் கொண்டு “என் சகலை மேலே கை வைக்கிறியா? உனக்கு விருப்பமுனா எங்க கூட வந்து இவள் கூட ஜாலியா இரு. அத விட்டுட்டு சும்மா சீன் போட வராத” மிரட்டவும் தான் செய்தான்.

 

அதில் பெரும் கோபமும் தான் பொங்கிட, கையைப் பொத்தி அவன் முகத்தில் குத்த மூக்கில் இருந்து குபு குபுவென இரத்தம் வழிய அவன் “அம்மாஆ” என வலியில் கத்திக் கொண்டு கீழே விழுந்தான்.

 

அவன் நெஞ்சில் காலை வைத்து அழுத்தியவனோ “உனக்கு வலிக்கும் போது அம்மானு கத்துறியே. அத சொல்லுற அருகதை கூட உன்ன மாதிரி மிருகங்களுக்கு கிடையாது. பொண்ணுங்கள கடவுளா பார்க்குற சமுதாயத்துல இப்படி கீழ்த்தரமா இருக்குறவங்க என்ன மனுஷங்க ச்சை..” என வெறி கொண்ட வேங்கையாய்த் தான் ஆனான் மித்ரனும்.

 

இருவரும் வலியில் முனகிக் கொண்டிருக்க பொலீஸிற்கு அழைத்தான்.

 

ரௌடி “ப்ளீஸ் சார்” எங்கள விட்டுடுங்க இனிமே இந்த தப்ப பண்ண மாட்டோம்” என்று கெஞ்சிட, “நோ வே உன்ன மாதிரி ஆட்களுக்கு எல்லாம் பட்டா தான் புத்தி வரும். கொஞ்சமாவது ஈவிரக்கம் உள்ளவனா இருந்திருந்தா விட்டிருக்கலாம். ஆனா இந்த பொண்ணு கண்ணீர் வழிய கெஞ்சியும் மனசு கரையலல? மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வாங்க” எனும் போதே பொலீஸ் வந்து விட அவர்களை ஒப்படைத்தான்.

 

இன்று அவனது அம்மா அன்னபூரணியின் பிறந்த தினம்! அதனால் அவர் நினைவுகள் மனதை வாட்ட, கடல் அன்னையின் மடியில் சாய்ந்திருந்த மித்ரன் வீடு திரும்பும் போதே ஒரு பெண்ணிடம் இரு ஆண்கள் குடிபோதையில் வம்பு பண்ணுவதைக் கண்டு ஓடி வந்தான்.

 

வைஷ்ணவி ஓர் நொடி அவனைப் பிரம்மிப்புடன் கண் சிமிட்டாமல் பார்த்தாள். இந்த காமுகர்களுக்கு மத்தியில் பெண்மையை மதிக்கக் கூடிய ஒரு ஆடவனா என்று..?

 

அவன் திரும்பி அவளருகில் செல்ல நடுங்கும் கரத்தால் பையைப் பற்றியபடி இருந்தாள் அவள்.

 

அவளிடம் ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. ஒரு வித பாசமும் அவள் அப்பாவையின் பால் ஊற்றெடுக்க “தங்கச்சி” என மெதுவாக அழைத்தான் அவன்.

 

அவ்வழைப்பு அவள் உயிர் வரை ஊடுறுவித் தாக்கியது. அவளை இது வரை யாரும் இவ்வளவு அன்பாக அழைத்ததில்லை. அவளறியாமல் ஆனந்தமாய் கண்களில் கண்ணீர் தழம்பியது.

 

“ம்ம் சொல்லுங்க” வார்த்தைகள் திக்கலாக வெளி வந்தன.

 

ஏனோ அவளை தனியாக விட்டுச் செல்ல முடியாது மனம் தடுத்திட, “இந்த இருட்டுல எங்க போற? அதுவும் தன்னந்தனியா” அவள் முகத்தைக் கேள்வியுடன் நோக்க,

 

“போக இடமில்லாம போறேன். அநாதைனா தனியா தானே போகனும்” என்றாள் வருத்தமாக.

 

அக்குரலில் தெரிந்த வலி அவனைச் சுட்டது. அவள் சொன்ன அநாதை என்னும் சொல்லில் தானும் துடித்துத் தான் போனான் அவன்.

 

“என்னமா அநாதை அது இதுன்னு சொல்லுறே? நான் ஒன்னு கேக்குறேன் தப்பா எடுத்துக்காத” என்று இழுத்தவன் “நீ என் கூட என் வீட்டுக்கு வரியா” பட்டெனக் கேட்டான்.

 

அவளோ கண்களை அகல விரித்தவள் பின் “வேணாம் இது என் தலை விதி. எனக்காக நீங்க எந்த கஷ்டமும் படத் தேவையில்லை” முடிவாகச் சொன்னாள் அவள்.

 

ஆவலுடன் இருந்தவனின் முகம் வாடிய மலராய்க் கூம்பி விட தன்னை மீட்டுக் கொண்டவன் பேசத் துவங்கினான்.

 

“உன் நிலமைய பார்த்து வந்த பரிதாபத்துல இப்படி கூப்பிடுறன்னு தானே நீ நினைக்கிற. இல்லவே இல்லை. எனக்கு உன்ன முதல் பார்வையிலயே பிடிச்சு போச்சு. கூடப் பிறந்தவங்க யாருமே இல்லை. என் தங்கச்சியா வீட்டுக்கு வருவியா?” பாசத்துடன் அவளிடம் வேண்டி நின்றான் காளை.

 

பார்க்கும் போது வசதியுள்ளவன் போல் இருந்து தன்னைப் போன்ற அநாதையிடம் ஒரு பாசமிகு உறவை வேண்டி யாசகனாய் நிற்கும் அவனின் அன்பினில் தோற்றுத் தான் போகலானாள் வைஷுவும்.

 

“அம்மா சின்ன வயசுலயே என்ன விட்டு போயிட்டாங்க. உன்ன பார்த்த உடனே எனக்கு அவங்க முகம் தான் ஞாபகம் வந்துச்சு. ஒரு அம்மாவாகவாது எனக்கு வர மாட்டியா டா?” மீண்டும் கேட்டாலும் அவள் மௌனத்தையே பதிலாகக் கொடுத்தாள்.

 

“சரி விடு! உனக்கு பிடிக்கலனா கம்பிள் பண்ணல. பத்துரமா இரும்மா” மனமே இல்லாமல் அவளை ஒரு முறை பார்த்து விட்டு நடந்தான் மித்ரன்.

 

“அண்ணா” எனும் குரல் பின்னிருந்து கேட்க அதிர்ச்சியுடன் அவன் திரும்ப, சிறு சிரிப்புடன் கண்கலங்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

 

“என்னயா கூப்பிட்ட? என்னனு சொன்னே? டெல் இட் ஒன்ஸ் அகைன்” தன் காதுகளையே நம்ப முடியாது தடுமாற, உதட்டைக் கடித்து விடுவித்தவளோ “அ…அண்ணா” இமைகள் படபடக்க கூப்பிட ஆனந்த மிகுதியில் தலை கோதினான் மித்ரன்.

 

அவளோ ஏக்கமாக அவனைப் பார்க்க, ஆணவன் கைகளை விரிக்க ஓடி வந்து தந்தையிடம் தஞ்சம் கொள்ளும் மழலையாக அவனைக் கட்டிக் கொண்டாள் வைஷு.

 

எவ்வித எதிர்பார்ப்புக்களும் அற்றதாய் அன்பெனும் விலை மதிக்க முடியாத முத்துக்களால் மட்டுமே கட்டப்பட்டது, அண்ணன் தங்கை எனும் அழகிய உறவொன்று!

 

“நீ நிஜமாவே என்னை உன் அண்ணனா ஏத்துக்கிட்டியா? என்னால நம்பவே முடியல்ல. அவ்ளோ ஹேப்பியா இருக்கு” உணர்வு மிகுதியில் தத்தளித்த மித்துவை ஏறிட்ட வைஷு “எனக்கும் தான்ணா. உன்ன மாதிரி ஒரு அண்ணன் எனக்கு கிடைப்பார்னு நான் நினைக்கவே இல்ல. ஆமா உன் பெயர் என்ன?” என்று கேட்டாள்.

 

“அருள் மித்ரன்” என்று பதிலளித்து விட்டு வேறு ஏதோ கேட்கப் போக அவளோ கை நீட்டி அவனைப் பேச விடாது தடுத்தாள்.

 

“என்னோட நேம தானே கேக்க போறீங்க? எதுக்கு வீணா உங்கள பேச வெச்சி எனர்ஜிய வேஸ்ட் பண்ணனும்? சோ நானே சொல்லிடலாம்னு நெனச்சேன். அன்ட் சூப்பர் நேம்ணா மித்ரன்” என்று கூறியவளைப் பொய்யான முறைப்புடன் பார்த்து விட்டு “ஹாஹ் ரொம்பத் தான் அக்கறை என் மேல” என்றான் மித்து.

 

“அக்கறையும் இல்ல சக்கரையும் இல்லை” உதட்டைச் சுழித்துக் கொண்டு “ஐய்ம் வைஷ்ணவி” என்று அறிமுகம் செய்தாள் தன்னை.

 

அவளின் குறும்பில் இதழில் பூத்த நகையுடன் “வாயாடியா இருப்ப போலயே. சரி வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றவன் காரில் ஏற வைஷுவும் அமர்ந்து கொள்ள காரை உயிர்ப்பித்துச் சென்றான் மித்ரன்.

 

…………..

கைப்பையை தோளில் போட்டுக் கொண்டு சுடியை சரி செய்து துப்பட்டாவை போட்டு விட்டு வந்தாள் பூர்ணி.

 

டைனிங் டேபிளில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹரிஷ் “எங்க கிளம்பிட்ட மா?” என்று வினவ, “கோயிலுக்கு போயிட்டு வரேன். அப்படியே அம்மா வீட்டுக்கும் போயிட்டு வரேன்” எனக் கூறி விட்டு ஸ்கூட்டியில் ஏறிச் சென்றாள்.

 

சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்த குளக்கட்டில் அமர்ந்து எங்கோ பார்த்துக் கொண்டிருந்து ஏதோ உந்துதலில் நிமிர்ந்தவள் எதிரில் நின்ற நபரைக் கண்டு “ரோஹன்” என உச்சரித்தாள், அதிர்ச்சியுடன்.

 

அவள் வாயசைவை வைத்தே தனது பெயரைச் சொல்வதை உணர்ந்து விசிலடித்தவாறு அவளிடம் வந்தான் ரோஹன்.

 

மாநிறம், ஆறடி உயரத்தில் அனைவரையும் ஈர்த்து விடும் அழகுடன் தான் இருந்தான் அவன்.

 

“ஹேய் செல்லம்” என்று அழைக்க, முகம் திருப்பி அங்குமிங்கும் விழிகளைச் சுழற்றியவள் “ஹலோ மிஸ்டர் செல்லம்னு யாரும் இங்க இல்லை. சோ வந்த வழில போகலாம்” என்று சொல்ல,

 

“அத என் முகத்த பார்த்து சொன்னா போயிடுவேன். ஹோ என்ன பார்த்தா ப்ளாட் ஆயிடுவன்னு பயந்துட்டியா?” வரிசைப் பற்கள் தெரிய அவன் குறுநகை பூக்க, “அட காமெடி பண்ணாம போ. உன்ன பார்த்து நான் ப்ளாட் ஆகுறதுக்கு நீ என்ன மன்மதக் குஞ்சா?” முறைப்புடன் பேசினாள் பூர்ணி.

 

அவளருகில் அமர்ந்து கொண்டவன் “பூ” என்று காதருகே கிசு கிசுக்க, “ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு? தனியா இருக்குற பொண்ணு கிட்ட இப்படி தான் பிஹேவ் பண்ணுவியா. எந்த உரிமைல என் பக்கத்துல வந்து உட்கார்ந்த?” கோபமாய்க் கேட்டாள் அவள்.

 

“இதோ இது தந்த உரிமைல தான்” தானும் கோபத்தில் பொங்கியவாறு அவள் கழுத்தில் தொங்கிய தாலியைக் காட்டியவன், “மிஸஸ் ரோஹன்! நான் தான்டி உன்னை தொட்டுத் தாலி கட்டின புருஷன்” என்றான் அவன்.

 

அதில் ஏதோ ஹாஸ்யத்தைக் கேட்டது போல் கை கொட்டி சிரித்த பூர்ணி “ஹா ஹா… என்ன சொன்னீங்க மிஸ்டர் ரோஹன்? புருஷனா? எல்லாரும் என்னை சந்தேகப்பட்டு மித்து கூட சேர்த்து வெச்சு தப்பா பேசினப்போ கை கட்டி வேடிக்கை பார்த்துட்டு நின்ன நீ புருஷனா? நீ தாலி கட்டின உன் பொண்டாட்டி மேல உனக்கு நம்பிக்கை இல்லையானு கேட்டு நான் கதறும் போது யாருக்கு வந்த விருந்தோங்குற மாதிரி வாய திறக்காமலே இருந்த நீ புருஷனா டா?” அவன் சேர்ட் காலரைப் பற்றி இழுத்தபடி கேட்டாள் பெண்ணவள்.

 

“பூ… பூ” என்று ரோஹன் பேச முற்படும் போது இடைவெட்டியவள், “டோன்ட் கால் மீ லைக் தட். ஐய்ம் மிஸ் பூர்ணி செல்வதுரை. அப்புறம் ஏன்டி இந்த தாலிய கழற்றி வீசாம இருக்கனு கேக்குறியா? எல்லாம் மித்து என் கிட்ட வாங்கின சத்தியத்துக்காக தான். அவன் மனச நோகடிக்கக் கூடாதுன்ற ஒரே காரணத்திற்காக மட்டும் இதை சுமந்துட்டு இருக்கேன். அத சாக்கா வச்சி தொட்டு தாலி கட்டினேன் தொடாம சாரி கட்டினேன்னு டாச்சர் பண்ணாத” கோபம் அழுகையாய் வெடித்தது.

 

அவள் பேசிய வார்த்தைகளில் உடைந்து போனவனுக்கு அவள் அன்று அனுபவித்த வலி புரிபடுவதாய்! அன்று தனது மௌனம் தன்னவளை எவ்வளவு வருத்தி இருக்கிறது என்று உணர்ந்து நொந்து போனான் ரோஹன்.

 

“தப்பு தான் நான் உன்னை சந்தேகப்பட்டது ரொம்பப் பெரிய தப்பு. உனக்கு என் மேல இருக்குற கோபம் நியாயமானது பூ” என்று வருந்த, “முடிஞ்சு போனத பத்தி பேச நான் விரும்பல. தயவு செஞ்சு கிளம்பு” போ என்பது போல் கை காட்டினாள் பூர்ணி.

 

“போறேன். கண்டிப்பா உன் ரோஹியா நான் வருவேன். அப்போ நான் உன்ன நம்பல. இப்போ உனக்கு என் மேல நம்பிக்கை வரும் வரை காத்துட்டு இருப்பேன். பை” கழுத்தை நீவி விட்டுக் கொண்டு சென்றான்.

 

போகும் அவனை மங்கலான விழித்திரைக்குள்ளால் பார்த்து மருகினாள் ரோஹியின் பூ!

 

……………

கார் வீட்டின் முன் நிற்கவும் மித்து இறங்கி வந்து வைஷுவின் புறம் வந்து கதவைத் திறந்து விட, இறங்கியவளோ வீட்டின் பிரம்மாண்டத்தைக் கண்டு விழி விரித்து நின்றாள்.

 

கூடவே சிறு பயமும் அவளுள் வியாபிக்கத் தொடங்க, அவளது கையைப் பிடித்து அழுத்தி உள்ளே அழைத்துச் சென்றான் மித்ரன்.

 

பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஹரிஷ் “டாடி” எனும் மித்துவின் அழைப்பில் தலை தூக்கிப் பார்த்தார்.

 

அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைக் கண்ணுற்று “என்ன மை சன் உன் முகத்துல ஒளி வட்டம் தோனுது?” என்று தான் கேட்கலானார்.

 

அதில் சிரித்துக் கொண்டு “யாஹ் டாடி. நான் இன்னிக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். யேன்னா நம்ம வீட்டுக்கு புது ஒருத்தர கூட்டி வந்திருக்கேன்” என்று சொல்ல அவனைப் புருவ முடிச்சுடன் ஏறிட்டார் தந்தை.

 

“வைஷு! வா” என்க தயங்கித் தயங்கி வந்த வைஷுவின் புறம் கை காட்டி “இவ என தங்கச்சி வைஷ்ணவி” அறிமுகம் செய்ய அவளையே சிறிது நேரம் பார்த்தவர் தளரந்து போய் சோபாவில் தொப்பென அமர்ந்தார்.

 

“டாடீஈஈ” மித்து பதற்றமாக கத்த, வைஷுவோ தன்னையறியாமலே “அப்பா” என அழுது கொண்டே சென்று அவர் காலடியில் அமர்ந்து கொண்டாள்.

 

அவளது அப்பா எனும் அழைப்பு அவர் இதயத்தில் சாரலாய்த் தீண்டிட கண்கலங்க அவள் தலை வருடலானார் ஹரிஷ்.

 

“இங்க என்ன நடக்குதுப்பா? உங்களுக்கு வைஷுவ ஆல்ரெடி தெரியுமா” புரியாமல் மித்ரன் கேட்க அவரோ இல்லை என்பதாய் தலையசைத்தார்.

 

மித்ரன் “அப்போ…?” என இழுக்க, “நீ பிறந்தப்போ உன்ன கையில வச்சிட்டு நம்ம பையனுக்கு தங்கச்சி பாப்பா பிறந்தா வைஷ்ணவினு பெயர் வைக்கனும்னு உங்கம்மா ஆசையா சொன்னா. ஆனா அது தான் முடியாம போச்சே. வைஷு அப்பானு சொன்னதும் என்னையறிமாலே கலங்கி போய்ட்டேன். உன் அம்மா கனவுல மகளா நெனச்சி சொன்ன என் பொண்ணா வைஷு வந்திருக்கா. இனிமேல் எனக்கு ரெண்டு பிள்ளைங்க. நீ தான் இந்த வீட்டோட இளவரசி” என்று சொன்னவர் முகத்தில் அத்தனை மகிழ்வு.

 

“அப்படியா டாடி எல்லாமே மேஜிக் மாதிரி இருக்கு. அம்மா சொன்ன அதே வைஷுங்குற பெயர் இவளுக்கும் இருக்கு. அதுவும் அம்மாவோட பிறந்த நாள் அன்னிக்கே நம்ம வீட்டுக்கு வந்திருக்கா” என்று மித்து சொல்ல, இன்று தானே தனக்கும் பிறந்த நாள் என்று வைஷு நினைத்தாலும் அதைச் சொல்லாமல் அமைதியாய் நின்றாள்.

 

“பாப்பா! டாடி இப்படி தான். அவரோட சென்டிமன்ட் மழைல நனைஞ்சு காய்ச்சல் வந்துடும் பார்த்துக்க” என்று நக்கலடிக்க, “அதெல்லாம் வராது. உன்னோட மொக்க ஜோக்ல வாந்தி வராம இருந்தா சரி” பதிலுக்கு வாரினாள் அவள்.

 

அதைக் கேட்டு மித்துவைப் பார்த்து கொலரைத் தூக்கி விட்ட ஹரிஷ் வைஷுவை ஒரு கையால் அணைத்துக் கொள்ள “டாடி நான்” குழந்தை போல் உதடு பிதுக்கிய மித்ரனை மறு கையால் அணைத்தார் அவர்.

 

…………..

மனதெங்கும் பெரும் வேதனை பெருக, அவனின் நினைவுகள் மீண்டும் தாக்க கடலை வெறித்துக் கொண்டு மணலில் கால்களைக் கட்டி அமர்ந்திருந்தாள் அக்ஷரா.

 

அழுதழுது வீங்கிப் போன முகம், கண்களில் தூங்காமல் இருந்ததைக் காட்டும் கருவளையம் என்று சோகமே உருவாய்த் தான் இருந்தாள் பசலை நோயால் பீடிக்கப்பட்ட அம்மங்கையும்.

 

அவளது ஒவ்வொரு அணுவுமே அருள் அருள் என்று துடிக்க, மனமோ அவன் உன்னவன் இல்லை என இடித்துரைக்க, அதை ஏற்க முடியாதவளின் விழிகளோ உவர் நீரைச் சுரக்க மழுக்கென கன்னம் தொட்டது நீர்.

 

“அருள்! யேன்டா இப்படி பண்ணின? உன் கிட்ட இப்படி கேட்க முடியாது தான். ஏன்னா உனக்கு நான் லவ் பண்ணுறது தெரியாதுல்ல. உனக்கு என்னைப் பிடிக்கும். எனக்கு கிடைச்சிருவன்னு நெனச்சேன். ஆனா என் நம்பிக்கை உடைஞ்சு போச்சு. உன்ன எந்தளவுக்கு காதலிச்சேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். நீ இன்னொரு பொண்ணு கூட இருக்குறத பார்க்குற சக்தி எனக்கில்லை.

 

செத்துப் போயிட்டேன் டா. இனியும் அத தினம் தினம் பார்த்து மரண வலியே அனுபவிக்க என்னால முடியாது. இப்படி அழுது அழுது வலியோட வாழவும் முடியாது” அழுது கதறினாள் அக்ஷரா.

 

பின் ஏதோ தோன்ற எழுந்தவள் “என்னால அருள் இல்லாம வாழுறத கனவுல கூட நெனச்சி பார்க்க முடியாது. அவன் எனக்கு கிடைக்க மாட்டான்னும் தெரிந்து போச்சு. இந்த ஜென்மத்துல அவன தவிர வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கவும் முடியாது. யாருக்கும் கஷ்டத்த கொடுக்காம செத்தே போயிடுறேன். சாரி விஷு! சாரிம்மா சாரிப்பா” என்றவள் கடலை நோக்கி வேகமாக சென்றாள்.

 

மித்ரனை உயிருக்கு உயிராக நேசித்தவள் அவனுக்காக உயிர் துறக்கவும் சித்தமாகி, “கடைசியா சொல்லுறேன் டா! ஐ லவ் யூ அருள்” என முணுமுணுத்து விட்டு அலைகளைத் தாண்டியும் ஓடப் போனவளின் கையைப் பிடித்திழுத்து, அவள் கன்னம் பதம் பார்த்தது ஒரு கரம்…..!!

 

அது யாராக இருக்கும்…..? மித்ரனா….?

 

நட்பு தொடரும்………!!

 

✒️ Shamla Fazly💞

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!