🤎 நேசம் நீயாகிறாய்! 🤎
நேசம் 06
திருமண மண்டபத்தில் மாப்பிள்ளையைக் காணாததில் சலசலப்புகள் எழலாயின.
“என்னாச்சு மரகதம்? ராகவ் தம்பி எங்கே?” பதற்றத்துடன் கேட்டார் சுசீலா.
அவனுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லாததால் சென்று விட்டானோ? எத்தனை சினிமாக்களில் மணப்பெண் கல்யாணத்தின் போது காணாமல் போவதைப் பார்த்திருக்கிறார். அப்படியானால் திருமணம் வரை வந்து விட்ட, தனது மகளின் வாழ்வு? பதைபதைத்துப் போனது தாயுள்ளம்.
“நீ கவலைப்படாத சுசீ. ராகவ் தப்பா எதுவும் பண்ண மாட்டான். இன்னும் பத்து நிமிஷம் இருக்கு. அது வரை பார்ப்போம்” என்ற மரகதத்திற்கு ஒரு பக்கம் அவன் வருவான் என்ற நம்பிக்கை இருந்தாலும், மறு பக்கம் மனதோரம் அச்சமொன்று துளிர்க்கவும் தான் செய்தது.
மீராவோடு அங்கு வந்த தேன் நிலா மீதே அனைவரது கவனமும் திரும்பியது. முகத்தை சாதாரணமாக வைத்திருந்தாள் அவள். ஆனால் உள்ளத்தில் ஆழிப்பேரலை அடித்தது.
கல்யாணம் வேண்டாம் என்று அவனிடம் சொன்னவளும் அவளே. இப்போது அவனில்லை என குழம்பி நிற்பவளும் அவளே.
“மாப்பிள்ளை டாக்டர் இல்லையா? எதுவும் எமர்ஜென்சி கேஸ் வந்து போயிட்டாரோ என்னவோ?” சுகுமாரன் நிலமையை சமாளிக்கக் கூற,
பாஸ்கருக்கு மனம் தாளாமல், “அப்படினா நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறதுக்கு என்னடா?” என அவர் தோளில் கை ஊன்றினார்.
ரேஷ்மா மாதவனைக் கவலையோடு நோக்க, “டென்ஷன் ஆகாத ரேஷு. அவன் வந்துருவான்” என ராகவ்வுக்கு விடாமல் அழைப்பு விடுக்க, அவனோ எடுக்கவில்லை.
முகூர்த்தத்திற்கு மூன்றே நிமிடங்கள் இருக்க, துருவனுடன் வந்து சேர்ந்தான் ராகவேந்திரன்.
“எங்கடா போன இவ்ளோ நேரம்? இந்த நேரத்தில் காணாம போய் வயித்துல புளியை கரைச்சுட்டியே ராகவ்” தம்பியைக் கடிந்து கொண்டாள் ரேஷ்மா.
நொடி நேர மௌனத்தின் பின், “எமர்ஜென்சி கேஸ் ஒன்னு. சொல்லாம போனது தப்பு தான். ஹாஸ்பிடல்ல கால் வரவும் சீக்கிரமா போக வேண்டியதாச்சு” என்றவனது பார்வை மணக்கோலத்தில் இருந்தவளை ஆழ்ந்து நோக்கியது.
அவளோ அவன் முகத்தைச் சிறிதும் பாராமல் வேறு புறம் பார்வை செலுத்தியிருக்க, “கொஞ்சம் பொறுப்போட நடந்துக்கோ ராகவ். எல்லாம் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்காத” அவனைக் கடிந்து கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கச் சொன்னார் மரகதம்.
மணமேடையில் மாலையை மாட்டிக் கொண்டு ராகவ் அமர, அவனருகில் அமர்ந்த மங்கைக்கு இனி இவனோடு தான் வாழ்வு என அங்கு சுடர் விட்ட அக்னி சாட்சி கூறியது.
ஆயினும் அவளால் ஏற்க முடியவில்லை. அதைத் தவிர, ராகவ் இப்போது சொன்னது பொய் என்று அவள் மனம் நெருடியது.
அவன் கைகளில் தாலி வழங்கப்பட, லேசாகத் தலை சாய்த்து அவளை நோக்கிய ராகவ்வின் முகத்தில் இருந்த உணர்வு தான் ஏது?
அவனது கண்களைப் பார்த்தவளுக்கு இமைகள் படபடத்தன. என்னவென்று புரியாத உணர்வுடன் அவள் நிற்க, அவளது கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் ராகவேந்திரன்.
குங்குமம் வைக்கும் போது “ஹேப்பி மேரிட் லைஃப் ஹனி மூன்” என காதோரம் ரகசியக் குரலில் சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தாள் நிலா.
எவ்வளவு நினைத்தும் உன்னால் திருமணத்தை நிறுத்த முடியவில்லையே என்ற நக்கல் அவன் முகத்தில் தெரிவதாகத் தோன்ற அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
‘நக்கலா பண்ணுற? உனக்கு விக்கல் வர வைக்கிறேன்டா தண்ணியைக் கூட குடிக்க முடியாத அளவுக்கு. ஏன்டா இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நீ நினைக்கனும்’ உள்ளுக்குள் புகைந்தாள் பாவை.
பெற்றோர், பெரியவர்களிடம் ஆசீர்வதம் வாங்கிக் கொண்டனர் இருவரும்.
“தேனு நம்ம வீட்டுக்கு வரப் போறாளா மாமா?” என்று ப்ரீத்தி கேட்க, அவன் முறைத்துப் பார்த்தான்.
அவனது முறைப்பின் காரணம் அறிந்தவளாக, “சாரி மாமா. தேனு வரப் போறாங்களா?” என சிறியவள் மரியாதையைக் கடைபிடிக்க,
“ஆமாடா. இனிமே தேனு அங்கே தான் இருப்பா. உனக்கு ஜாலியா விளையாடலாம்” என்று ராகவ் சொன்னதும்,
“அய்ய் ஜாலி” கை தட்டி ஆர்ப்ப
ரித்த ப்ரீத்தியின் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள் தேனு.
“அக்கா” என்று அழைத்த துருவனின் முக வாட்டம் உடன் பிறந்தவளை ஏதோ செய்ய, “என்னடா உன்னை விட்டுப் போறேன்னு ஃபீலிங்ஸா?” அவன் தோளில் அடித்தாள் அவள்.
“இல்லைக்கா அது வந்து..” என ஏதோ சொல்ல வந்தவன் அங்கு வந்த ராகவ்வைக் கண்டதும் வாயை மூடிக் கொண்டான்.
“ஓகேடா. அப்பறமா பேசலாம். எதிர் வீட்டில் தான் இருக்கேன். சண்டை போடனும்னா கூப்பிடு. டிஷ்யூம் டிஷ்யூம் அடிச்சுக்கலாம்” என்று அவனை சரி செய்ய எண்ணிக் கூற, அதை அறிந்தவனாக மலர்ந்து சிரித்தான் துருவன்.
“ஃபோட்டோ எடுத்துக்க ரேஷு. இதெல்லாம் காண்பதற்கு அரிய காட்சி. எப்போ பார்த்தாலும் ரெண்டு பேரும் கீரியும் பாம்புமா பாக்ஸிங் பண்ணிட்டு இருப்பாங்க” என மாதவன் சொல்ல,
“அது அப்படித் தான் அண்ணா. ஆனால் பாசம் இல்லாம இருக்குமா?” என்று தேனுவும் துருவனும் கோரஷாகச் சொல்ல அங்கே மெல்லிய சிரிப்பலை.
வீடு செல்லும் போது அமைதியே உருவாக வந்தாள் தேனு. ராகவ்வும் அவ்வாறே. இருவர் மத்தியிலும் நீண்ட மௌனம்.
‘என் வாழ்க்கை இப்படியே போயிடுமா? பேசாமலே எவ்ளோ நேரம் இருக்க முடியும். எனக்கும் அமைதிக்கும் செட்டே ஆகாதே’ புலம்பியவாறு நகத்தைக் கடித்தாள் அவள்.
“அண்ணா பாட்டு போடுங்க” ட்ரைவரிடம் அவள் கூற, “அது வந்தும்மா..” தயக்கத்துடன் ராகவ்வைப் பார்த்தார் ட்ரைவர்.
“எனக்கு பாட்டுன்னா பிடிக்காது. ஏற்கனவே இரைச்சல், இதுல பாட்டு வேணுமா?” என்றான் அவன்.
“அதுக்காக இப்படியே வர்றதா? ஒன்னு பாட்டு போடுங்க. இல்லனா என் கூட பேசிட்டு வாங்க. போரடிக்குது” என அவள் சொல்ல,
“ஒரு நாள் கூட ஆகல. அதுக்குள்ள போரடிச்சிருச்சா உனக்கு?” என்று மெதுவாகக் கேட்ட போது, அவன் முகத்தை உன்னிப்பாகக் கவனித்தாள் தேனு.
“எதுக்கு மூஞ்சைப் பார்க்கிற? போரடிக்குதோ இல்லையோ இனி உன் வாழ்க்கை என் கூடத் தான். இதை ஒருக்காலும் மாற்ற முடியாது. சோ பழகிக்க” என்றவனுக்கு அவள் இன்னும் தன்னுடனான திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கோபத்தைக் கொடுத்தது.
“நீங்க பாட்டு கேட்க பழகிக்கங்க” என அவள் சொல்ல, “அதெல்லாம் முடியாது” மறுப்புத் தெரிவித்தான் அவன்.
“அப்போ என்னாலேயும் முடியாது”
“அப்படினா ஒரு டீல் போடலாம். ஒரு நிமிஷம் பாட்டு போடனும். அடுத்த ஒரு நிமிஷம் சைலண்டா இருக்கனும். ஓகேவா?” என்று அவன் கேட்க,
“அதுக்கு பாட்டு போடாம வாயில பூட்டு போட்டுட்டு வரலாம். டீலாம் டீல். டீல் பேசுற மூளையை டெட்டால் போட்டு கழுவனும்” ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளினாள் அவள்.
“தெரியுதுல்ல அப்போ மூடிட்டு வா” கண்களை மூடி சீட்டில் சாய்ந்தவனுக்கு தலை வலியாக இருந்தது.
அவளும் மேற்கொண்டு பேசாமல் அமைதியாக வந்தாள். வீட்டிற்குச் சென்று விளக்கேற்றும் சம்பிரதாயம் எல்லாம் முடிந்து அறையினுள் வந்து சாய்ந்தவள் லேசாக அசந்து விட்டாள்.
விழிப்புத் தட்டியதும் கைகளில் ஏதோ தட்டுப்பட, “டேய் தடியா” என கையைப் பொத்தி ஒரு குத்து விட்டவள்,
“அம்மாஆஆஆ” என்றொலித்த அலறலின் குரல் மாறுபாட்டை அறிந்து படக்கென எழுந்து அமர்ந்து கண் திறந்தாள்.
“ஸ்ஸ்” தன் திண்ணிய மார்பை வருடியவாறு அவளை முறைத்துப் பார்த்திருந்தான் கணவன்.
“அச்சச்சோ! சாரி சாரிங்க. நான் வீட்டு ஞாபகத்தில் துருவ்னு நெனச்சுட்டேன்” இளித்து வைத்தாள் தேனு.
“உன்னை நம்ப முடியுமா? கார் டயரையே பஞ்சர் பண்ணுன ஆளு நீ. அதே போல் என் ஹார்ட்டை மட்டும் பஞ்சர் பண்ணிடாதம்மா” இடது நெஞ்சைத் தொட்டுக் காட்டிட,
“ஆமா! நீங்க எதுக்கு என் பக்கத்தில் தூங்குனீங்க?” இடுப்பில் கை வைத்துக் கேட்டாள்.
“உனக்கு மண்டையில் அடி கிடி பட்டுருச்சா? நமக்கு கல்யாணம் ஆகிருச்சு. சோ நாம ஒரே ரூம்ல, ஒரே பெட்ல தான் தூங்கனும்” நெட்டி முறித்தவாறு கூறினான் அவன்.
“என்னதூஊஊ?” கூவலுடன் நிமிர்ந்தாள் பெண்.
“ஓஹ்ஹோ! இஷ்டமில்லாத கல்யாணம்னு ஒருத்தர் கட்டில்லேயும் ஒருத்தர் தரையிலேயும் தூங்கனும்னு நெனச்சுட்டீங்களோ? கண்ட கண்ட சீரியலையும் பார்த்து கெட்டு போயிருக்கே” சிரிப்பும் கடுப்புமாக மொழிந்தான் அவன்.
“என் பேச்சு இருக்கட்டும். சாருக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” ஆராய்ச்சிப் பார்வை பார்க்க,
“நானும் சீரியல் பார்ப்பேனே. ரஷ்யாவில் இருக்கும் போது போரடிச்சா சீரியல் பார்த்துட்டு இருப்பேன்” என்று சொல்ல,
“நெஜமாவா?” விழி விரித்தாள் அவள்.
“எதுக்கு அடிக்கடி ஷாக் ஆகுற? நான் சீரியல் பார்க்க கூடாதா?”
“பார்க்கலாம். தப்பில்ல” தலையை நாலாபுறமும் உருட்டியவளுக்கு அவனைப் பற்றிய தன் கணிப்புகள் தவறாகுவது போல் இருந்தன.
“அப்பறம், நான் எங்கே தூங்குறது?” அவளே கேள்வியெழுப்ப, “உனக்கு வேணும்னா தரையில் படுத்துக்க. சோபா இருக்கு. இல்லனா உன் வீட்டு கட்டிலை கூட கொண்டு வந்து போட்டுக்கோ” என்று தோளைக் குலுக்க,
“அதெல்லாம் என்னால முடியாது. வீட்டு கட்டில் எடுத்தா பிரச்சினையாகும். அப்பாம்மா ஏதாச்சும் நினைப்பாங்க” என அவசரமாக மறுத்தாள்.
“அப்படினா நீ அப்பாம்மாவுக்காக தான் வாழப் போற. அது சரி! கல்யாணமே அவங்களுக்காக தானே. நீ எப்போ மத்தவங்க மனசைப் புரிஞ்சுப்ப?” என சொன்னான் அவன்.
“யார் மனசை?” அவள் புரியாமல் கேட்கவும், “அதை உன்னால புரிஞ்சுக்க முடியாது” என்றவன் அவள் கேள்விக்கு பதில் கூறாமல் கட்டிலில் சாய்ந்து கொண்டான்.
“ஒழுங்கா பேசுங்க. பார்த்தீங்கள்ல நமக்கு புரிதலோட பேசக் கூட வரல. அதனால தான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னேன்” அவள் சோஃபாவில் அமர்ந்து கொள்ள,
“சில கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுமாம். அப்படிப்பட்ட ஒரு கல்யாணம் நம்மளோடது. அதனால தான் நீயே வேணாம்னு நெனச்ச போதும் நடந்துருச்சு” என்று கூறியவன்,
“போய் சீக்கிரம் ரெடியாகிட்டு வா. இன்னிக்கு ஏதோ ஸ்பெஷல்னு சொன்னாங்க” என்றவாறு கண்களை மூடிக் கொண்டான்.
“இ..இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?” தெரிந்தும் தெரியாதது போல் யோசிக்க,
லேசாக இமை பிரித்து “அட இது கூட தெரியாதா? கல்யாணம் எப்படி வேணா நடந்திருக்கலாம். நீ எனக்கு பொண்டாட்டியாகிட்ட. சோ சீரியல்ல வர்ற மாதிரி புரிதலுக்குப் பிறகு தான் அதெல்லாம்னு தள்ளிப் போட நான் சாமியார் இல்ல. சாதாரணமான ஒரு ஆண். சோ போயிட்டு வாங்க மிஸ்ஸிஸ் தேன் நிலா ராகவேந்திரன்” அவளது பெயரை அழுத்தமாக உச்சரித்தான் ஆடவன்.
‘ரஷ்யாக்காரன் ராக்கெட் வேகத்தில் இருக்கானே! இனி என்ன நடக்கும்?’ பேந்தப் பேந்த முழித்தாள் அவள்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி
2024-11-12