💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 60
“ரூபி! உன்னை விட்டுட்டு நாங்க ஐஸ்கிரீம் பார்லர் போனோம்” யுகன் சொன்னதைக் கேட்டு, “போடா நான் கோபம். என்னை விட்டுட்டு தனியா தனியா சாப்பிடுறல்ல?” பொய்யாக மூக்கை உறிஞ்சினான் ரூபன்.
“ஹாய் ரூபன்” அகியை மடியில் அமர்த்திக் கொண்டு வந்து அமர்ந்தாள் ஜனனி.
“ஹாய் அண்ணி! உங்க கூட தான், நான் ரொம்ப கோபமா இருக்கேன். என்னைப் போக விட்டு இவங்களுக்கு மட்டும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து இருக்கீங்க” கட்டை விரலைத் தலைகீழாகக் காட்டினான்.
“ஜானு கூட டூ போடாதீங்க. பாவம்” என்று அவளுக்காக பரிந்து பேசினான் அகிலன்.
“இதோடா! அம்மாவுக்காக வரிந்து கட்டிட்டு வரியா?” என்று ரூபன் சிரிக்க, “அப்போ சார் எங்க ஊர்ல குல்ஃபி ஐஸ் எல்லாம் குடிச்சீங்களே. அதுக்கு என்ன சொல்றீங்க?” என்று ஜனனி கேட்டதும், யுகன் அவனை முறைக்க ஆரம்பிக்க, முழித்துப் பார்த்தான் ரூபன்.
“என்ன ஜானு நெஜமாவா?” என்று யுகி வினவ, “ஆமா செல்லம். மகி சித்தி தான் சொன்னா. விதவிதமா ஐஸ்கிரீம் சாப்பிட்டு இருக்கார். இப்போ உன்ன மட்டும் புடிச்சிட்டு இருக்காரு பாத்தியா?” என்று ஜனனி போட்டுக் கொடுக்க,
“இப்படி கோர்த்து விட்டுட்டீங்களே அண்ணி” என அலறினான் ரூபன்.
“இப்போ என்ன சொல்லுறீங்க ரூபி? என்னை விட்டுட்டு ஐஸ்கிரீம் சாப்பிட்டு இருக்கீங்களா? அப்போ எனக்கு..” என்று யோசிக்க ஆரம்பிக்க,
“இல்லடா எதுவும் சொல்லாத. நான் வரும் போது உனக்கு பெரிய சாக்லேட்டா வாங்கி தர்றேன் போதுமா?’ என்று கேட்க தலையை ஆட்டினான்.
“அப்போ எனக்கு?” என்று அகி கேட்க, “உனக்கும் தான் டா. உனக்கு இல்லாததா?” எனக் கேட்டான்.
“எனக்கும் வேணும்” என்று ஜனனி சொல்ல, “ஆமா அண்ணி. அது மறக்காது. எங்க வீட்டுல இப்போ மூணு குழந்தைங்க, உங்களோட சேர்த்து. உங்களுக்கும் எல்லாமே கொண்டு வரேன் சரியா?” என்று கேட்டதும் வேகமாக தலையை ஆட்டினாள்.
“சரி நான் வெச்சிடுறேன்” என்று ரூபன் பேசி விட்டு வைக்க எத்தனிக்க, “டேய் என்ன மறந்துட்டியா நீ?” என்றவாறு வந்த மேகலை மீது நேசம் மீதூறப் படர்ந்தன, அவன் விழிகள்.
“நீ என்னை மறந்துட்ட. அதான் ஞாபகம் இல்லாம வச்சுட்டே” என்றுமே அவர் முறுக்கிக் கொள்ள, “அச்சோ அப்படி இல்ல டார்லிங். யாரை மறந்தாலும் உன்னை மறப்பேனா?” என்று கேட்டு “என்னை மறந்தாலும், உன்னை மறவாத நெஞ்சோடு நான் இருப்பேன்” பாட்டாகப் பாட, முறைப்பைக் கைவிட்டு சிரித்து விட்டார் மேகலை.
“பாத்தீங்களா அண்ணி? எங்க அம்மா இப்படித் தான். பட்டுனு கோபம் வரும். சட்டுனு சிரிப்பும் வரும்” என்று சொல்ல, “அம்மான்னா அப்படித் தான். அவங்களால குழந்தைங்க மேல கோவத்தை இழுத்துப் பிடிச்சுக்க முடியாது” என்றாள் ஜனனி.
“இல்ல பாட்டி! ரூபி உங்கள தேடினார். நீங்க மாத்திரை போட்டுட்டு தூங்குறேன்னு நான் தான் சொன்னேன்” என்று அகிலன் சொல்ல, “சரிடா கண்ணா! எனக்கு என் பையன பத்தி தெரியாதா?” என்று கேட்டு ரூபனை அன்பு கனிய நோக்கினார்.
“அப்படிப் பார்க்காதீங்கம்மா வெட்கமா வருது” கைகளால் முகத்தை மறைத்துக் கொள்ள, “நீ சும்மா என்னை ஓட்டாத படவா. உனக்கு யார் மேலயோ காதல் வந்துச்சுனு எனக்கு புரிஞ்சு போச்சு” முறைத்துப் பார்த்தார் மேகலை.
“ஆமா அத்தை. நானும் ஸ்டேட்டஸ் பார்த்தேன். கொழுந்தனாரே! செல்லமான மீறல் யாரு? நெஞ்சமே ஏங்கும் தேடல் யாரு? பாட்டெல்லாம் பலமா இருந்துச்சு?” புருவம் உயர்த்திக் கேட்டாள் ஜனனி.
அண்ணன் மனைவியைப் பார்த்து இளித்து வைத்தவன், “இங்கே வந்ததும் கண்டிப்பா சொல்லுறேன் அண்ணி. அது வரை வெயிட் கரோ” வெட்கப்பட்டான் அவன்.
“பார்த்தியா ஜானு? யாருக்காகவோ ஸ்டேட்டஸ் வெச்சிட்டு என்னை லவ் பண்ணுற மாதிரி சீன் போடுவான்” மருகளைப் பார்த்து மேகலை சிரிப்போடு சொல்ல,
“அது உண்மை தான். என்னோட முதல் காதல், கியூட்டான லவ் பேர்ட் நீங்க தான் அம்மா. லவ் யூ! நான் வெச்சிடுறேன்” பறக்கும் முத்தமொன்றை வழங்க, அவனது சேட்டையில் உளமாரச் சிரித்தார் மேகலை.
…………..
வெளியே சென்று வந்த சத்யாவை ஓடிச் சென்று கட்டிக் கொண்டான் யுகன்.
“ஹேய் டார்லு” அவனைத் தூக்கி கழுத்தில் வைத்துக் கொண்ட சத்யாவின் பார்வை ஜனனியோடு கதையளந்து கொண்டிருந்த அகிலனின் மீது படிந்தது.
அவனும் என்றாவது தன்னைக் கண்டு இவ்வாறு உரிமையோடு ஓடி வர மாட்டானா என்ற ஏக்கம் அவனுள்.
அதை ஜனனி வெகுவாய் புரிந்து கொண்டு, “அகி! டாடி கிட்ட போய் பேசு”என்று அனுப்பி வைத்தாள்.
அவளது பேச்சைக் கேட்டு எழுந்து தந்தையின் அருகில் சென்றவன், என்ன பேசுவது என்று புரியாமல் விழிக்க, “ஹேய் அகி” என்றவாறு அவனது கன்னங்களைக் கிள்ளி நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்தான் சத்யா.
அவன் உள்ளமோ மகிழ்வின் உச்சத்தில் பூரித்தது. யுகனுக்கோ இதைக் கண்டு உள்ளே புகை எழ, அதை வெளிக்காட்டாமல் நின்றதை ஜனனி உணர்ந்து கொண்டாள்.
அவள் உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்குவதை அவதானித்த யுகி முறைத்துப் பார்க்க, கண் சிமிட்டிச் சிரித்தாள் காரிகை.
இருவர் மத்தியில் நடக்கும் பனிப்போரை அறிந்த சத்யா, அதைக் கண்டும் காணாதவனாக அகியிடம் ஒரு லாலிபாப்பை நீட்ட, அதை வாங்கிக் கொண்டு ஜனனியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.
இன்னொன்றை எடுத்து யுகிக்குக் கொடுக்க, “தாங்க் யூ டாடி” அவனது கன்னத்தில் இச்சென்று முத்தம் வைத்தான்.
“நான் முத்தம் கொடுக்கலல்ல ஜானு. அதை காண்பிக்க இப்படி வேணும்னே கிஸ் பண்ணி காட்டுறான்” அகி, தன் பக்கத்தில் இருந்தவளின் காதில் கிசுகிசுக்க,
“எக்ஸாட்லி! இவன் உன்னை கடுப்பேத்த செய்யுறான் டா. ஆனால் சிரிப்பா வருதே. சிரிக்கிறத கண்டா கண்ணாலயே காலி பண்ணிடுவான்” அடக்கப்பட்ட சிரிப்போடு உரைத்தாள் பெண்.
“இருங்க ஜானு ஒன்னு பண்ணுறேன்” என்றவன் ஜனனியின் கன்னத்தில் முத்தமிட, “வேணும்னே பண்ணுறான் டாடி” என்றவாறு மீண்டும் சத்யாவுக்கு முத்தம் கொடுத்தான்.
அகி ஜனனியின் மறு கன்னத்தில் முத்தமிட, யுகி மீண்டும் தந்தையின் கன்னத்தை ஈரப்படுத்தினான்.
யுகி முத்தமிட்டதைப் பார்த்து, அகி ஜனனியை முத்தமிட, இருவருக்கும் அதுவே வேலையாகிப் போனது. அகி ஜனனிக்கு முத்தம் கொடுக்க, அதற்குப் போட்டியாக யுகன் சத்யாவுக்கு முத்தமிட, மாறி மாறி இருவரும் முத்தமிட்ட படியே இருந்தனர்.
இவர்களது சேட்டையில் சிரிப்பும், வியப்பும் மேலிட நின்றது என்னவோ ஜனனியும், சத்யாவும் தான். அவள் இருவரது கூத்தையும் மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
“டேய்! என்ன டா பண்ணுற?” சத்யா யுகனிடம் கேட்க, “நான் எதுவும் பண்ணல டாடி. அவன் தான்” என உடன் பிறந்தவனை நோக்கி கை காட்ட,
“நான் எதுவும் பண்ணல. சும்மா ஜானுவுக்கு முத்தம் கொடுக்கிறேன்” என்றான் அப்பாவியாக.
“நீ வேணும்னே கொடுக்கிற. நான் டாடிக்கு கொடுத்ததற்கு பதிலா பண்ணுற” என்று அவன் சண்டைக்கு வந்தான்.
“சண்டை போட வேண்டாம். நீ பண்ணுனதால நான் பண்ணல. சரி! அப்படியே வச்சுக்கிட்டாலும் ஓகே. உன்னைப் பார்த்து நான் ஜானுவுக்கு கிஸ் கொடுக்கிறேன். அதுக்கு பதிலா நீ உன் டாடிக்கு கொடுத்துட்டே இருக்கனும்னு அவசியம் இல்லல்ல?” என்று அவன் சொல்ல,
“என் டாடிக்கு நான் கொடுப்பேன். உனக்கென்ன?” சிலிர்த்துக் கொண்டு நின்றான் யுகி.
“அடேய்! பேசாம இப்படி பண்ணுங்க. எங்களை ரிலீஸ் பண்ணிட்டு நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கங்க” என்று சத்யா சொல்ல, “இது நல்ல ஐடியாவா இருக்கே” என்ற அகி, யுகி வாய் திறக்கும் முன் அவனது கன்னத்தில் பச்சக்கென தன் குட்டி இதழ்களைப் பதித்தான்.
அவனது செயலில் ஜனனி கலீரென சிரித்து விட, கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சியாக அகிலனைப் பார்த்தான் யுகன்.
“என்னடா இப்படி சட்டுன்னு உம்மா கொடுத்த?” அவன் சீற்றத்துடன் கன்னத்தை வருடிக் கொள்ள, “டாடி தான் சொன்னாங்க. அவர் பேச்சைக் கேட்கணுமே” என்ற அகிலனை நோக்கி,
“ரொம்பத்தான் பேசுற. இதெல்லாம் ஜானு சொல்லி கொடுத்த பாடம்ல?” என்று அவன் சொல்ல, “ஜானுவை இழுக்க வேண்டாம். உனக்கு அது வேணாம்னா எனக்கே திருப்பி கொடுத்துடு. பிரச்சினை தீர்ந்துடும்” என்றான் அகி.
“இதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்கு” என அவனை நெருங்கியவன், சட்டென நிதானித்து “வேணா வேணா. நீ என் கிட்ட முத்தம் வாங்குவதற்காக இந்த மாதிரி சொல்லுற. இப்படி தந்திரமா இருக்கக் கூடாது” என்றான் யுகி.
“சில நேரங்கள்ல நாம தந்திரமாகவும் செயல்படனும் யுகி. நரி தந்திரமான மிருகம்ல? மத்தவங்க கஷ்டப்படுற மாதிரி இல்லாம, நம்மளோட சில திட்டங்களை தந்திரத்தோட பண்ணலாம்” என்றவனைப் பார்த்து,
“நீ தந்திரம்னு எதுவோ மந்திரம் போட்டு வச்சுக்கிட்டு மத்தவங்களை மயக்கலாம். இந்த யுகி அதற்கெல்லாம் அசர மாட்டான். உனக்கு நான் முத்தமே கொடுக்க மாட்டேன்” என முறுக்கிக் கொண்டான் யுகன்.
இவர்களது சண்டையை பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. சத்யா மற்றும் ஜனனி புன்முறுவலுடன் ரசித்திருந்தனர்.
“அப்படினா என் முத்தத்தை வாங்கிக்கிட்ட தானே?” அகிலன் கேட்க, “இல்ல இல்ல. வாங்கவும் இல்ல. அதற்காக திருப்பி தரவும் முடியாது” என்றான் மற்றவன்.
“உனக்கு வேண்டாம்னா நீ வெச்சுக்க கூடாது. மத்தவங்களுக்கு கொடுக்காம, நாமளும் எடுக்காம இருந்தா அது பேராசையாம். ஒரு வியாபாரி தங்க முட்டை நிறைய வேணும்னு ஆசைப்பட்டு வாத்தை கொன்னதால கெடச்ச ஒரு ஒரு முட்டையும் இல்லாம போச்சாம்னு ஜானு சொன்னாங்க” கிடைத்த சமயத்தில் கதை கூற,
“எனக்கும் அந்த கதை தெரியும். பேராசை பெரும் நஷ்டம்னு சொல்லுறது இதைத் தான். நாம அளவுக்கு மீறி ஆசைப்படக் கூடாதுனு டாடி சொல்லி தந்தார்” யுகனும் தனக்குத் தெரியும் எனச் சொன்னான்.
“அச்சோ என் தங்க குட்டிங்களா” ஜனனி இருவருக்கும் நெட்டி முறிக்க, மனதார அவளுக்கு நெட்டி முறித்த சத்யாவின் கண்கள், மகிழ்வில் ஜொலித்த அவளின் முகத்தில் வலம் வந்தன.
“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. முத்தத்தை எடுத்துட்டியா? திருப்பி தர்றியா?” விட்ட குறை தொட்ட குறையாக, அகி அதிலேயே வந்து நிற்க,
“உனக்கு முத்தம் வேணும்னா ஜானு கிட்ட கேட்டுக்க. நான் டாடி கிட்ட கேட்கிறேன். அதை விட்டுட்டு என் கிட்ட கேட்காத” யுகன் முறைப்பைச் சிந்த,
“நாம ஜானு, டாடிக்கு கொடுத்தோமே. இப்போ நீ கொடு” என அகிலன் சொல்ல, “அப்படினா..” என்றவாறு யுகன் சொன்ன நிபந்தனையில் சத்யாவும், ஜானுவும் ஜர்க்காகி நின்றனர்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி