💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 65
இன்னும் ஒரே மணி நேரத்தில் டாக்ஸி வருவதாக இருந்தது. தனது உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ரூபன்.
அவன் முகத்திலோ எந்தவித சந்தோஷமும் இல்லை. அவ்வளவு இறுக்கமாக அமர்ந்திருந்தான். இன்னும் ஒரு வாரம் அவனால் இங்கு இருந்திருக்க முடியும். நேற்று நடந்த சம்பவத்தின் விளைவாக இன்றே இந்த ஊரை விட்டும் கிளம்ப முடிவெடுத்தான்.
கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த ரூபனுக்கு நேற்று சந்தோஷமாக கண்ணாடி பார்த்த நினைவு. சூப்பர் மார்கெட் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டவனை, ஜெயந்தி மகியிடம் அழைத்துச் செல்லச் சொல்லி இருந்தார்.
கறுப்பு நிற டிஷர்ட் மற்றும் பேன்ட்டில் தன்னை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டான் ரூபன். மகியுடன் தனிமையில் பேசக் கிடைக்கும் என்பதை எண்ணி அவன் மனம் குதூகலித்தது.
நடந்தே செல்லும் தூரம் தான். இருவரும் நடந்து செல்ல, அங்கே நீடித்த அமைதி நிலவியது. அதை முதலில் கலைத்தது ரூபன் தான்.
“மகி…!!” அவனது உருகும் அழைப்பு அவளை உலுக்கிப் பார்க்க, “சொல்லுங்க ரூபன்” ஒட்டுதல் இல்லாமல் அழைக்க வெகு சிரமப்பட்டாள் அவள்.
“ஏன் மகி இப்படி இருக்க? உன் கூட பேச கிடைக்குமேனு எவ்ளோ சந்தோஷமா வந்தேன். நீ என்னைக் கண்டுக்காமலே இருக்க. எனக்காக காத்திருப்பியே, நான் வர லேட்டானா கோபப்படுவியே, உரிமை எடுத்து சண்டை போடுவியே. இப்போ ஏன் டி இப்படி இருக்க?” அவளது விலகலை அவனால் தாங்க முடியவில்லை.
“எதுவும் வேண்டாம்னு தான் விலகுறேன்ல? என் விலகலை உணர்ந்து நீங்களும் தள்ளிப் போயிடுங்க. யாருக்கும் கஷ்டம் இருக்காது”
“எனக்கு கஷ்டமா தான் இருக்கு. நீ தேவையில்லாம ஒதுங்கி போகும் போது அதை ஏத்துக்க முடியல. என்னை விட்டு தூரமாகுறது உனக்கும் கஷ்டமா இருக்கும்னு எனக்கு தெரியும். ரெண்டு பேருக்கும் கஷ்டம் இல்லாம, பழையபடி சந்தோஷமா இருக்கலாமே” கவலையோடு கேட்டான் காளை.
“பழையபடி இருக்க முடியாது ரூபன். காதல் என்கிற நஞ்சு எப்போ கலந்துச்சோ அப்போவே நட்புங்கிற பால் விஷமாகிடுச்சு. இனி அதுக்கு ஆசைப்பட நான் விரும்பல. எனக்கு எதுவும் வேண்டாம்” அவளால் ரூபன் கஷ்டப்படுவதை ஏற்க முடியவில்லை.
வேண்டாம் என்றாலும் விலகிப் போகாத அவனை என்ன செய்வது? தனது விலகல் அவனைப் பாதிக்கும் என அறிந்தவளுக்கு அந்த கஷ்டத்தைக் கொடுக்க மனமில்லை. அதற்காக, மீண்டும் நெருங்கிப் பழகவும் மனம் இல்லை.
இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே சூப்பர் மார்கெட் வந்து விட்டது. அதனுள் சென்றவன், அவளது வீட்டிற்காக பொருட்களை வாங்கினான்.
“நீங்க வீட்டுக்கு கிளம்ப போறீங்களா?” ஆர்வமாக கேட்பது போல் நடித்தாலும், அவள் குரலில் தவிப்பு இருந்தது.
“கிளம்பினா சந்தோஷம் போல. நான் ஒன்னும் கிளம்பல. இது உன் வீட்டுக்கு வாங்குறேன். அதுவும், உனக்காகனு நெனச்சு வாக்குவாதம் பண்ணாத. அண்ணிக்காக வாங்கி கொடுக்கப் போறேன்” என்று அவனும் சிலுப்பிக் கொண்டான்.
“ஓஹ்! ஓகே ஓகே நம்பிட்டேன்” என்றவளின் மனமோ, தனக்காக எதுவும் வாங்கிட மாட்டானா என எதிர்பார்த்தது.
பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியில் வரும் போது மழைத் தூறல்கள் மண்ணைத் தொடவாரம்பித்தன.
“அச்சோ மழை வருது” என அதிர்ந்த இருவரும் நடையை துரிதப்படுத்தினர்.
இருந்தாலும் மழை வலுத்து விட, “இந்தப் பக்கம் கொஞ்சம் நின்னுட்டு போலாம்” என்று மூடி இருந்த கடையோரமாக காண்பித்தாள் மகிஷா.
“ஓகே” என்றவாறு அவளோடு அந்தப் பக்கமாக ஒதுங்கினான்.
நொடி நேர மௌனத்தின் பின்னர் “மகி” என்று அழைத்தவனுக்கு அவளோடு நிறையவே பேச வேண்டும் போல் இருந்தது.
அவளுக்கும் அவனது அண்மையில் இதயம் படபடக்க, தனது உணர்வுகளை வெளியில் காட்டக் கூடாது என அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.
“மகி பேசு” என்று சொல்ல, “என்ன பேசணும்?” பக்கவாட்டாகத் திரும்பி அவனை நோக்கினாள்.
“டேக் இட்” என்று தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து சாக்லேட்டை எடுத்து நீட்ட, அவளது கண்கள் மகிழ்வில் மின்னின.
தனக்காக எடுத்து வந்திருக்கிறானே என்கின்ற உணர்வு அது. அதை வாங்க கையை நீட்டியவள், ஏதோ யோசனை பிறக்கவும், வெடுக்கென கையை இழுத்துக் கொண்டாள்.
“என்னாச்சு? உனக்கு தான் டா. சாப்பிடு” அன்பில் குழைந்து வந்தன வார்த்தைகள்.
“இல்ல எனக்கு வேண்டாம்” என அவள் முரண்டு பிடிக்க, “இதோ பார் மகி! இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் வாக்குவாதம் பண்ணாத. பேசாம வாங்கிக்க. நான் உனக்காகத் தான் வாங்கினேன்” என்றான் சற்று பிடிவாதமாக.
“முடியாது. எனக்கு வேண்டாம்” அதை வாங்கு வாங்கு என தூண்டிய மனதை அடக்கிக் கொண்டு சொல்ல, அவனுக்கோ கோபம் துளிர்க்க ஆரம்பித்தது.
“நானும் எவ்வளவு தான் பேசாம இருக்கிறது? என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. நீ இந்த அளவுக்கு தள்ளிப் போறது எனக்கு ஒரு மாதிரி இருக்கு. உன்னை இழுத்து எனக்குள்ள பொத்தி வச்சுக்கனும் போல இருக்கு. என் நெருக்கம் வேண்டாம் வேணாம்னு சொல்லச் சொல்ல என் காதல் அதிகமாகுது. என்னால முடியல மகி” அவனது மனதில், ஏக்கத்தையும் தாண்டியதொரு காதல் கரை கடந்து ஓடியது.
“எ..என்ன பேசுற ரூபி?” அவளது நாவில் வார்த்தைகள் பரதநாட்டியம் ஆடலாயின.
“ஐ லவ் யூ மகி” அவளின் கண்களை ஆழ்ந்து நோக்கியவாறு தன் காதலை உரைத்து விட்டான்.
அவளிதயம் இன்ப தாளம் இசைக்கலானது. மறுப்பையும் தாண்டி, அவன் மீதான மென்னுணர்வு அவளை ஆனந்தங்கொள்ள வைத்தது.
அவளின் விரிந்த விழிகளும், குவிந்த இதழ்களும் அவனை அடியோடு சாய்ந்தன. இருவருக்குமான இடைவெளியை இல்லாமல் செய்யலானான் ரூபன்.
“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு மகி. உன்னோட குறும்புத்தனம், சின்னப் பிள்ளைத்தனம், துடுக்கான பேச்சு, அளவில்லாத அன்பு, குடும்பத்தின் மேல வெச்சிருக்கிற மரியாதை எல்லாமே என்னை உன் பக்கமா இழுக்குது.
உன் பேச்சை நான் கேட்டுட்டே இருக்கனும். உன்னை செல்லமா திட்டிட்டே இருக்கனும், உன் கூட சண்டை போடனும், உன் கிட்ட ஏச்சு வாங்கனும், உன்னைக் கெஞ்சிக் கொஞ்சி சமாதானப்படுத்தனும், மூச்சுக்கு முந்நூறு தடவை மகி மகினு உன்னை கூப்பிட்டுட்டே இருக்கனும். எல்லாத்துக்கும் எனக்கு நீ வேணும் மகி. எனக்காக வருவியா? என் கூட இருப்பியா? என்னை ஏத்துப்பியா மகி?” அவள் முகத்தை வாஞ்சையோடு விழிகளால் வருடியபடி வினவினான்.
அவனது குரலின் மென்மையில், காதல் சொட்டும் பேச்சில், சுண்டியிழுக்கும் பார்வையில் உள்ளம் பறிபோனது பாவைக்கு.
“ரூ..ரூபன்!” என அழைத்ததில், அவளின் பட்டுக் கன்னத்தில் கை வைத்தானின் மனம் ஒரு நிலையில் இல்லை.
“மகி லவ் யூ டா” காதல் கசியும் குரலில் கூறியவனின் தொடுதல் அவளை உருக்கி விட, தனது கையை உயர்த்தி அவன் கைப்பற்றப் போன போது, அவள் மனம் விழித்துக் கொண்டது.
‘மகி! என்னடி பண்ணிட்டு இருக்க? அறிவில்ல உனக்கு? லவ்வு வேணாம்னு சொல்லிட்டு ஏன் இப்படி இருக்க? வெட்கம் மானம் ஒன்னுமே கிடையாதா டி?’ என அவளது மனசாட்சி காரித் துப்பியது.
வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, அவனைப் பிடித்து தள்ளி விட்டவளுக்கோ வேகமாக மூச்சு வாங்கியது.
“ம..மகி”
“என்னைக் கூப்பிடாதீங்க. என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு? இப்படி என்னைத் தொட்டா உருகி போய் லவ் பண்ண ஆரம்பிச்சிடுவேன்னு நெனச்சீங்களா? டச் பண்ணுனா மயங்கிடுவேன்னு..” அவள் சொல்ல வருகையில்,
“போதும் மகிஷா” கையை நீட்டி அவளைத் தடுத்தான் ரூபன்.
“நான் தான் லவ்வும் வேணாம் ஒன்னும் வேணாம்னு சொன்னேன்ல? அதையும் கண்டுக்காம ஏன் இப்படி?” என்று கேட்க,
“லவ் வேணாம்னு உன் வாய் சொல்லுதே தவிர, உன் மனசு வேணும்னு தான் சொல்லுது. உன் மனசை இந்த கண்ணு ரெண்டும் காட்டிக் கொடுக்குது. உனக்கு என் மேலுள்ள காதலை நான் உன் கண்ணுல படிச்சிட்டேன்.
இப்போ நீ பேசுறது எல்லாம் நான் உன்னை விட்டுப் போகனும்னு தானே தவிர, மனசார பேசல. இருந்தும், நீ என் காதலை கொச்சைப்படுத்திட்ட மகி.. ப்ச் மகிஷா” அவன் குரலில் இருந்த உணர்வு அவளை ஆழமாகத் தாக்கியது.
அவளுக்கு அவன் மீதுள்ள காதலைத் தான் சந்தேகமற அறிந்து விட்டானே. இல்லை என்றால் அந்தளவு உரிமையோடு தீண்டியிருக்க மாட்டான்.
காதலை வைத்திருந்தும், அவள் அதை மறைக்க முயற்சித்ததோடு தன் காதலை வேறு விதமாகப் பேசியது அவனுக்கு கோபத்தைக் கொடுத்தது. கூடவே அளவில்லா வலியையும்.
அதன் பிறகு எதுவும் பேசாமலே வீடு வந்து சேர்ந்தனர். ஊருக்குத் திரும்பிச் செல்லவும் முடிவெடுத்து விட்டான். மகியிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.
இதோ இன்று அதை நினைத்தவன் கதவு தட்டும் ஓசையில் நிமிர்ந்தான். மகி தயக்கத்தோடு நின்றிருந்தாள்.
“என்ன இந்தப் பக்கம்? வழியனுப்ப வந்தீங்களோ?” என்று கேட்டான்.
“இல்ல! அம்மா இந்த ஸ்வீட்ஸ் கொடுத்தாங்க, ஜானு அக்கா கிட்ட கொடுத்துட சொல்லி. அதான் வந்தேன்” மெல்லிய குரலில் சொல்ல,
“அதான் தெரியுமே. நீயா ஆசைப்பட்டு என் கூட பேச வருவியா? அம்மா சொன்னாங்க ஆயா சொன்னாங்கனு கடமை செய்யத் தானே கிளம்பி வருவ” முகத்திலடித்தாற் போல் சொன்னவனுக்கு மனம் தாளவில்லை.
“ஏன் ரூபன் இப்படி பேசுறீங்க?”
“உரிமை இல்லாத இடத்தில் வேறு எப்படி பேசுறதாம்?” என்றவாறு பையைத் தோளில் மாட்டிக் கொண்டான்.
‘போக வேண்டாம்’ என சொல்லுமாறு துள்ளிய மனதை கடிவாளமிட்டு அடக்கியபடி நின்றாள் மகிஷா.
‘போக வேண்டாம்னு சொல்லு டி’ அவன் மனம் ஏங்கித் தவித்தது.
உரசிக் கொண்ட இரு சோடி விழிகளும், மனதிற்கு மாற்றமான கதைகளை பேசிக் கொண்டன. வாய் விட்டுப் பேசாமல், வார்த்தைகள் வீசாமல் உணர்வுகள் உறைக்குமா? உறவுகள் நிலைக்குமா?
இங்கு பேசாமலே இரு உள்ளங்கள் விடைபெற்றன. ஜெயந்தி மற்றும் மாரிமுத்துவிடம் சொல்லிக் கொண்டவன், வெளியில் வரும் போது வாயிலில் நின்றிருந்தாள் மகி.
சற்று நேரம் நடையைத் தளர்த்தி அவளை ஏறிட்டான். மகி என அவளை அணைத்துக் கொண்டு கதற வேண்டும் போல் இருந்தது ரூபனுக்கு.
‘ஒரு தடவையாவது மகின்னு கூப்பிடுங்களேன்’ அவள் மனம் அவ்வழைப்புக்காக ஏங்கியது.
“போயிட்டு வர்றேன் மகிஷா! சந்தோஷமா இருங்க” தலையசைப்போடு விடைபெற்றான் ஆடவன்.
🎶 இமையே இமையே
விலகும் இமையே
விழியே விழியே
பிரியும் விழியே 🎶
🎶 எது நீ எது நான்
இதயம் அதிலே
புரியும் நொடியில்
பிரியும் கனமே 🎶
அவள் கண்கள் கலங்கிப் போயின. காதலிப்பதை விட, அதை மறைப்பது கொடுமையல்லவா? சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தொண்டைக் குழியினுள் சிக்கிக் கொண்டது அவளின் காதல்.
அவளது வார்த்தைகள் தந்த காயத்தை எண்ணி, கண்ணாடி வழியே அவளைப் பார்த்தவாறு சென்றது அவனின் காதல்.
🎶 வலியில் மூடிப் போன பாதை மீது
வெய்யில் வீசுமா
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன்
காதில் கேட்குமா 🎶
🎶 அடி மனதில் இறங்கி விட்டாய்
அணு அணுவாய் கலந்து விட்டாய்🎶
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி