🤍அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍
👀 விழி 07
சலசலப்புகள் ஓய்ந்தபாடில்லை. அஞ்சனாவின் மனதின் அலைபாய்தலும் தீர்ந்தபாடில்லை. தன்னவள் மீதிருந்த விழிகளை ருத்ரனும் அகற்றினான் இல்லை.
நிலைமை இவ்வாறே இருக்க இத்தனை நேரமும் அமைதியாக இருந்த தாமரை டீச்சர் நிமிர்ந்து அஞ்சனாவையும் ருத்ரனையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் கண்களில் ஒருவித பிரகாசம்.
அவரருகே சென்று “ஆன்ட்டி! நான் அம்முவ லவ் பண்ணுறேன். இதை நம்புவீங்களான்னும் தெரியல. ம்ம் எனக்கு இவ பெயர் கூட எனக்கு தெரியாதுங்கிற தான் உண்மை. ஒன்னும் தெரிய வேணாம் எனக்கு. வேற எதுவுமே வேணாம். என் தேவதையை மட்டும் எனக்கு கொடுங்க போதும்.
எனக்கு கெடச்ச இந்த பொக்கிஷத்தை கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பேன். உங்க பொண்ணா நெனச்சு இவளை எனக்கு கட்டிக் கொடுப்பீங்களா” கரங்கூப்பி நின்றான் தாமரையிடம்.
அவர் கண்கள் கலங்கின. இதைத் தானே அவரும் நினைத்தார். ஐயரிடம் சென்று தாலியொன்று எடுத்துக் கொண்டு வந்து தட்டில் வைத்து ஐயரிடம் நீட்டினார் தாமரை.
அஞ்சனாவின் இருதயத்தில் பெரும் பிரளயமே வெடித்தது. யாரென்று தெரியாத ஒருவனை எந்த நம்பிக்கையில் தனக்கு கட்டிக் கொடுக்க போகிறார் என்று புரியவில்லை. அவரை எதிர்த்துக் கேள்வி கேட்கவும் மனம் இடம் தரவில்லை.
வேலைகள் ஜரூராக இடம்பெற்றன. ஐயர் மந்திரம் ஓதிட காளையின் மனம் தன் பெற்றோரை நினைத்தது.
“சாரிம்மா சாரிப்பா! உங்க கிட்ட கேட்காம முதல் தடவையா ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டேன். என் வாழ்க்கையில் நடக்கிற முக்கியமான இந்த விஷயத்தில் நீங்க கூட இல்லாம போயிட்டீங்க. மிஸ் யூ லாட்” மனதினுள் அவர்களோடு பேசினான்.
“உன் நல்லதுக்கு தான் டா இதெல்லாம் பண்ணுறேன். இப்போ இல்லனாலும் உனக்கு எப்போவாச்சும் அது புரியும்” அவளின் தலையை வருடிக் கொடுத்தார் தாமரை. பதில் கூறாமல் அவரைப் பார்த்தாள் பாவை.
இப்படியொரு திருப்பம் தம் வாழ்வில் ஏற்படும் என்று இருவரும் எதிர்பார்க்கவில்லை. அஞ்சனாவுக்கு மட்டுமல்ல ருத்ரனுக்கும் கூட கனவில் லயிப்பது போல் இருந்தது.
ஐயர் தாலியை அவனிடம் நீட்ட அதனை வாங்கிக் கொண்டவனின் மனம் சிலிர்த்தது. பக்கவாட்டாகத் திரும்பி அவளை நோக்கினான். அவனைப் பாராது அதே சமயம் இறுக்கமாக நின்றிருந்தாள்.
அவள் காதருகே காதலும் கசிந்துருகும்படி “அம்மு குட்டி” என்றழைத்தான் ருத்ரா.
அவ்வழைப்பு அவளின் உணர்வுகளுள் புகுந்து உயிர்வரை ஊடுறுவித் தொட்டிட சட்டென இமை தூக்கி ஆணவனை நோக்கியவளுக்கு இன்னதெனத் தெரியாத உணர்வு!
அவளது அப்பார்வையே தனக்குப் போதுமென எண்ணி “ஐ லவ் யூ அம்மு” அவள் நயனங்களை ஆழ்ந்து பார்த்தவாறு தாலியைக் கட்டி மூன்று முடிச்சுகளையும் இட்டான்.
குங்குமத்தை வைத்து விடுகையில் அவள் கண்களில் துளி கண்ணீர் உருண்டோட அதனை கணப்பொழுதில் தன் கைகளில் ஏந்திய நொடி இனி தன்னவள் கண்களில் கண்ணீர் வரவிடக் கூடாது என்று உறுதி பூண்டான் ருத்ரன் அபய்.
தாமரையின் கால்களில் விழுந்து வணங்கினர் இருவரும்.
“வீட்டுக்கு போய் உனக்கு முக்கியமா தேவைப்படுற பொருட்களை மட்டும் எடுத்துட்டு போம்மா” என்றார் அவர்.
பொம்மை போல் தலையை ஆட்டியவளுக்கு இனி யோசித்து ஒன்றும் ஆகப் போவதில்லை என்பது புரிந்தது. தாலி கட்டி ஒருவன் மனைவியாகி விட்ட பிறகு அதன்வழியில் நடக்கும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டுமென நினைத்து அவனோடு நடந்தாள்.
வெளியே வந்து ஷூவை அணிந்து கொண்ட ருத்ரனுக்கு ஏதோ தோன்ற வேகமாக பூக்கடைக்காரனிடம் சென்று பூ வாங்கி வந்தான்.
“அம்மு திரும்பு” என்றிட அவள் மந்திரித்து விட்டது போன்று திரும்பியவளுக்கு அளவு கடந்த திகைப்பு. ஏனெனில் இன்று காலையில் அந்த பூக்கடைக்காரனிடம் தான் தொடுத்த பூச்சரங்களைக் கொடுத்தது அவளே தான்.
தன் தோட்டத்து மல்லிகை தன்னை மணந்தவன் மூலம் இந்தக் கோயிலில் வைத்து தன் கூந்தலில் குடியேறுவது அவளது புருவங்களை ஆச்சரியத்தில் மேலெழச் செய்தது.
வீட்டிற்கு அழைத்துச் சென்றவன் அந்த வீட்டைப் பார்த்தான். அவ்வீடு அவனை ஈர்த்ததன் ரகசியம் இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
அவள் உள்ளே நுழைய அவன் முன்வாயிலில் அமர்ந்திருந்தான். உள்ளே சென்றவளுக்கோ கண்கள் கலங்கின. இனி இந்த வீட்டில் தன்னால் வாழ இயலாது அல்லவா? மஞ்சள் கயிறு மாயம் தன்னை ஆட்கொண்டதாலா பேசாமல் அவனோடு செல்ல தீர்மானித்து விட்டோம் என்று சிந்தித்தாள்.
விடை கிடைக்கவில்லை அவளுக்கு. ஆனால் இந்த தாலி ஏதோ ஈர்ப்பைத் தன்னில் உருப்பெறச் செய்து விட்டது புரிந்தது. அனைத்தையும் விட அவளுக்கு தனது ஆசிரிய பணியை விட்டுச் செல்வது மனதை வருத்தியது.
தந்தையின் புகைப்படத்தை எடுத்து உடைகளோடு பையினுள் வைத்தவள் “இன்னிக்கு நடக்கிறது எதுவா இருந்தாலும் அதை ஏத்துப்பேன்னு உங்க கிட்ட வாக்கு கொடுத்துட்டு போனேன்பா. அதே மாதிரி இப்போ நடக்கிறதை ஏத்துக்கிட்டேன். அந்த ஒரே காரணத்திற்காக யார்னே தெரியாத ஒருத்தர் கூட போக போறேன் வழித்துணையா இல்லை, வாழ்க்கைத் துணையா.
அவர் குடும்பம் எப்படி? எங்கே இருக்கார் ஒரு விஷயம் கூட தெரியாது அவர் உருவத்தை தவிர. உங்க பொண்ணு உங்களை நெனச்சிட்டு போறேன்பா. எனக்கு உங்க ஆசீர்வாதம் வேணும் என்னிக்கும்” கண்களைத் துடைத்துக் கொண்டு அவனோடு புறப்பட்டாள்.
நடந்ததை மீட்டிப் பார்த்த இருவருக்கும் இன்னுமே நடந்ததை பூரணமாக யூகிக்க முடியவில்லை. நேற்று வரை சந்திக்காதிருந்தவர்கள் இன்று கணவன் மனைவியாக!
இது தனக்கு பழகிய இடம். ஆனால் தன்னவளுக்கு அவ்வாறல்ல. தானே அவளைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது புரிய “ரூமுக்கு போகலாம் வா” என அழைத்தான்.
“சரி” என கூறி தனது பையை எடுக்க அதனைத் தனது கைகளில் வாங்கிக் கொண்டு முன்னே நடந்தான் அவன்.
“அம்மு! இது தான் நம்ம ரூம்” அவனது பேச்சில் இருந்த உரிமையை ஏற்க முடியாமல் மௌனமாக அறையினுள் நுழைந்தாள்.
அவனது அறையே அவளது வீட்டைப் போன்று அத்தனை விசாலமாக இருந்தது. வாயைப் பிளந்து நின்றவளிடம் “ஓவரா யோசிக்காத மைன்ட்ட போட்டு அலட்டிக்காத. ப்ரீயா இரு” என்றவன் அவளுக்கு தனிமை கொடுத்து விட்டு வெளியே வந்தான்.
செல்லும் அவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்தாள் அஞ்சனா. என்ன மாதிரியானவன் இவன் என்று புரியவில்லை. தன்னை அவனுக்கு எப்படித் தெரியும்? அறியாத என் மீது ஏன் அன்பாக இருக்கிறான்? யாவும் புதிர்களாகவே புதைந்தன மனதினில்.
“யார் இவர்? என்ன பண்ணுறார்? அவர் அப்பா வேற கோபமா போனாரே. எதுக்கு என்னை கட்டி கூட்டிட்டு வந்து அவங்க கோபத்துக்கு ஆளானாரு?” அவள் சிந்தனை செல்வனின் அனல் பார்வையைச் சுற்றியே சுழன்றது.
கதவை லாக் செய்தவள் பாத்ரூம் சென்று ப்ரெஷ்ஷாகி ஊதா நிற சாரியில் வெளிவந்தாள். கண்ணாடி முன் நின்றவளுக்கு தன் தோற்றம் வித்தியாசமாக இருந்தது.
புதுப்பொலிவுடன் தன் வதனம் மிளிர்வதைப் பார்த்தாள்.
“சுஜித்தை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டப்போ மனசு ஒரு மாதிரி இருந்தது. இன்னிக்கு காலையில் வித்தியாசமான சந்தோஷம் வந்தது. இப்போவும் அதே சந்தோஷம். ஏன் இப்படி? இந்த பையன் தான் எனக்கானவர்னு கடவுள் முடிச்சு போட்ட மாதிரி உணர்வு வருதே” தனக்குள் பேசியவளின் கைகள் அவன் முடிச்சிட்ட தாலியைத் தொட்டுப் பார்த்தன.
அதைப் பிடிக்கும் போது தேகம் சிலிர்த்து அடங்கிற்று. அவன் கரம் பற்றும் போதும் இப்படி அல்லவா தோன்றியது என்று ஓலமிட்டது மனமும். அவனைப் பற்றி நினைக்கும் போது தன்னிலை மறந்தாள்.
கதவு தட்டும் ஓசையில் சிந்தை கலைந்தவளுக்கு தனது எண்ணவோட்டங்களை நினைத்து அதிர்ச்சியாக இருந்தது. சுஜித்தோடு நிச்சயதார்த்தம் செய்ய சம்மதித்த தன்னால் எவ்வாறு இவன் தாலியை சுமந்து ஒரு பொழுதுக்குள் இவனை நினைக்க முடிந்தது என யோசிக்கும் போது தலை வலித்தது.
“எனக்கு என்ன தான் ஆச்சு?” தன்னைத் தானே கேட்டுக் கொண்டவள் கதவைத் திறந்தாள். வாயிலில் நின்றிருந்த ருத்ரன் உள்ளே வந்தான்.
அவன் கைகளில் உணவுத்தட்டு இருந்தது. தலையசைத்து அவளை அழைக்க ஒன்றும் பேசாமல் அருகில் சென்றாள்.
“ஏன் அம்மு நீ பேச மாட்டியா? என் கூட கோபமா இருக்கியா?” மென்குரலில் பிறந்தது அவன் கேள்வி.
“பேசினா பேசுவேன். தெரிஞ்சவங்கனா பேசுவேன். எனக்கு உங்களை தெரியாம எப்படி பேசுறது?” என்றவளுக்கு இதற்கு மேலும் அவனைப் பற்றி அறியாமல் இருப்பது சரியாகத் தோன்றவில்லை.
என்ன இருந்தாலும் தாலி கட்டி விட்டான். இனி அவன் கணவன். அவனைப் பற்றி தெரிந்து தானே இருக்க வேண்டும்? அவளது மனம் அவனுக்கு புரிந்தது.
“முதல்ல உட்கார்” என்க அவள் தரையில் அமர்ந்தாள். நின்று கொண்டிருந்தவனும் அவளுக்கு எதிரில் சம்மணமிட்டு உட்கார்ந்தான்.
“நான் என் அப்பாம்மாவுக்கு ஒரே பையன். ஆர்.எஸ் கம்பனி எம்.டி. இன்னிக்கு வந்திருந்தாரே அவர் என் மாமா கோபால்….” என தன்னைப் பற்றிக் கூறினான்.
ஆலியாவை தனக்கு கல்யாணம் பேசியதையும் அதில் தனக்கும் அவளுக்கும் விருப்பம் இல்லை என்றும் சொன்னான். தன் காதலைப் பற்றி ஒன்றும் பேசவில்லை அவன்.
மறைப்பது நோக்கமல்ல. மாறாக தான் சொல்வதை விட அவளே தன் காதலை போகப் போக உணரட்டும். அப்போது அவள் மடியோடு மார் சாய்ந்து தன் காதல் காவியத்தைக் கூறலாம் என்பது அவனது அவா.
“உங்க பெயர் ருத்ராவா?” பெயரை அறிய விழைந்தாள் வஞ்சி.
“அப்படி தான் கூப்பிடுவாங்க. முழுப் பெயர் ருத்ரன் அபய்” என்றுரைக்க தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டாள்.
“என் பெயரை எல்லாம் கேட்க மாட்டீங்களா?” தன்னை அறியாமலே அவனோடு பேசிக் கொண்டிருந்தாள்.
“பெயர் எதுக்கு? அதான் எனக்கு கூப்பிட அம்முங்கிற அழகான பெயர் இருக்கே” ரசனையுடன் சொன்னான் அவன்.
“உனக்கு என் கிட்ட பெயரை, உன்னைப் பற்றி எல்லாம் சொல்லனும்னு தோணுதுனு நெனக்கிறேன். தாராளமா சொல்லு” கையசைத்து அனுமதியளித்தான்.
அவளும் இதைத் தானே நாடினாள்? ஒளிவு மறைவுகள் ஏதும் தேவையில்லை என நினைத்தவள் தன் தாய் தந்தை காதலித்து திருமணம் செய்ததது முதல் சுஜித்தை பேசி நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது வரை சொல்லி முடித்தாள்.
பெற்றோரை இழந்து வாழும் அவள் நிலை அவனுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பரிதாபமாக தன்னைப் பார்த்து விடுவானோ என அவள் அஞ்ச,
“முன்ன எப்படி இருந்தியோ அதை எல்லாம் விடு. இனி நீ என் பொண்டாட்டி. உன்னை என்னால் முடிந்தளவு நல்லா பார்த்துப்பேன் அம்மு” அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.
அவன் பேச்சில் அவள் விழிகள் பளபளத்தன. அவனைப் பார்க்க முடியாது அவள் கண்கள் அலைபாய்ந்தன.
மருண்டு உருண்டு நீச்சல் பயிலும் கருமணிகள் அவன் மனதில் இன்னிசை இசைத்தன. காற்றாடியாய் படபடக்கும் இமைகள் நடனம் பயில ஆயிரம் கதை பேசும் அந்நேத்திரங்கள் ருத்ரனைக் கட்டிப் போட்டு மெய் மறந்து ரசிக்க வைத்தன.
♡♡♡♡♡
அறையினுள் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்த ஆலியாவின் மனமோ ருத்ரனையும் அவன் மனைவியையும் ஒரு விநாடி நினைவுகூர்ந்தது.
நல்ல வேளை ருத்ரனின் காதலைக் கேட்டு மனதை மாற்ற முயன்றோம். இல்லாமல் இன்னும் காதல் என்று பிதற்றிக் கொண்டிருந்தால் இன்று அவனை மணக்கோலத்தில் கண்டு இன்னும் உடைந்து போய் இருப்போம் என நினைத்துக் கொண்டாள்.
இப்படி நினைக்கும் போது அவளுள் வினா எழுந்தது ‘நான் உண்மையாக அவனைக் காதலித்தேனா? இல்லையோ? காதலித்திருந்தால் அவன் வேறொரு பெண்ணின் கரம் கோர்த்ததை தாங்க முடியாமல் போய் இருக்குமே? ஆனால் அது தனக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே”
எது எப்படியோ இனி ருத்ரன் மீதான காதல் விவகாரம் பற்றி நினைக்கக் கூடாது என நினைத்துக் கொண்டாள் ஆலியா.
“இந்த நித்தி பையனுக்கு நான் வீட்டுக்கு வந்த விஷயம் தெரியுமோ?” நிதினை நினைக்கும் போது அவளது அலைபேசி அலறியது. அவன் தான் அழைத்திருந்தான்.
அழைப்பை ஏற்று “டேய் நிதினு உனக்கு நூறு ஆயுசு டா” என கத்தினாள் அவள்.
“என்னடி? எல்லாம் கைவிட்டுட்டு குறி பார்க்குற தொழில்ல சேர்ந்துட்டியா?” மறுமுனையில் கேட்டான் நிதின்.
“என்னடா கிண்டலா?” கோபமாகக் கேட்டாள் ஆலியா.
“இல்ல சுண்டல். சுண்டல் சாப்பிடுறேன் வேணுமா உனக்கு?”
“வேணாம்டா சாப்பாட்டை ஞாபகப்படுத்தாத. அப்பறம் பசி வந்து கிட்சனை ஆராய்ச்சி பண்ண போனா அம்மா கிட்ட திட்டு வாங்க வேண்டிருக்கும்”
“ஹா ஹா! ரொம்ப வாங்கி கட்டிருக்க போல தீஞ்ச சோறு” என்று சிரித்தான்.
“என்னை கடுப்பேத்தனும்கிற முடிவோட தான் கால் பண்ணிருக்க இல்லையா. போடா போடா” என முறைத்தாள் அவள்.
“சரி விடு. ருத்ரா வீட்டில் இப்படி இப்படிலாம் நடந்துச்சுனு அம்மா சித்துவை சந்திச்சப்போ சொல்லி ஃபீல் பண்ணிருக்கா. நீயும் போயிட்டனு கேள்விப்பட்டேன். அதான் உன்னோட பேசலாம்னு அழைச்சேன்” தான் அழைத்த காரணத்தைக் கூறினான் நிதின்.
“ஆமா நித்தி. எதிர்பாராத விஷயமெல்லாம் நடந்து போச்சு. ஆனா அம்மு எப்படி மாமாவுக்கு கெடச்சார்? அது எப்படி உடனே தாலி கட்டியே கூட்டிட்டு வந்துட்டார்னு தான் தெரியல”
“எதிர்பார்க்காத உனக்கு ட்விஸ்ட். எதிர்பார்த்திருந்த நமக்கு இது ஜுஜுபி மேட்டர் ஆலி. அம்மு அம்முனு இருந்த பையன் இப்போ குஜாலா இருப்பான் போல” நண்பனை நினைத்து புன்னகைத்தான்.
“நீ மாமா வீட்டுக்கு போய் என்ன ஆச்சுனு ஆல்டீடேல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு வந்து சொல்லு காஞ்ச பிஸ்கட்” என்றாள் அவள்.
“ஆமா! நான் கால் பண்ண உடனே நீ எதுக்கு ஆயுசு நூறுனு கத்தின?” கேள்வியெழுப்பினான் நிதின்.
“உன்னை நினைக்கும் போதே நீ கால் பண்ணிட்ட. அதான் அப்படி சொன்னேன்”
“அப்போ மேடம் என்னை தான் நெனச்சிட்டு இருக்கீங்க”
“ச்சே ச்சே! ஐயாவுக்கு அப்படி ஒரு ஆசை இருக்கா” வெடுக்கென கேட்டாள்.
“ஐயாவுக்கு ஒரு ஆசை இல்லை எக்கச்சக்கமான ஆசைகள் இருக்கு. அவனோட ஆள் கூட பேசனும் பழகனும், ஊர் சுத்தனும், நிறைய நிறைய லவ் பண்ணனும், அவளை சிரிக்க வெச்சிட்டே இருக்கனும்னு அவ்ளோ ஆசை” மனதில் பொங்கிய ஆவலும் ஏக்கமும் அவன் குரலிலும் வழிந்தது.
அக்குரலில் இருந்த உணர்வு அவளை ஏதோ செய்ததது. மௌனித்து நின்றாள் ஆலியா.
“ஓய்ய் பேபி” என அழைத்தான் நிதின்.
“ம்ம்ம்” ஹூம்காரம் இசைத்தாள் அவள்.
“என்ன பேச்சையே காணோம். தூங்கிட்டியா?” அவள் நிலை உணர்ந்து அந்த மோனநிலையைக் கலைக்க வேண்டுமென்றே அப்படிக் கேட்டான்.
“ஆமா உன் மொக்க கதையை கேட்க முடியாம தூங்கிட்டேன். தூங்கி கனவு கண்டுட்டு இருந்தேன்” கடுப்புடன் சொன்னாள் அவள்.
“கனவா? கனவுல நாம எப்படி இருந்தோம்?”
“நீ தரையில விழுந்து கிடந்த. நான் உன் மேல காலை வெச்சி மிதிச்சிட்டு இருந்தேன்”
“கனவுலயும் அப்படியா இருப்ப? உன் அப்பாவுக்கு ஏத்த ராட்சசி தான் நீ” எனக் கூறியவன், “நான் ஒரு ஹைகூ கவிதை எழுதிருக்கேன் என் வருங்கால மாமாவுக்காக. சொல்லவா” எனக் கேட்டான்.
தனது அப்பாவையே சொல்கிறாய் என்பது புரிந்து “நீ ஹைகூ எழுதினியா சொல்லு பார்ப்போம்” என்றாள்.
“பெண்பால் ஆண்பால்
உங்கப்பா கோபால். எப்படி என் ஹைக்கூ?”
“ஹைக்கூ இல்லடா அது சைக்கூ(கோ). என் அப்பாவை வெச்சே ஹைகூவா உனக்கு இருடா போட்டு கொடுக்கிறேன்” பற்களை நறநறவெனக் கடித்தாள்.
“ஆளை விடும்மா தாயே. பார்க்கிற பார்வையா அது? ஏதோ அவர் பொருளை திருடிட்டுப் போன மாதிரி” என நொடித்துக் கொண்டான்.
“பொருளை இல்ல அவரோட பொக்கிஷத்தையே நீ திருடிட்ட. சும்மா விடுவாரா உன்ன?” என்று கேட்டாள்.
“என்ன சொன்ன? பொக்கிஷமா?”
“ஆமா! என்னைத் திருடி உன் ஹார்ட்டுல வெச்சிருக்க. இந்த திருட்டு போதாதா அவரு உன்னை முறைக்க?
“..ஆலியா” அவள் குரலில் கேலியோடு சேர்ந்து ஒலித்த அன்பு அவனை திணற வைத்தது.
“ஹா ஹா” அவனின் திணறுதலைப் பார்க்க சுவாரசியமாக இருக்க, இனிமேல் அவனை இப்படியே பேசிக் கவிழ்க்க முடிவு செய்து அட்டகாசமாக நகைத்தாள் நிதினின் காதலி.
தொடரும்………♡
ஷம்லா பஸ்லி