68. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(5)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம்‌ 68

 

காலையில் எழுந்த ஜனனி அகியை எழுப்பி விட்டு, யுகி மற்றும் சத்யாவின் வருகைக்காகக் காத்திருந்தாள். எப்போதும் சத்யா காலையிலேயே வந்து விடுவான்.

 

அவளைக் கண்டவுடன் பூவாக மலர்ந்த முகத்தோடு, “குட் மார்னிங் ஜானு” என்றுரைக்காமல் நாள் விடியாது.

 

இப்பொழுதெல்லாம் அவனது கோபத்தைப் பார்ப்பதே அரிதாகத் தான் இருந்தது. அவளைக் கண்டால் சிரிப்பான், அவளுக்காக பேசுவான். அவளிடம் வெளிப்படையாக அன்பைக் காட்டா விடினும், சிறுவர்களிடம் பேசும் போது அவள் மீதுள்ள பற்றைப் பறைசாற்றுவான்.

 

அதைக் கேட்கும் போதெல்லாம் அவள் மனதை மயிலிறகால் வருடுவது போல் இருக்கும். அவன் மீது அவளுக்கு கோபம் என்று எதுவும் இல்லை. இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் அன்பும் இல்லை. ஏதோ குடும்பத்தில் ஒருவன் எனும் விதத்தில் பழகுவாள். சகஜமாகப் பேசுவாள்.

 

வகுப்பு நண்பர்களுடன் எப்படியோ அந்த ரீதியில் தான் பழகுவாள். அந்தவொரு அன்பு அவளுக்கு அவன் மீது.

 

“எங்க போயிட்டான் இந்த ஹிட்லர்?” என்று யோசித்தவள், “இப்போ எல்லாம் ஹிட்லர் மாதிரி உர்ருனு இருக்குறது இல்லை. ஆனால் நாம வெச்ச பெயரை அப்படியே மெயின்டெயின் பண்ணுவோம். அதான் நல்லா இருக்கு” என்று சிரித்துக் கொண்டவள் அவர்களது அறையை எட்டிப் பார்த்தாள்.

 

சத்யாவின் ஒரு கை மகனைப் பிடித்திருக்க, அவன் மீது இரு கால்களையும் போட்டுக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் யுகன்.

 

“என்ன இன்னைக்கு அடிச்சு விட்ட மாதிரி தூங்குறாங்க? அனுப்பலாமா வேண்டாமா?” தீவிர யோசனையில் ஆழ்ந்தவள், எழுப்பலாம் எனும் முடிவோடு சென்று கணவனை அழைத்தாள்.

 

“என்னங்க” பல முறை அழைத்தும் அவனிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.

 

சத்யா இப்படி உறங்குபவன் அல்ல. சிறு சத்தம் கேட்டாலே அவன் எழும்பி விடுவான். அவனது தோளில் கை வைத்துத் தட்டியவளுக்கு ஏதோ ஒரு உணர்வு. சட்டென்று நெற்றியில் கையை வைத்துப் பார்க்க, அவனது உடம்பு அனலாகக் கொதித்தது.

 

‘அய்யோ காய்ச்சலா?’ பதறிப் போனவள், அவனைத் தட்டி எழுப்பினாள்.

 

“எழுந்திருங்க” சற்றே பலமாக அசைக்க, சிரமப்பட்டு கண்களைக் கசக்கி கொண்டே எழுந்து அமர்ந்தவன், யுகனைத் தள்ளிப் படுக்க வைத்தான்.

 

“என்ன ஜானு?” அவன் யோசனையாக நோக்க, “என்ன ஜானுவா? என்ன ஆச்சுன்னு கூட உங்களுக்கு தெரியாதா?” அவள் படபடவெனக் கேட்க,

 

“எனக்கு என்ன ஆச்சு? நான் நல்லா தானே இருக்கேன்?” என்றவனுக்கு கண்கள் லேசாக எரிவது விளங்கியது.

 

நெற்றியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு “ஓஓ ஃபீவரா?” சாதாரணமாகக் கேட்டான்.

 

அவன் கேட்ட தொனியைக் கண்டு, “ஏன் இவ்வளவு அலட்சியமா கேக்குறீங்க? உங்கக்கு ஃபீவர்” கண்களை அகல விரித்தாள்.

 

“ஆமா. நானும் சொன்னேனே. அதுக்கு ஏன் இப்படி ரியாக்ஷன் கொடுக்கணும்?” என்று கேள்வியாகப் பார்த்தான்.

 

அவனுக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வெளியூரில் இருக்கும் போதும் அப்படித்தான் காய்ச்சல் என்றால் இரண்டு மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வேலைக்குச் சென்று விடுவான்.

 

யுகனுடன் விளையாடுவான். மகனுக்காக வேண்டி இருக்கும் ஒரே ஜீவன் சத்யா அல்லவா? தானே சோர்ந்து போனால் அவன் எப்படி இருப்பான் என்னும் உணர்வில் தனது சோர்வையோ வலியையோ காண்பித்துக் கொள்ளாமல் வழக்கம் போல இருக்க முயற்சிப்பான்.

 

ஆனால் ஜனனி அப்படி அல்லவே? அவளுக்கு காய்ச்சல் வந்தால் பெரும் பாடு. அடிக்கடி நெற்றியைத் தொட்டுத் தொட்டுப் பார்ப்பாள். தங்கையிடம் ‘மகி முடியலடி’ என்ற புலம்புவாள். மாத்திரை கொடுங்க என்று ஜெயந்தியை ஒரு வழி செய்து விடுவாள்.

 

அவளுக்கு காய்ச்சல் வந்தால் விடே திண்டாட்டம் தான். அப்படிப்பட்டவளுக்கு சத்யாவின் இந்த சாதாரண போக்கு ஆச்சரியத்தைக் கொடுக்காதா என்ன?

 

“என்னங்க நீங்க?” அவள் கேள்வியோடு ஏறிட, “என்னன்னா? நீ என்ன கேட்கிற? இரு டேப்லெட் இருக்குனு பாக்குறேன்” என்று எழுந்து கொள்ள,

 

“ஒன்னும் வேணாம். நீங்க போய் கழுவிட்டு வாங்க. நான் எடுத்து வைக்கிறேன்” முறைப்புடன் அவனை அனுப்பினாள்.

 

அவளை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொள்ள, அவன் வெளியில் வரும் போது இவள் யுகனை எழுப்பினாள்.

 

“வா யுகி! கழுவிட்டு வரலாம்” என்று அவள் அழைக்க, “டாடி?” கேள்வியாகப் பார்த்தான் யுகன்.

 

“ஓகே டா. நான் வர்றேன்” டவலை வைத்து விட்டு வர எத்தனித்தான் சத்யா.

 

“டாடிக்கு காய்ச்சல் அடிக்குது யுகி. பாவம்ல அவரு? நான் உன்னை கழுவி விடட்டுமா?” அவனது காதோரமாக மெல்லிய குரலில் கேட்டாள் ஜனனி.

 

தந்தையின் முகத்தைக் கூர்ந்து கவனித்த சிறுவன், “நான் ஜானு கூட போறேன் டாடி” என்றவாறு எழுந்து சென்றான்.

 

சத்யாவும் தலையசைப்புடன் கட்டிலில் அமர, ஜனனியைத் தேடி வந்த அகிலன் அவனைப் பார்த்து விட்டு “என்னாச்சு?” என வினவினான்.

 

“லைட்டா ஃபீவர் டா” அவன் கண்களை மூடித் திறந்து சொல்ல, தந்தையின் நெற்றி கழுத்து என்று தொட்டுப் பார்த்தான் அகி.

 

“டேப்லெட் போடுங்க” என்றவனின் அக்கறை நெஞ்சைத் தொட்டாலும், தந்தை எனும் உரிமையை அவனிடமிருந்து எதிர்பார்த்தது சத்யாவின் மனம்.

 

அவனின் யோசனை நிறைந்த முகத்தைப் பார்த்து விட்டு, “இன்னிக்கு எந்த வேலையும் பார்க்கக் கூடாது. நல்லா சாப்பிட்டு மாத்திரை போட்டு ரெஸ்ட் எடுங்க” பாடம் சொல்லித் தரும் ஆசானாக அவன் சொன்னதைக் கேட்டு, “சரிங்க சார்” தலையசைத்தான் சத்யா.

 

“கரெக்டா சொன்ன அகி” என்றவாறு டிஷர்ட்டைப் போட்டுக் கொண்டு வந்த யுகன், “இன்னிக்கு நாங்க சொல்லுறத தான் நீங்க கேட்கனும் டாடி” என்றான், ஒற்றை விரல் நீட்டி.

 

“இல்லனா மட்டும் நான் சொல்லுறத கேட்றுவீங்க பாருங்க. இப்போல்லாம் நான் டாடியா நீங்க ரெண்டு பேரும் டாடியானு தெரிய மாட்டேங்குது” சிரிப்புடன் சலித்துக் கொள்ள,

 

“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இன்னிக்கு நாங்க வெச்சது தான் சட்டம். மறுபேச்சு வரக் கூடாது” என்றவாறு வந்தாள் ஜனனி.

 

“ஆத்தா நீங்களுமா?” 

 

“ஏன்? நான் சொல்லக் கூடாதா? ஒழுங்கா சொல் பேச்சு கேட்டு இருக்கனும் சொல்லிட்டேன். என் பிள்ளையை நல்லா பார்த்துக்கங்கனு சொல்லிட்டு உங்கம்மா போயிட்டாங்க. பார்த்துக்கலனா என்னை திட்டுவாங்க” என்று அவள் சொல்ல,

 

“யாரு எங்கம்மாவா? அவங்களுக்கு இப்போல்லாம் என்னை விட உன் மேல பாசம் கூடிருச்சு. உனக்காக என்னைத் திட்டுவாங்களே தவிர, உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க” முறைத்துப் பார்த்தான் கணவன்.

 

“டாடி கூட சண்டை போடாத ஜானு” யுகன் முறைப்போடு சொல்ல, “நான் சண்டை போடல. உன் டாடி தான் வாயை வெச்சுட்டு இருக்காம வம்புக்கு வர்றார்” உதட்டைப் பிதுக்கினாள் அவள்.

 

“ஆமாமா! ஜானு பாவம்” என்று அகி ஜனனியின் கையைப் பிடிக்க, “டாடி பாவம். அவருக்கு தான் ஃபீவர்” கன்னத்தில் கை வைத்து பெருமூச்சு விட்டான் யுகன்.

 

“ஹேய் கண்ணா! ஃபீவர் எல்லாம் ஒரு விஷயமா? வரும் போகும். இதுக்கு போய் மூஞ்சை தூக்கி வெச்சிட்டு இருக்கனுமா?” சத்யா அவனது கன்னத்தைத் தடவ, “அதான் நானும் சொன்னேன். எனக்கு கூட எவ்ளோவோ தடவை ஃபீவர் வந்திருக்கு. நான் அப்போ அம்மா கிட்ட சொன்னா, மாத்திரை தந்து தூங்க சொல்லிட்டு அவங்க ரூம் போயிடுவாங்க. எனக்கு தூக்கமே வராது. நைட் முழுக்க அங்கேயும் இங்கேயும் நடந்துட்டு இருப்பேன். அப்படியே தூங்கி போயிடுவேன்” என்றுரைத்தான் அகி.

 

சத்யாவுக்கு நெஞ்சடைத்தது. தன் மகன் இப்படி எல்லாம் கஷ்டங்கள் அனுபவித்து இருக்கிறானே? இதற்கு அவன் செய்த குற்றம் தான் என்ன, அவர்களுக்கு மகனாகப் பிறந்ததைத் தவிர என்று தோன்றியது.

 

“எனக்கு ஃபீவர் வந்தா அது பெரிய விஷயம் மாதிரி இருக்கும். டாடி கிட்ட கழுத்தை தொட்டுப் பார்க்க சொல்லிட்டே இருப்பேன். உனக்கு அது ஈசியா இருக்குல்ல. எனக்கு அப்படி இல்லை அகி” ஆச்சரியம் ததும்பியது யுகியின் பேச்சில்.

 

சத்யா, ஜனனி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் வளர்ந்த சூழல் அவர்களை எப்படிப்பட்ட குணவியல்புகளோடு மாற்றியமைத்திருக்கிறது என்று உணர்வு அவர்களுக்கு.

 

“ஒரு நாள் வாமிட் வந்துச்சு தெரியுமா யுகி? அம்மா தூக்கமா இருப்பாங்கனு நெனச்சி நான் டிஷர்ட்ட கழற்றி துடைச்சு விட்டுட்டு தூங்கினேன். காலையில் எழும்பி அதை கழுவி போட்டுட்டேன். என்னால ட்ரெஸ் கழுவவும் முடியும். தெரியுமா?” அகி கதை சொல்லும் பாங்கில் கூறி பெருமிதம் கொண்டான்.

 

அவன் சொன்னதைக் கேட்டு இருவரும் தவித்துப் போயினர். 

 

“அகிம்மா” என்றவாறு அகிலனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

 

இந்த இளஞ்சிட்டு அப்பொழுதெல்லாம் எப்பாடுபட்டு இருப்பான் என்று நினைக்கையில் இதயத்தில் ஈட்டியால் தாக்குவது போல் வலித்தது. அவனுக்கு தாயாக மாறி அத்தனை காயங்களுக்கும் மருந்திட வேண்டும் என்ற அவா அவளுள் கிளர்ந்தெழுந்தது.

 

“ஜானு என்னாச்சு?” அகிலன் சாதாரணமாகக் கேட்க, “ஒன்னும் இல்ல. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் அகி. என் தங்கத்தை எந்த கஷ்டமும் வர விடாம பார்த்துப்பேன். என் கண்மணி டா நீ” நா தழுதழுத்தது, தாய்மை நிறைந்த தளிருக்கு.

 

“ஜானு…!!” சத்யா அவளது தோளில் கை வைக்க, தான் உணர்ச்சி வசப்படுவதை அறிந்து ஒருவாறு தன்னை சமாதானம் செய்து கொண்டாள்.

 

சத்யா கண்களைக் காட்டியதும், அகியை அழைத்துக் கொண்டு சென்றான் யுகி.

 

“அ..அகி பாவம்ல? என்னால முடியலங்க” அவள் கண் கலங்கிக் கூற, “எனக்கும் தான் ஜானு. என் பையன் எவ்ளோ கஷ்டங்களை தாங்கி இருப்பான்னு நெனக்கும் போது தாங்க முடியல. என் கிட்ட இருந்து பையனைப் பிரிச்சு எடுத்துக்கிட்டுப் போய் அவள் பார்த்த லட்சணம் இது தானா?” பற்களை நறநறத்தான் சத்யா.

 

அகி சொன்ன வார்த்தைகள் மீண்டும் நினைவில் உதிக்க, “நா..நான் எவ்வளவு பெரிய கொடுமைக்காரன் தெரியுமா? அவன் அங்கேயும் சந்தோஷமா இருக்கல. அவனைக் கூட்டி வர்றேன்னு நான் ஆசிரமத்தில் விடப் போனேன். நீ மட்டும் இல்லனா நான் பெரிய பாவியாகி இருப்பேன் ஜானு. என் பாவத்தை எது செஞ்சும் கழுவி இருக்க முடியாது. இப்போவே குற்றவுணர்ச்சி என்னைக் கொல்லுது” கையில் முகம் புதைத்தவனின் கண்களில் துளி கண்ணீர் எட்டிப் பார்த்தது.

 

“நடந்தது நடந்துருச்சு. பழசை நெனச்சு வருத்தப்படுறதால எதுவும் மாறாதுங்க. இனி என்ன பண்ணனும்னு யோசிங்க. அகி இழந்த சந்தோஷம், அவனோட குழந்தைப் பருவத்து ஆசைகள், அழகான வாழ்க்கையை எப்படி அமைச்சு கொடுக்கலாம்னு யோசிப்போம். அவன் முகத்தில் சிரிப்பை வரவழைக்க என்னெல்லாம் முடியுமோ அதையெல்லாம் பண்ணுவோம். நான் அதுக்காக எப்போவும் உங்க கூட இருப்பேன்” அவனது கையில் அழுத்தம் கொடுத்தாள் ஜனனி.

 

சத்யாவுக்கு உள்ளம் சிலிர்த்தது. ‘பண்ணுங்க’ என்று சொல்லாமல் ‘பண்ணுவோம்’ எனக் கூறியது அவனது காயங்களுக்கு மருந்திடுவதாக இருந்தது.

 

“கண்டிப்பா, நாம அவங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்போம். அதற்கான முகவரியைத் தேடிப் பிடிச்சு சிரிப்பை உரிமையாக்குவோம். தாங்க் யூ ஜானு!” மனம் நிறையப் புன்னகைத்தவனை, தானும் முறுவலுடன் நோக்கினாள் மனைவி.

 

தொடரும்…….!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!