69. ஜீவனின் ஜனனம் நீ..

4.8
(6)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 69

 

“இன்னைக்கு சமைக்க வேண்டாம் ஜானு” என்று சொல்லி விட்டான் சத்யா.

 

“ஏன்?” என்று அவள் கேட்க, “எப்போவும் தானே சமைக்கிற? இன்னிக்கு ஒரு நாள் வெளியால வாங்கிக்கலாம். நான் ஆர்டர் பண்ணுறேன்” என்றவனுக்கு காய்ச்சலின் தீவிரத்தில் அவளது அருகிலேயே இருக்க வேண்டும் போன்ற உணர்வு. அவன் உள்ளம் அவளை நாடியது. 

 

“ஓகே” என்று விட்டு சிறுவர்களோடு கதையளந்து கொண்டிருக்க, அவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் சத்யா.

 

சற்று நேரத்திலேயே ஆர்டர் செய்த உணவு வந்து விட்டது. அதனைத் தட்டில் போட்டு எடுத்து வந்தாள் ஜனனி.

 

“ஜானு! நீயே எனக்கு ஊட்டு”என்று கூறியதில் அவளது கண்கள் பெரிதாக விரிந்தன.

 

“உனக்காக இல்ல! டாடிக்காக தான். அவர் தானே எப்போவும் ஊட்டுவார். இன்னிக்கு ஃபீவர்னால அப்படி சொன்னேன்” என்று யுகன் சொல்ல, “யுகி” சத்யா அதட்டும் குரலில் அழைத்தான்.

 

“ஜானு கிட்ட அப்படி பேசக் கூடாதுனு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். மறுபடி மறுபடி அதையே பண்ணுற. என்ன நெனச்சிட்டு இருக்க நீ?” அவன் சினத்தோடு சீற, தலையைக் குனித்துக் கொண்டான் யுகி.

 

“அச்சோ விடுங்களேன். எதுவும் பேசக் கூடாதுனு சொன்னோமே மறந்துட்டீங்களா?” நிலமையை சமாளித்து வைக்கும் பொருட்டு சொன்னாள் ஜனனி.

 

“ஆமா! இதை சொல்லியே என் வாயை அடைச்சிடு” முறைப்பைச் சிந்தினான் அவன்.

 

“ஊட்டுங்க ஜானு. பசிக்குது” வயிற்றைத் தடவிக் கொண்டான் அகி.

 

“சரிடா செல்லம்” அவனுக்கு முதலில் ஊட்டியவள், யுகனிடம் செல்ல, வாய் திறவாமல் நின்றிருந்தான் அவன்.

 

“வாயில கொசு போயிடும்னு பயப்படுறியா யுகி?” என்று ஜனனி வினவ, “நான் உன் கிட்ட பேச மாட்டேன். சும்மா ஜோக் பண்ணாலும் டாடி திட்டுறார்” முகத்தை உப்பிக் கொண்டான் யுகன்.

 

“டாடி அப்படித் தானே? சும்மா சும்மா திட்டுவார். நீ சாப்பிடு டா என் கன்னுக்குட்டி” என்றதும் அவன் சிரிப்புடன் சாப்பிட்டான்.

 

“அடியே ஜான்சி ராணி! உனக்காக நான் திட்டுனா நீ அவன் கூட கூட்டு சேர்ந்து எனக்கு திட்டுறியா?” அவன் உஷ்ணப் பார்வை பார்க்க,

 

“எனக்காக பேசனும்னு நான் சொல்லவே இல்ல மிஸ்டர்” என்றாள், அப்பார்வையின் அர்த்தம் உணர்ந்து.

 

“சொல்லாட்டியும் பேசுவேன் மிஸ்ஸிஸ் சத்யா” அப்படிச் சொல்லும் போதே அவனுள்ளத்தில் பூமாரி பொழிந்தது.

 

“ஹா ஹா! இது எனக்குமே மறந்து போகுது. அடிக்கடி ஞாபகப்படுத்துங்க” ஹாஸ்யம் கேட்டது போல் அவள் நகைக்க, “சிரிப்பைப் பாரேன்” என்றவனுக்கும் சிரிப்பு வந்தது.

 

“டாடி! இப்போல்லாம் நீங்க நல்லா சிரிக்கிறீங்க. கோபத்தையே விட்டுட்டீங்க. சோ கியூட்” தந்தையின் கன்னத்தில் இதழ் பதித்தான் யுகி.

 

“கவலைக்கும் கோபத்துக்கும் கனெக்ஷன் அதிகம் கண்ணா. கவலை மறந்தா கோபம் வராது போல. எனக்குமே இப்படி இருக்க பிடிச்சிருக்கு” என்றவனின் நயனங்கள் நங்கையவளை நோக்கின, மாற்றத்திற்குக் காரணம் அவள் என்பதால்‌.

 

“நீங்களும் சாப்பிடுங்க. காலையில் சாப்பிடவும் இல்ல. இப்படி இருந்தா எப்படி மாத்திரை போடுறது?” என்று கேட்டாள் ஜனனி.

 

“நான் சாப்பிட மாட்டேன். நீ எப்போ பாரு கோபமாகவே சொல்லிட்டு இருக்க. திட்டுற மாதிரி சொன்னா அதைச் செய்ய மனசு வருமா?” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான் ஆடவன்.

 

“நீங்க எல்லாத்தையும் ஒழுங்கா பண்ணுனா திட்ட வேண்டிய நிலமை வருமா? கண்டுக்காம இருந்துட்டு நான் திட்டுறதா குற்றம் சுமத்துறீங்க” 

 

“பார்த்தியா? இப்போ கூட அப்படி தான். நான் சாப்பிட மாட்டேன்” அவன் உதட்டைச் சுளிக்க, “சாப்பிட மாட்டீங்கனு சொன்னா விட்றுவேன்னு நெனச்சீங்களா?” என்று அவள் கேட்க,

 

“பின்ன என்ன பண்ணுவ?” எனக் கேட்டவனுக்கு அடுத்து பேச வார்த்தைகள் எழவில்லை.

 

அவள் தான் உணவுக் கவளத்தைத் திணித்து வாயை அடைத்திருந்தாளே? இனி எப்படிப் பேச்சு வரும்?

 

“ஹய் சூப்பர் ஜானு” அகி கை கொட்டிச் சிரிக்க, “டாடிக்கு இதான் வேணும்” யுகியும் வாயில் கை வைத்துச் சிரித்தான்.

 

அவள் தந்ததை சாப்பிட்டவனுக்கோ, அவ்வாறு ஊட்டியதை இன்னும் நிஜமென நம்ப முடியவில்லை. ஏதோ கனவில் நடப்பது போல் இருந்தது.

 

“நீ..நீ ஊட்டி விட்டியா ஜானு?” அவன் வியப்புடன் பார்க்க, “ஆமா” தோளைக் குலுக்கியவளுக்கு அது பெரிய விடயமே அல்ல.

 

அவனுக்கோ மனையாளின் கையால் சாப்பிட்டது பெருத்த சந்தோஷத்தைக் கொடுத்தது. தன் மீது அன்பு இல்லாமல் ஊட்டுவாளா என்ன? எனும் எண்ணம் அவனுக்கு.

 

மூவருக்கும் மாறி மாறி ஊட்டி விட்டாள்‌ காரிகை. சத்யாவின் கண்கள் அவளை விட்டும் நகர மறுத்தன. 

 

சாப்பிட்டு‌ முடித்ததும் சிறுவர்கள் டிவியில் கார்டூன் பார்க்க ஆரம்பிக்க, ஜனனி வழங்கிய மாத்திரையை சாப்பிட்டான் சத்யா.

 

அவள் தனக்காக அக்கறை எடுத்துச் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவன் உருகிப் போனான். அவள் மீது மெல்ல மெல்லச் சாயத் துவங்கிற்று கணவனின் உள்ளம்.

 

“ஹான்! அத்தை சொன்னாங்களேனு தான் இதையெல்லாம் பண்ணுனேன். மத்தபடி நான் உங்க மேல அட்வான்டேஜ் எடுத்துக்கிறேன்னு நெனக்காதீங்க. சரியா?” என்றவாறு எதிர் சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

 

‘நீ எதுக்காக வேணா பண்ணிக்க. எனக்கு அதெல்லாம் அக்கறையா தான் தெரியுது. இன்னிக்கு நீ ஊட்டும் போது நானும் உனக்கு குழந்தையா மாறிட்ட மாதிரி ஃபீல். யூ ஆர் மை ஏஞ்சல்’ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவனின் கண்கள் அவளன்றி வேறெதையும் நோக்கவில்லை.

 

…………………..

இரவு நேரம் அகியை உறங்க வைத்து விட்டு அலைபேசியை நோண்டத் துவங்கினாள்‌ ஜனனி. முன்பெல்லாம் அதிலேயே காலம் கழிப்பவளுக்கு இப்பொழுது அலைபேசி எட்டாக்கனியாகிற்று.

 

கால் ஹிஸ்டரிக்குச் சென்றவளின் கண்கள் புது நம்பரைக் கண்டு கூர்மையாகின. அன்று இந்த இலக்கத்தில் இருந்து அழைப்பு வந்த போது ஃபோன் சைலண்டில் இருந்தது. வீடு வந்தவள் அது யார் என ஆராயவும் மறந்து விட்டாள்.

 

தற்போது அந்த எண்ணைச் சேமிக்க, நந்திதா மற்றும் எழிலின் புகைப்படம் டிபியில் இருக்கக் கண்டாள். அழைத்தது நந்து தான் என உறுதி செய்தவளுக்கு அழைப்பதா வேண்டாமா என்ற சிந்தனை.

 

நந்து மீது கோபம் வைத்துக் கொள்வது அவளுக்கு சரியாகப்படவில்லை. அவள் செய்தது பிழை என்றாலும் அதற்காக வருத்த வேண்டாமே என்று தோன்றியது. அன்று வீட்டிற்குச் சென்ற போது மாரிமுத்துவிடம் இது பற்றி சொன்னாள்.

 

“நந்து கூட பேசனும்னு தோணுனா நான் பேசிடுவேன்பா. என்னால எவ்வளவு நாள் இப்படி கோபமா இருக்க முடியும்னு தெரியல. நான் பேசிட்டேன்னு தெரிஞ்சா கோபப்படுவீங்கனு இப்போவே சொல்லிடுறேன்” என்றதை அவர் அமைதியாகக் கேட்டாரே அன்றி எதுவும் சொல்லவில்லை.

 

அனைத்தையும் அலசி ஆராய்ந்தவள் அழைக்கலாம் என முடிவு செய்தாள். இதோ அழைத்தும் விட்டாள்.

 

“ஜானு” எதிர்முனையில் கேட்ட தவிப்போடு கூடிய குரல் ஜனனியை என்னவோ செய்தது.

 

“சொல்லு நந்து! எப்படி இருக்க?” சிரமப்பட்டு இயல்பாகக் கேட்டாள்.

 

“ஏதோ இருக்கேன் டி. உனக்கு என் மேல கோபம் போயிடுச்சா? கோபமா இருக்கியோனு நெனச்சிட்டேன்” அவள் காற்றாடியாக படபடக்க, “கோபம் இல்லனு சொல்ல மாட்டேன். என் கிட்ட மறச்சிட்டியேனு கோபம் இருந்துச்சு. இப்போ அதை விட்டுட்டேன். சொல்லு! எழில் வீட்டுல எல்லாம் ஓகே தானே?” என வினா எழுப்பினாள்.

 

“ஓகே ஜானு. எழில் என்னை நல்லபடியா பார்த்துக்கிறார். அவங்க அம்மா தங்கச்சி கூட இப்போ கொஞ்சம் நல்லாவே பழகுறாங்க. அப்படியே எது வந்தாலும் அவர் என் கூட இருக்கார். நான் சமையல் கத்துக்க போறேன் தெரியுமா?” நந்துவின் குரலில் உற்சாகம் ஊறியது.

 

“வாவ் நந்து! உன் ஆசை அதானே? இப்போவாச்சும் உனக்கு பிடிச்சதை பண்ணுறியே. அப்பா கிட்ட ஃபைட் பண்ணி க்ளாஸ் போக சொல்லி நானும் எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன். கேட்கவே இல்லல்ல?” பழைய ஞாபகங்களின் தாக்கத்தில் சொன்னாள்.

 

“அதெல்லாம் என்னால பண்ண முடியல. இப்போ இவர் கிட்ட கேட்கவும் ஓகே சொல்லிட்டார். அவரே கூட்டிட்டு போறார்” என்றவளோ, “நீ எப்படி இருக்க ஜானு? யுகி குட்டி எப்படி இருக்கான்?” என்று விசாரித்தாள்.

 

“யுகியோட சேர்த்து அகி குட்டியும் இருக்கான். அவங்க கூட இருந்தா நேரம் போறதே விளங்காது. அவ்ளோ ஜாலியா இருக்கலாம். என் உலகத்தையே சந்தோஷம், சிரிப்புனு அழகா மாத்திட்டாங்க ரெண்டு பேரும்” என்றவளின் இதழ்கள் அழகாக விரிந்தன.

 

“வாவ் சூப்பர்ல? ரெண்டு குட்டீஸ்” என்றவளுக்கு அகியைப் பற்றி சொன்னாள்.

 

தங்கையின் குரலில் இருந்த உற்சாகமே, அவளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு சான்று பகர, உச்சி குளிர்ந்தாள் அவள்.

 

“நீ சந்தோஷமா இருக்கனும் ஜானு. அது ஒன்னு தான் எனக்கு யோசனையா இருந்துச்சு. இப்போ திருப்தியா இருக்கு. அம்மாவை கோயில்ல பார்த்தேன். அவங்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன். என் அத்தை சில நேரம் கோபமா பேசும் போது அம்மா ஞாபகம் அதிகமா வந்துடும்” என்றாள் நந்து.

 

“உண்மை தான் நந்து. இங்கே அப்படிலாம் இல்ல. எங்க அத்தை என் மேல உசுரா இருக்காங்க. இருந்தாலும் அம்மா மாதிரி வராதுல்ல? ஆயிரம் உறவு வந்தாலும் அம்மா, அம்மா தான். அவங்களுக்கு நிகரா யாரும் இல்ல” என்றவளுக்கும் ஜெயந்தியின் நினைவு.

 

“மகி எதுவும் சொன்னாளா? அவ சொல்லி தான் பேசுறியா? அன்னிக்கு கோவில்ல பார்த்தப்போ நீ பேசலனு சொன்னேன். கோபமா இருக்கியோனு நான் சொன்னதைக் கேட்டு, உனக்கு அப்படி யார் மேலயும் கோபம் வெச்சுக்க தெரியாதுனு என் மேல கோபப்பட்டுச்சு” அன்று நடந்ததைக் கூற,

 

“இல்லக்கா மகி சொல்லல. உன் நம்பர்ல தெரியல எனக்கு. இப்போ நம்பர் சேவ் பண்ணிப் பார்த்துட்டு தான் எடுத்தேன். அப்பறம், பழசை நெனச்சு கோபப்படுறதால எதுவும் மாறாதுல்ல நந்து. அதனால தான் நான் பேசுறேன். அன்னிக்கு வீட்டுல உன்னைப் பார்த்து பேசாம வந்தப்போவே கஷ்டமா இருந்துச்சு.

 

என் செயல் உன்னை பாதிச்சு இருக்கும்னு நெனச்சு நெனச்சே என் தூக்கம் போச்சு. என்னால உனக்கு எதுக்கு கஷ்டம்னு நெனச்சேன். இப்போ என்னால நீ சந்தோஷமா இருக்கேல. அது போதும் எனக்கு” என்றவளின் மீது அன்பு அளவின்றிச் சுரந்தது.

 

“லவ் யூ ஜானு” அவள் சொன்னதைக் கேட்டுச் சிரித்து, “முன்னாடி சொன்னது ஓகே மேடம். இப்போ உன் லவ் கேஸ் தெரிஞ்சுடுச்சுல்ல. உன் லவ் யூ எனக்கானது இல்லனு புரிஞ்சுக்கிட்டேன். சோ இதை வாபஸ் வாங்கி எழிலுக்கு கொடுத்துடு” என்று அவள் சிரிக்க,

 

“போ ஜானு” வெட்கப்பட்டுச் சிரித்த நந்திதாவுக்கு, ஜனனியோடு பேசியது அளவற்ற ஆனந்தத்தை அள்ளித் தெறித்தாற் போன்றிருந்தது.

 

தொடரும்…….!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!