63. ஜீவனின் ஜனனம் நீ

5
(6)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 63

 

மாலை நேரம், கோச்சிங் சென்டரில் இருந்து வந்த தேவனுக்கு மனம் கனத்தது‌. இன்று வினிதா வரவில்லை‌. எங்கு தான் சென்று விட்டாள் என யோசித்தான்.

 

அவளைப் பார்க்க வேண்டும் என உள்ளம் துடியாய்த் துடித்தது. அவள் மீதான காதல், அந்தப் பிரிவின் தாக்கத்தையும் மீறி வெளியில் வந்து அவனை ஆட்டி வைத்தது.

 

அவளுக்கு அழைப்பு விடுக்கலாமா என யோசித்தவன் வேண்டாம் என ஃபோனை பாக்கெட்டில் போட்டு விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்கையில் வினிதாவே அழைத்திருந்தாள்.

 

“ஹலோ வினி! எங்க டி இருக்க?” அவன் பதற்றத்துடன் கேட்க, “நான் பீச்ல இருக்கேன்‌. வர்றியா?” என்றதும் சரியென அங்கு கிளம்பினான்.

 

செல்லும் வழி நெடுகிலும் அவளைப் பற்றிய சிந்தனையே. எதற்கு அழைத்திருப்பாள்? புயல் வேகத்தில் அவளை அடைந்தும் விட்டான்.

 

மணலில் அமர்ந்திருந்த வினிதா, தேவனைக் கண்டும் அப்படியே சிலை போல் இருந்தாள்.

 

“வினி” அவள் தொடவும், சிந்தை கலைந்து “வா தேவ்” என்றவள் குரலில் உற்சாகம் இல்லை.

 

“ஏன் இன்னிக்கு வரல? எதுவும் பிரச்சினையா? ஏன் கூப்பிட்ட?” உள்ளத்துள் உதித்த கேள்விகளை வார்த்தையாக மாற்றிக் கேட்க,

 

“பிரச்சினை யாருக்கு தான் இல்லை? சிலருக்கு வாழ்க்கையில் பிரச்சினை. அது முற்றிப் போகும் போது பிரச்சினையே வாழ்க்கையாகிடுது. அந்த நேரத்தில் மனச தேத்திக்குறது ரொம்ப கஷ்டம்ல? எல்லாமே வெறுத்து போயிடுது” விரக்தியோடு அவள் பேசுவதைக் கேட்டவனுக்கு இதயத்தில் நெருஞ்சி முள் குத்துவது போல் வலித்தது.

 

“இதை உன் கிட்ட பல தடவை கேட்டாச்சு வினி. உனக்கு ஏதோ ப்ராப்ளம் இருக்குனு எனக்கு புரியுது‌. ஆனால் அது என்னனு தெரிஞ்சுக்க, நான் கடவுள் இல்லயே. நீ சொன்னா தான் எனக்கு தெரியும்” இப்போதாவது சொல்லி விடுவாளா என எதிர்பார்த்தான்.

 

“உண்மை தான். அதை சொல்லுற அளவுக்கு என் நிலமை இல்ல. கொஞ்ச நேரம் என் வலியை மறக்கனும்னு நெனச்சேன். அதனால உன்னைக் கூப்பிட்டேன். நான் கம்பிள் பண்ணல.

 

ஆறுதல் சொல்ல மட்டும் தான் தேவையானு நெனச்சா, நீ போயிடு. நானே என்னை பார்த்துக்கிறேன். உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணுனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்” அவள் பேசுவதைக் கேட்டவன், 

 

“அப்படியே ஒன்னு போட்டேன்னா..” கையை நீட்ட, அவளுக்கு கண்கள் கலங்கின.

 

“உன் கிட்ட கோபப்படக் கூடாதுனு நெனச்சிட்டு வந்தேன். ஆனால் நீ என் பொறுமையை சோதிக்கிற. என் கூட இருனு சொன்னா, பழசை மறந்துட்டு உன் கூடவே இருந்துட நான் ரெடி டி. இப்படி சாரி கேட்டு என்னை தூரமா நிறுத்துறது தான் கஷ்டமா இருக்கு. எனக்கு கோபம் வருது. அதனால திரும்பவும் உன்னை அழ வெச்சிடுவேனோனு பயப்படுறேன். என் நிலமை புரியுதா உனக்கு?” தன் கைகளை ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொண்டு சொன்னான் தேவன்.

 

“புரியுது தேவ்! எனக்கு என்ன பேசுறேன்னே புரிய மாட்டேங்குது. என்னென்னவோ பேசிடுறேன். எனக்கு தோணுறத எப்படி சொல்லனும், கேட்கனும்னு விளங்கல” அவளுள் அத்தனை தடுமாற்றம் இருப்பது அவனுக்கும் புரிந்தது.

 

“நீ எதுவும் பேசவும் வேணாம். கேட்கவும் வேணாம். வாயிக்கு பூட்டு போட்டுட்டு என் தோள்ல சாஞ்சுக்கிற” என்று சொல்ல, “எப்போவும் இதே போல உன் தோள்ல சாய முடியுமானு தெரியாம எப்படி..?” என அவள் கூற வருகையில்,

 

“எப்போவும் என்கிறதை எந்த டைம் வர்றப்போ பார்த்துக்கலாம். இப்போ இந்த நிமிஷம், உன் கூட நான் இருக்கேன். அதை மட்டும் யோசி. பழசும் வேணாம் பியூச்சரும் வேணாம். இந்த நேரத்தை மட்டும் அனுபவி” அவளது கையைப் பற்றிக் கொண்டான்.

 

அவனுக்கு பழையதெல்லாம் பொருட்டே இல்லை என்பது போல் இருந்தது. அவளுக்கு ஆறுதல் தர வேண்டும் என்பதே தற்போதைய ஒற்றை நோக்கமாய்.

 

“ம்ம் தேவ்” அவன் தோளில் சாய்ந்து கொண்ட வினிதாவுக்கு அழுகை பொங்கி வந்தது.

 

“அழனும்னா அழுதுடு டி” அவன் குரலில் அவ்வளவு மென்மை.

 

அவன் அனுமதிக்காக காத்திருந்ததுவோ, இமை தாண்டி கரகரவென்று வழியத் துவங்கிற்று, விழி நீரும்.

 

அமைதியாக அவளது கையை இறுகப் பற்றிக் கொண்டு நின்றான் ஆணவன். முடிந்த மட்டும் அழுது தீர்த்தாள் தாரகையவள்.

 

அவள் கண்ணீர் அவனது தோளை நனைத்தது. அவனிதயமோ ஈரமின்றி வரண்டு போனது, தன் இதய தேவியின் கண்ணீரின் ஈரத்தில்.

 

“ஹேய் ஹேய்! இதுக்கு மேல அழாதம்மா. எங்க வீட்டுல பெரிய சேதாரமே வந்துடும்” என்றவனைப் புரியாமல் நோக்கி, “என்ன சேதாரம்?” எனக் கேட்டாள்.

 

“நீ இவ்ளோ அழுறியே. அப்புறம் இந்த ஷர்ட்டைக் கொண்டு போய் எங்க அம்மா வாஷிங் மெஷின் போட்டு, கண்ணீரில் உள்ள உப்பால வாஷிங் மெஷின் துருப்பிடிச்சு பழுதாகிடுச்சுனா நீ தானே காரணம். அப்பறம் உனக்காக நான் ஏச்சு வாங்கணும்” அவன் கதை சொல்லும் பாவனையின் சொல்ல,

 

“ஏய் ஏய்” முதலில் முறைத்தவளோ, பின் சட்டென்று சிரித்து விட்டாள்.

 

“இந்த மாதிரி கதை கட்டுறத நீ இன்னும் நிறுத்தலையா? ஒரு சின்ன விஷயத்துக்கு இவ்வளவு பெரிய கதை வேணுமா உனக்கு?” என்று சிரிப்பும், முறைப்பாகக் கேட்க,

 

“இப்படி இருக்கணும் என் வினி. அதை விட்டுட்டு அழுகாச்சி மாதிரி இருந்தா நல்லாவே இல்ல. நானும் கஷ்டப்பட்டு என் மூளையை உருட்டி பிரட்டி இந்த மாதிரி கதை கட்ட வேண்டி வரும்” என்றதும், சிரித்தவளுக்கு மனபாரம் குறைந்தது போல் இருந்தது.

 

“எப்போ வேணும்னாலும் என்னை கூப்பிடு வினி‌. நான் வருவேன். நீ சந்தோஷமா இருக்கணும். இந்த மாதிரி கவலையா இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு” என்று சொல்ல,

 

“எங்கே என்னை சந்தோஷமா இருக்க விடுறாங்க?” என்று கேட்டு, தேவனின் தோளை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு சாய்ந்த செய்கையே, அவளுக்குத் தன் மீதுள்ள காதலை தேவனுக்கு பறைசாற்றப் போதுமாக இருந்தது.

 

…………..

அன்று விடுமுறை தினம். சத்யா அறையில், ஏதோ செய்து கொண்டிருந்தான். மேகலை கோவிலுக்கு சென்றிருக்க, தேவனும் வீட்டில் இல்லை.

 

அகி ஒரு பக்கமாக அலைபேசியில் மூழ்கியிருக்க, மறுபுறம் யுகியும் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.

 

ஜெயந்தியுடன் கதைத்து விட்டு வந்த  ஜனனி, குழந்தைகளைப் பார்த்து விட்டு அகியிடம் வந்தாள்.

 

“பார்த்தது போதும் ஃபோன் கொடு அகி” என்று கேட்க, “இப்போ தான் ஜானு எடுத்தேன்” சிணுங்கினான் அவன்.

 

“அடி போடுவேன்‌. எல்லா வேலையையும் கொஞ்சம் செஞ்சுட்டு பெருசா செஞ்ச மாதிரி காட்டுவ. இது மட்டும் எவ்வளவு பார்த்தாலும் கொஞ்ச நேரம் பார்த்த மாதிரி பேசுறியா?” அவனிடமிருந்து அலைபேசியை எடுத்து வைக்க, அகிலனின் பார்வை யுகனைத் தொட்டது.

 

ஜனனியுடன் அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த யுகன், அப்பார்வையின் அர்த்தம் உணர்ந்து “என் ஃபோனை எடுக்க சொல்லாத சரியா?” என முறைக்க, “அது எப்படி? உனக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டமா?” என்று கேட்டான் அகி.

 

“சட்டம் பேசாத. என்னால கொடுக்க முடியாது. டாடி வந்து கேட்டா கொடுக்கிறேன்” என்று விட்டான்.

 

“ஏன் யுகி? நான் கேட்டா தர மாட்டியா?” ஜனனிக்கு அவன் சொன்னதில் முகம் வாடிப் போக, அவனுக்கு சத்யா சொன்னது நினைவுக்கு வந்தது.

 

“நான் உங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் பேசக் கூடாதுனு நெனக்கிறேன். இந்த அகி தான் ஏதாவது பேச வைக்கிறான். அவன் எதுக்கு என்னைப் பார்க்கனும்?” முறைப்போடு கேட்டான் யுகன்.

 

“அவன் உன் தம்பி இல்லையா யுகி? நீ அண்ணனா அவனுக்கு நல்ல விஷயங்களை காட்டிக் கொடுக்கனும் தானே?” ஜனனி மென்மையாகச் சொல்ல,

 

“அவனுக்கும் என் வயசு தானே? கொஞ்ச நேரம் முன்னாடி வந்ததுல அவன் என்னைப் பார்க்கனும்னு சொல்ல வேண்டாம்”

 

“நீ நல்லா படிச்சு பரீட்சையில் மார்க் எடுக்கிற. அதைப் பார்த்து அவனும் படிச்சு மார்க் எடுக்குறான்னு வெச்சுக்க. உனக்கு எப்படி இருக்கும்?” அன்போடு கேட்டாள் அவள்.

 

“சந்தோஷமா இருக்கும். நம்மளால ஒருத்தருக்கு நல்லது நடந்தா நல்ல விஷயம் தானே? நாம எப்போவும் மத்தவங்களுக்கு பிரயோசனமா இருக்கனும்னு..” என அவன் சொல்ல வரும் போது, “டாடி சொல்லி இருக்கார். அதானே?” இடையிட்டுச் சொன்ன அகியின் பேச்சில் ஜனனி சிரிக்க, யுகி முறைத்தான்.

 

“டாடி தான் சொல்லிக் கொடுப்பார். ஹீ இஸ் மை ஹீரோ. அவர் சொல்லுற எல்லாமே நான் கேட்பேன்” பெருமையோடு அவன் கூற, “அப்படினா யுகி ஃபோன் வெச்சிடனும். நீ அதையே பார்த்துட்டு இருந்தா அகியும் பார்ப்பான் தானே?” என்றவள் அகிலனிடம் திரும்பி,

 

“ஒன்னு நாம புரிஞ்சுக்கனும் அகி. நல்ல விஷயங்களை மட்டுமே நாம மத்தவங்க கூட ஒப்பிட்டு பார்க்கனும். ஒருத்தர் உண்மை பேசுறது, அப்பாம்மா சொல் கேட்கிறது, படிக்கிறது, டேலண்டா இருக்கிறதைப் பார்த்து நாம கத்துக்கனும்.

 

நாமளும் இப்படி இருக்கனும்னு நெனச்சுக்கனும். அதை விட்டுட்டு ஃபோன் பார்க்கிறதுக்காக எல்லாம் கம்பேர் பண்ணக் கூடாது. சரியா?” என்று கேட்க, அவனும் தலையை ஆட்டினான்.

 

“இப்போ நீ ஃபோன் வெச்சிட்டு வா. நாம படிக்கலாம்” யுகியிடம் கூற, “இந்த கேம் மட்டும்” என்றான் அவன்.

 

“இருங்க நான் போய் டாடியைப் பார்த்துட்டு வர்றேன்” ஜனனி சத்யாவைத் தேடிச் சென்றாள்.

 

அவனோ லேப்பில் வேலை செய்து கொண்டிருக்க, “என்ன கீழே சத்தம்?” என்று கேட்டான்.

 

“இன்னிக்கு லீவ் தானே? நீங்களும் இதையே பார்த்துட்டு இருக்கீங்க?”

 

“வேலை இல்லை. சும்மா மூவி பார்க்கலாம்னு..” என அவன் சொன்னதைக் கேட்டு, “என்னது மூவியா? அங்க யுகி அகி ஃபோன்லயே மூழ்கிட்டு இருக்காங்க. இங்கே வந்து பார்த்தா நீங்க அதை விட மோசமா இருக்கீங்க. பிள்ளைங்களை விட மூவி ஒன்னு தேவையா? முதல்ல இந்த டப்பாவை மூடிட்டு வாங்க” காச் மூச்சென்று கத்தினாள் அவள்.

 

“நான் தினமும் இதையா செய்யுறேன். எப்போவும் வேலை‌. இன்னிக்கு ஒரு நாள் தானே இப்படி?” அவன் பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள, “உங்களை கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டேன். வாங்க வாங்க” அவள் அதட்டும் குரலில் சொல்ல, 

 

“ஓகே ஓகே. இன்னிக்கு ஒரு முடிவோட தான் இருக்க போல. வர்றேன்” லேப்பை ஷட் டவுடன் செய்து விட்டு எழுந்தான்.

 

“ஆமா! நீ எப்படி என்னை இவ்ளோ ஆட்டி அதிகாரம் பண்ணுற?” அவன் தனது சந்தேகத்தை வினவ, “உரிமையில் தான்” சட்டென்று வந்தது பதில்.

 

“உரிமையா?” கண்களை அகல விரிக்க, “குழந்தைங்களுக்கு உங்க மேல உரிமை இருக்குல்ல. அவங்க கூட நீங்க டைம் ஸ்பெண்ட் பண்ணனும்ல? அந்த உரிமையை அவங்களுக்காக நான் கேட்கிறேன்” என்றவாறு அவன் பின்னே வந்தாள்.

 

“அவங்களுக்கு மட்டுமில்ல, உனக்கும் என் மேல உரிமை இருக்கு ஜானு” எனக் கூறிச் சென்றவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவள் மனதைத் தாக்கியது.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!