55. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(5)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 55

 

“தேவா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க” ஜனனியின் குரலில் அறையிலிருந்து வெளியே வந்தவன் அங்கே சோபாவில் அமர்ந்திருந்தவளைக் கண்டு கண்களை அகல விரித்தான்.

 

“ஹாய் தேவ்…!!” கையசைத்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள் வினிதா.

 

அவளைக் கண்டதும் நொடியில் அதிர்ந்து பின் மலர்ந்த முகம், அடுத்த நொடி கோபத்தைத் தத்தெடுத்துக் கொண்டது, அங்கு இருந்த அஷோக்கை கண்டு.

 

“எப்போ பாரு இவன் கூட தான் ஒட்டிக்கிட்டு இருக்கா. இங்க எதுக்கு வந்து இருக்கா?  ஒன்னுமே புரியலையே. அண்ணிக்கு வினியைத் தெரியுமா?” பல வினாக்கள் அவனது மண்டையை வண்டாகக் குடைந்தன.

 

அவளிடமே கேட்டு விடலாம் என்று யோசித்து சமையலறைக்குள் சென்று, “அம்மா எங்க அண்ணி?” என்று ஜனனியிடம் கேட்க,

 

“அத்தை யாரோ உறவுக்காரங்க வீட்டுல விசேஷம்னு கிளம்பி போனாங்க. ஆமா! யார் அந்த பொண்ணு? வந்ததும் வராததுமா தேவ் தேவ்னு உங்க பெயரை ஏலம் விடுறா?” என்று கேட்க,

 

“அவ வினிதா. இனியா..” என்று சொல்ல வர, அதை இடைவெட்டி “உங்களுக்கு யார்னு கேட்டேன்? இது அந்த வினிதா தானே?” என்று புருவம் உயர்த்தினாள்.

 

“எந்த வினிதா?” தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டான் தேவன்.

 

“தேவனின் உள்ளம் கவர்ந்த தேவி! அந்த வினிதா” என்றிட, அவனுக்கோ முகம் சிவந்து போனது.

 

“ஹய்யடா! முகத்தைப் பார்ப்போம். என் கொழுந்தனாருக்கு வெட்கம் எல்லாம் வருமா? கோபத்தை மட்டும் தானே பார்த்திருக்கேன்” கிண்டல் செய்தவளைக் கண்டு வெட்கத்தை மறைத்து, “அ..அது பழைய கதை அண்ணி. ஆனால் இப்போ இல்ல” என்று விட்டுச் சென்றவனை சிரிப்போடு பார்த்தவளுக்கு காதலின் இலக்கணம் பற்றி தெரியாதா என்ன?

 

தேவனின் பின்னால் வந்த ஜனனி “இருங்க. நான் பசங்களை அழைச்சிட்டு வர்றேன்” என்று மேலே செல்ல, அஷோக் கால் பேசுவதற்காக வெளியில் சென்றான்.

 

கிடைத்த தனிமையை சாதமாகப் பயன்படுத்த எண்ணி, “இங்கே எதுக்கு வந்த? சொல்லாம கொள்ளாம இப்படி வந்து நிற்கிற?” கடிந்து கொண்டான் தேவன்.

 

“உங்க கிட்ட எதுக்கு சொல்லனும் சார்? எனக்கு தோணுச்சு நான் வந்தேன். உங்க கிட்ட பர்மிஷன் கேட்டு வரனும்னு எந்த தேவையும் இல்ல” என்றவளோ, “நான் உங்களைப் பார்க்க வந்தேன்னு நெனச்சீங்களா?” புருவம் உயர்த்திக் கேட்டாள்.

 

அவள் கேட்ட தோரணையில் அவன் உள்ளத்தில் கோபக்கனல் ஏறத் துவங்கிற்று. அதற்காகத் தானே அப்படி சொன்னோம் என்று நினைத்தவளுக்கோ சிரிப்பு பொங்கிக் கொண்டு வர அதை அடக்கிக் கொண்டாள்.

 

“என்ன சார் கோபம் வருதா?” எனக் கேட்டவளை அவள் முறைக்கும் போது, அங்கு வந்த சிறுவனைக் கண்டு அருகில் ஓடிச் சென்று “அகி” என்று அணைத்துக் கொண்டாள் வினிதா.

 

அவன் திரு திருவென்று விழிக்க, “என்ன அகி? இந்த கொஞ்ச நாள்ல உனக்கு சித்திய மறந்து போச்சா?” என்று கேட்க,  இடுப்பில் கை வைத்து முறைத்துப் பார்த்தான் அவன்.

 

“அச்சோ! உன்ன பார்க்க வரலன்னு கோபமா இருக்கியா? சாரி செல்லம்” கன்னத்தில் முத்தமிட எத்தனிக்க இரு கன்னங்களையும் பொத்திக் கொண்டு, அவன் சொன்னதைக் கேட்டு கண்களை அகல விரித்தாள் வினி.

 

“இந்த முத்தம் எனக்கு வேண்டாம். அதை சித்தாவுக்குக் கொடுங்க” தேவனை நோக்கி விரல் நீட்டினான் அகியின் இரட்டைப் பிறவி யுகன்.

 

“டேய்ய்ய்” தேவன் பற்களை நறநறக்க, “வினி சித்தி” என்றவாறு ஜனனியுடன் வந்து தன்னை அணைத்துக் கொண்டவனை அதிர்ந்து பார்த்தாள் பெண்.

 

“இது தான் அகி. அப்போ அது யுகியா?” வாயில் கை வைத்து வினிதா கேட்க, “ஆமா! அது தெரியாம என்னை கட்டி பிடிக்கிறீங்க” முறைப்போடு சொன்னான் யுகி.

 

“அதுல என்ன இருக்கு? நீயும் எனக்கு அகி போல தானே? என்ன செல்லம்?” அகியிடம் கேட்க, அவன் ஆமென்று தலையசைத்தான்.

 

“ஏன் சித்தி என்னைப் பார்க்க வரல?” அகியின் குரலில் ஏக்கம் வழிய, “வரனும்னு தான் இருந்தேன். சித்திக்கு டைம் கிடைக்கல. கெடச்சதும் ஓடி வந்துட்டேன்” பையிலிருந்த சாக்லேட்டை எடுத்து நீட்டினாள்.

 

யுகனின் பார்வை சாக்லேட் மீது படிய “உனக்கும் கொண்டு வந்திருக்கேன்” அவனிடமும் ஒன்றை நீட்டினாள்.

 

“எனக்கு வேண்டாம்” என்று யுகி மறுக்க, “அப்போ என் சாக்கியால பாதி தர்றேன்” அகிலன் தன்னுடையதை உடைக்கப் போக, “இல்ல இல்ல. இதையே வாங்கிக்கிறேன்” அகியிடம் வாங்கக் கூடாது என்ற வீம்பில் வினிதாவிடமே வாங்கிக் கொண்டான்.

 

“ரூபன் இல்லையா?” என்று வினி தேட, “நீ வருவேனு தெரிஞ்சு தலைமறைவாகிட்டான். உன்னைக் காணவே பிடிக்கலயாம்” முறைப்போடு சொன்னான் தேவன்.

 

அவளுக்கோ நொடியில் முகம் சுருங்க, சட்டென சுதாரித்துக் கொண்டு “ரூபனுக்கு என்னைப் பிடிக்கும். ஆனால் எனக்கு அவரை விட உங்களைப் பத்தி தானே வேணும். உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்று வினிதா கேட்ட கேள்வியில் ஜனனி சிரித்தே விட்டாள்.

 

‘உன்னை அடக்க சரியான ஆள் இவ தான்’ தேவனைப் பார்த்து சிரிப்புடன் அகன்றாள் அவள்.

 

வெளியில் சென்ற அஷோக் உள்ளே வருகையில் சட்டென யார் மேலோ மோதி விட, “யோவ் மேன்! அறிவு இல்ல?” கோபமாகக் கேட்டாள் நீரஜா.

 

“பார்த்தா தெரியாது. பழகினா புரியும். நம்பர் நோட் பண்ணிக்கிட்டு அறிவு இருக்கானு செக் பண்ணு” என்று ஜொள்ளு விட்டான்.

 

“தலைல அடி கிடி பட்டுச்சா? கீழ விழுந்துட்டியா என்ன?”

 

“ஆமா விழுந்துட்டேன். அன்னிக்கு தேவா கூட கோச்சிங் செண்டர்ல உன்னைப் பார்த்தப்போவே விழுந்துட்டேன்” டயலாக் விட்டவனை ஏகத்துக்கும் முறைத்தாள்.

 

“அட முறைக்காதம்மா. சும்மா சொன்னேன்” என்று சொன்னவன், “லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன்” பாடிக் கொண்டே செல்ல அவனைக் கடுப்போடு பார்த்து விட்டு வந்த வழியே சென்று விட்டாள் நீரு

 

தேவனோடு மொட்டை மாடியில் இருந்த வினி நீரஜாவைக் கண்டு‌ “அவ இதுக்கு வந்துட்டு போறா?” என்று தேவனிடம் பாய,

 

“எனக்கென்ன தெரியும்?” என்று சொல்ல வந்தவன், “என்னைப் பார்க்க தான். அவ இந்த அத்தானைப் பார்க்க அடிக்கடி வருவா” என பதிலளிக்க வினிதாவுக்கு ஏகத்துக்கும் கடுப்பானது.

 

“இதோ பார் தேவ்! இந்த விஷயத்துல மட்டும் என் கிட்ட விளையாட வேணாம். அந்தப் பொண்ணுக்கு வேற ஆளா இல்ல?”

 

“நீ எதுக்கு இப்படி எகிறுற? அவ பார்த்தா என்ன தப்பு? நீயும் விட்டுட்டு போவ” என சொல்ல வந்தவன், அவளின் கலங்கிய கண்களைப் பார்த்ததும் ஒன்றும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டான்.

 

“எப்போ பார்த்தாலும் இதைச் சொல்லிட்டு இருக்கிறதே உனக்கு வேலையா போச்சுல்ல? நான் போனப்போ நீ காயப்பட்டு இருப்ப. உண்மை தான். அதுக்காக தினமும் என்னைக் கஷ்டப்படுத்தனும்னு இருக்கியா? நீ ஏன் இவ்வளவு மாறிப் போன?” அவளது பேச்சில் சற்று நேரம் மௌனம் காத்தான்.

 

பின்னர் பொறுமை இழந்து போய் “ஏன் நான் எதுவுமே சொல்ல கூடாதா? நீ போன, இப்போ வந்த. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? நான் என் அத்தை பொண்ணு கூட பேசினா நீ எதுக்கு டென்ஷன் ஆகுற?

 

என் பர்சனல் விஷயத்துல நீ மூக்கை நுழைக்காத. நான் சொல்லுறத நீ கேக்குறியா? அசோக் கூட வர்றது பிடிக்கலைன்னு உனக்கு தெரியும். அப்படி இருந்தும் தினம் அவன் கூட தான் வர. இதோ இன்னிக்கு கூட அவனை கூட்டிட்டு வந்து இருக்க. அப்படி இருக்கும் போது என் விஷயத்துல நீ எதுவும் சொல்ல முடியாது” என்றவனை இயலாமையோடு ஏறிட்டாள்.

 

“பழசை பத்தி பேச பேச பிரச்சனை தான். கூடவே கஷ்டமும் வருது. அதெல்லாம் வேண்டாம். ஏன்டி என் முன்னால திரும்ப வந்த? விட்டுட்டு போனவ அப்படியே இருந்து இருக்கலாம் தானே?” தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான்.

 

அவனை நெருங்கியவளோ “நான் வந்தது உனக்கு நெஜமாவே பிடிக்கலையா?” என்று கேட்க, அவனிடம் பதில் இல்லை.

 

“சொல்லு தேவ். என் கண்ணைப் பார்த்து சொல்” தன் மீன் விழிகளால் அவனின் கூர் வழிகளை ஆழ்ந்து நோக்கினாள்.

 

இல்லை என்று எப்படிக் கூறுவான்? அவள் வந்தது அவனது பழைய ரணங்களைக் குத்திக் கிளறி கூறு போடுகின்றது தான். ஆனால் அவளது வருகை அவனுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆறுதலாகவும் அமைந்தது.

 

அவள் நினைவுகள் அவனுள் இன்னும் பொக்கிஷமாக அழியாத இருக்கின்றன. அவள் மீது கோபம், அவள் விட்டுச் சென்று விரக்தி, ஏமாற்றம் என அனைத்தும் இருந்தாலும் நீறு பூத்த நெருப்புப் போல் அவள் மீதான காதலும் அவனுள் இன்னும் எரிந்து கொண்டு அல்லவா இருக்கின்றது?

 

“சொல்லு! நீ சொல்ல மாட்ட. ஏன்னா உன் மனசுல நான் இருக்கேன்” என்றிட, “ஆமா டி நீ என் மனசுல இருக்க. இப்போ என்ன பண்ணுவ? நீ கேட்டதுக்கு ஆமான்னு பதில் சொல்லிட்டா என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா? திரும்பவும் என்னை ஏத்துப்பியா?” என்று கேட்க, மறுப்பாக தலையை ஆட்டினாள்.

 

“இப்போ யார் மேல குற்றம்? என்னைக் கேள்வி கேக்குறல்ல. இப்போ நீ என் கண்ணப் பாத்து சொல்லு. உன்னால ஏன் என்னை ஏத்துக்க முடியாது? ஏன் கல்யாணம் பண்ணிக்க முடியாது? சொல்லு வினி” எனும் கேள்விக்கு அவள் கண்களின் கண்ணீர் மட்டுமே பதிலானது.

 

“நீ ஓடி ஒளியுறதால எதுவுமே மாறப் போவதில்லை‌. உனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தா அதை வாய் திறந்து சொல்லனும். இந்த மாதிரி எல்லாம் நீ பிஹேவ் பண்ணும் போது எனக்கு இன்னுமே ஸ்ட்ரெஸ் கூடுது. நிறைய கேள்விகள் மண்டையை குடையுது. என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியல. ஏன் இனி என்னை இப்படி உயிரோடு கொல்லுற?”

 

ஓர் நொடி இமைக்காமல் பார்த்தவளோ அவனை சட்டென அணைத்து விடுவித்து வேகமாக வெளியேற, அவளை வெறித்துப் பார்த்திருந்தான் தேவன்.

 

வினியின் முகத்தைப் பார்த்த ஜனனிக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. இருந்தும் அதை வாய் திறந்து கேட்காதிருந்தாள்.

 

“அக்கா! நான் போயிட்டு வர்றேன்” என்று வினி சொல்ல, “வினி சித்தி! போகாதீங்க. என் கூட இருங்க” அவளது கையைப் பிடித்துக் கொண்டான் அகி.

 

“நான் இன்னொரு நாள் வர்றேன். இப்போ போகனும் டா” அவன் நெற்றியில் முத்தமிட்டவளுக்கோ ஜனனி அகியைப் பார்த்துக் கொள்வாள் எனும் நம்பிக்கையில் மனம் தெளிந்தது.

 

யுகி வேகமாக ஜனனியின் பின்னால் ஒளிந்து கொள்ள “பயப்படாத. நான் உனக்கு கிஸ் பண்ண மாட்டேன். போயிட்டு வர்றேன் ரவுடி பேபி” அவனது கன்னங்கள் இரண்டையும் அழுத்தமாகக் கிள்ளி விட்டு விடைபெற்றுச் சென்றாள்.

 

ஜனனி சிறுவர்களைப் பார்த்து “போய் சித்தா கூட இருங்க” என்று சொல்ல, இருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஓடினர்.

 

“மெதுவா போங்க” ஜானு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றாள்.

 

தேவனிடம் சென்ற யுகி அமர்ந்து கொண்டு “மடியில் சாஞ்சுக்கங்க” என்றான்.

 

அவனும் எதுவும் பேசாமல் மடியில் தலை சாய்த்துக் கொள்ள, ஒன்றும் பேசாமல் அவனது தலையை வருடி விட்டான்.

 

 “உங்களுக்கு கவலையா இருந்தா முருகன் கிட்ட கேளுங்க. நீங்க கேட்டத தருவார் சித்தா” என்ற அகி தேவனின் கன்னத்தில் கை வைக்க,

 

“என் செல்லக் குட்டிங்களா” தன் அண்ணன் பெற்ற செல்வங்களை இரு கை விரித்து அணைத்துக் கொண்டவனின் கண்கள் ஜனனியை நன்றியுடன் நோக்கின.

 

“ஹேய் சித்தா சொல்லாத” யுகன் சண்டைக்குத் தயாராக, “அவரு எனக்கும் சித்தா தான்” கண் சிமிட்டிச் சொன்ன அகியை முறைத்தவாறே நின்றான்.

 

தொடரும்…..!!

 

அடுத்த எபிசோட் முழுக்க அகி யுகி வருவாங்க. வெயிட் கரோ லவ்லீஸ்!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!