7. சிறையிடாதே கருடா

4.9
(10)

கருடா 7

குளிக்கும் நீரில் கூட உயர் ரகத்தை வைத்திருந்தவள் மேனியெங்கும் சந்தன வாசனை. அவை போதாது என்று செயற்கை வாசத்தை ஆடையாகத் தெளித்துக் கொண்டவள், பருத்தி ஆடையை அதற்கு ஆடையாக மேல் உடுத்தி, மீண்டும் ஒரு திரவியத்தைப் பட்டும் படாமலும் தெளித்தாள்.

கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டவளுக்கு, கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறு அசிங்கமாகத் தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அவன். கண்ணாடியில், சிரித்த முகமாக நின்றிருந்தவன் உருவத்தைக் கண்டு முறைத்தவள் கையில் இருந்த சீப்பைத் தூக்கி அடித்தாள்.

இவளால் ஒன்றும் செய்ய முடியாத அவனை, அந்தச் சீப்பு மட்டும் என்ன செய்யும்? பாவமாகக் கண்ணாடியில் பட்டுக் கீழே விழ, “பைத்தியக்காரி!” எனப் பல்லைக் காட்டிச் சிரித்தான் கருடேந்திரன்.

“ராஸ்கல்!” என்று சிங்கப்பல்லை மேலும் கீழும் நசுக்கிக் கோபம் கொண்ட ரிது, “உன்னை அழிக்கிறது மட்டும்தான்டா என் வாழ்நாள் லட்சியம்..” கர்வத்தோடு கூறும் நேரம் கதவு திறக்கப்பட்டது.

தலை திருப்ப, அவளுக்குத் தரிசனம் கொடுத்தவன் தாவி மெத்தையில் விழுந்தான். உடம்பு நோகாமல் சுகமாகத் தூங்குவதற்காகப் பார்த்துப் பார்த்துத் தனக்கென்று வரவழைத்த மெத்தையில், இப்படி யாரோ ஒரு குப்பையானவன் விழுவதைச் சகித்துக் கொள்ள முடியாது, “உவாய்க்!” எனக் குமட்டினாள்.

சற்றுத் தலையைத் தூக்கி அவளைப் பார்த்தவன், “ராத்திரி ஒன்னுமே நடக்கலையே, இதுக்கேவா வாந்தி வருது?” என்றதும் சிவக்கும் அவள் முகம் கண்டு மனம் மகிழ்ந்து,

“அப்போ களத்துல குதிச்சா உடனே புள்ள பொறந்திடும் போலயே.” என்றான்.

“கருமம்… கருமம்… ச்சீ! உன்ன மாதிரி ஒருத்தன் கூட வாழுறதே அசிங்கம். இதுல குழந்தை வேறயா? அதுவும் உன்ன மாதிரி லோ கிளாஸா தான் இருக்கும்.”

“நீ ஒன்னும் கவலைப்படாத செல்லம். நம்ம புள்ளைய நானே ஆட்டோல கூட்டிட்டுப் போய் ஸ்கூல்ல விடுறேன்.”

“நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும், அது வாலாட்டிக்கிட்டு எங்கயோ போகுமாம். அந்த மாதிரித் தான்டா, எவ்ளோ வசதியான வீட்ல இருந்தாலும் உன் புத்தி குப்பைக்கே போகுது.”

“தேங்க்யூ!” எனச் சுகமாகப் படுத்துக் கொண்டான்.

பார்த்துப் பார்த்துத் தன்னை அலங்கரித்தவள், கோபம் என்னும் சிவப்பில் அத்தனை அழகையும் கெடுத்துக்கொண்டு கிளம்பினாள். அவளைப்போல், போகும் வரை அமைதியாக நின்றிருந்தவன், “அய்யய்யோ!” என அவசரமாகக் குரல் கொடுக்க, அலறியடித்துத் திரும்பியவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு படியேறினான்.

பல நிமிடங்கள் கழித்தும், என்ன நடந்தது என்று புரியாமலே அவன் கைக்குள் குழந்தையாகச் சுருங்கி இருந்தவளைத் தன் அறையின் பால்கனிக்கு அழைத்துச் சென்றவன்,

“கன்னியப்பன் என் கைக்கு வர வரைக்கும் நீ இங்கதான் இருக்கணும்.” ஒவ்வொரு வார்த்தையாக இழுத்துப் பேசியவன், என்ன செய்யப் போகிறான் என்ற சிந்தனை சிறிதும் இல்லை ரிதுவிற்கு.

அவன் கத்திய வேகத்தோடு தன் சிந்தனையை இழந்தவள், இந்தப் பால்கனியில் என்ன செய்து விட முடியும் என அசாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருக்க, சிறிதும் அஞ்சாமல் பால்கனியிலிருந்து தூக்கி வீசினான். கீழ்த்தளத்தில் நின்று கொண்டு எமன் தன்னைக் கயிறு கட்டி இழுப்பது போல் அஞ்சியவள், இன்றோடு ரிதுவின் சரித்திரம் முடிந்தது என்று கண்களை மூடிக் கொள்ள, கஷ்டத்தையே பார்க்காமல் சொகுசாக வளர்ந்த அவளின் பூமேனி தண்ணீரில் விழுந்தது.

நீச்சல் குளத்தில்தான் தூக்கி வீசி இருந்தான் கருடேந்திரன். நல்ல வேளையாக இவன் மனைவி, முதல் தளத்திலேயே தன் அறையை வைத்திருந்தாள். அதற்கும் நீச்சல் குளத்திற்கும் பெரிதாக உயரம் இல்லாததால், எந்தச் சேதாரமும் இல்லாமல் நீருக்குள் வீணாக விழுந்தவள் தத்தளித்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த பொன்வண்ணன் அலறித் துடித்துக் காப்பாற்ற ஓட,

“சேத்துப் பன்னி மாதிரி இங்கயே இருடி. செத்துடுவன்னு தோணுனா மட்டும் குரல் குடு, என் கன்னியப்பன் இருக்கான்… ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போக.”

பால்கனிச் சுவரில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு நின்றான். ஓடிவந்த தந்தை மகளின் நிலை எண்ணிக் காப்பாற்றக் கை கொடுத்தார். அவருக்காகத் தன் பயத்தைக் குறைத்துக் கொண்டவள் திடமாக, அவர் உதவியை நாடாமல் நீச்சல் குளத்தின் விளிம்பில் ஏறி அமர்ந்தாள்.

“உனக்கு ஒன்னும் இல்லைலடா ரிது…”

“ஒன்னும் இல்லப்பா”

“என்னடா ஆச்சு, எப்படி இதுல விழுந்த?”

“நான்தான் உங்க பொண்ணைத் தூக்கிப் போட்டேன்.”

“ஏம்பா இப்படிப் பண்ண? ஒன்னு கிடக்க ஒன்னு ஆகி இருந்தா என்ன ஆகுறது. உன் கோபத்துக்கு ஒரு அளவே இல்லையா? இவ எனக்கு ஒரே பொண்ணு. எனக்குன்னு வாழ்க்கையில இருக்கிறது இவ மட்டும் தான். இப்படி என் பொண்ண என் கண்ணு முன்னாடியே சித்திரவதை பண்றியே.”

மாமனாரின் குரலுக்குச் சீறியவன், “அப்படித்தான் பண்ணுவேன். அவளுக்கு இந்த மாதிரிப் பண்ணா தான் புத்தி வரும். இப்பக்கூட ஒன்னும் கெட்டுப் போகல. என் ஆட்டோவைத் திருப்பிக் கொடுத்தா இத்தோட எல்லாத்தையும் முடிச்சுப்பேன். இல்லனா, ஒவ்வொரு நாளும் உங்க பொண்ணுக்கு உயிர் பயத்தைக் காட்டிக்கிட்டே இருப்பேன்.” என்றவனைப் பார்க்கப் பயமாக இருந்தது அவருக்கு.

“டேய்!”

மாமனாரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன் மனைவி புறம் பார்வையைத் திருப்ப, “இதுக்கெல்லாம் நடுங்குற ரகம் நான் இல்ல. இதுக்கான சேதாரத்தைப் பார்க்கறியா?” எனப் பொறுமையாக நீச்சல் குளத்திலிருந்து எழுந்தவள்,

“இவன் தங்கச்சி இந்நேரம் காலேஜுக்குக் கிளம்பி இருப்பா. சரியா பத்து நிமிஷத்துல எம் கே மெயின் ரோடுக்கு வருவா. கொஞ்சம் கூட யோசிக்காம வண்டியை ஏத்தி ஆறு மாசத்துக்கு நடக்க முடியாம பண்ணிடுங்க.” எனத் தன்னைக் காட்சிப் பொருளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் தன் வேலை ஆள்களுக்குக் கட்டளையிட்டாள்.

“ஏய்ய்ய்…”

“உன்ன விட என் குரல் ரொம்பச் சத்தமா ஒலிக்கும். அதோட சத்தத்தை உன்னாலயும், உன் குடும்பத்தாலயும் தாங்கிக்க முடியாது. நீ என்னடா எனக்கு உயிர் பயத்தக் காட்டுறது? நான் நெனச்சா நிமிஷத்துக்கு நிமிஷம் உன் குடும்பத்துக்கே அந்தப் பயத்தைக் காட்ட முடியும். வேணும்னா சாம்பிள் பார்க்கறியா?” என்றவள் அங்கு நின்றவர்களைச் சீற்றம் பொங்க நோக்கி,

“சொல்லிப் பத்து நிமிஷம் ஆகுது. இன்னும் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? அவ கால் ரெண்டும் உடைஞ்சிடுச்சுன்னு நியூஸ் வரணும்.” எனக் கர்ஜிக்க அரக்கப் பறக்க ஓடினார்கள்.

தந்தை கத்துவதையும், அவன் கத்துவதையும் சிறிதளவும் காதில் வாங்கிக் கொள்ளாதவள், நனைந்த உடலோடு வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள். மொத்த நீரும் அந்த விலை உயர்ந்த இருக்கையில் சிந்திக் கொண்டிருக்க,

“ம்ஹூம்!” என அவனைக் கண்டு ஓசை கொடுத்தாள்.

“வேணாம்டி. என் தங்கச்சிக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சு, உன்னைச் சும்மா விடமாட்டேன். போனவங்களைத் தடுத்து நிறுத்து.”

“இல்லனா…”

“சார், உங்க பொண்ணுகிட்டச் சொல்லுங்க. இதுக்கான பலன் ரொம்ப மோசமா இருக்கும்.”

“அதையும் தான் பார்த்திடுவோம்.”

“ஏய்!” எனத் தாவிச் சென்று அவள் கழுத்தைப் பிடித்தவன், அவள் பார்க்கும் பார்வையில் இருக்கும் நகைப்பை உணர்ந்து,

“ரொம்ப விஷமுள்ள மனசுடி உனக்கு. குடும்பம்னா என்னன்னே தெரியாம வளர்ந்த உன்ன மாதிரிப் பிசாசுக்கெல்லாம் ஒரு உயிரோட மதிப்புத் தெரியாது. நீ செத்தா பணம் மட்டும் தான்டி உன்னைச் சுத்தி இருக்கும். எங்களை மாதிரி ஆளுங்களுக்குப் பாசமும், அன்பும்தான் நிக்கும். உங்க அப்பா இல்லனா நீ ஒரு அனாதைடி!‌ அனாதையா இருக்கும்போதே உனக்குள்ள இவ்ளோ கொழுப்பு இருக்கே, இன்னும் அப்பா அம்மா சேர்ந்து இருந்து, கூடப் பொறந்த பொறப்பெல்லாம் இருந்தா எவ்ளோ ஆடி இருப்ப…” என்றிடப் பக்கத்தில் நின்றிருந்த பொன்வண்ணனின் மனம் நொறுங்கியது.

ரிதுசதிகா பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க, “போனவங்களைத் திரும்பி வரச் சொல்லுடி.” எனக் கழுத்தில் அழுத்தத்தைக் கூட்டினான்.

“விடு அவளை…”

“உங்களுக்கு உங்க பொண்ணு எப்படியோ, அப்படித்தான் என் தங்கச்சி எனக்கு. அவளுக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்லுங்க, உங்க பொண்ண விடுறேன்.”

“உன் தங்கச்சிக்கு எதுவும் ஆகாது. என் பொண்ண விடு.”

“அதை இவளைச் சொல்லச் சொல்லுங்க.”

“நான்தான் சொல்றேன்ல. முதல்ல என் பொண்ணு மேல இருந்து கையை எடு.” என்றதும் மெல்லக் கைகளை விலக்க, அவன் கொடுத்த அழுத்தத்தில் இருந்து உடனே மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

வேலையாள்களைத் தொடர்பு கொண்ட பொன்வண்ணன் கிளம்பி வர உத்தரவிட, எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். மாமனாரின் வார்த்தைக்குப் பின் கோபத்தை விட்டவன், “மோதுறதா இருந்தா என்கிட்ட மோது… என் குடும்பத்துப் பக்கம் போகாத. அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.” என அங்கிருந்து சென்று விட்டான்.

“எதுக்கு ரிது இப்படிப் பண்ற? உன்னப் பார்க்க ரொம்பப் புதுசாத் தெரியுது. ஒரு சின்னப் பொண்ணு கால உடைக்கச் சொல்ற. நடந்த பிரச்சினைக்கே இன்னும் ஒரு தீர்வு கிடைக்கல. அதுக்குள்ள புதுப் பிரச்சினையைக் கிளறாத.”

தந்தைக்கு எந்தப் பதிலையும் உரைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தனிமை கொடுக்க எண்ணி நகர்ந்தார். பல மணி நேரங்களுக்குப் பின், தன்னை மீட்டெடுத்துக் கொண்டவள் எதுவும் நடக்காதது போல் மீண்டும் குளித்துவிட்டுக் கிளம்பினாள்.

“கன்னியப்பன் எப்ப வருவான்?”

“உன்கிட்டப் பேச எனக்கு நேரமில்லை.”

“சொல்லிட்டுப் போடி!”

“உனக்கு எதுக்குடா நான் பதில் சொல்லணும்? நீ யாருடா எனக்கு.”

“அப்புறம் எதுக்காக நான் ஆட்டோ ஓட்டக் கூடாதுன்னு நினைக்கிற. யாருன்னு தெரியாதவன் மேல உனக்கு எதுக்கு அக்கறை?”

“அக்கறையா?” என அவன் முகம் நோக்கியவள், “விஷமுள்ள மனசுக்காரிக்கு அக்கறை எங்க இருக்கும்?” என்று விட்டுத் தன் பையைக் கையில் எடுத்தவள் குதிகாலணியை அணிந்துகொண்டு அவன் செவி அலற நடந்தாள்.

அவள் பேசிய வார்த்தையை விட, விழிகளில் தெரிந்த விரக்தி பெரும் யோசனைக்கு ஆளாக்கியது. அத்தோடு நின்றிருந்தவன் காதில், “பணம் இருந்தால் தான் பாசமுள்ளவங்களை எடுத்துப் போடக் கூட முடியும். பணம் இருந்தால் தான் உன் தம்பி, தங்கச்சிங்க மேல நீ எவ்ளோ பாசம் வச்சிருக்கன்னு காட்ட முடியும். பணம் இருந்தால் தான் நீ நீயா இருப்ப, உன்னச் சுத்தி இருக்கவங்க சொந்தக்காரங்களா இருப்பாங்க.” என்றவள் தன்னையே ஆராய்ந்து கொண்டிருக்கும் அந்த விழிகளுக்குள் தொலைய விரும்பாது,

“பணத்துக்காகத் தான்டா, உனக்கும் எனக்குமான இந்தத் திருமணமே நடந்திருக்கு. பணமில்லாத வாழ்க்கை உனக்கும் நரகம் தான், எனக்கும் நரகம் தான். பணத்த வச்சுப் பாசத்தை வாங்கிட முடியும். பாசத்தை வச்சுப் பணத்தை வாங்க முடியுமா?” என்ற கேள்வியோடு அங்கிருந்து விடை பெற்றாள்.

***

சிங்கத்திற்கும், புலிக்கும் திருமணம் ஆகி ஆறு நாள்கள் நிறைவடைந்து விட்டது. இந்த ஆறு நாள்களில், பொன்வண்ணன் தான் நொந்து நூலாகி விட்டார். இருவரும் சரிக்குச் சமமாக அடித்துக் கொள்வதைப் பார்த்தவர் சமாதானம் செய்ய நடுவில் செல்வதை நிறுத்தி விட்டார். அதிலும் நேற்று இரவு நடந்த சம்பவம் மொத்தமாகக் கொண்ட நம்பிக்கையை சரித்து விட்டது.

ஆட்டோவைச் சிறைப்படுத்தி வைத்துக் கொண்டவள், ஓயாமல் வீட்டோடு மாப்பிள்ளை என்று கருடனை வம்பு இழுத்துக் கொண்டிருக்க, பொறுக்க முடியாதவன் நேராக மாமனார் முன்பு நின்றான். அவர் என்னவென்று விசாரிப்பதற்குள்,

“இனி இந்த வீட்ல எந்த வேலைக்காரங்களும், டிரைவர்ஸும் இருக்கக் கூடாது. என் ஆட்டோவைத் திருப்பித் தர வரைக்கும் அவளேதான் எல்லாத்தையும் பார்த்துக்கணும்.” கடகடவென்று கட்டளையிட்டான்.

“அவ ட்ரைவ் பண்ண மாட்டாப்பா…”

“இவ்ளோ வாய் பேசுற உங்க பொண்ணுக்கு வண்டி ஓட்டத் தெரியாதா?”

மருமகன் முகத்தில் தெரியும் ஏளனத்தைக் கண்டு சிறிதும் வருந்தாதவர், “என் பொண்ணு ரேசர்! அவளை மாதிரி நுணுக்கமா வண்டி ஓட்டுற ஆளைப் பார்க்கவே முடியாது.” என்றதைக் கேட்டவன் தன் முகத்தைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாமல்,

“அப்புறம் என்ன கேடு?” என்றான்.

“அவ கார் ஓட்டிட்டுப் போகும்போது தான், ஆக்சிடென்ட் ஆகி அவ கண்ணு முன்னாடியே என் மூத்த பையன் இறந்தான். அதுல இருந்து அவ கார் ஓட்டுறது இல்லை. அவளுக்கு அந்த சீட்டைப் பார்த்தாலே பயம் வரும்.”

“ஓஹோ!”

“அவளைப் பத்தி உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்.” என்றதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன்,

“உங்க பொண்ணு மாதிரி ஒரு ஆளு வண்டி ஓட்டாம இருக்குறதே நல்லது. கூடப் பிறந்தவனையே கொன்னவ, எத்தனைப் பேரைக் கொல்லுவாளோ? நான் சொன்ன மாதிரி எல்லா டிரைவரையும் அனுப்பிடுங்க.” என்று நகர்ந்து விட்டான்.

மருமகன் வார்த்தைக்காகப் பணி அமர்த்திய ஆறு ஓட்டுநர்களை வேலையை விட்டு நிறுத்தி விட்டார். அதில் ஒருவர் ரிதுவை அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்றிருந்தார். பாதியிலேயே மகளுக்குத் தெரியாமல் கிளம்பச் சொல்லி விட்டார். பணி முடித்து வந்தவள் ஓட்டுநரைக் காணாது அழைப்பு விடுக்க, நடந்த அனைத்தையும் கேட்டுக் குதித்தாள்.

“யாரைக் கேட்டு என் டிரைவரை நிறுத்துனீங்க?”

“என்னைக் கேட்டுத்தான்…”

சத்தம் தனக்குப் பின்னால் வருவதால் திரும்பியவள் நிற்பவனைக் கண்டு, “எல்லாம் உன்னோட வேலை தானாடா ராஸ்கல்.” பல்லைக் கடித்தாள்.

“புத்திசாலி தான்!”

“ச்சீ! உன் பாராட்டு ஒன்னும் எனக்குத் தேவையில்லை. எதுக்குடா இந்த வேலையைப் பார்த்த.”

“என் ஆட்டோவைக் கொடுக்கலன்னா, உன்னோட சலுகை ஒவ்வொன்னும் குறைஞ்சுகிட்டே போகும்.”

“என்னமோ உன் சம்பாத்தியத்துல சொகுசா வாழுற மாதிரி, சலுகையைக் குறைப்பேன்னு சொல்ற. நீயே ஓசில என் சலுகையை அனுபவிக்க வந்தவன் தானடா.”

“இந்த வாய் தான்டி உனக்குப் பெரிய எதிரி. இதைக் குறைக்காம உன் வாழ்க்கை விளங்கவே விளங்காது.”

“அதை நான் பார்த்துக்குறேன். என் விஷயத்துல இருந்து ஒதுங்கி இருக்குற வேலையை மட்டும் நீ பாரு.”

“அது எப்படி ஒதுங்கி இருக்க முடியும்? முறைப்படி இரண்டு தடவை தாலி கட்டி லைசென்ஸ் வாங்கி இருக்கேன்.”

“ஏய்!”

“என் குடும்பத்தை என்கிட்ட இருந்து பிரிச்சுட்ட. எனக்குன்னு இருந்த கன்னியப்பனையும் பறிச்சிட்ட. உன் வீட்ல ஒரு வேலைக்காரன் மாதிரி வச்சிருக்க. இத்தனையும் பண்ண உன்னைச் சும்மா விட, நான் என்ன புள்ளப் பூச்சியாடி. இனி என் ஆட்டத்தை மட்டும் தான் நீ பார்ப்ப. என் தொல்லை தாங்க முடியாம, இந்தாடா உன் ஆட்டோன்னு கையெடுத்துக் கும்பிட்டுட்டு எல்லாத்தையும் நான்தான் பண்ணன்னு போலீஸ்ல போய் சரணடைஞ்சிடுவ.”

“ஹா ஹா! அடப் பகல்கனவு காணுற பைத்தியமே! ஏன்டா உன் மண்டையில கொஞ்சம் கூட மசாலா இல்லையா? என் முன்னாடி செல்லாக் காசா இருக்க நீ…” என்றவள் அவனை நெருங்கி, “நல்லாக் கேட்டுக்கடா, செல்லாக்காசு.” என அசிங்கப்படுத்தினாள்.

“செல்லாக் காசா இருக்கற நீ தான் ஆட்டத்தைக் காட்டப் போறியா? உண்மை என்னன்னு தெரியுற வரைக்கும் தான் இந்த லைசென்ஸ்ல உன் பேரு இருக்கும். அதுவரைக்கும் ஓசில தின்னுட்டுப் போடா.”

“ஆமா, நீதான் கார் ஓட்டிட்டுப் போய் உன் அண்ணனைக் கொன்னுட்டன்னு கேள்விப்பட்டேன், உண்மை தானா? இந்தச் சொத்து மொத்தத்தையும் அனுபவிக்கத் தான அவனைக் கொன்ன? கூடப் பிறந்தவனையே கொன்னுருக்கியே நீயெல்லாம்…”

கட்டியவன் வார்த்தையைக் கேட்டவள், அவன் கைப்பேசியைப் புடுங்கித் தூக்கிப் போட, பல வருடமாகப் பாதி உசுரில் உலாவிக் கொண்டிருந்த அந்தக் கைப்பேசி தன் உயிரை மாய்த்தது. அதுவரை விளையாட்டாக இருந்தவன் உடனே மாறும் வானிலை மாற்றம் போல் முகம் சிவந்து பிடுங்கியவள் கையைப் பிடிக்க, அடுத்த நொடி அவன் முகம் போல் கன்னமும் ஐவிரல் மருதாணியில் சிவந்தது.

ரிதுசதிகாவின் உள்ளங்கையில் எத்தனை ரேகைகள் இருக்கிறது என்று அவன் கன்னத்தை எண்ணியிருந்தால் தெரிந்து கொள்ளலாம். வாங்கிய அடியில் உடல் மொத்தமும் விரைத்து நின்றது. ஆத்திரத்தில் தாடையைக் கடித்துக் கொண்டு, தன்னைப் பார்வையால் தொலைக்கும் அவன் பார்வைக்குச் சிறிதும் அஞ்சாதவள்,

“உன் லிமிட்ல இருந்துக்க.” என விரல் நீட்டினாள்.

அந்த விரலோடு அவளையும் சேர்த்துப் பிடித்து அங்கிருந்த காரில் சாய்த்து நிற்க வைத்தவன், மூக்கு நுனி அனல் காற்றால் பொசுங்கும் அளவிற்கு முறைத்து, “நீதான உன் அண்ணனைக் கொன்ன? உன்ன மாதிரி ஒரு பணப் பிசாசுக்குக் கூடப்பிறந்தவன் கூடத் தொல்லையா தான் தெரிவான். உன் அப்பாவை மட்டும் ஏன் விட்டு வச்சிருக்கன்னு தெரியல. அவரையும் சீக்கிரம் ஏதாச்சும் பண்ணிட்டு இந்த மொத்தப் பணத்தையும் அள்ளி வாயில போட்டுக்க. உன்கிட்ட வந்தாலே பண நாத்தம் தான்டி வீசுது. உன்ன மாதிரி இரக்கமில்லாத பிசாசுக்குப் பயம் எதுக்கு? கொலை பண்ணது தெரியக் கூடாதுன்னு வண்டி ஓட்ட மாட்டேன்னு ஊர நம்ப வச்சுட்டு இருக்க. இன்னைக்கு உன் முகத்திரையைக் கிழிக்கிறேன்.” என அவள் வலது கை தோள்பட்டையில் மாட்டியிருந்த ஸ்லிம் பேகைப் பிடுங்கினான்.

அவன் வார்த்தை ஒவ்வொன்றும், முழுவது நீரை நிரப்பி வைத்து, அதில் தன் தலையை இறுக்கமாக அமுக்கி மூச்சு முட்ட வைத்தது போல் இருந்தது. நன்றாகப் பழுக்க வைத்த இரும்புக் கம்பியை ஈவு இரக்கம் பார்க்காமல் அங்கங்கே தொட்டு எடுத்தது போல் எரிச்சல். கரடு முரடான கற்கள் படிந்த பாதையில் படுக்க வைத்துத் தரதரவென்று இழுத்து வந்த உணர்வில் சிக்கிக் கொண்டவள் அப்படியே உறைந்து நின்றாள்.

தன்னவளின் மனத்தைப் படிக்கத் தவறியவன், “இப்ப எப்படி எதுவுமே இல்லாம நிக்கறியோ, அதே மாதிரிக் கூடிய சீக்கிரம் மொத்தமா நிர்கதியா நிக்க வைப்பேன்.” என்றவன் இருசக்கர வாகனத்தில் மறைந்து விட்டான்.

எப்படியும் அவளிடம் இருந்து ஆட்டோவை வாங்க முடியாது என நன்குணர்ந்து கொண்டவன், வீட்டிலிருந்த பழைய இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து விட்டான். ஆறு நாள்கள் எதுவுமே இல்லாமல் நடையாக நடக்க வைத்தவளை, அதேபோல் நடக்க வைக்கத்தான் இத்தனை நாடகம். மாமனாரிடம் பேசி ஓட்டுநரை நிறுத்தியவன், அவள் தேவைகளை நிரப்பி வைத்திருக்கும் அந்தப் பையையும் வாங்கிக் கொண்டான். கைப்பேசி உட்பட அனைத்தும் அதில் தான் இருக்கிறது.

அவளுக்குச் சொந்தமான அந்த வெள்ளை நிறக் காரும், அவளும் மட்டும் தான் அங்கு நின்றிருந்தார்கள். இரவு ஏழு மணி ஆகிவிட்டதால், அவள் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் அனைவரும் கிளம்பினார்கள். வரும் அனைவரின் முன்பும், கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அழகு பொம்மை போல் தன்னைக் காட்சிப்படுத்திக் கொண்டாள் ரிதுசதிகா.

என்றும் தங்கள் முதலாளியின் முகத்தில் தெரியும் கர்வம், இன்றுக் காணாமல் போய் இருப்பதை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே அனைவரும் கிளம்ப, இன்னும் அவன் கொடுத்த திகைப்பிலிருந்து மீளவில்லை. தன் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த நாளுக்குச் சென்றது அவள் நினைவு. அங்கிருந்த காவலாளி, ஒரு மணி நேரமாகத் தங்கள் முதலாளி அங்கே நிற்பதைக் கண்டு,

“மேடம்!” என நிகழ்வுக்குக் கொண்டு வந்தார்.

“ரொம்ப நேரமா இங்கயே நின்னுட்டு இருக்கீங்க, ஏதாச்சும் பிரச்சினையா?”

“ரொம்ப நேரமா…” என நேரத்தைப் பார்த்த பின்பு தான் நிகழ்வை உணர்ந்தாள்.

தனக்குக் கீழ் பணி புரிபவரிடம், தன் நிலையைக் கூற விரும்பாதவள் யாரிடமும் உதவி கேட்கவும் விரும்பவில்லை. இங்கிருந்து நடையாக நடந்தால் கூட ஏழு மணி நேரமாகும் அவள் வீட்டிற்குச் செல்ல. தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் காவலாளியைப் பார்வையால் விலகிச் செல்ல வைத்தவள், அங்கு நிற்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள்.

அவள் தகுதியும், சுய கௌரவமும் அங்கு நிற்கத் தடை விதித்தது. அவன் விட்டுச் சென்ற கார் மட்டுமே வீட்டிற்குச் செல்ல ஒரே வழி. ஆனால், உடல் நடுங்கியது, அதில் ஏறி அமர. அவள் உடன்பிறந்தவன் மறைந்து பல மாதங்கள் ஆன பின்புதான் காரைப் பார்க்கவே தைரியம் வந்தது. பொன்வண்ணனின் ஆதரவால் மெல்ல இயல்புக்கு மீண்டவள், தங்கள் வாழ்க்கைக்காக அதில் பயணிக்கும் அளவிற்கு மாறினாளே தவிர, ஓட்டுநர் இருக்கையில் அமரும் அளவிற்குத் தேறவில்லை.

இரும்பு மனிதியாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டவள் மனத்திற்குள் சின்னப் பூ ஒன்று இருக்கிறது. அதைக் கருடேந்திரன் எனும் காற்று மொத்தமாக அடித்து வீழ்த்தியது. தோல்வியை ஒத்துக்கொள்ள விரும்பாது, கார்க்கதவைத் திறந்தவளுக்குப் பயம் எனும் அரக்கன் கண் முன் தெரிந்தான். வேகமாக அதைச் சாற்றி விட்டுத் திரும்பியவள் பார்வையில் அந்தக் காவலாளி. அவர் பார்வையும், தன்னை எடை போடும் எண்ணத்தையும் புரிந்து கொண்டவள் மூச்சை இழுத்து விட்டுக் காரில் ஏறி அமர்ந்தாள்.

எடுத்ததுமே அசுர வேகத்தில் அதை இயக்கியவள், கண்மண் தெரியாமல் ஓட்ட ஆரம்பித்தாள். உடன் பிறந்தவனின் அலறல் சத்தம் பின் தொடர்ந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலைக்கு வரும் வரை பின் தொடர்ந்த அந்தச் சத்தம், இதயத்திற்குள் நுழைந்து இதயத்திற்குக் கை கால்களாக இருக்கும் ரத்தக்குழாய்களைப் பிடுங்கிப் போட்டது. அன்று அவன் அண்ணன் தேகத்திலிருந்து பீய்ச்சி அடித்த ரத்தம் போல், இவள் இதயத்தில் இருந்த ரத்தம் பிய்த்துக் கொண்டு சிதறியது.

அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாதவள் மெல்லக் கண் சோர ஆரம்பித்தாள். தன் மன நிலையை உணர்ந்து கொண்டவள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தவரை போராடிக் கொண்டிருக்க, உணர்வுகள் ஒத்துழைக்க மறுத்தது. தன் கதை இத்துடன் முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்தவள், எதிரில் வரும் எந்த உயிருக்கும் எந்தச் சேதாரமும் நடக்கக்கூடாது என்ற வேண்டுதலோடு கண் மூடினாள்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!