62. ஜீவனின் ஜனனம் நீ…!!

4.9
(7)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 62

 

அன்று வயலுக்குச் சென்று வந்தது முதல், மகி அவனோடு முகம் கொடுத்துப் பேசவில்லை. அவளின் நிராகரிப்பு ஆடவனை ஏக்கம் கொள்ள வைத்தது.

 

எப்போது தனிமையில் சந்திப்பாள் என்று காத்திருக்கலானான். அறையினுள் சென்று அடைந்ததைக் கண்டவனுக்கு உள்ளே செல்ல மனம் இல்லை. அவனை நம்பி இந்த வீட்டினுள் விட்டிருக்கிறார்கள். அதற்குத் தகுந்தபடி நடக்க வேண்டும் என நினைத்தவன் வேறு வழியின்றி அழைப்பு விடுத்தான்.

 

உடனே அழைப்பு ஏற்கப்பட்டது. அவனுக்காகத் தான் காத்திருந்தாள் போலும்.

 

“ஹலோ மகி” என்று அவன் அழைக்க, இந்தப் பக்கத்தில் தவிப்புடன் அமர்ந்திருந்தாள் மகிஷா‌.

 

உடனடியாக அவளால் பேச முடியவில்லை. அவன் குரலில் இருந்த ஏக்கம் அவள் ஆழ் மனம் வரை சென்று தாக்கியது.

 

“மகி! ஏன் மகி இப்படி பண்ணுற? உன்னை லவ் பண்றேன்னு சொன்னது அவ்ளோ பெரிய குற்றமா? நீ ஏன் இவ்வளவு பெரிய தண்டனையை எனக்கு கொடுக்கிற? சத்தியமா என்னால முடியல மகி. இப்படி என்னை அவாய்ட் பண்ணாத. எனக்கு உன் கூட பேசனும்.

 

நான் இனிமேல் அப்படி சொல்ல மாட்டேன்னு உறுதியா கூட என்னால சொல்ல முடியல மகி. என்னையும் மீறி உன் மேல அப்படி ஒரு எண்ணம் வந்துருச்சு. அதை மறைச்சிட்டு என்னால பழகவும் முடியல. அதே சமயம் நீ இப்படி விலகி போறதை அக்சப்ட் பண்ணிக்கவும் முடியல. எனக்கு ரொம்ப வலிக்குது டா. நான் என்ன தான் மகி பண்ணனும்?” தவிப்போடு வினாத் தொடுத்தான் ரூபன்.

 

“நீ எதுவும் பண்ண வேண்டாம். இப்படியே நாம இருந்துடலாம். ஃபிரெண்ட்ஸ்னு பழகினது தான் என் தவறு. இந்த நட்பு நமக்குள்ள வரலைன்னா இந்த அளவுக்கு போய் இருக்காது. யாருக்கும் எந்த கஷ்டமும் இருந்திருக்காது. இப்போ பார்த்தீங்களா எல்லாருக்கும் கஷ்டம்” அவள் குரல் தடுமாறியது.

 

“யாருக்கு கஷ்டம்? நீ தான் எல்லாத்தையும் சிக்கலா நெனச்சுட்டு இருக்க. ஈசியா எடுத்துக்கிட்டா எந்த ப்ராப்ளமும் இல்ல. ஃபிரண்ட்ஸ் யாரும் லவ்வர்ஸ் ஆகுறது இல்லையா? சரி! நீ எனக்கு லவ்வராகவும் வேண்டாம். உனக்கு இதுக்கு அப்பறம் எதுவும் சொல்லல. அப்படினா என் கூட பேசுவியா?”

 

“காதல் ஒன்னு வந்ததுக்கப்புறம் அந்த நட்பே சிதைஞ்சு போன மாதிரி ஃபீல் ஆகுது. என்னால உங்க கூட பழையபடி பழக முடியல. ஏன் இப்படி பண்றீங்க? வேண்டாம் என்னை விட்டு விலகியே இருங்க” 

 

“மகி! நீ இப்போ என் கூட ஒழுங்கா பேசலனா ரூமுக்கு வந்துடுவேன்” என்றதும், பதறி விட்டாள் அவள்.

 

“அய்யோ வேணாம். அப்பா ஹால்ல தான் இருக்கார். நீங்க வந்தா எதுவும் நினைச்சுட போறாரு” அவசரமாக மறுத்தாள் மகி.

 

“அப்படி நினைக்கிறவராக இருந்தால் என்னை இந்த வீட்டிலேயே வெச்சிருக்க மாட்டார். என்னை நம்பி இந்த வீட்டுல விட்டு இருக்காரே அதுக்கு மதிப்பு கொடுக்கணும்னு நான் நினைக்கிறேன். நீ என்னை அதை மீறி எதுவும் பண்ண வச்சுடாம ஒழுங்கா பேசு” அழுத்தமாக உரைத்தான் ஆடவன்.

 

“என்ன பிளாக்மெயில் பண்ணுறீங்களா?” என்று கேட்டவளிடம், “மகி! நீ ஏன் இப்படிலாம் பேசுற? உன்னை கஷ்டப்படுத்தனும்னு, பிளாக்மெயில் பண்ணனும்னு, கார்னர் பண்ணனும்னு நான் நினைக்கல. உன் கூட எனக்கு பேசணும் டி” அவனுக்கு இதற்கு மேல் தனது உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியவில்லை.

 

“அப்போ உங்களுக்கு உங்க உணர்வுகள் மட்டும் தான் முக்கியம்ல? நான் என்ன நினைக்கிறேன், என்ன சிட்டுவேஷன்ல இருக்கேன், என்னோட மனநிலை எப்படி அதெல்லாம் நீங்க யோசிக்க மாட்டீங்க. உங்களுக்கு பேசணும்னா பேசணும். அதுக்காக என்ன வேணா செய்வீங்களா?” ஆக்ரோஷமாகக் கேட்டாள் மகிஷா.

 

“தப்பு தப்பா யோசிக்காத. நீ ஒரு நியாயமான காரணத்தோட இருக்கேனா ஓகே. ஆனால் நீ சொல்லுற காரணத்தை என்னால ஏத்துக்க முடியல. நீ நந்து அக்காவை நினைச்சு தானே இப்படி பேசுற? அப்படி எல்லாம் நடக்காது மகி” அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.

 

“இல்லை. எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம்.‌ இந்தக் காதலே வேண்டாம். அதனால எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” என்றவள் நந்துவை மட்டுமல்ல, ஜனனியையும் எண்ணிக் கொண்டாள்.

 

ராஜீவ்வைக் காதலித்து, பின்னர் அவனைப் பிரிந்து எவ்வளவு கஷ்டப்பட்டாள்? ஒரு வேளை ரூபனைக் காதலித்து விட்டாலும் தந்தை வேண்டாம் என்றால் என்ன செய்வது? காதல் என்ற உணர்வு வந்ததற்குப் பிறகு அவனைப் பிரிய முடியுமா?

 

அதற்காக இப்பொழுதே சென்று சொல்லவும் அவளுக்கு தைரியம் இல்லை. அதனை விட இந்தக் காதல் எனும் வலைக்குள் சிக்கி விடாமல் இருப்பதே சிறந்தது என்று அவள் மனம் கூறியது. ஆகையால், உணர்வுகளை அடக்கிக் கொண்டு ரூபனை விட்டும் விலக முயன்றாள்.

 

“காதல்னா அது கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும்னு நீயே நினைச்சிட்டு இருக்க. கஷ்டம் இல்லாம நான் உன்ன பார்த்துப்பேன் மகி. என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா? நீ கொஞ்ச நாளா இருந்தாலும் என் கூட பழகி இருக்க தானே. என் கூட இருக்கும் போது சந்தோஷமா இருப்பேன்னு நெனச்சதில்லையா?” என்று கேட்க அவள் மௌனித்தாள்.

 

ரூபன் என்ற ஒருவனுடன் பேசிய போது தானே அவள் மனதில் கொத்துக் கொத்தாக சந்தோஷப் பூக்கள் பூத்தன? மகிழ்ச்சியில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன. குளிருக்கும் அனலுக்குமான ஒரு சுகத்தை அவள் அனுபவித்தாள். அவ்வளவு இனிமையாக இருந்தது அவனுடனான உணர்வு.

 

சாப்பிடச் சொல்லி அதட்டுவது, அவனுக்காக காத்திருப்பது, மகி மகி எனும் ஓயாத அழைப்பில் சிலிர்ப்பது, அவன் புகைப்படத்துடன் தினம் பேசுவது என அனைத்துமே அவ்வளவு இனிமையாக இருந்தன.

 

அவள் வாழ்வில் ரூபன் என்பவன் ஒரு அழகிய பகுதி. அருமையான அனுபவம் தந்த ஆடவன் அவன். இருந்தும் அதை வெளியில் சொல்ல முரண்டு பிடித்தது அவளுள்ளம்.

 

“நீங்க என்ன கேட்டாலும் நான் ஒன்னே ஒன்னு தான் சொல்லுவேன். காதல் என்ற பெயரோடு தான் பேச வேணும்னா ப்ளீஸ் விலகி போயிருங்க. இதுக்கு மேலயும் உங்க கூட ஆர்கியூ பண்ணி சண்டை வளர்க்க விரும்பல. என்னை விட்டு ஒதுங்கியே இருங்க” அவள் அழைப்பைத் துண்டித்து விட,

 

தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவனுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனப் புரியாத மாயையில் பிரம்மை பிடித்தது போல் இருந்தது.

 

……………….

“எழில் எங்கே போயிட்டான்?” என்று அன்னம்மாள் கேட்ட கேள்விக்கு, “களைப்பா இருக்குனு சாஞ்சிட்டு இருக்கார் அத்தை” என்று பதிலளித்தாள் நந்திதா.

 

“அது சரி. என் பையன வேலை வாங்கிட்டு இருக்கியா நீ? அவனே ஸ்கூல் போய் பாடுபட்டுட்டு வர்றான். அவனுக்கு இங்கேயும் வேலை கொடுத்தா இன்னும் களைப்பா இருக்காதா?” என்று அவர் காட்டமாகக் கேட்க,

 

சற்று நேர அமைதியைத் தொடர்ந்து “நான் எதுவும் வேலை கொடுக்கல அத்தை‌. அவர் தான் எனக்கு தலைவலியா இருக்குன்னு சொல்லவும் காபி போட்டு கொண்டு வந்தார். ஒரு காபி போட்டா அவரை வேலை சொல்லுறதா அர்த்தம் இல்லை.

 

துணைன்னா அப்படி தான் அத்தை. ஒருத்தர் கஷ்டப்படும் போது, பலவீனமா உணரும் போது இன்னொருத்தர் பக்கபலமா இருக்கனும். அதை உதவி, வேலை என்றெல்லாம் சொல்ல முடியாது. அது கடமை. கேட்டு வாங்குறது என் உரிமையும் கூட”

 

“அதையெல்லாம் என் புள்ளய பார்க்க சொல்லாத. மனைவின்னா அதெல்லாம் செய்யணும்கிறது உன் கடமை” என்றார் அன்னம்மாள்.

 

“மனைவி மட்டும் தான் இந்த வேலையெல்லாம் பாக்கணும்னு எங்கேயும் எழுதி இல்ல அத்தை. கணவனும் எல்லா வேலையும் பார்க்கலாம். பசி, தூக்கம், ஆசை, நோய் எப்படி ஆம்பளை பொம்பளை பேதம் பார்க்காம வருதோ, அப்படித் தான் வேலைக்கும் ஆம்பள பொம்பளைன்னு வித்தியாசம் இல்லை.

 

இத நான் சொல்லல அத்தை, அவர் தான் இப்படி ஏதாவது பேச்சு வந்தா கண்டிப்பா சொல்லனும்னு சொல்லி இருக்கார். அதனால சொன்னேன். மத்தபடி உங்களை எதிர்த்துப் பேசுறேன், சண்டைக்கு வர்றேன்னு நினைக்காதீங்க. எனக்கு சண்டை போடலாம் பிடிக்காது” அமைதியாக சொல்லி விட்டு நகர்ந்தாள் நந்து.

 

அங்கு வந்த மலர் தாயைப் பார்த்து, “நான் தான் சொன்னேனே இப்படி எல்லாம் கேட்காதன்னு. தன் பொண்டாட்டிக்காக அண்ணன் செய்யுற இதையெல்லாம் நீ கேள்வி கேட்டுட்டு இருக்காத. அது யாருக்குமே பிடிக்காது. என் அத்தை என் கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்டா அது உனக்கு சந்தோஷமா இருக்குமா இல்லல்ல?” என்று சொல்ல,

 

“என்னையே எல்லாரும் ஏதோ சொல்லுங்க. நான் தான் குற்றவாளி மாதிரி. என் பையன் வேலை செய்றானேனு ஆதங்கத்தில் அப்படி சொன்னேன்” என்று நொடித்துக் கொண்டவருக்கு, மகள் சொன்ன அனைத்தும் புத்தியில் உறைக்கத் தான் செய்தது.

 

அறையின் உள்ளே நுழைந்த நந்திதா கண்களை மூடிச் சாய்ந்திருந்த கணவனின் முகத்தை நோக்கினாள். அன்னம்மாள் அப்படியான பேச்சுக்கள் பேசும் போது அமைதியாக இருந்து உள்ளுக்குள் குமைந்து போவதை விட, மனதில் உள்ளதை அமைதியாக நிதானித்துப் பேசிடப் பழகி இருந்தாள்.

 

பழகி இருந்தாள் என்பதை விட, பழக்கி இருந்தான் என்பதே சாலப் பொருந்தும். மனதில் சரி என்று பட்டதை தைரியமாக வெளியில் சொல் என எழில் சொல்லிக் கொடுத்ததன் விளைவு இது.

 

அவளுக்காக அனைத்தும் செய்கிறான் அவன். தலைவலி என்றதும், அவனே காபி போட்டு எடுத்து வந்து, தைலம் தேய்த்து விட்டான். அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் ஒரு ஜீவன்! 

 

அவளுக்கு ஒன்று என்றால் பதறி விடுவான். அவளுக்காக உள்ளம் உருகி விடுவான். இப்படி ஒருவன் தனக்கு மணவாளனாக அமைய தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றே அவளுக்குத் தோன்றியது.

 

வீட்டார் பற்றிய கஷ்டங்கள் இருப்பினும், அவற்றை மறந்து சிறிது இவனுக்காக வாழ வேண்டும் என்று அவள் முடிவெடுத்திருந்தாள். அன்று அவனை கஷ்டப்படுத்தியதன் பிறகு அனைத்தையும் பார்த்து பார்த்து பேசுகிறாள். அவனுக்கு தன்னால் கடுகளவு கஷ்டமும் வந்துவிடக் கூடாது என்பதில் அத்தனையும் கவனமாக இருக்கிறாள் நந்திதா.

 

அவனை நெருங்கி நெற்றியில் முத்தமிட, “நந்தும்மா” என்றவாறு அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான் காளையவன்.

 

“தூங்கலயா நீங்க?” அவன் மார்பில் சாய்ந்து கொண்டு கேட்க, “தூக்கம் வரலையே நந்து. நீ பேசு, தூக்கம் வருதானு பார்ப்போம்” என்றான் எழிலழகன்.

 

“நான் பேசுறது தாலாட்டு போல இருக்குனு மறைமுகமா சொல்லுறீங்க பார்த்தீங்களா? நீங்க என்னை கிண்டல் பண்ணுறீங்க. நான் பேசவே மாட்டேன்” முறுக்கிக் கொண்டாள் மாது.

 

“இல்லன்னா மட்டும் பக்கம் பக்கமா பேசிடுவா” என்றவனோ, “அச்சோ சாரி சாரிம்மா. கண்ணாலேயே எரிக்கிற மாதிரி பார்க்காத. சும்மா சொன்னேன்” அவளது மூக்கோடு மூக்கை உரச,

 

“லவ் யூ எழில்” தாடியடர்ந்த கன்னத்தில் குறுகுறுப்பாக ஒரு முத்தம் வைத்தாள்.

 

“இப்போல்லாம் எனக்கு முத்தம் முத்து முத்தா கிடைக்கிது” அவன் கண்ணடித்துச் சொல்ல, “முத்து முத்தா என்ன? கொத்து கொத்தா தர்றேனே” ஏதோ ஒரு வேகத்தில் சொல்லி விட்டவள், வெட்கம் தாளாமல் நெஞ்சில் முகம் புதைத்துக் கொள்ள,

 

“ஹேய் நந்தும்மா நீயா பேசியது?” விழி விரித்து, “டேய் எழில்! இனி உன் காட்டுல மழை தான், அதுவும் முத்த மழை” எனச் சொல்லி அவளை மேலும் சிவக்க வைத்தான், நந்திதாவின் காதல் கணவன்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!