66. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(4)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 66

 

சமையலை முடித்துக் கொண்டு வந்த ஜனனியின் கண்கள் வாயிலில் நின்றிருந்தவனைக் கண்டதும் அகல விரிந்தன.

 

வந்தவனிடம் காரணம் கேட்பது சரியல்ல என்பதால் “வாங்க ரூபன்! உட்காருங்க” என்றழைத்தாள் ஜனனி.

 

“அம்மா எங்க அண்ணி?” எனக் கேட்ட சமயம் அங்கு வந்த மேகலையைக் கண்டு ஈரெட்டில் அவரை அணுகி “அம்மாஆஆ” என கட்டிக் கொண்டான் ரூபன்.

 

“வா ரூபன்” மகனின் வரவை எதிர்பார்க்கா விட்டாலும் தன்னிடம் தஞ்சம் புகுந்தவனின் முதுகை வருடி விட்டார்.

 

அவனின் திடீர் அணைப்பும், குரலில் இருந்த தழுதழுப்பும் ஏதோ சரியில்லை என்பதை அப்பட்டமாக எடுத்துரைத்தன. இருப்பினும் அவன் பேசும் வரை காத்திருந்தனர்.

 

ரூபனின் சத்தம் கேட்டு இரு சிட்டுக்களும், சத்யா மற்றும் தேவனும் வந்து விட்டனர்.

 

“டேய்! வர்றேன்னு சொல்லவே இல்ல” தேவன் ஆச்சரியமாகப் பார்க்க, “ஏன் ஏன்? இந்த வீட்டுக்கு அறிவிப்பு கொடுத்துட்டு, நேரகாலம் பார்த்து தான் வரனுமா?” கோபமும் முறைப்புமாகக் கேட்டான் உடன் பிறந்தவன்.

 

“இல்லடா இல்ல. இது உன் வீடு. நீ இப்போவும் வரலாம் எப்போவும் வரலாம்” என்றவனின் கண்கள் அவனையே கூர்ந்து கவனித்தன.

 

“எல்லாரும் எதுக்கு என்னை உத்து உத்து பார்க்கிறீங்க? உங்க எல்லாரையும் பார்க்கனும் போல இருந்துச்சு. அங்கே இருந்தது போதும்னு தோணுச்சு. சோ என் ஸ்வீட் மம்மியை பார்க்க ஓடோடி வந்துட்டேன்” கடினப்பட்டு சிரிப்பைப் பூசிக் கொண்டான் ரூபன்.

 

“நீ ஏதோ குழப்பத்தில் இருக்கேனு தெரியுது. உனக்கா தோணும் போது சொல்லு. இப்போ போய் ரெஸ்ட் எடு” என்றார் மேகலை.

 

“தாங்க் யூ மா” தன்னைப் புரிந்து கொண்ட தாயின் கன்னத்தில் முத்தமிட, தீவிர யோசனையில் இருந்தான் யுகன்.

 

“சில்வண்டு சிவராமா! என்ன யோசனை உனக்கு?” ரூபன் அவனது தலையில் தட்ட, “நீங்க அப்செட்டா இருக்கீங்கள்ல. அதனால சாக்லேட் கொண்டு வந்தீங்களானு கேட்கலாமா வேணாமானு யோசிக்கிறேன்” உதடு பிதுக்கியது பிஞ்சு.

 

“அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே. உனக்கு என் கிட்ட என்ன வேணும்னாலும் தோணும் போது கேட்டுடு. இந்த குட்டி மூளையை தட்டி முட்டி யோசிக்க வேண்டாம்” சிரித்து விட்டவன், சாக்லேட்டை எடுத்து இருவருக்கும் கொடுத்தான்.

 

“தாங்க் யூ ரூபி” அகி சொல்ல, “பட்டு” அவனை செல்லம் கொஞ்சி முத்தமிட்டவன், உர்ரென்று நின்றிருந்த யுகனை நெருங்கி “காரமா இருக்கா? சீக்கிரம் சாக்கி சாப்பிட்டு ஸ்வீட்டா இரு டா பால்கோவா” அவனது கன்னத்தில் கடித்தான்.

 

“அவனுக்கு கிஸ், என்னை மட்டும் கடிக்கிற. டூ பேட் ரூபி” அவனது வயிற்றில் குத்தினான் யுகன்.

 

சிரித்து விட்டவன் “அண்ணி! உங்கம்மா கொடுத்து விட்டாங்க” என்று ஜெயந்தி கொடுத்த பையை வழங்கி விட்டு சாக்லேட்டும், அவள் கேட்ட தேன் மிட்டாயும் கொடுக்க, புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்.

 

அறையினுள் சென்று கட்டிலில் சரிந்தான் ரூபன். போலிப் புன்னகை பூசி நடிப்பது எத்தனை கஷ்டம் என்று நினைத்தான்.

 

அங்கு வந்த தேவன் கட்டிலில் அமர, சட்டென எழுந்தமர்ந்து அவன் தோளில் சாய்ந்து கொண்டான் ரூபன்.

 

“மகிக்கு ப்ரபோஸ் பண்ணுனியா?” பட்டென்று பிறந்த கேள்வியில் விழி விரித்து, பின்னர் தலையை ஆட்டி நடந்ததை சுருக்கமாகச் சொன்னான்.

 

“அவளுக்கு என் மேல காதல் இல்லனா கூட பரவாயில்லை டா. இருந்தும் அதை மறைக்கிறா. அதுக்காக என் கேரக்டரை டேமேஜ் பண்ணுற மாதிரி பேசிட்டா. என்னால அதை அக்சப்ட் பண்ணிக்க முடியல தேவா” என்ற ரூபனின் நிலை அவனுக்குப் புரிவதாய்.

 

“உண்மை தான். லவ் இல்லனா கூட அவ்ளோ கஷ்டம் இருக்காது. லவ்வை உள்ளுக்குள்ள வெச்சிட்டு அதை வெளியில் சொல்லாம, அவங்களும் ஒரு நிலையில் இருக்காம, நம்மளையும் நிம்மதியா இருக்க விடாம பண்ணும் போது பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கும்” கிட்டத்தட்ட தேவனுக்கும் அதே நிலை தானே?

 

ரூபன் அமைதியாக இருக்க, “இப்படி விட்டுட்டு வந்துட்டதால எல்லாம் சரியாகும்னு நெனக்கிறியா டா? இல்லவே இல்ல. இனி தான் நினைவுகள் கொடூரமா ஆட்டி வைக்கும். மகி எப்படியும் எதுவும் பண்ண வாய்ப்பில்ல.

 

நீயா ஏதாச்சும் பண்ணுனா தான் உண்டு. அவ பயத்தைப் போக்க நீ எதையாவது செய்யனும். அவ மனசுல இருக்கிற எண்ணத்தை நீ மாத்தனும். அதுக்கு என்ன வழியோ அதைப் பார்” தனக்குத் தோன்றியதை சொன்னான் தேவன்.

 

“சத்தியமா ஒன்னும் விளங்க மாட்டேங்குது டா. கொஞ்சம் தூங்கி எழுந்து ரிலாக்ஸா யோசிப்போம். இப்போ என்னன்னா அவளா வரட்டும், அது வரை என்ன நடக்குதுனு பார்க்க சொல்லி மனசு சொல்லுது” என்றவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

 

“நான் எதுவும் சொல்லல டா. இது உன் வாழ்க்கை. நீ தான் நல்லா யோசிச்சு முடிவெடுக்கனும். அழுதுட்டு இருக்க கூடாது. ஒழுங்கா தூங்கி எழும்பு. சாப்பாடு எடுத்து வைக்க சொல்லுறேன். எழுந்து வந்து சாப்பிடு. சரியா?” என்று கேட்டவனுக்கு ரூபனின் கவலை சூழ்ந்த வதனம் வருத்தத்தை அளித்தது.

 

“சரி டா. நான் தூங்குறேன். தலை வலிக்குது” தலையணையில் தலை சாய்த்தவனை, சிறிது நேரத்தில் உறக்கம் தழுவியது.

 

“இந்தக் காதல் ஏன் தான் ஒவ்வொருத்தரையும் இப்படி ஆட்டி வைக்குதோ தெரியல” என வாய் விட்டு புலம்பியவாறு, பெட்சீட்டால் அவனைப் போர்த்தி விட்டுச் சென்றான் தேவன்.

 

……………

எழிலுடன் கோவிலுக்கு வந்திருந்தாள் நந்திதா. சாமி கும்பிட்டு விட்டு, குளக்கட்டில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

 

“இன்னிக்கு என்னவோ மனசுக்கு சந்தோஷமா இருக்குங்க” என்றவளைப் பார்த்து, “ம்ம்” என புன்னகைத்தான்.

 

“என்ன சிரிப்பு?” அவள் புருவம் தூக்கிக் கேட்க, “நீ சந்தோஷமா இருக்கனும் என்கிறது தான் என்னோட ஆசை. அந்த சந்தோஷத்தை உன் முகத்தில் பார்க்கிறதைத் தவிர, வேறென்ன வேணும் இந்த எழிலுக்கு?” என்றவனின் வார்த்தைகளில், அவளுள் காதல் பீறிடலானது.

 

“இப்படி சொல்லாதீங்க” என்று கூறியவளால் அவனை விட்டும் பார்வையைத் திருப்ப முடியவில்லை.

 

“ஏன் சொல்லக் கூடாது? இந்த மாதிரி கண்டிஷன் போடாத நந்து. என் பொண்டாட்டி கிட்ட நான் பேசுறேன்” 

 

“அய்யோ வேண்டாங்க” என்றவளின் முகத்தைப் பார்த்து, “ஏன் வேண்டாமாம்?” எனக் கேட்டான்.

 

“நீங்க இந்த மாதிரி என் மேல பாசமா பேசும் போது என்னால சும்மா இருக்க முடியல” வெட்கப்பட்டு சொல்லி முடித்தாள் மங்கை.

 

“இருந்துட்டு தானே இருக்க. அப்பறம் என்ன?” ஒன்றும் தெரியாதவன் போல் நடித்து விட்டு, “நான் அப்படி பேசினா என் நந்தும்மாவுக்கு லவ் ப்ரெஷராகி என்னை கட்டிப் பிடிச்சுக்கனும்னு தோணுதா?” என வினவுகையில் இதழ் கடையோரம் சிரிப்பு பூத்தது.

 

“ஆமாங்க. இது கோவில் இல்லையா?  அதனால அப்படிலாம் பேசாதீங்க”

 

“அப்படினா தனியா இருக்கும் போது பேசலாமா? என்ன வேணா பேசட்டுமா? அடியே வெட்கப்படாத பொண்டாட்டி” அவளின் நாடி பிடித்துக் கொஞ்ச, “அச்சோ சும்மா இருங்க. எல்லாரும் பார்க்கிறாங்க” நங்கையின் முகத்தில், நாணம் நயாகரா போல் வழிந்தது.

 

“ஹா ஹா! நீ இப்போ வேற லெவல் நந்து. வெட்கப்படுற. நல்லா பேசுற. நல்ல முன்னேற்றம்” என்றவனுக்கு அவளை இன்னும் பிடித்தது.

 

“முன்னேற்றத்திற்கான மூலகாரணம் நீங்க தான் சார். சும்மா என்னையே வெச்சுக்கிட்டு ஓட்ட வேணாம்” செல்லமாக முறைத்தாள் மனைவி.

 

“அழகு நந்து” அவளின் நெற்றி வழித்து நெட்டி முறித்தான்.

 

பூவாய் மலர்ந்த அவள் வதனம் சட்டென அதிர்ந்து விரிந்தது. எழில் அவ்விடம் பார்வையைச் செலுத்த, அவர்களைப் பார்த்தவாறு நின்றிருந்தனர் ஜெயந்தியும் மகிஷாவும்.

 

“அம்மா! அக்காவைப் பார்த்தியா?” மகி கேட்க, “ம்ம் பார்த்தேன்” என்றவாறு நகர எத்தனிக்கையில் தாய்ப் பசுவை நாடி‌ வரும் கன்றுக்குட்டி போல் ஓடி‌ வந்தாள் நந்திதா.

 

“அ..அம்மா! எப்படிம்மா இருக்கே? நல்லா இருக்கியா?” அவரது கையைப் பற்றிக் கொள்ள, “இருக்கேன்” என்றவருக்கு அவளுடன் பேசவும் வேண்டும், இருந்தும் பேசவும் முடியாத நிலை‌.

 

“ம்மா! பேசும்மா.. நான் பண்ணுனது தப்பு தான். அதுக்காக பேசாம இருக்காத. ப்ளீஸ்மா” நந்திதா கெஞ்சுதலோடு பார்க்க, “நான் ஒன்னும் கல்நெஞ்சக்காரி இல்ல, உன்னை மாதிரி. பெத்த அம்மாவோட மனசு எவ்ளோ கஷ்டப்படும், குடும்பம் எப்பாடுபடும்னு யோசிக்காம உன் இஷ்டத்துக்கு போன சுயநலவாதி தானே நீ?” ஆற்றாமையோடு உரைத்தார் ஜெயந்தி‌.

 

“அம்மா! இப்படி பேசாத” மகிஷா இடை புகுந்து சொல்ல, “பேசட்டும் விடு மகி. நான் பண்ணுன காரியத்திற்கு இதெல்லாம் பத்தாது. இன்னுமே அனுபவிக்கனும். நல்லா சொல்லு மா. அடிச்சா கூட வாங்கிப்பேன். ஆனால் ஒரு தடவை நந்துனு கூப்பிடுமா. உன் கையால என் தலையை தடவி விடு” அவரது கையை இறுக்கிப் பிடிக்க,

 

“ஏன்டி இப்படி பண்ணுற? உன்னை அடிக்கவும் திட்டவுமா பெத்து வளர்த்தேன்? எந்த ஒரு தாய் தகப்பனும் தன் பிள்ளை சந்தோஷமா வாழனும்னு தான் ஆசைப்படுவாங்க. எவ்ளோ கோபம் இருந்தாலும் அதைத் தாண்டி, அவங்க மனசு பிள்ளைங்களோட நல்ல வாழ்வுக்காக வேண்டிக்கும்” நந்து மீது கோபம் இருப்பினும் கூட, அவள் நன்கு வாழ வேண்டுமென தான் ஆசைப்படுவதை இவ்விதம் உணர்த்தினார்.

 

“உன் கோபம் நியாயமானது. அப்பறம் ஜானு கிட்ட மட்டும் என் கூட பேச சொல்லு மா. அவ என் கால் ஆன்ஸ்வர் பண்ணவும் இல்ல. கோபமா இருக்காளோ?” என்றதும் ஜெயந்திக்கு கோபம் துளிர்க்க,

 

“அவ யார் மேலயும் கோபம் வெச்சிட்டு இருக்கிற ஆள் கிடையாது. நீ பண்ணுன காரியத்தால அவ வாழ்க்கை என்னாகுமோனு பயந்து போயிட்டேன் டி. அப்படி எதுவும் ஆகாததால நீ தப்பிச்ச. இல்லனா உன்னை மொத்தமா தலை முழுகி இருப்பேன். 

 

அவ எல்லாருக்கும் நல்லது பண்ணுற பொண்ணு. மகிக்காக அந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டா. அந்த நல்ல மனசுக்கு அவ வாழ்க்கை நல்லா இருக்கு. ஜானுவை பற்றி நீ இந்த மாதிரி கற்பனை பண்ணிக்காத சரியா?” என்றபடி கோபமாக சென்றவரை பின்தொடர்ந்து சென்றாள் மகி.

 

நந்திதாவுக்கு கண்கள் கலங்கின. அவர் கோபத்தை அவளால் தாங்க இயலவில்லை.

 

“எதுக்கு நந்து கண்ணைக் கசக்குற? அவங்க இப்படியாவது பேசினாங்களேனு சந்தோஷப்படு. எல்லாம் சரியாகிடும்” அவளது தலையை வருடிக் கொடுக்க,

 

“சரிங்க” என்றவளுக்கு நெஞ்சம் விம்மித் தணிந்தது.

 

“அழாதடாம்மா. யாருக்கும் உன் மேல தனிப்பட்ட கோபம் இல்ல. அவங்க பட்ட காயத்தோட விளைவை இப்படி காட்டுறாங்க. அதையும் காலம் சரி செய்யும். ஃபீல் பண்ணாத” என்று தன் மனையாளைத் தேற்றினான் எழிலழகன்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!