💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 50
இரவு பத்து மணியிருக்கும். அவ்வறையில் நிசப்தம் நிலவியது. மேசையில் இருந்த புத்தகத்தை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தான் எழிலழகன்.
அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்திதா. அவளைப் பார்த்தவனோ புத்தகத்தை மூடி வைத்து விட்டு வந்தான்.
டிசர்ட்டுக்கு மாறியவன் அவளருகில் வந்து அமர்ந்து கொள்ள, அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஓய் இங்கே வா” கை நீட்டி அவன் அழைக்க, தாயப்பசுவைக் கண்ட கன்றுக்குட்டி போல் அவனிடம் வந்தாள்.
“நான் கூப்பிடலனா வர மாட்டியா நீ?” எனக் கேட்டவாறு அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்தினான்.
“நீங்க கூப்பிடுவீங்க தானே?” அவனது முகத்தை அண்ணாந்து பார்க்க, “அப்போ, நான் படிச்சிட்டு வரும் வரை நீ கூப்பிடவே மாட்டியா? நான் வர எவ்ளோ நேரமாகுதோ அவ்ளோ நேரம் வரை வெயிட் பண்ணுற ஐடியா அம்மணிக்கு” என்றான் எழில்.
“நாளைக்கு முக்கியமான செமினார் இருக்குனு சொன்னீங்க. நல்லா படிச்சா தானே அதை ஒழுங்கா பண்ண முடியும். அதனால நீங்க வரும் வரை கூப்பிடாம இருந்தேன். அதான் வந்துட்டீங்கள்ல?” என்று கேட்டவளின் அலட்டல் இல்லாத அன்பு அவனை இன்னும் கவர்ந்தது.
“நந்தும்மா! நீ ஏன் இவ்ளோ விட்டுக் கொடுத்து போற? நீ பண்ணுறது எனக்கு புரியுது. எனக்கு எந்த வகையிலும் தொந்தரவு இல்லாம இருக்கனும்னு நீ விரும்புற. அது சரி தான்.
ஆனால் எப்போவுமே இப்படி இருக்காத. வழக்கத்தை விட சில நேரம் இப்போ என் கூட பேசியே ஆகனும்னு உனக்கு தோணும்ல. என்னை உன் மனசு அதிகமா தேடுற நேரங்கள்ல இப்படி பார்த்துட்டு இருக்காத. வாங்க உங்க கூட இருக்கனும் போல இருக்குனு சொல்லு.
உன் தேவையை நீ தான் கேட்கனும். நானா உணர்ந்து செய்யனும், அது வேற. அப்படி நான் பண்ண தவறிட்டேன்னா உனக்கானத நீ வாய் விட்டுக் கேட்க எல்லா உரிமையும் உனக்கு இருக்கு. அதை நிறைவேத்தி வெக்கிறது புருஷனா என்னோட கடமை” நெற்றி தொட்ட முடிகளை விரலால் ஒதுக்கிக் கொண்டே புரிய வைத்தான் எழிலழகன்.
“நீங்க நிறைய சொல்லுறீங்க. நான் பேசிட்டே இருந்தா தான் உங்களுக்கு பிடிக்குமா? இப்படி இருந்தா சரியில்லையா?” என்று கேட்டவளை சிறு கண்டிப்புடன் நோக்கியது அவனது பார்வை.
“என்ன பேசுற நந்து? நீ இப்படி இருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு. எப்படி இருந்தாலுமே எனக்கு பிடிக்கும். உன்னைக் காதலிக்கிறப்போ நீ இதே இயல்போட தான் இருந்த.
இந்த இயல்பு, குணம், அன்பு, அமைதி எல்லாத்தையும் சேர்த்து தான் நந்திதா என்கிற உன்னைக் காதலிச்சேன். உன்னோட இயல்பு அது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நந்து. உனக்கு ஏதாச்சும் வேணும்னா என் கிட்ட தாராளமா கேளு என்பதை சொன்னேனே தவிர, அது உன் கிட்ட இல்லனு குத்திக் காட்டவோ எனக்கு பிடிக்கலைங்கிறத எடுத்துக் காட்டவோ சொல்லல”
“ஐ லவ் யூ எழில்” அவனது கன்னத்தில் கை வைத்துச் சொல்ல, “லவ் யூ டூ பொண்டாட்டி” அவள் நெற்றி முட்டினான்.
அவளை அமர வைத்தவனோ மடியில் சாய்ந்து கொள்ள, அவனது தலையை அன்புடன் வருடிக் கொடுத்தாள் நந்திதா.
“உனக்கு என்ன பிடிக்கும் நந்து?” அவளது மற்றைய கையைப் பிடித்துக் கொண்டு கேட்க, “என் குடும்பத்தை ரொம்ப பிடிக்கும்” அவள் முகத்தில் ஒளி வட்டம்.
“அது தெரியாதா? உனக்கு உன் குடும்பத்தை, குறிப்பா உன் தங்கச்சிங்களை பிடிக்கும்னு தெரியும். அது இல்லாம வேற ஏதாச்சும் கேட்டேன்” அவள் முகம் பார்த்தான் கணவன்.
“அப்படினு சொல்லத் தெரியலங்க. இது தான் பிடிக்கும்னு சொல்ல முடியல. என் பர்த்டேக்கு ஜானு, மகி சேர்ந்து ஒவ்வொன்று கொடுப்பாங்க. அதெல்லாமே எனக்கு பிடிக்கும். அன்பா அவங்க கொடுக்கிற சின்ன சாக்லேட் கூட எனக்கு பெரிய பொக்கிஷம் மாதிரி” என்றவளுக்கு தன் சகோதரிகளின் நினைவு.
“நான் உனக்கு ஒன்னு தர்றேன் பிடிக்குதானு சொல்” என்றவனோ அவளது வலது காலைப் பிடித்து முத்தமிட்டான்.
“ஏங்க கால்” அவள் பதற, “கால் தான். நான் கையின்னா சொன்னேன்? நீ என் பொண்டாட்டி, உன் காலை நான் தாராளமா பிடிக்கலாம்” என்றவனோ அடுத்து செய்த செயலில் அவளது கண்கள் அகல விரிந்தன.
பக்கத்து டீப்பாயில் மீதிருந்த பெட்டியினுள் இருந்து மெட்டியை எடுத்து அவளது கால் விரலில் அணிவிக்க, மகிழ்வில் பூரித்துப் போனாள் மனைவி.
“பிடிச்சிருக்கா நந்து?” அவன் ஆவலுடன் முகம் பார்க்க, “ரொம்ம்ம்ம்ப. ரொம்ப பிடிச்சிருக்கு எழில். அவ்ளோ அழகா இருக்கு. அதிலும் மெட்டி போட்டது மனசுக்கு சந்தோஷமா இருக்கு” அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள் அவள்.
அவனுக்கு மனம் மகிழ்ந்தது. அவளது இந்த சந்தோஷத்திற்காகத் தானே வாங்கி வந்தான்? அதைக் கண்கூடாக கண்டு கொண்டவனுக்கு மனதில் ஏக திருப்தி.
“நீ எப்போவும் சந்தோஷமா இருக்கனும் நந்தும்மா. நான் உன்னை இப்படியே வெச்சு பார்த்துக்கனும். என்னை நம்பி வந்த உனக்கு என்னால தரக் கூடியது அது ஒன்னு தான்” அவனது கரம் அவள் தலையை வருடிக் கொடுக்க,
“உங்களை மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கனும்” என்றவாறு அவனைக் காதல் வழிய நோக்கினாள் நங்கை.
…………………
“ரூபி நகரு ரூபி. நான் பாட்டி கிட்ட இருக்கனும்” யுகனின் சத்தத்தில் அனைவரும் ஹாலில் ஆஜராகினர்.
“முடியாது போடா. உனக்கு இருக்கிற பொறாமைக்கு என்னை வெச்சு செய்யாத” என்றவாறு மேகலையின் மடியில் சாய்ந்து கொண்டிருந்தான் ரூபன்.
“என்ன சத்தம் இங்கே? என்னாச்சு யுகி?” சத்யா புருவம் சுருக்கி வினவ, “என்னை பாட்டி கிட்ட விடாம ரூபி மட்டும் அவங்க மடியில் சாஞ்சுட்டு இருக்கார் டாடி” குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தான் சத்யாவின் அருமை மைந்தன்.
“அண்ணா! இவன் சொல்வதைக் கேட்காதீங்க. நான் போகப் போறேன்ல. கொஞ்ச நேரம் அம்மா மடியில் சாயலாம்னு வந்தா இவனுக்கு மூக்கு வேர்த்துடுச்சு” பாவமாகச் சொன்னான் ரூபன்.
“எங்க போறீங்க ரூபி?” எனும் மெல்லிய குரலில் ரூபன் சட்டெனத் திரும்ப, யுகனோ அடக்க முடியாமல் சிரித்து விட்டான்.
அகிலன் தான் கேட்டிருந்தான். இப்போது அவர்களுடன் சற்றே சுமுகமாகப் பழக ஆரம்பித்திருந்தான். அவர்கள் அனைவரும் அவனோடு இயல்பாகப் பழகியது அவனது தயக்கத்தைத் துடைத்தெறிந்திருந்தது.
சத்யா மற்றும் யுகியைத் தவிர அவன் மற்றவர்களுடன் ஓரளவு ஒட்டிக் கொண்டான். ஜனனியோடு முற்றாக இணைந்து விட்டான்.
யுகியின் கோபம் அவனைத் தள்ளி நிறுத்தி இருந்தது. சத்யாவை அவன் அந்நியப் பார்வை பார்க்க, அது அவனை தூர நிறுத்தியது.
“டேய் சின்னவனே! என்ன சிரிப்பு?” ரூபன் செல்லக் கோபத்தோடு கேட்க, “அது வந்து.. உன்னோட நிக் நேம் இவ்ளோ ஃபேமஸாகி பரவுதேனு சிரிச்சேன்” என்றவனுக்கு அப்போதே, அகி சொன்னதைக் கேட்டு சிரித்தது பொறி தட்ட சிரிப்பை உள்ளிழுத்துக் கொண்டான்.
“அதை வெச்சது நீயாச்சே. பரவாம இருக்குமா?” அவனது கன்னத்தைக் கடித்து வைக்க, “பசிக்குதுனா ஆப்பிள் எடுத்துக் கடி. என் கன்னத்தை டேமேஜ் பண்ணாத” கன்னத்தைத் தடவிக் கொண்டவனின் குறும்பில் அனைவரது இதழிலும் புன்னகை நெளிந்தது.
அகியிடம் சென்று அவனைத் தூக்கிக் கொண்ட ரூபன், “நான் ஜானுவோட ஊருக்கு போகப் போறேன். கொஞ்ச நாள் அங்கே ஹாஸ்பிடல்ல வர்க் இருக்கு. நான் போயிட்டு வர்றேன் செல்லம்” அவனது கன்னத்தை வருட,
“சரி. நான் உங்களை ரூபி சொன்னா பரவாயில்லையா? அப்படி சொல்ல நல்லா இருக்கு சித்தப்பா” அவன் முகம் சுருக்கிக் கேட்க,
“உனக்கு எப்படி பிடிச்சிருக்கோ அப்படியே கூப்பிடு அகி. இந்த யுகி பேபி கூட சும்மா ஃபைட் பண்ணுறேன். அதைப் பார்த்து பயப்படாத” என்றவன் அவனது காதருகே நெருங்கி, “ரூபி சொல்லுறது செமயா இருக்கு தெரியுமா? அவனோட ஜாலி பண்ணுறதுக்காக பிடிக்காத மாதிரி நடிக்கிறேன்” என்று ரகசியக் குரலில் சொல்ல,
“ஹா ஹா” கிளுக்கிச் சிரித்தான் அகிலன்.
“என்ன? என்ன சொன்னீங்க?” யுகன் வரிந்து கட்டிக் கொண்டு வர, “அகி கிட்ட கேளு” என்றதும் கப்சிப்பாகி சத்யாவிடம் போய் அமர்ந்து கொண்டான்.
“ரூபன்! இதை அம்மா கிட்ட கொடுத்துடுங்க” என்றவாறு ஒரு பையைக் கொண்டு வந்து கொடுத்தாள் ஜனனி.
“என்னண்ணி நீங்களுமா? அம்மா ஏற்கனவே ஒரு பேக் கொடுத்தாச்சு. தாங்க தாங்க” என்றவாறு அதனையும் வாங்கிக் கொண்டான் ரூபன்.
“மகி சித்திக்கு ஒன்னும் இல்லையா?” யுகன் கேட்க, “அது தேவையில்ல. ரூபி வகை தொகையா வாங்கிக் கொடுத்துப்பான்” என்று சொன்ன தேவனைக் கடுமையாக முறைத்தான் ரூபன்.
“ஆமாம்மா! அவன் ஃப்ரெண்டுக்கு வாங்கி கொடுப்பான் தானே?” என்று மேகலை சொல்ல, “ஓஓ! மகி கூட இவன் பேசுறது உங்களுக்கெல்லாம் தெரியுமா?” என்று தேவன் கேட்க,
“எல்லாருக்கும் தான் தெரியும். உன்னை மாதிரி மறைச்சிட்டு இருப்பேன்னு நெனச்சியா?” என்று கேட்ட ரூபனின் வாயைக் கையால் மூடினான் தேவன்.
“என்ன? என்ன மறைக்கிறாரு தேவன்?” ஜனனி கேட்க, “வினியை மறுபடி மீட் பண்ணுனதை மறச்சிட்டான்” என்க,
“என் கிட்ட சொன்னான்” என்று மேகலை சொன்னதும், சத்யாவின் பார்வை தேவனைத் துளைத்தது.
‘என்னிடம் மறைத்து விட்டாயே’ எனும் உணர்வை அது தாங்கி நிற்க, அப்பார்வை வீச்சு தாங்காமல் வேறு புறம் பார்வையை வீசினான் தம்பி.
“ரூபி! வரும் போது எனக்கு ஏதாச்சும் வாங்கிட்டு வருவீங்கள்ல?” யுகன் ஆசையோடு கேட்க, “சூர் டா. உனக்கு அகி பாப்பாவுக்கு அப்பறம் ஜனனி பாப்பாவுக்கு கூட கொண்டு வருவேன். அவங்களுக்கு அவங்க ஊரு மிட்டாய் வேணுமாமே” ரூபன் சட்டென சொல்லி விட,
“ரகசியம் காக்க தெரியாம இருக்கியே ரூபி. இப்படி பட்டுனு சொல்லிட்ட” அசடு வழிய சிரித்தவளை சத்யா சிரிப்புடன் பார்த்தான்.
“சோ சாரி அண்ணி! ஒரு ப்லோல சொல்லிப்புட்டேன்” காதைப் பிடித்துக் கொள்ள, “விடுங்க விடுங்க. இதெல்லாம் பெரிய மேட்டரா?” என்று கேட்டாள்.
“அப்போ நான் கிளம்புறேன்” மேகலையை அணைத்து விடுவிக்க, “மை லவ்! மிஸ் யூ சோ மச் மா” என்றவனை உச்சி முகர்ந்தார் தாய்.
அகி, யுகி இருவருக்கும் முத்தமிட, யுகி அவனது கன்னத்தில் கடித்து வைத்தான்.
ஜனனியிடமும் சொல்லியவனை, சத்யாவும் “டேக் கேர் டா” என்று தோளோடு சேர்த்து அணைத்து விடுவித்தான்.
தேவனிடம் வர “என்னமோ வெளிநாடு போற மாதிரி பில்டப் கொடுக்கிற. நான் ஹக் பண்ண மாட்டேன். போடா” என்று விட்டான்.
“உன் கண்ணு கலங்குறதை நான் பார்த்தேனே. நான் இல்லாம தனியா ரூம்ல தூங்க உனக்கு போரடிக்கும்ல? வெட்டி சீன் போடாம கட்டிக்க டா” அவனை அணைத்துக் கொள்ள,
“போயிட்டு கால் பண்ணு டா. மகியை கரெக்ட் பண்ணி செட்டில் ஆகிடாத” என்று காதில் சொல்ல, “உனக்கு பொறாமை” கண் சிமிட்டினான் ரூபன்.
ஒருவித ஆர்வத்துடன் மகியைப் பார்க்கும் ஆவலுடன் செல்பவன் உள்ளத்தில், திரும்பி வரும் போது இதே மகிழ்வு இருக்குமா என்பது கேள்விக்குறியே!
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி