59. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.8
(4)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 59

 

வயல் வரப்புகளிடையே ஓடிச் சென்று கொண்டிருந்தாள் மகிஷா.

 

“மகி! நில்லு மகி” ரூபனுக்கு அவளின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது மூச்சு வாங்கியது.

 

“என்ன டாக்டரே? என்னை விட நீங்க சுறுசுறுப்பா இருக்கனும். கொஞ்ச நேரம் ஓடினதுக்கே இப்படி மூச்சு வாங்குறீங்க?” நடைக்குத் தடை போட்டு திரும்பிப் பார்த்தாள் அவள்.

 

“இப்படி ஓடியே ரொம்ப நாளாச்சு. ஹாஸ்பிடலுக்கும் வீட்டுக்கும் கார்ல தான் ஓடிட்டு இருக்கேன். கொஞ்சம் மெதுவா நட” என்று சொல்ல,

 

“இந்தக் கல்லுல உட்கார்ந்துக்கலாம்” என்னவாறு அமர்ந்தவளின் அருகில் அவனும் காலை நீட்டி அமர்ந்தான்.

 

“இந்த மாதிரி காலைக் காட்சிகளைப் பார்க்கிற சான்ஸ் எங்களுக்கு கிடைக்கிறதில்ல” நெடிய மூச்சொன்றை இழுத்து விட்டவனின் கண்கள் இயற்கையின் பொக்கிஷங்களை ரசனையோடு தழுவின.

 

“நானுமே இந்த ஊர்ல இருந்தாலும் அடிக்கடி இங்கே வர்றதில்ல. முன்னாடி ஜானு என்னையும் இழுத்துட்டு வருவா. அவ இந்த கல்லுல உட்கார்ந்து கவிதை எழுதுற வரை நான் காவல் காக்கனும்” செல்லமாக சலித்துக் கொண்டாள் அவள்.

 

“அண்ணி கவிதை எழுதுவாங்களா? எனக்கு தெரியாதே‌. அவங்க கிட்ட நெஜமாவே என்னமோ மேஜிக் இருக்கு மகி. அன்பால் எல்லாரையும் கட்டி போட்டுடறாங்க. அண்ணா கூட நிறைய மாறிட்டார். சொல்லப் போனா அவர் வாழ்க்கை மேல இருந்த கவலை எனக்கு மொத்தமா இல்லாம போயிடுச்சு” மகிழ்வோடு உரைத்தான் ரூபன்.

 

“எனக்கும் தான் ரூபன். சந்தர்ப்ப சூழ்நிலையால் கல்யாணம் பண்ணிக்கிட்டாளே, அவ வாழ்க்கை எப்படி இருக்கும்னு கவலையா இருந்துச்சு. அவ அதையெல்லாம் இயல்பா ஏத்துக்கிட்டு வாழுறத பார்க்கும் போது மனசுக்கு திருப்தியா இருக்கு” மகியின் இதழ்கள் அழகாக விரிந்தன.

 

“இன்னும் கொஞ்ச நாள்ல இங்கிருந்து போயிட வேண்டி வருமோ தெரியல. எனக்கு அதை நெனச்சு கஷ்டமா இருக்கு மகி” அவன் முகத்தில் சோக ரேகைகள் படரத் துவங்க, “போனா என்னவாம்? இங்கே இருந்தா இப்படி பேசுவீங்க. அங்கே போனா கால்ல பேசலாம். இதுக்கு போய் இவ்ளோ கவலை தேவையா?” சாதாரணமாக வினவினாள்.

 

“ஃபோன்ல பேசுறதும் இதுவும் ஒன்னா? உனக்கு அதெல்லாம் பெருசே இல்லையா மகி?” அவள் முகத்தை ஏறிட்டு நோக்கினான்.

 

“எதுக்கு இப்படி கேட்குறீங்க? சின்ன விஷயத்தை பெருசுபடுத்த வேண்டாம். நாம இப்படி இருக்கிறது தான் நல்லது. அதை ஏற்கனவே சொல்லி இருக்கேன். காலம் முழுக்க கைப் பிடிச்சு வாழப் போறோம்னா பரவாயில்லை. அப்படி இல்லாதப்போ இந்தளவு தூரம் யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல” கத்தரித்தாற் போல் பேசினாள்.

 

“இப்படி பேசாத மகி‌. எனக்கு உன் கூடவே இருக்கனும் மகி. உன் கைப் பிடிச்சா தான் காலம் முழுக்க உன் கூட இருக்க முடியும்னா உன்னை கை விடாம நான் பார்த்துப்பேன். எனக்கு நீ வேணும் மகி” அவளது கையை இறுகப் பற்றிக் கொண்டான் ரூபன்.

 

அவள் அதிர்ந்து போனாள். உணர்வலைகள் அவள் உள்ளத்தை சுனாமியாக சுழற்றியடித்தன.

 

“ஏ..ஏன் ரூபன்? நான் ஏற்கனவே உங்க கிட்ட இது பற்றி பேசிட்டேன். என் கூட இருக்கனும் என்பதற்காக கைப்பிடிக்கிறேன்னு சொல்லுறத என்னால ஏத்துக்க முடியாது. இதெல்லாம் பேச நல்லா இருக்கும். ஆனால் நடைமுறையில் ரொம்ப வலிக்கும். நிறைய கஷ்டத்தைத் தான் கொடுக்கும்” அவனிடமிருந்து கையை இழுத்துக் கொள்ள முயன்றாள்.

 

“காதல் கஷ்டத்தைக் கொடுக்காது. அதை நாம கையாளுகின்ற விதம் தான் அதைத் தீர்மானிக்கும். யாருக்கும் தெரியாம நாம காதலிக்கனும்னு சொல்லல. அதை எல்லாருக்கும் தெரியப்படுத்திடலாம். அப்போ எந்த பயமும் இல்ல. ஏமாத்துறோமா, பிரச்சினை வருமா, காதல் கை கூடுமா என்ற எண்ணத்தோட வாழவும் தேவையில்லை” நிதானமாக எடுத்துச் சொன்னான்.

 

“நீங்க சொல்லுற விளக்கம் எனக்கு மண்டையில் ஏறல. எனக்கு அது புரியவும் வேண்டாம். நான் சொல்லுறது ஒன்னு தான், இந்த காதல் நமக்குள்ள வேண்டாம். அது இருக்கிற உறவையும் அறுத்து எறிஞ்சிடும்னு நான் நினைக்கிறேன். அதுக்கு மாற்றமா நீங்க சொல்லுற எந்த வாதமும் நான் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்ல” காதல் வேண்டாம் என்பதே அவளது ஒற்றை நோக்கமாக இருந்தது.

 

“அய்யோ மகி! ட்ரை டு அன்டர்ஸ்டாண்ட் மீ. நீ என்னைக் காதலிக்கனும்னு சொல்ல வரல” என்றவனைக் கை நீட்டித் தடுத்து, “காதலிக்கனும்னு நெனக்கல தானே? அப்பறம் எதுக்கு இவ்ளோ பேச்சு பேசுறீங்க? உங்களுக்கு என் மேல காதல் எல்லாம் இல்ல. ஏதோ என் கூட இருக்கனும்னு நினைக்கிறீங்க. அப்படியே காதல் வந்தாலும் அதை அழிச்சிடுங்க” உறுதியாக மொழிந்தாள் மகி.

 

“காதல் இல்லனு நான் சொல்லல. எனக்கு உன் மேல வந்த உணர்வை உடனடியா காதல்னு சொல்லிட முடியல. பட், அது நட்பையும் தாண்டியது. மறைச்சிட்டு இருக்க முடியாம சொன்னதுக்கு இப்படி சொல்லாத. நான் உன் வீட்டுல வந்து பேசுறேன் மகி”

 

“ப்ளீஸ்! அப்படி மட்டும் செஞ்சிடாதீங்க. இந்த பேச்சு வேண்டாம். இந்த மாதிரி பேசுறதா இருந்தா என் கிட்ட வராதீங்க” விலகி நடந்து செல்லும் அவளை வெறித்து நோக்கினான் ரூபன்.

 

அவனுள் துளிரும் நேசத்தை சிறை வைக்க விரும்பாது சொல்லி விட்டான். இப்பொழுதே அவளது நிராகரிப்பு வலிக்கிறது என்றால், காதலின் வளர்ச்சியில் இதனை எப்படித் தாங்குவது என்று யோசித்தது அவன் மனம்.

 

…………………

தன்னை தரதரவென இழுத்து வந்த தேவனைப் புரியாமல் பார்த்தாள் வினிதா.

 

“என்ன பிரச்சினை உனக்கு? பசங்க பார்த்தா என்ன நினைப்பாங்க?” கோபத்தோடு பார்த்தவளை கண்களில் கனலோடு நோக்கி, “நீ பண்ணுறது மட்டும் நல்லாவா இருக்கு? கேவலமா இருக்கு டி” சீற்றத்தோடு சீறிப் பாய்ந்தான்.

 

“அப்படி என்ன பண்ணிட்டேன் நான்? சும்மா சும்மா பிரச்சினை பண்ண வராத. நான் எதுவும் கேவலமா பண்ணல” அவளுக்கும் உள்ளம் கொதித்தது.

 

“நீ யாரைத் தான் லவ் பண்ணுற? சொல்லு பார்ப்போம்” அவன் கேட்ட கேள்வியில் தடுமாறி நின்றாள் வினிதா.

 

“நா..நான் யாரையும் லவ் பண்ணல. உன்னையும் லவ் பண்ணல தேவ்” என்று கூற, “அதான் தெரிஞ்சு போச்சே. நீ என்னை லவ் பண்ணலங்கிறதையும் புரிஞ்சுக்கிட்டேன். யாரை லவ் பண்ணுற என்றதையும் தெரிஞ்சுக்கிட்டேன்” அவளை வெறுப்போடு நோக்கினான் தேவன்.

 

“உனக்கு என்ன தெரியும்? கண்டதையும் கேட்டு கண்மூடித் தனமா நம்பிட்டு உளறாத. நான் யாரை லவ் பண்ணுறேன்? அதை நீ தெரிஞ்சுக்கிட்டியா? யார் அது?”

 

“இதை என் வாயால வேற சொல்லனுமா? அதான் ஊருக்கே தெரிய போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டியே” அவன் சொன்னதைக் கேட்டவளுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.

 

“அய்யோ! நீ என்ன சொல்லுற? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுறியா?” பொறுமை இழந்து கத்தியே விட்டாள் வஞ்சி.

 

“நீ அஷோக்கை லவ் பண்ணுற. அதை நான் சொல்லல. நீ தான் சொல்லி இருக்க” என்று சொல்ல, “வாட்? அசிங்கமா பேசாத. அவனுக்கும் எனக்கும் நடுவில் அப்படி ஒன்னும் கிடையாது” அவள் சொன்னதைக் கேட்டு,

 

“வாவ் வினிதா! சூப்பரா பொய் சொல்லுற. நீ சொல்லுறதுல எது பொய்யினு எனக்கு கன்பியூஸா இருக்கு” என்றவன், “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்யினு சொல்லுவாங்கள்ல. அதான் உன் கிட்ட தீர விசாரிச்சுட்டு போக வந்தேன்” என்று சொன்னவன் அலைபேசியை நோண்டத் துவங்க,

 

“என்னைப் பார்த்தா உனக்கு பைத்தியம் மாதிரி இருக்கா? நீயா வந்து என்னென்னமோ சொல்லுவ, குழப்பி விடுவ. இப்போ என் மண்டையை குடைய வெச்சுட்டு நீ ஃபோன் பார்க்குற”

 

“பீ கூல் வினிதா! உன் வண்டவாளம் எல்லாம் அதுல தான் இருக்கு. அதை தண்டவாளத்தில் ஏத்தனுமே” என்றவாறு அவன் காட்டியதைக் கண்டு அவள் விழிகள், தெறித்து விடும்படியாக விரிந்தன.

 

முகநூல் பக்கத்தில் அவளது சுய விபரத்தில் அஷோக்குடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பதிவிடப்பட்டு இருந்தது.

 

“இ..இது என்ன? என் பேஜ்ல எப்படி?” தலையில் கை வைத்தாள் வினிதா.

 

“ஓஹ்ஹோ. வேற என்ன சொல்ல வர்ற? உன் பேஜ்ல நான் போஸ்ட் பண்ணேன்னு சொல்லுறியா? உன்னோட ஐடி உன் ஃபோன்ல மட்டுமே இருக்குங்குறது எனக்கு தெரியும். இதுக்கு அர்த்தம் என்ன வினி?” பற்களை நறநறத்தான் தேவன்.

 

“சோ? நீ என்னை நம்பல. அப்படினா நானும் பதில் சொல்லுறேன் கேட்டுக்க. இதற்கு அர்த்தம் எதுவா இருந்தாலும் உனக்கு வேலை இல்ல. என் விஷயம் உனக்கு எதுக்கு?” ஆற்றாமையுடன் கேள்வி விடுத்தாள்.

 

“எனக்கு வேணும் என்பதால் தான் கேட்கிறேன். இல்லனா எப்படியோ போய் தொலையட்டும் என்று விட்டு இருப்பேன்” பின்னந்தலையை அழுத்திக் கோதிக் கொண்டான்.

 

“வேணும் என்பதால் கேட்குற உனக்கு என் மனசு புரியாதா தேவ்? நான் அப்படி பண்ணுவேன்னு நெனக்கிறியா? இல்ல இல்ல. நெனச்சிட்ட தானே?” கண்ணோரம் கண்ணீர் துளிர்த்தது அவளுக்கு.

 

“அப்படி இல்ல வினி. அப்படி நெனச்சா நான் கேட்டு இருப்பேனா?”

 

“நீ கேட்ட விதம் சரியா? ரொம்ப வலிக்க வெச்சுட்ட. உன்னெல்லாம் லவ் பண்ணுனதுக்கு பேசாம நான் செத்து இருக்கலாம்” கோபமாக சொன்னதைக் கேட்டு, “ஏய்ய்” என்ற ஆக்ரோஷத்துடன் அவளது கழுத்தைப் பிடித்திருந்தான் தேவன்.

 

“இப்படி உனக்கு கோபம் வரக் காரணம் என் மேல வெச்சிருக்கிற பாசம்னு எனக்குத் தெரியும். பாசம் வைக்க மட்டும் தான் தெரியுமே தவிர, அதை எப்படி வெளிக்காட்டனும்னு உனக்குத் தெரியல தேவ். ரொம்ப ஹர்ட் பண்ணுற” அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

“அழாத வினி. அழாதேனு சொல்லுறேன்ல?” அவளது கண்ணீர் அவனை உருக்குலைத்தது.

 

“அழ வெக்கிறதே நீ தான் தேவ். உன் மேல சத்தியமா அதை நான் போடல. என் ஃபோன்ல மட்டுமே ஐடி இருக்கும் போது எப்படி வந்துச்சுன்னும் தெரியல. இதை அழிச்சு தான் உனக்கு அதை நிரூபிக்கனும்னா அதையும் பண்ணுறேன்” தனது அலைபேசியை எடுத்து அதனை அழித்து விட்டாள்.

 

அவள் அதை செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தும் அதை முறையாகக் கேட்காமல் இப்படிச் செய்து விட்டதில் வெந்து போனது அவனுள்ளம்.

 

அழுது கொண்டிருப்பவளை எப்படி சமாதானம் செய்வது என்று அவன் விழிக்க, அஷோக்கிடமிருந்து அழைப்பு வந்தது.

 

அதை ஆன்ஸ்வர் செய்யப் போனவளோ சற்று நிதானித்து அவனைப் பார்க்க, “பேசு” என்பதாக செய்கை செய்தான்.

 

“அப்பறமா பேசிக்கிறேன்” என்றவளோ அவனை சட்டென அணைத்துக் கொள்ள, “சாரி டி” அவளது கண்ணீரைத் துடைத்து தலை வருடினான் வேங்கை.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!