58. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.8
(4)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 58

 

மூவரையும் ஐஸ்கிரீம் பார்லருக்கு அழைத்துச் சென்றான் சத்யா. அவர்களுக்கு விருப்பமானதை ஆர்டர் செய்யுமாறு கூறி அலைபேசியை நோண்டத் துவங்கினான்.

 

ஆழ்ந்த யோசனையில் இருந்தவளைப் பார்த்து, “ஜானு” என்று அகி அவளது கையை தட்ட, “சொல்லு அகி” சிந்தை கலைந்து அவனை ஏறிட்டாள்.

 

“என்ன யோசிக்கிறீங்க?” என்று அவன் கேட்க, யுகனும் அதே கேள்வியோடு அவளைப் பார்த்திருந்தான்.

 

“நந்திங்! மகி சித்தி ஞாபகம் வந்துச்சு. அதான்” என்று மழுப்பியவளை சத்யா ஆழ்ந்து நோக்கினான்.

 

“என்ன பார்வை?” அவள் புருவம் உயர்த்த,

 

“சின்ன பிள்ளைங்க கிட்ட பொய் சொல்லலாம். ஆனால் என் கிட்ட முடியாது” என்றிட அவள் தன்னைச் சரி செய்ய முயன்றாள்.

 

யுகி தன்னோடு எப்போது பழையபடி பேசுவான் என்ற எண்ணம் அவளை அலைக்கழித்தது. என்ன தான் பேசினாலும் முன்னைய நெருக்கம் இப்போது இல்லை அல்லவா?

 

ஐஸ்கிரீம் கொண்டு வரப்பட்டது. நான்கு கப் வந்திருக்க, சிறுவர்கள் இருவரும் தமக்கு பிடித்தமானதை எடுத்துக் கொண்டு அதனை ருசிப்பதில் மும்முரமாகினர்.

 

“இந்தாங்க” ஒரு கப்பை சத்யாவின் புறம் நகர்த்தி வைத்தாள் ஜனனி.

 

“எனக்கு வேண்டாம். நீயே ரெண்டையும் சாப்பிடு” அலைபேசிக்குள் புதைந்தான் சத்யா.

 

“என்னால ரெண்டு‌ சாப்பிட முடியாது. உங்களுக்கு தான் ஆர்டர் பண்ணேன்”

 

“நான் கேட்டேனா உன் கிட்ட? உனக்கு வேணும்னதை மட்டும் பண்ணு. தேவையில்லாம என் விஷயத்தில் மூக்கை நுழைக்காத” அடிக்குரலில் சீறினான் ஆடவன்.

 

“உங்களை மட்டும் அப்படி விட்டு விட்டு தனியா சாப்பிட முடியாது. வாங்கிட்டேன்ல இன்னிக்கு ஒரு நாள் சாப்பிடுங்க” என்று சொல்ல, “ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா? ஏன் இப்படி கடுப்பேத்துற?” அவன் சத்தமாகக் கத்த, அவளோ திடுக்கிட்டுப் போனாள்.

 

“வேண்டாம்னா விட்று. எதுக்கு இந்த மாதிரி பண்ணுற? உனக்கு வேண்டாம்னா அதை வீசிட வேண்டியது தானே?” தலையை அழுந்தக் கோதிக் கொண்டவனை, “டாடி” என அழுத்தமாக அழைத்தான் யுகன்.

 

ஜனனியைப் போல் அகியும் சத்யாவின் கோபத்தில் அதிர்ந்து விழித்தான். இதுவரை அவனது கோபத்தைக் காணாததின் விளைவாக மருண்ட விழிகளுடன் அவள் கையைப் பற்றிக் கொண்டான் சின்னவன்.

 

யுகனின் அழைப்பில் மௌனித்த சத்யாவுக்கு கோபத் தணலை அணைக்க சில நொடிகள் தேவைப்பட்டன. 

 

“அகி கவலைப்படுற மாதிரி எதுவும் பேசக் கூடாதுன்னு சொல்லிட்டு நீங்களே இதைப் பண்ணுறது சரியில்லை டாடி” யுகன் அவனது காதில் உரைக்க, அகியின் பயந்த முகத்தைக் கண்டு கண்களை மூடித் திறந்தான்.

 

“சா.. சாரி அகி” திக்கித் திணறிச் சொல்ல, “என் கிட்ட எதுக்கு கேட்கிறீங்க? ஜானு கிட்ட சொல்லுங்க” என்று விட்டான் அகிலன்.

 

அவன் இயலாமையோடு அவளை ஏறிட, அவன் பக்கம் திரும்பாமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். ஐஸ்கிரீமை சாப்பிடும் போது கை தவறி உடையில் சிந்த, எழுந்து வாஷ் பேஷன் பக்கம் சென்றாள்.

 

“போங்க டாடி! எப்படியாவது சமாதானம் செய்ங்க” யுகன் பல்லைக் கடிக்க, “சரி டா சரி” கீ கொடுத்த பொம்மை போல் அவள் பின்னே சென்றான்.

 

“எதுக்கு வந்தீங்க? ஐஸ்கிரீமை குப்பைத் தொட்டியில் போடுவேன்னு பார்க்க வந்தீங்களா?” அவள் கடுகடுக்க,

 

“இருக்கிற கோவத்தில் நீ தவறி குப்பைத் தொட்டிக்குள் விழுந்துட்டா என்ன பண்ணுறது? நான் தானே உங்க அப்பாவுக்கு பதில் சொல்லனும்” என்றவனைக் கண்டு அவளுக்கு இரத்த அழுத்தம் எகிறியது.

 

“நான் எதுக்கு கோவமா இருக்கனும்? நான் நல்லா தான் இருக்கேன். எந்த கோவமும் இல்ல” படபட பட்டாசாய் வெடித்தாள் ஜனனி.

 

“கோவம் இல்லைங்குறதைக் கூட நீ கோபமா தானே சொல்லுற? அது என்னவாம் அப்போ?” புருவம் உயர்த்திக் கேட்டான் சத்யா‌.

 

“நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்னங்க? ஆஹ், அதான் பாயின்ட். நீங்க என்ன பண்ணுனா எனக்கென்னனு இருக்காம பாவம் பார்த்து ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட வைக்கப் போனேன்ல.

 

இந்த சமூக சேவை செய்யப் போய் நான் என் நிம்மதியை கெடுத்துக்கிட்டேன். உங்களை பத்தி தெரிஞ்சும் பெரிய இவளாட்டம் பண்ணப் போனேன்ல, எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” அசுர வேகத்தில் வார்த்தைகள் பிறக்க, அவளின் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறிப் போனான் காளை.

 

“சாரி சாரி! இப்போ நான் என்ன பண்ணனும்கிற? இவ்ளோ கோபம் வேண்டாம். ப்ளீஸ் கூல்” 

 

“கூலா தானே இருந்தேன். சில்லுனு ஐஸ்கிரீம் சாப்பிட வந்தவளை வள்வள்னு பாய வெச்சுட்டீங்க”

 

“ஆத்தாடி! நீயே உன்னை நாய்க்குட்டினு ஒத்துக்கிட்ட பார்த்தியா? அங்கே நிற்கிற நீ. யூ ஆர் க்ரேட் ஜானு” என்று புகழாரம் சூட்ட, “க்ரேட்டா? உங்க வாயை க்ரேட்டர்ல வெச்சு அரைச்சிடுவேன்” கொலை வெறியோடு சென்றவளைச் சிரிப்போடு பார்த்தான்.

 

முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு வந்த ஜனனியை குழந்தைகள் இருவரும் உன்னிப்பாகக் கவனிக்க, “அய்ம் ஓகே டார்லிங்க்ஸ்! ஐஸ்கிரீம் சாப்பிடுங்க” என்றவளின் பக்கம் சத்யா ஐஸ்கிரீமை நகர்த்தி வைக்க,

 

“பாவம் பார்த்து உங்களுக்கு தர மாட்டேன். நானே சாப்பிட போறேன்” இதழ் சுளித்துக் கொண்டு சாப்பிட்டவளின் குழந்தைத்தனமான செய்கையில் சொக்கித் தான் போனான் கணவன்.

 

……………….

கண்கள் கலங்க அலைபேசியை வெறித்துப் பார்த்திருந்தாள் நந்திதா. அலைபேசித் திரையில் ஒளிர்ந்த ஜனனியின் பெயரை வாஞ்சையோடு வருடிக் கொடுத்தது அவள் பார்வை.

 

அழைத்து அழைத்து ஓய்ந்து போனவளுக்கு கண்ணோரம் கண்ணீர் அணை கட்டி நின்றது. அழைப்பு ஏற்கப்படவேயில்லை.

 

“நந்து…!!” என்று அழைத்தவாறு வந்த எழில், அவளின் கசங்கிய முகம் கண்டு நெற்றி சுருக்கினான்.

 

“ஓய்‌ நந்து” அவளது முழங்கையைப் பிடித்து உலுக்க, சுயநிலை மீண்டவளுக்கு அவனைப் பார்க்கையில் நெஞ்சம் விம்மிற்று.

 

கண்ணீர் கரை கடக்க, சட்டென்று அவனை அணைத்துக் கொண்டவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

 

“என்னாச்சு டா? ஏன் அழுற?” அவளது தலையை மென்மையாக வருடிக் கொடுக்க, “ஜா..ஜானு கூட என்னை வெறுத்துட்டா. அவளுக்கு என் கூட பேசவே தோணலல்ல?” என்றாள், உதடுகள் அழுகையில் துடிக்க.

 

“ப்ச் நந்தும்மா! நீ ஏன் இவ்ளோ சீரியஸ் ஆகுற? ச்சில் டா” அவளைத் தேற்றுவதற்காக உரைத்தான்.

 

“உங்களுக்கு இது சீரியஸ் இல்ல தான். உங்க அம்மா தங்கச்சி எல்லாரும் பேசுறாங்க. எனக்கு தான் யாரும் இல்ல. அம்மா அப்பா தங்கச்சினு எல்லாரையும் இழந்துட்டு நிற்கிறேன்” கோபமாக சொல்லி விட்டாள் அவள்.

 

“அப்படினா நீ என்னால தான் எல்லாத்தையும் இழந்த?” ஒரு மாதிரிக் குரலில் கேட்டவனை அவளது வார்த்தைகள் வெகுவாய்த் தாக்கின.

 

“இல்ல.. அப்படி இல்லங்க” என்றவளுக்கு அதை மறுத்துரைக்க முடியவில்லை.

 

அவள் பேசியது அப்படித் தானே இருந்தது? அவன் வேண்டாம் என்றான். பொறுமை காக்கச் சொன்னான். அவசரப்பட்டு ஓடி வந்தது அவள் தானே? அப்படியிருக்க, அவனால் அனைத்தையும் இழந்ததாகக் கூறுவது சரியாகுமா?

 

“அப்பாவை இழந்து வளர்ந்தவன் நான். உறவுகளோட அருமை எனக்கு தெரியும். யாரையும் விட்டுத் தள்ளிட்டு வா என்று நான் கூப்பிடல. வரலனா கூட உனக்காக எத்தனை வருஷம் வேணாலும் காத்துட்டு இருந்து இருப்பேன் நந்து” என்றவனுக்கு அவள் பேசியதை ஏற்க முடியவில்லை.

 

“சாரிங்க. நான் வேணும்னு சொல்லல” அதற்கு மேல் எதுவும் சொல்ல இயலாமல் தலை குனிந்து நிற்கலானாள்.

 

“ரெண்டே ரெண்டு கேள்வி தேட்கிறேன். தெரிஞ்சோ தெரியாமலோ நீ அவங்களை இழந்துட்ட. அதுக்காக நான் என் அம்மா தங்கச்சியை இழந்து நிற்கனுமா நந்து? உன் வீட்டாட்களை இழக்க என்னைக் காரணம் காட்டாமல் நீ என்னை இழந்திருக்கலாமே?” அவனது குரலில் கோபம் இல்லை, மாறாக கலக்கம் மிகைத்துக் காணப்பட்டது.

 

“அய்யோ அப்படி இல்ல. ஏதோ கவலையில் பேசிட்டேன். நான் பேசினது தப்புத் தான். மன்னிச்சிடுங்க எழில்” இறைஞ்சியவளுக்கு மனம் குமைந்தது.

 

அவள் செய்த காரியத்திற்கு அவனை நோக்கி விரல் நீட்டுவது சரி அல்லவே? உன் குடும்பத்தை விட்டு வா என்று அவன் ஒருபோதும் சொன்னது இல்லை. நானே சம்மதம் வாங்குகிறேன். அதுவரை காத்திரு, அவசரப்பட்டு எதையும் செய்யாதே என்றே வலியுறுத்துவான்.

 

அவசரப் புத்தியில் அவள் வீட்டை விட்டு வந்ததற்கு அவன் பொறுப்பல்ல. நான் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன் என அவளுக்கே அவளை நினைத்து ஏதோ போலானது.

 

எதுவும் பேசாமல் அவன் வெளியில் சென்று விட, மனம் கலங்கி அமர்ந்திருந்தவளுக்கு தன்னைத் தானே திட்டிக் கொள்ளத் தான் முடிந்தது.

 

சற்று நேரம் கழித்து வந்தவன் அவளருகில் அமர, “சா..சாரி எழில்! என் மேல கோபம் வர்றது நியாயம் தான்” என்று பேச வருகையில், “கோபம்லாம் இல்ல நந்து. வருத்தம் தான். நீ இப்படி பேசுவனு நான் எதிர்பார்க்கல. இப்படி ஒரு எண்ணம் உன் மனசுல இருந்ததால தானே இன்னிக்கு சொல்லிட்ட” என்று வருத்தத்தோடு சொல்ல,

 

“என்னால எந்த விளக்கமும் தர முடியாது எழில். ஏன்னா நான் பேசினது தப்புன்னு தெரியும். நான் உங்களை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நெனச்சு நெனச்சு கடைசியில் கஷ்டத்தை தந்துட்டேன்” தலையில் அடித்துக் கொண்டாள் நந்திதா.

 

“பேச முன்னால யோசிச்சு பேசனும். இப்போ உனக்கு சொல்லுறேன். ஆனால் நானும் இதே தப்பை பண்ணி இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்குறது ரொம்பவே கொடுமையானது நந்து. உன்னை சந்தோஷமா பார்த்துக்கனும்னு தான் நான் ஆசைப்பட்டேன். அதை என்னால பண்ண முடியலயோனு கவலையா இருக்கு” அவன் பேசப் பேச அவள் தவித்துப் போனாள்.

 

“இல்லங்க. அப்படி நினைக்க வேண்டாம். நீங்க என்னை சந்தோஷமா பார்த்துக்கிறீங்க. உங்களைத் தவிர யாராலேயும் என்னை பார்த்துக்க முடியாது. நான் ஏதோ புத்தி கெட்டுப் போய் சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க” அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.

 

“நானும் அதை மறக்க தான் நினைக்கிறேன். அதுக்காக வெளியேயும் போயிட்டு வந்தேன். ஆனால் உன்னைப் பார்க்கும் போது அது ஞாபகம் வருது. குத்திக் காட்டவோ, கஷ்டப்படுத்தவோ சொல்லல நந்து. என்னால அதை ஜீரணிக்க முடியல. அதான் உண்மை” அவனும் அவளது கையைப் பற்றிக் கொள்ள,

 

“உங்களுக்கு கோபம் இருந்தா கூட காட்டிக்கங்க. அது எனக்கு வேணும் தான். பைத்தியம் மாதிரி உளறிடுறேன். என்னால எல்லாருக்கும் கஷ்டம்” முகம் வாடக் கூறினாள் மனைவி.

 

“இந்த மாதிரி பேசக் கூடாது நந்தும்மா! நீ பேசினது கஷ்டமா இருந்துச்சு தான். அது மறந்திடும். அதற்காக நீ இப்படி பேசுறதை என்னால ஏத்துக்க முடியாது” அவள் கன்னம் தாங்கிக் கூற,

 

‘நீங்க எவ்ளோவோ மேல போயிட்டீங்க. உங்க அளவுக்கு என்னால பெருந்தன்மையா இருக்க முடியல’ தனக்குள் சொல்லிக் கொண்டவளோ, “லவ் யூங்க” என அவனை அணைத்துக் கொண்டாள்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!