வாடி ராசாத்தி – 6
நிமிடத்தில் நடந்த அணைப்பும் முத்தமும் விலகலும் அம்முவின் உலகத்தை வேகமாக சுழல செய்ய, ஒன்றும் புரியாமல் அவன் விலகி சென்ற பின்னரும் அங்கேயே நின்றாள். கொஞ்சமாக சுரணை வர, நடந்ததை எண்ணி அளவு கடந்த ஆத்திரம் வந்தது.
“எவ்ளோ திமிர் இந்த பண்டி பயலுக்கு….? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான் மனசில….?” அவனை வாய் விட்டு திட்டியபடி வேகமாக அவனை தேடி நடந்தாள் அம்மு. அவனிடம் நறுக்கென்று நாலு கேள்வியாவது கேட்க வேண்டும் என்றிருந்தது அவளுக்கு.
********
முகமெல்லாம் சிவந்து, ஆத்திரமாக வேக நடையில் வரும் கேபியை கண்டு ஒன்றும் புரியாமல் அவன் நடைக்கு ஈடு கொடுத்து நடந்தான் சற்குணம். காரை நோக்கி செல்பவனின் ஆத்திரம் குறைவதாக இல்லை என்று புரிய,
“பச்சை பிள்ளையோட மல்லுக்கு நின்னா அறிவை எல்லாம் கழட்டி வைச்சுட்டு தான் போகணும்….” என்றான் மெதுவாக, அதே சமயம் கேலியாக.
“யாருடா பச்சை பிள்ளை….? சில்மிஷம் ஓவரா வாய் பேசுறா டா….!” ஆற்றாமையில் பொருமினான் கேபி. சொல்லும் போதே அவளை முத்தமிட்டது நினைவுக்கு வர, கன்னத்தில் கொடுத்ததுக்கு பதிலா ஓவரா பேசுற அந்த வாயில கொடுத்து இருக்கணும்…. வாயாடி…. மனம் கொஞ்சியது.
“என்னடா பண்ணே….? ஆத்தா காளி அவதாரம் எடுத்து வருது….” அவர்களை நோக்கி கோபமாக வரும் அம்முவை கண்டு கேபியிடம் கேட்டான் சற்குணம்.
வரட்டும் வரட்டும்…. என்று நினைத்து கொண்டவன், திரும்பியே பாராமல் அழுத்தமாக அப்படியே நின்றான். ஏதோ ஊடல் என்று புரிந்த சற்குணம், மெதுவாக அங்கிருந்து நகர ஆரம்பித்தான். அம்முவை கடக்கையில் வேண்டுமென்றே,
“செல்லாத்தா…. மாரியாத்தா….” என்ற பாடியபடி நடந்தான்.
கடக்கும் அவனிடம், “இருங்கடா உங்க ரெண்டு பேருக்கும் பாலிடால் பாயாசம் வைக்கிறேன் ஒரு நாள்….” என்றாள் சத்தமாக.
போகும் அவன் சத்தமாக சிரிக்க, அம்முவை திரும்பி கூட பார்க்காமல் நின்றிருந்த கேபி வாய்க்குள் சிரித்துக் கொண்டான்.
கேபியை நெருங்கிய அம்மு,
“ஹேய், எவ்ளோ தைரியம் உனக்கு….? எப்படி செய்வே அப்படி….? என்றாள் ஆத்திரமாக.
“எப்படி ….?” வம்பு வளர்த்தான் கேபி.
“நடிக்காதே டா பால் பாண்டி….!” கடுகடுத்தாள் அம்மு.
“உன்னை மாதிரி ட்ராமா போடுற ஆளு எல்லாம் என்னவேணா பேசுவீங்க, அதனால் கேட்கிறதை தெளிவா கேளு டி….”
“நல்லா செய்ற டா நீ…. எனக்கும் ஒரு காலம் வரும் டா….” அவன் பிடி கொடுக்காமல் பேசியதில் மிகுந்த கடுப்பாகி பொரிந்தாள் அம்மு. வெளிப்படையாக ஏன் எனக்கு முத்தம் கொடுத்தாய் என்று கேட்க முடியவில்லை அவளால். அவன் கண்கள் அவளை ரசனையுடன் கூறு போடுவதை உணர்ந்தவளுக்கு அதை பற்றிய பேச்சையே எடுக்க முடியவில்லை.
“ஓ! நல்லா இருந்துச்சா…. ரொம்ப சந்தோஷம்…. நீ ரொம்ப நாள் எல்லாம் வெய்ட் பண்ணனும் அவசியம் இல்லையே…. நான் இங்கேயே இருக்கேனே….” கிண்டலும் கேலியும் பொங்கி வழிய பேசினான் கேபி. அவன் பேச பேச அவள் முகம் போகும் போக்கை பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.
“சே….! உன்கிட்ட பேசுறதே வேஸ்ட்….” அவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவனை தாண்டி கொண்டு நடந்தாள்.
“நீ தப்பான டைரக்ஷன்ல போறே….” என்றான் கேபி இரட்டை அர்த்தத்தில்.
“உனக்கு தேவையில்லாதது அது…. நான் வழியே தெரியலைனாலும் சுத்தி போவேன்….”
“இப்படி எல்லாத்துக்கும் அப்செட் ஆனா எப்படி சில்மிஷம்….? நீயே ஏதோ ஒன்னு நினைச்சுக்கிட்டு கோவப்பட்டா எப்படி….?” கொஞ்சம் இறங்கி வந்தான் கேபி. அவனால் அவள் மேல் இருந்த கோபத்தை அதற்கு மேல் இழுத்து பிடிக்க முடியவில்லை. ஆனால் அவன் மனம் முழுதாக தெரியாதவள்,
“நானே நினைச்சுக்கிட்டேனா…. அப்போ நீ பண்ணது ஒண்ணுமேயில்லையா….?”
“அத்தான் மாதிரி மனசில பிக்ஸ் பண்ணிக்க சில்மிஷம், ஒன்னும் தப்பாகாது….” கேபி சிரிக்க,
“ஊரில் எவன் வேணும்னாலும் என்னவேணா பிக்ஸ் பண்ணிக்குவான்…. அதுக்கெல்லாம் நான் ஒன்னும் பண்ண முடியாது…. நான் எங்க அப்பா சொல்றதை தான் கேட்பேன்….” பேச்சு திசை மாறியது.
“உனக்கு அறிவு கம்மின்னு எனக்கு தெரியும்டி….” அடங்கிய கோபம் மறுபடி துளிர்த்தது.
“டேய், பார்த்து பேசு…. நீ ஊருக்குள்ள பெரிய ஆளா இருக்கலாம், எனக்கு இல்லை…. என்னை சீண்டினா உன் மரியாதை போய்டும் ….” அம்முவின் அறிவிப்பில் மனம் உற்சாகமானாது கேபிக்கு. அவளுக்கு அவன் என்றும் பெரிய ஆளாக தெரியவேண்டாம் என்பதே அவனின் ஆசை. வழக்கம் போல் அதை மறைத்து கொண்டு,
“அப்போ நான் பெரிய ஆள்ன்னு ஒத்துக்கிறே…. அப்போ இந்த பெரிய மனுஷன் சொல்றதை கேளுங்க மேடம்…. உங்க நல்லதுக்கு தானே சொல்றேன்….”
“சொல்றது முழுசா புரியலையா பூமர்…. ஊருக்குள்ளே வேணா நீ பெரிய மனுஷன், எனக்கு இல்லைனு சொன்னேன்….”
“சரி அப்போ இந்த சின்ன பையன் ஆசையை நிறைவேத்தி வைங்க மேடம்….”
“என்ன…. உன் பிசினஸ்மேன் புத்தியை என்கிட்ட காட்டுறியா….?”
“நான் இன்னும் எதையும் ஆரம்பிக்கவே இல்லைடி சில்மிஷம்….” அவனின் குரலில் இருந்த உணர்வை தரம் பிரிக்க முடியவில்லை அம்முவால். ஆனால் அது அவளை பதற வைத்தது. ஒரே ஆறுதல் அவன் கண்கள் சிரித்தது தான்.
இவன் என்ன வில்லனா….? பயப்படாதே அம்மு என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், “இங்க பாரு, நான் நேராவே சொல்றேன், நீ என்ன செஞ்சாலும்…. நீ நினைக்கிறது நடக்காது…. எங்க அப்பா சந்தோஷம், நிம்மதி தான் எனக்கு முக்கியம்”. என்றாள். அவள் என்ன செஞ்சாலும் என்பதற்கு கொடுத்த அழுத்தத்தில் சத்தமாக சிரித்து விட்டான் அவன்.
“என் மாமா மகளுக்கு எல்லாமே தலையில் தட்டி தான் சொல்லி தரணும்னு எனக்கு முன்னாடியே தெரியுமே…. கஷ்டப்பட்டு தான் எல்லாத்தையும் கத்துக்குவேன்னு பிடிவாதம் பிடிக்கிறே…. ம்ம்ம்…. நான் என்ன பண்ண…. கஷ்டப்படு…. கடைசியில நான் நினைக்கிறது தான் நடக்க போகுது….” கூலாக சொல்லியவன்,
“சுத்தி சுத்தி என் வீட்டுக்கு தான் வர போறே…. ஆல் தி பெஸ்ட்….” என்றபடி காரில் ஏறினான்.
“பெரிய நாட்டாமை இவரு…. தீர்ப்பு சொல்லிட்டார்…. போடா லொடுக்கு பாண்டி….” பின்னிருந்து கத்தினாள் அம்மு.
**********
காரில் அவனுடன் ஏறிய சற்குணம்,
“ஏண்டா, அந்த பிள்ளை கிட்ட இப்படி மல்லுக்கு நிற்கிறதுக்கு காதலிக்கிறேன்னு உண்மையை சொல்லி தொலைச்சா என்ன?” என்றான் அலுத்து கொண்டு.
“நான் எப்படா சொன்னேன் இதெல்லாம்….? நீயா ஏதாவது சொல்லாதே….” சிரித்தான் கேபி.
“மச்சான், உன்கூடவே இருக்கிறதால என்னை பைத்தியக்காரன்னு நினைக்காதே டா….” சற்குணமும் கேபியை ஓட்டினான்.
“ஹாஹாஹா, விடுறா விடுறா, பசிக்கிற அப்போ சாப்பிட்டு தானே ஆகணும்….?”
“அடப்பாவி, இப்படி தான் அந்த பிள்ளைகிட்ட பேசி வைப்பியா டா….? விளங்கிடும்….”
“உனக்கு இருக்கிற அறிவு அந்த அறிவு ஜீவிக்கு இல்லை…. நீ என்னை புரிஞ்சுகிற மாதிரி புரிஞ்சுக்காம வேற ஏதோ சொல்லுது….”
“டேய், எருமை மாடு, சின்ன பொண்ணு டா….”
“என்னடா மாரியாத்தா, செல்லாத்தா எல்லாம் எங்கே டா…?”
“அவங்க எல்லாம் ரெஸ்ட் எடுக்க போய் இருக்காங்க, இப்போ தேவதை மச்சான் என் தங்கச்சி….” சற்குணம் சிரிக்க,
“தூங்கினா தேவதை, எந்திரிச்சா பத்ரகாளியா….” மனமெல்லாம் நிறைந்து சிரித்தான் கேபி. அவளை பற்றி நினைத்தாலே உருகும் அவன் மனம், பேசினாலோ பறக்கும்.
“டேய், ஜோக் போதும், நிஜமா கேட்கிறேன்…. உன் மனசை சொல்லு டா….”
“ம்ம்…. நேரம் வரட்டும், அவளே தெரிஞ்சுப்பா…. நான் சொல்லி தான் அவள் என்னை புரிஞ்சுக்கணுமா ….?” பிடிவாதம் பிடித்தான் கேபியும்.
“சரி என்கிட்டயாவது வெளிப்படையா சொல்லு, ப்ளீஸ் டா….”
சற்குணம் கேட்டதற்காக சொல்லும் ஆள் இல்லையே கேபி, ஏனோ அவளை பற்றி பேச வேண்டும் போல் இருக்க,
“என் கூடவே அவ வாசம் இருக்கணும், அவ சேட்டை செஞ்சுகிட்டே இருக்கணும், அவ குறும்பு, பேச்சு எல்லாம் துவானம் மாதிரி என்னை நனைச்சுகிட்டே இருக்கணும். அந்த சாரலில் நான் வாழ்க்கை முழுக்க சிலிர்த்து இருக்கணும் டா….”
அவனின் இத்தனை காதல் தெரியாத அம்மு, அவன் ஏதோ அவளை வம்பு செய்து கொண்டே இருக்கிறான், ஏதோ பிரச்சனை செய்து தன் தந்தையின் மனம் நோக செய்ய போகிறான் என்று தவறாக புரிந்து கொண்டாள். அவன் திருமணம் நிச்சயம் நந்தனாவுடன் தான் அமையும் என்பது அவளின் எண்ணம்.
அவனை அவன் வழியிலேயே சென்று வம்பு செய்து, ஓட வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டாள். கூடவே, பேத்தியை தான் தன் வீட்டு மருமகளாக கொண்டு வர வேண்டும் என்று நினைத்து இருக்கும் ஜெயந்தியையும் ஒரு வழி செய்தது போல் ஆயிற்று என்று உற்சாகம் கொண்டாள்.
**********
வீடு விற்க வேண்டும் என்ற முடிவு எடுத்த பின் அதை தள்ளி போட வேண்டாம் என்று செல்வராஜ் மள மள வென்று காரியத்தில் இறங்கினார். அவர் எதிர்பாராத இடத்தில் இருந்து வீட்டை வாங்கி கொள்வதாக செய்தி வந்தது. கூடவே ஒரு கோரிக்கையுடன்.
இது நல்லதா கெட்டதா என்று புரியாமல் தடுமாறினார் செல்வராஜ். அவர்கள் ஊரில் பெரிய அளவில் மரக்கடை தொழில் செய்யும் நாராயணன், அம்ரிதாவை தன் வீட்டு மருமகளாக ஆக்கி கொள்ள விரும்புவதாக கூறினார். அது மட்டுமில்லாமல், வீட்டை விலை கொடுத்து வாங்கினாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே வசித்து கொள்ளலாம், பின் எப்போது அவர்களுக்கு பணம் வருதா அப்போது மீண்டும் வீட்டை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன் என்றார்.
நாராயணன் பற்றிய செல்வராஜிற்கு அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் இல்லை, அவர் பையன், கிஷோர் அவருடன் தான் தொழில் பார்க்கிறான். அவனை பற்றியும் எதுவும் தெரியாது. இப்போது அவனை பற்றி விசாரிப்பதா, இல்லை இந்த சம்பந்தமே வேண்டாம் என்று விட்டு விடுவதா என்று புரியாமல் தவித்தார். கடன் வாங்கிய இடத்தில் பதில் சொல்லும் கொடுமை அவரை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்க, ஒன்றும் புரியாமல் தவித்தார்.
**********
“என்ன மச்சி, கேபியோட முறை பொண்ணை கட்டிக்க போறியா….? முடிவே பண்ணிட்டியா?” கிஷோரின் நண்பன் அவனை கேட்டான். அனைவரும் தண்ணி அடித்துக் கொண்டு போதையில் இருந்தார்கள்.
“டேய், அவ யாரோட முறை பொண்ணா இருந்தாலும் எனக்கு கவலை இல்லை டா, எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்கணும்…. அவ்ளோ தான்….!” கிஷோர் அதை மட்டும் நன்றாக தெளிவாக சொன்னான்.
“என்ன மச்சான், அந்த பொண்ணு வேணுமா உனக்கு?” ஒருவன் கேட்க, மற்றவர்கள் சத்தமாக சிரித்தனர். கிஷோரின் லீலைகள் அப்படி.
“டேய், இதுவரை எனக்கு வேணும்னு நினைச்ச பொண்ணுங்களை அடைஞ்சேன், ஆனா இவ எனக்கு சும்மா வேணும் இல்லை டா, என் தேவை டா இவ…. ஆசைக்கும் தேவைக்கும் வித்தியாசம் தெரியுமா? அவ இல்லைனா எதுவும் இல்லைன்னு அர்த்தம்…. ஆயுசுக்கும் எனக்கு அவ தேவை டா….. இனிமே தங்கச்சியை பத்தி தப்பா பேசாதீங்க டா…. மச்சான் சும்மா இருக்க மாட்டேன்!”
கிஷோரின் தொனியில் அங்கு சட்டென்று ஒரு மௌனம்!
செல்வராஜ் என்ன செய்ய போகிறார்….?