💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 61
அகி முத்தம் கேட்டதும், “அப்படினா ஜானு கிட்ட டாடிக்கு உம்மா கொடுக்க சொல்லு. நான் உனக்கு தர்றேன்” என்றான் யுகன்.
அலுங்காமல் குலுங்காமல் அவன் சொன்னதைக் கேட்டு, “அச்சச்சோ என்னால முடியாது” ஓடிப் போய் சோபாவின் பின்னே ஒளிந்து கொண்டாள் ஜனனி.
அவளது அருகில் சென்று, “ஜானு! யுகி கேட்டதைக் கொடுக்கலாம்ல?” பாவமாகக் கேட்டான் அகி.
“உனக்கு வேணும்னா நான் எப்படியாவது வாங்கி தர்றேன் டா. என்னை இப்படி மாட்டி விட்றாத, என் செல்லம்ல?” அவனது கன்னம் கிள்ளினாள் ஜானு.
“அப்போ நான் பாவம் இல்லையா?” சின்னவன் சிணுங்கலோடு கேட்க,
“நீ எப்படி தங்கமே இவ்ளோ சட்டுனு மாறின?” தனது பெருத்த சந்தேகத்தை முன்வைத்தாள் மாது.
“வினி சித்தி கூட பேசினேன். யுகி கூட ப்ரெண்டாக அவங்க தான் ஐடியா தந்தாங்க. அதான் உம்மா கொடுத்து அவனை ஃப்ரெண்டாக்க பார்க்கிறேன்” கண்களை உருட்டி அவன் சொன்ன பாவனையில், உதட்டோரம் சிரிப்பொன்று உதயமாகியது.
‘இதுக்கெல்லாம் காரணம் அந்த வினி தானா? தேவாவ இப்படி தான் கரெக்ட் பண்ணி இருப்பா போல’ மெல்லிய சிரிப்புடன் சொல்லிக் கொண்டவளோ, “அதுக்கென்ன அகிம்மா? நீ தாராளமா கொடு. பட், ஜானுவை இழுக்க வேண்டாமே” கெஞ்சலுடன் கேட்டாள்.
“நான் இழுக்கல ஜானு. யுகி தான் சொல்லுறான்” அவனின் பாவமான முகபாவனையில் இளகி விட்டது அவளிதயம்.
‘இந்த ஹிட்லர் எல்லாத்துக்கும் சிரிச்சு சிரிச்சு இருக்காரே தவிர, எதுவும் வாய் திறந்து பேச மாட்டேங்குறார். இவரை என்ன பண்ணுறதுன்னே தெரியல’ உள்ளுக்குள் பொரிந்து கொண்டு சத்யாவைப் பார்த்தாள்.
அதே சமயம் “என்ன யுகி ஏதோ தீவிரமா யோசிக்கிற?” மகனிடம் வினவினான் சத்யா.
“இந்த அகி எப்படி துள்ளினான்? இப்போ நான் சொன்னதைக் கேட்டு ஆஃப் ஆகிட்டான் பார்த்தீங்களா?” ஏதோ சாதித்த மிதப்பில் மொழிந்தான் யுகன்.
“அடேய்! அகியை ஆஃப் பண்ண, ஜானு தான் ஆயுதமா? நல்லாருக்கு டா உன் நியாயம். தந்திரம் பற்றி அவனுக்கு தத்துவம் சொல்லிட்டு நீயும் அதையே பண்ணுறியே” வாயில் கை வைத்தான் தகப்பன்.
“ச்சும்மா இருங்க டாடி! என்ன நடக்குதுனு பார்ப்போம். இனிமே கிஸ் கேட்டு வருவானா அவன்?” பாக்கெட்டினுள் கை விட்டு நிற்க, “உன் கூடப் பிறந்தவன் தானே? முத்தம் கொடுக்குறதுல என்ன தப்பு?” புருவம் தூக்கினான் சத்யா.
“அப்படினா நீங்க ரூபிக்கும், சித்தாவுக்கும் கிஸ் பண்ணுங்க. நான் அகிக்கு கொடுக்கிறேன்” என்றதும், “நல்லா வலை வீசுற டா” மகனைச் செல்லமாக முறைத்தான்.
பேச்சு மகனிடம் இருந்தாலும், பார்வை இருந்தது என்னவோ பாவை அவளிடம் தான். அகியிடம் கண்களைச் சுருக்கி, உதடு பிதுக்கி, தலையை ஆட்டி அசைத்து அவள் கெஞ்சிடும் விதங்கள் அவனை ரசிக்கத் தூண்டின.
“என்ன முடிவு எடுத்திருக்க?” அகியிடம் வேண்டுமென்றே வம்பிழுக்கச் சென்றான் யுகி.
“என்ன முடிவு?” அகி கேட்க, “அகிக்கு நான் முத்தம் கொடுக்கனும்னா, ஜானு டாடிக்கு முத்தம் கொடுக்கனும்” என்றான் யுகி.
“நான் டாடிக்கு முத்தம் கொடுக்கும்னா நீ எனக்கு முத்தம் தரனும். டீல்?” ஜனனி டீல் பேச, “நோ நோ என்னால முடியாது” உடனடியாக மறுப்புத் தெரிவித்தான் யுகன்.
“ஆங் ஓகே! இனி இந்த முத்த பேச்சு வேண்டாம். யாரும் யாருக்கும் கொடுக்க தேவையில்லை” என்று பேச்சை முடித்துக் கொண்ட ஜனனிக்கு, யுகியின் ஒதுக்கம் வருத்தத்தை வழங்கிற்று.
“நைட் ஆச்சு அகி! வா தூங்கலாம்” அகியை அழைத்துக் கொண்டு அறைக்குச் சென்று விட்டாள் ஜானு.
சத்யாவும் மற்றைய அறையில் யுகனோடு தஞ்சம் புகுந்தான்.
“நீ ஏன் யுகி, ஜானு கிட்டிருந்து தூரமா இருக்க? முன்ன மாதிரி இருக்கலாம்ல?” மகனின் தலை வருடியவாறு வினவினான் சத்யா.
“அவங்க அகி கூட பேசுறது எனக்கு பிடிக்கல. என்னால பழக முடியாது டாடி”
“அது தப்பு இல்லையா கண்ணா? அகி விஷயத்தை விட்டு, ஜானுவை மட்டும் யோசி. ஒருத்தர் கூட நாம ஃப்ரெண்ட்லியா நெருக்கமா இருந்துட்டு, திடீர்னு விலகினா அவங்களுக்கு வலிக்கும்ல? நம்ம கூட சந்தோஷமா இருந்த நாட்களை நெனச்சு அவங்களுக்கு கஷ்டம் வரும் தானே? அது சரியில்ல டா. நாம எப்போவும் எல்லார் கூடவும் ஒரே மாதிரி பழகனும். எப்போவும் அப்படியே இருக்க முடியாதுன்னா க்ளோஸாக கூடாது. மீறி பழகிட்டோம்னா என்னிக்கும் அந்த ரிலேஷன்ஷிப்பை விட்டுட கூடாது” தந்தை சொல்வதை ஆழமாக உள்வாங்கிக் கொண்டான் மைந்தன்.
அவன் நெற்றியில் விழுந்த யோசனை ரேகைள் அதனை எடுத்துரைத்தன.
“சரி யுகி. நாளைக்கு பார்ப்போம். இப்போ தூங்கு” அவனைத் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான்.
மறுபுறம் அகியை உறங்க வைத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. அகிக்கு கதை சொல்லி உறங்க வைத்தவளுக்கு நித்திரை வர மறுத்தது.
அவன் நெற்றியில் முத்தமிட்டு மேல் மாடிக்குச் சென்றாள். ஊஞ்சலில் அமர்ந்து கொண்டவளின் மனம் நினைவுகளின் தாக்கத்தில் ஊசலாடியது.
அவள் பக்கத்தில் கேட்ட அரவத்தில் கண்களைத் திறந்தவளோ, அங்கு சத்யாவைக் கண்டு தள்ளி அமர, அவனும் அமர்ந்து கொண்டான்.
“தூங்கலயா?” என்று கேட்டவளின் முகம் சொன்னது ஏதோ சரியில்லை என்று.
“தூக்கம் வரல. அதான் இங்கே வந்தேன்” பதில் தந்தவனுக்கு உண்மையில் தூக்கம் வரவில்லை தான், அதற்குக் காரணம் ஜனனியே.
அவளின் நினைவு மனதைத் தீண்ட, அறையினுள் எட்டிப் பார்த்தவன், அங்கு இல்லை என்றதும் இங்கு வந்து விட்டான்.
“எதுவும் பிரச்சினையா ஜானு?” அவள் முகம் பார்த்துக் கேட்டான் சத்யா.
“ஆமா” என தலையை ஆட்டியவள், சற்று நிதானித்து “மனசுக்கு கஷ்டமா இருக்கு. பட் அய்ம் ஓகே. அது சரியாகிடும்” என்றவளுக்கு அதனை அவனிடம் சொல்லத் தோன்றவில்லை.
“என் கிட்ட சொல்ல முடியாதா?” என்று கேட்டவன் அவளுக்கு வித்தியாசமாகத் தெரிந்தான்.
“நீங்க எதுக்கு இப்போல்லாம் என் கிட்ட பேசுறீங்க? அக்கறை இருக்கிற மாதிரி நடந்துக்கிறீங்க?” மனதில் தோன்றியதைக் கேட்டு விட்டாள்.
“உன் மேல அக்கறை எடுத்து பார்த்துக்கனும்னு தோணுது. ஆரம்பத்தில் உன்னை எனக்கு பிடிக்கல தான். அதற்கு உன் மேல ஏற்பட்ட தப்பான அபிப்பிராயமும் ஒரு காரணம். அதையும் மீறி, நீ யுகி கிட்ட அன்பா இருந்தது என்னை டச் பண்ணுச்சு.
அப்பறம், அகியை இங்கே கூட்டிட்டு வந்த. அவனை உசுரா பார்த்துக்கிற. இந்த குடும்பத்தையே உன் குடும்பமா நெனக்கிற. என் சார்பா நீ நிறைய பண்ணிட்ட ஜானு. இதை நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் ஓகே. ஆனால் எனக்கு உன்னை நல்லா பார்த்துக்கனும்னு தோணுது. உன் மனசுல கஷ்டம் இருக்கக் கூடாது, உன்னை சந்தோஷமா வெச்சுக்கனும்னு ஆசைப்படுறேன்” தனது எண்ணவோட்டத்தை அவனும் மறைக்காது முன்வைத்தான்.
அவளுக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. பிரதிபலன் எதிர்பார்த்து அவள் செய்வது அல்லவே அவை?
“நான் எதையும் எதிர்பார்த்து இப்படி நடந்துக்கல. அது என் கடமை. அதற்காக நீங்க பண்ணனும்னு கட்டாயம் இல்ல”
“யாரும் கட்டாயப்படுத்தி பண்ணலயே. எனக்கு தோணுது, நான் உணர்ந்து செய்யுறேன். தாய் என்ற கடமையை நீ செஞ்சா, நானும் கணவன் எனும் கடமையை செய்யனும் இல்லையா? அதை நீ மறுக்க மாட்ட தானே?” அவளது போக்கில் சென்று பிடிக்க, அவளால் மறுக்க முடிவில்லை.
அவள் கடமை என்பதைச் செய்கிறாள். அதே கடமையை அவனும் செய்ய நினைக்கும் போது அதனைத் தடுப்பது சரியில்லை என்றே தோன்றியது.
“இப்போ சொல்லு. உனக்கு என்ன பிரச்சினை? யுகி விலகிட்டான்னு யோசிக்கிறியா?” மென்மையாகக் கேட்டான்.
“யுகியோட விலகல் என்னை எப்போதுமே கஷ்டமா இருக்கு. இன்னிக்கு, அதையும் தாண்டி ஒரு காரணம் இருக்கு. ஆனால் அதை உங்க கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தெரியல. நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு யோசிக்கிறேன்” ஜனனி இப்படியெல்லாம் குழப்பமாகப் பேசி அவன் பார்த்ததில்லை.
அவனைப் பொறுத்தவரை ஜனனி மிக நிதானமானவள். புத்தி கூர்மையானவள்.அவளது முடிவுகள் தீர்க்கமானவை, ஆழ்ந்த சிந்தனை கொண்டவை.
“ஏன்? எதுவா இருந்தாலும் கட் அன்ட் ரைட்டா சொல்லுற ஆள் தானே நீ? உனக்கே குழப்பமான விஷயம் என்ன இருக்கப் போகுது?” புருவம் நெறித்தான் நாயகன்.
“ராஜ்!” சட்டென்று சொன்னாள்.
“ராஜீவ்? அது அந்த பையன் தானே?” என்றவனுக்கு ஏன் திடீரென அவனைப் பற்றி சொல்கிறாள் என்ற சிந்தனை.
“ம்ம். நாளைக்கு அவனோட பர்த் டே! என்னால அதை மறக்க முடியல. போன வருஷம் அவனுக்காக காத்திருந்து விஷ் பண்ணேன். பர்த் டே கிஃப்டா ஒரு கதை எழுதிக் கொடுத்தேன். அதெல்லாம் இப்போ ஞாபகம் வருது. ரொம்ப கஷ்டமா இருக்கு” தன்னுள்ளத்து உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டாள்.
“ஓஹ்ஹ்” என்று இதழ் குவித்தான்.
அவளது மனம் புரிந்தது. காதல்! அவள் வாழ்வில் சட்டென மலர்ந்து, சீக்கிரத்தில் மறைந்தும் போனது. ஆயினும், அந்த உணர்வு உறவைப் பிரித்தாலும் உள்ளத்தில் ஒன்றிக் கிடந்த நினைவுகளை அழித்து விடுவதில்லையே.
ராஜீவ்வின் மீதான காதல் அவளுக்கு காயம், ரணம், துயரம், ஏமாற்றம் என்பதோடு நினைவுகளையும் பரிசளித்துச் சென்றது என்றால், சத்யாவின் நிலையும் கிட்டத்தட்ட அது தானே?
இனியாவால் அவனுக்குக் கிடைத்த பிரிவும், இத்தகைய உணர்வைத் தானே தந்தது? அவளைப் பிரிந்தவன், அவளது பிறந்த தினமன்று இதே போல், நினைவுகள் நெஞ்சை வாட்ட உருக்குலைந்து நின்றான்.
“நினைவுகள் அப்படித் தான். இன்பத்தைப் போலவே சில நினைவுகள் துன்பத்தையும் அள்ளித் தரும். என்ன செஞ்சாலும் அதை அழிக்க முடியாது. கெட்ட சம்பவங்களாக இருந்தாலும், சில சுவடுகள் எங்களுக்கு அதை ஞாபகப்படுத்திடும் இல்லையா? அந்த நேரத்தில் நம்மளை அறியாமலே உடைஞ்சு போயிடுவோம்.
அதை கடந்து தான் வரனுமே தவிர, வேற எதுவும் பண்ண முடியாது ஜானு. விஷ் பண்ணலனு கவலையா இருக்கா, உனக்கு வேணும்னா ஜஸ்ட் ஒரு விஷ் சென்ட் பண்ணிடு. அப்போ உன் மனசுல உள்ள கவலை தீரும்னா அதை நீ பண்ணலாமே” அத்தனை மென்மையாகச் சொன்னான் சத்யா.
இதுவே பழைய சத்யாவாக இருந்திருந்தால் அவனை நினைக்காதே, எதற்கு அழ வேண்டும் என தாம் தூம் என்று குதித்திருப்பான். தற்போதைய மென்மையான மனம், அவனுக்கு இந்நிலையை நிதானமாகக் கையாள வைத்தது.
“இல்லங்க வேண்டாம். அவன் நம்பர் தேடி, மேசேஜ் போட்டு, அதுக்கு ரிப்ளை வருதா இல்லையானு பார்த்து, புதைஞ்சு போன நினைவுகளை தூசு தட்டி எடுக்க விரும்பல. இன்னிக்கு இப்படி இருக்கு. அது நாளைக்கு சரியாகிடும். அதுவரைக்கும் இப்படி கடந்து வந்துடறேன். நீங்க போய் தூங்குங்க” அவனது தூக்கம் தன்னால் கெட வேண்டாம் என அனுப்பி வைக்க முயன்றாள்.
“நான் போக மாட்டேன். எனக்கும் நீ சொன்னதைக் கேட்டு பழைய ஞாபகங்கள் வரத் தொடங்கிடுச்சு. ஒன்னு பண்ணலாம். ரெண்டு பேரும் லவ் பெய்லியர் ஷாங் கேட்கலாமா?” என்றவாறு ஒரு பாடலை ஒலிக்க விட்டான்.
🎶 தீராத துயரத்தில் நானும் காற்றோடேன் கரைந்தாய் நீயும்.. நீங்காத நினைவலையானாய் அன்பே அன்பே..🎶
ராஜீவ்வின் நினைவுகள் அவளைத் தாக்க ஆரம்பிக்க, சட்டென அதை அணைத்து விட்டாள்.
“எதுக்கு ஆஃப் பண்ணே?” அவன் புரியாமல் பார்க்க, “சோகத்தில் இருக்கேனு இதைப் போட்டா இன்னும் ஃபீலிங்ஸ்ல ஊறிப் போக வேண்டியது தான். மனசை திசை திருப்புறதுக்காக நல்ல ஒரு பாட்டு போடுங்க” முறைத்துப் பார்த்தாள் மங்கை.
“உனக்காக தான்மா போட்டேன். வேண்டாம்னா மாத்திக்கலாம்” என்றவன், ஒரு குச்சி ஒரு குல்பி பாடலைப் போட்டான்.
“இப்போ தான் ஞாபகம் வருது” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த லாலிபாப்பை எடுத்து நீட்டினான்.
“வாவ்! இது சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு” அதனை வாங்கிச் சுவைத்தவளிடம், “உனக்கு ஏதாச்சும் வேணும்னா தயங்காம கேளு. நான் வாங்கிட்டு வர்றேன்” என்றிட,
“அது எப்படி கேட்குறது?” எனக் கேட்டவளை முறைத்து, “ரூபன், தேவன்னு எல்லார் கிட்டவும் கேட்குற தானே? அப்படித் தான். அவங்களை விட என் கிட்ட உரிமையா கேட்கலாம்” என்றவனின் மனமோ தன் மீதான அவளது உரிமையை எதிர்பார்த்தது.
“ஓகே ஓகே. நெனச்சா கேட்கிறேன்” என்றவாறு ஆர்வ மிகுதியில் அடுத்த பாடல் வரியைப் பாடினாள்.
“உன் கூடத் தான் ஃபோட்டோ புடிச்சேன் டச்சு ஃபோனுல. டச்சு பண்ணி இச்சு கொடுப்பா ஹனிமூனுல” பாடிய பின்பே, அதன் அர்த்தம் உணர்ந்தவள் நாக்கைக் கடித்துக் கொள்ள, சத்யா சிரித்து விட்டான்.
“எ..என்ன சிரிப்பு?” சங்கடமாக நெளிந்தாள் அவள்.
“அகியும் யுகியும் முத்தம் கொடுத்து விளையாடுனது ஞாபகம் வந்துச்சு. அதான் சிரிச்சிட்டேன்” சிரிப்பு மறையாமல் சொன்னான்.
“ஆமாமா! அவங்க ரெண்டு பேரும் அப்படித் தான். செல்லமா சண்டை போடுறது கூட பார்க்க அவ்ளோ அழகா இருக்கும். என்டர்டெயின்மென்ட் ஷோவே ஓட்டிடுவாங்க” பிள்ளைகளின் நினைவில் அவள் முகத்தில் சிரிப்பு குமிழிட்டது.
“செம வாலுங்க” என்றவனுக்கு, அவள் கவலை மறந்து சிரிப்பதில் மனம் குளிர்ந்தது.
“அது சரி! அந்த பாட்டையே மாத்திட்டாங்க பாருங்களேன். டச் பண்ணாம, ஹனிமூன் போகாமலே நம்மளை இச்சு கொடுக்க வைக்கப் போனாங்க” அவளுக்கு முத்தம் கொடுக்க சொன்னதை நினைத்து, ஏதோ ஹாஸ்யம் சொன்னது போல் கிளுக்கிச் சிரித்தாள் ஜனனி.
‘ஹனிமூன்’ என்றதும் அவனுக்கு சங்கடம் கிளர்ந்தெழ, ‘என்ன பேச்சு பேசுது இது? வெட்கமே இல்ல’ என சொல்லிக் கொண்டவனுக்கு வெட்கம் வந்து விடும் போலிருந்தது.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி